December 25, 2007

இன்றைய குறள்

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்

மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்லமாட்டார்

அறத்துப்பால் : பயனில சொல்லாமை

விரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் துகளில் முழு பைபிளையும் எழுதி சாதனை

பூர்வ மொழியான ஹீப்ருவில் மூன்று இலட்சம் வார்த்தைகளைக் கொண்ட நூல் கிறிஸ்துவர்களின் திருமறையான பைபிள். உலகின் மிகச் சிறிய பைபிள் என்ற சாதனையை இதற்கு முன் தக்கவைத்திருந்த நூல் 2.8 செண்டிமீட்டர் அகலமும் 3.4 செண்டிமீட்டர் நீலமும் 1 செண்டிமீட்டர் உயரமும் கொண்டது, இதில் 1514 பக்கங்கள் இருந்தன. தற்போது பைபிளின் மூன்று லட்சம் வார்த்தைகளை ஒரு குண்டூசி முனையில் எழுதி சாதனை படைத்திருக்கிறார்கள் இஸ்ரேலிலில் உள்ள ஹைஃபா தொழில்நுட்ப மையத்தைச் சேர்ந்தவர்கள். அரை மில்லிமீட்டர் அளவேகொண்ட ஒரு சதுரங்கத்தில் முழு பைபிளும் மெல்லிய மின்-கதிர் கொண்டு செதுக்கப்பட்டுள்ளது

பொன்மொழிகள்

  • தன் மீது விழும் மண்ணைச் சுமையென நினைப்பதில்லை விதை

  • காயங்களுக்கு மருந்து வேண்டாம், கனிவான பார்வை போதும்


  • எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள், ஏமாற்றத்தால் சோர்வடையமாட்டாய்


  • படைப்பாளனாய் வேண்டாம், நல்ல விமர்சகனாய் இரு

ஒட்டகச்சிவிங்கிகள் ஒற்றை இனம் அல்ல

உலகின் மிக உயரமான விலங்கினம் ஒட்டகச்சிவிங்கி. உண்மையில் ஒற்றை இனமல்ல அது பல்வேறு இனங்களின் தொகுப்பு என்று ஒரு ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. தற்போது ஒட்டகச்சிவிங்கிகள் ஓர் இனமாகவும் அவற்றுக்குள் பல உட்பிரிவுகள் இருப்பதாகவும் கருதப்பட்டுவருகிறது. ஆனால் சஹாரா பாலைவனத்துக்கு தென்பகுதியில் வெவ்வேறு இடங்களில் காணப்படும் ஒட்டகச்சிவிங்கியின் ரோம நிறம் இடத்துக்கு இடம் மாறுபடுவது, அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு இனம் என்பதைக் காட்டுகிறது. இனப்பெருக்க ரீதியில் - அதாவது ஓரினத்தோடு மற்றொரு இனம் சேர்ந்து பொதுவாக இனப்பெருக்கம் செய்யாத - ஒட்டகச்சிவிங்கிகள் ஆறு பிரிவுகள் இருப்பது மரபணு மூலக்கூறுகள் ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது என்று லாஸ் ஏஞ்சலிஸ் நகரிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மரபணுக் கல்வி நிபுணர் டேவிட் பிரவுன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்

December 24, 2007

"ஆண்டவனின் கருவறையில் அனைவரும் சமம்" - 'வாரமொரு ஆலயம்' நடராஜ் பிரகாஷ்

நிலாச்சாரலுக்காக நான் கண்ட நேர்முகம் : வாழ்க்கையே வியாபாரமாகிவிட்ட இந்தக் காலத்தில் நமது கலாசாரமும், பண்பாடும் மறந்துபோகக் கூடாதென்கிற நல்லெண்ணத்தில் அவற்றை நினைவுபடுத்துகிற சேவைகளைச் செய்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். தனது லட்சியமே தமிழகத்தில் உள்ள கோயில்கள் அனைத்தைப் பற்றியும் இந்த உலகத்துக்கு விளக்கிக் கூறுவதுதான் என்று கூறும் நடராஜ் பிரகாஷ், வாரமொரு ஆலயம் என்ற இணையச் சேவையை நடத்திவருகிறார். சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த இவர், தற்போது அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் லாஸ் ஏஞ்சலீஸுக்கு அருகில் வசிக்கிறார். தனது முழுநேரப் பணிக்கு நடுவே, பல்வேறு எதிர்ப்புகளுக்கும், ஏளனங்களுக்கிமிடையில் விடாமுயற்சியோடு தன் சேவையைத் தொடர்கிறாரென்றால் பிரமிப்பாகத்தான் இருக்கிறது. இதுமட்டுமில்லாமல் அருள்மிகு மலிபு வெங்கடேஸ்வரா திருக்கோவிலில், வாரக் கடைசி நாட்களில் தன்னார்வத் தொண்டராக, அங்கு வரும் பக்தகோடிகளுக்குச் சேவையும் செய்து வருகிறார். துளியும் சுயவிளம்பரத்தை விரும்பாத இந்த வித்தியாசமான துருதுரு இளைஞர், நீண்ட யோசனைக்குப் பிறகு நிலாச்சாரல் வாசகர்களிடம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள ஒப்புக்கொண்டார். நண்பருடனான செவ்விக்குச் செல்வோம்.


வித்தியாசமான இந்த “வாரமொரு ஆலயம்” செய்ய எப்படி எண்ணம் வந்தது?



நமது கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பிரதிபலிப்பது ஆலயம். ஓவ்வொரு ஆலயத்துக்கும் ஒரு ஸ்தலபுராணம் உண்டு. அவை ஆலயத்தின் பெருமையை, ஸ்தலம் (இடம்), விருக்ஷ்ம் (மரம்), தீர்த்தம் (புண்ணிய நீர்), மூர்த்தி (இறைவனின் வடிவம்) ஆகிய பரிமாணங்களால் விளங்குகின்றன. வலைப் பதிவுகளை (Blogs) விட பாட்காஸ்டிங் (podcasting) நான்கு மடங்கு வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் இணைய நுட்பமாகும். அதனால் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்களுக்கு விருப்பமான பாட்காஸ்டை எந்த நேரத்திலும் கேட்கலாம். நமது ஆலயங்களின் பெருமையை பாட்காஸ்டிங் மூலமாக பரப்ப நினைத்ததில் உருவானதுதான் "வாரமொரு ஆலயம்".


பாரம்பரியம் மிக்க இந்துக் கோவில்களைப் பற்றிய விபரங்களை எப்படிச் சேகரிக்கிறீர்கள்?


பெரும்பாலும் நான் அல்லது எனது குடும்பத்தினர் சென்று தரிசித்த கோவில்களைப் பற்றி பாட்காஸ்ட் செய்கிறேன். நான் புதிதாக எதுவும் சொல்லவில்லை. நமது முன்னோர்கள் மற்றும் அறிஞர்கள் அளித்துள்ள களஞ்சியமான நூல்கள், ஆய்வுகள், கட்டுரைகள், தலபுராணங்கள் என என்னால் முடிந்த அளவு தொகுத்து வழங்குகிறேன். "வாரமொரு ஆலயம்" சிறப்பாக வர எனக்கு உதவி செய்யும் நண்பர்களுக்கும், ஊக்கப்படுத்தும் எனது குடும்பத்தினருக்கும் எனது உளம் கனிந்த நன்றி.


அமெரிக்காவில் நமது பக்தர்களின் ஈடுபாடு எப்படி உள்ளது?


ஆன்மீக வாழ்வில்தான் நிம்மதி அதிகமென்பதால் அமெரிக்காவில் தற்பொழுது கோவில்களில் நமது பக்தர்களின் ஈடுபாடு அதிகமாக உள்ளது. ஆன்மீகம் என்ற பெயரில் ஆண்டவனின் முன் நமது ஆசையை முன்வைத்து வேண்டுகிறோம். ஆன்மீகம் என்பது அன்பு. மற்றவர்களுக்கு உதவுவதும் கூட. அமெரிக்காவில் கோவில்களில் தொண்டு செய்வதையும் சேர்த்தால் மிகவும் நன்றாக இருக்கும்.


இந்தியாவில் இருந்திருந்தால் இதைச் செய்திருப்பீர்களா?


"அன்பு சுரக்கும் இடத்தில்தான் அருள் சுரக்கும்". கோபத்தைக் குறைத்து அன்புணர்வைப் பெருக்கும் ஆன்மீக இறையுணர்வைப் பரப்புவதற்கு இடம் ஒரு பொருட்டேயல்ல. எங்கிருந்தாலும் கண்டிப்பாகச் செய்திருப்பேன்.


பாட்காஸ்ட் தவிர வேறு ஏதாவது எதிர்காலத் திட்டம்?


இந்த பாட்காஸ்ட் தவிர, "அதிகாலை.காம்" என்ற பெயரில் புதிய தமிழ் இணையதளம் ஒன்று நண்பர்களுடன் இணைந்து தொடங்குகிறேன். நம் தமிழ் சமூகத்தின் அனைத்து விசயங்களும் அதில் இடம் பெறும். தமிழ் தளங்கள் தொடாத பகுதிகள் எல்லாம் இதில் பதிவு செய்யப்படும். இது சம்பந்தமாக உலகளவில் நிபுணத்துவம் பெற்ற நம் சமூக முன்னோடிகளிடம் ஆலோசனை நடைபெற்று வருகிறது. விரைவில் அத்தளம் நம் சமூகத்தின் முன் சமர்ப்பிக்கப்படும்.


பக்திப் படங்கள் முன்புபோல் தமிழில் வருவதில்லையே, இது எதனைக் காட்டுகிறது?


பக்திப் படங்கள் குறைந்துவிட்டால் மக்களிடம் பக்தி குறைந்து விட்டது என்று அர்த்தமல்ல. திரையில் பக்தியின் முழுப்பரிமாணத்தைக் காட்ட எந்தத் தயாரிப்பாளரும் முன் வருவதில்லை. தற்பொழுது ரசிகனும் பக்தியைத் திரையில் தேடிக் கொண்டிருக்கவில்லை.


ஆன்மீகம் வியாபாரமாக்கப் படுகிறது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?



தொடர்ந்து வாசிக்க இணைப்பில் செல்க http://www.nilacharal.com/ocms/log/12240711.asp

இன்றைய குறள்

அரும்பய னாயும் அறிவினார் சொல்லார்
பெரும்பய னில்லாத சொல்

அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர், பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்தமாட்டார்

அறத்துப்பால் : பயனில சொல்லாமை

ஒரு டாலருக்கு! ஒரு பாலம்

அமெரிக்கா விஸ்கோன்சினில் உள்ள கிகாப்பூ நதியின் மீதுள்ள பாலத்தை வாங்க வேண்டுமா? ஒரு நூற்றாண்டுக்கும் மேலான இந்தப் பாலம் கடந்த 31 ஆண்டுகளாக உபயோகிக்கப் படாததால் பழுதாகி நொறுங்கி நதியில் விழுகின்ற நிலையில் இருக்கிறதாம். அதை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து விற்கப் போகிறார்கள் ஒரு டாலருக்கு!

நியுயார்க் டைம்ஸ் செய்திக்கு பாகிஸ்தான் மறுப்பு

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கிய இராணுவ உதவித் தொகையில் 500 கோடி டொலர்கள் பயங்கரவாததுக்கு எதிரான யுத்தத்தில், மோதல் முன்னரங்கில் செயலாற்றும் துருப்பினரைச் சென்றடையவில்லை என்று நியுயார்க் டைம்ஸ் நாளேட்டில் வெளியான செய்தியை முட்டாள் தனமான கூற்று என்று சொல்லி பாகிஸ்தான் நிராகரித்துள்ளது. இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய ஆயுதங்களை வாங்குவதில் இந்தப் பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று இந்தப் பத்திரிகைச் செய்தி குற்றம் சாட்டுகிறது. வடமேற்கு பாகிஸ்தானில் மோதலில் ஈடுபட்டுவரும் படையினர் பனிப் பிரதேசத்திற்கு உதவாத தலைக்கவசமும் காலணிகளும் அணிந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த இராணுவ பேச்சாளர் வஹீத் அர்ஷத், குற்றம் சொல்பவர்கள் படையினரின் நிலைமையை நேரடியாக வந்து பார்த்துச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதில் உதவுவதற்காக அமெரிக்கா பாகிஸ்தானுக்கு நிதி வழங்குகிறது.

December 23, 2007

நடிகை தமானா

இன்றைய குறள்

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று

பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லிவிடலாம், ஆனால் பயனில்லாத சொற்களை சொல்லாமல் இருப்பதே நல்லது

அறத்துப்பால் : பயனில சொல்லாமை

புகை பிடிக்கும் காட்சியில் நடிக்க மாட்டேன் - நடிகர் விஜய்

புகை பிடிப்பதால் புற்று நோய், இதயக்கோளாறுகள் தாக்கக் கூடும் என்பது நமக்குத் தெரியும். ஆனால் அகில உலகளவில் அண்மையில் செய்த ஒரு ஆய்வின்படி இளமையிலேயே தலை வழுக்கை விழும் சாத்தியங்கள் அதிகமென்ற செய்தி சரும நோயின் ஆவணங்கள் என்ற பிரிடிஷ் பத்திரிகையில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதைச் சொல்லும்போது புகை பிடிப்பது பற்றிய ஒரு உபரி செய்தி நினைவுக்கு வருகிறது. மத்திய அமைச்சர் அன்புமணி கேட்டுக்கொண்டதன் பேரில் நடிகர் விஜய் இனி திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சியில் நடிக்க மாட்டேனென்று உறுதி அளித்து அவரின் சபாஷைப் பெற்றிருக்கிறார்.

குஜராத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி

இந்தியா முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், பாரதீய ஜனதா கட்சிக்கு சாதகமாக வந்துள்ளது. அந்த மாநிலத்தின் முதல்வர் நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளார். குஜராத் பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. வாக்குகள் ஞாயிறுக்கிழமை எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில், பாரதீய ஜனதா கட்சி, 117 தொகுதிகளில் வென்று, ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கு இடங்களைக் கைப்பற்றியுள்ளது. மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சி 59 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி மூன்று இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் ஒரு இடத்திலும், சுயேச்சைகள் இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். தற்போது முடிவடைய உள்ள சட்டப்பேரவையில், பாரதீய ஜனதா கட்சி 127 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 51 இடங்களையும் கொண்டுள்ளது. இந்த முறை பாரதீய ஜனதா 10 இடங்களை இழந்திருக்கிறது. இருந்தபோதிலும் தனிப்பெரும்பான்மை பெற்றிருக்கிறது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது, காங்கிரஸ் கட்சி 8 இடங்களைக் கூடுதலாகப் பிடித்துள்ளது.
இந்தத் தேர்தலில், வடக்கு, தெற்கு குஜராத் மற்றும் செளராஷ்டிரா பிராந்தியங்களில் பாரதீய ஜனதா கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிருக்கிறது. கடந்த 2002-ம் ஆண்டு மதக்கலவரம் நடைபெற்ற மத்திய குஜராத்தில், கடந்த தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா கட்சி, இந்த முறை கணிசமான இழப்பைச் சந்தித்திருக்கிறது. 2002-ம் ஆண்டு கலவரத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது, முஸ்லிம்களைப் பாதுகாக்கத் தவறியதாக நரேந்திர மோடி மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்தச் சம்பவம் தொடர்பாக, உள்நாட்டில் மட்டுமன்றி, வெளிநாடுகளில் இருந்தும் மோடி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. குஜராத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி பெற்றுள்ள வெற்றி, தேசிய அளவில் அந்தக் கட்சி பெரிய ஊக்கத்தைக் கொடுக்கும் என்று நோக்கர்கள் கருதுகிறார்கள். இந்த வெற்றி குறித்து கருத்துத் தெரிவித்த நரேந்திர மோடி,தேர்தல் பிரசாரத்தின்போது, புதுப்புது வழிகளில், புதிய வார்த்தைகளைப் பயன்படுத்தி எதிர் பிரசாரம் செய்யப்பட்டது. ஆனால், அது எடுபடவில்லை. குஜராத் மக்கள், எதிர்மறை சக்திகளைத் தோற்கடித்து, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள். இந்த வெற்றி, ஐந்தரை கோடி குஜராத் மக்களுக்குக் கிடைத்த வெற்றி. தொடர்ந்து ஐந்தாவது முறையாக பாரதீய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கிறது. என்றார்.
தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நரேந்திர மோடிக்கு, பிரதமர் மன்மோகன் சிங், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தமிழக பாஜக தலைவர் இல. கணேசன் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்கள். குஜராத் மாநில முடிவுகள் குறித்து அரசியல் ஆய்வாளர் மகேஷ் ரங்கராஜன் அவர்களின் பேட்டியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம் http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

December 22, 2007

இன்றைய குறள்

பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்

பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்

அறத்துப்பால் : பயனில சொல்லாமை

ஒரு சபிக்கப்பட்ட வைரம்

1857-ம் ஆண்டு சிப்பாய் கலகத்தின் போது கான்பூர் இந்திரன் கோவிலிலிருந்து கொள்ளையடிக்கபட்டு பெர்ரிஸ் என்ற ராணுவ வீரனால் பிரிட்டிஷ் அரசுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பழுப்பு வைரம் இப்போது லண்டன் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்படவிருக்கிறது. இது ஒரு சபிக்கப்பட்ட வைரமாம். இந்த வைரத்தை வைத்திருந்த பெர்ரிஸ¤க்கு உடல் நலம் சீரழிந்தது. அதைப் பெற்றுக்கொண்ட அவருடைய மகன் தற்கொலை செய்துகொண்டு இறந்தான். ஸ்கார் ஒயில்டின் நண்பரான விஞ்ஞானி எட்வர்ட் ஹெரான் என்பவர் இந்த வைரத்தின் கடைசி சொந்தக்காரர். 1890வது ஆண்டு இந்த வைரத்தை அவர் பெற்றபோது அவர் பட்ட துயரங்கள் அளவற்றது. அவர் தன் நண்பர்களுக்கு அதைக் கொடுத்தபோது அடுத்தடுத்து சோதனைகளாம். அதை அவர் ஒரு ஏரியில் வீசியெறிந்ததும் கூட மூன்று மாதங்களுக்குப் பின்னர் அவரிடமே வந்து சேர்ந்ததாம். ஏழாண்டுகளுக்கு முன்பு விட்டேகர் என்ற தேசிய அருங்காட்சியகத்தின் தலைமை பொறுப்பாளர் அதை ஒரு கருத்தரங்குக்கு எடுத்துச் சென்றபோது மேகங்கள் இருண்டு ஒரு பெரிய புயல் காற்றில் சிக்கித் தவித்தாராம். “அந்த அனுபவம் மிகவும் பயங்கரமானது, நாங்கள் பிழைத்ததே மறு பிறப்பு’ என்கிறார் அவர். இப்படி சாப வரலாறு படைத்த வைரம்தான் இப்போது சாதுவாக லண்டன் தேசிய அருங்காட்சியகத்தில் அமரப்போகிறது.

உத்தரப்பிரதேச குண்டுவெடிப்பு தொடர்பில் இருவர் கைது

இந்தியாவின் வட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் கடந்த நவம்பர் மாதம் மூன்று நகரங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும், ஹர்கத்-உல்-ஜிஹாதி-இஸ்லாமி என்ற தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். சனிக்கிழமை அதிகாலை, உத்தரப் பிரதேச போலீசாரும், மத்திய பாதுகாப்புப் படை அதிகாரிகளும் இணைந்து, பாரபங்கி ரயில் நிலையத்தில் அந்த இரு நபர்களையும் கைது செய்தார்கள். முகமது காலித் மற்றும் முகமது தாரிக் என்ற அந்த இருவரும், வங்கதேசத்தை மையமாகக் கொண்ட ஹர்கத்-உல்-ஜிகாதி-இஸ்லாமி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். லக்னோ, ஃபைசாபாத் மற்றும் வாரணாசி நகரங்களில் நீதிமன்ற வளாகங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டார்கள். கைது செய்யப்பட்ட இரு நபர்களும், வெடிபொருள்களுடன் பிடிபட்டதாக, உத்தரப்பிரதேச மாநில கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரல் பிரிஜ்லால் தெரிவித்தார்

இந்தியா சீனா இராணுவக் கூட்டுப் பயிற்சி முகாம் - நிபுணர் கருத்து

உலகின் மிகப்பெரிய இரண்டு இராணுவங்களை கொண்டுள்ள இந்தியா மற்றும் சீனா இடையில் முதல்முறையாக இராணுவ கூட்டுப் பயிற்சி முகாம் நடந்துவருகிறது. சீனாவின் தென்மேற்கிலுள்ள யுன்னான் பிராந்தியத்தில் டிசம்பர் 20 தொடங்கி ஒருவாரகாலம் இந்தக் கூட்டுப் பயிற்சி முகாம் நடக்கிறது. 1962-ல் இந்தியா சீனா இடையில் குறுகியகாலமானாலும் ரத்தக்கறை படிந்த யுத்தம் ஒன்று நடந்திருந்தது. பலகாலமாக இறுக்கமாகவுள்ள இருநாடுகளிடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கான அடையாள நடவடிக்கை இந்த இராணுவ கூட்டு முயற்சி என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்திய அமைச்சரவை செயலகத்தில் பணியாற்றி ஒய்வு பெற்ற அதிகாரி டி.எஸ்.ராஜன் அவர்களின் செவ்வியை தமிழோசையில் கேட்கலாம். http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

ஆற்காடு வீராசாமிக்கும் இராமதாசுக்கும் இடையே நடப்பது என்ன?