பாகிஸ்தான் எதிர்காலம்? - நிபுணர் கருத்து
பேநசிர் பூட்டோ அவர்களின் மறைவுக்குப் பிறகு, அவரது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் எதிர்காலம் குறித்தும், எதிர்கட்சிகளின் நிலைப்பாடுகள் குறித்தும், பாகிஸ்தானில் தேர்தல்கள் திட்டமிட்டபடி நடக்குமா என்பது குறித்தும் பிபிசியின் கராச்சி செய்தியாளர் இலியாஸ்கான் அவர்களின் ஆய்வுக்கண்ணோட்டத்துடன் கூடிய செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம். அடிப்படையில் பாகிஸ்தான் மக்கள் கட்சி, இடதுசாரி கொள்கைகளையுடைய ஒரு கட்சியாகவே பார்க்கப்படுவதாக கூறும் இலியாஸ்கான், அதேநேரம் புட்டோ குடும்பத்தினரிடையே பெயரும் பலவகையில் அந்தக் கட்சியோடு இணைத்துப் பார்க்கபடுவதாகவும் தெரிவிக்கிறார். பூட்டோ குடும்பத்தின் கடைசி முக்கிய உறுப்பினரும் பலியாகியுள்ள நிலையில், பாகிஸ்தான் மக்கள் கட்சி படிப்படியாக சிதறுண்டு போகக்கூடும் என்றும் அவர் தெரிவிக்கிறார். ஏனெனில், அந்தக் கட்சியில் பூட்டோவுக்கு அடுத்த நிலையிலுள்ள தலைவர்களிடம் பேநசிருக்கு உண்டான ஒரு ஆளுமையோ அல்லது பாகிஸ்தான் முழுவதும் மக்களால் ஏற்கப்படக்கூடிய ஒரு பொதுத்தன்மையோ இல்லை என்றும், பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களிலும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு மக்களின் ஆதரவைப் பெற்ற கடைசி அரசியல் தலைவர் பேநசிர் பூட்டோவாகத்தான் இருக்கக்கூடும் என்றும் இலியாஸ் கூறுகிறார். பேநசிரின் திடீர் மறைவு, பாகிஸ்தான் எதிர்கட்சிகள் மத்தியில் ஒருவித ஒற்றுமையை ஏற்படுத்தக்கூடும் என்றும் இலியாஸ்கான் கூறுகிறார். தற்போதைய நிலையில் பேநசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர்கள், தேர்தல்கள் தள்ளிவைக்கப்படுவதைத்தான் விரும்புவார்கள் என்றும், தற்போதைய நிலையில் அநேகமாக எல்லா எதிர்கட்சிகளுமே அதையே விரும்புவதாகவும், இலியாஸ் தெரிவிக்கிறார். அதேநேரம், பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரஃபை பொறுத்த வரையில், தேர்தல்களை விரைவில் நடத்தி ஒரு ஆட்சியை ஏற்படுத்தவே விரும்புவார் என்கிறார் இலியாஸ்கான். ஒரு தேர்தெடுக்கப்பட்ட ஆட்சியிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதன் மூலம், தனது பிரச்சினைகளை குறைக்க அவர் முயலக்கூடும் என்றும் இலியாஸ் கருத்து தெரிவித்தார். ஆனால், பாகிஸ்தானின் அட்வகேட் ஜெனரல் நாட்டில் தற்போது இருக்கும் சூழல் தேர்தல்கள் நடத்துவதற்கு ஏதுவாக இல்லை என ஏற்கெனெவே குறிப்புணர்த்தியிருப்பதையும் இலியாஸ்கான் சுட்டிக்காட்டுகிறார்.
No comments:
Post a Comment