பறவைக் காய்ச்சல் நோய் கட்டுப்படுத்தப்படும்
அன்புமணி : ராமதாஸ்இந்தியாவில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்கிய மேற்குவங்க மாநிலத்தில் அந்த நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இன்னும் சில தினங்களில் முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என்றும் இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் 13 மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் தாக்கியிருப்பதாகவும், திங்கட்கிழமை வரை 21 லட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், தொள்ளாயிரத்துக்கும் மேற்பட்ட குழுக்கள் இந்தப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் அது கட்டுப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இதனிடையே, கோழிகளைக் கொல்வது தொடர்பாக பெரும் முறைகேடுகளும், அரசியல்வாதிகளின் நெருக்குதல்களும் அதிகரித்திருப்பதால், மேற்கு வங்க மாநில சுகாதாரம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை ஊழியர்கள் கோழிகளை கொல்வதை நிறுத்திவிட்டதாக பிபிசியின் கொல்கத்தா செய்தியாளர் தெரிவிக்கிறார். ஒரு இடத்தில் ஐந்து கோழிகளைக் கொன்றால், ஐம்பது கோழிகளைக் கொன்றதாக சான்றிதழ் கொடுக்குமாறு தாங்கள் நிர்பந்திக்கப்படுவதாக அவர்கள் புகார் கூறுகின்றனர். அதிக எண்ணிக்கையிலான கோழிகளைக் கொன்றதாகக் கணக்குக் காட்டினால் அதற்கான இழப்பீட்டுத் தொகையும் அதிகமாகக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சில இடங்களில் பெரும் நஷ்டம் ஏற்படும் என்பதால், கிராம மக்களே கோழிகளைக் கொல்வதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.
No comments:
Post a Comment