December 01, 2007

எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக இந்தியாவில் சிறப்பு இரயில்

  • இன்று உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, உலகிலேயே மிகப்பெரிய அளவில் எய்ட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக, இந்தியாவில் சிவப்பு ரிப்பன் எக்ஸ்பிரஸ் என்ற ரயில் சனிக்கிழமையன்று புதுடெல்லியில் துவக்கிவைக்கப்பட்டது. சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை வர்ணம் தீட்டப்பட்ட இந்த சிறப்பு ரயிலை, ஆளும் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி துவக்கி வைத்தார். அடுத்த ஓராண்டுக்கு இந்த ரயில், இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் செல்லும். 180 ரயில் நிலையங்களில் நிற்கும் இந்த ரயில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாகச் செல்லும். ஒவ்வொரு ரயில் நிலையத்திலும், அந்த ரயிலில் உள்ள எய்ட்ஸ் தடுப்பு பிரசார தன்னார்வலர்கள், பாதுகாப்பான உடலுறவு குறித்தும், எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்தும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடம் விளக்குவார்கள். அப்போது, ஆணுறைகளும் இலவசமாக வழங்கப்படும். நைஜீரியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு அடுத்தபடியாக, இந்தியாவில்தான் அதிகபட்சமாக சுமார் 25 லட்சம் பேர் எய்ட்ஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
    சிவப்பு ரிப்பன் எக்ஸ்பிரஸ் ரயில் துவக்க விழாவில் கலந்துகொண்ட இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ், இந்த ரயிலின் நோக்கம் குறித்து விளக்கினார்.
  • இலங்கையின் தெற்குப்பகுதியில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் : இலங்கையின் தலைநகர் கொழும்பில் சமீபத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து, கொழும்பு உட்பட இலங்கையின் தெற்குப் பிரதேசங்களில் இருக்கும் தமிழர்கள் பலர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன
  • இலங்கை இனப்பிரச்சனைக்கு அதிகார பகிர்வுத் திட்டம் முக்கியப் பங்காற்றும் - இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் : இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு, நம்பகத்தன்மை கொண்ட அதிகாரப் பகிர்வுத் திட்டம் முக்கியப் பங்காற்றும் என்று இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கருத்து வெளியிட்டிருக்கின்றன
  • இராக்கில் அல்கைதாவின் தாக்குதலில் 14 பேர் பலி : பாக்தாத்துக்கு வடக்கேயுள்ள ஒரு கிராமத்தில் அல்கைதா தீவிரவாதிகள் நடத்தியுள்ள ஒரு தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இராக்கிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
  • இராக் சுனி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு : இராக் சுனி தலைவர் ஒருவரை வீட்டுக் காவலில் வைத்ததாக கூறி இராக் நாடாளுமன்றத்தில் இருக்கின்ற பெரும்பான்மை சுனி அராப் குழுவினர் நாடாளுமன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்துள்ளனர்
  • இருபதாம் உலக எய்ட்ஸ் தினம் : இருபதாம் உலக எய்ட்ஸ் தினமான இன்று, எய்ட்ஸை தடுப்பதில் அதிகரித்து வரும் கவனமின்மை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாக கூறியுள்ள ஐ.நா வின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், எய்ட்ஸை ஒழிப்பதற்கு உலகளாவிய ரீதியில் ஒரு வலுவான தலைமை தேவை எனக் கூறியுள்ளார். தென்னாப்பிரிக்காவின் ஜோஹனஸ்பெர்க் நகரத்தில் எய்ட்ஸ் நிவாரண உதவிக்காக நடத்தப்படும் நிகழ்ச்சியை காண்பதற்காக ஆயிரக்கணக்கானவர்கள் கூடியுள்ளனர்
  • இன்றைய (டிசம்பர் 01 சனிக்கிழமை 2007) "பிபிசி" தமிழோசைச் செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

No comments: