துபாய் கட்டுமானப் பணி விபத்தில் பலியானவர்களுக்கு நஷ்டஈடு பெற்றுத் தர பேச்சுவார்த்தை
- இலங்கையின் வடக்கே இடம்பெற்ற மோதலில் பலர் பலி : இலங்கையின் வடக்கே மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களின் இராணுவ முன்னரங்க பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் 23 விடுதலைப் புலிகளும், இராணுவச் சிப்பாய ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது
- பாகிஸ்தான் தலைமை நீதிபதியை சந்திக்க பேநசிர் பூட்டோவிற்கு அனுமதி மறுப்பு : பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவி பேநசிர் பூட்டோ பதவியகற்றப்பட்ட நாட்டின் தலைமை நீதிபதி இஃப்திகார் முகமது சௌத்ரியைச் சந்திப்பதை பொலிசார் தடுத்துள்ளனர். ஒரு வாரத்துக்கு முன்பு அதிபர் முஷாரஃப் நாட்டில் அவசரநிலையைப் பிரகடனம் செய்ததிலிருந்து தலைமை நீதிபதி தனது இஸ்லாமாபாத்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமையை பூட்டோ அம்மையாரும் கூட வீட்டுக்காவலில்தான் கழித்திருந்தார். தனது இஸ்லாமாபாத் வீட்டின் முன்பு குவிக்கப்பட்டிருந்த பொலிசார் அகன்று சென்றதை அடுத்து அவர் ஜனநாயகத்துக்கு ஆதரவாக குரலெழுப்புவதைத் தொடர்ந்துள்ளார். வரும் ஜனவரி மாதத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று அவர் கோருகிறார். ஒரு மாத காலத்தில் அவசரநிலை விலக்கப்பட வாய்ப்புள்ளது என்று மட்டும் கூறியுள்ள பாகிஸ்தான் சட்டமா அதிபர் மாலிக் முகமது கையும் வேறு விபரம் எதனையும் தெரிவிக்கவில்லை
- மேற்கு வங்கத்தின் நந்திகிராமில் மோதல் : மேற்கு வங்க மாநிலத்தில் நந்திகிராம் பகுதியில் நிலம் கையகப்படுத்துவதை எதிர்க்கும் இயக்கத்தாருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர்கள் என்று கூறப்படுவோருக்கும் இடையே சனிக்கிழமையன்று ஏற்பட்ட மோதலில் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும், ஏராளமானவர்கள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது
- துபாய் கட்டுமானப் பணி விபத்தில் பலியானவர்களுக்கு நஷ்டஈடு பெற்றுத் தர பேச்சுவார்த்தை - இந்திய அமைச்சர் : துபாய் நகரில் கட்டுமானப் பணி நடந்துகொண்டிருந்த பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், உயிரிழந்த ஐந்து தமிழர்கள் உள்பட ஏழு இந்தியர்களின் குடும்பத்தாருக்கு, போதுமான இழப்பீடு பெற்றுத்தர இந்திய அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரங்களுக்கான அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார். துபாயின் புறநகர்ப் பகுதியான மரினாவில் பாலம் கட்டுமானப் பணி நடந்துகொண்டிருந்தது. கடந்த வியாழக்கிழமை மாலை, கட்டுமானப் பகுதி திடீரென்று இடிந்து விழுந்தது. இதில், இந்தியத் தொழிலாளர்கள் ஏழு பேர் உயிரிழந்தார்கள். 24 பேர் காயமடைந்தார்கள். மதுரை மாவட்டம் தும்பைபட்டியைச் சேர்ந்த ஷாஜஹான் சம்சுதீன், திண்டுக்கல் மாவட்டம மூங்கில்பட்டியைச் சேர்ந்த கார்த்தி, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள காரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மதியழகன், கடலூர் மாவட்டம் நத்தமலை கிராமத்தைச் சேர்ந்த அருள்மொழி கோவிந்தன் மற்றும் மோகன் லட்சுமணன் ஆகிய ஐந்து தமிழர்கள் உயிரிழந்ததாகத் தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் பணியாற்றி வந்த நிறுவனத்துடன், துபையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் பேச்சு நடத்தியிருப்பதாகவும், அவர்களது உடல்களை விமானம் மூலம் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார். விபத்து எப்படி ஏற்பட்டது என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகக் கூறிய அமைச்சர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு 120 மாத சம்பளத்தை இழப்பீடாகப் பெற்றுத்தர அவர்கள் பணியாற்றி வந்த நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதனிடையே, உயிரிழந்த ஐந்து தமிழர்களின் குடும்பத்தாருக்கும் இழப்பீடாக தலா இரண்டு லட்சம் ரூபாய் வழங்க தமிழக முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளதாக அரசு இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது
- இராக் தீவிரவாதிகளால் அல்கொய்தாவினர் கொல்லப்பட்டுள்ளனர் : இராக்கின் சமாரா நகரத்தில் அல்கொய்தாவினர் மீது இராக்கிய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பதினெட்டு அல்கொய்தாவினர் கொல்லப்பட்டுள்ளதாக இராக்கிய காவல்துறையினர் கூறுகின்றனர்
No comments:
Post a Comment