August 27, 2008

பழ.நெடுமாறனுக்கு கலைஞர் கவிதைக் குத்து

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தினமணி பத்திரிகையில் நேற்று (ஆகஸ்ட் 26) எழுதிய ஒரு கட்டுரையில், முதல்வர் குறித்து விமர்சித்திருந்தார். காதோரம் ஒரு முடி நரைத்ததற்கே தசரதன் ராமனை மன்னராக்கினான். ஆனால் கருணாநிதியோ இன்னும் முதல்வர் பதவியை விடாமல் பிடித்திருக்கிறார் என்று அதில் நெடுமாறன் தாக்கியிருந்தார். அதற்குப் பதிலடியாக கருணாநிதி கவிதை புனைந்துள்ளார்.

சமீப காலமாக முதல்வர் கருணாநிதியின் கவிதைகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. டி.கே.ரங்கராஜனை மறைமுகமாக சாடி கவிதை பாடியிருந்தார் கருணாநிதி.

இந்த நிலையில் பழ. நெடுமாறனை மிகக் கடுமையாக சாடி கவிதை எழுதியுள்ளார் கருணாநிதி. அதற்குப் பதிலடியாக முதல்வரின் கவிதை இதோ...


விடுதலைப் போர் நாயகராம்

விருதுநகர் மாவீரர் காமராஜரின்

விசுவாசமிக்க சீடர் என்று

விரிவுரைகள் பல நிகழ்த்தி; பின்னர்

வேறு கொடி பிடிப்பேன் என்று - அவர்

விலாவில் குத்திய விபீஷ் ஆழ்வார்!

அண்ணாவின் அணிவகுப்பில் நானும் ஒருவன் என நவின்று

கண்ணான அண்ணாவின் கழுத்தறுக்க முனைந்திட்ட சுக்ரீவன்!

மூப்பனாரின் காலடியே மோட்சமென்றும் சொர்க்கமென்றும்

முகஸ்துதி பல செய்து மோசடியால் புதுக்கொடி ஏற்றிவிட்ட எட்டப்பன்!

குன்றணைய குமரி அனந்தரின் புகழ் மறைக்க

குறுக்குச் சுவர் கட்டி, தடை மீறிய தமிழ் ஈழப் பயணமென

தவிக்க விட்டு கடல் நடுவே அவரை;

தான் மட்டுமே தப்பி வந்த ஆஞ்சநேயன்!

வலியின்றி புலிக் கூட்ட முதுகினிலே

குத்திக் கொண்டே பணம் பறிக்கும் இனத் துரோகி!

தரணிதனில் பல புராணங்கள் இருக்க

தசரதன் புராணத்தில் இவர் இறங்கி

அவன் காதோரம் நரைத்த மயிரின் கதையை -

தன்கட்டுரைக்கு விதையாக்கி

விஷத்தைக் கக்கியிருப்பததுதான் பெரும் விந்தை!

சீராக்கவே முடியாத சீழ் பிடித்த சிந்தை!

கூராக்கவே இயலாத மூளையிலே விஷம் ஒரு மொந்தை!


என்று மிகக் கடுமையாக தாக்கியுள்ளார் கருணாநிதி.


(முதல்வரின் அடுத்த குத்து யாருக்கோ?)


No comments: