August 25, 2008

"ஒரு லட்சம் தேவேந்திரகுல வேளாளர் முஸ்லிம்களாக மதம் மாற முடிவு" - சி.பசுபதி பாண்டியன்

தென்காசி, ஆக. 24 : தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் ஒரு லட்சம்பேர் இஸ்லாமியர்களாக மதம் மாறப்போவதாக தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் சி. பசுபதி பாண்டியன் எச்சரித்தார்.

திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இயற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு :

  • "தியாகி இமானுவேல் சேகரனின் நினைவுநாளை தமிழ்ச் சமூகங்களின் சமத்துவ நாளாக அரசு அறிவித்து ஆண்டுதோறும் விழா நடத்த வேண்டும். தமிழகம் முழுவதும் வைக்கப்பட்டுள்ள அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களின் அனைத்து சிலைகளையும் அகற்றி அருங்காட்சியகத்தில் வைக்கவேண்டும்.
  • தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை ஆதிதிராவிடர் பட்டியலிலிருந்து நீக்கவேண்டும் என பலமுறை வலியுறுத்தியும், அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காத மாநில அரசைக் கண்டிக்கிறோம்.
  • ஆதிதிராவிடர் பட்டியலிலிருந்து நீக்கி, "தேவேந்திரகுல வேளாளர்'' என தனிப்பட்டியல் கோரி புதுதில்லியில் 5 ஆயிரம் பேர் கலந்துகொள்ளும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவேண்டும்.
  • இலங்கைவாழ் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  • இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தி நிரந்தரத் தீர்வு காணவேண்டும்'.
  • இந்தத் தீர்மானங்களை வலியுறுத்தி மாவட்டங்கள் தோறும் விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்துவது என மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டம் முடிந்தபின், சி. பசுபதி பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

எங்களுடை பூர்வீகத் தொழில் விவசாயம். இந்தியாவில், தமிழகத்தைத் தவிர விவசாயம் செய்யும் மக்களை யாரும் எஸ்.சி. என அழைக்கவில்லை. எங்களுக்கு இடஒதுக்கீடு தேவையில்லை.

எங்களுடைய மக்கள் தொகையைக் கணக்கிட்டு விகிதாசார அடிப்படையில் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

தமிழன் என்ற மரியாதையை எங்களுக்கு வழங்கினால் போதும். பல்வேறு ஜாதிக் கலவரங்களால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதோடு மிகவும் இழப்புகளைச் சந்தித்து விட்டோம்.

தில்லியில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பிறகும், ஆதிதிராவிடர் பட்டியலிலிருந்து எங்களுடைய தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை நீக்காவிட்டால், ஒரு லட்சம் பேர் இஸ்லாத்துக்கு மாறுவதைத் தவிர வேறுவழியில்லை.

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால், நாடாளுமன்றத் தேர்தலையும் புறக்கணிக்கவுள்ளோம் என்றார் அவர்.
நன்றி : முதுவை ஹிதயத்


August 24, 2008

தெருவோரத்தில் அனாதைகளாக வ.உ.சி.யின் கொள்ளுப் பேத்தி,பேரன்

ஆங்கிலேய அரசையே ஆட்டிப்படைத்த சுதந்திரப் போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் கொள்ளுப் பேத்தி, பேரன் ஆகியோர் வசிக்க இடமின்றி சாலையோரத்தில் வாழ்கின்றனர்.

"மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?' -என பாரதியார் தனது "சுதந்திரப் பயிர்' என்ற தலைப்பிலான கவிதையில் வ.உ.சிதம்பரனாரின் தியாகத்தை நினைந்து அன்றே உள்ளம் உருகிப் பாடியிருந்தார்.

அப்படிப்பட்ட தியாகச்சுடர் சிதம்பரனாரின் மூத்த மகன் ஆறுமுகம். இவரது மகள் கமலாம்பாள். இவரது கணவர் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஞான வடிவேலு. இந்திய குடியரசுத்தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத், ஞானவடிவேலுவுக்கு தொழிலாளர் நலத்துறையில் பணி வாய்ப்புக்கு ஏற்பாடு செய்தார். ஞானவடிவேலு-கமலாம்பாளின் மூத்த மகள் தனலெட்சுமி (52). மகன்கள் சங்கரன் (46), ஆறுமுகம் (40), சோமசுந்தரம் (40).


தாய் இறந்த நிலையில் தந்தையே இவர்களை வளர்த்துள்ளார். அருப்புக்கோட்டையில் குடும்பக் கோயிலுக்குச் சொந்தமான வீட்டில் வசித்துள்ளனர். அப்போது, பங்காளிகளுக்குள் ஏற்பட்ட சொத்துப் பிரச்னை காரணமாக கல்லூரணி என்ற ஊருக்கு வாடகை வீட்டில் குடிபெயர்ந்தனர். இந்நிலையில் தனலெட்சுமி, சங்கரன் ஆகியோருக்கு திருமணமாகியது. சங்கரன் மதுரை மூன்றுமாவடி சம்பக்குளம் பகுதியில் குடியேறி பெயிண்டிங் தொழில் செய்தார். அவரது சகோதர ரான ஆறுமுகமும் உடன் வசித்தார். காதல் திருமணம் செய்த தனலட்சுமி கணவரைப் பிரிந்தார். 2003-ல் ஞானவடிவேலு இறந்துவிட்டார். ஆறுமுகம் பெயிண்டிங் வேலை செய்தபோது ஏற்பட்ட விபத்தில் மனநலம் பாதிக்கப்பட்டார். இதனால் திருமணமாகவில்லை.


கணவரும் பிரிந்து, ஆதரித்த தந்தையும் இறந்துவிட்டதால், மதுரை வந்த தன லெட்சுமி மூன்று மாவடிப் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி முறுக்கு வியாபாரம் செய்தார். ஆனால் சொத்துப் பிரச்னை வழக்கு தொடர்பாக அருப்புக்கோட்டைக்கு அடிக்கடி சென்றதால் வியாபாரத்தைச் சரியாகக் கவனிக்க முடியவில்லை. மாதாமாதம் வாடகை தராததால் வீட்டைக் காலி செய்துவிட்டனர். தனலெட்சுமியின் சகோதரர் சங்கரனுக்கும் பெயிண்டிங் தொழிலில் போதிய வருவாய் இல்லை.அவராலும் வீட்டு வாடகையைக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தகராறு ஏற்பட்டது. அவரது மனைவி குழந்தையுடன் பிரிந்து சென்றுவிட்டார். இப்போது தனலெட்சுமியும் அவரது சகோதரர்களும் மூன்று மாவடி பஸ் நிலையம் அருகே உள்ள "கண்ணன் கருப்பன் ஆஞ்சநேயர் கோயில்' வளாகத்தில் தங்கியுள்ளனர். சங்கரனும், தனலெட்சுமியும் கிடைக்கும் கூலி வேலைக்குச் சென்று வருகின்றனர். அவரது சகோதரர் ஆறுமுகமும் அவ்வப்போது பெயிண்டிங் வேலைக்குச் சென்று வருகிறார். இவர்களை யாரென்று அப்பகுதியில் உள்ளோருக்குத் தெரியவில்லை.


வெட்டவெளியில் கோயிலுக்கு அருகே விற்பனைக்கு குவிக்கப்பட்ட மணல், செங்கல் இடையேதான் தனலெட்சுமியும், அவரது சகோதரர்களும் தினமும் இரவில் உறங்குகின்றனர் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.மழைக்காலத்தில் அங்குள்ள கடைகளின் முன்பகுதியில் தங்குவார்களாம்.மழை பெய்தால் அன்று இரவு அவர்களுக்கு சிவராத்திரிதான். இந்தச் சூழலால் தற்போது தனலெட்சுமியும்

, அவரது சகோதரர்களும் மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கலாம் என ஆதங்கப்படுகிறார் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். சாலையோர வாழ்க்கை; காபி, வடையே காலை உணவு! தெருவோரத் தில் தள்ளுவண்டியில் விற்கப்படும் கேப்பை, கம்பங்கூழே பகலுணவு -என காலத்தைக் கழிப்பதாக விரக்தியுடன் விவரிக்கிறார் தனலெட்சுமி.வ.உ.சி. வாரிசுகள் என உதவி கேட்டு அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் எதுவும் நடக்கவில்லை என்பதால் வெறுத்துப் போய்விட்டதாக தனலெட்சுமி விரக் தியுடன் சிரிக்கிறார்.""ஏதாவது ஓர் இடத்தில் குறைந்த ஊதியத்திலாவது என்னை வேலைக்கு சேர்த்துவிட முடியுமா?'' என நம்மைப் பார்த்து அவர் கெஞ்சியதைக் கண்டு கண்ணீர் தான் வருகிறது.


சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு ஏதேதோ சலுகைகள் செய்ததாகக் கூறி வரும் தமிழக அரசுக்கும், வ.உ.சி. பெயரில் கட்சியும், மன்றமும் நடத்துவோருக்கும் இந்த தனலெட்சுமி போன்றோரது கஷ்டம் தெரியாமல் போனது எப்படியோ? வ.உ.சி. சிறையில் இழுத்த செக்கையும், அவர் பயன்படுத்திய பொருளையும்கூட பத்திரப்படுத்தி பாதுகாக்கும் தமிழக அரசு அந்தத் தியாகச்சுடரின் வாரிசுகளுக்கு, வாழ ஒரு வழியும், வசிக்க பாதுகாப்பான இடமும் அளிப்பது அவசியம் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.


"பஞ்சமும் நோயும் நின் அடி யார்க்கோ, பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ'' ன்ற பாரதியாரின் பாடல் வரிகள்தான் அந்த இடத்திலிருந்து புறப்பட்டபோது காதில் ரீங்காரமிட்டது. வசிக்க வீடில்லாமல் மதுரை மூன்றுமாவடி சாலையோரத்தில் தங்கி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் கொள்ளுப் பேத்தி, பேரன்".

August 16, 2008

புலி வேட்டைக்குப் புறப்பட்டவர்கள் புகைந்து போன வரலாறு! - பழ.நெடுமாறன்

15 August 2008 : "விடுதலைப் புலிகளால் இனிமேல் மரபு வழி இராணுவமாக சண்டையிட முடியாது. இராணுவத்தினர் நடத்தும் தொடர்ச்சியான தாக்குதல்களால் வலிமை குன்றிவிட்டார்கள். இனி அவர்களால் எதிர்த்துப்போராட இயலாது" என்று சிங்கள இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார்.

கடந்த கால வரலாறுகளை மறந்து சிங்கள இராணுவத் தளபதிகள் பலரும் இதைப்போல வாய்ச்சவடால்கள் அடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் புளுகுகளைத் தமிழர்கள் ஒருபோதும் நம்பப்போவதில்லை. உலக நாடுகளும் உண்மைகளை அறிந்தே வைத்துள்ளன. எனவே உலக நாடுகளையும் இவர்களால் ஏமாற்ற முடியாது. அவ்வப்போது இத்தகைய புனைக்கதைகளை அவர்கள் யாருக்காகக் கூறுகிறார்கள்? சிங்கள அப்பாவி மக்களை ஏமாற்றுவதற் காகத்தான் இத்தகைய பொய்யான தகவல்களை தொடர்ந்து கூறிவருகிறார். ஏற்கனவே இராணுவ ரீதியில் வலிமை குன்றிப்போய் கிடக்கிறார்கள், பொருளாதார ரீதியில் நொறுங்கிப்போய் சிங்கள தேசம் கிடக்கிறது. இந்தச் சூழ்நிலையில் சிங்கள மக்களை ஏமாற்றுவதற்காக இத்தகைய பொய்யுரைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடந்த காலத்திலும் இத்தகைய கட்டுக்கதைகளை கூசாமல் சொன்னவர்கள் பலருண்டு.
தளபதி கல்கத்

1988-ஆம் ஆண்டில் இந்திய அமைதிப்படையின் தளபதியாக இருந்த கல்கத் வெறும் சவடால் பேர்வழியாக இருந்தார். இந்தியாவில் உள்ள வெத்து வேட்டு அரசியல்வாதிகளைப் போல அடிக்கடி புலிகளைக் குறித்து பொய்யான அறிக்கைகள் விட்டு சுயவிளம்பரப் போர் நடத்திக்கொண்டிருந்தார். தினமும் 20, 30 புலிகளைச் சுட்டு வீழ்த்தியதாகவும் புலிகளின் முகாம்களைத் தாக்கி அழித்து விட்டதாகவும் செய்திகளைப் பரப்பியபடி இருந்தார்.
இடைஇடையே சென்னைக்கு வருகை தந்து 5 நட்சத்திர உணவு விடுதி ஒன்றில் பத்திரிகையாளர்களுக்கு ஆடம்பரமான விருந்து அளிப்பார். இந்த விருந்தில் தளபதி கல்கத் தனது வீரதீர பராக்கிராம செயல்களை விவரிப்பார். இச்செய்திகளை முக்கியத்துவம் கொடுத்து வெளியிடும் பத்திரிகையாளர்கள் தனியே சிறப்பாகக் கவனிக்கப்பட்டனர். சென்னையில் ஒருமுறை இவர் நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் அவிழ்த்துவிட்ட புளுகுகளைக் கேட்டுக் கேட்டு காதுகள் புளித்துப்போன செய்தியாளர் ஒருவர் "எல்லாம் சரி நீங்கள் இதுவரை சுட்டுவீழ்த்தியதாகக் கூறப்படும் புலிகளின் எண்ணிக்கையைக் கூட்டினால் பல ஆயிரம் வருகிறது. புலிகளிடமிருந்து நீங்கள் கைப்பற்றியதாகக் கூறப்படும் ஆயுதங்களின் எண்ணிக்கை சிங்கள இராணுவத்தினரிடம் உள்ள ஆயுதங்களைவிட அதிகமாக இருக்கும் போல் தெரிகிறதே" என்று கேட்டபோது அனைவரும் சிரித்தனர்.
ஒருமுறை தளபதி கல்கத் "பிரபாகரன் இருக்கும் இடத்தை இந்தியப்படை சுற்றி வளைத்துவிட்டது. இனி அவர் தப்ப முடியாது. எல்லா வழிகளையும் அடைத்துவிட்டோம். விரைவில் உயிருடன் அல்லது பிணமாக பிடிபடுவார்" என அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இப்படித் தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்யும் தளபதி கல்கத்திற்கு ஒரு பாடம் கற்பிக்க பிரபாகரன் விரும்பினார். அதற்கான திட்டத்தையும் தீட்டினார். முல்லைத் தீவில் உள்ள ஒரு காட்டிற்கு அருகில்தான் தளபதி கல்கத்தின் முகாம் அமைந்திருந்தது. ஒருநாள் காலைப்பொழுதில் தனது கூடாரத்திலிருந்து தூங்கி எழுந்து தளபதி கல்கத் வெளியே வந்து நாற்காலியில் அமர்ந்தார். அவருக்கு இராணுவ வீரர்கள் தேனீர் கொண்டுவந்து கொடுத்தனர். ருசித்து அருந்திக்கொண்டிருந்தார்.

சற்றுத் தொலைவில் இரண்டு உலங்கு வானூர்திகள் தயாராக நின்று கொண்டிருந்தன. ஆங்காங்கே படை வீரர்கள் காவலுக்கு நின்றிருந்தனர்.
அந்த வேளையில் அவர் கண்ணுக்கு எதிரில் சில நூறடிகளுக்கு அப்பால் புலிகள் சிலர் திடீரென்று தோன்றி தரையில் மண்டியிட்டு ஏவுகணைகளை ஏவினர். கண்மூடித் திறப்பதற்குள் இந்திய இராணுவ உலங்கு வானூர்திகள் இரண்டும் தூள் தூளாயின. பயந்து நடுங்கிய தளபதி கல்கத் தாவிக்குதித்து அருகில் இருந்த பதுங்கு குழிக்குள் பாய்ந்தார். அவரது காவலுக்கு நின்ற வீரர்களும் எதிர்பாராத இந்த தாக்குதல்களால் நிலைகுலைந்து சிதறி ஓடினர்.
கண்மூடி திறப்பதற்குள் இந்நிகழ்ச்சி நடந்து முடிந்துவிட்டது. புலிகள் நிதானமாக நடந்து மீண்டும் காட்டுக் குள்ளே புகுந்து மாயமாக மறைந்து போனார்கள். இவ்வளவு நெருங்கி வந்து ஏவுகணையை ஏவியவர்கள் நினைத்திருந்தால் தன்னையே எளிதாக ஒழித்திருக்க முடியும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யாததை எண்ணி எண்ணி தளபதி கல்கத்தின் உடம்பு நடுங்கிற்று. அன்றுடன் அவரது ஆணவப்பேச்சு மறைந்தது. புலிகளைப் பற்றி அவதூறு செய்வதை அவர் நிறுத்தினார்.

அமைச்சர் இரஞ்சன் விசயரத்தினா

இலங்கையின் குடியரசுத் தலைவராக பிரேமதாச இருந்தபோது அவருக்கு அடுத்தபடியாக செல்வாக்கு மிக்க பாதுகாப்புத்துறை இணையமைச்சராக இரஞ்சன் விசயரத்தினா என்பவர் இருந்தார். சிங்கள பேரினவாத வெறி பிடித்த அவர் தமிழர்களை அடியோடு கருவறுக்க உறுதிபூண்டிருந்தார்.
"புலிகளை அடியோடு அழிப்பதே எனது இலட்சியமாகும். அவர்கள் உயிர்தப்பவேண்டுமானால் எவ்வித நிபந் தனையுமின்றி ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையவேண்டும். இல்லையேல் புலிகள் அழித்து ஒழிக்கப்படுவது நிச்சயம்" என இரஞ்சன் விசயரத்தினா 4-12-90 அன்று கொக்கரித்தார்.

ஆனல், 2-3-91 அன்று கொழும்பு நகரின் வீதியில் காலை 8.30 மணிக்கு தனது பாதுகாப்பு பரிவாரங்கள் புடைசூழ இரஞ்சன் விசயரத்தினா சென்றுகொண்டிருந்தார். அதேவீதியில் ஒருபுறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்து சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது. அமைச்சரின் கார் சுக்கு நூறாக சிதறியது. அமைச்சரும் அவரின் பாதுகாவலர்களும் அடையாளம் தெரியாமல் சிதறிப்போனார்கள்.

தளபதிகள் கொத்தாக பலி

தமிழீழப் பகுதியில் புகுந்து தமிழர்களைக் கொன்று குவித்தும் அழிவு வேலைகளைச் செய்தும் வந்த சிங்கள இராணுவத்தின் முக்கிய தளபதிகள் ஒட்டு மொத்தமாக புலிகளால் அழிக்கப்பட்ட நிகழ்ச்சி சிங்கள அரசையும் மக்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. 1992-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ம் நாள் யாழ்ப்பாணப் பகுதியில் சிங்களப் படையின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் துணிவுடன் ஊடுருவி புலிகள் புதைத்து வைத்த நிலக்கண்ணிவெடியில் சிக்கி கீழ்க்கண்ட சிங்கள இராணுவ உயர் அதிகாரிகள் ஏறிவந்த வாகனங்கள் வெடித்துச் சிதறின.

1. வடபிராந்திய ஆணைத் தளபதி மேஜர் ஜெனரல் தென்சில் கொப்பேகடுவ
2. வடபிராந்திய கடற்படைத் தளபதி கமோடர் மொகான் ஜயமகா
3. யாழ்பிராந்திய பிரிகேடியர் விசயவிமலரத்தின
4. லெப்.கர்னல் ஆர்ய இரத்தின
5. லெப்.கர்னல் பலிப்பான
6. லெப்.கர்னல் ஸ்டீபன்
7. மேஜர் அல்வீஸ்
8. கடற்படைத் தளபதி லெப்.லங்க திலக
9. கடற்படை லெப்டினன்ட் விசயபுர
10. படைவீரர் விக்கிரம ரத்தின


ஆகியோர் அந்த இடத்திலேயே உடல் சிதறி மாண்டனர். சிங்கள இராணுவம் புலிகளுடன் போர் தொடங்கிய பிறகு உயர் இராணுவ அதிகாரிகள் பலர் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டது இந்நிகழ்ச்சியிலேயே ஆகும்.

வைஸ் அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ

சிங்கள முப்படைத் தளபதிகளில் ஒருவரும் கடற்படையின் தளபதியுமான வைஸ்அட்மிரல் கிளான்சி பெர் னாண்டோ பிரிட்டனில் சென்று பயிற்சி பெற்றவர். இந்தியக் கடற்படைத் தளபதிகளுடன் பேச்சுநடத்தி அவர்கள் உதவியுடன் சிங்களக் கடற்படையின் வலிமையைப் பெருக்கியவர். விடுதலைப் புலிகளுக்கு கடல்வழியாக வரும் ஆயுதங்களைத் தடுக்க இருநாட்டுக் கடற்படையின் கூட்டு நடவடிக்கைகளுக்கு வழிவகுத்தவர். 16-11-1992-ஆம் ஆண்டு காலை 8.30 மணிக்கு கிளான்சி பெர்னாண்டோ தனது அலுவலகத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அவரது பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த இளைஞன் ஒருவன் அவர் காரின்மீது மோதினான். கண்மூடித்திறப்பதற்குள் காரும் காருக்குள் இருந்த தளபதியும் உடல் வெடித்துச் சிதறினார்கள். கொழும்பில் குண்டு தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்க சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக கூட்டுப்படைத் தலைமையகம் அறிவித்து 4 நாட்களுக்குள் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறு தொடர்ந்து புலிகளை வேட்டையாடப் புறப்பட்ட பல தளபதிகள் புகையோடு புகையாக மறைந்து போனார்கள் என்பதைத்தான் கடந்த கால வரலாறு எடுத்துக்காட்டுகிறது. புலிகளின் வலிமையை அழித்துவிட்டதாக மார் தட்டும் லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா இரண்டாண்டுகளுக்கு முன் புலிகளின் தாக்குதலிலிருந்து படுகாயங்களுடன் தப்பிப்பிழைத்தவர். பலமாதங்கள் மருத்துவமனையில் படுத்த படுக்கையாக கிடந்தவர். ஆனால் இப்போது வாய்ச் சவடால் பேசுகிறார்.

சிங்கள அரசு போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து ஒருதலைப்பட்சமாக முறித்துக்கொண்டு வெளியேறிய போதும் இதுவரை போர் நிறுத்தத்தில் இருந்து விலகுவதாக விடுதலைப் புலிகள் அறிவிக்கவில்லை. எனவே சிங்கள இராணுவத்தினர் மீது மரபுவழியிலான தாக்குதலை விடுதலைப்புலிகள் மேற்கொள்ளவும் இல்லை. உலக நாடுகளுக்கு இந்த உண்மை நன்கு தெரியும்.
2006-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இருந்து சிங்கள இராணுவம் புலிகளுக்கு எதிரான போரைத் தொடங் கியபோது அதற்கு எதிராக வழிமறிப்புத் தாக்குதல்களையும் தற்காப்பு இராணுவ நடவடிக்கைகளையுமே புலிகள் மேற்கொண்டு வருகிறார்கள். விடுதலைப்புலிகளின் தாக்குதல் சிறப்பு அணிகள் எவையும் இன்னும் களம் இறங்கவில்லை. முன்னணி காவல் அரங்குகளில் உள்ள விடுதலைப்புலிகளே ஊடுருவ முயலும் சிங்கள இராணுவத்தினர்க்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை முறியடித்து விரட்டி வருகிறார்கள். இந்த உண்மையை அடியோடு மறைத்துவிட்டு விடுதலைப் புலிகளால் இனிமேல் மரபுவழி இராணுவமாக சண்டையிட முடியாது எனவும் தனது இராணுவத்தினர் நடத்தும் தொடர்ச்சியான தாக்குதல்களால் புலிகள் தங்கள் வலிமையை இழந்துவிட்டார்கள் என்றும் சரத்பொன்சேகா பீற்றிக்கொள்வது நகைப்புக்குரியதாகும்.

தரை, வான், கடல் ஆகிய மும்முனைகளிலும் புலிகளின் படைகள் வலிமையாக இருந்துவருகின்றன. போர் நிறுத்த காலத்தில் பல புதிய அணிகளை புலிகள் உருவாக்கி உள்ளனர். தொடர்ந்தும் பல அணிகள் உருவாக்கப்பட்டும் வருகின்றன. முன்பு இருந்ததைவிட தற்போது வலிமை மிக்க மரபு வழி இராணுவமாக புலிகள் உருவெடுத்துள்ளனர். அவர்கள் தமது முழு வலிமையுடன் இன்னும் களம் இறங்கவில்லை. தங்கள் மண்ணில் நுழைய முயலும் எதிரிகளை விரட்டியடிக்கும் வேலையை மட்டுமே செய்துவருகிறார்கள்.

இறுதிக்கட்டப் போருக்கு விடுதலைப்புலிகள் தயாராகி வருகிறார்கள் என்ற உண்மையை சிங்கள அரசும் இராணுவமும் நன்கு அறியும். எனவேதான் இந்தியாவின் உதவியை நாடி தில்லி நோக்கி சிங்கள அதிபர் இராச பக்சே அடிக்கடி காவடி எடுக்கிறார். சிங்கள இராணுவம் சந்திக்கவிருக்கிற பெரும் தோல்வியை மறைப்பதற்கான முன்முயற்சியாகவே பொன்.சேகா போன்றவர்கள் பொய்யான பரப்பரைகளைக் கூறிவருகிறார்கள். அப்பாவி சிங்கள மக்கள் வேண்டுமானால் ஏமாறக்கூடுமே தவிர, தமிழர்களும் உலகநாடுகளும் இக்கூற்றுகளைக் கண்டு ஏமாறப்போவதில்லை.

August 06, 2008

மதுரையில் கலைஞருக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்ற ஊனமுற்ற ஒரு வாலிபருக்கு அடி, உதை-கைது

மறைந்த முன்னால் சபாநாநயகர் பண்பாளர் திரு.பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் அவர்களின் சிலை திறப்பு விழா இன்று மதுரையில் நடைபெற்றது. விழாவில் பேசிய முத‌ல்வ‌ர் க‌ருணாநிதி, "யாருமே எதிர்ப் பார்க்காத‌ விழா இது. இவ்வ‌ள‌வு விரைவாக‌ ந‌டைபெறும் என‌ எதிர் பார்க்க‌வில்லை. பண்பாளர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் அவர்களின் குடும்பம் திராவிட‌ இய‌க்க‌த்தை வ‌ள‌ர்த்த‌ குடும்ப‌ம். பேராசிரியர் குறிப்பிட்டது போல நீண்ட காலம் திராவிட இயக்கத்தை வளர்த்த பெருமையுடையது பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் அவர்களின் சிலையை திறப்பது இந்த மண்ணுக்கு பெருமை" என‌ முத‌ல்வ‌ர் புகழாரம் சூட்டினார்..இதற்காக நேற்று இரவு தூத்துக்குடியிலிருந்து முத்து நகர் விரைவு வன்டியில் மதுரை வந்தார். அவருடன் தமிழக அமைச்சர்களும் உடன் வந்தனர். இன்று காலை மறைந்த முன்னால் சபாநாநயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் அவர்களின் சிலை திறப்பு நடைபெற்றது. விழா முடிந்து அரசு சுற்றுலா மாளிகைக்கு புறப்ப‌ட்ட தமிழக முதல்வருக்கு, மதுரை பைக்காராவை சேர்ந்த சுந்தரன் மகன் எஸ்.ராஜா, ஊனமுற்றவரான இவர் ஊனமுற்றவர்களுக்கு முதல்வர் எதுவும் செய்யவில்லை என்பதற்காக க‌றுப்புக் கொடி காட்ட முயன்றார்.


('அடி, உதை, அடிக்காதே' என்ற குரல்களை காணொளிப்பதிவில் கேட்கலாம்), உடனே காவ‌ல்துறையின‌ர் கைது செய்து தல்லாக்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் விழா நடைபெற்ற இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மாலை ந‌டைபெரும் விழாவில் பின்ன‌னிப் பாட‌க‌ர் டி.எம்.எஸ் மற்றும் பி.சுசிலாவிற்கு பொற்கிழி வ‌ழ‌ங்கி பாரட்டு விழா ந‌டைபெறுகிற‌து. இவ்விழாவிற்கான‌ ஏற்பாடுகளை மு.க‌.அழ‌கிரி செய்து வ‌ருகிறார்.

July 31, 2008

ரஜினி இரட்டை வேடம் : தமிழ் திரை உலகம் கண்டனம்

நடிகர் ரஜினிகாந்த் கன்னட மக்களிடம் மன்னிப்புக் கோரி இருக்கும் செயலுக்கு தமிழ் திரை உலகத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒக்கனேக்கல் தொடர்பாக நடைபெற்ற உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட பேசிய நடிகர் ரஜினி, ‘ஒக்கனேக்கல் திட்டத்துக்கு எதிராக இருப்பவர்களை உதைக்க வேண்டாமா? என்று ஆவேசப்பட்டார். அவரின் இந்த ஆவேசப் பேச்சு கன்னட மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ரஜினிக்கு எதிரான போக்கு கர்நாடகத்தில் தலைதூக்கியது. அவருடைய படங்கள் உட்பட எந்த தமிழ் படங்களையும் கர்நாடகாவில் திரையிடுவதில்லை என்று அங்குள்ளவர்கள் முடிவு செய்தனர். இந்நிலையில் (வெள்ளிக் கிழமை) ரஜினி நடித்த குசேலன் படம் உலகமெங்கும் நாளை திரையிட உள்ளது. ஆனால் பெங்களூரில் குசேலனை வெளியிட பெரும் எதிர்ப்புக் கிளம்பயது. ரஜினிகாந்த் மன்னிப்புக் கேட்டால் மட்டுமே வெளியிடப்படும் என்று சில கன்னட அமைப்புக்கள் எச்ச்ரித்திருந்தன.
இதனை அடுத்து கன்னட தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் “நான் தவறு செய்து விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள்” என்று கன்னட மக்களிடம் மன்றாடி உள்ளார். ரஜினியின் இந்த மன்னிப்பு தமிழ் சமூகத்தினரிடையே பெரும் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கி இருக்கிறது. இதுகுறித்து தமிழ் திரைப்பட நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறி இருப்பதாவது :-

"ரஜினி எதை தவறு என்று சொல்கிறார்? தமிழ்நாட்டில் உள்ள ஒக்கனேக்கலிலிருந்து தமிழ் நாட்டுக்கு தண்ணீர் வேண்டும் என்று தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததை தவறு என்று சொல்கிறாரா? தமிழ்நாட்டு ரசிகர்களை கவர இங்கே ஒரு பேச்சு; கன்னடர்களிடம் ஆதாயம் அடைய அங்கே ஒரு பேச்சா? ரஜினிகாந்தின் மன்னிப்பு ஏற்றுக் கொள்ளமுடியாது" என்று கூறி உள்ளார். அதே போல் லட்சிய திமுக கட்சியின் தலைவரும், இயக்குநருமான விஜய டி.ராஜேந்தர் ரஜினிகாந்தின் மன்னிப்பு நடவடிக்கையை இரட்டை வேடம் என்று விமர்சித்துள்ளார். அவர்(ரஜினி) எப்பொழுதும் தன்னை கன்னடர் என்று காட்டிக் கொள்ளத் தவறியதே இல்லை. இதிலிருந்து அவரின் சுயரூபம் வெளிச்சத்துக்கு வந்து விட்டது என்று டி.ஆர்.தெரிவித்துள்ளார்.

மேலும் ரஜினியின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தமிழ் அமைப்புக்களும் கண்டனம் தெரிவித்துள்ளன.

"என்னை மன்னித்து விடுங்கள்"- பணத்துக்காக பல்டி அடித்த ரஜினி

குசேலன் படத்தை நாளை பெங்களூரில் வெளியிட வேண்டும் என்பதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கன்னட மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார். ரஜினிகாந்த் நடித்து வெளிவர இருக்கும் குசேலன் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட வேண்டுமென்றால் அவர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும் என்று கர்நாடக ரக்க்ஷன வேதிகே எனும் அமைப்பு எச்சரித்திருந்தது. இதனை அடுத்து பணத்தை முக்கியமாக கருதும் ரஜினி குசேலனில் லாபம் சம்பாதிப்பதற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார்.

ஒக்கனேக்கல் குடிநீர் விவகாரம் தொடர்பாக சென்னையில் தமிழ் திரைப்பட சங்கத்தினர் உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது கன்னடர்களை தரக்குறைவாக ரஜினி பேசியதாக கூறி கர்நாடகாவில் பெரும் கொந்தளிப்பு உண்டானது. இந்நிலையில் குசேலன் படத்தை கர்நாடாகவில் வெளியிட அனுமதிக்க வேண்டும் என்று கன்னட திரைப்பட சங்கத்தினருக்கு ரஜினி கடிதம் எழுதி இருந்தார். ஆனால் படத்தை வெளியிடுவதை, தடை செய்வதை நிறுத்துவதற்கு தங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்று நடிகை ஜெயமாலா அதற்கு பதில் அளித்திருந்தார்.

இது தொடர்பாக கர்நாடக ரக்க்ஷன வேதிகே அமைப்பினர் பெங்களூரில் இன்று கூடி விவாதித்தனர். அப்பொழுது கன்னடர்களை தரக்குறைவாக பேசிய ரஜினிகாந்த் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் இல்லை என்றால் எந்தச் சூழ்நிலையிலும் குசேலன் படத்தை பெங்களூரில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர்கள் எச்சரித்தனர். இதனையும் மீறி குசேலன் படம் பெங்களூரில் திரையிடப்பட்டால் மிகப் பெரிய வன்முறை வெடிக்கும் என்றும் அவர்கள் மிரட்டல் விடுத்தனர். கூட்டம் நடந்த பெங்களூர் திரைப்பட சம்மேளன அரங்கத்திற்கு வெளியே கூடியிருந்தவர்கள் ரஜினிகாந்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு ரஜினி இன்று மாலை திடீர் பேட்டி அளித்தார். அதில், தான் தவறு செய்து விட்டதாகவும், எங்கே எப்படி பேசவேண்டும் என்பதை தெரியாமல் பேசிவிட்டதாகவும், இது சம்மந்தமாக கன்னட மக்களிடம் தகுந்த பாடம் கற்றுக் கொண்டதாகவும், எனவே கன்னட மக்கள் தன்னை மன்னித்து குசேலன் படத்தை பார்த்து, ரசித்து ஆதரவு தருமாறும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து நாளை பெங்களூரில் குசேலன் படம் திரையிடப்பட உள்ளது. சென்னை உண்ணாவிரத்த்தில் நரம்பு புடைக்க பேசிய ரஜினி இப்பொழுது வருமானத்துக்காக திடீர் பல்டி அடித்திருப்பது அவர் ஒரு கைதேர்ந்த நடிகர் என்பது நிரூபணம் ஆகி இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னை உண்ணாவிரதத்தில் சத்யராஜ் பேசி உசுப்பேற்றியதால் தன்னை தமிழின பாதுகாவலனாக காட்டிக் கொள்வதற்காக ரஜினி பேசிய ஆவேசப் பேச்சை தமிழ் சமூகம் மறந்திருக்காது.
அந்தச் சம்பவம் நடந்தேறி சில மாதங்கள் மட்டுமே ஆகி இருக்கும் நிலையில் தன்னுடைய கல்லாப் பெட்டியை நிரப்புவதற்காக கன்னடர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டிருக்கும் ரஜினிகாந்தின் நடவடிக்கை அரசியல்வாதிகளை விட கேவலமானது என்று பலரும் வேதனை தெரிவித்துள்ளனர். ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் இந்த தமிழகமே புனிதமடைந்து விடும் என்று நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர் செய்திருக்கும் இந்த ஒரு சின்ன விஷயமே அவர் எப்படிப்பட்ட கை தேர்ந்த அரசியல்வாதி என்பதை தெளிவாக்கி இருப்பதாக தமிழ் அமைப்புக்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளன.

July 30, 2008

உலக சினிமா என்ற போர்வையில் இன்னொரு ஏ.பி.நாகராஜனின் இந்துத்துவா சினிமா : மு.சிவகுருநாதன்


(இது தாமதமான பதிவாக இருந்தாலும் தவிர்க்க இயலா பதிவு)


தமிழ் சினிமா வெளியாவதற்கு முன்பு மீடியாக்கள் உருவாக்கும் எண்ணற்ற புனைவுகள், கதைத்திருட்டு, நீதீமன்ற வழக்கு போன்றவைகள் மூலம் மக்களிடம் எதிர்பார்ப்பைத் தூண்டும் விளம்பர உத்தியாகவும் உலக சினிமா, தொழில்நுட்ப அசத்தல், பொருட்செலவு போன்ற இன்னபிற விளம்பரங்களுடன் வெளிவந்திருக்கிறது கமல்ஹாசனின் 'தசாவதாரம்' (அதிக பணம் செலவழித்து எடுக்கப்படும் சினிமா சிறந்த உலக சினிமா என்பதைவிட அபத்தம் வேறு இருக்க முடியாது).

10 அவதாரங்கள், 2 ஆண்டுகள் தயாரிப்பு, 70 கோடி செலவு (தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் 700 கோடி செலவில் ஜாக்கிசானை வைத்து மற்றொரு உலக சினிமாவை தயாரிக்கப்போகிறாராம். தமிழர்கள் கொடுத்து வைத்தவர்கள்!) செய்து தயாரிக்கப்பட்ட இந்தப்படத்தில் 'உலகநாயகன்' என தனக்குத்தானே மகுடம் சூடிக்கொள்ளும் கமல்ஹாசன், ஷங்கர் போன்றோரின் அரைவேக்காடு அயோக்கியத்தனத்திற்கு தானும் இம்மியும் குறைந்தவனில்லை என்பதை தனது முந்தைய குருதிப்புனல், ஹேராம் போன்ற படங்கள் ஊடாகவும் இதிலும் நிரூபித்திருக்கிறார். இப்படத்தின் திரைக்கதை நடந்த சில சம்பவங்களுடன், 12 ஆம் நூற்றாண்டில் நடந்த உண்மைச் சம்பவங்களின் ஆதாரங்களைச் சேகரித்தும், எங்கள் கற்பனைகளைக் கலந்தும் அமைக்கப்பட்டுள்ளது" என்ற குறிப்போடு படம் தொடங்குகிறது. உலக உருண்டை வழியே உலக சினிமா உலக நாயகனின் கண்ணுக்குள் குடிபுகுகிறது. " உலகமெங்கிலும் உன்னை வென்றிட யாரு?" என்ற பாடல் ஒலிக்கிறபோது மேடையில் ஜார்ஜ் டபிள்யு புஷ் (கமலின் ஒரு அவதாரம்; பெருமாளின் ஒரு அவதாரமும் கூட,) டான்ஸே ஆடுகிறார். "இனி ஐ. நா-வும் உன்னை அழைக்கும் என்ற பைத்தியக்காரத்தனமும் வேறு. (ஐ.நா.ஆஸ்கார் விருது அளிக்கிற அமைப்பா என்ன?).
மணல் கொள்ளையன் (பி.வாசு.). "உலகத்தை ஒத்தை ஆளாக காப்பாற்ற நீ என்ன உலகநாயகனா? " என்று கேட்கும் போது வின்சென்ட் பூவராகவன் அசடு வழிய, "ஆமாம், நான் உலக நாயகன்தான்" என்று சொல்கிறார். முதல்வர் கருணாநிதி போன்ற பட்டம் விரும்பிகள் இவருக்கு இப்படத்தை அளித்து மகிழ்கிறார்கள். அதற்குப் பதிலாக கமல், 2004 டிசம்பர் 20-ல் தொடங்கி 26-ஆம் தேதி சுனாமியுடன் முடியும் கதையில், விஞ்ஞானி கோவிந்தராமசாமிக்கு கருணாநிதி, மன்மோகன்சிங், புஷ் சகிதம் பாராட்டுவிழாவில் இடம் அளித்து சொரிந்து கொள்கிறார். ஜெயலலிதா சுனாமியைப் பார்வையிடுகிறார். 2008-ல் 'தசாவதாரம்' கேசட் விழாவில் ஜாக்கிசானுடன் கருணாநிதி பங்கேற்றார். அதற்குப் பதிலுதவியா? இல்லை 4 ஆண்டு விஞ்ஞானிக்கு சிறைத்தண்டனையா?

"கடவுளை நான் ஏற்றுக் கொள்கிறேனா எனபது பிரச்சனை அல்ல. கடவுள் என்னை ஏற்றுக்கொள்கிற அளவிற்கு நான் நடக்கிறேனா இல்லையா என்பதுதான் பிரச்சனை" (சாய்பாபாவுடனான விழாவில் மு. கருணாநிதி) என்ற கருணாநிதியின் பேச்சுக்கு இணையாக படத்தின் இறுதியில் வரும் வசனம் ஒன்று. "நான் கடவுள் இல்லையின்னு எங்கங்க சொன்னேன். இருந்தா நால்லாயிருக்குன்னுதான் சொன்னேன்". (வருங்காலத்தில் பேருந்துகளில் எழுதி வைக்க பொன்மொழிகள் தயார்!).

"என் பாசத்துக்குரிய தமிழ் மக்களே! இந்தியர்களே!! (?!) என விளித்து கோவிந்தராஜ சுவாமிகள் சாமிக்கதை சொல்கிறார். "யேசுவும், அல்லாவும் இந்தியாக்குள்ளும் அதன் அரசியலுக்குள்ளும் புகாத நூற்றாண்டு, சிவனும், விஷுனுவும் மோதி விளையாடா வேறு கடவுள்கள் இல்லாத காலம். அதனால் அவ்விரு கடவுள்களும் தம் பக்தர்கள் வாயிலாக தம்முள் மோதிக்கொண்ட நூற்றாண்டு " (12 ஆம் நூற்றாண்டு) என்ற கதை சொல்லலில் வரலாற்றுப் புரட்டும் அரசியல் சார்பும் வெளிப்படுத்தப்படுகிறது. இங்கு இன்னொரு ஏ. பி. நாகராஜனாக கமல்ஹாசன் அவதாரம் எடுத்து விஷ்ணுவின் திருவிளையாடல்களை நிகழ்த்துகிறார். சமண - பவுத்தத்தை துடைத்தெறிந்த சைவ - வைணவக் கூட்டணி, சமண - பவுத்தர்களை வேட்டையாடிக் கொன்று குவித்த வரலாற்று உண்மைகள் கவனமாக தவிர்க்க/திரிக்கபட்டுள்ளன. சைவ - வைணவ மோதல்கள் கூட உண்மையான மோதல்கள் அல்ல. அவை சிவன் (அ) பெருமாளின் திருவிளையாடல்கள். சைவ - வைணவர்களுக்குமான உண்மையான எதிரி பின்னாளில் வந்த இஸ்லாமியர்களும், கிருத்துவர்களுமே என்பதை தொடக்கத்திலேயே அடையாளம் காட்டி அந்தத் திசையில் படம் முழுக்க பயணிக்கிறது.

"சக நிகழ்வுகளின் கோர்வைதான் உலக சரித்திரம். உலக நிகழ்வுகள் யாவும் ஒன்றுக்கொன்று சம்மந்தமுடையவை" என்றும் "ஓரிடத்தில் படபடக்கும் வண்ணத்துப்பூச்சியின் இறக்கைகள் பிறிதோரிடத்தில் ஏற்படும் மாற்றத்திற்கு காரணமாக இருக்கக்கூடும்" என்ற காயாஸ் தியரியுடன் முடுச்சுப் போட்டு 12 ஆம் நூற்றாண்டில் கடலுக்குள் போன விஷ்ணு 2004-ல் உலகை அழிக்கும் கிருமியை அழிப்பதற்காக சுனாமியாய் வந்து உலகைக் காப்பாற்றியதாக திரைக்கதை அமைத்து காதில் பூ சுற்றி இந்துத்துவ கொடுங்கோன்மைக்கு அரியணை ஏற்றியிருக்கிறார் கமல். இரண்டாம் குலோத்துங்கன் மற்றும் சைவர்களுடன் விஷ்ணு-வுக்காக மோதிப் போராடி கடலில் விஷ்ணுவுடன் சேர்த்துச் சங்கிலியால் பிணைக்கப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்படுகிறான் ரங்கராஜ நம்பி. "வாய்ப்பேச்சில் வீரர்தான் வைணவர்" என்று மன்னனாலேயே பாராட்டப்பெற்று சிவமந்திரத்தை உச்சரிக்க மறுத்து வைணவ மந்திரத்தை உச்சரித்து கடலில் மூழ்கி உயிரைவிடுகிறான். "ரங்கராஜ நம்பி செத்தது சிவனும் செயலும் அல்ல. அந்த நம்பி நம்பியும் பிழைக்காமற்போனது விஷுனுவின் சூழ்ச்சியுமல்ல" என்று விளக்கமளிக்கிறார் கதை சொல்லியான விஞ்ஞானி. எல்லாம் பெருமாளின் திருவிளையாடல்! பின்பு 2004 சுனாமியாய் வெளியே வரும் வரை பல்வேறு சேஷ்டைகளில் ஈடுபடுகிறார் பெருமாள்.




ரங்கராஜ நம்பிக்கு முதல் கல்லடி ஒரு குழந்தையினுடையது. கமலுக்கு குழந்தைகள் மீது ஏன் இவ்வளவு வெறுப்போ தெரியவில்லை? குருதிப்புனலில் குழந்தைகளை அதுவும் " ஜாரே.." பாடிவரும் தேசபக்திக் குழந்தைகளை தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்ப்பது போல காட்சி வைப்பார். " ஜாரே..." பாட்டு இங்கேயும் உண்டு. மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கிருமியுடன் பெருமாள் அவதாரம் வரும் விமானம் இறங்கும் பின்னணியில் ஒலிக்கிறது இப்பாடல். என்னே! தேசப்பற்று! கூடவே மதப்பற்றும். "அமெரிக்க செப்டம்பர் 11 க்கு பிறகு தன்னை பயோ ஆயுத தற்காப்புக்குத் தயார்படுத்திக் கொள்கிற மும்மரத்தில் இருந்ததாம். "பாவம் - பாருங்கள்! அமெரிக்காவுக்கு வேறு வழியேயில்லை. உலகமெங்கும் பரவி வரும் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு பயோ ஆயுதம் மூலமே அமெரிக்கா தன்னை தற்காத்துக் கொள்ளமுடியும் என்று கதையளக்கிறார். புஷ்-ஆல் பாராட்டப்படும் விஞ்ஞானியொருவன் இப்படித்தான் பேசமுடியும். அமெரிக்காவின் பயோ வார் ஏதோ செப்டம்பர் 11-க்கு பிறகுதான் என்று சொல்வதைவிட மடத்தனம் வேறு இருக்க முடியாது.
தஞ்சை ராமசாமி நாயக்கர் மகன் விஞ்ஞானி கோவிந்த் ராமசாமி பயோ டெக்னாலஜியில் பி.ஹெச்.டி படித்தவர். ('ரா' அதிகாரி பல்ராம்நாயுடு பயாலஜியில் பி.ஹெச்.டி. என்கிறார்). ரங்கராஜ நம்பியின் மனைவி கோதை, நம்பி கடலில் மூழ்கியதும் தனது தாலியைக் கழற்றி வீச அது சிலையில் தொங்குகிறது. பிற்காலத்தில் அவளே ஆண்டாளாக "முகுந்தா முகுந்தா" பாடும் போது கிருஷ்ண அவதாரத்திலிருந்து கோவிந்த் இறங்கி வருகிறார். ('இருவர்' - படத்தில் மோகன்லாலின் மனைவியாகவும், காதலியாகவும் ஐஸ்வர்யா ராய் வருவார். அதுபோல இங்கு அசின்). அப்போதே கோவிந்தராஜன் - ஆண்டாள் சேர்க்கை முடிவாகிவிட்டது. (அப்போது ஒரு டூயட் வைத்து அசினின் வருத்தத்தைப் போக்கியிருக்கலாம்) பெருமாள், விவரமின்றி செத்துப்போன ரங்கராஜ நம்பிக்கு மாற்றாக மிகவும் விவரமான சூத்திர விஞ்ஞானியால் பதிலீடு செய்யப்படுகிறார்.




"ரா" அதிகாரி பல்ராம் நாயுடுவின் (இந்திரன் - சந்திரன் கமல்) தெலுங்கு பாசத்தின் வழி தமிழ்ப்பாசம் கிண்டலடிக்கப்படுகிறது. கோவிந்த் ஆங்கிலத்தில் பேச பல்ராம் நாயுடு, "தமிழ் எப்படி வாழும்?" என்று கேட்க, உங்கள மாதிரி தெலுங்குக்காரங்க யாராவது வந்து வாழ வைப்பாங்க, விடுங்க" என்கிறார். செல்போனில் தெலுங்குப் பாடல் ரிங்க்டோன். தன் உதவியாளர் தெலுங்கு என்பதை உறுதிப் படுத்திக்கொள்ளுதல். கூரியர் ஆபீஸில் 'நரசிம்மராவ்' என்ற பெயரைக் கேட்டவுடன் தெலுங்கா? என்று கேட்டு 'கன்னடம்' என்று தெரிந்தவுடன் 'ரெண்டு லாங்க்வேஜ்க்கும் ஒரே ஸ்கிரிப்ட் தான்' என்று சமாளிக்கும் பல்ராம் நாயுடு. இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்? இதுவரையும் இனியும் தமிழை வாழவைக்கப் போகிறவர்கள் பிறர்தான் என்றா?

ஐ.எஸ்.ஐ. லஷ்கர் - அய். தொய்பா, அல் - கொய்தா, ஒசாமா பின்லேடன் போன்றவற்றை அடிக்கடி உச்சரிக்கும் பல்ராம் நாயுடு, சிதம்பரம் வைணவ மடத்தில் விசாரணை செய்யும் போது "மடத்தில் தப்பு நடக்காதா? என்று பொத்தாம் பொதுவாகக் கேட்டு வைப்பார். காமெடியன் இல்லாத குறையைப் போக்க கலிஃபுல்லாவை உயரமாகவும், வேற்று நாட்டு முஸ்லீம் போலவும் கேலிப் பொருளாகவும் ஆக்கி, விசாரணையில் பல்ராம்நாயுடு, "நீ என்ன, ஐ.எஸ்.ஐ. யா, லஷ்கர் அய் தொய்பா - வா, அல் கொய்தா-வா?" என்று கேட்பார்.

"அதெல்லாம் ஒண்ணும் இல்லை சார், என்றதும் "அதெல்லாம் ஒண்ணும் இல்லாம ஒரு மனுஷன் எப்படி எப்படி இருக்க முடியும்?' என்பார் நாயுடு. இங்கே ஒரு சின்ன திருத்தம், "மனுஷன்" என்பதை 'முஸ்லீம்' என்று மாற்றிக்கொள்ள வேண்டும்.

"ஏணி மாதிரி உயரமா இருக்கிறே. உன்பெயர் என்ன பின் - லேடரா?" என கலிஃபுல்லாவை கிண்டலடித்துக் கொண்டே, "எல்லோருமே டெரரிஸ்ட்தான்" எனச் சான்று வழங்கி, "200 பேரையும் (முஸ்லீம்கள்) புடிச்சு மசூதியில போட்டு கொஸ்டின் பண்ணு" என்று உத்தரவிடுகிறார் நாயுடு. அப்பாவிகளை இவ்வாறு கொடுமைப் படுத்துகிறார்களே என்று பார்வையாளர்கள் யாராவது வருத்தப்பட்டால் இறுதியில் அதற்கான காரணத்தை அறிந்து மிகவும் மகிழ்வார்கள். விசாரணைக்காக மசூதியில் அடைக்கப்பட்டிருந்த முஸ்லீம்கள் அனைவரும் சுனாமியில் தப்பிக்க, "நாம 200 பேரும் மசூதிக்குள் இல்லாது இருந்திருந்தால் இவங்க எல்லாரோடையும் சேர்ந்து நாமளும் மவுத்துதான். எல்லாம் அல்லாவோட கருணை" என்கிறார். இஸ்லாமியரான நாகேஷ். ஆனால் இவை நடப்பதே பெருமாளின் கருணையால்தான். கமலின் இந்துத்துவா சார்பு வெளிப்பட்டு முற்போக்குச் சாயம் வெளுக்கிறதல்லவா? இங்கே ஒரு இடையீடு : தமிழக சிறையில் உள்ள முஸ்லீம் கைதிகளிடம் அண்ணா நூற்றாண்டு பொது மன்னிப்பு அளிப்பதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. தகுதியான கைதிகள் முஸ்லீம் என்பதால் நீதி மறுக்கப்படுகிறது. இங்கே இப்படி என்றால், இந்தியா முழுவதும் சொல்ல வேண்டியதில்லை. நிலைமை இவ்வாறிருக்க முஸ்லீம்கள், போலீஸ்/பெரும்பான்மையினர் கஸ்டடியில் இருப்பதுதான் அவர்களின் உயிர்களுக்கு பாதுகாப்பானது என்று சொல்ல வருகிறார்கள். வழக்கமான 'விஜயகாந்த்' பாணி தமிழ்ப் படங்களிலிருந்து, பெரிதும் சிலாகிக்கப்படும் மணிரத்தினம் படங்கள் வரை இஸ்லாமியரைத் தீவிரவாதிகளாவே காட்டும்போக்கு தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதி. இப்படத்தில் ஃபிளேட்சர் என்ற வில்லனொருவன் இருந்தும் முஸ்லீம் காமெடியனாக சித்தரிக்கப்பட்ட போதிலும் விசாரணை, சிறை, என்கவுண்டர் என்று அனைத்து வகையிலும் அலைக்கழிக்கப்படுதல் இந்துத்துவா விடுக்கும் எச்சரிக்கையாகவே கொள்ள முடியும். வைணவ மடத்திற்குள் ஃபிளேட்சர் வருகை, அங்கு நடக்கும் அசம்பாவிதம், கொலைகள் போன்றவற்றாலும் வைணவர்கள் மீது தீவிரவாத முத்திரை குத்தமுடியாது. ஆனால் மணல் லாரியில் விபத்துக்குள்ளாகி வில்லனால் கடத்தப்படும் அப்பாவி முஸ்லீம் குடும்பம், தீவிரவாதி முத்திரை குத்தப்படுவதையும், அதனால்தான் உயிர்பிழைத்தோம் என்று சந்தோஷிப்பதையும் படமாக்குவது கூட மோடி வகை பாசிசந்தான்.




இங்கு தலித்தின் உடலும், பெயரும் கூட கேலிப்பொருளாகிறது. படத்தில் வருகிற கபிலனின் பாடல் :




"மை போல உடம்பு இருக்க மனசெல்லாம் வெள்ளையையா அருவா மீசை வச்ச அய்யனாரு பிள்ளையய்யா"




Funny Name (வசனம் : கமலஹாசன்) என்று சிறுவனால் கிண்டலடிக்கப்படுகின்ற வின்சென்ட் பூவராகவனின் கருப்பு நிறத்தை குறிப்பிடுகிறார்கள். தலித் என்றால் இவ்வளவு கருப்பாகவும், விகாரமுமாகத்தான் இருக்க வேண்டுமா? மண்ணுக்கான போராட்டத்திலும், பூவராகவனின் இறப்புக்கும் கபிலனால் புலம்பப்படுகின்ற வைரமுத்து பாணி கவிதைகள் திராவிட இயக்கபாணியை கிண்டலடிப்பவை. அவை இங்கு தலித்தியத்தின் மீது வெறுப்பை கக்கப் பயன்படுகிறது. (இருவர் படத்தின் இறுதியில் மோகன்லால் (எம்.ஜி.ஆர்) மறைவிற்கு பிரகாஷ்ராஜ் (மு.க.) இறங்கற்கவிதை வாசிக்கும் போது திரையில் இறுதி ஊர்வலம் நடக்கும்).

மணல் மாபியாவின் ஆள் (சுந்தர்ராஜன்) பூவராகவனின் காலில் விழும்போது, அவர் தடுத்து, "வயசுக்கு மரியாதை இல்லையா? என்று கேட்க "அதெல்லாம் இந்த காலத்துல எதுக்கு தம்பி" என்று பதிலளிப்பார் சுந்தர்ராஜன். அரசியலில் அடித்தட்டு மக்கள் அடைகிற எழுச்சி பிறரால் இவ்வாறு கணிக்கப்படுவதை நாம் அவதானிக்கலாம். மேலும் படிக்காத மேதையாக பூவராகவன் மட்டும் இருக்க அவர்கள் கூட்டத்தில் இப்போது படிக்காதவர்களைக் காண்பதே அரிதாக இருக்கிறது. அனைவரும் படித்து பட்டங்கள் பெற்று எங்கோ உச்சத்துக்கு சென்றுவிட்டார்கள். (இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் கவனிக்க)" என்னோட படித்தவர்கள் இருபது பேர். அதுல நாலு பேர் முஸ்லீம். அவங்க மைனாரிட்டி கோட்டாவுல வேலைக்குப் போயிட்டாங்க" என்றொரு வசனம் 'கற்றது தமிழ்' படத்தில் வரும். அதைப்போலத்தான் இதுவும். மேலும் தலித்துக்கள் பணம், சாப்பாடு, மது, புகழ் ஆகியவற்றிற்கு அடிமைப்பட்டு கிடப்பவர்கள் என்று சொல்லக்கூடிய காட்சிகளும் உண்டு.




தோழர்கள் மதுவில் கட்டுண்டு கிடக்க, வெகுண்டு கிளம்பும் பூவராகவனைப் பார்த்து, 'நில்லு' அதையும் பார்த்துட்டு போ" என மணல் கொள்ளையன் (பி.வாசு) சொல்வது புதிய உத்தியாக இருக்கலாம். ஆனால் தலித்தின் மரணம் இங்கு நிச்சயக்கப்படுகிறது. "நான் மண்ணுக்காக சாவுறேன். ஆனால் உன் சாவு அசிங்கமாகத்தான் இருக்கும்" என்று பூவராகவன் சொன்னபடியே குழந்தைகளைக் காப்பாற்றிவிட்டு சுனாமியில் உயிர்த்தியாகம் செய்கிறார். அந்த மரணத்தை "உனக்கு நல்ல சாவு" என்று சான்று தந்து அடிமை சாசனத்தை மீண்டும் நிலை நாட்டுகிறது ஒடுக்கும் வர்க்கம். மகாமக குளத்தில், தஞ்சைப் பெரியகோயில் தீயில் இறந்தாலும், நல்ல சாவுதான். சிதம்பரம் நந்தன், வடலூர் வள்ளலார் எரிக்கப்பட்டதும் கூட நல்ல சாவுதான். காக்கும் கடவுள் பெருமாளுக்கு யாரைக் காக்க வேண்டும் என்று தெரியாதா என்ன?




95 வயது கிருஷ்ணவேணி பாட்டி, (ரொம்ப வயதான அவ்வை சண்முகி) 50 ஆண்டுகளுக்கு முன்பு வக்கீலுக்குப் படிக்கச் சென்ற தன் மகன் இறந்துபோக, அது தெரியாமல் சித்த சுவாதினமின்றி, அவன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையில் பெருமாளை பூஜித்து வருபவர். சுனாமியில் இறந்த பூவராகவன் வழியே கிருஷ்ணவேணி தம் மகன் ஆராமுதனைக் கண்டடைய பெருமாள் அருள்பாலிக்கிறார். தலித்பிணம் பொது சுடு அல்லது இடுகாட்டிற்குச் செல்ல முடியாமலும், தனிச்சுடு/இடுகாட்டிற்கு கூட செல்லும் வழியில்லாத இந்த நாட்டில் பிணம் கூட தியாகத்தின் உருவாய் ஆதிக்க சக்திகளால் பயன்படுத்தப்படுகிறது.



வைரஸ் கண்டுபிடிப்பு நிறுவனத்தின் மேலதிகாரி வைரஸ் குப்பியை தீவிரவாதிகளிடம் விற்கும் அநியாயத்தை கண்டு, "நாம் என்ன செய்ய முடியும்? என்று இருக்கும் யுகா, ஃபிளேட்சரால் கொல்லப்படுகிறாள். அவளது தந்தையான ஜப்பானிய வீரர் நரஹஷி கோவிந்துவை பழிவாங்க வந்து, இறுதியில் உண்மைக் கொலையாளி ஃபிளேட்சர் என்பதை அறிந்து, சுனாமி நேரத்தில் வில்லனோடு மோதி, அவனது முடிவு கண்டு திருப்தியடைந்து திரும்புகிறார்.




ஃபிளேட்சரை தீவிரவாதி அல்லது வில்லன் என்று சொல்வது கூட அவ்வளவு சரியாக இருக்காது. ஹீரோவுக்கு இணையாக மல்லிகா ஷராவத்துடன் ரொமான்ஸ் பண்ணுகிறார். அவருக்குத் தேவை வைரஸ் குப்பி மட்டுமே. முடிந்த வரையில் மனிதாபிமான வில்லனாகவும், சாகசக்காரனாகவும் சித்தரிக்கப்படுகிறார். பெருமாள் அருளால் குப்பி இருக்குமிடம் சிதம்பரம் என்பதைக் கூட அனாயசமாகக் கண்டடைகிறார். தன்னுடைய மொழி பெயர்ப்பாளினி (மல்லிகா ஷெராவத்) யானையால் தூக்கி வீசப்பட்டு குற்றுயிராய் இருக்க, வேறு வழியின்றி அவரை கருணைக் கொலை செய்கிறார். இவை எல்லாவற்றிற்கு மேலாக, தன் மனைவிக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டு குரலை இழந்தாவது உயிரோடு இருக்க எண்ணும் பஞ்சாபி பாப் பாடகர் அவ்தார் சிங்கின் தொண்டைக்குள் இருக்கும் கேன்சர் பகுதியை வெளியே எடுத்துச் சென்று, அவரை குணப்படுத்தி விடுகிறது ஃபிளேட்சரின் துப்பாக்கி குண்டு. இறுதியாக ஃபிளேட்சர் வைரஸ் குப்பி தன் கையில் கிடைத்த பின்னும் தப்பிக்க வழியின்றி தன்னிடமுள்ள உயிரி ஆயுதத்தை பிறர் மீது பயன்படுத்த வாய்ப்பு இருந்தும் உலகைக் காக்க விஷ்ணு விஷத்தை உண்டது போல் தானும் வைரஸை உண்டு மரணமடைகிறார். உடன் கிருமியை அழிக்கவேண்டும், என்ன செய்வது? ஆரம்பத்தில் குரங்கு வைரஸை சாக்லேட் என்று நினைத்து தின்று சாக, கிருமிகளை அழிக்க டன் கணக்கில் சோடியம் குளோரைடு கொட்டப்படுகிறது. கடற்கரையில் உடனடியாக பல டன் NaCl க்கு எங்கே செல்வது?

12 ஆம் நூற்றாண்டில் கடலுக்குள் மூழ்கிய பெருமாள் சுனாமியைக் கொண்டு வந்து, அதன் மூலம் பல டன் NaCl - ஐ வெளிக்கொண்டு வந்து இந்த உலகைக் காக்கிறார். ஒரு பெரிய மரம் வேரோடு சாயும் போது சிற்சில உயிர்கள் அழியத்தான் செய்யும். (நன்றி : முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி!) அந்த மாதிரி அழிவு தான் இந்த சுனாமிச் சாவுகள். சுனாமி பிணக்குவியல்கள் இயந்திரங்கள் மூலம் புதைக்கப்பட்டு, எங்கும் மரண ஓலம் நிறைத்துக்கொண்டிருக்க எந்த பிரக்ஞையுமின்றி கோவிந்தும், ஆண்டாளும் சேரமுடியுமா - முடியாதா..., காதல், கடவுள் பற்றி விவாதம் செய்கின்றனர். கூடவே 12 ஆம் நூற்றாண்டு விஷ்ணுவும் சங்கிலியால் பிணைக்கப்பட்ட ரங்கராஜ நம்பியின் எலும்புகளுடன் கரையேறி இருக்கிறார். பத்து அவதாரங்களில் கேலிக்கும், கிண்டலுக்கும் பயன்படும் அவதாரங்கள் இரண்டு மட்டுமே. ஒன்று கலிஃபுல்லா; மற்றொன்று வின்சென்ட் பூவராகவன். கிருஷ்ணவேணி பாட்டியை அப்படி எடுத்துக் கொள்ள முடியாது. சித்த சுவாதினம் இல்லாதவர் என்று கூறப்பட்டாலும் 'அவ்வை சண்முகி-யைப் போல நிறைய சாகசங்கள் செய்து வைரஸ் குப்பியை பெருமாளோடு சேர்த்து அனைவரையும் காப்பாற்றுபவர்.






பல்ராம் நாயுடுவால் 'லைட்ஹவுஸ்' என்று கிண்டலடிக்கப்படுகிற கலிஃபுல்லா கான் மற்றும் அவரது குடும்பத்தினர் அளவுக்கு கேலிக்குள்ளாக்கப்படுபவர் எவருமில்லை. அவர் உயரம், உடை, பேச்சு, நடை, தோற்றம் போன்ற பலவற்றாலும் கேலி செய்யப்படுகிறார். முஸ்லீம்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்யாமல் 12 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டு மக்கள் தொகையைப் பெருக்குபவர்கள் என்ற சங்பரிவாரின் சொல்லாடல் நிகழ்த்தப்படுகிறது. தலித் தலைவராக வரும் வின்சென்ட் பூவராகவனும் உடல், நடை, உடை, பேச்சு, மொழி, நிறம் போன்றவற்றால் கிண்டலடிக்கப் படுவதோடு மட்டுமல்லாது, தியாகம் செய்வதாகக் காட்டி சாகடித்தும் விடுகிறார்கள். படம் முழுக்க பெருமாளே மையமாக இருக்கிறார். அவர் எங்கும் வியாபித்திருக்கிறார். யாரைக் காக்க வேண்டும், யாரை சாகடிக்க வேண்டும் என்பதை தெரிந்தே வைத்திருக்கிறார். காக்கும் கடவுளான விஷ்ணு எல்லாரையும் காக்காவிட்டாலும், தனக்கு வேண்டியவர்களை மட்டுமாவது காத்து அருள்புரிவார்.




மேம்பாலத்திலிருந்து கோவிந்த் ராமசாமி குதிக்கும் லாரியில் எழுதப்பட்டிருக்கும் வாசகம் க்ளோஸ் அப்பில் காட்டப்படுகிறது. 'ஸ்ரீராம ஜெயம்'! ரங்கராஜ நம்பியை விஷ்ணுவுடன் சேர்த்து கட்டி இழுத்துச் செல்லும் போது ஒரு பருந்து வந்து அமரும். ஃபிளேட்சர் கையில் வைரஸ் குப்பியுடன் பெருமாள் கிடைக்கும் போது ஆயிரக்கணக்கில் பருந்துகள் அணிவகுக்கின்றன. பார்ப்பனீய - இந்துத்துவா ஆதரவு அதிகரித்திருப்பதை குறியீட்டுத் தளத்தில் உணர்த்துகின்றன. மணல் மாஃபியா ஆள் (சந்தானபாரதி) ஆண்டாளின் துகிலை உரியும் போது 'நாராயணா' என்று கத்த எங்கும் ஒளி வெள்ளம். மைக் சகிதம் பூவராகவன் கூட்டமாக மண்ணைக் காக்க வருகிறார். (குடும்பத்துடன் காண வேண்டிய கற்பழிப்புக் காட்சி ; மண் - பெண் கற்பழிப்பு என்ற வியாக்கியானமும் உண்டு).




புராணக் குப்பைகளை கேள்வி கேட்டு மறு பரிசீலனை செய்யக்கூடிய படைப்புகள் தமிழில் நிறைய வெளியாகின்றன, அவ்வாறில்லாமல் புராண - இந்துத்துவ மதிப்பீடுகளை உயர்த்திப் பிடித்து, அதற்கு அறிவியல் பகுத்தறிவு முலாம்பூசிய தங்கத்தட்டில் இந்துத்துவ மலத்தை அள்ளி தமிழகத்திற்கு ஏன் உலகிற்கே வாரி வழங்கியுள்ளார் 'உலகநாயகன்' கமல்ஹாசன். திராவிட இயக்கச் சீரழிவுகளும், தமிழகத்தில் இந்துத்துவா, சங்-பரிவார் கும்பலுக்கு அடித்தளம் அமைத்தவர்களும் உண்டு, உச்சி மோந்து பாராட்டி ஒருவருக்கொருவர் சொறிந்து கொள்ளட்டும்.

இறுதியாக ஒரு குறிப்பு :




கமலின் இந்த அவதாரங்களைப் பார்த்தப் பிறகு முக்தியடையும் வாய்ப்பை சுஜாதாவுக்கு பெருமாள் அளிக்காமல் போய்விட்டார். உயிர்மை ஜூலை 2008 இதழில் விமர்சனம் எழுதியிருக்கும் நண்பர் சாரு நிவேதிதா படத்தை சரியாகப் பார்க்காதவர் போல கமல் உடனான நட்பு, காயாஸ் தியரி, உலக சினிமா பற்றியெல்லாம் எழுதிவிட்டு, இந்துத்துவா அரசியல் பற்றி தொலைக்காட்சி பேட்டியில் விளக்கவேண்டும் என்று கை ஏந்துகிறார். 105 வயது ருக்மணிப்பாட்டி என்கிறார். கலிஃபுல்லா, அவதார்சிங் ஆகிய இரண்டு அவதாரங்களும் கதைக்குச் சம்மந்தம் இல்லாதவை என்கிறார். (கதை என்று இதில் ஒன்று உண்டா சாரு?) சாருவின் வைணவ - இந்துத்துவ சாய்வு கூட இதற்கு காரணமாக இருக்கலாம்.

21 ஆண்டுகளாகியும் கிடப்பில் கிடக்கும் ராஜீவ் காந்தியின் சமாதான ஒப்பந்தம்

கைச்சாத்திடப்பட்ட பின்னர் கடந்தோடிவிட்ட 21 ஆண்டுகள் : இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இன்றுடன் 21 வருடம் ஆகின்றது. இந்த ஒப்பந்தத்தின் படி உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் வடக்கு தவிர்ந்த ஏனைய இடங்களில் அரசியல் நிர்வாகத்தின் தலைமையில் செயற்படுகின்றன. வட, கிழக்கு மட்டும் தொடர்ந்தும் ஆளுநர் நிர்வாகத்தின் கீழ் செயற்படுகின்றது. இணைக்கப்பட்டிருந்த வடக்கு மாகாணமும் உயர் நீதிமன்றத்தீர்ப்பின் மூலம் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு ஆளுநர் நிர்வாகத்தின் கீழ் செயற்படுகின்றது.

இப்பிரிப்பு பற்றி ஒப்பந்தத்தின் பங்காளியான இந்தியா வாயினையே திறக்கவில்லை. கிழக்கில் இராணுவத்தின் தேவைக்காக மாகாண சபைத் தேர்தலும் நடத்தப்பட்டு பிள்ளையான் அரியாசனத்தில் அமர்த்தப்பட்டிருக்கின்றார். பிள்ளையான் நிர்வாகத்தை பொம்மையாக வைத்து சிங்கள மயமாக்கல் நடவடிக்கைகளை அரசு அங்கு முன்னெடுக்கின்றது.
இந்நிலையில் இலங்கை, இந்திய ஒப்பந்தம் அதன் நடைமுறைச் செயற்பாடுகள் தோல்விகளுக்கான காரணங்கள் என்பவை பற்றி தமிழ் மக்கள் நிலை நின்று ஓர் மீள்பரிசீலனை அவசியமாகிறது. ஒப்பந்தத்தினை புலிகளும், அரசாங்கமும் ஏற்று நடைமுறைப்படுத்தியிருந்தால் இன்றைய நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்காது என்ற கருத்து ஒரு சிலரிடம் இன்றும் நிலவி வருவதால் இப்பரிசீலனை முக்கியமாகின்றது.

ஒப்பந்தத்தினை ஆராயும் போது மூன்று விடயங்கள் முக்கியமாகின்றன. ஒப்பந்தத்தின் உருவாக்கம், ஒப்பந்தத்தின் உள்ளடக்கம். ஒப்பந்தத்தின் நடைமுறைப் பிரயோகம் என்பவையே அவை மூன்றுமாகும்.
முதலில் நாம் ஒப்பந்தத்தின் உருவாக்கத்தைப் பார்ப்போம். எந்தவொரு ஒப்பந்தத்தையும் உருவாக்கும் போது அதற்கென தார்மீக நெறிமுறைகள் உள்ளன. அவை சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டவையாகும்.
அவற்றுள் பிரதானமானது ஒப்பந்தக் கட்டுப்பாடுகள் எவருக்கு விதிக்கப்படுகின்றதோ அவர்களே ஒப்பந்தத்தின் பங்காளிகளாக இருத்தல் வேண்டும் என்பதாகும்.

இதனை இன்னோர் வார்த்தையில் கூறுவதாயின் எப்பிரச்சினை தொடர்பாக ஒப்பந்தம் வரையப்படுகின்றதோ அப்பிரச்சினையுடன் சம்பந்தப்பட்டவர்வளே பங்காளிகளாக இருத்தல் வேண்டும். வேறொருவர் ஒரு தரப்பாக கைச்சாத்திடுவதாயின் அவர் பங்காளிகளின் அங்கீகரிக்கப்பட்ட முகவராக இருத்தல் வேண்டும்.

உண்மையில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் முதல் சறுக்கல் இங்குதான் ஏற்பட்டது. ஒப்பந்தம் நீண்டகாலமாக நிலவிய இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக கொண்டுவரப்பட்டது. இந்த வகையில் இனப்பிரச்சினையுடன் தொடர்புடைய சிங்களத் தேசத்தலைவர்களும், தமிழ் தேசத்தலைவர்களுமே ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருத்தல் வேண்டும்.
மாறாக இரு நாடுகளின் தலைவர்களே கைச்சாத்திட்டிருந்தனர். தமிழ் மக்கள் தமது சார்பில் கைச்சாத்திடும்படி இந்தியாவைக் கேட்கவுமில்லை. முகவராக நியமிக்கவும் இல்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முதல் நாள் நயவஞ்சகமாக இந்தியாவுக்கு வரவழைத்து, டில்லி ஹோட்டலில் காவலில் வைத்துவிட்டே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. ஹோட்டலில் வைத்தே ஒப்பந்தப் பிரதி அவருக்கு காட்டப்பட்டு சம்மதம் பெற முயற்சிக்கப்பட்டது. இந்தியப் புலனாய்வு அதிகாரிகள் தொடக்கம் அப்போதைய தமிழ் நாட்டு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். வரை பலர் முயன்றும் அவர் சம்மதிக்கவில்லை. தமிழ் மக்களுடைய அபிலாஷைகளை ஒப்பந்தம் போதியளவு பிரதிபலிக்கவில்லையென்றும் ஒப்பந்தத்தின் நடைமுறைப் பிரயோகம் தொடர்பாக சிங்கள அரசாங்கத்தினை நம்ப முடியாது என்றும், வடகிழக்கு தற்காலிக இணைப்பினை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் பல ஆதாரங்களுடன் தனது மறுப்பினை அவர் தெரிவித்திருந்தார்.

பிரபாகரனின் கருத்திலுள்ள நியாயத்தன்மையைக் கேட்ட எம்.ஜி.ஆர். "நான் உங்களுடனேயே நிற்பேன்' எனக் கூறிவிட்டு சென்றிருந்தார். இறுதியில் நள்ளிரவு பிரதமர் ராஜீவ் காந்தி தானே நேரடியாகவே வந்து பிரபாகரனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஒப்பந்தத்தினை ஏற்றுக் கொள்ளும் படியும், தமிழ் மக்கள் சம்பந்தமான முழு விடயத்துக்கும் நான் பொறுப்பாக இருப்பேன் எனவும், என்னை நம்புங்கள் எனவும் ஒப்பந்தத்தை எதிர்க்க வேண்டாம் எனவும் வேண்டினார்.

"வடகிழக்கு இணைப்பு தற்காலிகமானது' என்பது சிங்களத் தீவிரவாதிகளின் எதிர்ப்பை தவிர்ப்பதற்காக கூறப்பட்டது என்றும் அது நிரந்தரமாகவே இணைந்திருக்கும் என்றும் கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு ஒருபோதும் நடைபெறாது என்றும் தான் உறுதிதருவதாக குறிப்பிட்டார்.
எல்லாம் தங்கள் கைகளை மீறி நடக்கின்றது. இந்தியாவின் கைதியாக இருந்து கொண்டு சம்மதம் கொடுக்காமல் இருக்க முடியாது எனக் கருதியே இறுதியில் பிரபாகரன் வாய்மூலச் சம்மதத்தை தெரிவித்திருந்தார்.
இச்சம்தம் எதிரி கைது நிலையில் வழங்கும் ஒப்புதல் வாக்குமூலமாக கொள்ளப்பட வேண்டுமே தவிர மனப்பூர்வமான சம்மதமாக கொள்ள முடியாது.

பிரபாகரன் அன்று சம்மதம் தெரிவித்திருக்காவிட்டால் தாயகத்துக்கு திரும்பி வந்திருக்கவே முடியாது. பிரபாகரனின் கடைசி இந்தியப் பயணமும் இதுவாகவே இருந்தது. சாராம்சத்தில் இச்சம்மதத்தினை பலவந்தமாக பெற்று சம்மதம் என்றே கூறுதல் வேண்டும். ஒருவகையில் தமிழ் மக்கள் தொடர்பான பொறுப்பினை இந்தியா பலவந்தமாக பெற்றுக் கொண்டது எனக் கூறல் வேண்டும். சரி பலவந்தமாக பெற்றுக் கொண்டாலும் பரவாயில்லை இந்தியா கடைசிவரை அப்பொறுப்பிற்கு விசுவாசமாக இருந்ததா?

அதுதான் தமிழ் மக்களைப் பொறுத்தவரை மிகவும் சோகமான விடயம். இது விடயத்தில் தன்னுடைய நலன்கள் நிறைவேற்றப்பட்டதும் இந்தியா தமிழ் மக்களின் நலன்களை கைவிட்டதே உண்மை நிலையாகும். இந்தியா தன்னுடைய நலனுக்காகவே ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிரான சக்திகள் இலங்கையில் காலூன்றுவதைத் தடுப்பதே ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவின் இலக்காக இருந்தது. எந்த ஒரு நாடும் தன்னுடைய நலனுக்காக ஒப்பந்தம் செய்வதை தவறு எனக் கூற முடியாது. ஆனால் அதற்காக ஒரு தேசிய இனத்தின் அபிலாஷைகளை விலையாக கோரியமைதான் சகிக்க முடியாத ஒன்றாகும்.

இந்தியா இது விடயத்தில் நேர்மையாக நடந்து கொள்ள விரும்பியிருப்பின் இரு ஒப்பந்தங்களை ஏற்பாடு செய்திருத்தல் வேண்டும். ஒன்றை தன்னுடைய பிராந்திய நலன் தொடர்பாகவும், மற்றொன்றை இனப்பிரச்சினை தொடர்பாகவும் செய்திருக்கலாம். பிராந்திய நலன்கள் தொடர்பான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கைச்சாத்திட்டிருக்கலாம். ஆனால், இனப்பிரச்சினை தொடர்பான ஒப்பந்தத்தில் சிங்களத் தமிழ் தலைவர்களை கைச்சாத்திட வைத்துவிட்டுத்தான் மத்தியஸ்தராக இருந்திருத்தல் வேண்டும்.
ஆனால், நடந்தது வேறு. பிராந்திய நலன்கள் தொடர்பான விடயங்களை தனியாக கடிதங்களில் பரிமாறி ஏற்றுக்கொண்டு விட்டு இனப்பிரச்சினை தொடர்பான ஒப்பந்தத்திலேயே இரு நாடுகளும் கைச்சாத்திட்டிருந்தன.
இரண்டாவது விடயம் ஒப்பந்தத்தின் உள்ளடக்கமாகும். உள்ளடக்கத்தில் பிரதான விடயம் இனப்பிரச்சினை தொடர்பான ஏற்பாடுகளேயாகும்.
இதற்கு ஒப்பந்தத்தினை விட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய ஆலோசனையுடன் அரசியல் யாப்புக்கு கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தத்தினையே முக்கியமாக ஆராய வேண்டும். உண்மையில் ஒப்பந்தத்தின் இரண்டாவது சறுக்கல் இங்குதான் இடம் பெற்றது.
இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்பது குறைந்த பட்சம் கூட்டாட்சி அடிப்படையிலான அதிகாரப்பங்கீடாக இருத்தல் வேண்டும். இது 1957இல் கைச்சாத்திடப்பட்ட பண்டாசெல்வா ஒப்பந்தத்திலிருந்தே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.

கூட்டாட்சி என வருகின்ற போது "கூட்டும் பகிர்வும்' என்ற தத்துவமே மேலோங்கியதாக இருக்கும். பொதுவான விடயங்களில் கூட்டும் தனியான விடயங்களில் பகிர்வும் என்பதே கூட்டும் பகிர்வும் என்ற தத்துவத்தின் நடைமுறை அர்த்தமாகும். இக்கூட்டும் பகிர்வும் என்ற தத்துவம் சிறப்பாக செயற்படுவதற்கு நான்கு விடயங்கள் முக்கியமானவையாகும்.
ஒடுக்குமுறைக்குள்ளான தேசிய இனத்தின் கூட்டிருப்பினை பேணக் கூடிய அதிகார அலகு, சுயநிர்ணய உரிமையினை பிரயோக்கிக்கக்கூடிய அதிகாரங்கள், மத்திய அரசான கூட்டு அரசில் தேசிய இனத்திற்கு சமத்துவமான பங்கு, பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரத்துக்கான பாதுகாப்பு என்பனவே அந்நான்குமாகும். இந்நான்கு விடயங்களையும் ஒப்பந்த உள்ளடக்கம் போதிய அளவிற்கு கவனமெடுக்கவில்லை. அதிகார அலகு தற்காலிகமாக இணைக்கப்பட்டதே தவிர நிரந்தரமாக இணைக்கப்படவில்லை.
அந்த தற்காலிக இணைப்பு கூட அரசியல் யாப்பின் ஒரு ஏற்பாடாக சேர்க்கப்படவில்லை. குறைந்தபட்சம் பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்ட மாகாணசபைகள் சட்டத்திலும் சேர்க்கப்படவில்லை. வெறும் வர்த்தமானி அறிவித்தலாகவே அது இருந்தது. உண்மையில் இது விடயத்தில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவும், ராஜீவ் காந்தியும் இணைந்து தமிழ் மக்களை ஏமாற்றி விட்டார்கள் என்றே கூற வேண்டும்.
யாப்பு ஏற்பாடாக அல்லது பாராளுமன்ற சட்டமாக இருந்திருக்குமானால் நீதிமன்றம் தன் விருப்பம்போல இணைப்பினை இரத்து செய்வது கடினமாக இருந்திருக்கும். சுனாமி பொதுக்கட்டமைப்பு விடயத்திலும் கூட இதுதான் நடைபெற்றது. அது பாரளுமன்ற சட்டமாக இருந்திருந்தால் அல்லது அதில் ஜனாபதிபதி கையொப்பமிட்டிருந்தால் நீதிமன்றம் இலகுவாக அதை நிராகரித்திருக்க முடியாது. அதிகாரப் பங்கீட்டினை பொறுத்தவரை சுயநிர்ணய உரிமையினை பிரயோகிக்கக் கூடிய அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. மாகாணசபைப் பட்டியலிலுள்ள விடயங்களில் அதிகாரங்கள் குறைவாக இருந்ததுடன் அதற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களில் கூட சுதந்திரமாக செயற்பட முடியாத நிலை இருந்தது.

குறிப்பாக வரிவிதிப்பு, சுகாதாரம் போன்ற எட்டு விடயங்களில் மாகாணசபைகள் எவ்வளவிற்கு சட்டமியற்றலாமென மத்திய பாராளுமன்றம் சட்டமியற்றிக் கொடுக்க வேண்டிய கட்டாயமிருந்தது. அன்று வடகிழக்கு மாகாண அரசாங்கத்தை அமைத்துக் கொண்ட வரதராஜப் பெருமாள் தலைமையிலான மாகாண சபை அரசாங்கம் பல தடவைகள் சட்டங்களை இயற்ற முயன்றபோதும் மத்திய அரசு அதனைத் தடுத்து நிறுத்தியது.
இது விடயத்தில் அரச இயந்திரத்தின் நிலைதான் அதிக கொடூரமானதாக இருந்தது. சிங்கள அதிகாரிகள் நடைமுறையில் எந்த அதிகாரப் பங்கீட்டுக்கும் தயாராக இருக்கவில்லை. இந்தியா அதிகாரப் பங்கீடு விடயத்தில் இந்திய மாதிரியையே சிபார்சு செய்ய இருப்பதாக ஆரம்பத்திலிருந்தே கூறி வந்தது. இந்திய மாதிரிக்கு மேலாக எதையும் கேட்கக்கூடாதென தமிழ் தலைவர்களுக்கு முன்னரே எச்சரிக்கையும் விடுத்திருந்தது. இந்தியக் கூட்டாட்சி என்பது அரசியல் அறிஞர்களினால் அரைகுறை கூட்டாட்சி என விமர்சிக்கப்படுகின்ற ஒன்றாகும்.

அந்த அரைகுறை கூட்டாட்சியினைத் தமிழ் மக்களின் தலையில் சுமத்துவது எந்த வகையில் நியாயமானது என்பதற்கப்பால் இந்திய அதிகாரப்பங்கீட்டில் மாநிலங்களுக்கு இருந்த அதிகாரங்கள் கூட மாகாண சபைகளுக்கு இருக்கவில்லை என்பதே கவலை தரும் விடயமாகும். மூன்றாவது மத்திய அரசில் மாகாணங்களின் பங்கு தொடர்பானது இதனை இன்னோர் வார்த்தையில் கூறுவதாயின் மத்திய அரசில் தமிழ் தேசத்தின் பங்கு தொடர்பானது. கூட்டும் பகிர்வும் தத்துவப்படி மத்திய அரசில் தமிழ் தேசத்திற்கு சமத்துவமான பங்கு வழங்கப்பட்டிருத்தல் வேண்டும்.
உண்மையான கூட்டும் பகிர்வும் தத்துவத்தை நடைமுறைப்படுத்துவதாயின் சிங்கள தேசம், தமிழ்த்தேசம் என்கின்ற இரு பகிர்வு அரசாங்கங்களும் இரண்டையும் சமமாக இணைத்த கூட்டு அரசாங்கமும் உருவாக்கப்பட்டிருத்தல் வேண்டும். ஆனால், இந்த விடயம் கவனத்தில் எடுக்கப்படவில்லை.

பகிர்வு விடயத்தில் ஒரு தேசிய இனத்தையே கொச்சைப்படுத்தக்கூடிய வகையில் அனைத்து மாகாணங்களுக்கும் பகிர்வு மேற்கொள்ளப்பட்டது.
மத்தியில் கூட்டு என்ற விடயத்தில் எந்தவித பங்கும் கொடுக்கப்படவில்லை. குறைந்தபட்சம் தமிழ் தேசிய இனம் சம்பந்தமான விடயங்களில் இரத்து அதிகாரத்தினையாவது அதற்கு வழங்கியிருக்கலாம். அவை எதுவும் வழங்கப்படாமல் மத்திய அரசு என்பது தொடர்ந்தும் சிங்கள ஆதிக்கமுள்ள அரசாகவே இருந்தது. இந்திய மாதிரியில் உள்ளது போன்ற மாநிலங்களவை ஏற்பாடு கூட இருக்கவில்லை.

நான்காவது மிக முக்கியமானது அதிகாரங்களுக்கான பாதுகாப்பு என்பதே அதுவாகும். இதில் தமிழ் மக்களின் சார்பில் ஒப்பந்தத்தினை மேற்கொண்ட தரப்பு என்ற வகையில் இந்தியாவின் பொறுப்பு அதிகமாக இருந்தது.
ஆனால், இந்தியா பெரிதாக இதில் அக்கறை காட்டவில்லை. பேரினவாத செயற்பாடுகளுக்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கின்றது என்ற வகையிலும் 75% பெரும்பான்மை இனத்தைக் கொண்ட நாடு என்ற வகையிலும் இந்தியா மிகவும் கவனமாக இருந்திருத்தல் வேண்டும்.

- பிரசாந்தன்

"சுஜாதா நினைவுகள்"

எழுத்தாளர் சுஜாதா மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் நடைபெற்ற "சுஜாதா நினைவுகள்" நிகழ்ச்சியில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்களின் உரையின் காணொளிப்பதிவு

July 16, 2008

கதாநாயகனாய் கரட்டாண்டி

கரட்டாண்டி... முறுக்கு மீசை, முரட்டு உருவம், மதுரைத்தமிழ் என ராதிகாவின் அரசி தொடரில் சிறைக் கைதியாக கலக்கியவர். சொந்தப் பெயர் பக்தவசலம் என்கிற பக்தன். சொந்த ஊர் மதுரைக்கு அருகில் உள்ள சோழவந்தான். ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, நீ வேணுன்டா செல்லம், பழனி, தலைநகரம், தாமிரபரணி, பேரரசு உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர். சத்யராஜின் வீரநடையில் ஆரம்பித்தது இவருடைய திரை வாழ்க்கை. இன்னும் தன்னுடைய நடிப்புத் திறமைக்கு ஏற்ற சரியான கதாபாத்திரம் கிடைக்கவில்லை என்று ஏங்குகிறார் பக்தன். தன்னை சரியான வெளிச்சத்துக்கு கொண்டுவந்த அரசி தொடர் இயக்குனரை நன்றியுடன் நினைவு கூர்கிறார்.

இன்னும் வறுமையுடன் வாழ்க்கை நடத்தும் பக்தனுக்கு தங்குவதற்கென்று வீடு கூட இல்லை. சென்னை வடபழனி பேருந்து நிலையத்துக்கு அருகில், தான் நடத்தும் பிளாட்பார இளநீர் கடையிலேயே தங்கிக்கொள்கிறார். எப்படியும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதற்காக இந்த தவம் என்கிறார். சினிமா ஆசை தன் வாழ்க்கையை நிறையவே பாதிப்படைய வைத்துவிட்டதாக வருத்தப்படுகிறார். தன்னைப்போல சினிமாவுக்காக வாழ்க்கையைத் தொலைத்து விடாதீர்கள் என்று கனவுத் தொழிற்சாலைக்குள் நுழையும் புதியவர்களுக்கு ஆலோசனை கூறுகிறார். இளநீர்க் கடை முழுக்க சிவன் படங்கள். அளவு கடந்த தெய்வ பக்தி கொண்ட பக்தன், 'சினிமாவில ஜெயிக்கணும். நிறைய சம்பாதிக்கணும். என்னை மாதிரி சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்படுறவங்களுக்கு வாரத்துக்கு ரெண்டு நாளாவது என் சொந்தச் செலவில சாப்பாடு போடணும். ஊனமுற்றவர்களுக்கு ஆசிரமம் கட்டிக் கொடுக்கணும். இது போதும்ண்ணே எனக்கு’ என்கிறார் 12 ரூபாய்க்கு இளநீரை வியாபாரம் செய்து கொண்டே.
1999-ல் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் தனது சொந்த ஊருக்கு அருகில் உள்ள முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த 200 குடுபம்ங்களை, தான் ஒரே ஆளாக நின்று கயிறு கட்டி இழுத்துக் காப்பாற்றி இருக்கிறார். இதற்காக மாவட்ட நிர்வாகம் இவருக்கு பரிசு வழங்கி கௌரவித்திருக்கிறது.

சினிமாவில் ஹீரோவாக முடியாவிட்டாலும் பக்தன் நிஜத்தில் ஹீரோதான்.

July 08, 2008

நிறைய பேசுபவர்கள் ஒருவிதமான மன நோயாளிகள். அது சாருவானாலும் சரி, ஜெயமோகனானாலும் சரி - நாகூர் ரூமி

நாகூர் ரூமி. இவர் தமிழின் மிக முக்கிய தவிர்க்க முடியாத ஆளுமை. நெடுங்காலமாய் எழுத்தோடு இயங்கி வருபவர். இருபத்து ஐந்து நூல்களை இதுவரை எழுதியுள்ளவர். இதில் ஏழு நூல்கள் மொழிபெயர்ப்பு நூல்கள். தத்துவத்தின் பின்புலமும் அதனோடு சமயத்தைச் சார்ந்து கேள்விகளை எழுப்பும் நேர் உரையாடலை நிகழ்த்துபவர். சென்னை பெசன்ட் நகரில் தற்போது இருக்கும் அவரோடு ஒரு நேர்காணலை அதிகாலைக்காக நிகழ்த்தினோம்.

அதிகாலை : வணக்கம். தாங்கள் எழுதவந்த சூழல் எத்தகையது?

ரூமி : 1980-களில் நான் எழுதத் தொடங்கினேன். முதன் முதலாக கணையாழியில் ஒரு கட்டுரை வந்தது. மணிச்சுடர் என்ற மாத இதழில் சிறுகதைகள் தொடர்ந்து வந்தன. திருச்சியில் ஆங்கில இலக்கியம் படிக்கும் மாணவனாக இருந்தபோது நடந்தது இது. ஒரு காதல் ஒன்றும் உண்டு. காதலையும் இலக்கியத்தையும் தவிர எழுதுவதற்கு வேறு சூழல் ஒன்று வேண்டுமா என்ன!

அதிகாலை : தொடக்கக் காலத்தில் மீட்சி போன்ற நவீன இதழ்களில் நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். அதில் உங்கள் எழுத்துக்கள் எப்படிப்பட்டதாக இருந்தது?

ரூமி : மீட்சி சிரியர் பிரம்மராஜன் எனது நண்பர். தீவிரமாக இலக்கியம் படிப்பவர். நவீன இலக்கியத்தின் முக்கிய போக்குகளை தமிழுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்ற பேரவா அவரிடம் இருந்தது. அதன் விளைவாகத்தான் மீட்சி இதழை அவர் தொடங்கினார் என்று நினைக்கிறேன். அதில் நான் சில கவிதைகளையும், கவிதை பற்றிய சில கட்டுரைகளையும் எழுதியிருக்கிறேன். மற்றபடி பத்திரிகைக்குத் தகுந்த மாதிரி எழுதுவது என் பழக்கமல்ல. நான் மீட்சியிலும் எழுதியிருக்கிறேன், குமுதத்திலும் எழுதியிருக்கிறேன். மீட்சியில் பிரசுரிப்பதாக இருந்தால் குமுதத்தில் எழுதிய கதையையோ, குங்குமத்தில் எழுதிய கவிதையையோ மீட்சிக்குக் கொடுத்திருப்பேன்.

அதிகாலை : சிறுபத்திரிகைகள் குறித்த உங்கள் நினைவுகளைப் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

ரூமி : சிறுபத்திரிகைகள்தான் உண்மையான இலக்கியத்தைக் கொடுத்தன என்ற கருத்தில் மூழ்கியிருந்த கால கட்டம் அது. அது ஒருவகையில் உண்மையாகவும் இருந்தது. ஆனால் போகப்போக சிறுபத்திரிக்கைகளும் தனிமனித வழிபாடு அல்லது எதிர்ப்பு என்று இறங்கிவிட்டன. என்றாலும் அந்தக் காலத்தில் வந்து கொண்டிருந்த கையெழுத்துப் பிரதிகளில் எந்த அரசியலும் கலக்கவில்லை. திருச்சியில் இருந்து ‘மானுடம்’ என்று ஒரு இதழை விஜயகுமார் என்ற நண்பர் கொண்டு வந்து கொண்டிருந்தார். இலக்கு, கொல்லிப்பாவை, யாத்ரா, ஆவரம், மீட்சி, புது எழுத்து போன்ற இதழ்களோடு எனக்கு பரிச்சயமும் தொடர்பும் உண்டு. அ• பரந்தாமனும் மீட்சி பிரம்மராஜனும் இதில் சிறப்பு கவனத்துக்குரியவர்கள். வடிவமைப்பில் தொடங்கியே அவர்கள் வித்தியாசமானவர்கள். அவர்களுடைய அபார, தீவிர உழைப்பு ஒவ்வொரு இதழிலும் தெரியும். பல சிறு பத்திரிக்கைகளில் நான் எழுதியும் இருக்கிறேன். தீவிரமான இலக்கிய வாசிப்புக்கும் அறிமுகத்துக்கும் ஒரு கட்டத்தில் சிறுபத்திரிக்கைகள் அவசியம். கணையாழியைக்கூட இலக்கிய உலகில் பெரும்பாலோரின் கவனத்தைப் பெற்ற சிறுபத்திரிக்கை என்றே சொல்ல வேண்டும்.

அதிகாலை : ‘நதியின் கால்கள்’ என்ற கவிதைத் தொகுதி உங்கள் முதல் நூல். அதைப்பற்றி உங்கள் நினைவுகள்?

ரூமி : முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள். அது என் விஷயத்தில் பொய்யாகிவிட்டது! படிப்பவர்களுக்கு எளிதில் புரியக் கூடாத வகையில் எழுதப்படுவதுதான் கவிதை என்று நினைத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் எழுதப்பட்டது அது! அதனாலேயே அதிலுள்ள பல கவிதைகள் பலர் புரிந்து கொள்ள எளிதாக இருக்காது! (அதற்கு ஒரு முன்னுரை தருவதற்காக நடிகர், இயக்குனர் நாசர் அதைத் தூக்கிக் கொண்டு ஒரு ஆறு மாதம் அலைந்தார் பாவம்)! ஆனால் அதில் உள்ள எல்லாக் கவிதைகளும் அப்படி இருக்காது. என்னையும் மீறி, என்னைக் கேட்காமலே பல கவிதைகள் எளிமையாகவே அதில் வந்துவிட்டன! ‘நதியின் கால்கள்’ நூலுக்கு நான் பிரம்மராஜனுக்குத்தான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அவருடைய சிபாரிசின் பேரில்தான் ஸ்நேகா பதிப்பகத்தார் அந்நூலையும் அதன் பிறகு ‘குட்டியாப்பா’ என்ற எனது சிறுகதைத் தொகுப்பையும் கொண்டு வந்தனர். நதியின் கால்களில் உள்ள கவிதைகள் பல தரப்பட்டவை. காதல், பாசம், ஆன்மிகம் என ஒரு கலவையாக இருக்கும்.

அதிகாலை : ‘குட்டியாப்பா’ உங்கள் நூலில் உள்ள எழுத்து முறையில் ஏதாவது புதுமை செய்திருக்கிறீர்களா?

ரூமி : ‘குட்டியாப்பா’ ஒரு சிறுகதைத் தொகுப்புதான். எழுது முறையில் நான் எப்போதுமே புதுமை செய்ததில்லை. நான் எப்போதுமே ஒரே மாதிரியாகத்தான் எழுதி வருகிறேன். என்னுடைய எல்லா எழுத்திலும் இருப்பது இரண்டு குணங்கள். ஒன்று எளிமை, இன்னொன்று நகைச்சுவை. இந்த இரண்டும் இல்லாத நாகூர் ரூமியின் எழுத்தைப் பார்க்க முடியாது. இது தவிர வேறு எந்த உத்தியையும் மனதில் வைத்துக் கொண்டு நான் எழுதுவதில்லை. இந்த இரண்டு குணங்களும்கூட என்னோடு, என் எழுத்தோடு கூடப்பிறந்தவை. அவற்றைப் புகுத்துவதற்காக நான் தனி ‘காமெடி ட்ராக்’ போடுவதில்லை. போகிற போக்கில் அது வந்துவிடுகிறது. அவ்வளவுதான். குறிப்பாக ‘குட்டியாப்பா’ எனக்கு ஏற்பட்ட ஒரு அற்புதமான அனுபவம். அதை நான் அப்படியே கொடுத்துள்ளேன்.

அதிகாலை : அதிர்ச்சிக்குள்ளாக்கும் எழுத்து என்பது வேண்டுமென்றே புனையப்படுவதா? அல்லது கவிதையின் போக்கில் தேவையா?

ரூமி : அதிர்ச்சிக்குள்ளாக்கும் எழுத்தா? அதிர்ச்சியாக இருக்கிறது! அதிர்ச்சிக்குள்ளாக்கும் எழுத்தைவிட நம்மை முதிர்ச்சிக்குள்ளாக்கும் எழுத்துதான் தேவை என்று நான் நினைக்கிறேன். ஒரு நோக்கத்துக்காக வலிந்து செய்யப்படும் எந்த எழுத்தும் நிற்காது. பாரதியின் தேசவிடுதலைப் பாடல்களைப் போல.

அதிகாலை : ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ என்னும் சல்மாவின் நூலுக்கு நீங்கள் எதிர்வினை ஆற்றியுள்ளீர்கள்.அந்த நாவலோடு உங்களுக்கு உடன்பாடு இல்லையா?

ரூமி : ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ இரண்டு வகையில் தோல்வியடைந்த நாவல். ஒன்று அதன் மொழியும் நடையும். கொஞ்சம்கூட இலக்கியத்தன்மையற்ற நடை. உப்பில்லாத சோறு போல. (இலக்கியத்தன்மை என்றால் என்ன என்ற கேள்வி நியாயமானதே. இது எனது கருத்துத்தான்). இரண்டாவது, நாவலின் களமும் கதையும். ஒரு சமூகத்தில் இருக்கும் பிரச்சனைகளைப் பற்றி விமர்சனத்தோடு ஒரு நாவல் எழுதப்படலாம். அதற்கு அந்த எழுத்தாளருக்கு அல்லது -ளிக்கு எல்லா உரிமையும் உண்டு. ஆனால் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ நாவலில் வரும் நிகழ்வுகள் எல்லாம் போலித்தனமானவையாக உள்ளன. உதாரணமாக, இறந்த உடலைச் சுற்றி அமர்ந்திருக்கும் பெண்கள் அனைவரும் இறப்பை கொஞ்சம்கூட மதிக்காமல் பிணத்தைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு தன் கணவர்களோடும் காதலர்களோடு அனுபவித்ததையும் அனுபவிக்காததையும் பற்றி கொச்சையான வார்த்தைகளில் பேசிக்கொள்வதாக நாவலில் வருகிறது. இது எந்த உலகிலும் நடக்காதது. இறப்பு நடக்கிறது. பெண்கள் செக்ஸ் பற்றிப் பேசுவது நடக்கிறது. ஆனால் இவை இரண்டும் ஒரே புள்ளியில் இணைந்து நடப்பதாகக் காட்டியிருப்பது நடப்பல்ல. புனைவு. இது படைப்பல்ல. புடைப்பு என்று வேண்டுமானால் சொல்லலாம். நான் இந்த நாவல் பற்றி எழுதியுள்ள என் நீண்ட கட்டுரையில் எப்படி போலித்தனமான ஒரு சமுகச் சூழலை இந்த நாவல் ஏற்படுத்துகிறது என்று காட்டியுள்ளேன். நீண்ட அந்த கட்டுரையை இங்கே சொல்ல முடியாது. (விருப்பமுள்ளவர்கள் www.tamiloviam.com/rumi என்ற என் தளத்துக்குச் சென்று அந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு கருத்தை எனக்கு எழுதலாம்). மற்றபடி சல்மாவுக்கும் எனக்கும் எந்த விரோதமும் கிடையாது. என்னுடைய கருத்தில் அது ஒரு சுயநலமான அரசியலை நோக்கமாக வைத்து புனையப்பட்ட நாவலாகத் தோன்றுகிறது. சல்மா தனது கவிதைகளிலாவது அரசியல் ஏதுமற்ற சுதந்திரக் காற்றை சுவாசித்த வண்ணம் எழுதி இருக்கிறார் என்று சொல்லலாம். ஆனால் நாவலோடு எனக்கு உடன்பாடு இல்லை.

அதிகாலை : ஒரு படைப்பு என்பது சமூக கண்ணோட்டத்துடந்தான் எழுதப்பட வேண்டுமா?

ரூமி : அப்படித்தான் எழுதப்பட வேண்டும் என்று நான் சொல்லமாட்டேன். அப்படி சிறப்பாக எழுதுபவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

அதிகாலை : தலித் எழுத்துக்கள் வீரியத்தை இழந்துவிட்டன என்று சோ.தர்மன் பேசுகிறாரே?

ரூமி : தமிழிலா அல்லது வேறு மொழியிலா? தமிழில் சிறப்பாக எழுதும் தலித் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். உதாரணமாக அழகிய பெரியவன், யாழன் தி. வீரியம் என்று சோ.தர்மன் எதைச் சொல்கிறார் என்று தெரியவில்லை. ‘தீட்டு’ என்ற அழகிய பெரியவனின் கதையை தர்மன் மறுபடி படித்து விட்டு கருத்து சொல்லட்டுமே.

அதிகாலை : நீங்கள் முற்போக்கா? நற்போக்கா?

ரூமி : நல்லவேளை, வயிற்றுப் போக்கா என்று கேட்காமல் விட்டீர்கள்! எந்த சித்தாந்தத்தையும் ஏற்றுக் கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை. நான் என் போக்கு.

அதிகாலை : எழுத்தின் எல்லா வகைமையிலும் நீங்கள் இயங்கியுள்ளீர்கள் உங்களுக்குப் பிடித்தது கவிதையா? உரைநடையா?

ரூமி : இலக்கியத்தின் எல்லா வடிவங்களுமே எனக்குப் பிடித்தவைதான். ஆனால் நாடகம் இதுவரை எனக்கு பிடிபடாத ஒரு வகை. மிகவும் பிடித்தது வாமன அவதாரம் போல் இருக்கும் ஆற்றல் மிகுந்த வடிவமான கவிதைதான்.

அதிகாலை : மொழி பெயர்ப்பில் பல சாதனைகளைப் படைத்திருக்கிறீர்கள். பர்வேஷ் முஷாரப்பின் சுயசரிதை மற்றும் கிரேக்க இதிகாசமாகிய ‘இலியட்’ போன்றவை குறிப்பிடத்தக்கன. பிற மொழிகளிலிருந்து வருவதைவிட தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குச் செல்வது மிகவும் குறைவாக இருப்பது ஏன்? நீங்கள் ஏதாவது முயற்சி செய்துள்ளீர்களா?

ரூமி : இல்லை. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு நான் கொண்டு வந்ததெல்லாம், நான் விரும்பி ஏற்றுக் கொண்ட, கொடுக்கப்பட்ட பணிகள். ஒரு சில சிறுகதைகளை நானாக தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்திருக்கிறேன். உதாரணமாக வண்ண நிலவனின் மழை என்ற சிறுகதை என்னுடைய மொழிபெயர்ப்பில் The Rain என்ற தலைப்பில் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வந்தது. இவ்வித மொழிபெயர்ப்புகள் குறைவாக இருப்பதற்கு ஆங்கில அறிவு குறைவாக இருப்பதுதான் காரணம், வேறென்ன?

அதிகாலை : தற்கால எழுத்தாளர்களில் யாரை நீங்கள் முன்னிறுத்துவீர்கள்?

ரூமி : யாரையும் முன்னிறுத்துவது என் வேலையல்ல. எனினும் சில வார்த்தைகள் சிலரைப் பற்றிச் சொல்ல வேண்டும். இன்னும் ஒரு தொகுதிகூட வெளிவரவில்லை. ஆனால் எழுதிக்கொண்டே இருக்கிறார் தாஜ். அவருடைய தொகுதி ஒன்று விரைவில் வரவேண்டும். ‘நிறங்களின் கூடு’ என்ற தொகுதி மூலம் என் கவனத்தைக் கவர்ந்தவர் ஆனந்தராஜ். அற்புதமான மொழியும் கவிதா அழகும் கொண்ட கவிதைகள். தலித் கவிஞர்களில் குறிப்பிடத்தகுந்தவர் யாழன் ஆதி. பிரச்சனையை இலக்கியத்தின் தீவிர அழகோடு சொல்வது எப்படி என்று இவருடைய கவிதைகளில் இருந்து புரிந்து கொள்ளலாம். பிரச்சனைகளில் அடிக்கடி மாட்டிக் கொண்டாலும் அற்புதமாக கவிதை எழுதும் ஆற்றல் படைத்தவர் ஹெச்.ஜி.ரசூல். “சுமய்யாக்களின் பெண் குறிகளில் அம்பெய்து கொல்லும் அபூ ஜஹில்கள்” என்று ஒரு வரி. இஸ்லாமிய வரலாறும், சமகாலப் பிரச்சனையும் ஒருசேர விமர்சிக்கப்படும் வரி அது. முஸ்லிம் கவிஞர்களில் ஹெச்.ஜி.ரசூல் போன்ற ஆற்றல் மிக்க கவிஞர்கள் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

பிதீன் அற்புதமான எழுத்துக்குச் சொந்தக்காரர். இதுவரை இரண்டே சிறுகதைத் தொகுதிகள் வந்துள்ளன. ஒன்று என் முயற்சியில் ஸ்நேகா வெளியீடாக, சொதப்பலாக வெளியான ‘இடம்’ என்ற தொகுதி. தற்போது எனி இண்டியன் வெளியிட்டிருக்கும் ‘உயிர்த்தலம்’ என்ற தொகுதி. ஒருமொழியில் அங்கதம், நகைச்சுவை, கிண்டல், விமர்சனம் இவற்றுக்கான புதிய பரிமாணங்களையும் சாத்தியக்கூறுகளையும் இவர் எழுத்து காட்டும். உளவியல் ரீதியான அருமையான சிறுகதைகளை எழுதுகிறார் களந்தை பீர்முகம்மது. ஒரு சில மிக சிறப்பான சிறுகதைகளை எழுதி இருக்கிறார் நத்தர்சா. ஒரு சில என்று ஏன் சொல்கிறேன் என்றால், நத்தர்சா நிறைய சிறுகதைகளை எழுதி இருக்கிறார். ஆனால் என்னுடைய பாரபட்சமற்ற தேர்வில் ஒரு சிலதான் தேறும். ஆனால் எப்படிப்பட்ட எழுத்தை உருவாக்கவல்லவர் என்று புரிந்துகொள்ள அந்த ஒரு சில கதைகள் போதும். ‘செப்புத் தூக்கி’ என்று ஒரு கதை. இறந்த உடலின் பின்னால் அல்லது முன்னால், அடக்கஸ்தலத்தில் விநியோகம் செய்யப்பட வேண்டிய சில சமாச்சாரங்களைச் சுமந்து செல்லும் ஒரு அனாதையின் இறப்பு பற்றியது. இதுவரை யாரும் தொடாத ஒரு பாத்திரத்தைத் தொட்டு மிகையின்றி மிகச் சிறப்பாக ஒரு சிறுகதை எழுதி இருக்கிறார். ஒருவர் நிறைய எழுத வேண்டுமா என்ன? ஒரு சோறு போதாதா? அந்த வகையில் நத்தர்சா குறிப்பிடத்தகுந்தவர். செப்புத் தூக்கி பாணியில் அவர் தொடர்வாரேயானால் தமிழுக்கு இன்னொரு சிறந்த படைப்பாளி கிடைப்பார்.

கவிஞர்கள் தாஜ், ஆனந்த ராஜ், ஹெச்.ஜி.ரசூல், யாழன் ஆதி, எழுத்தாளர்கள் பிதீன், களந்தை பீர்முகம்மது, நத்தர்சா போன்றவர்கள் பரவலாக அறியப்படவும் பாராட்டப்படவும் வேண்டியவர்கள்.

அதிகாலை : சினிமா தொலைக்காட்சி தொடர்கள் ஏதாவது முயற்சி நடக்கிறதா?

ரூமி : சினிமாத் துறைக்கும் நாகூருக்கும் நெருங்கிய தொடர்புண்டு. ரவீந்தர் என்ற நாகூர்க்காரர்தான் ‘மஹாதேவி’ போன்ற படங்களுக்கு வசனம் எழுதியவர். சினிமா உலகில் சிறந்த வசனகர்த்தாவாகவும் திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருந்த தூயவன் எனக்கு தாய்மாமா உறவுதான். நடிகர் நாசரும் எனக்கு தூரத்து உறவுதான். சினிமா, தொலைக்காட்சித் துறையில் இயக்குனர்கள், நடிகர்கள், கவிஞர்கள் போன்ற நல்ல நண்பர்கள் இருக்கின்றனர்.

ஆனால் குடும்ப அல்லது ஊர் பெருமை பேசுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது என்று சொல்லி என்ன பயன், எங்களிடம் ஒரு கழுதைகூட இல்லாதபோது? என் குடும்பத்தாருக்கும் என் ஊராருக்கும் கலைத்துறையில் இருந்த திறமைகள் எனக்கும் இருப்பதை நான் அறிவேன். வாய்ப்புக் கிடைத்தால் பயன்படுத்திக் கொள்வேன். ஆனால் அதற்காக யார் வாசலிலும் போய் நிற்க மாட்டேன்.

July 04, 2008

'தீவிர சிகிச்சைப்பிரிவில் இருக்கிறது காங்கிரஸ்' - அத்வானி

மழை மேகங்களுக்காக நாம் ஏங்கிக்கொண்டிருக்கிறோம். தேர்தல் மேகங்கள் தென்படுகின்றன. தொடைதட்டும் ஓசைகள் அரசியலில் கேட்கத்தொடங்கிவிட்டன.தேர்தலுக்குத் தயாராகுங்கள் என்கிறார் காங்கிரஸ் தலைவி.
தீவிர சிகிச்சைப்பிரிவில் இருக்கிறது காங்கிரஸ் என்கிறார் அத்வானி. வாயில் வருவதெல்லாம் கோதைக்கு பாட்டு என்கிற மாதிரி லாலு சொல்லுகிறதெல்லாம் ஜோக்காகிப்போய்விட்டது. கனவில் கூட அத்வானி பிரதமராக முடியாது என்கிறார் லாலு. இடதுசாரிகளை பார்லிமெண்டில் எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராகிக்கொண்டிருக்கிறது. சமாஜ்வாதியின் சகாயத்தினால் ஆட்சி சரிந்துபோகாது என்று தெரிகிறது. மத்தியில் தேர்தல் மேகங்களால் தமிழ்நாட்டிலும் குளிர்காற்று வீசத்தொடங்கிவிட்டது. 'அண்ணன் எப்போது வெளியேறுவான்...திண்ணை எப்போது காலியாகும்' என்று நான்கு வருடங்களாக காத்திருக்கிறது பிரதான எதிர்க்கட்சி.'பசித்தவனுக்கு குழம்பெல்லாம் வேண்டாம்' என்கிற மாதிரி கிடைக்கிற ஆட்களை கட்சிக்குள் கொண்டுவரும் வேலையை எப்போதோ தொடங்கிவிட்டது அம்மாவின் அணி.'இரண்டிலொன்றில் இணையமாட்டோமா...இரண்டொரு இடங்களாவது கிடைக்காதா' என்று கணக்குபோடும் நடிகர்களின் அண்மைக்கால கட்சிகள்...'சூடிய பூவாக இருந்தாலும் பரவாயில்லை. வாடிய பூ வேண்டாம்' என்று ஏதாவதொரு நடிகரின் துணையைத் தேடும் திராவிடக்கட்சிகள்...
"கட்சியாக இருப்பவர்களுக்குத்தான் கவலை. குழுக்களாக இருக்கும் எங்களுக்கென்ன கவலை. சொந்தக் காரியம் ஜிந்தாபாத். இருக்கவே இருக்கிறது டெல்லி காட்டும்பாதை" என்கிறது காமராஜ் ஆட்சி என்கிற சொப்பனத்தில் இருக்கும் காங்கிரஸ். பதவிசுகம் அனுபவித்து விட்ட பாட்டாளிகளோ காற்று வீசும் திசைக்காக காத்திருக்கிறார்கள். மாநிலத்தில் அமையப்போகும் அணிகள் மத்தியில் அமையப்போகும் அணிகளுக்காக காத்திருக்கின்றன. வளைந்து போனாலும் வழியோடு போகணுமல்லவா?இயங்கிக்கொண்டிருக்கும் 'லாபி'கள் இப்போது ஓவர்டைம் செய்து கொண்டிருக்கின்றன.
"மத்தியிலும் பதவி வேண்டும். மாநிலத்திலும் பதவிவேண்டும். அதுமாதிரி ஏதாவது பாரப்பா..? "இது அதிகார மையங்களின் கட்டளை.
'ஃபீலர்'களின் வாகனங்களுக்கு பெட்ரோல் கூடுதலாக தேவைப்படுகிறது. தேர்தல் லாவணியில் கேள்விகளும் எதிர்க்கேள்விகளும் சாதாரணமாக இருக்கப்போவதில்லை. பதவி சுகத்தில் இருந்தவர்களுக்கு முள்ளாய் குத்தும் கேள்விகள் தயாராகிவிட்டன.
விலைவாசி ஏன் உயர்ந்தது?
விலைவாசியைக் குறைக்க காங்கிரஸ் என்ன செய்தது?
நீயும்தானே ஆட்சியில் இருந்தாய்? நீ என்ன செய்துவிட்டாய்?
நீ ஏன் ராஜினாமா செய்யவில்லை?
மதுக்கடையை ஏன் திறந்தாய்?
மணல்கொள்ளையில் ஆதாயமா?
பதுக்கலைப்பார்த்து ஏன் பதுங்கிப்போனாய்? இப்படிப்போகும் கேள்விகள்.
அன்னாடங்காச்சி பகல் கஞ்சி குடித்துவிட்டு அரைத்தூக்கத்தில் இருந்தார். மாலைநேரக்கல்லூரிக்குப் போன அவருடைய மகன் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தான்.,
"ஏண்டா, காலேஜுக்கு போவலை?"
"இல்லேப்பா, காலேஜு இல்லை."
"என்னடா ஆச்சு?'
"சாயந்திர காலேஜுக்கு வாத்தியாரெல்லாம் இன்னும் போடலியாம். லெக்சரர் எல்லாம் வந்தப்புறம் வாங்கன்னு எளுதிப்போட்டிருக்கு"
"எப்போ வருவாங்களாம்?"
"அரசாங்கத்துலேந்து ஆர்டர் போட்டு புது லெக்சரர் போடணுமாம். அடுத்தவாரம் வந்து பாருங்கன்னு சொல்லிட்டானுக."
"யாருடா சொன்னது?"
"பிரின்ஸ்பால்தான்"
"அது என்னடா பிரின்ஸ்பாலெ மரியாதெ இல்லாமெ பேசுறே?"
"காலேஜுலே எல்லாரும் அப்பிடித்தான் சொல்லுவானுக. அது பலக்கமாயிப்போச்சு"
"ஏய்...அது என்னடா பலக்கம்...? பழக்கம்னு சொல்லுடா?"
"இப்போதானே செம்மொழி கட்டிடம் தொறந்திருக்காங்க. கொஞ்சநாள் போவட்டும். கத்துக்குடுவேன்"
- அன்னாடங்காச்சி

June 29, 2008

"எல்லாம் பதவி சுகம்தான்" - தோலுரிக்கிறார் அன்னாடங்காச்சி

பல்லக்கைத் தூக்கிக்கொண்டு போவது சுகமா...? பல்லக்கில் ஏறிப்போவது சுகமா...? என்னப்பா கேள்வி இது? ஏறிப்போவதுதான் சுகம். திராவிடக் கட்சிகளுக்கு இரண்டுமேசுகம்தான்... எப்படி? மத்திய அரசாங்கத்தின் ஓட்டைப்பல்லக்கைத் தூக்கிக்கொண்டுசுகமாக ஓடிக்கொண்டிருக்கிறார்களே!
எல்லாம் பதவி சுகம்தான். மத்தியில் எந்த ஆட்சி வந்தாலும் 'எங்கள் பெயரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்' என்கிறார்கள். தமிழ்நாட்டில் பல்லக்கு சவாரி. சுகமான சவாரி. யார் வேண்டுமானாலும்சுமக்கலாம். ஏறிக்கொள்ள இடமில்லை. சுமக்கிறவர்களுக்கு சுமக்கிற சுகம் மட்டுமே. சண்டித்தனம் செய்தால் 'டூ' பணக்காரன் பொன்னை எடுக்கணும்னா பாட்டாளியோட கடப்பாரைதானே வேண்டியிருக்கு? பாராட்டு மொழிகளுக்கு அகலத் திறந்துகொள்ளும் செவிகள் குற்றச்சாட்டுகளுக்குஅடைத்துபோய்விடுகிறது. கொள்ளுக்கு வாயைத்திறக்கும் குதிரை கடிவாளத்திற்கு இறுக மூடிக்கொள்கிறது. இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கிடைக்கிறது. வேலைக்குப்போகவேண்டுமென்று அவசியமில்லை. சுகமாக சாவடியில் படுத்து தூங்கலாம். விளைவு. விவசாய வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை. ஆங்காங்கே குளங்களில் மராமத்து நடந்திருக்கிறது. நீர் நிலைகள் நிரம்பிக்கொண்டிருக்கின்றன. விவசாயிகள் மத்தியில் நம்பிக்கை இருக்கிறது. விதையுடன் நம்பிக்கையையும் விதைக்கிறார்கள் இந்த ஆண்டு உணவுக்கு உத்திரவாதம் தெரிகிறது. இந்த சந்தோஷத்தை தூக்கிச் சாப்பிட்டுவிடும் ஒருபிரச்சினை முளைத்திருக்கிறது. உரத்தட்டுப்பாடு. இது செயற்கையான தட்டுப்பாடு. அரசியல்வாதிகள்தான் காரணம் என்கிறார்கள் விவசாயிகள். டிஏபி உரத்தின் மானிய விலை ரூ 486. ஆனால் கிடைக்கவில்லை. தனியாரிடம் ரூ 700-க்கு தாராளமாக கிடைக்கிறது. அரசுபத்தாயிரம் கோடி ரூபாய் உர மானியம் கொடுக்கிறது. கிராம அளவில் உள்ள உரவியாபாரிகளும் கந்து வட்டிக்காரர்களும் மானிய விலையில் விற்கப்படும் உரத்தைவிவசாயிகளின் பெயரில் கைப்பற்றி அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபமடிப்பதாகசெய்திகள். கிராமப்புறங்களில் விவசாயிகளுக்கு அதிக வட்டிக்கு கடன் கொடுப்பவர்கள்பெரும்பாலும் நெல்மண்டி அதிபர்களாகவோ, உர வியாபாரிகளாகவோ இருப்பார்கள். இவர்கள்விவசாயிகளுக்கு கடன் கொடுக்கும்போது கடனுக்கான வட்டியை கழித்துக்கொண்டு மீதிக்குஉரங்களைக்கொடுத்து விடுவார்கள். அறுவடை நேரத்தில் கடனுக்கு ஈடான தொகையை நெல்லாகவாங்கிக்கொள்வார்கள். ஒவ்வொரு பரிமாற்றத்திலும் லாபம் பார்ப்பார்கள். இதில் ஈடுபடும் தனிநபர்கள் எல்லோருமே அரசியல்வாதிகளாகஇருப்பதுதான் நாம் கவனிக்கவேண்டிய விசயம். மத்தியிலோ மாநிலத்திலோ எந்தக்கூட்டணி முறிந்தாலும் இவர்களின் கூட்டணி மட்டும் முறிந்துபோகாது.
விவசாயிகளின் பெயரில் உரங்களை வாங்கி பதுக்கும் துணிவு அரசியல் தொடர்பினால் ஏற்பட்டுவிடுகிறது. தமிழக அரசு விரைவாக செயல்படவேண்டும்.

அன்னாடங்காச்சி எழுதிக்கொண்டிருக்கும்போது வீட்டிற்குள்பேச்சுக்குரல் கேட்டது. அவரது மனைவிக்கும் விருந்தாளியாக வந்த நாத்தனாருக்கும் உரையாடல் நடந்து கொண்டிருந்தது.

"காலைலே ஆறு மணிக்குபோயிடும்."
"அடக்கடவுளே! அப்புறம் எப்பவரும்?"
"எட்டு மணிக்குவந்திடும்."
"சரிதான்.ரெண்டுமணிநேரம்தானே?"
"ம்ஹும்..அப்புறம் மறுபடியும்பத்துமணிக்கு போயிட்டு..."
".....போயிட்டு..."
"பன்னிரண்டு மணிக்குவந்திடும்"
"பாழாப்போச்சு...போ..."
"மறுபடியும் நாலுமணிக்கு போயிட்டுஆறுமணிக்கு வந்திடும்."
"அப்புறம் ராத்திரி எட்டுமணிக்குபோயிட்டு ஒன்பது மணிக்கெல்லாம் வந்திடும்."
"இது தேவலையே... எங்க ஊர்ல எப்போநிறுத்துவான் எப்போ விடுவான் என்கிற கணக்கெல்லாம் இல்லே. நின்னுபோன கரண்டு திரும்பிவந்தாத்தான் நிச்சயம்"

"ஏங்க...தமிழ்நாட்டிலே கரண்டு பிரச்சினை இப்படி இருக்கறப்போநீங்க அதெ கவனிக்காம சிடி போட்டுக்கேட்கப்போய் ஜனங்க கவனமெல்லாம் அதிலேபோயிட்டுதுங்க"

"அடுத்த வருடமாவது கரண்டு பிரச்சினெயெ தீர்க்கப்பாருங்க."
"கரண்டு பிரச்சினையில தலை உருளற மாதிரி உரப்பிரச்சினையிலேயும் தலை உருளாம பாத்துக்குங்க!"

- அன்னாடங்காச்சி

நாட்டுக்காக போராடிய ஹீரோக்களுக்கு நமது நாட்டில் மதிப்பில்லை

பாகிஸ்தான் போரில் இந்தியாவுக்கு வெற்றித் தேடித்தந்த முன்னாள் ராணுவத் தலைமை தளபதி பீல்டு மார்ஷல் மானக்ஷாவின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி, பிரதமர், வி.ஐ.பி அரசியல்வாதிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. ஆனால் வங்கதேச முப்படைத் தளபதிகள் மட்டும் நன்றி மறக்காமல் தங்கள் நாட்டின் விடுதலைக்கு காரணமான மானக்ஷாவுக்கு நேரில் இறுதி அஞ்சலி செலுத்தினர். இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த 1971-ம் ஆண்டு போர் நடந்தபோது இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக இருந்தவர் ஜெனரல் மானக்ஷா. இவர் வகுத்த போர் யுத்திகள்தான், பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிடம் சரணடைய வழிவகுத்தது. அப்படி நாட்டையே காப்பாற்றிய ராணுவ தளபதி மானக்ஷா தனது 94 வயதில் நேற்று முன்தினம் இறந்தார்.

நியாயப்படி பார்த்தால் முன்னாள் ஜனாதிபதியோ, பிரதமரோ இறந்தால் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தைவிட இவருக்கு அதிகமாகவே கொடுத்திருக்கவேண்டும். ஆனால், மானக்ஷாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள் உட்பட எந்த அரசியல் வி.ஐ.பி.க்களும் நேரில் வரவில்லை.

ஏன், நமது நாட்டின் முப்படைத் தளபதிகள் கூட இதில் கலந்து கொள்ளாததுதான் வருத்தம் அளிக்கும் விஷயம்.

தரைப்பட தளபதி ரஷ்யா சென்றுள்ளதால், அவரால் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாததற்கு காரணம் கூறலாம். ஆனால் கடற்படை தளபதி சுரேஷ் மேத்தா, விமானப்படை தளபதி மேஜர் ஆகியோர் டெல்லியில்தான் இருந்தனர். அவர்கள் நேரில் வராமல் தங்கள் சார்பில் மலர்வளையம் வைக்க தனக்கு கீழ்நிலையில் உள்ள அதிகாரிகளை அனுப்பிவைத்து விட்டனர். ராணுவ இணையமைச்சர் பள்ளம் ராஜூ மட்டும் இந்தியா சார்பில் இறுதி அஞ்சலி செலுத்தினார். மற்றவர்கள் சார்பில் மலர்வளையம் மட்டுமே வைக்கப்பட்டது.

வங்கதேச விடுதலைக்கு இந்திய ராணுவ தலைமை தளபதி மானக்ஷா காரணமாக இருந்தார் என்பதற்காக அந்த நாட்டின் முப்படை தளபதிகள் சமீன், அலீம் சித்திக்தி ஆகியோர் நேரில் ஆஜராகி மானக்ஷாவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இவர்களின் நன்றி உணர்வு கூட, சொகுசு வாழ்க்கையில் புரளும் நம் நாட்டு வி.ஐ.பி.க்களுக்கு இல்லாமல் போனதுதான் வேதனை. பேருக்கு இரங்கல் செய்தியை வெளியிட்டுவிட்டு கண்டுகொள்ளாமல் பலர் இருந்து விட்டனர்.

அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஆட்சியை கவிழாமல் காப்பாத்துவது எப்படி என்ற தீவிர ஆலோசனையில் டெல்லி வி.ஐ.பி அரசியல்வாதிகள் இருந்துவிட்டனர். அவர்களே செல்லாதபோது நாம் ஏன் செல்ல வேண்டும் என மற்றவர்கள் இருந்து விட்டனர்.

இது குறித்து ராணுவ பிரிகேடியர் ஒருவர் கூறுகையில், "நாட்டுக்காக போராடிய ஹீரோக்களுக்கு நமது நாட்டில் மதிப்பில்லை. 25 ஆண்டுகளுக்கு முன் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வென்ற அணியினருக்கு இப்போது விழா கொண்டாடி மதிப்பளிக்கப்படுகிறது. ஆனால் நாட்டை காத்த உண்மையான ஹீரோக்களை போருக்கு பின் மறந்து விடுகிறார்கள்" என்றார்.

June 24, 2008

அன்னாடங்காச்சி!

"அடியே! உன்னோட குடும்பம் நடத்த என்னாலெ ஆகாது. நான் சந்நியாசம் போறேன். வாசலில் சொம்பு இருக்கிறது பார்! எவனாவது லவட்டிக்கொண்டு போய்விடப்போகிறான். சொம்பை எடுத்து உள்ளே வெச்சுக்கோ!"
ஐக்கியமுன்னணி அரசோடு இனிமேல் குடும்பம் நடத்த முடியாதென்று முடிவெடுத்துவிட்ட இடதுசாரிகளுக்கு மதவாதிகள் ஆட்சியைப் பிடித்துவிடக்கூடாது என்கிற கவலை. இந்தியா அமெரிக்காவிடம் அடகு போய்விடக் கூடாதே என்கிற தேசபக்தியாக இருக்கலாம். அல்லது அரசு கவிழ்ந்து போனால் தேர்தல் வரும். 'தேர்தலை சந்திக்கவேண்டுமே' என்ற பயமாகவும் இருக்கலாம். இப்போது தேர்தலை சந்திப்பதுபோல பயங்கரம் ஆளும் கட்சிகளுக்கு வேறு வேண்டியதில்லை.விலைவாசி ஏறிப்போய் பேயாட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் தேர்தல் வந்தால் கோஷங்களுக்கு பதில் சொல்ல திமுக-வால் கூட முடியாது. காங்கிரஸ் எந்த மூலை!

'பக்தவச்சலம் அண்ணாச்சி பருப்பு விலை என்னாச்சி!' என்று திமுக நாற்பது வருடங்களுக்கு முன்னால் கேட்டது. அன்றைக்கு வீழ்ந்த காங்கிரஸ் தமிழ்நாட்டில் இன்றுவரை எழுந்துகூட பார்க்கவில்லை.
'பானா சீனா அண்ணாச்சி பருப்பு விலை என்னாச்சி!' என்று பிஜேபியும் அதிமுகவும் பிய்த்து எடுத்து விடுவார்கள். விலைவாசி உயர்வு என்பது தமிழ்நாட்டில் ஒரு 'சென்ஸிட்டிவ்' பிரச்சினை. ஒருபுறம் இப்போது தேர்தல் வராமல் இருக்க என்ன செய்யணுமோ அதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். 'நீங்க கொஞ்சம் சொல்லுங்க' என்று சென்னைக்கு கூட வந்திருக்கிறார்கள். மறுபுறம் நாட்டில் பணப்புழக்கத்தை குறைக்க என்ன செய்யணுமோ அதையெல்லாம் மத்திய அரசு செய்துகொண்டிருக்கிறது.
குதிரை ஓடிப்போனபிறகு லாயத்தைப்பூட்டும் வேலை இது. விலைவாசி ஏற்றம் 5.5 சதவீதமாக இருந்தபோதே வட்டி விகிதத்தை அதிகமாக்குங்கப்பா..

அத்தியாவசியப் பொருட்களின் மீது யூக வணிகத்தை தடை செய்யுங்கப்பா...என்ற கூக்குரல் இந்தியா முழுவதும் கேட்டது. நிதியமைச்சருக்கு மட்டும் அந்தக்குரல் கேட்கவில்லை.
வட்டியை ஏத்துங்கப்பா...பதுக்கல்காரனும், ஆன்லைன் வியாபாரியும் வியாபாரத்துக்கு பணம் கிடைக்காமல் விலகிப்போய்விடுவான் என்று பொருளாதார நிபுணர்கள் சொன்னார்கள். அந்தக்குரலும் அரசுக்கு கேட்கவில்லை. பொருளாதாரம் இப்படியாகிப்போனது ஒருபுறமிருக்க மத்தியிலும் மாநிலத்திலும் கூட்டணிக்கட்சிகள் குலுக்கிப்போட்ட சோழிகளைப்போல சிதறிக்கொண்டிருக்கின்றன.

மாயாவதி சோனியாவைப் பார்த்து கையசைக்கிறார். இதற்கு அர்த்தம் 'டாட்டா'

முலாயம் சோனியாவைப் பார்த்து கையசைக்கிறார். இதற்கு அர்த்தம் 'ஹலோ'

நம்மூரிலும் சில 'டாட்டா' க்கள். 'பை...பை' கள்.

'ஹலோ' இன்னும் வெளிப்படையாகச் சொல்லவில்லை.

அன்னாடங்காச்சி இதையெல்லாம் படித்துவிட்டு வெறும் சிரிப்பை உதிர்க்கிறார். "சரிதான் போப்பா. எல்லாரும் ஒரே தொழிலில் இருக்கிறவங்க. நீரடிச்சு நீர் விலகாதுப்பா. அப்படியே விலகினாலும் இமயமலைக்கா போகப்போறாங்க. அம்புவிட்ட அர்ச்சுனனும், நெஞ்சுகாட்டி நின்ன துரியோதனனும் பங்காளிங்கதானே! எல்லாம் பேசித்தீத்துக்குவாங்க! அரசியல் செய்யுறவங்க பங்காளியாவும் உறவு முறையாவும் இருக்கறதுதானே நல்லது!

பாம்பின் கால் பாம்புக்குத்தானே தெரியும்! நீ வேணும்னா பாரு! எல்லாம் ஒண்ணா கூடிக்குவாங்க!

ஒருத்தர் சிரிச்சுக்கிட்டே சொல்லுவார் 'நாங்க ரெட்டக்குழல் துப்பாக்கி... தெரியுமில்லே'...!"