August 25, 2008

"ஒரு லட்சம் தேவேந்திரகுல வேளாளர் முஸ்லிம்களாக மதம் மாற முடிவு" - சி.பசுபதி பாண்டியன்

தென்காசி, ஆக. 24 : தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் ஒரு லட்சம்பேர் இஸ்லாமியர்களாக மதம் மாறப்போவதாக தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் சி. பசுபதி பாண்டியன் எச்சரித்தார்.

திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இயற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு :

  • "தியாகி இமானுவேல் சேகரனின் நினைவுநாளை தமிழ்ச் சமூகங்களின் சமத்துவ நாளாக அரசு அறிவித்து ஆண்டுதோறும் விழா நடத்த வேண்டும். தமிழகம் முழுவதும் வைக்கப்பட்டுள்ள அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களின் அனைத்து சிலைகளையும் அகற்றி அருங்காட்சியகத்தில் வைக்கவேண்டும்.
  • தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை ஆதிதிராவிடர் பட்டியலிலிருந்து நீக்கவேண்டும் என பலமுறை வலியுறுத்தியும், அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காத மாநில அரசைக் கண்டிக்கிறோம்.
  • ஆதிதிராவிடர் பட்டியலிலிருந்து நீக்கி, "தேவேந்திரகுல வேளாளர்'' என தனிப்பட்டியல் கோரி புதுதில்லியில் 5 ஆயிரம் பேர் கலந்துகொள்ளும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவேண்டும்.
  • இலங்கைவாழ் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  • இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தி நிரந்தரத் தீர்வு காணவேண்டும்'.
  • இந்தத் தீர்மானங்களை வலியுறுத்தி மாவட்டங்கள் தோறும் விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்துவது என மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டம் முடிந்தபின், சி. பசுபதி பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

எங்களுடை பூர்வீகத் தொழில் விவசாயம். இந்தியாவில், தமிழகத்தைத் தவிர விவசாயம் செய்யும் மக்களை யாரும் எஸ்.சி. என அழைக்கவில்லை. எங்களுக்கு இடஒதுக்கீடு தேவையில்லை.

எங்களுடைய மக்கள் தொகையைக் கணக்கிட்டு விகிதாசார அடிப்படையில் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

தமிழன் என்ற மரியாதையை எங்களுக்கு வழங்கினால் போதும். பல்வேறு ஜாதிக் கலவரங்களால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதோடு மிகவும் இழப்புகளைச் சந்தித்து விட்டோம்.

தில்லியில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பிறகும், ஆதிதிராவிடர் பட்டியலிலிருந்து எங்களுடைய தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை நீக்காவிட்டால், ஒரு லட்சம் பேர் இஸ்லாத்துக்கு மாறுவதைத் தவிர வேறுவழியில்லை.

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால், நாடாளுமன்றத் தேர்தலையும் புறக்கணிக்கவுள்ளோம் என்றார் அவர்.
நன்றி : முதுவை ஹிதயத்