புத்திசாலி சிம்பன்சி குரங்குகள்
இன்றைய அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில், கணித எண்களை நினைவு வைத்துக் கொள்வதில் மனிதர்களை விட புத்திசாலியாக செயல்பட்ட சிம்பன்சி குரங்கு பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவலை பார்க்கலாம். அயுமு என்கிற சிம்பன்ஸி குரங்குக்கும் கியோடோ பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஒன்பது மாணவர்களுக்கும் இடையில் ஒரு போட்டி நடத்தப்பட்டது. அதாவது அவர்களுக்கு முன்னால் வைக்கப்பட்டிருக்கும் கணினியின் தொடு திரையில் வரிசையாக எண்கள் தோன்றி மறையும். ஒரு நொடியை விட மிகவும் குறைந்த காலத்திற்கு மட்டுமே இந்த எண்கள் திரையில் தோன்றி கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்து விடும். அடுத்து, அந்த எண்கள் தோன்றி மறைந்த இடத்தில் இருக்கும் வெண் சதுர கட்டங்களை, எண்கள் தோன்றிய வரிசைக்கிரமப்படி தொட்டு அடையாளம் காணவேண்டும் என்பது தான் போட்டி. இதில், அயுமு சரியாக அடையாளம் காட்டி ஆராய்ச்சியாளர்களை அசத்தியது. ஆனால் 9 பல்கலைக்கழக மாணவர்களால் இதை செய்யமுடியவில்லை. அவர்கள் அனைவருமே அடையாளம் காணமுடியாமல் திணறினார்கள். இதிலிருந்து, குறுகியகால நினைவாற்றல் என்கிற திறனில், மனிதர்களைவிட, சிம்பன்சிகள் புத்திசாலிகளாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக, இந்த ஆய்வை மேற்கொண்ட கியோட்டோ பல்கலைக்கழக பேராசிரியர் மட்சுசாவா அவர்கள் தெரிவித்திருக்கிறார். இதில் சுவாரஸ்யமான விடயம் என்னெவென்றால், இந்த பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமல்ல, ஆக்ஸ்போர்டிலிருக்கும் ப்ரூக்ஸ் பல்கலைக்கழகத்தின் குரங்கினங்கள் குறித்து ஆராயும் பேராசிரியரான சைமன் பியார்டர் அவர்களும் இந்த சிம்பன்சியிடம் இதற்கு முன்பு நடத்தப்பட்ட சோதனைகளில் தோற்றுவிட்டார் என்பதுதான். இப்படியான எண்களை நினைவில் வைத்துக் கொள்ளும் விடயத்தில், சிம்பன்சிகளைவிட மனிதர்களின் திறமை குறைவாக இருப்பதற்கு என்ன காரணம் என்று தற்போது ஆராய்ச்சியாளர்கள் விவாதித்து வருகிறார்கள். இதற்கு பதிலளிக்கும் விதத்தில் ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. அதாவது மனிதர்களுக்கும் முன்பு இது போன்ற எண்கள் தொடர்பான குறுகிய கால நினைவாற்றல் அதிகமாக இருந்ததாகவும், காலப்போக்கில் மனிதர்கள் மொழிகளைக்கற்றுக் கொண்டு பேசத் துவங்கியதால், மூளையில் மொழிகளுக்கான இடம் அதிகமானதால், எண்கள் தொடர்பான திறமை குறைந்து விட்டிருக்கலாம் என்று ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது.
எது எப்படியோ, இனிமேல் குரங்கை விட மனிதன் புத்திசாலி என்று பொத்தாம் பொதுவாக சொல்லிக்கொள்ள முடியாது. எண்கணித நினைவாற்றலில் மனிதர்களின் மூதாதையர்களாக கருதப்படும் குரங்குகள், தற்கால மனிதர்களைவிட திறமையானவர்கள் என்று இந்த சிம்பன்சிகள் நிரூபித்திருக்கின்றன.
எது எப்படியோ, இனிமேல் குரங்கை விட மனிதன் புத்திசாலி என்று பொத்தாம் பொதுவாக சொல்லிக்கொள்ள முடியாது. எண்கணித நினைவாற்றலில் மனிதர்களின் மூதாதையர்களாக கருதப்படும் குரங்குகள், தற்கால மனிதர்களைவிட திறமையானவர்கள் என்று இந்த சிம்பன்சிகள் நிரூபித்திருக்கின்றன.
No comments:
Post a Comment