November 27, 2007

பிறந்த குழந்தைக்கு சூடு வைக்கும் பழக்கம்

சூடு வைக்கப்பட்ட ஒரு குழந்தை பிறந்த குழந்தையின் வீறிட்ட அழுகை, பொதுவாக பெரியவர்களுக்கு சந்தோஷத்தை தரக்கூடிய விடயம். ஆனால் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் மலையோர கிராமங்களில், குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் இது போன்ற வீறிட்ட அழுகை கேட்டால், அந்த குழந்தைக்கு சூடு வைக்கப்படுகிறது என்பதன் அடையாளம் அது என்கிறார்கள் ஐநாமன்றத்தின் சிறார்களுக்கான அமைப்பான யுனிசெப் அமைப்பினர். இந்த பகுதியில், பல தலைமுறைகளாகக் கடைபிடிக்கப்பட்டு வரும் பிறந்த குழந்தைகளுக்கு சூடு வைக்கும் ஆபத்தான பழக்கத்தை ஒழிக்கும் முயற்சியில் யுனிசெப் அமைப்பு ஈடுபட்டு வருகிறது.
இந்த பணியை தற்போது மேற்பார்வையிட்டு வரும் யுனிசெப் அமைப்பின் ஆலோசகரான பி.கணேசமூர்த்தி அவர்கள் இந்த சூடு வைக்கும் பழக்கம் குறித்தும் அதனைத் தடுப்பதற்கான முயற்சிகள் குறித்தும் வழங்கும் செவ்வியை இன்றைய அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில் நேயர்கள் கேட்கலாம்

இன்றைய குறள்

நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்

மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும் வந்து சேரும்

அறத்துப்பால் : வெஃகாமை

சுவாமி சித்பவானந்தர்

"ஒரு நாள் உண்ட உணவில் அதற்கேற்ற பயன் இருப்பது போன்று, அனுஷ்டானத்திற்கு ஏற்ற அளவு யோகத்தின் பயன் உண்டு" - சுவாமி சித்பவானந்தர்

சர்வதேச சமூகத்தின் மீது பிரபாகரன் அதிருப்தி

  • விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், தமது அமைப்பின் மாவீரர் தின உரையின் போது, சர்வதேச சமூகத்தின் மீது தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். மாவீரர்களுக்கான அஞ்சலி மற்றும் தமது அமைப்பு முப்படையாக விரிந்து நிற்பது குறித்த பெருமிதம் ஆகியவற்றுடன் தனது உரையை ஆரம்பித்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர், அதில், சர்வதேச நாடுகள் மீதும் இலங்கைக்கு உதவும் இணைத்தலைமை நாடுகள் மீதும் தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதுடன், மஹிந்த ராஜபக்ஷ அரசின் மீதும், தென்னிலங்கை அரசியல் கட்சிகள் மற்றும், இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை ஆராயும் அனைத்துக் கட்சிக் குழு ஆகியவற்றின் மீது தனது அவ நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

    கிழக்கு மாகாணத்தில் இருந்து விடுதலைப்புலிகள் பின்வாங்கியதை ஒரு தந்திரோபாய நடவடிக்கையாக விபரித்த பிரபாகரன் அவர்கள், அநுராதபுரம் விமானப்படைத்தளத்தின் மீதான தாக்குதல், இலங்கை இராணுவத்துக்கு கொடுக்கப்பட்ட ஒரு பெரிய அடி என்று வர்ணித்தார்.

    ஆனாலும் இலங்கை அரசு தொடர்ந்தும் ஆதிக்க வெறியோடு செயற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், உலக கவனத்தை திசை திருப்பவே அரசு அனைத்துக் கட்சிக்குழுவை ஏற்படுத்தியுள்ளது என்றும் குற்றஞ்சாட்டினார்.

    அதேவேளை, தமிழர் பிரச்சினையை நீதியான வகையில் தீர்த்து வைக்கும் அரசியல் நேர்மையும், உறுதிப்பாடும் எந்தவொரு தென்னிலங்கை அரசியல் கட்சியிடமும் கிடையாது என்றும் பிரபாகரன் தனது உரையில் குறிப்பிட்டார்.

    கிழக்குத் திமோர் மற்றும் மொன்ரி நீக்ரோ ஆகிய நாடுகளில் பிரச்சினைகள் தீர சர்வதேச சமூகம் ஆதரவும் அனுசரணையும் வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள பிரபாகரன், ஆயினும், தமது தேசியப் பிரச்சினையில் சர்வதேச நாடுகளின் நகர்வுகளும், நடவடிக்கைகளும் திருப்தியாக இல்லை என்றும் கூறியுள்ளார்.

    இலங்கை அரசின் போக்கை சர்வதேச நாடுகள் கண்டித்திருந்தால் தமிழ்ச்செல்வனின் மரணம் இடம்பெற்றிருக்காது என்று கூறிய பிரபாகரன், இணைத்தலைமை நாடுகளும் சமாதானத்துக்கான பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தியா முன்னர் விட்ட தவறையே சர்வதேச நாடுகள் தற்போது விட்டு நிற்கின்றன என்றும் பிரபாகரன் குற்றம் சாட்டினார்.

    தமது அமைப்பு இழந்துவிட்ட இறையாண்மைக்காகவும், சுதந்திர தேசத்தை கட்டியெழுப்புவதற்காகவும் போராடுவதாகக் கூறிய அவர், தமது மக்கள் அல்லல் பட்ட வேளைகளில் உலகம் கண்ணை மூடி நின்றதாகவும் குற்றஞ்சாட்டினார்.

    ஆகவே உலகெங்கும் உள்ள தமிழர்கள் தமது போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் தனது உரையின் இறுதிப் பகுதியில் கேட்டுக்கொண்டுள்ளார்.
  • வட இலங்கை தாக்குதல்களில் 20 பேர் பலி : இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் மற்றும் விடுதலைப் புலிகளின் வானொலி நிலையத்தின் மீது, அரச படையினர் நடத்திய விமானக் குண்டுத் தாக்குதல் என்பவற்றில் குறைந்தது 20 பேர் பலியாகியுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்
  • புலிகளின் குரல் வானொலி நிலையத்தின் மீது தாக்குதல் : புலிகளின் குரல் வானொலி நிலையத்தின் 5 ஊழியர்களும், அந்த நிலையத்தின் அயலில் உள்ள வீடுகளில் இருந்ததாகக் கூறப்படும் மேலும் 4 பேருமே இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் மின்னஞ்சல் வழியாக அனுப்பியுள்ள செய்திக் குறிப்பொன்றில் தெரிவித்திருக்கின்றார். இறந்தவர்களில் ஒருவர் 14 வயது சிறுமி என்றும் இளந்திரையன் குறிப்பிட்டுள்ளார்
  • கிளெமோர் தாக்குதலில் 9 மாணவிகள் பலி : இதற்கிடையில் முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் ஐயங்கன்குளம் பாடசாலையைச் சேர்ந்த முதலுவி மாணவர்கள் பயணம் செய்த அம்புலன்ஸ் வண்டி மீது இன்று காலை 11.30 மணியளவில் நடத்தபட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்
  • விடுதலைப் புலிகளின் வானொலி நிலயம் தாக்கப்பட்டது-பலர் பலி : விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தனது வருடாந்திர மாவீர்கள் தின உரையை நிகழ்த்தவிருந்த நிலையில், அவர்களின் முக்கிய வானொலி நிலையத்தை இலங்கை அரசின் விமானப் படையினர் தாக்கியழித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்
  • மத்திய கிழக்கு அமைதிப் பேச்சுவார்தைகள் தொடங்கியது : மத்திய கிழக்குப் பகுதியில் அமைதி ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மீண்டும் துவக்கும் முகமாக ஒரு சர்வதேச மாநாடு வாஷிங்டனுக்கு அருகிலுள்ள அனாபோலிஸில் ஆரம்பாகவுள்ளது
  • போலீஸாரை தாக்கியவர்கள் குற்றவாளிகள் என்கிறார் பிரெஞ்சுப் பிரதமர் : பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் நடைபெற்று வரும் வன்முறைகளின் இரண்டாம் நாள் இரவன்று, போலீசார் மீது துப்பாகிச் சூடு நடத்திய கிளர்ச்சியாளர்களை குற்றவாளிகள் என பிரெஞ்சு பிரதமர் ஃப்ரான்ஸுவா ஃபிலான் வர்ணித்துள்ளார்
  • சிக்கலில் சாம்சங் நிறுவனம் : தென்கொரியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் நிறுவனம், அரசு அதிகாரிகளுக்கு மில்லியன் கணக்கான டாலர்களை கையூட்டாக கொடுத்தது என்கிற குற்றச்சாட்டு தொடர்பில், சுயாதீனமான ஒரு விசாரணையை அந்த நிறுவனம் எதிர்கொள்ளவுள்ளது
  • அடுத்த தலாய் லாமாவை திபேத்தியர்களே தேர்தெடுக்க வேண்டும் என்கிறார் தற்போதைய தலாய் லாமா : தலாய் லாமாநாடு கடந்த நிலையில் வாழும் திபேத்திலுள்ள புத்தமதத்தினர்களின் மதத்தலைவரான தலாய் லாமா அவர்கள், தமக்கு அடுத்த மதத்தலைவரை தேர்தெடுக்கும் வழிமுறைகளில் திபேத்திய மக்களுக்கு ஒரு பங்கிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்

வசீகரப்பாடகி வசுந்த்ரா தாஸ்