இந்தியாவில் வரதட்சிணைக் குற்றங்களுக்கான தண்டனையை அதிகரிக்க வேண்டும் என்று இந்தியாவின் சட்ட ஆணையம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருக்கிறது. அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க, உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் தலைமையிலான சட்ட ஆணையம் தனது பரிந்துரைகளை சட்ட அமைச்சர் பரத்வாஜிடம் சமர்ப்பித்துள்ளது.
ஏற்கெனவே, வரதட்சிணைக் குற்றங்களுக்கு தண்டணை விதிக்க சட்டத்தில் இடம் உள்ள நிலையில், அதில் மாற்றம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன என்று நீதிபதி லட்சுமணன் அவர்களிடம் கேட்டபோது, மகளிர் அமைப்புக்கள் உள்பட பல்வேறு தரப்பிலிருந்தும் வந்த கோரிக்கைகளை அடுத்து, இதுகுறித்து ஆய்வு செய்யுமாறு அரசு சட்ட ஆணையத்தைக் கேட்டுக் கொண்டதாகத் தெரிவித்தார். அதிகபட்ச தண்டனையாக தற்போதுள்ள ஆயுள் தண்டனையை தூக்குத் தண்டனையாக மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தன. ஆணையத்தில் நடைபெற்ற விவாத்தின்போதும் அதுபோன்ற கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. ஆனால், உலக அளவில் தூக்கு தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற கருத்து நிலவி வரும் நிலையிலும், பல்வேறு தீர்ப்புக்களை அடிப்படையாகக் கொண்டும், ஆயுள் தண்டனையே போதுமானது என்று முடிவு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார் சட்ட ஆணையத்தின் தலைவர் ஏ.ஆர். லட்சுமணன். அதே நேரத்தில், குறைந்தபட்ச தண்டனையாக தற்போது 7 ஆண்டுகளாக இருப்பதை, பத்து ஆண்டுகளாக அதிகரிக்குமாறு அரசுக்குப் பரிந்துரைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment