இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முன்பாக விடுதலைப் புலிகளை வீழ்த்த்த வேண்டும் : இலங்கை ஜனாதிபதி
இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முன்னதாக விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக வெற்றிகொள்வது இன்றியமையாதது என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையின் தெற்கே மாத்தறையில் நடைபெற்ற சுனாமி நினைவு நிகழ்வு ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுதான் காணப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் ஆனாலும், அதற்கு முன்னதாக நாட்டில் பயங்கரவாதம் ஒடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கப்பம் செலுத்தும் பாணியிலான சமாதானம் தமக்குத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கையில் சுனாமி மீள்கட்டுமானப் பணிகள் சிறப்பாக நடக்கின்ற போதிலும், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைத்தீவு போன்ற சில இடங்களில் இந்தப் பணிகள் இன்னமும் பூர்த்தியடையவில்லை என்றும் ராஜபக்ஷ கூறினார். சர்வதேச சமூகம் இலங்கை அரசை புறக்கணித்துவருவதாக கூறப்படுவது தவறு என்றும், வழமையை விட இந்த வருடம் அதிக சர்வதேச உதவி இலங்கைக்குக் கிடைத்துள்ளதாகவும் ராஜபக்ஷ தெரிவித்தார்
No comments:
Post a Comment