அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாகொழும்பு நாரஹேன்பிட்டி இசப்பத்தான மாவத்தையில் அமைந்துள்ள ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின், சமூக சேவைகள் மற்றும் சமூக நலன்புரி அமைச்சகவளாகத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பினைச் சேர்ந்ததாகக் கருத்தப்படும் பெண் தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் இன்று காலை நடாத்திய குண்டுத்தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதோடு, மேலும் இருவர் படுகாயமடைந்திருக்கிறார்கள்
இராணுவத் தளபதி பதவியைத் துறந்த பாகிஸ்தானிய அதிபர் முஷாரஃப் அவர்கள் சிவிலியன் அதிபராக பொறுப்பேற்கவுள்ளது பற்றிய செய்திக் குறிப்பு : இராணுவப் பொறுப்பைத் துறக்கும் அதிபர் முஷாரஃப்இது ஒரு அரசியல் சூதாட்டந்தான் ஆனால், நன்றாகத் திட்டமிடப்பட்ட ஒன்று. இராணுவத் தளபதி பதவியில் இருந்து விலகுவதன் மூலம், முஷாரஃப் அவர்கள் தனது நிலையை பலவீனப்படுத்துகிறார். இதன் மூலம் பாகிஸ்தானின் மிகப் பலம் வாய்ந்த நிறுவனத்தின் மீதான தனது நேரடிக் கட்டுப்பாட்டை அவர் இழக்கிறார்.
அதேவேளை, இதன் மூலம் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும், அவர் தன்மீதான அரசியல் அழுத்தத்தையும் தளர்த்திக்கொள்கிறார். முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை தான் பூர்த்தி செய்ய முயற்சிக்கிறேன் என்றும், ஜனநாயகத்தை நோக்கிய பாதையில் பாகிஸ்தானை தான் உண்மையாகவே நிறுத்தியிருக்கிறேன் என்றும் இப்போது அவரால் சொல்ல முடியும். உண்மையில், ஏனைய நிபந்தனைகளுக்கு முகம் கொடுப்பதைவிட, இராணுவத்தலைமைப் பதவியை துறப்பது ஒப்பீட்டளவில் குறைந்த ஆபத்தையே கொண்டதாகும். அரசியலமைப்புச் சட்டத்தை மீள நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கான சமிக்ஞைகள் எதுவும் இன்னமும் தெரியவில்லை. அது வந்தால்தான் எதிர்க்கட்சிகள் தமது ஆதரவாளர்களை ஒன்று திரட்ட ஏதுவாக இருக்கும். அத்துடன் தொடர்பூடகங்களும், அப்போதுதான் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்கப்படும் நிலையும் உருவாகும். பதவி இடை நீக்கம் செய்யப்பட்ட எந்தவொரு நீதிபதியையும் மீள பதவியில் அமர்த்துவதற்கான சமிக்ஞைகள் எதுவும் கூட தென்படவில்லை. ஒரு சுயாதீனமான, விமர்சனத்துடனான நீதித்துறை இன்றுவரை அதிபருக்கு ஒரு யதார்த்தமான அச்சுறுத்தலாகவே இருந்து வருகின்றது. இன்றுமுதல், அதிபர் முஷாரஃபின் பெரும்பாலான பாதுகாப்பு என்பது, புதிய இராணுவத் தளபதியான ஜெனரல் கயானி அவர்கள் அதிபர் மீது கொண்டுள்ள விசுவாசத்திலேயே தங்கியுள்ளது. அவர் ஒரு நம்பிக்கை மிகுந்த கூட்டாளி. அதிபர் முஷாரஃபின் நீண்டகால யுக்தியின் கவனமாக மேற்கொள்ளப்பட்ட பகுதியே, அவரது பதவியுயர்வாகும். ஒரு சிறந்த இராணுவத் தளபதி என்பதுடன், பாகிஸ்தானின் பலம் மிக்க உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐயின் தலைவராகவும் கயானி பணியாற்றியுள்ளார். அமெரிக்கர்களாலும் அவர் நட்பு ரீதியாகப் பார்க்கப்பட்டதாக நம்பப்படுகிறது. பெனாசீர் பூட்டொ அரசாங்கத்திலும், அவர் ஒரு நல்ல பதவியில் இருந்தவராவார், அத்துடன் அண்மையில் அவருடனான அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையிலும் அவர் ஈடுபட்டிருந்தார். ஆகவே அவர் முஷாரஃப்புக்கு விசுவாசமாக இருந்தால், அவரது பதவியுயர்வு, முஷாரஃப்புக்கு ஒரு பலத்தைத் தரும்.
ஒரு அர்ப்பணிப்புடனான இராணுவ தலைவரான இவர், அதிபரைப் போன்று அரசியல் நெருக்கடிகளில் சிக்கிக்கொள்ளாதவர். ஆகவே இராணுவத்தின் தார்மீக பலத்தை அதிகரிக்கச் செய்தல், மற்றும் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஒரு ஊக்கத்தைக் கொடுத்தல், ஆகியவை உட்பட எதிர்கொள்ளப்படுகின்ற பல பிரச்சினைகளை எதிர்கொள்ள இவர் ஒரு சரியான ஆளாக இருக்கலாம்
நுகேகொட குண்டுவெடிப்பில் 16 பேர் பலி : இலங்கையின் தலைநகர் கொழும்பின் தென்புறமாக நுகேகொட பகுதியில் இன்று பிற்பகல் சனநடமாட்டம் மிக்க இடத்தில் இடம்பெற்ற பாரிய குண்டுத் தாக்குதல் ஒன்றில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் முப்பதுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். சனக்கூட்டம் நிறைந்த புடவைக் கடையொன்றில் இருந்தே இந்தப் பாரிய குண்டு வெடித்துள்ளது.
குண்டு வெடித்ததை அடுத்து அப்பகுதியில் இருந்த வாகனங்கள் சிலவும், கடைகளும் தீப்பற்றிக்கொண்டுள்ளன. வர்த்தக நிறுவனம் ஒன்றில் காணப்பட்ட சந்தேகத்துக்குரிய பொதி ஒன்றை பாதுகாவலர்கள் அகற்ற முயன்ற போதே அந்தப் பொதி வெடித்ததாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் 37 பேர் காயமடைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்தத் தாக்குதல் குறித்து விடுதலைப்புலிகள் மீதே அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த குண்டுத் தாக்குதல்களை அடுத்து கொழும்பு உள்ளடங்கலாக மேல்மாகாணத்தில் உள்ள பள்ளிக்கூடங்களை திங்கட்கிழமை வரை இலங்கை அரசு மூடியுள்ளது
இராணுவத்தலைவர் பதவியிலிருந்து முஷாரஃப் விலகினார் : பாகிஸ்தானின் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் இராணுவத் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து அவர் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சிவிலியன் அதிபராக பொறுப்பேற்க தயாராகி வருகிறார்
கொசோவோவின் எதிர்காலம் குறித்த உடன்பாடு ஏற்படவில்லை
கொசோவோவின் எதிர்காலம் குறித்து சர்வதேச சமூகத்தின் ஆதரவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் அடுத்ததாக என்ன நடவடிக்கை என்பது குறித்து எந்த உடன்பாடும் ஏற்படாமல் முடிவடைந்துள்ளது
வெளிநாட்டுத் தலையீட்டை ரஷியா அனுமதிக்காது என்கிறார் புடின் : ரஷியா தனது வளர்ச்சியில் எந்தவிதமான வெளிநாட்டுத் தலையீடையும் அனுமதிக்காது என்று வெளிநாட்டு தூதுவர்களிடம் ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்
இந்திய வம்சாவழியினர் மீது மலேசிய அரசு குற்றச்சாட்டு : சிறுபான்மையினருக்கு சம உரிமை கோரும், தடை செய்யப்பட்ட ஊர்வலம் ஒன்றில் கலந்து கொண்டதற்காக மலேசிய அரசாங்கம் இந்திய வம்சாவழியினர் சுமார் 90 பேர் மீது குற்றஞ்சாட்டியுள்ளது
தென்னாபிரிக்காவில் எய்ட்ஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையில் ஊழல் : எயிட்ஸ் மற்றும் எச் ஐ வி பரவலைத் தோற்கடிப்பதற்கான முயற்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்திய ஊழல் மற்றும் தவறான முகாமைத்துவம் ஆகியவற்றை அனுமதித்தது தொடர்பில், தென்னாபிரிக்க அரசாங்கத்தை ஒரு அறிக்கை விமர்சித்துள்ளது
No comments:
Post a Comment