தமிழ்ச்செல்வனின் மறைவு பேரிழப்பு - விடுதலைப் புலிகளின் தலைவர் : இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய கிளிநொச்சி மீது வெள்ளிக்கிழமை அரச படைகள் மேற்கொண்ட வான் தாக்குதலில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் மக்களின் மனங்களை வென்ற ஆழமாக நேசிக்கப்பட்ட தன்னிகரற்ற தலைவன் எனவும், அவர் உட்பட்ட 6 போராளிகளினதும் மறைவு என்றுமில்லாத ஒரு பேரிழப்பாகும் எனவும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தெரிவித்துள்ளார். தமிழ்ச்செல்வன் அவர்களின் மறைவையொட்டி பிரபாகரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையொன்றில் சமாதான வழியில், நீதியான முறையிலே தேசியப் பிரச்சினைக்கு அமைதித்தீர்வு காணுமாறு அனைத்துலகம் அடுத்தடுத்து அழைப்புவிடுத்தபோதும், சிங்கள தேசத்திலிருந்து நல்லெண்ணம் வெளிப்படவில்லை என்றும், சிங்கள தேசம் தனது இதயக் கதவுகளைத் திறந்து, சமாதானத் தூதும் அனுப்பவில்லை என்றும் மாறாக, போர்க்கழுகுகளை ஏவி, இராட்சதக் குண்டுகளை வீசி தமது அமைதிப்புறாவைக் கொடூரமாக, கோரமாகக் கொன்றழித்திருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள நாவலடியில் ஞாயிற்றுகிழமை மாலை வாகனமொன்றின் மீது இனம் தெரியாத நபர்களினால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் அதில் பயணம் செய்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன
தேர்தல்கள் குறித்து முடிவுவெடுக்கப்படவில்லை - பாகிஸ்தான் பிரதமர் : பாகிஸ்தானில் பர்வேஸ் முஷாரஃப் அவர்கள் அவசரகால நிலை அறிவித்து ஒரு நாள் ஆகியிருக்கும் நிலையில் அங்கே அடுத்த ஜனவரியில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நாடாளுமன்றத் தேர்தல்கள் இனி எப்போது நடத்தப்படும் என்பது இன்னமும் முடிவெடுக்கப்படவில்லை என்று பாகிஸ்தானப் பிரதமர் சௌகத் அசீஸ் அவர்கள் கூறியுள்ளார். அத்துடன் சுமார் 300 முதல் 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளதையும் உறுதிப் படுத்தினார். முன்னாள் பாகிஸ்தான உளவுத் துறை தலைவர் ஹமீத் குல், அரசியல்வாதியாக மாறிய முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான், வெளிநாட்டில் வாழும் முன்னாள் பாக்கிஸ்தான பிரதமர் நவாஸ் ஷரீஃபின் கட்சிப் பிரதித் தலைவர் ஜாவீத் ஹஷ்மி ஆகியவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். தான் கைது செய்யப்படாதது ஆச்சரியம் என்கிறார் நாடு திரும்பியுள்ள முன்னாள் பாக்கிஸ்தான பிரதமர் பெனஸீர் புட்டோ
வவுனியாவில் ஐவர் சுட்டுக்கொலை : இலங்கையின் வடக்கே வவுனியா தவசிகுளத்தில் விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படும் ஆயுதம் தாங்கிய ஐந்து இளைஞர்களை சனிக்கிழமை இரவு சுட்டுக் கொன்றுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது
இந்திய மீனவர்கள் விடுதலை : இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்தார்கள் என்ற குற்றத்திற்காகக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 97 இந்திய மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை இலங்கை பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கமைய விடுதலை செய்யப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிசார் தெரிவித்துள்ளனர்
விடுவிக்கப்பட்ட துருக்கியப் படையினர் நாடு திரும்பினர் : குர்த் இனப் போராளிகளால் விடுவிக்கப்பட்ட எட்டுத் துருக்கியப் படையினர் நாடு திரும்பியுள்ளனர்
சர்வதேச உதவியை கோரும் மெக்சிகோவின் டாபஸ்கோ மாகாணம் : கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மெக்சிகோ நாட்டின் டபாஸ்கோ மாகாணத்தின் ஆளுநர் சர்வதேச உதவியை கோரியுள்ளார். இந்த வெள்ளத்தால் சுமார் பத்து லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
குழந்தைகளை கடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட ஐரோப்பியர்கள் விடுவிப்பு : ஆப்ரிக்க குழந்தைகளை ஐரோப்பாவிற்கு கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட மூன்று பிரான்ஸ் நாட்டு பத்திரிக்கையாளர்களையும், நான்கு ஸ்பானிய நாட்டு விமானப் பணிப்பெண்களையும் சாட் அதிகாரிகள் விடுவித்துள்ளனர்
No comments:
Post a Comment