December 21, 2007

இலங்கை படையினரின் குறுக்கீடின்றி தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க வழிவேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை

தமிழக மீனவர்கள், இலங்கை பாதுகாப்புப் படையினரின் குறுக்கீடுகள் இல்லாமல், இந்தியக் கடற்படையின் பாதுகாப்புடன் மீன்பிடித் தொழிலில் ஈடுபட அனுமதிக்கப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு. கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று புதுடெல்லியில் நடந்த மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் கருணாநிதியின் இந்தக் கருத்து வலியுறுத்தப்பட்டது. உடல் நலக்குறைவு காரணமாக, கருணாநிதி இந்த மாநாட்டில் பங்கேற்க முடியவில்லை. அவரது சார்பில், மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு, முதல்வரின் உரையை வாசித்தார். இந்திய மீனவர்கள் தாக்கப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நடப்பு ஆண்டில் இந்திய மீனவர்கள் மீது நடத்தப்பட்ட 26 தாக்குதல் நிகழ்வுகளில் 8 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 13 பேர் காயமடைந்திருக்கிறார்கள் என்று கருணாநிதியின் உரையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. தெளிவாக எல்லை வரையறுக்கப்பட்ட பகுதிகளில், இலங்கைப் படையின் குறுக்கீடு இல்லாமல், இந்திய மீனவர்களுக்கு மீன் பிடிப்பதில் உள்ள பாரம்பரிய உரிமைகள் அளிக்கப்பட வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசு வலியுறுத்துகிறது. இதில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்வது, கடல் பகுதியில் மனிதர்களாலும், பிற பொருள்களாலும் சட்டத்துக்குப் புறம்பாக நடைபெறும் எந்த ஒரு நடவடிக்கையையும் கட்டுப்படுத்துவதற்கு உதவும் என கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை அகதிகள் வருகை, தமிழகத்தால் எதிர்கொள்ளப்படும் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரச்சினைகளில் முக்கியமான ஒன்றாக வடிவெடுத்துள்ளதாக கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார். கடந்த 1983-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இதுவரை நான்கு கட்டங்களில் தமிழகத்துக்கு வந்த 73 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள், 25 மாவட்டங்களில் உள்ள 117 முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்களை அவர் வெளியிட்டுள்ளார். இலங்கை அகதிகளுக்காக மாநில அரசு செலவிடும் தொகையை மத்திய அரசு திருப்பித்தர வேண்டும் என்றும், அகதிகளுக்காக கிலோ 57 காசு என்ற மானிய விலையில் அரிசி வழங்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கருணாநிதி கோரிக்கை விடுத்திருக்கிறார்.

No comments: