தமிழ்நாட்டின் திருக்கோவிலூருக்கு அருகே தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 13 வயது சிறுமியை, தேவதாசியாக ஆக்கும் முயற்சியாக, பொட்டுக்கட்டும் சடங்கு ஒன்று இன்று நடந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறிசொல்லும் ஜோதிடக்காரர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் அந்த சிறுமியின் பெற்றோரே இப்படி செய்ய முயன்றதாகவும், இந்தச் செய்தி கேள்விப்பட்ட உள்ளூர் காவல்துறையினர், அவர்களை கைது செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் குறித்து, நேரில் விசாரணை நடத்திவரும் தமிழக சட்டமன்ற உறுப்பினர் ரவிகுமார் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.
தமிழ்ச்செல்வன் இரங்கல் - தமிழ்நாட்டில் சர்ச்சை : விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் சுப.தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ தமிழ் நாளேடான ஜனசக்தி தனது தலையங்கத்தில், புன்னகை மாறாத முகப்பொலிவைப் பெற்றிருந்த தமிழ்ச்செல்வன் கொலை செய்யப்பட்டிருப்பது அனைவருக்கும் மிகுந்த வேதனையை அளித்திருககிறது என்று கூறியிருக்கிறது. அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, முதல்வர் கருணாநிதி தமிழ்செல்வனுக்காக எழுதிய இரங்கல்கவிதை கருணாநிதிககும் விடுதலைப்புலிகளுக்குமிடையே இருக்கும் ரகசியத் தொடர்பினைத்தான் வெளிப்படுத்துகிறது என்று குற்றஞ்சாட்டி, எனவே திமுக அரசு கலைக்கப்படவண்டும் எனக் கோரி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ஜெயலலிதாவின் கண்டனங்களுக்கு பதில் தெரிவித்த முதல்வர் கருணாநிதி, ஒருவர் மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பது ஓர் அடிப்படை மனிதநேயப் பண்பாடென்று கூறினார். இதனிடையே மத்திய அமைச்சரும் தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ஜி.கே.வாசன் காங்கிரஸ் ராஜீவ் கொலையை மறக்கவும் இல்லை, அவரது கொலையாளிகளை மன்னிக்கவும் இல்லை எனக் கூறியிருக்கிறார். தமிழ்செல்வனுக்கு இரங்கல் தெரிவித்து சுவரொட்டிகள் மாநிலத்தின் பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டிருக்கின்றனவே என செய்தியாளர்கள் கேட்டபோது, இது குறித்து தங்கள் வேதனையினை கட்சியின் தலைமைக்கு தெரிவிக்க இருப்பதாகக் கூறினார்.
புவி வெப்பமடைவதை தடுப்பதற்காக தியாகம் செய்ய மக்கள் தயார் - பிபிசி கருத்துக்கணிப்பு : புவி வெப்பமடைவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்காக தியாகம் செய்ய மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்று பிபிசி உலக சேவையினால் நடத்தப்பட்ட சர்வதேச கருத்துக் கணிப்பு ஒன்று கூறுகிறது
விளையாட்டரங்கம் : இந்தியாவின் அசாம் மாநிலத்தின் தலைநகர் குவஹத்தியில் இன்று திங்கட்கிழமை நடந்த இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பது. இலங்கை – ஆஸ்திரேலியா ஆகியவற்றுக்கிடையில் ஷேன் வார்ண்- முத்தையா முரளீதரன் ஆகியோரின் பெயரில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட முடிவாகியிருப்பது ஆகியவை குறித்து இன்றைய விளையாட்டரங்கில் கேட்கலாம்
No comments:
Post a Comment