டெல்லி மதுபானக் கடைகளில் பெண்கள் பரிமாற நீதிமன்றம் அனுமதி
இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள மதுபான விடுதிகள் மற்றும் உயர்தர உணவகங்களில், வாடிக்கையாளர்களுக்கு மது பரிமாறுவதற்கு பெண்களை பணியில் அமர்த்துவதற்கு இந்திய உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. டெல்லியில் மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்களில், மதுபானம் பரிமாறுவதற்கான பணியில் பெண்களை ஈடுபடுத்தக்கூடாது. அதேபோல், 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களை மட்டுமே அந்தப் பணியில் அமர்த்த வேண்டும் என்ற சட்டம் அமலில் இருந்தது. உணவு விடுதி உரிமையாளர் சங்கம் அந்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அதே நேரத்தில், அந்தச் சட்டம் நியாயமானதுதான் என்று கர்க் என்பவர் அந்த வழக்கில் தன்னையும் இணைத்துக் கொண்டார். அதை விசாரித்த உயர்நீதிமன்றம், அந்தச் சட்டம் செல்லுபடியாகாது என்று 2004-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் கர்க். அதே நேரத்தில், 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களைத்தான் பணியில் அமர்த்த வேண்டும் என்ற விதியை எதிர்த்து உணவு விடுதி உரிமையாளர் சங்கம் மேல்முறையீடு செய்தது. அந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பில், பெண்களை மதுபானம் பரிமாறுவதற்கான பணியில் அமர்த்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும், உயர்நீதிமன்ற உத்தரவு சரிதான் என்றும் தீர்ப்பளித்தது
No comments:
Post a Comment