November 15, 2007

நிறைய கனவுகள் இருக்கு! - கபடி கவிதா

டெஹ்ரானில் நடைபெற்ற ஆசியன் சாம்பியன்ஷிப் கபடி போட்டியில் தங்கம் வென்றவரும், இந்திய அணியின் துணை கேப்டனுமான கவிதா: இந்திய பெண்கள் கபடி அணியில் இருக்கும் ஒரே தமிழ் பெண் நான். என் அப்பாவுக்குத்தான் எல்லா நன்றியும். என்னைச் சேர்த்து வீட்டில் அஞ்சு பொண்ணுங்க. அம்மா, ஹார்ட் பேஷன்ட். மூணு வருஷமா போராடி, முடியாமல் இறந்துட்டாங்க. அப்புறம் எங்களுக்கு எல்லாமே அப்பாதான். பல்லவன் டிரான்ஸ் போர்ட்ல பியூனா இருக்கார். ரொம்பக் கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தார். கிரிக்கெட், ஹாக்கி மாதிரியான விளையாட்டுகளைத் தான் நான் முதலில் விளையாடிட்டு இருந்தேன். எந்த உபகரணமோ, பொருளோ இல்லாமல், உடம்பின் சக்தியை மட்டுமே வெச்சு விளையாடுற ஆட்டம் என்பதால், கபடியில் அதிகமா வீரம் இருக்குன்னு ஈர்ப்பு வந்தது. கபடியில் யூனிவர்சிட்டி லெவலில் ஜெயிச்சு, தமிழ்நாடு அணியில் தேர்வானேன். நல்லா விளையாடி, அஞ்சே வருஷத்தில் தமிழ்நாடு அணிக்கு கேப்டன் ஆனேன். என் ஆசைப்படி ரெண்டு வருஷத்துக்கு முன்னால், ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் வேலை கிடைச்சது. தமிழ்நாடு போலீஸ் கபடி டீமுக்கு என்னை செலக்ட் பண்ணினாங்க. மதுரையில் நடந்த மாநில அளவிலான போட்டிகளில் ஆடியதைப் பார்த்து, நேஷனல் டீம் கேம்ப்புக்கு அழைப்பு வந்தது. சிம்லா, குஜராத், டில்லின்னு மூணு இடங்களில் கேம்ப். கடைசியா 12 பேர்களில் ஒருத்தியா என்னைத் தேர்ந்தெடுத்து, துணை கேப்டனாக்கினாங்க.என்னதான் கபடி, இந்திய விளையாட்டுன்னாலும், மத்த டீம் பெண்கள் அசாதாரண வேகத்தில் ஆடி மிரட்டிட் டாங்க. ஐடியா, டெக்னிக் இரண்டையும் பயன்படுத்திதான் அவங்களைத் தோற்கடிச்சோம். என்னைப் பாராட்டி முதல்வர், அஞ்சு லட்ச ரூபாய் பணப் பரிசு கொடுத்தார். இந்த வெற்றியை என் அப்பாவுக்கு அர்ப்பணிக்கிறேன். அடுத்ததா, இந்திய அணியின் கேப்டன் ஆகணும். அதுக்கடுத்து அர்ஜுனா விருது வாங்கணும். நிறைய கனவுகள் இருக்கு" - இவரின் கனவுகள் நனவாகட்டும் என்று வாழ்த்துவோம்!

இன்றைய குறள்

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொ னோற்பாரிற் பின்

பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள்கூடப் பிறர்கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில்தான் வைத்துப் போற்றப்படுவார்கள்
அறத்துப்பால் : பொறையுடைமை

மதங்களைக் கடந்து அடையாளம் காணப்பட வேண்டியவர்கள் பெண்கள்

"எந்த மதமும் பெண்களுக்கு எதிரானது அல்ல. ஆனால் இடையில் வந்தவர்கள் தங்களது கருத்துகளை மதத்தின் மீது திணித்து பெண்களை அடக்கி வந்தார்கள். மதங்களைக் கடந்து அடையாளம் காணப்பட வேண்டியவர்கள் பெண்கள். தங்களுக்கு எதிரான சமூகத் திணிப்புகளை எதிர்த்து அவர்கள் போராட வேண்டும்" - கனிமொழி

தமிழர் புனர்வாழ்வுக் கழக சொத்துக்களை அமெரிக்கா முடக்க முடிவு

  • பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்தியா வெற்றி : சதத்தை நழுவ விட்ட டெண்ட்டூல்கர்இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இந்தியாவில் நடைபெற்று வரும் ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா வென்றுள்ளது.
    இன்று குவாலியர் நகரில் நடைபெற்ற நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வென்றதன் மூலம் 3-1 என்கிற கணக்கில் இந்தத் தொடரை வென்றுள்ளது.
    தமிழர்புனர்வாழ்வுக் கழகத்தின் உடமைகளை முடக்க முடிவெடுத்துள்ளதாக அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது. அந்த அமைப்பு, அமெரிக்காவில் 1997 முதல் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி ஆதரவு மற்றும் இதர கொள்வனவு செய்வதில் ஈடுபட்டதாக அமெரிக்க குற்றஞ்சாட்டியுள்ளது. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அமெரிக்காவில் உள்ள சொத்துக்களை முடக்குவதாக அமெரிக்க திறைசேரி அறிவித்ததாக கொழும்பில் அமெரிக்கத் தூதரகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது
  • காபந்து அரசை அமைக்கும் நடவடிக்கையில் அதிபர் முஷாரஃப் :
    பாகிஸ்தானின் தற்போதை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருவதால், நாட்டை நிர்வகிக்கப் போகும் இடைக்கால அரசு பற்றிய அறிவித்தல் ஒன்று நாட்டின் தேசிய தொலைக்காட்சியில் இன்று இரவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
  • சியாராலியோனில் புதிய அதிபர் பதவியேற்றார் : சியாரா லியோன் நாட்டின் தலைநகரில் நடந்த வைபவம் ஒன்றில் ஏர்னஸ்ட் கொரோமா அவர்கள் அந்த நாட்டின் புதிய அதிபராக பதவியேற்றுள்ளார். ஆயிரக்கணக்கான சியாரா லியோன் மக்கள் கலந்துகொண்ட இந்த வைபவத்தில், ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றின் தலைவர்களும் கலந்துகொண்டனர்
  • வங்காளதேசத்தில் சூறாவளி : வங்காளதேசத்தின் கரையோரப்பகுதிகளை கடுமையான சூறாவளி ஒன்று தாக்கியுள்ளது.
    இந்த சூறாவளியை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்
  • விளையாட்டுத்துறையில் போதைப்பொருட்பாவனை குறித்து ஒலிம்பிக் குழுத் தலைவர் கவலை : விளையாட்டுத்துறையில் போதைப்பொருள் தடுப்பு பற்றிய அனைத்துலக சீலம் ஒன்றை கடைப்பிடிக்க சில அரசுகளும், விளையாட்டுத்துறைச் சம்மேளனங்களும் தயக்கம் காட்டுவதால், விளையாட்டுத்துறையில் போதைப்பொருளை ஒழிக்கும் திட்டம் பாதிப்படைந்துள்ளதாக அனைத்துலக ஒலிம்பிக் குழுவின் தலைவரான ஷோக் றோக் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்
  • இலங்கையில் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு முன்பாக கட்சித் தாவல்கள் தீவிரமடைகின்றன : இலங்கைப் நாடாளுமன்றத்தில் கடந்தவாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட 2008 ஆம் நிதியாண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தின் மீது தற்போது நடைபெற்றுவரும் விவாதத்தினைத் தொடர்ந்து எதிர்வரும் 19ஆம் திகதி இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்புக்காக அது விடப்படவிருக்கிறது
  • பஸ்ராவில் கொலை செய்யப்படும் பெண்கள் : இராக்கின் தென்பகுதி நகரான பஸ்ராவில், மதத்தீவிரவாதிகளால், பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மிரட்டல்கள், தாக்குதல்கள் மற்றும் கொலைகள் போன்ற வன்செயல் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக, அந்த நகரின் தலைமைப் பொலிஸ் அதிகாரி எச்சரித்துள்ளார்
  • வட இலங்கை மோதல்களில் 20 பேர் பலி : இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் மற்றும் வன்னிப்பிரதேசத்தில் உள்ள இராணுவ முன்னரங்க பகுதிகளில், இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்றும் இன்றும் இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் இரு தரப்பிலும் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது