மலேசியத் தமிழர் போராட்டம்
அமைச்சர் டத்தோ சாமிவேலுமலேசியாவிலுள்ள இந்திய வம்சாவழியினரின் நியாமான உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதாகக் கூறி, அங்குள்ள தமிழர்கள் கடந்த சில தினங்களாக போராடி வருகிறார்கள். இந்த நிலையில் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தும் மலேசிய இந்து உரிமைகள் நடவடிக்கை குழுவின் தலைவரும் மற்றவர்களும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மலேசியாவில் நடைபெற்றுவரும் இந்தப் போராட்டங்களில் நியாயம் இல்லை என்று மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அந்நாட்டு பொதுப்பணித் துறை அமைச்சருமான டத்தோ சாமிவேலு தமிழோசையிடம் தெரிவித்தார். அவர்களது கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதற்கு தான் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். மூன்றுக்கு மேற்பட்ட இனங்கள் வாழக் கூடிய நாட்டில், உரிமைகள் வழங்கப்பட்டுள்ள போதிலும் நூறு சதவீத உரிமைகள் எல்லோருக்கும் வழங்கப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார். மலேசியாவில் அரசின் அனுமதி பெற்றுக் கட்டப்பட்டுள்ள இந்துக் கோயில்களுக்கு அரசு மானியங்கள் கூட வழங்கிவருவதை சுட்டிக் காட்டிய மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேலு, சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கோயில்களை எந்த அரசுமே ஏற்றுக் கொள்ளாது என்றும் கூறினார். ஆனாலும் தொடர்ந்து தமிழ் பள்ளிகள் மூடப்படுவது, தமிழ் மாணவர்களுக்கு உயர்கல்விகளில் வாய்ப்புகள் மறுக்கப்படுவது, கோயில்கள் உடைக்கப்படுவது போன்ற காரணங்களே தமது போராட்டத்துக்கான காரணங்கள் என்று இந்தப் போராட்டங்களை முன்னின்று நடத்தும் அமைப்பான இந்து உரிமைகள் நடவடிக்கை குழுவின் தலைவர் கணபதி ராவ் தமிழோசையிடம் தெரிவித்தார். இது தொடர்பில் தாங்கள் அரசுக்கு பல மனுக்கள் கொடுத்திருந்தும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார். நாட்டில் புதிதாக உருவாக்கப்படும் நகரங்களில் தமிழ்ப் பள்ளிகள், கோவில்கள் ஆகியவை கட்டப்படுவது இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். மலேசியாவில் நடைபெற்றுவரும் போராட்டங்கள் தொடர்பாக அமைச்சர் டத்தோ சாமிவேலு, அந்நாட்டின் மனித உரிமைகள் ஆணையர் டத்தோ சிவசுப்ரமணியம் மற்றும் போராட்டக் குழுவின் தலைவர் கணபதி ராவ் ஆகியோரது பேட்டிகளை கேட்கலாம். http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews
No comments:
Post a Comment