Showing posts with label நன்றி : மரத்தடி. Show all posts
Showing posts with label நன்றி : மரத்தடி. Show all posts

November 19, 2007

உயிர்வலி - சிறுகதை

மரத்தடி.காம் -ல் பிரசுரமானது http://maraththadi.com/article.asp?id=2923

யம்மா! தாங்கமுடியலம்மா, கடவுளே! எதுக்காக இன்னும் இந்த உசுர வச்சு, இப்படிச் சித்ரவதைப் படுத்தறப்பா? “ஏம்மா! ஒரேயடியாப் போய்ச்சேர்ற மாதிரி எதாச்சும் மாத்திரை மருந்து இருந்தா குடும்மா, ஒனக்குப் புண்ணியமாப் போகும்” என்று முதுகுத்தண்டில் உள்ள பிரச்சினையால், மாதக்கணக்கில் படுத்த படுக்கையாக இருந்த தணிகாசலம் நர்ஸ் வந்தபோது புலம்பியதைக் கேட்டுத் திடுக்கிட்ட பக்கத்துப் படுக்கைக்காரர் ராமசாமி, “அப்படியெல்லாம் சொல்லாதிங்க, வயசாயிட்டாலே ஒடம்புக்கு நோவு வர்றதுதான். எப்படிப் பிறப்புன்னு ஒண்ணு இருந்தா இறப்புன்னு ஒண்ணைத் தடுக்கமுடியாதோ! அது மாதிரித்தான் வயசாயிட்டா நம்ம ஒடம்புக்கு வர்ற நோவுகளையும் தடுக்க முடியாது” என்று சொன்னார். அதைக்கேட்ட தணிகாசலம், “நீங்க ரொம்ப நாளா இங்க இருக்கீங்களோ?” என்றார்.



“ஆமா! எனக்கு நுரையீரல்ல பிரச்சினை, அதுல ஒரு திரவம் தேங்கி இருக்கு, சரியா உறுப்புக்கள் வேலை செய்யாததால அத தினமும் குழாய் வழியாத்தான் எடுக்கணும். நாளடைவில சரியாயிடும்-னு டாக்டர் சொல்லியிருக்கார், என்ன... ஒண்ணு… அந்தத் திரவம் எடுக்கறப்ப, தினமும் ஒரு மணிநேரம் ஒக்காந்திருக்கலாம், பாவம்! ஒங்களால அது முடியாம படுத்த படுக்கையா இருக்கறதால கொஞ்சம் செரமமா இருக்கும். ஆனாலும் நான் ஒக்காந்திருக்குற ஒரு மணி நேரமும், அந்த திரவம் வெளில வர்றதுக்குள்ள போதும் போதும்-னு ஆயிடுது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான வேதனை. எல்லாம் நல்லதுக்குத்தான், கூடிய சீக்கிரமே நாம ரெண்டுபேருமே குணமாகி வீட்டுக்குப் போயிரலாம், ஒண்ணும் கவலப்படாதீங்க தணிகாசலம்” என்று ஆறுதல் வார்த்தை கூறியது தணிகாசலத்துக்குச் சற்றுக் காயத்தில் மருந்து போட்டது போன்று இருந்தது.



இருவருமே நெடுநாட்களாக அந்த மருத்துவமனையில் படுத்த படுக்கையாகவே இருக்கக்கூடிய நோயாளிகள். தங்களது இளமைக்காலங்கள் பற்றியும், சந்தோசமான சம்பவங்கள் பற்றியும் பேசிக்கொள்வதுண்டு. தணிகாசலம், தான் மிலிடரியில் இருந்தபோது ஏற்பட்ட சில சுவாரஸ்யமான அனுபவங்களை ராமசாமியிடம் பகிர்ந்து கொள்ளும்போது ஒரு புத்துணர்ச்சி கிடைப்பதுபோல் உணர்வார்.



ராமசாமி அந்த அறையில் இருந்த ஒரே ஒரு ஜன்னலோரத்தில் படுத்திருப்பதால், அவர் அமர்ந்திருக்கும் அந்த ஒரு மணிநேர அந்திசாயும் மாலைப்பொழுதுகளில், வெளியில் நடக்கக்கூடிய நிகழ்வுகளை மிகத்தெளிவாகத் தணிகாசலத்துக்கு விளக்குவார். சொல்லப்போனால் ஒவ்வொரு நாளும் தணிகாசலம் வாழ்வதே அந்த ஒரு மணிநேரம்தான்.



“அதோ பக்கத்துல பச்சைப்பசேல்-னு உயரமான மலை உச்சியிலேருந்து பால்போல வெண்மை நிறத்துல ரம்மியமான ஒரு நீர் வீழ்ச்சி கொட்டுது. அதுக்குக்கீழ பாத்தா, அழகான தடாகம் ஒண்ணு இருக்கு, அதுல தாமரையும் அல்லியும் பூத்துக்குலுங்குது. அன்னங்களும், வாத்துகளும், இன்னும் ஏதேதோ வண்ண வண்ணப்பறவைகளெல்லாம் நீந்தி விளையாடுது. பக்கத்துல உள்ள பூங்காவுல அழகழகான மலர்களும் அதுலதேனெடுக்குற வண்ணத்துப்பூச்சிகளும், தேன்சிட்டுகளும்கூட இங்கேருந்து கண்ணுக்குத் தெளிவாத் தெரியுது. அங்கே குழந்தைங்கெல்லாம் ஓடி ஆடி விளையாடுறாங்க. அங்கங்கே இருக்குற நாற்காலிகள்ல இளம் காதல் ஜோடிங்க ஊடலும் கூடலுமா ஒக்காந்து பட்டும் படாமக் கொஞ்சிக் கொலாவிக்கிட்டுருக்காங்க. நம்மமாதிரிக் கொஞ்சம் வயசானவங்க காலார நடக்கிறாங்க. இதோ ஓய்வெடுக்கச் சூரியன்கௌம்பிட்டதால மலைக்குக் கீழ இருக்கற எல்லா வீடுகள்லயும் மின்விளக்குப் போட ஆரம்பிச்சுட்டாங்க. அந்த அருவியோட அழகும், அதுக்குக்கீழ இருக்கற வீடுகளும், அழகழகான மின்விளக்குகளும்..அப்பப்பா! பார்க்கவே மனசுக்கு எவ்வளவு இதமாக இருக்கு தெரியுமா? இதோ வலதுபுறம் ஏதோ ஒரு ஊர்வலம் வருது, நல்ல செவிக்கினிய மங்களகரமான வாத்தியங்கள் முழங்க சீருடை அணிஞ்சபடியே நெறய பேருவரிசையாக மிலிடரி பெரேடு போல உணர்ச்சிப்பூர்வமாக முகத்துல சந்தோசம் பொங்க நடந்து வர்றாங்க. ஒரு வேளை திருமண ஊர்வலமாக இருக்குமோ” என்று வெளியில் உள்ள பல நிகழ்வுகளை வர்ணித்துச் சொல்லிக்கொண்டிருந்தார் ராமசாமி.



“ராமசாமி! நீங்க சொல்றத நான் முழுசாப் இந்தப் படுக்கையிலிருந்து பாக்கமுடியாட்டியும், என்னால அத உணரமுடியுது, அந்த பெரேடுச் சத்தம் என்னோட காதுல விழாட்டியும், நான் மிலிடரில இருக்கறப்ப நடந்த அந்த பெரேடையெல்லாம் நெனச்சுப் பாத்துப் பூரிச்சுப்போறேன்” என்று ஆசுவாசப்படுத்திக்கொண்டார்.



வழக்கம்போல இரவு நெடுநேரம் பேசிக்கொண்டிருந்த இருவரும் அப்படியே உறங்கிப்போனார்கள். மறுநாள் காலை மருந்து மாத்திரைகள் கொடுக்க வந்த நர்ஸ் ராமசாமியை எழுப்பினாள். எந்த அசைவும் இன்றி தூக்கத்திலேயே நிம்மதியாக அவர் உயிர் பிரிந்திருந்தது. நர்ஸ் மேற்கொண்டு ஆகவேண்டியதைச் செய்து, உடலை அந்தப் படுக்கையிலிருந்து அப்புறப்படுத்த ஏற்பாடு செய்தபோது, செய்தி அறிந்த தணிகாசலம் உடைந்து போனார். அவருக்கென்று ஆறுதலாகப் பேசிக்கொண்டிருந்த ராமசாமியின் பிரிவு அவரை வெகுவாகப் பாதித்தது.



அடுத்தநாள் நர்ஸிடம், “என்னை அந்த ராமசாமி இருந்த ஜன்னலோரத்துல உள்ள படுக்கைக்கு மாத்துங்களேன்” என்று கேட்டதற்கிணங்க அவரை அங்கு மாற்றினர். ராமசாமி நினைவாகவே இருந்த தணிகாசலம் அவர் வெளியே பார்த்து ரசித்துத் தனக்குத் தினம் தினம் விளக்கும் அந்த அழகுமிகு காட்சியைப் பார்க்க எண்ணி, மிகவும் சிரமப்பட்டு ஒரு புறம் திரும்பித் தலையை லேசாகத் தூக்கி ஜன்னல் வழியாகப் பார்த்தார். ஒரு உயர்ந்த கட்டிடத்தின் வெள்ளைச் சுவரைத்தவிர, ராமசாமி விளக்கியதுபோல் அங்கு வேறு எதுவுமே இல்லை. குழம்பிப் போனவர் நர்ஸிடம் இதுவரை நடந்தவற்றையெல்லாம் கூறி, விளக்கம் கேட்டபோது அந்த நர்ஸ் சொன்னதைக்கேட்டு அவரால் கண்ணீர் சிந்தாமல் இருக்கமுடியவில்லை.



“ராமசாமிக்கு ரெண்டு கண்ணும் தெரியாதுங்க, அவரால அந்தச் சுவரைக்கூடப் பாக்கமுடியாது, நீங்க படுத்த படுக்கையா இருந்து வேதனைப்படுறத உணர்ந்த அவரு, ஒங்கள உற்சாகப் படுத்தறதுக்காகவும், வேதனை தெரியாம இருக்கறதுக்காகவும் தினம் தினம் அப்படிச் சொல்லியிருக்காரு. எங்க எல்லாருக்குமே அவரால எந்தத் தொந்தரவும் இல்ல, அருமையான பேஷன்ட், மரணம் கூட அவருக்கு வலி தெரியாம தூக்கத்துலயே வந்துருச்சு பாத்தீங்களா” நர்ஸும் சேர்ந்து துக்கம் தொண்டையடைக்கக் கண்ணீர் விட்டாள்.

நவநீ

October 31, 2007

"நான் நினைக்கிறததான் எடுப்பேன்" - 'கற்றது தமிழ்' திரைப்படத்தின் இயக்குநர் ராமின் பேட்டி

எண்பது, தொண்ணூறுகளில் எஸ்.பி.முத்துராமன்களும், ஜெகன்னாதன்களும் வணிகப்படங்களை கொளுத்திப் போட்டுக் கொண்டேயிருக்க, மகேந்திரன், பாலுமகேந்திரா வகையறாக்களிடமிருந்து வெளிப்படும் கலாபூர்வமான மென்மையான படங்களின் வரவு அபூர்வமாகத்தானிருந்தது. இன்றைய சூழ்நிலையிலும் வணிகப்படங்களின் ஆதிக்கத்தில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லையெனினும் சேரன், பாலா, அமீர், பாலாஜி சக்திவேல், வசந்தபாலன் என்று நம்பிக்கை தரக்கூடிய இயக்குநர்கள் தட்டுப்பட்டு அவர்களின் படைப்புகளும் பொருளாதார ரீதியாக ஒரளவிற்கு வெற்றிகரமாகவே பயணிக்கிறது. அந்தவரிசையில் இன்னொரு இயக்குநராக 'கற்றது தமிழ்' இயக்குநர் ராம்- ஐ சொல்லாம் என்று நினைக்கிறேன். இவரின் படத்தை இன்னும் நான் பா¡க்கவில்லை. பத்திரிகைகளின், நண்பர்களின் விமர்சன ஆரவாரங்கள், பரபரப்புகள் போன்றவைகள் அடங்கிய பின்பே "நல்லபடம்" என்று சுட்டப்படுபவைகளை நான் பார்ப்பது வழக்கம். புதியபார்வை (நவம்பர் 1-15) இதழில் இவரின் ஆரோக்கியமான 'திமிருடன்' கூடிய உரையாடல் பதிவை வாசித்த போது மகிழ்வாக இருந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள உத்தேசம். சற்று நேரம் செலவு செய்து படித்து விடுங்கள். (நன்றி: புதிய பார்வை) இயக்குநர் ராம் உடன் புதிய பார்வைக்காக தொலைபேசியில் நடந்த உரையாடல்..........
"ஹலோ ராம்... எப்படியிருக்கீங்க... புதிய பார்வைக்காக கொஞ்ச நேரம் பேசலாமா?"
"பத்து நிமிஷம் போதும் இல்லையா?.. உங்க பேர் என்ன சொன்னீங்க?"
"பரசுராம்"
"ஓ.. பரசுராம்.. கேள்விப்பட்ட மாதிரி இருக்குது. எங்கேயாவது பாத்திருக்கமா?"
"ஆமாம். படம் வெளிவர்றதுக்கு முன்னால, ஒரு ஹோட்டல்ல மதிய சாப்பாட்டுக்குப் பக்கத்தில் பக்கத்தில் உட்கார்ந்திருந்தோம்"
" சரி. கேள்வி கேளுங்க"
"எப்படி இந்தப் படத்தை ஆரம்பிச்சீங்க?"
"எனக்கு வசதியா எந்தப் படம் இருக்குமோ அதைத்தான் என்னால எடுக்க முடியும்"
"எப்படி இருக்கு படத்துக்கு இருக்கற வரவேற்பு?"
"நான் அதைப் பத்தி எல்லாம் கவலைப்படல. படம் எடுத்தாச்சு. அவ்வளவுதான். பாலுமகேந்திரா சார் பாத்துட்டு ஆசியாவிலேயே ஐந்து சிறந்த திரைப்படத்தை வரிசைப்படுத்தினா அதுல கற்றது தமிழ் வரும்னார். அவருக்கு கண் கலங்கிடுச்சு. வண்ணதாசன் இந்த வயசுல என்னைத் தேடி வந்து படத்தைப் பத்தி நிறைய பாராட்டிப் பேசி ஒரு இராத்திரி என்னோடவே தங்கிட்டுப் போனார். சாருநிவேதிதா ஒரு பத்திரிகையில படத்தைப் பத்தி பதினைந்து பக்கம் எழுதியிருக்கிறதா சொன்னார். ஊர் ஊரா கூப்பிட்டுப் பாராட்டறாங்க"
"பத்திரிகை விமர்சனங்களை எல்லாம் பார்த்தீங்களா?"
"நீங்க எத்தனை தடவை படம் பார்த்தீங்க?"
"ஒரு தடவை"
"எநதத் தியேட்டர்ல?"
"உதயம்"
"ஒரு நாவலை விமர்சனம் பண்றதுக்கு எத்தனை தடவை படிப்பீங்க?"
"இரண்டு மூன்று தடவை"
"அப்பப் படத்தை மட்டும் ஒரே ஒரு தடவை பாத்திட்டு விமர்சனம் எழுத முடியுமா?"
"கஷ்டம்தான்"
"அதான். பத்திரிகையில வர்றது எல்லாமே வெறும் பதிவுதான். ஒரு தனிநபரால எழுதப்படுகிற பதிவு. என்னை கற்றுக் கொள்ள வைக்கிற விமர்சனம் எதையும் இந்தத்தேதி வரை - இன்னைக்குத் தேதியை குறிச்சுக்கோங்க - வரலை. சில தனிநபர்கள் நேர்ல நான் கத்துக்கற மாதிரி சில விஷயங்கள் சொன்னாங்க. பிரிண்ட்ல இதுவரைக்கும் வந்ததெல்லாம் விமர்சனமே இல்ல"
"ம்.... படம் நீங்க நினைச்சு எடுத்த மாதிரி ரிசீவ் பண்ணப்படுதா?"
"படம் எடுக்கறதுதான் என்னோட வேலை. புரிய வைக்கறதா என்னோட வேலை?"
"எந்த அடிப்படையில் கதாபாத்திரத்தைத் தொடங்க ஆரம்பிக்கிறீங்க?"
"தத்துவத்தின் அடிப்படையில்தான்"
"என்ன தத்துவம்"
"தத்துவத்தை ஒரு வரியில் சொல்ல முடியுமா? சென்னைதான் என் தத்துவம்"
"சென்னையா?"
"ஆமாம். சென்னை என்கிற நகரம்தான். அதற்குள் புறத்திலிருந்து வரும் மாந்தர்கள்தான் என் கதாபாத்திரங்கள். அவர்களின் அக..புறச் சிக்கல்கள், முடிச்சுகள்"
"தமிழ் படிச்சவனோட பிரச்சினையைத்தான் படத்தில் பேசியிருக்கிறதா நிறைய பேச்சு இருக்கு. நீங்க அப்படி நினைச்சு எடுத்தீங்களா?"
"உங்களுக்கு எப்படி தோணுது?"
"எனக்கென்னவோ தமிழ் படிச்சவனோட பிரச்சினையை மட்டுமே பேசற மாதிரி தெரியலை"
"இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொண்ணு தோணுது. படத்தில் நிறைய sub text வச்சிருக்கேன். அவங்க அவங்களுக்கு என்ன தோணுதோ பேசிக்கட்டும்"
"இந்த ஐ.டி. துறை மேல வச்சிருக்கிற விமர்சனத்துக்கு என்ன ரெஸ்பான்ஸ் வருது?"
"உங்க ஆபிஸ்ல நெட் இருக்கா. இருந்தா கற்றது தமிழ்-னு போடுங்க. ஆயிரக்கணக்குல பேசியிருக்காங்க. படிங்க"
"படம் சுய விவரிப்புல நடக்குது. ஆனா முடியும் போது நீங்க வந்து... ஒரு மூன்றாவது குரல் - பேசுவது எதற்கு?"
"அப்படி வரக்கூடாதுன்னு எந்த சினிமா மேதை எந்தக் கலைக் கோட்பாடுல பேசியிருக்கார். இருந்தா பேர் சொல்லுங்க. இல்ல இது நீங்களே சொல்றதா? சிட்டி ஆப் காட்-னு ஒரு படம் பாத்திருக்கீங்களா? அதுல சுயவிவரிப்பும் வரும். மூன்றாவது குரலின் விவரிப்பும் வரும்"
"ஒரு விவாதத்தை இப்படி ஆரம்பிச்சா முடிவு கிடைக்காது"
"எனக்கு எந்தக் கட்டாயமும் கிடையாது. நான் நினைக்கிறததான் எடுப்பேன்"