Showing posts with label நன்றி : சற்றுமுன். Show all posts
Showing posts with label நன்றி : சற்றுமுன். Show all posts

July 29, 2007

முதல்வர் கருணாநிதியின் மகனும், நடிகருமான மு.க.முத்து உடல் நலக்குறைவுக் காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கருணாநிதிக்கும், முதல் மனைவி பத்மாவதிக்கும் பிறந்த ஒரே மகன் மு.க.முத்து. இளம் வயதில் திரைப்படத்தில் நடிக்க விரும்பிய மு.க. முத்து, முரசொலி மாறனின் பூம்புகார் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட "பிள்ளையோ பிள்ளை' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அப்போது, எம்.ஜி.ஆருக்கு இணையாக மு.க. முத்துவை களம் இறக்க கருணாநிதி முயற்சிப்பதாக கூறப்பட்டது. அதன் பின்பு, "பூக்காரி', "சமையல்காரன்', "அணையா விளக்கு' உள்ளிட்ட சில படங்களில் அவர் நடித்தார். அதன்பின்பு, திரைத்துறையில் இருந்து விலகினார். அரசியல் வானில் தனது தந்தை மின்னினாலும், அதன் கவர்ச்சியில் ஈர்க்கப்படாமல் ஒதுங்கியே இருந்தார். 1991-96 ஆண்டுகளில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அதிமுகவில் சேர்ந்தார் மு.க.முத்து. அப்போது, அவருக்கு ஜெயலலிதா ரூ. 5 லட்சம் நிதி வழங்கினார். அதிமுகவில் இணைந்தாலும், கட்சிப் பணியில் தீவிரமாக ஈடுபடாமல் இருந்தார். மு.க.முத்துவின் மகன் அறிவுநிதி, டாக்டராக உள்ளார்.
உடல்நலக் குறைவு: கடுமையான காய்ச்சல் காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சனிக்கிழமை அதிகாலை மு.க.முத்து சேர்க்கப்பட்டார். தகவல் அறிந்தவுடன் காலை 10.30 மணிக்கு முதல்வர் கருணாநிதி மருத்துவமனைக்கு நேரில் சென்று மு.க.முத்துவை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். அப்போது, அமைச்சர் ஆற்காடு வீராசாமி, டாக்டர் அறிவுநிதி, அவரது மனைவி பூங்கொடி, தங்கை தேன்மொழி ஆகியோர் உடன் இருந்தனர். நிகழ்ச்சிகள் ரத்து: மு.க.முத்துவின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதால் முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை மாலையில் இருந்து தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்தார். மு.க. முத்துவின் அருகிலேயே இருக்க வேண்டியுள்ளதால் நிகழ்ச்சிகளில் முதல்வர் கருணாநிதி பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என எழும்பூர் நீதிமன்ற விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

July 06, 2007

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இடம்பெறுமா??

இன்று 7.7.2007 தினத்தன்று 7 அதிசயங்கள் பற்றிய தகவல் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது! உலகின் 7 அதிசயங்களாக எகிப்து நாட்டை சேர்ந்த பிரமீடு உள்ளிட்ட 7 இடங்கள் கிரேக்க அறிஞரால் பல ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இவற்றில் 6 இடங்கள் இப்போது இல்லை. இந்நிலையில் புதிய கட்டடக்கலை வல்லுனர் குழு உலகின் 7 புதிய அதிசயங்களை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதையடுத்து உலகெங்கிலும் உள்ள மக்கள், மொபைல் போன் மூலமாகவும், ஈமெயில் மூலமாகவும் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகிறார்கள். ஆக்ராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால், அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலை, ஈபிள் டவர் உள்ளிட்ட 21 சின்னங்கள் இப்போதைய பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இவற்றில் 7 அதிசயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று 7.7.2007 அன்று அறிவிப்பு வெளியிடப்படுகிறது. லிஸ்பன் நகரில் இந்த அறிவிப்பு வெளியாகவுள்ளது. உலகின் 7 அதிசயங்களை அறிவதற்காக உலகமக்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். மதுரையில் உள்ள புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் இதில் இடம்பெறவேண்டும் என்பது மதுரை மக்களின் எதிர்பார்ப்பு. ஏன்? ஒவ்வொரு தமிழனின் எதிர்பார்ப்பு! இதற்காக லட்சக்கணக்கான மக்கள் இணையதளத்தில் வாக்களித்தது நினைவிருக்கலாம்.

July 05, 2007

அன்றல்ல, இன்றல்ல "தமிழன்" என்றுமே இளிச்சவாயன்தான்

தமிழ்த் திரையுலகில் ஒரு படத்தால் கடந்த 3 மாதங்களாக பீதி ஏற்பட்டது. இதனால் மற்ற படங்களைத் திரையிடுவதில் பாதிப்பு நீடிக்கிறது என "சிவாஜி' பற்றி நடிகர் நாசர் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நியூ டவுன் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற நாசர் பேசியதாவது: தமிழ் சினிமாவில் வன்முறை குறித்து ஆய்வு செய்யப்பட்டால் குறைந்தபட்சம் 1,000 பக்கங்களுக்கு மேல் எழுதலாம்.

சுதந்திரப் போராட்டக் காலத்தைவிடவும் மிக முக்கியமான ஒரு நெருக்கடியில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்; அதிகமான பிரச்னைகள் நம்மைச் சூழ்ந்திருக்கின்றன. ஆனால், இங்கு சினிமா என்பது வியாபாரம் மட்டுமே. பணத்தைப்போட்டு பணத்தை அள்ளுவதற்கான ஒரு கருவி.

ஒரு சினிமா முழுமையாக கலைஞனுடைய ஆளுமைக்குள் வரும்போதுதான் அவனால் சாதிக்க முடியும். சில பேர் சேர்ந்து இதற்காக முயற்சி செய்து வருகிறோம். நான் ஒட்டுமொத்த சினிமா உலகத்தைப் பிரதிபலிப்பவன் அல்லன். இதற்கு மாறாக ஏதேனும் செய்தால் என்னை சாதியைவிட்டு (சினிமா) விலக்கி வைத்து விடுவார்கள்.

சிறந்த படங்கள் கேன்ஸ் விருது பெற வாய்ப்புள்ளது. விருதுக்காக படம் எடுக்க முடியாது. நல்ல படமாக இருந்தால் விருது கிடைக்கும். 'அவதாரம்' நல்ல படம் என்று என்னால் தைரியமாக சொல்ல முடியும். ஆனால், அந்த ஆண்டு சிறந்த படத்துக்கான விருதை 'அருணாசலம்' படத்துக்கு கொடுத்தார்கள். சொந்த மண்ணிலேயே தரமான படம் மதிக்கப்படவில்லை. அதைப்பற்றி நாம் யாரும் பேசவில்லை. ஆனால், ஆஸ்கரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.

கடந்த 3 மாதங்களாக ஒரு படம் வருகிறது என்று ஏற்படுத்தப்பட்ட பீதியால் மற்ற படங்களை வெளியிட முடியவில்லை. அந்தப் படம் வெளியான பின்னரும் இதுவரை எந்த படத்தையும் திரையிட முடியவில்லை.

தமிழ் சினிமாவில் நடிப்பதையே விட்டுவிட்டோம். பாதி நேரம் சண்டை, மீதி நேரம் பாட்டு... நடிப்பதற்கு ஏது நேரம்?

சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பற்கு உலகளாவிய கோட்பாடு இருகிறது. உலக அளவில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சினிமா கோட்பாடுகள் எல்லாம் பொய்த்து - தோற்றுப் போகக்கூடிய ஓர் இடம் தமிழ் சினிமாதான்.