மலேசிய தமிழர்கள் மீதான சில குற்றச்சாட்டுகள் விலக்கப்பட்டன
மலேஷியாவில் தாங்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாக சமீபத்தில் போராடிய இந்திய வம்சாவழித் தமிழர்களில் 31 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. தற்போது அவர்கள் மீதான கடுமையான குற்றச்சாட்டுக்கள் சில நீக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த 31 பேரில் மாணவர்களான 5 பேர் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் விலக்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் அவர்கள் சார்பிலான சட்டத்தரணியான சிவநேசன். அதேவேளை ஏனைய 26 பேரைப் பொறுத்தவரை அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளில் முக்கிய குற்றச்சாட்டான, கொலைக் குற்றச்சாட்டு விலக்கப்பட்டு விட்டதாகவும், ஏனைய இரண்டு குற்றச்சாட்டுகளான, சட்டவிரோதமாகக் கூடியமை மற்றும் பொதுச் சொத்துக்கு பங்கம் விளைவித்தமை ஆகியவற்றை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் இவற்றுக்கான தண்டனைகள் எதிர்வரும் 27 ஆம் திகதி நீதிமன்றம் கூடும் போது அறிவிக்கப்படும் என்றும் சிவநேசன் தெரிவித்துள்ளார். இதற்கிடையே இந்தப் போராட்டத்தை நடத்திய மலேசிய இந்து உரிமைகள் நடவடிக்கைக் குழுவின் முக்கிய 5 உறுப்பினர்கள் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்பில் ஒரு ஆட்கொணர்வு மனுவையும் தாம் தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
No comments:
Post a Comment