கவிஞர் மீராவுடன் ஓர் நேர்காணல் - அப்துல் ரகுமான்
"அப்துல் ரகுமான் என் வலது கண். சிற்பி என் இடது கண். இன்குலாப் என் இடதுகை. காமராசன் என் வலதுகை. பாலாவும் மேத்தாவும் என் இதயத்தின் இரு பக்கம். வைரமுத்து, தமிழன்பன், சிதம்பரநாதன், முருகுசுந்தரம், அபி, தேனரசன், புவியரசு, தமிழ்நாடன், தணிகைச்செல்வன், இந்திரன், காசிஆனந்தன், நவகவி, கல்யாண்ஜி, கலாப்ரியா, கந்தர்வன், அறிவுமதி, வெ.சேஷாசலம், க.வை.பழனிச்சாமி, நாஞ்சில் ஆரிது, வைகை வாணன், அப்துல்காதர், இக்பால், பஞ்சு, ரவி சுப்ரமணியன், வசந்தகுமார்- இவர்கள் எல்லாம் என் அங்கங்களைப் போல என்னுள் நிறைந்திருக்கிறார்கள். எனவே நான் நான் அல்ல. நான் எல்லோரும் கலந்த அவதாரம். ஆமாம், நான் செத்தாலும் வாழ்வேன்." என்று தனது புத்தகத்துக்கு முன்னுரையில் எழுதிய கவிஞர் மீரா இன்று இல்லை.ஆனால் அவரது சிந்தனைகளும், செயல்களும் இன்னுமிருக்கிறது. என்றென்றும் இருக்கும்.
அவரது நினைவைப் போற்றும் வகையில் அவரது நேர்காணலை இவ்விதழில் தருகிறோம். இனி..அப்துல் ரகுமானும் மீராவும் பேசுகிறார்கள். மீரா காற்று. ஓரிடத்தில் நிற்க மாட்டார். அவரை என் வீட்டில் மூன்று மணி நேரம் அடைத்து வைத்து உரையாடினேன். அதிலிருந்து சில பகுதிகள்....
அவரது நினைவைப் போற்றும் வகையில் அவரது நேர்காணலை இவ்விதழில் தருகிறோம். இனி..அப்துல் ரகுமானும் மீராவும் பேசுகிறார்கள். மீரா காற்று. ஓரிடத்தில் நிற்க மாட்டார். அவரை என் வீட்டில் மூன்று மணி நேரம் அடைத்து வைத்து உரையாடினேன். அதிலிருந்து சில பகுதிகள்....
எப்போது கவிதை எழுத தொடங்கினீர்கள்? அதற்கான தூண்டுதலாக இருந்தது எது? அல்லது யார்?
பள்ளிக்கூட நாட்களிலிருந்தே எனக்கு திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு இருந்தது. அண்ணா, பாரதிதாசன், கண்ணதாசன், மு.வ. ஆகியோரின் எழுத்துக்கள் என்னை எழுதத்தூண்டின. கல்லூரி நாட்களில் சுரதா, தாகூர், கலீல் ஜிப்ரானில் ஈடுபாடு ஏற்பட்டது. என் முதல் கவிதை 'தீபன் குன்றம்' பாரதி பற்றியது. அது 1959 இல் 'தாமரை'யில் வெளிவந்தது. அது மரபுக் கவிதை. எண்சீர் விருத்தம். பாரதிதாசன் பாதிப்பு அதில் தெரியும்.
அறிஞர் அண்ணா உஙகள் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார் என்பதை அறிவேன், அவரோடு எப்படி அறிமுகம் ஆனீர்கள்?
'திராவிட நாடு', 'திராவிடன்', 'முரசொலி', 'தென்றல்', 'இன முழக்கம்', 'மன்றம்' இதழ்களில் என் கவிதைகள் வெளிவந்துகொண்டிருந்தன, எல்லாம் அரசியல் கவிதைகள், வேழவேந்தன் கவிதைத் தொகுதி வெளியீட்டு விழாவில் பேசும்போது - 1964 என்று நினைக்கிறேன். திராவிட இயக்கக் கவிஞர்கள் என்று சிலர் பெயர்களைப் பட்டியலிட்டார். அதில் 'மீ.இராசேந்திரன் என்ற ஒருவர்' என்று என் பெயரைக் குறிப்பிட்டார், 'தெருவோரச் சாக்கடையில் வருமா தெப்பம்' என்ற என் வரியை இருமுறை மேற்கோள் காட்டி எழுதி இருக்கிறார். 'பொங்கல் கொண்டாட வேண்டும்' என்று கூறும் என்னுடைய மற்றொரு கவிதையையும் குறிப்பிட்டிருக்கிறார். திருச்சியில் நடந்த தி.மு.க. மாநாட்டுக்குத் தொண்டர்களை அழைத்து எழுதிய கடிதத்தில், 'சாவா சந்திப்போம் : வாழ்க்கை நமக்கென்ன, பூவா புறப்படுபோம்: புல்லியரைத் தூள் செய்வோம்' என்ற என் கவிதை வரியை எடுத்துக்காட்டி எழுதியிருகிகிறார். ஒருமுறை நேரில் சந்திக்க முயன்றேன். முடியாமல் போய் விட்டது.
கலைஞரோடு எந்த அளவில் தொடர்பு?
"முரசொலி'யில் கவிதை எழுதியிருக்கிறேன். கலைஞர் தலைமையில் கவியரங்கத்தில் பாடியிருக்கிறேன். ஆசிரியர் போராட்டத்தின் போது அவரை பலமுறை சந்தித்திருக்கிறேன். எனக்கு வேறு இடத்தில் வேலைக்காகத் துணைவேந்தராக இருந்த மு.வ.விடம் பரிந்துரைத்திருக்கிறார். 1983-ல் மதுரை எட்வர்ட் ஹாலில் பாரதி நூற்றாண்டு விழாக் கவியரங்கம். அப்போது எனக்குப் பொதுவுடைமைக் கோட்பாட்டுச் சார்பு ஏற்பட்டிருந்தது. கலைஞர் பேச வந்திருந்தார். 'நீ லெனினைப் போல் புரட்சித் தலைவனாக வேண்டும்' என்று பாடினேன். கலைஞர் பேசும்போது 'தான் போனதுமல்லாமல் என்னையும் தூக்கிக்கொண்டு போகப் பார்க்கிறார். அவர் எங்கள் வண்டலில் விளைந்த பயிர் என்பதில் பெருமைப்படுகிறேன். அவர் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும்' என்று கூறினார்.
தி.மு.க.வில் இவ்வளவு தீவிரமாக இருந்த நீங்கள் பொதுவுடைமைக் கொள்கையின் பக்கம் எப்படிப் போனீர்கள்?
தி.மு.க. உணர்வோடு இருந்கபோதே பொதுவுடைமைக்கோட்பாட்டையும் நான் விரும்பினேன். 'ஐனசக்தி' படிப்பேன். பேராசிரியர் தர்மராஐன் தொடர்பால் நான் மார்க்சீயத்தின் பக்கம் போகத் தொடங்கினேன். மேலும் தி.மு.க. திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டது எனக்குப் பெருத்த ஏமாற்றமாக இருந்தது. ஆட்சிக்கு வந்த பிறகு இந்தி எதிர்ப்புப் போன்றவற்றில் ஏற்படுத்திக் கொண்ட சமரசம் இவையெல்லாம் சேர்ந்து என்னைப் பொதுவுடைமைப் பக்கம் தள்ளிவிட்டன.
புதுக்கவிதை எழுதத் தொடங்கியது எப்போது? எதனால்?
கல்லூரி நாட்களிலேயே தாகூர் கவிதைகளை வி.ஆர்.எம். செட்டியார் மொழிபெயர்ப்பில் படித்தபோது வசன கவிதை என்னை ஈர்த்தது. டி.எஸ். எலியட் 'வேஸ்ட் லேண்'டும் படித்தேன். முற்றிலும் புரியவில்லை என்றாலும் இந்தப் புதுமைப் போக்குப் பிடித்திருந்தது. தாகூர் 'காதல் பரிசின் பாதிப்பில் 1959-ல் 'காதல் கனி' என்ற வசன கவிதை எழுதினேன். இதுவே என் முதல் வசன கவிதை முயற்சி. தொடக்கத்தில் புதுக்கவிதையை வெறுத்த பொதுவுடைமையர் தி.க.சி 'தாமரைப் பொறுப்பேற்று (1970) வசன கவிதையை ஆதரித்த பிறகு, அதன் பக்கம் திரும்பினர். கைலாசபதியும் புதுக்கவிதை பற்றிய தம் வெறுப்பை மாற்றிக்கொண்டிருந்தார். 'வானம்பாடி'யும் வந்தது. இந்தக் காலக் கட்டத்தில்தான் முதலில் 'கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்' பிறகு 'ஊசிகள்' எழுதினேன்.
முற்போக்குத் திறனாய்வாளர்கள் பொதுவாகவே பெண்ணைப்பற்றி, காதலைப் பற்றி எழுதினால் கடுமையாக விமர்சிப்பர் 'க.க.கா' எழுதியபோது நீங்கள் இதைப் பற்றி நினைக்கவில்லையா?
நினைத்தேன். ஆனால் இடையிடையே, 'நிலத்தை மீட்கப்போனேன்,' 'நான் ஏங்கல்ஸின் மாணவன்,' 'புரட்சியில் மலர்ந்த சோவியத் பூமியின் கூட்டுப் பண்ணைகளைப் படங்களில் பார்த்து மலைக்கும், ஓர் இந்திய உழவனைப் போல்...'' என்ற வரிகளை இணைத்திருந்தேன். அதனால் முற்போக்கு வட்டத்தில் வரவேற்பே இருந்தது. தி.க.சி. பாராட்டிக் கடிதம் எழுதினார். 'தேசம் தழுவும் பொதுவுடைமைக்கு, வரவேற்புரை எழுதும்போதும், தேகம் தழுவும் எனக்கு-என் தனியுடைமைக்கு வாழ்த்துரை எழுதும் போதும்' என்ற வரியை மட்டும் 'இளவேனில்' கடுமையாக விமர்சனம் செய்து எழுதினார். பொதுவாகப் பொதுவுடைமைச் சார்புப் பத்திரிகைகள் பாராட்டி எழுதின.
நீங்கள் சிவப்பு வட்டத்துக்குள் இருக்கும் கவிஞர் என்பதால்தான் இந்தப் பாராட்டு. இந்த வட்டத்துக்கு வெளியே இருப்பவன் 'க.க.கா' போல ஒரு நூலை எழுதியிருந்தால் கிழித்திருப்பார்கள். சோவியத்தை நீங்கள் ஆழமாக நேசித்தீர்கள். அது சிதறி உடைந்துபோன போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?
என் கனவுலகம் உடைந்ததுபோல் இருந்தது. தி.மு.க. திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்ட போது ஏற்பட்டதுபோல் மனத்தில் கலவரம் ஏற்பட்டது.
சோவியத் சிதைந்ததற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
கார்ப்பச்சேவ் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதுதான் காரணம். மேலும் மக்களுக்கும் மேற்கத்திய கன்ஸ்யூமரிஸத்தில் ஒரு மோகம் இருந்ததும் காரணம்.
இது மட்டும்தான் காரணமா? ஊழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவனாயினும் ஆட்சி, அதிகாரம் என்று வந்துவிட்டால் அவனுக்கும் ஆளும் வர்க்கத்தின் குணங்கள் வந்துவிடும் என்பது என் கருத்து. அளவுக்கு மீறிய அதிகாரத்தைப் பயன்படுத்திச் சில அடிப்படை மனித உரிமைகளை ஒடுக்கினார்கள். உள்ளே குமுறிக்கொண்டிருந்த எரிமலை வெடித்துவிட்டது. இல்லை?
அதுவும் உண்மைதான் சோவியத் காலப்போக்கில் ஒரு 'ப்யூரக்ரேட் ஸ்டேட்'ஆக மாறிப்போய்விட்டது.
'க.க.கா' படிக்கும் போது அது கற்பனையாகத் தெரியவில்லை. சுயஅனுபவத்தின் கனல் தெரிகிறது சரிதானா?
சரிதான். கல்லூரி மாணவனாக இருந்தபோது எனக்கு நேர்ந்த சொந்த அனுபவத்தில் மலர்ந்ததுதான் 'க.க.கா.' இருந்தாலும் அதை வெறும் மானுடக்காதலாகச்சொல்லாமல் ஓர் ஆன்மீகப் பரிமாணமும் தந்திருக்கிறேன். பெண்ணை வெறும் பெண்ணாக அல்லாமல் ஓர் இலட்சிய சமூக அமைப்பின்- பரிபூரணத்தின் குறியீடாகவே கையாண்டிருக்கிறேன்.
பதிப்பாளர் மீராவால் படைப்பாளர் மீராவுக்குப் பாதிப்பு உண்டானதுப் பற்றி நினைத்து வருந்தியதுண்டா?
நான் பணியாற்றிய சிவகங்கை மன்னர் கல்லூரியில் பிரச்சினைகள் உண்டாகிப் போராட்டம் வெடித்தபோது இருமுறை நான் வேலையிலிருந்து நீக்கப்பட்டேன். இதனால் நிரந்தரமாக வேலை போய்விட்டால் என்ன செய்வது என்ற பயம் வந்துவிட்டது. அதனால் நான் விரும்பிய பதிப்புத்துறையைத் தேர்ந்தெடுத்தேன். அதற்கு நீங்களும் காரணம். 'அபி'யின் கவிதைகளை வெளியிடவிரும்பி நாம் சில பதிப்பாளர்களை அணுகியபோது, 'கவிதையா? விற்காதே' என்று அவர்கள் புறக்கணித்ததைக் கண்டு கொதித்துப்போய், 'நாமே பதிப்பித்தால் என்ன?' என்று நீங்கள் கூறினீர்கள். பதிப்பகத்திற்கு 'அன்னம்' என்ற பெயரும் நீங்கள்தான் சூட்டினீர்கள். நீங்களும், நானும் ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு 'அன்னம்' தொடங்கினோம். விளையாட்டாய்த் தொடங்கியது வினையாகிவிட்டது. நான் அதிலேயே மூழ்கிப்போனேன். அதனால் எழுதமுடியாமல் போய்விட்டது. அதனால் எனக்கு வருத்தம் தான். 'அன்னம்' பொருளாதார வகையில் தோல்விதான் என்றாலும் தரமான புத்தகங்களை அழகாக வெளியிட்டவர்கள் என்ற பாராட்டைப் பெற்றிருப்பது ஆறுதலாக இருக்கிறது.
'அன்ன'த்தின் சாதனையாக எதைக்கருதுகிறீர்கள்?
இரண்டு. ஒன்று, புதுக்கவிதைக்குக் களம் அமைத்துக் கொடுத்தது. 'வானம்பாடி' பத்திரிக்கையாக இருந்து புதுக்கவிதைக்குப் பரவலான கவனத்தைப் பெற்றுத்தந்தது. 'அன்னம்', பதிப்பகமாக இருந்து அதே பணியைச் செய்தது. 'கவிதை எனறால் விற்காது' என்ற கருத்தை உடைத்தது. இரண்டு, கரிசல் இலக்கியத்தைப் பிரபலப்படுத்தியது. கி.ரா. மட்டுமல்லாமல் இன்னும் 5, 6 பேர்களுடைய நூல்களை அன்னம் வெளியிட்டது.
'அன்னம் விடு தூது' ஒரு நல்ல பத்திரிக்கையாக வந்துக்கொண்டிருந்ததே. ஏன் நிறுத்தினீர்கள்?
சிற்றிதழாக இல்லாமல் 'மிடில் மேகசினா'கக் கொண்டுவர வேண்டுமென்று நினைத்தேன். ஏஜென்டுகள் பணம் தராமல் ஏமாற்றிவிட்டார்கள். விளம்பரங்களும் பெற முடியவில்லை. அதனால் கையைக் கடிக்க ஆரம்பித்தது. தாங்க முடியாது என்ற நிலை வந்தபோது வேறு வழியின்றி நிறுத்திவிட்டேன்.
கவிஞர், உரையாளர், கல்லூரி ஆசிரியர், பத்திரிக்கை ஆசிரியர், ஆசிரியர் போராட்டத்தளபதி, பதிப்பாளர், அச்சக உரிமையாளர் என்று பல பணிகளில் முத்திரை பதித்திருக்கிறீர்கள். இன்னும் நிறைவேறாத ஆசை ஏதேனும் உண்டா? ஏதேனும் வருங்காலத்திட்டம்?
நிரந்தரமாக நிற்கும்படி ஒரு நல்ல இலக்கியம் படைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. வசனகவிதையில் நாடகமாகவோ, காவியமாகவோ ஒரு நூல் எழுதும் எண்ணம் இருக்கிறது. அதிகமாக படைக்காமல் போனதை இதன் மூலம் ஈடு செய்ய விரும்புகிறேன்.
நன்றி: கவிக்கோ.
No comments:
Post a Comment