அடுத்த முதல்வர்? பதற்றத்தில் ஸ்டாலின்
திரு. மு. கருணாநிதிக்குப் பிறகு, திமுக-வின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்காக 'ஜனநாயக' முறைப்படி கட்சிக்குள் வளர்க்கப்பட்டவர் அவரது மகன் திரு. ஸ்டாலின். திரு. வை. கோபால்சாமியின் வெளியேற்றத்துக்குப் பிறகு, கட்சிக்குள் ஸ்டாலினுக்கு முழு ஆதரவு இருப்பதுபோல் தெரிந்தாலும், கருணாநிதியின் குடும்பத்துக்குள் இந்தப் பிரச்சினை இன்னும் 'நீருபூத்த நெருப்பாகவே' இருப்பது அரசியல் தெரிந்தவர்கள் அறிந்ததுதான். திமுக தலைவரின் குடும்பப் பிரச்சினை, உச்ச கட்டத்தில் இருக்கும் இந்தச் சூழ்நிலையில், திமுக இளைஞர் அணியின் மாநில மாநாடு டிசம்பர் 15, 16-ம் தேதிகளில் 'அழகிரி நாட்டின்' ஒரு பகுதியான திருநெல்வேலியில் நடைபெற இருக்கிறது. விஜயகாந்த், சரத்குமார் போன்ற சினிமா நட்சத்திரங்கள் ஆரம்பித்த புதிய கட்சிகளை நோக்கி இளைஞர்கள் செல்வதைத் தடுப்பதற்காகவும், தமிழக இளைஞர்கள் திமுக-வின் பக்கமே இருக்கிறார்கள் என்பதை நிரூபிப்பதற்காகவுமே இந்த மாநாடு என்று உதட்டளவில் அறிவிக்கப்பட்டாலும் கூட, ஒட்டுமொத்த திமுக-வும் தனது பக்கமே இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்காகவே திரு. ஸ்டாலினால் இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்பது அரசியல் ஆய்வாளர்களின் கணிப்பு. உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருக்கும், இளைஞர் அணிச் செயலாளர் ஸ்டாலினின் நேரடி மேற்பார்வையில் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அழகிரியின் ஆதிக்கம் பரவிக் கிடக்கும் தென் மாவட்ட திமுக நிர்வாகிகளை நேரில் சந்தித்து வருகிறார் ஸ்டாலின். அமைச்சர்கள் தினம் தினம் மாநாட்டு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்து வருகிறார்கள். ஆனால் 'அனா' அழகிரியோ இன்றுவரை அந்தப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் நடக்கும் இந்த மாநாட்டில் என்ன எதிர்பார்க்கலாம்? இதோ சில ஊகங்கள்: - வீரபாண்டி ஆறுமுகம் போன்ற ஒரு சிலரைத் தவிர மற்ற இரண்டாம் கட்டத் தலைவர்கள், ஸ்டாலினின் தலைமையை ஏற்கத் தயாராக இருப்பதாக வெளிப்படையாக முழங்குவார்கள் - 'இளைஞர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதாகச்' சொல்லி, இளைஞரணிப் பொறுப்பிலிருந்து ஸ்டாலின் விலகுவார் - சூழ்நிலைகள் சாதகமாக இருப்பதாகத் தெரிந்தால், திமுக-வின் அடுத்த தலைவராக திரு. ஸ்டாலினை கலைஞர் அறிவிப்பார் - 'இளைஞர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கும்' அதே காரணத்தைச் சொல்லி, முதல்வர் பதவியிலிருந்து தான் விலகத் தயார் என கலைஞர் அறிவிப்பார் - குறைந்த பட்சம் 'துணை முதல்வர்' பதவி ஸ்டாலினுக்கு வழங்க உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் ஆட்சி அதிகாரத்தில் இருந்துகொண்டு நடத்துவதால், இந்த மாநாடு வெற்றி பெறுவதில் எந்தத் தடங்கலும் இல்லை. ஆனால் தனது தந்தை தலைவராக இருக்கும் திமுக-வில் தனக்கும் "பங்கு" உண்டு என்பதில் மிக உறுதியாக இருக்கிறார் 'அஞ்சா நெஞ்சன்' அழகிரி. ஒன்றை அடைவதற்காக, 'எதையும்' செய்யத் தயாராக இருக்கும் தனது சகோதரர் திரு. அழகிரியை சமாளித்து கட்சியையும், ஆட்சியையும் ஸ்டாலின் தனதாக்கிக் கொள்வாரா? முடிவுகளை அறிய ஆவலுடன் காத்திருக்கிறது உலகத் தமிழினம்!
No comments:
Post a Comment