130 பேர் பலியான கராச்சி குண்டுவெடிப்பு - தீவிரவாதிகள் மற்றும் ராணுவத்திலுள்ள பழமைவாத சக்திகள் மீது பெனாசிர் பூட்டோ பழி : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ தன் மீது நடத்தப்பட்ட படுகொலை முயற்சியை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று கூறி கண்டித்துள்ளார். நாடு கடந்த நிலையில் வாழ்ந்துவந்த பெனாசிர் பூட்டோ பாகிஸ்தான் திரும்பியதை கொண்டாடும் முகமாக கராச்சியில் நடந்த வரவேற்பு ஊர்வலத்தில் ஏராளமான ஆதரவாளர்கள் மத்தியில் நடந்த தாக்குதலில் 130 பேருக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். தன் மீதான இஸ்லாமியவாதிகளின் கொலைத் திட்டங்கள் குறித்து பாகிஸ்தான் அதிகாரிகளிடம் தான் ஏற்கனவே தெரிவித்திருந்ததாகவும் ஆனாலும் தான் அரசாங்கத்தின் மீது குற்றம்சுமத்தவில்லை என்றும் பூட்டோ இன்று செய்தியாளர்களிடம் கூறினார். தீவிரவாத குழுக்களுடன் தொடர்புடைய ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் தாக்குதலில் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்று முன்னர் அளித்த பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டிருந்தார். தாக்குதல்கள் திட்டமிடப்பட்டுள்ளன என்று எச்சரிக்கைகள் வந்தும் நாள் முழுக்கவுமாக பூட்டோ ஏன் ஊர்வலம் சென்றார் என்று கேள்விகள் கேட்கப்படுவதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்
விடுதலைப்புலிகளிடம் இருந்து தப்பவே இந்தியா செல்ல முற்பட்டதாகக் கூறுகிறார் வியாழக்கிழமையன்றைய மன்னார் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத் தலைவர் : இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டம் பேசாலை கடற்பரப்பில் வியாழக்கிழமையன்று கடற்படையினரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத் தலைவரான ஜேசுதாஸ் ஜீன் மக்சிமச அவர்கள், விடுதலைப்புலிகள் தனது பிள்ளைகளை பலவந்தமாக இயக்கத்துக்கு ஆட்சேர்த்துவிடுவார்கள் என்ற அச்சம் காரணமாக தனது பிள்ளைகளை இந்தியாவுக்குக் கொண்டு செல்ல விளைந்தபோதே தம்மீது இலங்கைக் கடற்படை சுட்டுவிட்டதாக தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்
துருக்கி தாக்குதலை எதிர்கொள்ளத் தயார்: வடக்கு இராக்கில் தளமமைத்துச் செயற்படும் குர்து இன பிரிவினைவாதப் போராளிகளை தாக்குவோமென்ற தமது எச்சரிக்கை துருக்கி நடைமுறைப்படுத்த முற்பட்டால், தமது பிராந்தியத்தைப் பாதுகாக்க தமது மக்கள் தயாராக இருப்பதாக, வடக்கு இராக்கின் குர்து இன பிராந்தியத்தின் அதிபர் தெரிவித்துள்ளார்
மணிலா குண்டுவெடிப்பில் 8 பேர் பலி : பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் மக்கள் நடமாட்டம் நிறைந்த கடை வளாகம் ஒன்றில் குண்டொன்று வெடித்துள்ளதை அடுத்து நாட்டின் பொலிஸ்துறையும் ராணுவமும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக நாட்டின் அதிபர் கிளோரியா அர்ரோயோ கூறியுள்ளார்
No comments:
Post a Comment