November 27, 2007

பிறந்த குழந்தைக்கு சூடு வைக்கும் பழக்கம்

சூடு வைக்கப்பட்ட ஒரு குழந்தை பிறந்த குழந்தையின் வீறிட்ட அழுகை, பொதுவாக பெரியவர்களுக்கு சந்தோஷத்தை தரக்கூடிய விடயம். ஆனால் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் மலையோர கிராமங்களில், குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் இது போன்ற வீறிட்ட அழுகை கேட்டால், அந்த குழந்தைக்கு சூடு வைக்கப்படுகிறது என்பதன் அடையாளம் அது என்கிறார்கள் ஐநாமன்றத்தின் சிறார்களுக்கான அமைப்பான யுனிசெப் அமைப்பினர். இந்த பகுதியில், பல தலைமுறைகளாகக் கடைபிடிக்கப்பட்டு வரும் பிறந்த குழந்தைகளுக்கு சூடு வைக்கும் ஆபத்தான பழக்கத்தை ஒழிக்கும் முயற்சியில் யுனிசெப் அமைப்பு ஈடுபட்டு வருகிறது.
இந்த பணியை தற்போது மேற்பார்வையிட்டு வரும் யுனிசெப் அமைப்பின் ஆலோசகரான பி.கணேசமூர்த்தி அவர்கள் இந்த சூடு வைக்கும் பழக்கம் குறித்தும் அதனைத் தடுப்பதற்கான முயற்சிகள் குறித்தும் வழங்கும் செவ்வியை இன்றைய அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில் நேயர்கள் கேட்கலாம்

இன்றைய குறள்

நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்

மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும் வந்து சேரும்

அறத்துப்பால் : வெஃகாமை

சுவாமி சித்பவானந்தர்

"ஒரு நாள் உண்ட உணவில் அதற்கேற்ற பயன் இருப்பது போன்று, அனுஷ்டானத்திற்கு ஏற்ற அளவு யோகத்தின் பயன் உண்டு" - சுவாமி சித்பவானந்தர்

சர்வதேச சமூகத்தின் மீது பிரபாகரன் அதிருப்தி

  • விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், தமது அமைப்பின் மாவீரர் தின உரையின் போது, சர்வதேச சமூகத்தின் மீது தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். மாவீரர்களுக்கான அஞ்சலி மற்றும் தமது அமைப்பு முப்படையாக விரிந்து நிற்பது குறித்த பெருமிதம் ஆகியவற்றுடன் தனது உரையை ஆரம்பித்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர், அதில், சர்வதேச நாடுகள் மீதும் இலங்கைக்கு உதவும் இணைத்தலைமை நாடுகள் மீதும் தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதுடன், மஹிந்த ராஜபக்ஷ அரசின் மீதும், தென்னிலங்கை அரசியல் கட்சிகள் மற்றும், இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை ஆராயும் அனைத்துக் கட்சிக் குழு ஆகியவற்றின் மீது தனது அவ நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

    கிழக்கு மாகாணத்தில் இருந்து விடுதலைப்புலிகள் பின்வாங்கியதை ஒரு தந்திரோபாய நடவடிக்கையாக விபரித்த பிரபாகரன் அவர்கள், அநுராதபுரம் விமானப்படைத்தளத்தின் மீதான தாக்குதல், இலங்கை இராணுவத்துக்கு கொடுக்கப்பட்ட ஒரு பெரிய அடி என்று வர்ணித்தார்.

    ஆனாலும் இலங்கை அரசு தொடர்ந்தும் ஆதிக்க வெறியோடு செயற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், உலக கவனத்தை திசை திருப்பவே அரசு அனைத்துக் கட்சிக்குழுவை ஏற்படுத்தியுள்ளது என்றும் குற்றஞ்சாட்டினார்.

    அதேவேளை, தமிழர் பிரச்சினையை நீதியான வகையில் தீர்த்து வைக்கும் அரசியல் நேர்மையும், உறுதிப்பாடும் எந்தவொரு தென்னிலங்கை அரசியல் கட்சியிடமும் கிடையாது என்றும் பிரபாகரன் தனது உரையில் குறிப்பிட்டார்.

    கிழக்குத் திமோர் மற்றும் மொன்ரி நீக்ரோ ஆகிய நாடுகளில் பிரச்சினைகள் தீர சர்வதேச சமூகம் ஆதரவும் அனுசரணையும் வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள பிரபாகரன், ஆயினும், தமது தேசியப் பிரச்சினையில் சர்வதேச நாடுகளின் நகர்வுகளும், நடவடிக்கைகளும் திருப்தியாக இல்லை என்றும் கூறியுள்ளார்.

    இலங்கை அரசின் போக்கை சர்வதேச நாடுகள் கண்டித்திருந்தால் தமிழ்ச்செல்வனின் மரணம் இடம்பெற்றிருக்காது என்று கூறிய பிரபாகரன், இணைத்தலைமை நாடுகளும் சமாதானத்துக்கான பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தியா முன்னர் விட்ட தவறையே சர்வதேச நாடுகள் தற்போது விட்டு நிற்கின்றன என்றும் பிரபாகரன் குற்றம் சாட்டினார்.

    தமது அமைப்பு இழந்துவிட்ட இறையாண்மைக்காகவும், சுதந்திர தேசத்தை கட்டியெழுப்புவதற்காகவும் போராடுவதாகக் கூறிய அவர், தமது மக்கள் அல்லல் பட்ட வேளைகளில் உலகம் கண்ணை மூடி நின்றதாகவும் குற்றஞ்சாட்டினார்.

    ஆகவே உலகெங்கும் உள்ள தமிழர்கள் தமது போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் தனது உரையின் இறுதிப் பகுதியில் கேட்டுக்கொண்டுள்ளார்.
  • வட இலங்கை தாக்குதல்களில் 20 பேர் பலி : இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் மற்றும் விடுதலைப் புலிகளின் வானொலி நிலையத்தின் மீது, அரச படையினர் நடத்திய விமானக் குண்டுத் தாக்குதல் என்பவற்றில் குறைந்தது 20 பேர் பலியாகியுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்
  • புலிகளின் குரல் வானொலி நிலையத்தின் மீது தாக்குதல் : புலிகளின் குரல் வானொலி நிலையத்தின் 5 ஊழியர்களும், அந்த நிலையத்தின் அயலில் உள்ள வீடுகளில் இருந்ததாகக் கூறப்படும் மேலும் 4 பேருமே இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் மின்னஞ்சல் வழியாக அனுப்பியுள்ள செய்திக் குறிப்பொன்றில் தெரிவித்திருக்கின்றார். இறந்தவர்களில் ஒருவர் 14 வயது சிறுமி என்றும் இளந்திரையன் குறிப்பிட்டுள்ளார்
  • கிளெமோர் தாக்குதலில் 9 மாணவிகள் பலி : இதற்கிடையில் முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் ஐயங்கன்குளம் பாடசாலையைச் சேர்ந்த முதலுவி மாணவர்கள் பயணம் செய்த அம்புலன்ஸ் வண்டி மீது இன்று காலை 11.30 மணியளவில் நடத்தபட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்
  • விடுதலைப் புலிகளின் வானொலி நிலயம் தாக்கப்பட்டது-பலர் பலி : விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தனது வருடாந்திர மாவீர்கள் தின உரையை நிகழ்த்தவிருந்த நிலையில், அவர்களின் முக்கிய வானொலி நிலையத்தை இலங்கை அரசின் விமானப் படையினர் தாக்கியழித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்
  • மத்திய கிழக்கு அமைதிப் பேச்சுவார்தைகள் தொடங்கியது : மத்திய கிழக்குப் பகுதியில் அமைதி ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மீண்டும் துவக்கும் முகமாக ஒரு சர்வதேச மாநாடு வாஷிங்டனுக்கு அருகிலுள்ள அனாபோலிஸில் ஆரம்பாகவுள்ளது
  • போலீஸாரை தாக்கியவர்கள் குற்றவாளிகள் என்கிறார் பிரெஞ்சுப் பிரதமர் : பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் நடைபெற்று வரும் வன்முறைகளின் இரண்டாம் நாள் இரவன்று, போலீசார் மீது துப்பாகிச் சூடு நடத்திய கிளர்ச்சியாளர்களை குற்றவாளிகள் என பிரெஞ்சு பிரதமர் ஃப்ரான்ஸுவா ஃபிலான் வர்ணித்துள்ளார்
  • சிக்கலில் சாம்சங் நிறுவனம் : தென்கொரியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் நிறுவனம், அரசு அதிகாரிகளுக்கு மில்லியன் கணக்கான டாலர்களை கையூட்டாக கொடுத்தது என்கிற குற்றச்சாட்டு தொடர்பில், சுயாதீனமான ஒரு விசாரணையை அந்த நிறுவனம் எதிர்கொள்ளவுள்ளது
  • அடுத்த தலாய் லாமாவை திபேத்தியர்களே தேர்தெடுக்க வேண்டும் என்கிறார் தற்போதைய தலாய் லாமா : தலாய் லாமாநாடு கடந்த நிலையில் வாழும் திபேத்திலுள்ள புத்தமதத்தினர்களின் மதத்தலைவரான தலாய் லாமா அவர்கள், தமக்கு அடுத்த மதத்தலைவரை தேர்தெடுக்கும் வழிமுறைகளில் திபேத்திய மக்களுக்கு ஒரு பங்கிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்

வசீகரப்பாடகி வசுந்த்ரா தாஸ்

November 26, 2007

இன்றைய குறள்

அழுக்கற் றகன்றாரும் இல்லையஃ தில்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்

பொறாமை கொண்டதால் புகழ் பெற்று உயர்ந்தோறும் இல்லை, பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழ்ந்தோரும் இல்லை


அறத்துப்பால் : அழுக்காறாமை

நீதித்துறை மற்றவர்களது வட்டத்தில் மூக்கை நுழைத்து அறிவுறுத்த வேண்டிய காட்டாயம் நிலவுகிறது

"நீதித்துறையின் பணி ஒன்று நடந்த பிறகு அது சட்டப்படி சரியா, தவறா என்று விமர்சிப்பதுதான். ஆனால் இன்று நீதித்துறை, 'அரசாங்கம் இப்படி செய்ய வேண்டும், சட்டசபை, பார்லிமென்ட ஆகியவை இப்படி செய்ய
வேண்டும்' என்று மற்றவர்களது வட்டத்தில் மூக்கை நுழைத்து அறிவுறுத்த வேண்டிய காட்டாயம் நிலவுகிறது. ஒரு கிரிக்கெட் மேட்சில் ஓர் ஆட்டகாரர் மிக மோசமாக விளையாடுகிறார் என்பதற்காக அம்பயர், தானே ஆட்டக்காரரிடமிருந்து கிரிக்கெட் மட்டையை வாங்கி ஆட ஆரம்பித்து விடலாமா? நீதிமன்றத்தின் தீர்ப்புகளை நடைமுறைப்படுத்தாத அரசாங் கங்களை நீதிமன்றத்தால் என்ன செய்ய முடியும்...?" - ஸ்ரீகிருஷ்ணா, அண்மையில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி

இராணுவத் தலைவர் பதவியை சில நாட்களில் துறக்கிறார் அதிபர் முஷாரஃப்

  • பாகிஸ்தானில் அதிபர் முஷாரஃப் தமது பதவியில் இரண்டாவது தலைமைக் காலத்திற்கு எதிர்வரும் வியாழக்கிழமை விசுவாசப் பிரமாணம் செய்து பதவியேற்கும் முன்னர், இராணுவத் தளபதி பதவியிலிருந்து அவர் வெளியேறுவார் என்று அதிபரின் சார்பில் பேசவல்ல அதிகாரி ஒருவர் கூறியிருக்கின்றார். இதற்கிடையில் நாடு கடந்த நிலையிலிருந்து நேற்று பாகிஸ்தான் திரும்பிய முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப், எதிர்வரும் ஜனவரி மாத நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.ஆனாலும், அதிபர் ஜெனரல் பெர்வேஸ் முஷாராஃபின் கீழ் எந்த ஒரு அரசுக்கும் தாம் தலைமை ஏற்கமாட்டார் என அவர் கூறியுள்ளார்.நவாஸின் மிக நீண்டநாள் அரசியல் எதிரியான பேநசிர் பூட்டோவும் தனது வேட்புமனுவை ஏற்கனவே தாக்கல்செய்திருந்தார்.தேர்தல்கள் நியாயமான முறையில் நடப்பதை உறுதிசெய்யும் நடவடிக்கைகளை அதிபர் முஷாரஃப் எடுக்கத் தவறினால் இப்பொதுத் தேர்தலை தாம் புறக்கணிக்கப்போவதாக இரு தலைவர்களுமே கூறியுள்ளனர்
  • வடமத்திய மாகாணத்தில் புலிகள் 4 கிராமவாசிகளை சுட்டுக்கொன்றதாக தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தகவல் : சம்பவ இடம்இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் வில்பத்து சரணாலயத்தை அண்மித்த மாவிலாச்சிய என்ற கிராமப்பகுதியில் இன்று காலை 4 கிராமவாசிகளை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியுள்ளது
  • அமெரிக்காவில் மத்தியகிழக்கு அமைதி முயற்சி மாநாட்டுக்கு முன்னதாக இஸ்ரேல் பாலஸ்தீன தலைவர்களை அதிபர் புஷ் சந்திக்கிறார் : அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்கு அருகே அன்னாபொலிஸ் என்ற இடத்தில் மத்தியகிழக்கு பற்றிய மேனிலை மாநாடு நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவிருக்கும் வேளையில் இஸ்ரேல் பிரதமர் எஹுத் ஒல்மர்ட்டையும் பாலஸ்தீன தலைவர் மஹ்மூத் அப்பாஸையும் அமெரிக்க அதிபர் புஷ் சந்தித்துப் பேசவிருக்கிறார்
  • பிரான்ஸ் சீனா இடையில் பெரும் வர்த்தக உடன்பாடுகள் கையெழுத்தாகியுள்ளன : பிரான்ஸுக்கும் சீனாவுக்கும் இடையில் 3000 கோடி டொலர்கள் பெறுமதியான வர்த்தக உடன்படிக்கைகள் இருநாடுகளின் அரசுத் தலைவர்கள் முன்னிலையில் பீஜிங்கில் கைசாத்திடப்பட்டன
  • பத்திரிகையாளர் ஒருவரின் குடும்பத்தினர் 11 பேர் பாக்தாத்தில் சுட்டுக்கொலை : இராக்கியத் தலைநகர் பாக்தாத்தில் தமது குடும்பத்தாரின் 11 உறுப்பினர்களை ஷியா துப்பாக்கிதாரிகள் கொன்றிருப்பதாக வெளிநாடு ஒன்றில் வாழும் இராக்கிய பத்திரிகையாளர் ஒருவர் கூறியிருக்கின்றார்
  • ஆஸ்திரேலிய பூர்வகுடிகளுக்கு இழைக்கப்பட்ட தவறுகளுக்காக மன்னிப்பு கேட்கவிருக்கிறார் புதிய பிரதமர் : ஆஸ்திரேலியாவின் பூர்வகுடி இனத்தவர் கடந்தகாலத்தில் அனுபவித்து வந்த துஷ்பிரயோகங்கள், தவறுகளுக்காக அதிகாரபூர்வ மன்னிப்பு தாம் கேட்கவிருப்பதாக புதிதாக நாட்டின் பிரதமராக பதவியேற்கவிருக்கும் கெவின் ருட் கூறியுள்ளார்
  • மன்னார் பாடசாலையில் விடுதலைப் புலிகள் நடத்தியதாக இராணுவத்தினர் குற்றம்சாட்டும் மோர்டார் தாக்குதலில் 7 பேர் காயம் : இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தின் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள மல்லவராயன் கட்டையடம்பன் பாடசாலை மீது இன்று திங்கட்கிழமை பிற்பகல் விடுதலைப் புலிகள் மோர்டார் தாக்குதல் நடத்தியதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது
  • மத்தியகிழக்கு அமைதி முயற்சிகளில் அதிபர் புஷ் திடீர் மும்முரம் ஏன்? - ஆய்வுக் கண்ணோட்டம் : அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியிலுள்ள அன்னாபொலிஸ் நகரில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள மத்தியகிழக்கு அமைதி மாநாடுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்துவருகின்றன

November 25, 2007

கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (2)

(..."நிலாச்சாரல்" மின்னிதழில் பிரசுரமான எனது கட்டுரையின் கடந்தவாரத் தொடர்ச்சி)... சரியான காரணம் என்னவெனில் ஒரு செய்தி இந்த உலகத்துக்குச் சொல்லப்படும்போது, அந்தச் செய்தி எந்த அளவுக்குப் போய்ச் சேருகிறது என்பது முக்கியம். அதே சமயம் அது யாரால் சொல்லப்படுகிறது என்பதும், எப்படிப்பட்ட சூழலில் சொல்லப்படுகிறது என்பதும் மிக முக்கியம். அதே வேளையில் ஒரு செய்தி உண்மையான அனுபவத்தோடும், உணர்வுகளோடும் சொல்லப்படும்போது அதன் வீச்சு பல மடங்கு இரட்டிப்பாகும் என்பதால்தான் கடவுள் என்னைப் போன்ற சிலரை உருவாக்கி எங்கள் மூலமாக இந்த உலகத்துக்குச் சில செய்திகளைச் சொல்கிறார். இது நான் அனுபவித்துணர்ந்த உண்மை. இது வேதனைகள் நிறைந்த அனுபவமாக இருப்பினும், அது தரும் முடிவுகள் இந்த உலகத்துக்குப் பயனுள்ளதாக இருப்பதால் நாங்கள் வேதனைப்படவும் தயாராகவும் இருக்கிறோம். அந்த வேதனை அதிலிருந்து கிடைக்கும் பலன்களால் ஆறிவிடப்போகிறது அவ்வளவுதான். யேசுநாதர் சிலுவையில் அறையப்படவில்லையா? இந்த அனுபவங்கள் தரும் நல்ல பலன் அந்த வேதனைகளையும், வலிகளையும் புனிதப்படுத்திவிடும்..... தொடர்ந்து படிக்கத் தயவுசெய்து இணைப்பில் செல்க...http://www.nilacharal.com/ocms/log/11260710.asp

கவிக்கோ அப்துல் ரகுமான்

கவிக்கோ அப்துல் ரகுமான் தமிழ்க் கவிதையுலகில் தனி முத்திரை பதித்தவர். புரட்சிக்கவிஞரைப் போல புதிய கவிஞர்களை வளர்த்தெடுப்பதில் ஆர்வமுடையவர். பல கவிதை நூல்களையும், கவிதை பற்றிய நூல்களையும் எழுதியவர்.
1. நீங்கள் எந்த இயக்கத்தையும் சாராமல் இருக்கக் காரணம் என்ன?
சுதந்திரமாகச் சிறகை விரிப்பவன் கவிஞன். அவனுக்கு இயக்கச் சார்பு என்பது கூண்டுதான்.
2. உங்கள் கவிதைகளின் உள்ளடக்கங்களில் சமுதாயக் கவிதைகளுக்கு அடுத்த நிலையில் தத்துவக் கவிதைகள் அதிகமாக உள்ளன. ஆயினும் உங்களைத் தத்துவ கவிஞராக யாரும் கூறவில்லையே?
விமர்சகர்களின் பக்குவமின்மை
3. நிறைவேறாத காதல் கவிதைகள் பலவற்றை நீங்கள் எழுதியமைக்கு காரணம்?
கவிஞர் காதல் கவிதைகளை பாடினால் தன் வாழ்க்கை அனுபவத்தை பாடுவதாக எடுத்துக் கொள்ளமுடியாது. நான் காதலின் பல விதமான மனோபாவங்களைப் பாடியுள்ளேன். குறிப்பாக நிறைவேறாத கவிதைகளின் பாதிப்பு எனலாம்.
4. நடிகர்கள் அரசியலுக்கு வருவதை உங்கள் கவிதைகள் எதிர்ப்பது ஏன்?
தமிழ்நாட்டின் அவலத்தைச் சுட்டிக்காட்டுவது ஒரு நோக்கம். அரசியல் தெரிந்த நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் ஒன்றும் தடையில்லை. திரைப்படங்களில் மக்களுக்கு நன்மை செய்வது போல் வருபவர்களைப் பிரவேசித்ததால் ஏற்பட்ட சீரழிவுகளை எல்லோரும் அறிவர்.
5. ஆயிரம் திருநாமம் பாடி உருவமற்ற ஒரே கடவுள் என்று குறிப்பதன் நோக்கம் என்ன?
இறைவனுக்கு உருவமில்லையே தவிர, பெயர்கள் எத்தனை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். மதங்களெல்லாம் இணையக்கூடிய ஒரு கொள்கையில் இணைப்பதுதான் என் நோக்கம்.
6. சமூகச் சீர்கேடுகள் குறித்து நீங்கள் கருதுவது என்ன?
பொருள் வேட்கையின் காரணமாக, நவ நாகரிக வாழ்க்கை முறை காரணமாக, நேர்மை, உண்மை, சுய மரியாதை போன்ற விழுமியங்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது. இதனால் உலகளவில் ஒரு பண்பாட்டுச் சீரழிவு காணப்படுகிறது. கவிஞன் ஒரு பரிபூரணமான அழகிய உலகத்தைக் காணவிரும்புகிறான். அவன் கண் முன்னால் அநீதிகளும் அக்கிரமங்களும் நடக்கிறபோது அவன் அவைகளைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது.
7. முரண் கவிதைகள் பெரிதும் எழுதிய கவிஞராகக் கருதப்பெறும் நீங்கள் அங்கதக் கவிதைகளே அதிக எண்ணிக்கையில் எழுதியுள்ளீர்களே? குறிப்பாக, நளினமாக அங்கதம் செய்கிறீர்களே?
இயல்பாகவே அங்கத உணர்வு எனக்கு பிடிக்கும். கவிதையின் இயல்புகளில் அங்கதமும் ஒன்று. நளினமாகத் தாக்குவதுதான் நாகராகம். தாக்கபடுபவனும் சிந்திக்க வேண்டும் என்பது கருத்து. அவனை எதிரியாக்கிக் கொள்ளக்கூடாது. சமூக குறைபாடுகளைக் சுட்டும்போது அங்கதத்தின் வழியாகச் சுட்டுவது ஒரு வழி.

இன்றைய குறள்

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்

பொறாமைக் குணம் கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும், பொறாமைக் குணம் இல்லாதவனின் வாழ்க்கை வேதனையாக இருப்பதும் வியப்புக்குரிய செய்தியாகும்


அறத்துப்பால் : அழுக்காறாமை

நான் கடந்து வந்த பாதையில், நான் சந்தித்த சாவல்கள் ஏராளம். அது ஒரு கரடுமுரடான பாதை - அஞ்சு ஜார்ஜ்

நான் கடந்து வந்த பாதையில், நான் சந்தித்த சாவல்கள் ஏராளம். அது ஒரு கரடுமுரடான பாதை. கிரிக்கெட்டிற்கு கோடி கோடியாக கொட்டி ஸ்பான்சர் செய்ய நிறைய நிறுவனங்கள் முன் வருகின்றன. 'முதல் மரியாதை', 'தனி மரியாதை' தரப்படுகிறது. ஆனால், மற்ற விளையாட்டுக்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. அதிலும் தடகள வீரர்களை கண்டு கொள்வதேயில்லை. பொருளாதார ரீதியில்தான் இப்படி என்றால், ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் அந்த சந்தோஷத்தையோ அல்லது தோல்வியடைந்தால் அந்த வருத்தத்தையோ பகிர்ந்து கொள்ளக்கூட ஆள் கிடையாது என்பது வருத்தமளிக்கும் உண்மை" - அஞ்சு ஜார்ஜ், தடகள வீராங்கனை

பாகிஸ்தான் திரும்பினார் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்

  • கொல்கத்தாவில் வன்முறையை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டவர் கைது : இந்தியாவின் கொல்கத்தா நகரத்தில் கடந்த புதனன்று வன்முறை ஏற்பட காரணமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம் தலைவர் ஒருவரை ஐந்து நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைத்திந்திய சிறுபான்மை கூட்டமைப்பு என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான இத்ரிஸ் அலி என்ற அவர், வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு கொல்கத்தாவில் அடைக்கலம் தரக்கூடாது என்று கூறி நடைபெற்ற வன்முறையை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு ஞாயிறன்று கைது செய்யப்பட்டார். அன்று நடைபெற்ற வன்முறையை தொடர்ந்து தஸ்லிமா நஸ்ரினை கொல்கத்தாவை விட்டு வெளியேறுமாறு மேற்குவங்க அரசு வற்புறுத்தியது. இதற்கு மனித உரிமை அமைப்புகள் போன்றவை கடும் எதிர்ப்புதெரிவித்தன. தற்போது, தஸ்லிமா நஸ்ரின் கொல்கத்தாவிற்கு திரும்பி வந்தால் அவருக்கு பாதுகாப்பு கொடுக்க தயாராக இருப்பதாக இப்போது மேற்கு வங்க முதலமைச்சர் கூறுகின்றார்
  • கிளிநொச்சி தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் : இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை விமானப்படையினர் நடத்திய வான்வழி குண்டுத் தாக்குதலிலும் வேறு இரண்டு கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல்களிலும் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கின்றர்கள் என்றும் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளார்கள் என்றும் வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன
  • பாகிஸ்தான் திரும்பினார் நவாஸ் ஷெரிஃப் : பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் சவுதி அரேபியாவில் இருந்து லாகூருக்கு சென்றுள்ளார். சவுதி அரேபியாவில் அரசியல் தஞ்சம் அடைந்து இருக்கும் நவாஸ் ஷெரிஃப் அதை முடித்து நாடு திரும்புவதற்கு கடந்த மூன்று மாதத்தில் நடத்தும் இரண்டாவது முயற்சி இது. விமானத்தில் பிபிசியிடம் பேசிய நவாஸ் ஷெரிஃப் தன்னுடைய லட்சியம் பாகிஸ்தானில் இராணுவ ஆட்சியை முறியடிப்பதுதான் என்பதால், பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரப்புடன் ஒத்துப் போவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார். அவரது வருகையையொட்டி லாகூரில் பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் செப்டம்பரில் இடம்பெற்றது போல உடனடியாக நவாஸ் ஷெரிப்பை நாட்டை விட்டு வெளியேற்றும் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இருப்பது போல தெரியவில்லை என பார்வையாளர்கள் கூறுகின்றனர்
  • தாக்குதலில் ஏராளமான தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர் - ஆப்கான் அதிகாரிகள் : ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான பாக்தியாவில் ஆப்கான் மற்றும் நேட்டோ படைகளுடன் நடைபெற்ற மோதலில் ஏராளமான தலிபான் கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஆப்கான் அதிகாரிகள் கூறியுள்ளனர்
  • அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கையை கடுமையாக சாடியுள்லார் ஆங்கிலிக்கன் திருச்சபை தலைவர் : உலகம் முழுவதும் சுமார் எழுபது மில்லியன் ஆங்கிலிக்கன் திருச்சபையை பின்பற்றுவோரின் தலைவரான டாக்டர் ரோவன் வில்லியம்ஸ் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை கடுமையாக சாடியுள்ளார்.
    இங்கிலாந்து திருச்சபையின் தலைவரும், கேண்டர்பரியின் ஆர்ச்பிஷப்புமான ரோவன் வில்லியம்ஸ் அவர்கள், பிரதானமாக முஸ்லிம் வாசகர்களையே கொண்ட பிரிட்டிஷ் பத்திரிக்கை ஒன்றுக்கு இக்கருத்துக்களை தெரிவித்தார். பலத்தை தவறாக பயன்படுத்தும் அமெரிக்காவின் போக்கை முற்காலத்தில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் நடந்து கொண்ட முறையோடு அவர் ஒப்பிட்டுள்ளார். அத்தோடு உலகம் முழுவதும் செல்வாக்கை பெற முயற்சிக்கும் அமெரிக்காவுக்கு அந்த முயற்சி பலிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கு இராக்கை ஒரு உதாரணமாக எடுக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்
  • மலேசியாவில் இந்திய வம்சாவழியினர் ஆர்ப்பாட்டம் : மலேசியாவில் அரசின் தடையை மீறி தலைநகர் கோலாலம்பூரில் பேரணி நடத்திய இந்திய சிறுபான்மை மக்களுடன் மலேசிய பொலிஸார் மோதியுள்ளனர். நகரத்தின் மைய பகுதியில் விடியற்காலை குழுமிய ஆயிரக்கணக்கானவர்கள் மீது கண்ணீர்புகை குண்டுகளை வீசியதோடு, தண்ணீரையும் பீய்ச்சியடித்த பொலிஸார் குறைந்தப்பட்சம் ஐம்பது பேரை கைது செய்தனர். மலேசியாவில் சிறுபான்மையாக இருக்கும் இந்தியர்கள் பெரும்பான்மை மலாய் அரசாங்கத்தால் தாங்கள் பாரப்பட்சமாக நடத்தப்படுவதாக இந்தியர்கள் கோபமாக இருக்கின்றனர். இந்த பேரணி இன பதட்டத்தை அதிகரிக்கும் எனக் கூறி இந்த பேரணிக்கு மலேசிய அதிகாரிகள் தடை விதித்து இருந்தனர்

November 23, 2007

தமிழகத்தின் சமீபத்திய வன்முறைகள் : ஓர் ஆய்வு - 1

தமிழகத்தின் சமீபத்திய வன்முறைகள் : ஓர் ஆய்வு - 2

தமிழகத்தின் சமீபத்திய வன்முறைகள் : ஓர் ஆய்வு - 3

ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவாளர் - 1

ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவாளர்- 2

இன்றைய குறள்

அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்

பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய வழியிலும் அவனை விட்டுவிடும்


அறத்துப்பால் : அழுக்காறாமை

சிலபேரு மண்வாசனைக்காகப் பண்றோம்னு பண்றாங்க

"சிலபேரு மண்வாசனைக்காகப் பண்றோம்னு பண்றாங்க. அது என்ன ஆயிடுறதுன்னா பேச்சுத்தன்மை அதிகமாகப் போய், புரியாம போயிடுறது. கொஞ்சமா இருந்தா பரவாயில்லை. வரிக்கு வரி புரியாம போயிடுச்சுன்னா ஒரு தொடர்பே ஏற்படுத்திக்க முடியாம போயிடும். ஒரு மொழிபெயர்ப்பாளனால எப்படி அந்தப் பேச்சு மொழிய மொழிபெயர்க்க முடியும்?" - அசோகமித்திரன், எழுத்தாளர்