August 26, 2007

மக்கள் பார்வைக்கு வந்த நடிகர் சிவகுமாரின் கைவண்ணங்கள்!

ஒரு கலைஞன், உருவாகி புகழ் பெற்ற பின்னர் தனது ஆரம்பகாலப் படைப்புகளைத் திருப்பிப் பார்த்தால், அதிலும் ஒரு வியப்பு இருக்கும். அந்த படைப்புகளைப் பத்திரப்படுத்தி வைத்திருப்பது அதை விட அதிசயமானது தான். திரைப்படத்தில் பெரும் புகழ் பெற்றிருந்த சிவகுமார், தற்போது சின்னத்திரைகளில் உலா வருகிறார். சிவகுமார் ஒரு நடிகராக மட்டுமல்ல, ஓவியராகவும் இருந்துள்ளார். ஆரம்ப காலத்தில் இளம் வயதில் அவர் வரைந்த ஓவியங்கள் (25 முதல் 30 ஆண்டுகளுக்கு முந்தியவை) கோவையில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. இவற்றில் சில ஓவியங்கள் வித்தியாசமானவை. வியப்பானவை. இந்த ஓவியங்களை சிவகுமாரே விளக்கிச் சொன்னபோது, அதில் உள்ள உள் அர்த்தம் வியப்புக்குரியதாக இருந்தது. அழும் குழந்தையின் முகக் கோணல்கள், கன்னத்தில் வழிந்தோடும் கண்ணீர்த் துளி, சளிமூக்கு எல்லாவற்றையும் துல்லியமாகக் காட்டப்பட்டுள்ள ஓவியம் தான் அழும் குழந்தையின் ஓவியம். கண நேரத்தில் மாறிப் போகும் குழந்தையின் உதடுகள் மற்றும் கண்ணீர்த் துளிகளை வரைவது எளிதானதல்ல. நான் வரைந்துள்ள ஓவியங்களில் கற்பனை எதுவும் இல்லை. எல்லாமே யதார்த்தமானவை. இங்கு இடம் பெற்றுள்ள அழும் குழந்தையின் ஓவியம் கூட கற்பனையில் இல்லை. அழும் சிறுவனை நேரில் கண்டு வரைந்தவையே. இதே போன்று, நீளமில்லாத சிறு சிறு கோடுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஓவியம் தான் காந்தியின் படம். மகாத்மா காந்தி ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும்போது அவரது உருவம் எப்படி இருக்கும் என்பதையும், அவர் கூர்ந்து கவனித்திருப்பதையும் நான் நேரில் கண்டிருக்கிறேன். இதன் பதிவு தான் இந்த பென்சில் ஒவியம். ஒரு உருவத்தை உருவாக்கத் தொடர்ச்சியான கோடு போட வேண்டும். ஆனால் இந்த ஓவியத்தில் அப்படி இல்லை. வெறும் கோடுகளே அவரது உருவத்தைச் சொல்லும். ஆங்காங்கே முகத் தோலில் ஏற்பட்டுள்ள மடிப்பு, மூக்குக் கண்ணாடியின் நிழல், மற்றும் புடைக்கும் நரம்புகள் கூட இந்த ஓவியத்தில் தெரியும். ஓவியத்தை நேரில் காண்போர் இதை உணரமுடியும். மேலும், சிறிது தூரத்தில் இருந்து பார்த்தால், படத்தின் தத்ரூபம் தெரியும். இதே போன்ற ஓவியம் தான் கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணணின் ஓவியம். அவரது சிரிப்பழகை விவரிக்கிறது இந்த ஓவியம். சிரிக்கும்போது முகத்தில் ஏற்படும் வளைவு நெளிவுகள் அனைத்தும் கோடுகளிலேயே உருவாக்கப்பட்டுள்ளது இப்படத்தின் சிறப்பு. முகவமைப்பை வைத்தே அவர் சைவமா அசைவமா என்பதைக் கூட முடிவு செய்து விடலாம் என்றார் சிவகுமார்.
தனது ஓவியங்களை பெரும் கண்காட்சிகளுக்கு அனுப்பிய போது, இந்த ஓவியங்கள் பழங்காலத்து "இல்லஸ்ட்ரேட்டட்" வகையைச் சேர்ந்தவை என புறக்கணிக்கப்பட்டு விட்டன. நவீன ஓவியங்கள்தான் போட்டிக்குத் தகுந்தவை என வருத்தப்படுகிறார் சிவகுமார். சிவகுமார் ஒரு நடிகனாக மட்டுமல்ல, தனது சுயசரிதையை எழுதியதன் மூலம் எழுத்தாளராக, ஒவியராக உருவாகி ஒரு முழுமையான கலைஞனாகத் திகழ்கிறார் என்பதில் சந்தேகமில்லை.

இன்றைய குறள்

செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு

வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர்

அறத்துப்பால் : விருந்தோம்பல்

மக்களுக்காக சிந்தித்த மாமேதை மார்க்ஸ் தத்துவம்

"இயற்கை, மனித சமுதாயம், சிந்தனை ஆகியவற்றின் வளர்ச்சியின் மீது ஆட்சி செய்யும் மிகப் பொதுவான விதிகளைக் குறித்த விஞ்ஞானமே தத்துவஞானமாகும்"

தமிழோசை

  • ஹைதராபாத் குண்டுத்தாக்குதலுக்கு இந்திய குடியரசுத் தலைவர் கண்டனம் : இந்தியாவின் ஆந்திரமாநிலத் தலைநகர் ஹைதராபாதில் சனிக்கிழமை நடைபெற்ற குண்டுத் தாக்குதலை இந்தியாவின் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் கண்டித்துள்ளார்.
  • கிழக்கிலங்கை விஜயம் குறித்து தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் ஆனந்தசங்கரியின் செவ்வி : இலங்கையில், தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் ஆனந்தசங்கரி அவர்களும், வேறு சில தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் குழுவாக இணைந்து சமீபத்தில் இலங்கையின் கிழக்குப்பகுதிக்கு சென்றிருந்தனர்.
  • உதைப்படும் நேர்மை - பாகம் மூன்று : உலக அளவில் அதிகப்படியான மக்களால் பார்த்து கேட்டு ரசிக்கப்படும் விளையாட்டு கால்பந்து. இந்த கால்பந்து விளையாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பல நாடுகளில் முறைகேடுகள் நடந்துள்ளது கால்பந்து ரசிகர்களை மிகவும் பாதித்துள்ளது.
  • மேலும் இன்றைய (ஆகஸ்ட் 26 ஞாயிற்றுக்கிழமை 2007) "BBC" தமிழோசை செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

August 25, 2007

சமீபமாக தி.மு.க-வுக்குள் ஒரு சக்தியாக அழகிரி வளர்ச்சி அடைந்து வருகிறார். அழகிரி இமேஜ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? "சோ" பதில்


ஜனநாயக நாட்டில் விமர்சனங்கள் அறிவு பூர்வமாக இருக்க வேண்டும் என்றொ, அல்லது மக்கள் புத்திசாலித் தனமாக இருக்க வேண்டும் என்றோ கட்டாயமில்லை. ஜன நாயகத்தின் ஒரு பெரிய குறை பாடுகளில் இதும் ஒன்று. (எங்கோ படித்தது)

சமூக பொறுப்புணர்ச்சி உள்ள பத்திரிக்கையாளர் இந்த நாட்டில் மிக குறைவு. கோயங்கா, சோ போன்றவர்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய பங்கு மிக பெரிது. ஜனநாயத்தின் மிக பெரிய தூண் என்று தன்னை தானே அழைத்துக் கொண்டு சமுதாயத்தை மேலும் சீரழிக்கும் மீடியா உலகில் சோ போன்றவர்கள் கொள்கை உணர்ச்சியோடு சீரிய முறையில் நடத்தி வருகிறார்கள்.
இந்த வார விகடனில் வந்த சோ பேட்டி. நேற்றைய எதிரி... ஜெயா இன்றைய எதிரி... சன் நாளைய எதிரி... மக்கள் டி.வி-யா?
ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுக்குக்கூட இவரது அரசியல் ஆரூடங்கள் ஆதர்சம்! மனதில் பட்டதைச் சட்டென்று போட்டு உடைக்கிற மனிதர் சோ..! தற்போதைய அரசியல் களம் பற்றி சுடச் சுட பேச ஆரம்பித்தார்.
‘‘தி.மு.க-வின் இன்றைய...?’’
‘‘களேபரம்! அரசுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் தர முன்வராமல், அதை மறுப்பதன் மூலமே அரசாங்கத்தை நடத்திச் சென்றுகொண்டு இருக்கிறார்கள். விலைவாசி உயர்வா? ‘உயரவில்லை!’, மணல் கொள்ளையா? ‘கொள்ளை அடிக்கப்படவில்லை!’, தனியார் கல்லூரிகளில் பகல் கொள்ளையா? ‘பகலுமில்லை, கொள்ளையுமில்லை. தடுக்க எங்களிடம் அதிகாரமுமில்லை!’ இப்படி எல்லாவற்றையும் மறுப்பதே இந்த அரசாங்கத்தின் வாடிக்கையாகிவிட்டது! துணைநகரம், விமான நிலையவிரிவாக்கம், ஹெல்மெட் சட்டம், இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்னை என எல்லா விஷயங்களிலும் தெளிவில்லாத ஒரு குழப்பமே தெரிகிறது. தவிர, தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், கிரிமினல்களுக்குக் குளிர்விட்டுப் போச்சு! தென்காசிக் கொலைகள், சிவகங்கை ரிமோட் வெடிகுண்டு என பக்கம் பக்கமாக ரத்தச் செய்திகள். இந்த ஆட்சியில் மட்டும்தான் இது நடக்குதுன்னு சொல்லலை. ஆனா, இந்த ஆட்சியில் வன்முறையின் தாக்கம் அதிகமா இருக்கு என்கிறேன்!’’
‘‘சாத்தான்குளத்தில் டைட்டானியம் ஆலை அவசியமா?’’
‘‘என்னைப் பொறுத்தவரையில் டைட்டானியம் தொழிற்சாலை அமைவதில் தவறில்லை. தொழிற்சாலைகளும் பெருகினால்தான், ஒரு நாடு உண்மையிலேயே முன்னேறியதாக அர்த்தம். தொழில் ரீதியான முன்னேற்றம் ஏற்படும்போது, விவசாய நிலங்களுக்குச் சற்றே பாதிப்பு ஏற்படுவது இயற்கைதான். ஆனால், டைட்டானியம் தொழிற்சாலைக்காக நிலம் கையகப்படுத்தப் படும்போது நிலத்துக்கு உண்டான உண்மையான மதிப்பை நில உரிமையாளர்களுக்குத் தர வேண்டும். டைட்டானியம் விலையுயர்ந்த தாது. டாடா நல்ல லாபகரமான நிலையில் செயல்படும் மிகப் பெரிய நிறுவனம். எனவே, ஒரு துண்டு நிலமானாலும் அதற்கு எந்தளவுக்கு அதிகபட்ச விலை கொடுக்க முடியுமோ, அந்தளவுக்கு கொடுத்து வாங்குவதுதான் முறை. இதனைச் சாத்தியப்படுத்த அரசாங்கம்தான் முனைந்து, முன்நின்று செயல்பட வேண்டும்! அப்படிச் செய்தால் டைட்டானியம் ஆலை வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். மற்றபடி யாரோ ஒரு தனியார் தொழில் அதிபரை முடக்கவே டாடாவை ஊக்குவிக்கிறார்கள் என்பதெல்லாம் ஆதாரமில்லாத குற்றச்சாட்டு!’’
‘‘அரசாங்கமே கேபிள் டி.வி-யைத் தொடங்குவதை நீங்கள் வரவேற்கிறீர்களா..?’’
‘‘ஜெயலலிதா ஆட்சியின்போது மாறன் குடும்பத்தாரின் சுமங்கலி கேபிள் விஷன், தமிழகத்தில் அதிரடி சாம்ராஜ்யம் நடத்திக்கொண்டு இருந்தது. போட்டிக்கு இருந்த மற்ற நிறுவனங்களை மிரட்டி உருட்டி தங்கள் நெட்வொர்க்கை விரிவுபடுத்தி வந்தார்கள். விஜய் டி.வி-யில் செய்தி வாசிக்க முடியாமல், ராஜ் டி.வி புது சேனல்களை ஆரம்பிக்க அனுமதி பெற முடியாமல் பல தடங்கல்கள் உண்டாக்கப் பட்டன. அப்போதே நானும் சிலரும் ‘அரசாங்கமே கேபிள் டி.வி. நடத்தலாம்’ என்று குரல் கொடுத்தோம். அதை எப்படிப் புரிஞ்சுக்கிட்டாங்களோ... மொத்தமா எல்லா தனியார் கேபிள் சேனல்களையும் அரசுடமையாக்க சட்டம் கொண்டு வந்தாங்க ஜெயலலிதா. அதை இதே கருணாநிதி எதிர்த்தார். ஆனால், இப்போது..? ஜெயலலிதா எல்லா சேனல்களையும் அரசாங்க கன்ட்ரோல்-ல கொண்டுவரப் பார்த்தாங்க. ஆனால், இப்போதைய அரசாங்கம் கொண்டுவரப் போறதா சொல்ற ‘அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன்’ என்பது அப்படி அல்ல. மற்ற நெட்வொர்க்குகளுடன் இதுவும் நடக்கும். ஆனால் இது, இன்னொரு சுமங்கலி கேபிள் விஷன் போல ஆகிவிடும் அபாயம் இருக்கிறது. அரசாங்கத்துக்கு நெருக்கமா இருந்தவங்களே மத்தவங்களை மிரட்டமுடியும் என்கிறபோது, அரசாங்கமே கேபிள் நடத்தினால் இன்னும் அதிகமாகவே அது நடக்க வாய்ப்பு இருக்கு! ‘நேற்றைய எதிரி’யாச்சேன்னு ஜெயா டி.வி-க்குக் குடைச்சல் கொடுப்பது, ‘இன்றைய எதிரி’ன்னு சன் டி.வி. ஒளிபரப்பைக் கெடுப்பது, ‘நாளைய எதிரி’ன்னு மக்கள் தொலைக்காட்சிக்கு தொல்லை கொடுக்குறதுனு இந்த ‘அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன்’ செயல்படுகிற ஆபத்து இருக்கு. இந்தக் குறைகள், விரோத மனப்பான்மைகள் எதுவும் இல்லாமல், பல்லாயிரக்கணக்கான கேபிள் ஆபரேட்டர்களையும் அரவணைத்து, குறைவான கட்டணத்துடன் அரசின் கேபிள் கார்ப்பரேஷன் செயல்பட்டால் அதை வரவேற்கலாம்!’’
‘‘புது எம்.பி. கனிமொழியின் செயல்பாடுகள் எப்படி?’’
‘‘கருணாநிதி அவர் குடும்பத்துல இன்னும் யாரை விட்டுவைக்கப் போறார்னு தெரியலை. ஸ்டாலினுக்கு கோட்டை, அழகிரிக்கு தென் தமிழ்நாடு, கனிமொழிக்கு டெல்லின்னு ஏதோ ஒரு பேரரசர் தன் வாரிசுகளுக்கு சாம்ராஜ்யத்தைப் பங்கு போட்டுக் கொடுக்குற மாதிரி பிரிச்சுக் கொடுத்துட்டு வர்றார். கொஞ்ச காலத்துக்கு முன், கனிமொழியைப் பற்றி விமர்சனம் கிளம்பியதற்கு ‘அவர் அரசியலிலேயே இல்லையே! எதற்கு அவரைப் பற்றி விமர்சிக்கிறார்கள்?’னு கேள்வி கேட்டார். அது நடந்த ரெண்டாவது வாரமே கனிமொழி எம்.பி-னு அறிவிப்பு வந்தது! ‘அரசியல் அவங்களுக்கு என்ன புதுசா? ரொம்ப நாளா பழக்கமான துறைதானே? அதனால் எம்.பி. ஆக்கப்பட்டுள்ளார்’னு கதையை மாத்தினார். தி.மு.க. தலைவர் பதவியை எந்தளவுக்கு துஷ்பிரயோகம் பண்ண முடியுமோ, அந்தளவுக்குப் பண்ணிட்டு இருக்கார் கருணாநிதி. வேறென்ன சொல்ல?’’
‘‘ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர் என்று முன்னிலைப்படுத்தப்படுகிறார். இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’
‘‘தயாநிதி மாறன், அன்புமணி, கனிமொழி போல அரசியலில் திணிக்கப்பட்டவர் அல்ல ஸ்டாலின். அவர் அரசியலில் ஈடுபடத் தொடங்கி முப்பது வருஷங்களுக்கு மேலாகிவிட்டன! எமர்ஜென்சி காலங்களில் சிறைத் தண்டனை அனுபவித்திருக்கிறார். இளைஞர் அணித் தலைவர், எம்.எல்.ஏ., மேயர் எனப் படிப்படியாகத்தான் அவர் முன்னேறுகிறார். கருணாநிதியின் வாரிசாக இருந்தாலும், ஒரு கட்சியினால் தங்கள் ஆட்சியின் முதல்வர் என்று தேர்ந்தெடுக்கப்படுவதற்கு உள்ள வழி முறைகளின்படியே அவர் தயாராகி வருவதால், அவர் அந்தப் பதவிக்கு வந்தாலும் குற்றம் காண முடியாது’’.
‘‘அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தம் நமக்கு பாதகமான ஒன்று என எதிர்ப்புக் குரல்கள் கிளம்புவதை எப்படி எடுத்துக்கொள்வது..?’’
‘‘அணு தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரையில் நம்மிடம் போதிய மூலப்பொருட்கள் கிடையாது. நம்மிடம் உள்ள தொழில்நுட்பமும் உடனடி தேவைகளுக்குப் போதுமானது அல்ல! எனவே, நமக்கு அமெரிக்காவின் உதவி தேவைப்படுகிறது. ஒப்பந்தம் ஏற்பட்டால் நாம் அணுகுண்டு சோதனை நடத்த முடியாது என்று கம்யூனிஸ்ட்டுகள் கதறுகின்றனர். இனிமேல் அணுகுண்டுச் சோதனை நடத்தித்தான் நமது அணு ஆயுத ஆற்றலை உலகத்துக்கு உரைக்க வேண்டும் என்பதில்லை. ஏற்கெனவே இந்திராகாந்தி மற்றும் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் நாம் நடத்திய சோதனைகளே நமது அணு ஆற்றலை எடுத்துக்காட்டியுள்ளன. அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஏற்பட்டாலும், நாம் அணு ஆயுதச் சோதனை செய்வதன் மூலம் அந்த ஒப்பந்தம் தானாகவே செல்லாததாகிவிடாது. முதலில் விளக்கம் கேட்கப்படும். பின்னர் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும். அன்றைய சந்தை நிலவரப்படி நஷ்டஈடு தரப்பட வேண்டும். பல கட்டங்களுக்குப் பிறகே ஒப்பந்தம் ரத்தாவது பற்றி முடிவாகும். இதற்கென்று ஏகப்பட்ட ஷரத்துக்கள் உள்ளன. ஆசியக் கண்டத்தில் சீனாவுக்கு எதிரான ஒரு சக்தியாக இந்தியா உருவெடுப்பதில் அமெரிக்காவுக்கு லாபங்கள் அதிகம். அமெரிக்கா நம்முடன் அணு தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் பிற நாடுகளும் நம்முடன் அணு ஆற்றலைப் பகிர்ந்துகொள்வது சாத்தியப்படும். தனிப்பட்ட முறையில் இந்தியாவுக்கும் இதில் ஆதாயங்கள்தான் அதிகம் என்பது என் கருத்து! அமெரிக்காவுடன் ஒப்பந்தம் என்றவுடன் வரிந்துகட்டிக்கொண்டு எதிர்க்கும் கம்யூனிஸ்ட்டுகள், நமது அருணாசலப்பிரேதசத்துக்கு சீனா உரிமை கோருவதைப் பற்றி ஏன் வாய் திறக்க மறுக்கிறார்கள்? இந்த அண்டை நாடு ஏற்கெனவே நமது பிராந்தியங்கள் சிலவற்றை கையகப்படுத்திக்கொண்டு இன்னும் ஆக்கிரமிக்கப் பார்க்கிறது. இது நமது நாட்டின் இறையாண் மையைப் பாதிக்காதா! கம்யூனிஸ்ட்டுகளின் எதிர்ப்பு முழு சந்தர்ப்ப வாதம்!’’
‘‘கலைஞர் டி.வி. குறித்தான உங்கள் எதிர்பார்ப்பு என்ன?’’
‘‘அந்தப் பெயரே தப்பாகத் தோன்றுகிறது எனக்கு! டி.வி. தொடங்கப்படுவதற்கு முன்னரே அதன்மீது முத்திரை குத்தப்பட்டுவிட்டது போல இருக்கிறது. தமிழ் சேட்டிலைட் சேனல்களில் இப்போதைக்கு நம்பர் ஒன் சன் டி.வி-தான். அதிகமான எண்ணிக்கையிலான பார்வையாளர்கள், பெரிய சினிமா லைப்ரரி, பக்கா புரொஃபஷனலான டீம்னு நல்லா வளர்ச்சி அடைஞ்சிருக்காங்க. அதோட போட்டி போடணும்னா, தெளிவான திட்டங்களுடன் தயாராகணும்’’.
‘‘டாக்டர் ராமதாஸ் செய்கிற எதிர்ப்பு அரசியல் பற்றி..?’’
‘‘டெல்லியில், அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகம் தொடர்பான சர்ச்சைகளில் அன்புமணி சிக்கிக்கிட்டு தவிச்சப்ப, ராமதாஸுக்கு ஆறுதலாகவோ ஆதரவாகவோ தி.மு.க. எதுவும் செய்ய முன் வரவில்லை. அப்போ தன்னைக் கைவிட்டுட்டாங்க என்கிற பெரிய வருத்தத்தில்தான் இதெல்லாம் ஆரம்பிச்சது. இன்னொரு முக்கியமான விஷயம்... விஜயகாந்த்தின் வளர்ச்சி! அரசாங்கத்தை எதிர்ப்பதால்தான் விஜயகாந்த்துக்கு வாக்குகள் விழுது, மக்கள் கிட்டேயும் ஆதரவு பெருகுதுன்னு ராமதாஸ் நினைக்கிறார். இந்த நேரத்தில் கூட்டணிக் கட்சி என்ற முறையில் அரசாங்கத்துக்கு ஆதரவா செயல்பட்டா, தங்களுடைய வாக்குகளில் கணிசமான அளவை விஜயகாந்த் பிடிச்சுக்குவாரோன்னு பயம். அதனாலதான் இப்படி தினமும் அரசுக்கு எதிரா அறிக்கை மேல அறிக்கை விட்டுட்டு இருக்காரு. மூணாவதா, கலைஞரேகூட அடுத்த தேர்தல்ல தன்னை எப்படி நடத்து வார்ங்கிற சந்தேகமும் ராமதாஸுக்கு வந்திருக்கு. இதெல்லாமேதான் காரணம்!’’
‘‘எதிர்க்கட்சித் தலைவராக வெறும் அறிக்கைகள் மூலமே அரசியல் செய்கிறாரே ஜெயலலிதா... சட்டசபைக்குக்கூட வருவது இல்லையே..?’’
‘‘அ.தி.மு.க-வும் ஆர்ப்பாட்டம், போராட்டம்னு நடத்திக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால், அதெல்லாம் போதாது. ஜெயலலிதா சட்டசபைக்குத் தொடர்ந்து சென்றிருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அ.தி.மு.க-வின் எம்.எல்.ஏ-க்கள் மொத்தமாக சஸ்பெண்ட் செய்யப் பட்டபோது, தன்னந்தனியாக ஜெயலலிதா சட்டசபைக்குச் சென்று பேசியது மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. அப்போது கிடைத்த வரவேற்பை அவர் தக்கவெச்சிருக்கணும்!’’
‘‘சமீபமாக தி.மு.க-வுக்குள் ஒரு சக்தியாக அழகிரி வளர்ச்சி அடைந்து வருகிறார். இந்த அழகிரி இமேஜ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’
‘‘கழக இமேஜ் ரொம்ப நன்றாக இருக்கிறதா என்ன..! மெயின் இமேஜே சரியில்லாம இருக்கும்போது இதைப்பற்றிச் சொல்ல என்ன இருக்கு..?’’ -
சூடாகப் பேசி முடித்து, புன்சிரிப் போடு விடை கொடுக்கிறார் சோ!

ஓணம் நல்வாழ்த்துக்கள்!


அனைவருக்கும் ஓணம் நல்வாழ்த்துக்கள்! இலைபோட்டு சாப்பிடுவதை மறந்து நெடுநாட்களாகி விட்டாலும், (சாப்பிட வழியில்லை என்பது வேறு விசயம்!) இந்த படத்தை பார்த்தாவது ஆறுதல் அடைந்துகொள்வோம். என்னைப்போன்ற எத்தனையோ லட்சக்கணக்கான நண்பர்கள் குடும்பத்தோடு திரும்பவும் இந்தியா வந்து இலைபோட்டு, அந்த சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடும், வெறியோடும், கனவோடும் இருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களனைவருக்கும் இந்தப் படத்தின் மூலம் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்!!

இன்றைய குறள்

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்

விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா?

அறத்துப்பால் : விருந்தோம்பல்

"ஒரு நாள் உண்ட உணவில் அதற்கேற்ற பயன் இருப்பது போன்று, அனுஷ்டானத்திற்கு ஏற்ற அளவு யோகத்தின் பயன் உண்டு"
- சுவாமி சித்பவானந்தர்

சல்மான்கான் சிறையில் : தமிழோசை

  • நடிகர் சல்மான்கான் இந்தியாவில் அரிய வகை மான் ஒன்றை கொன்றதற்காக தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து இந்தி திரைப்பட நடிகர் சல்மான் கான் முறையீடு செய்தார். ஆனால் இந்த முறையீடு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து சல்மான் கான் இன்று சிறையில் அடைக்கப்பட்டார்.
  • இந்தியாவின் கேரளா மாநிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உரிய விடுப்புகளை பெறாமல், பணிக்கு வராமல் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
  • சீனாவில் பெண் கருக்கலைப்பு தொடர்பில் புதிய சட்டம்
  • சுமார் 80 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ள கிரேக்கத்துக்கு ஐரோப்பிய நாடுகள் விரைந்து உதவிகளை அனுப்பிக் கொண்டுள்ளன.
  • மேலும் இன்றைய (ஆகஸ்ட் 25 சனிக்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க இணைப்பில் செல்க... http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

ஃபாக்ஸ் மூவி டோன் செய்திக்காக "மகாத்மா காந்தி" அவர்களின் நேர்முகம்

August 24, 2007

இப்படியும் சிலர்!!

சீரழிக்கும் சீரியல்கள் : மன்னிக்கவும்.. சத்தியமாக நான் நமது இந்தியத் தணிக்கைக்குழுவைச் சொல்லவில்லை

தொலைக்காட்சிக்கு எஜமான் ஒவ்வொரு குடும்பத்தலைவியும்தான்! குடும்பத்தலைவியே கொண்டவனை இழந்தவளைப்போல மெகாசீரியலுக்காகக் குமுறிக் குமுறி அழும்போது எப்படி எஜமானியாக இருக்கமுடியும். அமெரிக்காவில் கேபிள் தொலைக்காட்சிகளின் வரும் கண்ட கருமாந்தரத்தையும் குழந்தைகள் பார்க்கக் கூடாதென்று சட்டமே வைத்துள்ளார்கள். அப்படிக் கட்டாயம் பார்க்கவேண்டுமென்றால் குழந்தைகள் இல்லாதபோது அதை ரிமோட் மூலமாகமாவே தேர்வுசெய்து தனியாகப் பணமோ, க்ரெடிட் கார்டு மூலமாகவோ செலுத்தித்தான் பார்க்கமுடியும். ஒவ்வொரு குடும்பத்திலுமுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தனி அறையே ஒதுக்கித் தரவேண்டும். இதற்கெல்லாம் காரணம் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கக்கூடாதென்பதற்காகவே. சில தவிர்க்கமுடியாத காட்சிகள் வந்தால், அந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னரே, குழந்தைகள் பார்க்கவேண்டாம், பெற்றோர் கவனிப்பு அவசியம் என்று முதலில் தெரிவித்துவிட்டுத்தான் ஒளிபரப்புகிறார்கள். இது கிட்டத்தட்ட தணிக்கைக் குழுவைவிட சக்திவாய்ந்த ஒன்றாக இருக்கிறது.
(மன்னிக்கவும்.. சத்தியமாக நான் நமது இந்தியத் தணிக்கைக்குழுவைச் சொல்லவில்லை). ஆகமொத்தம் எவற்றையெல்லாம் குழந்தைகள் பார்க்கக் கூடாதோ அவற்றை நம் தாய்மார்கள் கட்டுப்படுத்த முடியாது. புரட்சிப்பெண்களாயிற்றே!
எனது குறைந்த பட்ச வேண்டுகோள்!
இந்தச் சிறிய தீப்பொறியை, புரட்சியை நமது தமிழ் நண்பர்கள், இணையம் உபயோகிக்கும் நண்பர்கள், குழுமங்களில் உரையாடும் நண்பர்களின் குடும்பங்களிலிருந்து தொடங்குவோம். சிறுதுளி பெருவெள்ளம், நாம் இன்று தொடங்கினால் குறைந்த பட்சம் நம் பேரன், பேத்திகளுக்காவது உபயோகமாக இருக்குமல்லவா? இன்றே தொடங்குவோமா? இதுபற்றிய ஒரு கட்டுரை "குமுதம்" இதழில் வந்ததை நான் உங்களுக்கு இங்கே தருகிறேன்.
சீரழிக்கும் சீரியல்கள்

ஒரு பக்கம் ‘குஷ்பு, சுஹாசினி பேச்சு தமிழ்ப் பெண்களின் கலாசாரத்தையே குழி தோண்டி புதைத்துவிட்டது. ஒருத்தனுக்கு ஒருத்திதான் இந்த மண்ணின் மாண்பு.உயிரே போனாலும் கற்பு தான் முக்கியம்’ என்று ஆவேசத் தலைவர்கள் ரோட்டுக்கு வந்து கொடும்பாவி கொளுத்துகிறார்கள். இன்னொருபுறம் ஓசைப்படாமல் நம் படுக்கையறைக்குள்ளேயே கலாச்சாரத்தை கொத்து பரோட்டா போடும் அநியாயத்தை வேறு வழியில்லாமல் பார்த்துக் கொண்டிருக்கும் அவலம்!தரணி என்கிற பையன் காதலிப்பது பூஜாவை. கல்யாணம் செய்து கொள்வதோ கல்கியை. ‘வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்தானே’ என்று கவுண்டமணி பாணியில் இன்னமும் தமிழ்நாட்டில் டி.வி. சீரியல்கள் அதிகம் பார்க்காத ஆத்மாவாக நீங்கள் அவசரப்பட்டால் ஸாரி. தரணியை பழி வாங்க பூஜா புறப்படுகிறாள். எப்படி?
தரணியின் சொந்த சித்தப்பாவையே திருமணம் செய்து கொள்கிறாள். சரி, அத்தோடு இவர்கள் ‘புரட்சி’ முடிந்துவிட்டதா என்றால், அதுதான் இல்லை. தரணியிடம் பூஜா சொல்வது... ‘‘இப்பவும் எனக்கு குழந்தை பிறந்தால் அது உன் மூலமாகத்தான் பிறக்கணும்’’ எப்படியிருக்கு ‘கல்கி’ தொடரின் மூல முடிச்சு? ‘கணவருக்காக’ சீரியலில் இன்னும் விபரீதம்... இன்னும் அபத்தம்... உயிருக்கு உயிரான இரண்டு தோழிகள். நட்புக்காக செய்யும் எத்தனையோ வித தியாகங்களைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இங்கே ஒருத்தியின் கணவரை இன்னொருத்தி திருமணம் செய்து கொண்டு தோழிக்கே துரோகம் செய்ய நினைக்கிறாள்.அது என்ன சாபக்கேடோ தெரியவில்லை. நம் டி.வி. சீரியல்களின் கதாசிரியர்கள் பேப்பரை எடுத்து இரண்டு என்ற போட்டு ஆரம்பிப்பது பிள்ளை சுழி என்று நீங்கள் நினைக்கலாம். அவர்களைப் பொறுத்தவரை அதற்கு அர்த்தம். இரண்டு பெண்டாட்டி சப்ஜெக்ட். எந்த சீரியலை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். சந்தர்ப்பம், சூழ்நிலை என்று புருடா விட்டு, இரண்டு பெண்களை நாயகனுடன் சேர்த்து, கூடவே கொடுமைக்கார அத்தையையும் கொண்டு வந்துவிட்டால் வேலை முடிந்தது! ஒரு மகாமகத்திற்கு இழுக்கலாம். ஒரு கட்டத்தில் கதாசிரியருக்கே எங்கே ஆரம்பித்தோம் என்று மறந்துபோகும்வரை!
மனைவி சீரியலில் அரசு என்கிற அரசியல்வாதி ஒரு பெண்ணைக் காதலித்து, ஏமாற்றி அவள் தற்கொலை செய்து கொண்டதும், வேறு ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்கிறான். அந்தப் பெண் தன்னம்பிக்கை உள்ளவளாம். போராடுகிற குணமுள்ளவளாம். ‘நீ போடா டுபாக்கூர்’ என்று வேறொருவனுக்கு கழுத்தை நீட்டுகிறாள். அவளையும் விடாமல் தொடர்ந்து டார்ச்சர் தருகிறான் அரசு. அப்பவும் ஒரு நடிகையை இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறான். நடிகை அரசை சைக்கோதனமாக காதலிக்க, இவளை வச்சு பணம் சம்பாதிக்க முடியாது என்கிற ஆதங்கத்தில் அம்மாக்காரியோ இவர்களை பிரிக்க நினைக்கிறாள். ‘அரசு ஆம்பிளையே இல்லை’ என்று அவள் புது கரடிவிட, ‘என் முதல் மனைவிக்கு பிறந்தது என் குழந்தை’ என்று அரசு வரிந்து கட்டிக்கொண்டு வருகிறான். உடனே நடிகை தன் கணவர் அரசுவின் முதன் மனைவியின் லேட்டஸ்ட் புருஷனிடம் படையெடுத்து இது என் அரசுவுக்கு பிறந்தது. எனக்கே சொந்தம்’’ என்று கூச்சல்போட.. ஐயோ கடவுளே.. வெள்ளைக்காரன்கூட இவ்வளவு ‘முற்போக்காக’ சிந்திப்பானா என்று பிரிட்டிஷ் கதாசிரியர்களிடம் கேட்க வேண்டும்!
‘செல்வி’யில் இரண்டாவது கல்யாணத்திற்காகவே தாமரையை கோமாவில் தள்ளுகிறார்கள். தாமரையின் அப்பாவும், அம்மாவுமே செல்வியின் காலில் விழுந்து ‘நீதான் என் மாப்பிள்ளை ஜி.ஜே.வின் இரண்டாவது மனைவியாக வேண்டும்’ என்று கதறுகிறார்கள். செல்வி ஒப்புக்கொண்டு மாலை மாற்றிக்கொண்டு ஜி.ஜே.யின் கருவை சுமக்க, இப்போது... தாமரை கோமாவிலிருந்து வழித்தெழ வேண்டாமா? இரண்டு பெண்டாட்டிகள் தவிக்க வேண்டாமா?அதே சீரியலில் பிரமாண்டமான முதுகுடன், வில்லத்தனம் செய்துகொண்டு பிரச்னைக்கு அலையும் ரஞ்சனி கேரக்டரை பாருங்கள். நல்ல புருஷனை உதாசீனம் செய்துவிட்டு, தவறான உறவில் தாய்மை அடைந்துவிட்டு, அதையும் மறைத்து கணவனோடு உறவாடுகிறாள். இன்னும் மோசம். மாயா கேரக்டர். தன் மனதுக்குப் பிடித்தவனை திருமணத்திற்கு முன்பு ஹோட்டல் ரூமிற்கு அழைக்கும் அளவுக்கு பாரதி காணாத புரட்சிப் பெண்ணாகச் சித்திரிக்கப்படுகிறாள்.
‘கோலங்கள்’ கதையும் என்ன வாழ்கிறது? ஏகப்பட்ட தவறான உறவுகள்... அபி அவளது தங்கைகள் மற்றும் தம்பியும் ஆதித்யாவின் அப்பாவிற்குப் பிறந்தவர்கள். அவர் அபியின் அம்மாவை முதல் தாரமாக மணந்துவிட்டு, பிறகு அவர்களை அம்போ என விட்டுவிட்டு மும்பைக்கு ஓடி ஆதித்யாவின் அம்மா கல்பனாவை இரண்டாம் தாரமாக கட்டிக் கொண்டவராம். ‘பாதை’ சீரியலில் மோகன் என்கிற பாத்திரம் வரிசையாக நான்கு பெண்களை ஏமாற்றுகிறது!இப்படி இவர்களது ‘பண்பாட்டு’ கதைகளைச் சொல்லிக்கொண்டே போனால், ஒருநாள் போதாது. ஒரு குமுதம் போதாது. பெரும்பாலான டி.வி. சீரியல்களில் தாய்மை சிதைக்கப்படுகிறது. காதல் கொச்சைப்படுத்தப்படுகிறது. நட்பு கேவலப்படுத்தப்படுகிறது. இல்லற வாழ்க்கை அசிங்கப்படுத்தப்படுகிறது. ஒரு பெண்ணை நார்மலாக காட்ட இவர்கள் அத்தனை பேரையும் அழைத்து சிறப்பு வகுப்பு எடுத்தால் நல்லதோ என்று தோன்றுகிறது. ஒன்று அவளை வீர வில்லியாக காட்டுகிறார்கள். அதாவது மாமியாரை கணவனைப் பழி வாங்கவேண்டும். அதற்கு அவள் யாரோடு வேண்டுமானாலும் படுக்கலாம். கூட்டு சேரலாம். கொலையும் செய்யலாம். அல்லது தீயாகச் சுடராக எல்லா கொடுமைகளையும் சகித்துக்கொண்டு, மூக்கைச் சிந்திக்கொண்டே ஒருநாள் உயிரை விடவேண்டும்! முறைகேடான உறவுகள் ஒருபுறமிருக்க, சினிமாவைத் தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு வன்முறை தலைவிரித்தாடுகிறது. வேடிக்கை, இவை எல்லாமே குடும்ப சீரியல்கள், மர்ம சீரியல்கள் அல்ல. பாம் வைப்பது எப்படி என்பதை ரொம்ப நுணுக்கமாக அறிவியல் பூர்வமாக காட்டுகிறார்கள். ‘ஆசிட் முட்டையால் அடித்துவிட்டார்கள்’ என்று கேள்விப்பட்டிருக்கிறோமே தவிர, ஆசிடை முட்டையில் எப்படி செலுத்துகிறார்கள் என்று யாருக்காவது தெரியுமா? _பிளேடு பக்கிரிகளைத் தவிர! செல்வியில் ரொம்ப நேர்த்தியாக அதைக் காட்டியதோடு, அதை எதில் மறைத்து எடுத்துவரவேண்டும் என்கிற அளவுக்கு தெளிவாக, தமிழ் பேசும் மக்களுக்குப் பாடம் எடுத்தார்கள்.
மனைவி சீரியலில் தன் கணவர் அரசுவை உடனே பார்க்க வேண்டும் என்கிற வெறியில், சைக்கோதனமான நடிகை, பாத்ரூமிற்கு சென்று பொறுமையாக பிளேடால் கையைக் கீறிக்கொள்கிறாள். நம் உடம்பு சிலிர்க்கிறது. ரத்தம் குபு குபுவென்று கொட்ட, வாஷ்பேசின் முழுக்க ரத்தத் தண்ணீர்!இப்படி தறிகெட்டு காட்டப்படும் வன்முறைக் காட்சிகளையும், முறைகேடான உறவுகளையும் பச்சையான வசனங்களையும் ஏதாவது ஒரு கட்டத்தில் கட்டுப்படுத்த வேண்டாமா? இதற்கெல்லாம் சென்சார் என்று ஒன்று வேண்டாமா? இரண்டு பெண்டாட்டி கதைகளும் போரடிக்கும்பட்சத்தில் புதுமை என்கிற பெயரில் அடுத்த விபரீதம் என்ன நடக்கப் போகிறது? சமூக அக்கறையுள்ள எத்தனையோ பெற்றோர்கள் இப்படி நிறைய கேள்விகளுடன் கவலையோடு பார்க்கிறார்கள்.அவர்கள் ஆதங்கம் நியாயமானது. ‘எப்படி வேண்டுமானாலும் வாழலாம்’ என்ற தைரியம் கொடுக்கும் சீரியல்கள் பலரது, குறிப்பாக பெண்களது மனதை நிச்சயமாகப் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் சீரியல் பெண்களோடு வாழ ஆரம்பித்துவிட்டார்கள். கோவையைச் சேர்ந்த ஒரு பெண்மணி தனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று, தன் கணவருக்கு இன்னொரு திருமணம் செய்து வைத்ததாக அண்மையில் ஒரு செய்தி. ‘‘சீரியல்தான் எனக்கு அந்த துணிச்சலைக் கொடுத்தது’’ என்கிறார் படு காஷுவலாக.
நமது கலாசாரத்தில் ஊறிப்போன விருந்தோம்பலுக்கும் தொலைக்காட்சித் தொடர்கள் வேட்டு வைத்துவிட்டன. எத்தனையோ வருடங்களுக்குப்பிறகு வீட்டுக்கு வரும் விருந்தாளியும், சீரியல் நேரத்தில் வந்தால் அவர் வேண்டாத விருந்தாளியாக நெஞ்சு முழுக்க எரிச்சலுடன் வரவேற்கப்படுகிறார்.
அவ்வளவு ஏன், பல வீடுகளில் அலுவலகத்திலிருந்து தாமதமாக வரும் கணவன், மனைவியோடு மனம் விட்டு பேசிக்கொள்வதுகூட முடியாமல் போகிறது. பல தாய்மார்களுக்கு குழந்தைகள் படிப்பைக் கவனிப்பதுகூட இரண்டாம் பட்சமாகி விடுகிறது. சீரியல் பிசாசுகளையும், அதனால் ஏற்பட்டுள்ள மதிமயக்கத்தைப் பற்றியும் சீரியஸாக ஆராய வேண்டிய நேரம் இது! இந்த விபரீதப் போக்கு சீக்கிரமாக தடுத்து நிறுத்தப்படவேண்டும்!
நன்றி : குமுதம்

இன்றைய குறள்

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந் தோம்புவான் இல்
மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்
அறத்துப்பால் : விருந்தோம்பல்

"புகையானது சுவரைக் கரியாக்கும். ஆனால் அதனால் சூழப்பட்டிருக்கும் வெளியிடத்தைக் கரியாக்க முடியாது"

- ஸ்ரீ ராமகிருஷ்ணர்

தமிழோசை

  • விளையாட்டுத் துறையில் ஊக்க மருந்து உபயோகித்ததாக கண்டறியப்பட்டு ஆறு மாதத்திற்கு மேல் தடை விதிக்கப்பட்டுள்ள எந்த ஒரு வீரரும் அடுத்து நடைபெறக் கூடிய ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெறும் தகுதியை இழந்து விடுவார்கள்
  • இலங்கையின் வடக்கே ஓமந்தை சோதனைச் சாவடி இனி வாரத்திற்கு ஐந்து நாட்கள் திறந்திருக்கும் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது
  • குற்றவாளிகள் தண்டனை அனுபவிக்கும் விடயத்தில் பாகிஸ்தான் மற்றும் பிரிட்டன் அரசுகள் புதிய வழிமுறைகளுக்கு ஒப்புக் கொண்டுள்ளன
  • சீனாவில் எட்டு கிலோ யுரேனியத்தை கள்ளச் சந்தையில் விற்க முயன்றதாக ஒரு கூட்டம் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அந்த எட்டு கிலோ யுரேனியத்தை சீன அரசு தேடி வருகிறது.
  • இன்றைய (ஆகஸ்ட் 24 வெள்ளிக்கிழமை 2007) "அஅஅ" செய்திகளுக்கு இணைப்பில் செல்க.. http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

August 23, 2007

எக்காலத்துக்கும் பொருந்துவது "திருக்குறள்" மட்டுமல்ல, இந்த மாமேதையின் சொற்பொழிவும்தான்! நான்கு ஆண்டுகள் பின்னோக்கிச் செல்வோமா?


குடியரசுத் தலைவர் திரு. ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் FeTNA தமிழ்ச் சங்கப் பேரவையின் ஆண்டு விழாவினைத் துவக்கி வைத்து ஆற்றிய உரை ஜூலை 5, 2003 வாழ்த்துக்கள் வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் ஆண்டுவிழாவில் தமிழர்கள் மட்டுமின்றி எல்லா இந்தியர்களையும் தொடர்புகொள்வதில் அளவிலா மகிழ்ச்சியடைகிறேன். அதுவும் தமிழ்நாட்டு பள்ளி பிள்ளைகளுக்காக உலகப் புகழ்பெற்ற ப்ரொபஸர் டேவிட் கோல்ட்ஸ்டெயினுடைய மெக்கானிக்கல் யுனிவர்ஸ் அன்ட் பியான்ட் என்ற அறிவியல் சொற்பொழிவை தமிழாக்கம் செய்யும் முயற்சியை இந்த தருணத்தில் துவக்கி வைப்பதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
இன்று நீங்கள் வாழ்ந்துவரும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்காவின் சுதந்திர தினம். இந்த சுதந்திர தினத்தில் உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். நாளும் கோளும் ஏறக்குறைய 2000 தமிழர்கள் இங்கு குழுமியுள்ளீர்கள். உங்களிடம் இந்த தருணத்தில் சில விஷயங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நீங்கள் எல்லாரும் அமெரிக்காவில் சென்று பணியாற்றி வருகிறீர்கள். அதைப்போல நான் சயின்டிஸ்ட்டாக இந்தியாவில் பணியாற்றி வந்தேன். பிறகு அண்ணா யுனிவர்ஸிட்டியில் புரொபஸராக பணியாற்றினேன். அங்கு ஏராளமான மாணவர்களை சந்தித்து உரையாற்றுவேன். ஒரு வாரத்தில் பத்து வகுப்புகள் எடுத்து வந்தேன். பிறகு என்னை பிரஸிடென்ட் ஆக நாமினேட் செய்தார்கள். இந்த பிரஸிடென்ட் ஆகும் வைபவத்தை கோ-ஆர்டினேட் செய்ய ஒரு மந்திரியை நியமித்தார்கள். நான் சென்னையில் இருக்கும்போது அந்த மினிஸ்டர் டெல்லியிலிருந்து போன் செய்து சொன்னார் "கலாம்ஜி உங்கள் preference என்ன? எந்த நல்ல நேரத்தில் இந்த நல்ல காரியத்தை செய்ய உத்தேசித்துள்ளீர்கள். உங்கள் astrologer யாரையாவது contact செய்கிறீர்களா?" என்று கேட்டார். நான் சொன்னேன் "பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணிநேரம் பிடிக்கிறது. அவ்வாறு சுற்றிக்கொண்டே சூரியனைச் சுற்றுகிறது. அவ்வாறு சூரியனைச் சுற்றிவர அதற்கு 365 நாள் பிடிக்கிறது. அதுபோல சூரியன் கேலக்ஸியைச் சுற்றுகிறது. ஆகவே time என்பது இந்த நடைமுறையை குறிக்கும் ஒரு நிகழ்ச்சி. அவ்வாறு இந்த இரணடு நிகழ்ச்சியும் நடைபெறும் வரை எனக்கு எல்லா நேரமும் நல்ல நேரமே. டைம் ஒரு astronomical நிகழ்ச்சியே தவிர astrological நிகழ்ச்சி இல்லை என்றேன்". அந்த அமைச்சருக்கு ரொம்ப ச்ந்தோஷம். இதை பத்திரிக்கை நியூஸாக கூட கொடுத்துவிட்டார்.
இவ்வாறாக நான் ஜூலை 25-ம் தேதி 2002ம் ஆண்டு ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டேன். ஆகவே பூமி சூரியனை சுற்றுவது போல சூரியன் கேலக்ஸியை சுற்றி வருகிறது. அதற்கு 250 மில்லியன் வருடங்கள் ஆகிறது. இது போன்ற இயற்கை நிகழ்வுகளை எல்லாம் அறிய முயற்சிகள் தொடர்ந்து வருகின்றது. முதலில் நியூட்டன் புவியீர்ப்பு சக்தி மற்றும் laws of motion என்ற தத்துவங்களைச் சொன்னார். பிறகு வந்த மாக்ஸ்வெல் electro magnetic theory கொடுத்தார். அதன் பிறகு வந்த சுப்ரமணியம் சந்திரசேகர், "சந்திரசேகர் லிமிட்" என்று சொல்லப்படுகிற தனது தத்துவத்தை உப்யோகப்படுத்தி நட்சத்திரங்களின் life எத்தனை நாள் என்று கண்டுபிடித்தார். அவர் கருத்துப்படி நமது சூரியன் 10 பில்லியன் ஆண்டுகள் ஒளிரும். ஏறக்க்குறைய சமகாலத்தவரான ஐன்ஸ்டீன் தனது ரிலேடிவிடி தியரி கொடுத்தார். அதன் பிறகு ஸ்டீபன் ஹாக்கிங் அவருடைய 'காலம் ஒரு சுருக்கமான சரித்திரம்' என்ற தத்துவ புத்தகத்தின் மூலமாக இந்த கருத்துகளை அனைத்தையும் ஒன்றிணைத்து கேலக்ஸிகள் இயங்குவதை விளக்கிச் சொல்ல முயன்றார். அவர் கடைசியாக தம்முடைய தியரியில் இறைவனுக்கு ஒரு உருவம் கொடுத்து யூனிஃபைட் தியரி உருவாக்க முயற்சித்தார். இது ஒரு பெரிய துறை. இதை அறிவதின் மூலம் உலகம் எப்படி உருவானது என்றும், நாம் ஏன் பிறந்தோம்? எப்படி பிறந்தோம்? எப்படி வாழ்வோம் என்பதை அறிய வாய்ப்பு உள்ளது.
இந்த நேரத்தில் ஜனக மகாராஜாவின் அவையில் இருந்த அஷ்டவக்ரா சொன்னது - அஷ்டவக்ரா ஒரு பெரிய ஞானி - என் நினைவுக்கு வருகிறது. அவர் சொன்னார் "I am the universe and universe is my conciousness" என்றார். நான் நினைக்கிறேன் இந்த தத்துவத்தை சேர்த்து முயற்சி செய்தால் ஒரு நல்ல யூனிஃபைட் தியரி உருவாகுமோ என்ற கருத்து என் மனதில் உருவெடுத்துள்ளது. The Creator நான் கடந்த சில ஆண்டுகளில் ஏறக்குறைய 2,00,000 பள்ளிக்கூட குழந்தைகளைச் சந்தித்தேன். அது போல சில மாதங்களுக்கு முன் மேகாலயா சென்றபோது அங்கு ஒரு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி என்னைக் கேட்டாள் நான் கடவுளில் நம்பிக்கை கொண்டிருக்கிறேனா என்று. நான் மாணவர்களை சந்தித்த இடம் ஒரு open air theatre. நான் மேலே வானத்தைப் பார்த்தேன். ஏராளமான நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருந்தன. நான் சொன்னேன் "பூமி சூரியனைச் சுற்றுகிறது. சூரியன் கேலக்ஸியை சுற்றுகிறது. நாமிருக்கும் இந்த கேலக்ஸி யுனிவர்ஸில் ஒரு சின்ன கேலக்ஸி. நீங்கள் இரவில் இதைப் பார்க்கலாம். இதைப்போல ஏராளமான கேலக்ஸிகள் உள்ளன. நம்முடைய கேலக்ஸியிலும் நமது சூரியன் ஒரு சின்ன நட்சத்திரம். இதைவிட பெரிய பெரிய ஏராளமான நட்சத்திரங்கள் உள்ளன. நம்முடைய நட்சத்திரமான சூரியனிலும் ஒன்பது கோள்கள் உள்ளன. அதில் செவ்வாயையும் வியாழனையும் ஒப்பிட்டு பார்த்தால் பூமி ஒரு insignificant planet. நாம் மேலே பார்த்தால் ஆயிரமாயிரமாக தெரியும் அந்த நட்சத்திரங்களை பார் - இதையெல்லாம் ஒரு creator தான் create செய்யமுடியும். எனவே நான் ஆண்டவனை நம்புகிறேன்", என்றேன்.
இவ்வாறாக insignificant ஆக உள்ள இந்த பூமியிலும் 6 பில்லியன் மக்கள் உள்ளார்கள். நாம் நமக்கு கிடைத்திருக்கும் இந்த வாழ்வை உபயோகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதை எப்படி செய்ய முடியும். இதை நினைக்கும்போது எனக்கு அவ்வையார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது. வானகம் திறந்து வழிவிடும் அந்த அற்புதமான பாடலை எந்து நண்பர் திரு. செல்வமூர்த்தியுடன் - நண்பர் செல்வமூர்த்தி ஒரு பெரிய விஞ்ஞானி - அவருடன் சேர்ந்து உங்களுக்கு பாடிக் காட்ட விரும்புகிறேன்.
அரிது அரிது மானிடராதல் அரிது
அதனினும் அரிது கூன் குருடு
செவிடு பேடு நீங்கி பிறத்தல்
கூன் குருடு செவிடு பேடு நீங்கி
பிறந்தாலும் ஞானமும்
கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயத்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தல் அரிது
தானமும் தவமும் தான் செய்தக் காலையில்
வானகம் திறந்து வழிவிடுமே
இந்தப் பாடல் நன்றாக இருந்ததா? இந்தத் தருணத்தில் என் மனதில் அந்த மகா மனிதர் வள்ளுவர் நினைவுக்கு வருகிறார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அவரது அற்புதமான நூலில் எனக்கு மிகவும் பிடித்தது ஒரு குறள்.
அந்தக் குறள்:
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு
இதன் பொருள் என்ன? The higher you aim you will raise to that level. You will succeed. This is the message. இரண்டு ஆசைகள் நான் சமீபத்தில் சென்னையில் அருங்காட்சியகத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்டேன். அங்கு என்னுடைய இரண்டு ஆசைகளை சொன்னேன். அதை உங்களுக்கும் சொல்கிறேன். அந்த ஆசைகளில் ஒன்று திருவள்ளுவர் கைப்பட எழுதிய திருக்குறள் ஓலைச்சுவடியை காணவேண்டும் என்று. அது முடியுமா? என் நண்பர்கள் பலர் அது சாத்தியமே இல்லை என்று சொல்கிறார்கள். அவ்வோலைச் சுவடிகள் கால வெள்ளத்திலே கரைந்து காற்றிலே கலந்திருக்கும் என்கிறார்கள். அது உண்மையா? இதுவா உண்மை நிலை? நான் உங்களைக் கேட்கிறேன். எனக்கு என்னவோ தோன்றுகிறது அந்த original இந்தியாவில் எங்காவது கிடைக்கும் என்று. அதைக் கண்டுபிடிக்க வேண்டும். இரண்டாவதாக, அந்த கவிஞன், திருக்குறளில் எங்குமே தான் யார்? என்ன குலம்? எந்த நாடு? எந்த மதம்? என்று ஒரு இடத்திலும் சொல்லவில்லை. மனிதனை பிளவுபடுத்தும் மதத்தையோ, நாட்டையோ அல்லது இனத்தையோ குறித்துப் பாடவில்லை. அவர் எல்லாக் குறளும் எல்லாக் காலத்துக்கும் பொருந்துமாறு பாடினார். இந்த மனிதனில் அறிவு ஒளியைப் பாருங்கள். அவன் எந்த சூழ்நிலையில் திருக்குறளை எழுதினான்? எந்த சூழ்நிலையில் வாழ்ந்தான்? இந்தக் காலத்தில் மனித சமூகம் பல சச்சரவுகளில், பல பிளவுகளில் வாழ்வதை காணும்போது வள்ளுவர் வாழ்ந்த காலத்தைப் பற்றிய ஆராய்ச்சி மிக முக்கியம். இந்த ஆராய்ச்சியால் நம் நாட்டில், ஏன், இந்த உலகில் ஒற்றுமையை கொண்டுவர முடியும் - என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது பெரும்பணிதானே? இந்தியாவில் உள்ள சிந்தனையாளர்களும், அமெரிக்காவில் உள்ள உங்களைப் போன்ற தமிழ் சங்கத்தினரும் சேர்ந்து இந்த முயற்சியை செய்ய வேண்டும். PURA நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? உங்களில் பலர் சிறு சிறு கிராமத்தில் இருந்து வந்திருப்பீர்கள். சிலர் நகரத்தின் அருகிலுள்ள கிராமங்களைப் பற்றி அறிந்திருப்பீர்கள். நம் நாடு முன்னேற்றமடைந்து வளமான நாடாக மாறவேண்டும் என்றால் இந்த கிராமங்கள் செழிப்படைய வேண்டும். அதற்கு ஒரு முயற்சியாக PURA (Providing Urban facilities in Rural Areas) என்ற திட்டம் உருவாகியுள்ளது. புரொபஸர் இந்திரேசன் - அவர் ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர் - I.I.T Director ஆக இருந்தவர். அவருடன் சேர்ந்து உருவாக்கியுள்ள இந்த திட்டத்தைப் பற்றி உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். அத்திட்டத்தின்படி கிராமங்களை செழிப்படையச் செய்ய அங்கு நல்ல connecitivity கொடுக்க வேண்டும். முதலில் நல்ல சாலைகள் அமைக்க வேண்டும். அதில் போக்குவரத்துக்கென பஸ்களும், கல்விக்கென பள்ளிக்கூடங்களும், வைத்தியத்திற்கென மருத்துவமனைகளும் அமைத்து physical connectivity கொடுக்க வேண்டும். அதன்பிறகு Electronic connectivity கொடுக்கவேண்டும். அதாவது டெலிபோன், இண்டர்நெட் வசதிகள் கொடுக்கவேண்டும். இதன் மூலம் டெலிமெடிஸின், டெலி எஜுகேஷன், இ-கவர்னென்ஸ் போன்ற வசதிகள் ஏற்படும். நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் knowledge connectivity (அறிவு இணைப்பு) அளிக்க வேண்டும். அதாவது தொழிற்கல்வி வசதிகள் மற்றும் virtual classroom வசதிகள் செய்யவேண்டும். இவை அனைத்தும் கொடுத்தால் கிராமங்கள் செழிப்படையும். கிராமங்கள் செழிப்படைந்தால் மாநிலங்கள் செழிப்படையும். மாநிலங்கள் செழிப்படைந்தால் நம் நாடு வளமான நாடாகும். நாடுகள் செழிப்படைந்தால் உலகம் செழிப்படையும். இந்த முயற்சியில் நீங்களும் பங்காற்றலாம். ஒரு வளமான வலிமையான பாரதத்தை நாமெல்லாம் ஒன்றுசேர்ந்து உருவாக்க வேண்டும். இளம் உள்ளங்களில் பொறி ஏற்றுவோம் இந்த நேரத்தில் எனக்கு நான் எழுதிய ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. அதை நண்பர் செல்வமூர்த்தி இங்கு உங்களுக்கு பாடிக் காட்டுவார்.
வளமான நாடாக்குவோம்
இள உள்ளங்கள் பொறி ஏற்றியே
வளமான நாடாக்குவோம்
இள உள்ளங்கள் பொறி ஏற்றியே
அறிவாற்றலும் தொழில் மாட்சியும்
எங்கள் லட்சியம் ஈட்டிடும் ஆயுதமே
சிறு லட்சியந் தனில் சிந்தனை
வீணாவதை மாபெரும் குற்ற மென்போம்
வளமான நாடாக்குவோம்
இள உள்ளங்கள் பொறி ஏற்றியே
பொருள் வளமோடு நன்னெறியோடு
நம் பாரதம் உயர்ந்திட உழைத்திடுவோம்
கோடிகள் நூறாகிலும்
இந்த லட்சியச் சுடரினை பரப்பிடுவோம்
வளமான நாடாக்குவோம்
இள உள்ளங்கள் பொறி ஏற்றியே
எனக்கு உங்களை எல்லாம் பார்த்து பேசியதில் மிக்க மகிழ்ச்சி பிறக்கிறது. நீங்கள் எல்லோரும் நன்றாக உழைத்து வாழ்வில் வெற்றியடைய இறைவன் உங்களுக்கு எல்லாம் அருள் கொடுப்பானாகுக. இப்போது உங்களில் ஒருசிலர் 8 அல்லது 4 பேர் தமிழிலேயே கேள்வி கேட்டால் நான் பதில் தர தயாராக இருக்கிறேன். உங்கள் எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
ஆ.ப.ஜெ அப்துல் கலாம், 5.7.2003 இது குடியரசுத் தலைவரின் இணையப் பக்கத்திலிருந்து யூனிகோடுக்கு மாற்றப்பட்டது.

கர்நாடகாவில் நாங்கள்தான் பூர்வக்குடிகள்! நாங்கள் பிழைக்கவந்த தமிழர்கள் இல்லை

பெங்களுர் வாழ் தமிழ் மக்களுகெல்லாம் தாம் இம் மண்ணின் மைந்தர் அல்ல பிழைக்க வந்த மக்கள் என்ற தவறான என்ணம் இருக்கின்றது. அந்த கருத்தாக்கம் தவறு தமிழரே இம் மண்ணின் பூர்வ குடிகள் என்பதை ஆதாரத்துடன் நிறுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
2001-வருட மக்கள் தொகை கணக்குப்படி கருநாடகத் தமிழரின் எண்ணிக்கை 95-இலக்கம். அவர்கள் எல்லாம் வந்தேறிகளாய் இங்கு வந்தவர்களா? தொன்று தொட்டு இங்கேயே வாழ்ந்து வந்தவர்களா? இதற்கு விடை காண, வரலாற்றை விவரிக்க வேண்டும். 1956-ம் ஆண்டில் மொழி வாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டன, அதன் பிறகு, பழைய சென்னை மாகாணத்திலிருந்த எல்லையோரப் பகுதிகளான பெங்களூர், கோலார் தங்கவயல், குடகு, பெல்லாரி, சித்திரதுருகம், கொள்ளேகாளம் போன்ற இடங்களில்தான் கரு நாடகத் தமிழர்கள் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர். அங்கு வாழ்ந்துவரும் தமிழர்கெல்லாம் அப்பகுதிகளுடனான தனி வரலாறு உண்டு. பத்திராவதி, சிக்கமக்ளூர், சிவமுகா போன்ற பகுதிகளில் உள்ள இரும்பாலைகள், கரும்பு தோட்டங்களில் வேலை செய்ய கண்கானி முறையில் ஆசைக்காட்டியும் வலியவும் தமிழர்கள் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் பணிக்கமர்த்தப்பட்டனர். கருநாடகத்தின் உட்பகுதியில் தனி பண்பாட்டு தீவுகளாக வாழ்வமைத்துக் கொண்டவர்கள் இவர்கள். ஆனால் பெங்களூர் மற்றும் தங்க வயல் தமிழர்களின் நிலையோ, இவற்றிலிருந்து முற்றிலும் மாறுப்பட்டவை. பெங்களூர் தமிழர்கள் நகரின் மக்கள் தொகையில் தற்போது 35% விழுக்காடுகள் உள்ளனர். முசுலிம்களோ, பெங்களூரில் குறிப்பிட்ட அளவில் உள்ளனர். கன்னடரோ, கருநாடகத்தின் தலைநகரில் 25% விழுக்காடுதான் உள்ளனர். தெலுங்கரில் சிலரும் மராட்டியரில் சிலரும் தங்களை கன்னடர் என்றே சொல்லிகொள்கின்றனர். பழைய சென்னை மாகாணத்தில் இருந்து சில பகுதிகளையும், ஐதராபாத் நிசாமிடமிருந்து சில பகுதிகளையும், பம்பாய் மாகாணத்திருந்து சிலபகுதிகளையும், மைசூர் மாகாணத்தின் சில பகுதிகளையும் இணைத்து கருநாடக மாநிலம் அமைக்கப்பெற்ற பின்னரே கன்னடர்கள் பெங்களூர் நகருக்கு பெரிய அளவில் வந்து குடியேறத் தொடங்கினார்கள் என்பதே வரலாற்று உண்மை.
பெங்களூரிலும், கோலார் தங்க வயலிலும் காணப்படும் தமிழர்-கன்னடர் இனப்பூசல் தமிழர்கள் பிழைப்புத் தேடி வந்தேறியதால் வந்த ஒரு பூசல் அன்று. தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த தமிழகத்தின் எல்லைப்புறத் தமிழ்ப்பகுதிகளை 1956-ம் ஆண்டில் "மொழிவழியில்" கன்னடருக்கு அரிந்துகொடுத்தமையால் வந்த வினையே அப்பூசலாகும். அண்மையில் பெங்களுருக்கு வந்து குடியேறிய கன்னட வெறியர்கள், இப்பெங்களுரின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளாமல், இப்பகுதியில் தொன்று தொட்டுவாழ்ந்து வரும் தமிழர்கள் இங்கு அண்டி பிழைக்க வந்தவரே என்று சொல்லித் தமிழரை விரட்டவும் அழிக்கவும் பார்க்கின்றனர். இந்நிலையில், பெங்களுரின் வரலாற்றை சுருங்கப் பார்க்கலாம். பத்தாம் நூற்றாண்டிலேயே பெங்களுர் மாவட்டத்தின் பல பகுதிகள் காஞ்சியைத்தலை நகராகக் கொண்டிருந்த பல்லவர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன. கி.பி.997-ம் ஆண்டில் ஓசக்கோட்டை முதலான இம் மாவட்டத்தின் பல பகுதிகள் சோழ அரசன் இராசராசதேவனால் வெல்லப்பட்டன. மாகடிப் பட்டணத்தை 1139-ம் ஆண்டில் நிறுவியவர்கள் சோழர்கள்தான். இன்று எலவங்கா என்றழைக்கப்படும், பெங்களுர் பகுதி சோழவள நாட்டின் ஒருபகுதியாக இருந்தது. அதற்கு "இலைப்பாக்கநாடு" என்று பெயர். இந்த இலைப்பாக்கநாடு ஹொய்சோழர்கள் ஆட்சியில் "எலவக்கா" என்றாகி பிறகு "எலவங்கா" என்று திரிந்தது. சோழ கங்கர்கள் அல்லது நுளம்பர்கள் என்னும் சிற்றரச மரபினர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முதலி சோழர்க்கு அடங்கிய சிற்றரசாக ஆண்டு வந்ததைக் கல்வெட்டுகள் காட்டுகின்றன. மைசூர் மாவட்டத்திலுள்ள தலைக்காட்டை தலைநகராக் கொண்டு ஆண்டு வந்த கங்கர்கள் தமிழையே பேசி வந்ததால், தமிழ் கங்கர் எனப்பட்டனர். Source : (பெங்களுரில் சோழர் ஆட்சியா..? )
தொடரும்
அன்புடன்அரவிந்தன்
பெங்களூர்

இன்றைய குறள்

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று

விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை

அறத்துப்பால் : விருந்தோம்பல்

அமைதி எப்படி கிடைக்கும்?

"பல்லைக்காட்டிச் சிரிப்பு சிறுபிள்ளைத்தனமானது. உங்கள் மகிழ்ச்சியைக் காட்டிக்கொள்ள ஏதாவது காரணமிருந்தால் புன்னகை செய்வதே போதும்"

- புத்தர்

தமிழோசை

  • பாகிஸ்தானின் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு தற்போது நாடு கடந்து வாழ்ந்து வரும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீஃப் நாடு திரும்பலாம் என்று பாகிஸ்தானின் உச்சநீதிமன்றம் தீர்பளித்துள்ளது
  • இந்தியாவில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைக் கவிழ்க்கும் எண்ணம் இடதுசாரிக் கட்சிகளுக்கு இல்லை. ஆனாலும் அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாடு குறித்த அரசின் முடிவையடுத்தே ஆதரவு குறித்து தெரிவிக்கப்படும் என இந்திய இடதுசாரிகள் கூறியுள்ளனர். மேலும் இன்றைய (ஆகஸ்ட் 23 வியாழக்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

August 22, 2007

தமிழ்நாடு அரசின் கேபிள் தொலைக்காட்சி : ஜெயிப்பது யார்? கலைஞரா? மாறனா? - பகுதி : 1

கலைஞர் கருணாநிதிக்கும் மாறன் பிரதர்ஸ்-க்கும் போர் தொடக்கம்! பொறுத்திருந்து பார்ப்போம்!!

ஜெயிப்பது யார்? கலைஞரா? மாறனா? - பகுதி : 2

ஜெயிப்பது யார்? கலைஞரா? மாறனா? - பகுதி : 3

"பாதங்கள் நடக்கலானால் பாதைகள் தடுப்பதில்லை"

இன்றைய சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள், பணம் படைத்தவர்கள் அனைவருமே வசதி வாய்ப்புகள் பெருகும்போது அதனை எப்படிப் பல மடங்காகப் பெருக்கலாம் என்று நினைக்கும் இந்தச் சுயநலம் மேலோங்கும் காலத்தில், இயலாதவர்களுக்கும் ஏழைக்குழந்தைகளுக்கும் எப்படியெல்லாம் உதவமுடியும் என்ற நல்லெண்ணத்தில் கிட்டத்தட்ட 28 வருடங்களாக யாருக்கும் தெரியாமலே இப்படியொரு சேவையைச் செய்துவந்திருக்கிறது மரியாதைக்குரிய நடிகரும் நல்ல மனிதருமான திரு.சிவகுமார் குடும்பம்! அவர்களின் இந்த அற்புதமான தொண்டினையும், சேவையையும் நாம் அனைவரும் பாராட்டாமல் இருக்கமுடியாது.

இன்றைய குறள்

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று

விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்கப் பண்பாடல்ல

அறத்துப்பால் : விருந்தோம்பல்

அமைதி எப்படி கிடைக்கும்?

"நல்ல செயல்களையே செய்யுங்கள். பிறர் பொருள் மீது ஆசை கொள்ளாதீர்கள். சிறு உயிருக்குக் கூட தொந்தரவு தராதீர்கள். இத்தகைய வாழ்க்கை வாழ்பவர்கள் புனிதமானவர்கள் ஆவர்"
- புத்தர்

காயாத கானகத்தே

  • தமிழ் நாடக வரலாறு குறித்து தொடர்
    தமிழ் நாடகத்துக்கென்று தனியான ஒரு பாணிமட்டுமல்லாது, சிறப்புமிக்க ஒரு வரலாறும் உள்ளது.
    தெருக்கூத்தில் ஆரம்பித்து, இலக்கியம் வரை பல்வேறாகப் பரிமாணித்துள்ள தமிழ் நாடகத்தின் வளரச்சி குறித்து பெட்டகத் தொடர் இது.
    தமிழ் சினிமாவின் அடித்தளமாக இருந்த நாடகம், அரசியல் களத்திலும், சமூக களத்திலும் பெரும் பங்காற்றியுள்ளது.
    தமிழ் சமூகத்தில் நாடகம் ஆற்றிய பங்கு குறித்தும், தற்போதைய உலகில் நாடகம் சந்திக்கும் சவால்கள் குறித்தும் நமது தமிழக செய்தியாளர் டி என் கோபாலன் இந்த நீண்ட தொடரைத் தயாரித்து வழங்குகிறார்.
    நாடகத் துறையில் புகழ்பெற்று விளங்கியவர்களின் செவ்விகளுடன், தமிழ் நாடக வரலாற்றை இந்தத் தொடர் மூலம் நேயர்கள் அறிந்து கொள்ளலாம். இணைப்பில் செல்க... http://www.bbc.co.uk/tamil/news/story/2006/10/061031_streetplay.shtml
  • இந்தியாவுக்கும் - ஜப்பானுக்கும் இடையேயான உறவுகள் வெகுவாக மேம்படும் என்று ஜப்பானியப் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
  • இராக் அரசாங்கம் குறித்த அமெரிக்க விமர்சனங்கள் பொறுப்பற்றவை என்றும், நாகரீகமற்றவை என்றும் இராக்கிய பிரதமர் நூரி அல் வர்ணித்துள்ளார். மேலும் இன்றைய (ஆகஸ்ட் 22 புதன்கிழமை 2007) "BBC" செய்திகளுக்கு இணைப்பில் செல்க....

"போங்கடா நீங்களும் உங்க தேசியமும்" பாமரனின் பகிரங்கக் கடிதம்!

‘Patriotism is the last resort for the Culprits.’ - மார்டின் லூதர் கிங்.
“என் தாய் நாடு இந்தியா…இந்தியர் அனைவரும் எனது உடன்பிறப்புகள்…” படித்துக் கொண்டே போனான் மகன். அவன் படிக்கப் படிக்க சிரிப்பு வந்தது.
இது கர்நாடக இந்தியர்களுக்குப் புரிபடவில்லையே என்று. காவிரி நீர் பங்கீடு குறித்த பிரச்சனை வந்தாலே போதும் நமது ‘தேசியக்’ கட்சிகளின் பாடு திண்டாட்டம்தான். கர்நாடகாவிலுள்ள காங்கிரஸ்காரர்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக திரண்டு ‘சொட்டு நீர்கூட கொடுக்கக்கூடாது’ என்று போடுவார்கள் தீர்மானம். கர்நாடக காங்கிரஸ் சொல்வது சரியா…
தமிழக காங்கிரஸ் சொல்வது சரியா… இதில் எது சரி…? வாயே திறக்காது அவர்களது ‘தேசியத்’தலைமை.

ஜனதா தளம் மட்டும் சும்மாவா… ஐக்கியமோ… ஐக்கியமற்றதோ… யாருக்கும் குறைந்தவர்களா என்ன…? எடுத்துவிடு அங்கொரு அறிக்கை… இங்கொரு அறிக்கை… இது குறித்து இவர்களது தலைமையும் கப்சிப். இந்தத் ‘தேசியச்’ சிக்கலில் சிக்கிக் கொள்ள விரும்பாத மற்ற தலைமைகளோ… ‘நயாகரா நீர் வீழ்ச்சியைத் தமிழகத்திற்குத் திருப்பிவிட வேண்டும்…செவ்வாய் கிரத்தில் தண்ணீரைக் கண்டுபிடித்து தாமிரபரணியோடு இணைக்க வேண்டும்…’ என்றெல்லாம் அள்ளி வீசுவார்கள். காஷ்மீரிலுள்ள பண்டிட்டுகளுக்காக கண்ணீர் வடிப்பவர்கள் காவிரியையெல்லாம் கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்பது வேறு கதை. மொத்தத்தில் கேணையர்கள் நாம்தான். நமக்கு தேசபக்தியை டன் கணக்கில் ஊட்டோ ஊட்டென்று ஊட்டும் தேசிய ஒருமைப்பாட்டின் ஒட்டுமொத்த ஏஜண்டுகளோ இந்த விஷயத்தில் மட்டும் முக்காடு போட்டுக் கொண்டு ஓடி ஒளிந்து கொள்வார்கள்.ஆக இவர்களது தேசீயம்… ஒருமைப்பாடு… எல்லாம் தமிழகத்திற்கு மட்டும்தான். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை வித்தியாசமானதொரு‘தேசிய ஒருமைப்பாட்டு’ பார்முலாவே வைத்திருக்கிறார்கள்.
பார்த்திபனாகட்டும்… அர்ஜுனாகட்டும்… விஜயகாந்த் ஆகட்டும்… முதலமைச்சர் என்றால் கடத்தப்பட வேண்டும். பிரதமர் என்றால் காப்பாற்றப்பட வேண்டும்… என்பதே அது. இந்திய விடுதலைக்காவே போராடிய வ.உ.சி.யை பற்றிப் படம் எடுக்கும்போதுகூட ‘கப்பலோட்டிய தமிழன்’ என்றே எடுத்தார்கள். ஆனால் டிராபிக் போலீசைத் தட்டிக் கேட்கிற கிழடுக்குப் பெயர் ‘இந்தியன்’.

போதாக்குறைக்கு ’40 லட்சம் தமிழர்கள் ‘பிணைக் கைதிகளாக’ கர்நாடகாவில் இருக்கிறார்கள்…பெருமூச்சையும் கொஞ்சம் மெதுவாக விடுங்கள்…’ என்கிற ரகத்தில் வேதம் ஓதுகிறார் படையப்பா. இது அரசு தூதரல்ல. தேவதூதரே போனாலும் தீர்க்கமுடியாத பிரச்சனை… ஆகவே 40 லட்சம் தமிழரின் பாதுகாப்புக்காக முறத்தால் புலி துரத்திய கூட்டம் வாயையும் மற்றதையும் மூடிக் கொண்டிருப்பது தான் தேசிய சேவை. அரசியலைப் பொறுத்தவரை… ‘தேசிய’ அரசியலில் குப்பை கொட்டி விட்டு மாநிலக் கட்சியானவைகளும் உண்டு… உள்ளூரிலேயே ஓணான் பிடிக்க முடியாத ‘ஜாம்பவான்கள்’ ‘தேசிய’ அரசியலை வெட்டி முறிக்கக் கிளம்பிய கதைகளும் உண்டு. ஆனால் அப்பாவித் தமிழர்களைப் பொறுத்தவரை… ‘தேசிய ஒருமைப்பாடு…’ ‘இறையாண்மை…’ என்பதற்கெல்லாம் அர்த்தமே வேறு. ஈழத்தைப் பொறுத்தவரை இலங்கையின் ‘இறையாண்மைக்குப்’ பங்கம் வராதவாறு உதை வாங்க வேண்டும்.

பம்பாயிலோ… கர்நாடகத்திலோ… என்றால் இந்தியாவின் இறையாண்மைக்கு எந்த பங்கமும் நேராமல் உதை வாங்க வேண்டும். எங்கு எவ்வளவு வாங்கினாலும் அங்கங்குள்ள அரசுகளின் இறையாண்மை பாதிக்கப்படாமல் வாங்கவேண்டும் என்பதே தேசபக்திக்கு அடையாளம்.

போங்கடா நீங்களும் உங்க தேசியமும்.
நன்றி: தீராநதி

August 21, 2007

தோழர் ஜீவா

பொதுவாழ்க்கையில் அரசியலில் எத்தனையோ பேர் இயங்கியுள்ளார்கள். பலர் தலைவராகவும் அறியப்படுகிறார்கள். ஆனால் சிலர் தாம் பொதுவாழ்க்கையில் இயங்குவதற்கான முன் மாதிரிகளை நமக்கு விட்டுச் சென்றுள்ளனர். குறிப்பாகத் தமிழகச்சூழலில் முற்போக்கு, சனநாயக, இடதுசாரிச் சிந்தனை மரபின் முகிழ்ப்புக்கும் அதனின்று மேற்கிளம்பும் செயற்பாட்டுக்கும் உறுதியான தளம் அமைத்தவர்களில் ப. ஜீவானந்தத்துக்குத் தனியான இடமுண்டு. தமிழ் மரபுக்குள்ளிருந்து முற்போக்கு சனநாயக இடதுசாரிச் சிந்தனை மற்றும் செயல் வாதத்துக்கு உத்வேகம் கொடுத்தவர் ஜீவா என்று கூறலாம். தமிழ்நாட்டில் நிலவி வந்த காந்திய, பெரியாரிய, மார்க்சியச் சிந்தனைகளின் தாக்கத்துக்கு உட்பட்டு தமிழ்ச் சமூகத்தில் புரட்சிகரமான மாற்றம் உருவாகத் தீவிரமாக உழைத்தவர் ஜீவா.
இவர் தமிழறிஞர், ஆசிரியர், எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர், பத்திரிகையாளர், பகுத்தறிவுவாதி, தேசியவாதி, போராளி, பொதுவுடைமைவாதி, விவசாயத் தொழிலாளர்களின் உற்ற தோழன், போராட்டக்களம் பல கண்ட தளபதி... என்றெல்லாம் பலவாறு சொல்லி ஜீவாவைப் புகழும் மரபு இன்றுவரை உள்ளது. இவை வெறும் அலங்கார வார்த்தைகள் அல்ல. ஜீவாவை அவர் வாழ்ந்த காலத்தில் வைத்துப் புரிந்து கொள்ளும்போது மேற்குறித்த பண்புகளுக்கான கூறுகள் வெளிப்பட்டன என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. தமிழரின் மொழி, இனம், மற்றும் நாடு சார்ந்து ஜீவா முழங்கிய சொற்கள் வெறும் உணர்ச்சி மயமானவை அல்ல. தமிழ்ப் பண்பாடு மற்றும் சிந்தனை மரபில் இழையோடிவரும் உயிர்ப்பான முற்போக்கு, சனநாயக, இடதுசாரி மரபை மீளக்கட்டமைக்கும் இலட்சிய பூர்வமான நடைமுறைகள் கொண்டவையும் ஆகும். இதற்கேற்ற சொல்-செயல் இணைவுதான் ஜீவா. சமூக, அரசியல், கலாசார தளங்களில் கொள்கை சார்ந்த விளக்கங்கள் அறிவுபூர்வமாக வேண்டிநின்ற காலத்தில் ஜீவாவின் வருகை அதனைத் தக்கவாறு பூர்த்தி செய்யத் தொடங்கிற்று. தமிழ்ச் சமூக இயக்கத்தின் விமரிசனப் பரப்பில் செயற்பாட்டாளராக ஜீவாவின் பாகம் இன்னும் தொடர்வதற்கான முழுச்சாத்தியத்தையும் கொண்டுள்ளது. இதனாலேயே ஜீவா தலைவராக, சிந்தனையாளராக, செயற்பாட்டாளராக, தொண்டராக இனம் காணுவதற்கான முழுத் தகுதியையும் வெளிப்படுத்தியுள்ளார், வாழ்ந்துள்ளார்.
"கொள்கை எங்களுக்குக் கிடையாது" என்கிறார் ஸ்ரீமான் ராஜகோபாலச்சாரியார். எங்கள் கொள்கையெல்லாம் ராஜாஜியை எதிர்ப்பது ஒன்றுதான் என்று கூறுகிறார். ஏன் என்று கேட்கிறேன்? ராஜகோபாலாச்சாரியை எதிர்ப்பதற்கு ஒரு ஐக்கிய முன்னணி அவசியமில்லை. அவர் ஒருவரை மாத்திரம் எதிர்ப்பதற்கு ஐக்கிய முன்னணி ஒன்று ஏற்படுத்தப்பட்டிருக்குமேயானால், அதைப் போன்ற அவசியமற்றதான வேறு ஒரு கட்சி இந்த நாட்டில் இருக்க முடியாது. ஒரு ராஜாஜியை எதிர்ப்பதற்காகவோ 10 இலட்சக் கணக்கான மக்கள் இந்த மாகாணம் முழு வதிலும் வோட்டுப் போட்டார்கள்? காங்கிரஸ்காரர்களுடைய அதிகார பலத்தை எதிர்த்து, காங்கிரஸ்காரர்களுடைய திமிர் நடத்தையை எதிர்த்து, காங்கிரஸ்காரர்களுடைய ஜபர் தஸ்துக்களை எதிர்த்து இவ்வளவையெல்லாம் எதிர்த்து 10 ஆயிரக் கணக்கில் வெள்ளமாகத் திரண்டு வந்து வோட்டுப் போட்டார்கள். "இவ்வாறு சட்டப்பேரவையில் முழங்கினார் ஜீவா. இந்த முழக்கம் ஜீவாவின் முதல் முழக்கம். 1952 ஜூலை 1-ம் தேதி தொடங்கிய ஜீவாவின் இந்த முழக்கம் சட்டப்பேரவையில் அன்று தனித்துவமாக ஒலித்தது. கொள்கை சார்ந்த நிலைப்பாடுகளை மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் அறிவுபூர்வமாகவும் எடுத்துரைத்த பாங்கு ஜீவாவினுடையது. அன்று காங்கிரஸ் கட்சி குறித்த ஜீவாவின் விமரிசனம் அக்காலத்து நடைமுறையில் அக்கட்சி எத்தகைய திமிர்த்தனத்துடன் விளங்கியது என்பதை தெளிவாக உணர்த்துகிறது. அக்கட்சியின் மீதான மோகம் எங்கும் புனிதப்படுத்தப் பட்டிருந்த பொழுது ஜீவாவின் இந்த முழக்கம் உண்மையின்பால் கவனம் குவிக்க வைத்தது. கொள்கை சார்ந்த நிலைப்பாடுகளின் மேல் கவன ஈர்ப்பை ஜீவா ஏற்படுத்தினார்.
சட்டப்பேரவையில் முற்போக்கு சனநாயக இடதுசாரி அரசியல், சிந்தனை, கலாசார நடை முறைகளுக்கான தளம் அமைத்துக் கொடுத்த பெருமை ஜீவாவையே சாரும். 1952 பிப்ரவரியில் 'வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை' என்ற அடிப் படையில் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் சென்னை வண்ணாரப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டார் தோழர் ஜீவா. இவரை எதிர்த்து நின்றவர்களை கட்டுக்காசு இழக்கச் செய்து வெற்றி வாகை சூடினார். ஜீவா தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாபெரும் தலைவராகப் பட்டிதொட்டியெங்கும் அறியப்பட்டிருந்தார்; வறிய விவசாய, தொழிலாள வர்க்கத்தின் பிரதிநிதியாகத் தன்னை வரித்துக்கொண்டு பணியாற்றினார்; மக்கள் தலைவராக வாழ்ந்து மறைந்தார். ஜீவாவின் ஆளுமை வளர்ந்த விதம் சராசரி எதிர்பார்ப்புக்களிலிருந்து முற்றிலும் மாறு பட்டதாகவே இருந்தது. குழந்தைப் பருவத்திலேயே ஆதிக்க எதிர்ப்புக் குணம் இவரிடம் இயல்பாக அமைந்திருந்தது. ஆனால் இதன் தோற்றம் முரட்டுத்தனமானது. எதிலும் மோதிப் பார்த்துவிடும் இயல்பு கொண்டது. இந்த இயல்புதான் இவரைப் போர்க்குணம் கொண்ட மனிதராக உருவாக்கியிருந்தது. அவரை நன்கு உணர்ந்த தோழர்கள் இவ்வாறுதான் பதிவு செய்துள்ளார்கள். இளவயதிலேயே தம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைக் கூர்ந்து நோக்கிவந்தார். சக மனிதர்களைக் கேவலப்படுத்தும் தீண்டாமைக் கொடுமைகள் அவரைப் பாதித்தது. அப்போதே மனவுறுதியோடு தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டார். தீண்டாமைக்கு உட்பட்ட மக்களுடன் நெருங்கிப் பழகிவந்தார் இந்தச் செய்கைகளால் இவருடைய வீட்டார் இவருடன் முரண்பட்டார்கள். இதனால் இவர் வீட்டை விட்டே வெளியேறினார். தனக்குச் சரியென்று படுவதில் எந்த விட்டுக்கொடுப்பும் செய்யாமல் உறுதியுடன் போராடும் மனவுறுதி ஜீவாவின் வாழ்க்கையை மாற்றியமைக்கத் தொடங்கியது. காரைக்குடிக்கு அருகில் உள்ள சிராவயல் என்ற கிராமத்தில் நண்பர்கள் உதவியுடன் 'காந்தி ஆசிரம்' என்ற பெயரில் ஆசிரமம் உருவாக்கினார். இதன்மூலம் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வாழ்விடங்களை உருவாக்கிக் கொடுப்பது ஜீவாவின் நோக்கமாக இருந்தது. இக்காலத்தில் வ.வே.சு. ஐயர் சேரன்மாதேவியில் நடத்திய 'பரத்வாஜ ஆசிரமம்' சாதிய உணர்வோடு நடத்தப்பட்டது பெரும் விவகாரமாக இருந்தது. இந்த நடைமுறையை எதிர்த்து ஈ.வே.ரா, வரதராஜுலு நாயுடு நடத்திய கிளர்ச்சியிலும் ஜீவா பங்கு கொண்டார். வ.வே.சு. ஐயர் நடத்திய ஆசிரமத்துக்கு மாறான ஆசிரமம் உருவாக்குவது தான் ஜீவாவின் நோக்கமாக இருந்தது. ஜீவாவின் ஆசிரமத்தில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள், பெண்கள் ஆகியோரை மிகுதியாகச் சேர்த்தார். இதைவிட இக்காலங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் இரவுப் பள்ளிக்கூடங்களை உருவாக்குவதிலும் அக்கறை கொண்டு செயற்பட்டார். ஜீவா நடத்திய ஆசிரமத்துக்கு காந்தி வந்தார். அத்தருணத்தில் நால்வருணப் பாகுபாட்டைப் பற்றி ஜீவா எழுப்பிய வினாவுக்கு அதனை ஆதரிக்கும் நிலை எடுத்து காந்தி பதில் கூறியமையால் காந்தியுடன் ஜீவாவுக்குக் கருத்து வேறுபாடு பிறந்தது. காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஆழமாகிவிடவே தலைவர் கும்பலிங்கத்துக்கும் ஜீவாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு தோன்றியது. ஜீவா ஆசிரமத்திலிருந்து விலகி நாச்சியார்புரத்தில் 'உண்மை விளக்க நிலையம்' அமைத்து அதனைச் சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்தார். ஜீவாவைத் தனித்தமிழ் இயக்கம் ஈர்த்தது. சுயமரியாதை இயக்கத்தில் இணைந்த பின்னர் தனது பெயரை 'உயிர் இன்பன்' என்று மாற்றிக் கொண்டார். தனித்தமிழ் இயத்தின் முதல்வர்களில் ஒருவரான மறைமலையடிகளை ஒருமுறை சந்திக்கச் சென்றார் ஜீவா. அப்பொழுது அடிகளார் 'போஸ்ட்மேன்', 'காரணம்' என்ற சொற்களைக் கையாண்டது கண்டு அதிர்ச்சியடைந்தார். தனித்தமிழ் இயக்கத்தின் நடை முறை குறித்து மேலும் ஆழமாக சிந்திப்பதற்கான தேவையை உணர்ந்தார். 1920களில் தமிழ்ச்சூழல் பல புதிய பரிமாணங்களை ஏற்றுச் செயற்பட்டது. காலனியம் உருவாக்கிய கல்வி மூலம் படித்தவர்-படிக்காதவர் என்ற சமூக முரண் உருவானது. ஏற்கனவே சமூகத்தில் புரையோடியிருந்த சமூக முரண்கள் புதிய வடிவம் பெறத் தொடங்கின. இப்பின்புலத்தில் பல்வேறு இயக்கங்கள் தோன்றின. 'தென்னிந்திய நல உரிமைச் சங்கம்', 'சுயமரியாதை இயக்கம்', 'தனித்தமிழ் இயக்கம்', 'தமிழிசை இயக்கம்' போன்ற இயக்கங்கள் தோன்றின. தமிழ்நாட்டுச் சமூக அரசியல் பண்பாடு கருத்துநிலைத் தளங்களில் இந்த இயக்கங்களின் தாக்கம் வலுவாக இருந்தன. இதைவிடக் காலனித்துவ ஆட்சிக்கெதிராகச் சுதந்திரப் போராட்டம் பல முனைகளிலும் வேகம் கண்டது. அரசியல், விடுதலை பற்றிய எண்ணக்கருக்கள் சமூகத்தின் மாறுநிலைக் காலகட்டத்தின் வாழ்வியல் புலமாக மாற்றம் பெற்றன. இதனால் சிந்தனையிலும், செயற் பாட்டிலும் புதிய தன்மைகளையும் புதிய பண்புகளையும் வேண்டிநின்றன. இயக்கங்கள் சார்ந்த அரசியல் போக்குகள் பல நிலைகளிலும் வெளிப்பட்டன. இந்த மாற்றங்களும் இயக்கங்களுக்கும் முகம் கொடுத்து, அவற்றின் தாக்கங்களுக்கு உட்பட்டு வளர்ந்த தலைமுறை யில் ஒருவராக ஜீவா இருந்தார். 1931-ல் விருதுநகரில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் பங்கு பற்றினார். சாதி ஒழிப்பில் மும்முரமாக ஈடுபட்டார்; பிரச்சாரமும் செய்தார். இது பொறுக்காமல் நண்பரொருவரே இவரை வெட்டரிவாளால் தாக்கிக் காயப்படுத்தினார். இந்தக் காயத்தழும்பு அவருடைய வாழ்நாள் முழுவதும் இருந்தது. 1932-ல் காங்கிரஸ் போராட்டத்தில் ஓராண்டு சிறைத்தண்டனை அடைந்தார். சிறையில் பகத்சிங்கின் தோழர்கள் சிலருடைய தொடர்பு கிடைத்தது. இதனால் சோசலிஸ்டாக மாறினார்.

பெரியார் காங்கிரஸிலிருந்து வெளியேறி குடியரசு இதழை உருவாக்கி அதன் மூலம் சுயமரியாதை இயக்கத்தைக் கட்டுவதில் மும்மரமாக ஈடுபட்டார். பெரியாரோடு இணைந்து செயற்படும் மனநிலையில் ஜீவா அப்பொழுது இருந்தார். 1935வரை சுயமரியாதை இயக்கத்தோடு தன்னை இணைத்துக் கொண்டார். 1934-ம் ஆண்டு பகத்சிங்கின் 'நான் நாத்திகன் ஏன்?' என்னும் நூலை ஜீவா மொழி பெயர்த்தார். இந்நூல் ஈரோடு பகுத்தறிவு நூற்பதிப்புக் கழக வெளியீடாக வெளிவந்தது. இதனால் ஜீவாவும், கண்ணம்மையும் (ஈ.வே.ரா.வின் தங்கை) கைது செய்யப்பட்டனர். கருத்துரிமைக்காக முதன்முதலில் தமிழகத்தில் சிறைசென்றவர்கள் இவ்விருவருமாகவே இருப்பார்கள். சுயமரியாதை இயக்கம் இக்காலங்களில் சோவியத் யூனியன் மீதும் லெனின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்ட இயக்கமாக இருந்தது. பெரியாரின் சோவியத் பயணம் மற்றும் அது தொடர்பான அவரது அறிக்கைகள் இதனை உறுதிப்படுத்தின. மார்க்சியச் சிந்தனையில் தன்னை இணைத்துக்கொண்ட மா. சிங்கார வேலரும் இக்காலங்களில் சுயமரியாதை இயக்கத்தோடு இணைந்து செயற்பட்டு வந்தார். இந்தச் சூழலில் சுயமரியாதை இயக்கம் காங்கிரஸ் கட்சியைவிட முற்போக்கானது என்று ஜீவா கருதினார். ஜீவா குடியரசு இதழில் பாடல்களையும், கட்டுரைகளையும் எழுதி வந்தார். பெரியார் நடத்திய மாநாடுகளிலும் சிறப்பாகக் கலந்து வந்தார். சோசலிசம், பகுத்தறிவு, விஞ்ஞான நோக்கு ஆகியவற்றைப் பிரச்சாரம் செய்வதில் முழுமூச்சுடன் ஈடுபட்டார். 1935-ல் நடைபெற்ற திருத்துறைப்பூண்டி மாநாட்டில் ஜீவா மற்றும் பெரியாரின் அணுகு முறைகளிக்கிடையே முரண்கள் வெளிப்பட்டன. இதனால் அவ்வியக்கத்திலிருந்து ஜீவா விலகிக் கொண்டார். பின்னர் 1936-ல் சாத்தான்குளம் அ. இராகவன் உள்ளிட்டோருடன் இணைந்து 'சுயமரியாதை சமதர்மக்கட்சி' என்ற அமைப்பைத் தொடங்கினார். இதன் சார்பில் 'அறிவு' என்ற இதழையும் தொடங்கினார். சுயமரியாதை சமதர்மக் கட்சி ஏன் தொடங்கப் பட வேண்டும்? சுயமரியாதை இயக்கத்தி லிருந்து இந்தக்கட்சி எந்தவிதத்தில் வேறு படுகிறது? இவற்றை விளக்கி ஒரு துண்டுப் பிரசுரத்தை ஜீவா வெளியிட்டார். சுயமரியாதை இயக்கம் பற்றிய ஜீவாவின் மதிப்பீடு எத்தகையது என்பதை இந்த ஆவணம் தெளிவுபடுத்துகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் சோசலிஸ்டு கட்சியும் இக்காலங்களில் இயங்கிவந்தது. இக்கட்சிக்குள் கம்யூனிஸ்டுகள் உட்புகுந்து செயற்படத் தொடங்கினார். கம்யூனிஸ்டுகளின் செயற்பாடுகள் பலமுனைகளில் நிகழ்ந்தன. இவர் களுடனும் இணைந்து ஜீவா செயற்பட்டு வந்தார். ஒரு கட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளராக ஜீவா தேர்ந்தெடுக்கப்படார். 1937-ல் ஜனசக்தி இதழின் ஆசிரியராகவும் பொறுப்பெடுத்தார். 'சோசலிஸ்டு வார இதழ்' என்ற தலைப்போடு ஜனசக்தி வெளிவரத் தொடங்கியது. தமிழக இடதுசாரி அரசியல் முகிழ்ப்பின் சின்னமாக ஜீவா இயங்கினார். அவரது பணிகள் பலநிலைகளில் வேகம் கண்டன. 1938 டிசம்பரில் 'தாமரை' இதழ் தொடங்கப் பட்டது. இதன் மூலம் இடதுசாரி இலக்கிய மரபுக்கான விரிதளம் உருவாக்கப்பட்டது. ஜீவா சங்க இலக்கியம், திருக்குறள், கம்பன், பாரதி படைப்புகள் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு மிக்கவராக இருந்தார். தமிழ் இலக்கிய மரபுகளுடன் பரிச்சயம் மிக்கவராக இருந்தது அவரது தனிச்சிறப்பு. சமூகம், இலக்கியம் பற்றிய புதிய பார்வைக்கான தளம் அமைத்துக் கொடுத்தார். 1930களின் இறுதியில் இருந்து தமிழ் இலக்கியம், தமிழிப்பண்பாடு குறித்து முற்போக்கு இடதுசாரிப் பார்வையை முன்னெடுத்து வளர்த்துச் சென்றார். திமுக வினர் 1950-களின் பின்னர் மேற்கொண்ட தமிழ் இலக்கியம் பற்றிய உரையாடல்களை ஜீவா 1930-களில் இறுதியில் இருந்து முன்னெடுத்தார். இதன் மூலம் பண்பாட்டுப் போராட்டக் களத்தில் ஜீவா முன்னோடியாகச் செயற்பட்டுள்ளார். இதனையே ஜீவாவின் 'தளமும் வளமும்' உறுதிப்படுத்துகின்றது. "குறிப்பிட்ட இனம் சார்ந்த பண்பாட்டு விழுமியங்களை கம்யூனிஸ்டுகள் எப்படி உள்வாங்குவது என்பதில் இந்திய இடது சாரிகள் மத்தியில் முரண்பட்ட அணுகு முறைகள் இருந்தன. ஜீவா இதில் தெளிவாகச் செயற்பட்டார் என்று கூற முடியும். அதுவே அவரின் மிகப்பெரும் பலம் என்று கூறலாம் பண்பாட்டுத் தளத்தில் இடதுசாரி இயக்கங்களின் செயல்பாடுகள் பல்வேறு விமரிசனங்களுக்கு இன்னும் கூட ஆட்படுத்தப்படுவதைக் காணமுடியும். இதில் ஜீவாவின் அணுகுமுறை வேறுபட்டிருந்தது" என்று பேரா.வீ.அரசு குறிப்பிடுவதை சமகாலப் பின்புலத்தில் வைத்து நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.
ஜீவா 1952-56 காலங்களில் சட்டமன்ற உறுப்பினராகச் செயற்பட்ட பொழுது அவரது சட்டமன்ற உரைகள் பண்பாட்டுப் போராளியாக அவர் செயல்பட்ட பாங்கை மிகத்துல்லியமாக அடையாளப்படுத்துகிறது. 'சட்டப்பேரவையில் ஜீவா' என்ற ஜீவபாரதி தொகுத்த நூல் இதற்கு சிறந்த ஆவணமாகும். தமிழ் ஆட்சிமொழி, பயிற்றுமொழி, நீதிமன்ற மொழி பற்றியெல்லாம் அவரது சிந்தனை விரிவானவை அறிவு பூர்வமானவை மேலும் மொழிவழி மாநிலங்கள் உருப்பெறுவதற்கும் கருத்தியல் விளக்கங்களை அறிவுபூர்வமாக முன்வைத்தவர்களுள் ஜீவாவுக்கும் முதன்மை யான பங்கு உண்டு. பண்பாட்டு தளத்தில் சிறந்த போராளியாக இயங்கினார். இந்தப் பின்புலம் பற்றிய விரிவான ஆழமான பார்வை நமக்கு இன்று வேண்டும்.
தெ. மதுசூதனன்

இன்றைய குறள்

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு

இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே

அறத்துப்பால் : விருந்தோம்பல்

அமைதி எப்படி கிடைக்கும்?

அமைதி என்பது ஆசை, தீய செயல், பொருட்களின் மீது விருப்பம் கொள்ளாமை ஆகியவற்றில் இருந்து விலகியிருப்பதால் கிடைக்கக் கூடியதாகும். இம்மூன்றையும் மனதில் வைத்துக்கொண்டு, அமைதியும் வேண்டுமென்றால் கிடைக்காது. அமைதி கிடைக்க இவற்றை நிச்சயமாக இழந்துதான் ஆக வேண்டும்
- புத்தர்

தமிழோசை

  • இந்தியா – அமெரிக்கா அணுசக்தி உடன்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் தொடர்பாக, அமெரிக்காவுக்கான இந்தியத்தூதர் ரோனன் சென் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்துக்களால் இந்திய நாடாளுமன்றத்தில்l பெரும் அமளி ஏற்பட்டது.
  • இராக்கை எதிர்நோக்கியுள்ள சவால்களுக்கு தீர்வு காணும் முகமாக சிரியாவுடன் அதிக அளவிலான ஒத்துழைப்பை இராக்கியப் பிரதமரான நூரி அல்மலிக்கி கோரியுள்ளார். இராக்கின் ஸ்திரத்தன்மைக்கு சிரியா ஆதரவளிக்கும் என அதன் அதிபர் கூறியுள்ளார். இன்றைய (ஆகஸ்ட் 21 செவ்வாய்க்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

August 20, 2007

தண்ணீரே வேண்டாம்! பெப்சி, கோகோ-கோலா போதும்!!

இன்று தண்ணீரே வேண்டாம். கோலா கோலா என்று அடம் பிடிக்கும் பிள்ளைகள், காலம் பூராவும் கோலாவையே குடித்து (அது பெப்சி கோலாவாக இருக்கட்டும் அல்லது கொக்கோ கோலாவாக இருக்கட்டும்) 100 வருடங்கள் சுகதேகியாக வாழ்வார்களா? 100 வயது வரை வேண்டாம். குறைந்த பட்சம் 80 வயது வரையாவது ஆரோக்கியமாக, கோலா கோலா என்று அலையும் நாளைய சமுதாயம் வாழுமா?

பெற்றோர்கள் தண்ணீர் அருந்தும் பழக்கத்தை, பிள்ளைகளுக்குச் சிறுவயதில் இருந்தே பழக்கினால், பல பாரதூரமான பக்கவிளைவுகளைத் தவிர்க்கலாமல்லவா? தண்ணீரின் அற்புதம் பற்றி இவர்கள் முழுமையாக அறிவது மிக அவசியம். பல உலக நாடுகளில், பல கோடி மக்கள் , நல்ல குடிநீர் இன்றி அவஸ்தைப்படுவதை இவர்கள் அறிவார்களா? சுத்தமான, நல்ல தண்ணீர் வசதி தாரளமாக இருக்க, இனிப்பும் வண்ணமும் சேர்த்து அதிக விலையில் விற்கும், மென்பானங்களை வாங்கி, நமது பிள்ளைகளுக்குக் கொடுப்பதை இனியாவது நிறுத்துவோமே.
ஐந்து இந்திய மாவட்டங்கள், பகுதியாகவும், ஒரு மாவட்டம் முழுமையாகவும், பெப்சி, கோகோகோலா என்ற இரு நிறுவனங்களின் மென்பானங்களின் விற்பனைக்குத் தடை விதித்துள்ளமை, பரபரப்பான செய்தித் தலைப்பாகி இருந்தது. கடைகளில் விற்பனையாகும் இந்த மென் பானங்களில் கிருமி நாசினிகளின் கலவை இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டிருப்பதால், இது உடல்நலத்திற்கு ஊறு விளைவிக்கும் என்பதே இவர்கள் குற்றச்சாட்டாக இருக்கின்றது. தொடர்ந்து படிக்க இணைப்பில் செல்க...

அமைதி எப்படி கிடைக்கும்?

"தவறான வழியில் பொருள் சேர்க்க வேண்டும் என்று எண்ணாதீர்கள். அவ்வாறு சேர்க்கப்பட்ட பொருள் நிலைக்காது. எவன் ஒருவன் நியாய வழியில் சம்பாதிக்கிறானோ, அவனே அனைவரிலும் நல்லவனாக திகழ்கிறான். அவனது வாழ்க்கையே நல்வாழ்க்கையாக இருக்கிறது"

-புத்தர்

ஆமடா சின்னத் தம்பி! திரு.ரமணன்

இசைக் கவி ரமணனின் இன்னொரு பாடல் இங்கே. நாட்டு நடப்புகளை, உள் மனத்தின் ஆற்றாமைகளை, ஏக்கங்களை, நம்முடன் கவிஞர் பகிர்ந்துகொள்கிறார்; வருத்தம் தோய்ந்த இந்த வரிகள், உங்கள் செவியோரம் இதோ வலம் வருகின்றன....... இந்த இணைப்பில் சென்று பாடலைக் கேளுங்கள்
http://tamil.sify.com/columns//fullstory.php?id=14451388

இந்தப் பாடலைப் பாடியவர்கள்: கவிஞர் ரமணன், சர்ஜனா.முதலில் பாடலைக் கேளுங்கள்: நேர அளவு: 4.42 நிமிடங்கள்உங்கள் கணினியில் இசை கேட்கும் அமைப்பு இல்லாதவர்களின் வசதிக்காக அந்தப் பாடலை எழுத்திலும் தருகிறோம்:


ஆமடா சின்னத்தம்பி!

ஆமடா சின்னத்தம்பி

அறிவுரொம்ப வளந்திருச்சி

அன்புமட்டும் மனசெவிட்டுக் குருவிபோலப் பறந்திருச்சி!

சாஞ்சி காலெ நீட்டுறாப்புலெ ஆயுளெயும் நீட்டிக்கலாம்

சட்டெதுணி மாத்துறாப்புலெ காலுகையெ மாத்திக்கலாம்

நட்டநடு வானத்துலெ நாடகம் நடத்திக்கலாம்

நாலு எண்ணி முடிக்குமுன்னெ நம்மவூரு போயிவரலாம்

ஆனாக்க நமக்குமட்டும் ஆழாக்கு அரிசியில்லெ

மானமில்லெ மதிப்புமில்லெ மண்ணுலே உரிமெயில்லே

மண்ணுல உரிமெயில்லே மானத்துல மாளிகெயாம்! (ஆமடா)


தப்பாமெ கணக்குப்போடும் பொல்லாத பூதங்களாம்

பத்தாளு வேலெகளெப் பாத்துக்குற ராச்சசனாம்

அப்பன் ஆயி வேணாமாம் செப்புக்குள்ளெ கொழந்தெகளாம்

ஆத்தாடி கல்லுகளுக்கும் நம்மப்போலெ உசிரிருக்காம்!

ஒழெக்கிற சாதிக்கும் உசிரு இருக்குதின்னு

பொழெக்கிற சாதிக்குப் புரியாமெ போகுறதென்ன?

குள்ளநரி அறிவாலே கோழிக்கு லாபமென்ன?

மண்ணுல போதாமத்தான் மானத்தெச் சொரண்டுறாய்ங்க

மானத்துக்கும் நம்மளெத்தான் மாரடிக்கக் கூப்பிடுவாய்ங்க.

இன்றைய குறள்

அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு

அன்பு நெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும், இல்லையேல் அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும்

அறத்துப்பால் : அன்புடைமை

தமிழோசை

  • இந்தியா அமெரிக்கா இடையேயான அணுசக்தி உடன்பாட்டை மேலெடுத்துச் செல்லக் கூடாது என இந்திய இடதுசாரிகள் தொடர்ந்து வற்புறுத்துகின்றன
  • துருக்கியின் புதிய அதிபருக்கான தேர்தலில் முக்கிய வேட்பாளரான வெளியுறவு அமைச்சர் அப்துல்லா குல் பற்றி பல மாதங்களாக நீடித்த சர்ச்சைகளுக்கு பின்னர் புதிய அதிபர் தேர்தலுக்கான ஆயத்தங்கள் இப்போது மீண்டும் தொடங்கியுள்ளன. மேலும் தொடர்ந்து இன்றைய (ஆகஸ்ட் 20 திங்கட்கிழமை 2007) "BBC" தமிழோசை செய்திகள் கேட்க இணைப்பில் செல்க.. http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

August 19, 2007

மாலனின் அரசியல்!

கடந்த வாரம் சிறீலங்கா பாஸ்போர்ட் பற்றி தமிழ் வலைப்பதிவுலகம் பற்றி எரிந்தது. இது பற்றி தமிழ் சசி அவர்கள் விரிவான பதிவு ஒன்று இட்டுள்ளார் மாலனின் அரசியல். அவர் இந்த பிரச்சினை பற்றி வாழ்வியல் மற்றும் அரசியல் கோணத்தில் மிக விரிவாக அலசி இருந்தார். எனக்கு தெரிந்த ஒன்றையும் இதன் மூலம் சொல்ல விரும்புகிறேன். சிறீலங்கா பாஸ்போர்ட்டில் ஒரு சிறப்பு இருக்கிறது. அது நம் யாருடைய பாஸ்போர்ட்டிலும் இல்லாதது. சிறீலங்கா பாஸ்போர்ட்டில் முகப்பு பக்கத்தில் தமிழ் இடம் பெற்று இருப்பது தான் அந்த சிறப்பு. உங்கள் பார்வைக்காக இதோ............................................

சென்னை பதிவர் பட்டறையில் மாலன் அவர்கள் வலைப்பதிவுகளில் நன்னடத்தை என்பது குறித்தும், ஈழத்தமிழர்கள் சிறீலங்கா பாஸ்போர்ட் வைத்துக் கொள்வது பற்றியும் சில கருத்துக்களை தெரிவித்துள்ளது தெரியவந்துள்ளது.

மாலன் சிறந்த பத்திரிக்கையாளர், எந்தவித பந்தாவும் இல்லாதவர் என்ற காரணத்தால் அவர் மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால் சிறந்த, நன்கு அறிந்த பத்திரிக்கையாளர் என்பதால் அவர் முன்வைக்கும் "அரசியலை" எதிர்க்காமல் இருக்க முடியாது.

  • புதியதாக வலைப்பதிய வருபவர்களுக்கு மத்தியில் அவர் விதைக்க விரும்புவதை "அதிகபட்ச ஜனநாயகம்" இருக்கும் வலைப்பதிவுகளில் எதிர்க்காமல் எங்கு சென்று எதிர்ப்பது?
  • இந்தப் பத்திரிக்கையாளர்கள் பணியாற்றும் பத்திரிக்கைகளுக்கு வாசகர் கடிதம் எழுதியா எதிர்க்க முடியும்?
  • அப்படி வாசகர் கடிதம் எழுதினாலும் அதனை இந்தப் பத்திரிக்கையாளர்கள் வெளியிடுவார்களா?
  • அல்லது இது வரை தீவிரமான மாற்றுக் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்களா?

நான் பள்ளியில் படிக்கும் பொழுது பொங்கல் சிறப்பு இதழாக ஒரு முறை புலம் பெயர்ந்த தமிழர் சிறப்பிதழ் என்ற ஒரு இதழ் வெளிவரும் என்று தினமணிக்கதிரில் அறிவித்திருந்தார்கள். அப்பொழுது தினமணிக்கதிரின் ஆசிரியராக இருந்தவர் மாலன் என்பதாக ஞாபகம். நானும் அந்த சிறப்பிதழுக்காக ஆவலுடன் இருந்தேன். வந்த பொழுது புலம் பெயர்ந்த சிறப்பிதழ் என்பது முழுக்க முழுக்க புலிகளுக்கு எதிரான இதழாக இருந்தது. அதைக் கண்டித்து நான் எழுதிய வாசகர் கடிதம் வெளிவரவேயில்லை.

ஆனால் இன்றைக்கு என் வலைப்பதிவு மூலமாக என் கருத்துக்களை கூற முடிகிறது. யாரையும் கேள்வி கேட்க முடிகிறது. ஒரு சாமானியனுக்கு இணையம் கொடுத்த இந்த ஜனநாயக உரிமை பலரின் கண்களை உறுத்துகிறது. இந்த ஜனநாயக உரிமையை முறிக்க அவர்கள் இணையத்தில் நன்னடத்தை என்பதை முன் வைக்கிறார்கள்.

இணையத்தில் பிரச்சனை இல்லை என்று நான் சொல்ல வில்லை. ஆனால் தமிழ் இலக்கிய சூழலிலும், தமிழக மற்றும் இந்திய வெகுஜன ஊடகங்களிலும் இருக்கும் பிரச்சனைகளை நோக்கினால் வலைப்பதிவுகளில் நடப்பது ஒன்றுமேயில்லை. ஆனால் அங்கெல்லாம் நன்னடத்தை வேண்டும் என யாரும் போதிப்பதில்லை.

எனக்கு முதன் முதலில் அறிமுகமான இலக்கிய சண்டை என்று சொன்னால் நான் பள்ளியில் படிக்கும் பொழுது சமுத்திரத்திற்கும், திலகவதிக்கும் இடையே நடந்த சண்டையை குறிப்பிடலாம். சாகித்திய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் சமுத்திரம் பெண் எழுத்தாளர்கள் குறித்து உளறி வைக்க, திலகவதி நாங்கள் இப்படி பட்டவர்களை அடிக்க செருப்புகளை தேடிக்கொண்டிருக்கிறோம் என்றார். பதிலுக்கு திலகவதியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமுத்திரம் தாக்க திலகவதி நீதிமன்றம் சென்று சமுத்திரம் என்னைப் பற்றி எழுதக்கூடாது என தடை உத்திரவு வாங்கியதாக ஞாபகம் இருக்கிறது.

அன்று தொடங்கி இன்று வரை தமிழ் இலக்கிய உலகில் எழுத்தாளர்கள் தங்களுக்குள் அடித்துக் கொள்வதை பார்த்திருக்கிறேன். வலைப்பதிவுகளில் நன்னடத்தைப் பற்றி பேசுகிறவர்கள் இந்த இலக்கியவாதிகள் எப்படி "உதாரண புருஷர்களாக" இருக்கலாம் என்பது குறித்து இலக்கிய மேடைகளில் பேசலாம்.

இந்திய வெகுஜன ஊடகங்களின் நன்னடத்தைப் பற்றி விளக்க வேண்டிய அவசியமில்லை. தயாநிதி மாறனை மைய அமைச்சர் பதவியில் இருந்து திமுக விடுவித்துக் கொண்ட பொழுது தினமலர் "கொசு தொல்லை ஒழிந்தது" என்பதாக தலைப்பு செய்தி வெளியிட்டது. தினகரன் அலுவலகம் மதுரையில் தாக்கப்பட்ட பொழுது "தஞ்சையில் எலிகளின் தொல்லை" என தலைப்பு செய்தி வெளியிட்டது. இதுவெல்லாம் ஒரு சில உதாரணங்களே. தனிமனித தாக்குதல் வெகுஜன ஊடகங்கள் முழுக்க நிறைந்து காணப்படுகிறது. அது மட்டுமா அப்பாவிகளை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் போக்கும் அதன் மூலம் அவர்கள் வாழ்வியலை சிதைக்கும் போக்கும் ஊடகங்களில் காணப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் ஹனீப் இவ்வாறே ஊடகங்களால் பயங்கரவாதியாக சித்தரிக்கப்பட்டார். பின்னர் அவர் நிரபராதி எனக்கூறிய பொழுது அந்த ஊடகங்கள் சிறு மன்னிப்பு கூட கோரவில்லை. அடுத்த பரபரப்பு செய்திக்கு மாறி விட்டன.

இன்றைய வணிக மயமான ஊடகங்களுக்கு மத்தியிலே வலைப்பதிவுகளிலும், சிற்றிதழ்களிலும் தான் காத்திரமான பல நல்ல படைப்புகள் வெளிவருகின்றன. வெகுஜன ஊடகங்களில் நல்ல படைப்புகள் வெளிவருவது எப்பொழுதோ நின்று போய் விட்டது. வலைப்பதிவுகளில் சிரீயஸான விடயங்கள் மட்டும் தான் வர வேண்டும் என்ற கோட்பாடு தேவையில்லை. வலைப்பதிவுகள் அதன் இயல்பான பாதையில் பயணிப்பதே நல்லது. அந்த வகையில் மொக்கைகள்/கும்பிகள் தேவையற்றவை எனச் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. வலைப்பதிவுகளில் அனைத்தும் கிடைக்கிறது. வருகின்ற வாசகர்களின் ரசனைக்கு ஏற்ப தங்களுக்கு தேவையானதை எடுத்துக் கொள்கிறார்கள்.

வலைப்பதிவுகள் ஒரு மாற்று ஊடகம். ஒரு சிலர் வெகுஜன ஊடகங்களை ஆக்கிரமித்து கொண்டு தங்களை மட்டுமே எழுத்தாளர்கள் என்பதாக உருவாக்கி கொண்ட முறைக்கு எதிராக "எழுதுபவன் எல்லாம் எழுத்தாளனே" என்பதை உருவாக்கிய சமதர்மம் வலைப்பதிவு உலகம். இங்கு மொக்கைகளும் கிடைக்கும், நல்ல காத்திரமான படைப்புகளும் கிடைக்கும். இதற்கு இலக்கணங்களையும், கோட்பாடுகளையும், நியதிகளையும் யாரும் வடிவமைக்க தேவையில்லை.

அப்படி நியதிகளை வகுத்தாலும் அதை உடைப்பதில் வலைப்பதிவர்களுக்கு எப்பொழுதுமே ஒரு ஆனந்தம் உண்டு

இரத்த ஓட்டமுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும்!!

போரினது தேவையையும் அசைபடமொன்று செய்யக்கூடிய பிரசாரத்தினையும் இங்கே விட்டுவிடுவோம். போராளிகள், பயங்கரவாதிகள் போன்ற அரசியல் நுழைந்த சொற்கூட்டுகளையும் விட்டு விடுவோம். இப்படங்கள் அவற்றினைத் தயாரிப்பதற்கிருக்கும் பொருளாதார, தொழில்நுட்ப இடைஞ்சலுள்ளும் அவை சொல்ல வேண்டியவற்றைச் சுட்டும் திறனுக்காகப் பாராட்டப்படக்கூடியன.
ஜிகினாக்கோடி கொட்டித் தயாராகும் கோடம்பாக்கத் திரைப்படங்கள் இலங்கையிலே சிறப்பாக ஓடுவது குறித்தும் அரசியலை மூச்சிலுங்கூட வெளிவிடா ஈழத்தினைப் பிறப்பிடமாகக் கொண்ட புலம் வாழும் எழுத்தாளர்கள் பற்றியும் கட்டுரைகள் வெளிவிடும் தமிழகச் சஞ்சிகைகள் இப்படியான ஈழத்திலிருந்து வெளிவரும் குறும்திரைப்படங்கள், இசைவட்டுக்கள், படைப்பு நூல்கள் குறித்தும் துணிச்சலோடு அறிமுகமும் திறனாய்வும் பார்வையும் விரைவிலே தந்து இவற்றினை "அங்கீகரிக்கும்" என நம்புவோம்.

விலை

ஈரமண்

ஈரமண்

சரத்குமாரின் புதிய கட்சி : திராவிட மற்றும் கழகம் என்ற வார்த்தைகளே ஊழல் நிறைந்தது

சரத்குமாரின் புதிய கட்சி : திராவிட மற்றும் கழகம் என்ற வார்த்தைகளே இல்லாத ஒரு கட்சியாக இருக்கும். இந்த இரண்டு வார்த்தைகளைக் கொண்ட கட்சிகளனைத்துமே ஊழல் நிறைந்ததாகச் சொல்கிறார் இந்த ஓய்வுபெற்ற மாவட்ட ஆட்சித்தலைவரும், சரத்குமாரின் கட்சியின் ஒரு முக்கிய நபருமான திரு.முருகன் IAS அவர்கள்! பொறுத்திருந்து பார்ப்போம்!

இடஒதுக்கீடு பகுதி 2

இடஒதுக்கீடு பகுதி 3

இடஒதுக்கீடு பகுதி 4

டாடா தொழிற்சாலை பற்றிய பதிவு : பகுதி 5

அறுசுவை உணவு என்றால் என்னவென்று தெரியுமா?

பழங்கால இந்திய மருத்துவங்களும், ஆயுர்வேதமும் நா அறியக்கூடிய சுவைகளை ஆறு வகைகளாகப் பிரிக்கின்றன. ஆயுர்வேதம், உடலின் ஆறு முக்கிய தாதுக்களுடன் இச்சுவைகளைச் சம்பந்தபடுத்தி, உடல் வளர்ச்சியில் இச்சுவைகளின் பங்குகளை விளக்குகின்றது. இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய இந்த ஆறுசுவைகளின் பண்புகளையும், உடல் நலத்திற்கு இவற்றின் பங்குகளைப் பற்றியும் சற்று விரிவாய் பார்க்கலாம்.
தொன்றுதொட்டு பழக்கத்தில் இருந்து வரும் இந்திய மருத்துவங்களாகிய ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்றவற்றில் சுவைகள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு,நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு முக்கிய தாதுக்களைக் கொண்டது என்பதனால் உடலை "யாக்கை" என்று கூறினர். இதில் ஏழாவது தாதுவான மூளை சரிவர இயங்க முதல் ஆறு தாதுக்கள் தகுந்த அளவில் இருத்தல் அவசியம். இந்த ஆறு தாதுக்களும், ஆறு சுவைகளுடன் கீழ்கண்டவாறு சம்பந்தப்பட்டுள்ளன.
துவர்ப்பு - இரத்தத்தைப் பெருக்குகின்றது
இனிப்பு - தசையை வளர்க்கின்றது
புளிப்பு - கொழுப்பினை வழங்குகின்றது
கார்ப்பு - எலும்புகளை வளர்க்கின்றது
கசப்பு - நரம்புகளை பலப்படுத்துகின்றது
உவர்ப்பு - உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது
அந்த கால மருத்துவங்களும், உணவு முறைகளும் இதனை அடிப்படையாகக் கொண்டே இருந்துவந்தது. உடல் தாதுவைப் பெருக்க, சமன் செய்ய அதற்கு ஏற்றவாறு உணவு வகைகளைத் தயாரித்து வந்தனர். இதனைக் கொண்டுதான் "உணவே மருந்து, மருந்தே உணவு" என்று சொல்வார்கள்.
துவர்ப்புச் சுவை (Astringent) இது அதிகம் விருப்பு, வெறுப்பு காட்டப்படாத சுவை. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்த சுவை. அதிக வியர்வையைக் கட்டுப்படுத்துகின்றது. இரத்தப்போக்கினைக் குறைக்க வல்லது. வயிற்றுப்போக்கினை சரி செய்யவல்லது. இது அதிகமாயின், இளமையில் முதுமை தோற்றத்தை உண்டுவிக்கும். வாய் உலர்ந்து போகச் செய்யும், சரளமாக பேசுவதைப் பாதிக்கும். வாத நோய்கள் தோன்ற வழிவகுக்கும். கிடைக்கும் உணவுப் பொருட்கள் வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.
இனிப்புச் சுவை (Sweet) மனிதர்களால் அதிகம் விரும்பப்படும் சுவை இதுதான். மனதிற்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் உடனடி உற்சாகத்தைத் தரக்கூடிய சுவையிது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றது. இது அதிகமாயின் உடல் தளர்வு, சோர்வு, அதிகத் தூக்கம், இருமல், உடல் எடைக் கூடுதல் போன்ற சிக்கல்கள் பலவும் தோன்ற வாய்ப்பு உள்ளது. கிடைக்கும் உணவுப் பொருட்கள் பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.
புளிப்புச் சுவை (Sour) உணவிற்கு மேலும் ருசி சேர்க்கும் ஒரு சுவையிது. பசியுணர்வைத் தூண்டும். உணர்வு நரம்புகளை வலுப்பெறச் செய்கின்றது. இதயத்திற்கும், செரிமானத்திற்கும் மிகவும் நல்லது. இது அதிகமாயின், தாக உணர்வினை அதிகரிக்கும். பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், இரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்ற தொந்திரவுகளை உண்டுவிக்கும். உடல் தளரச் செய்யும். எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.
காரச் சுவை (Pungent) பசியுணர்வைத் தோற்றுவிப்பதோடு அல்லாமல், செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகின்றது. உடல் இளைக்கவும், உடலில் உள்ள அதிக்கப்படியான நீரை வெளியேற்றவும் செய்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. தோல் நோய்களுக்கு நல்லதொரு பலனைத் தருகின்றது. அதிகப்படியான காரம், உடல் எரிச்சலை உண்டுவிக்கும். உடல் சூட்டை அதிகரித்து, வியர்வையை அதிகம் சுரக்கச் செய்யும். குடல் புண்கள் தோன்ற அதிக வாய்ப்பு அளிக்கும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.
கசப்புச் சுவை (Bitter) அதிகம் வெறுக்கப்படும் சுவையாக இருந்தாலும், அதிகம் நன்மைப் பயக்கும் சுவையும் இது ஒன்றே. மற்றச் சுவைகளை அறிய இது பெரிதும் உதவுகின்றது. சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியாக செயல்படுகின்றது. தாக உணர்வைக் கட்டுப்படுத்துகின்றது. உடல் எரிச்சல், அரிப்புகளில் இருந்து நிவாரணம் தருகின்றது. காய்ச்சலைத் தணிக்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. இது அதிகமாயின், உடலின் நீர் குறைந்துப் போகச் செய்யும். மேனி வறண்டு கடினத்தன்மைத் தோன்ற நேரிடும். எலும்புகளைப் பாதிக்கும். அடிக்கடி மயக்கம் உண்டாகும், உச்சகட்டமாய் சுயநினைவற்ற நிலைக்கும் செல்ல வழிவகுக்கும். பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவை மிகுதியாய் உள்ளது.
உவர்ப்புச் சுவை (Salt) தவிர்க்க இயலாத சுவை இது, அளவோடு இருக்கும்பட்சத்தில் அனைவராலும் விரும்பப்படும் ஒன்று. உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது. மற்றச் சுவைகளைச் சமன்செய்ய உதவுகின்றது. உணவுச் செரிமானத்திலும் பங்கு வகிக்கின்றது. இது அதிகமாயின் தோல் தளர்வினை உண்டுவித்து, சுருங்கிப் போகச் செய்யும். தோல் வியாதிகளையும் தோன்றச் செய்கின்றது. உடல் சூட்டினை அதிகப்படுத்தி சிறுக் கட்டிகள், பருக்கள் தோன்ற வழிவகுக்கும். கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.

இன்றைய குறள்

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப் பன்பி லவர்க்கு

அன்பு எனும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புகள் அழகாக இருந்து என்ன பயன்?

அறத்துப்பால் : அன்புடைமை

அமைதி எப்படி கிடைக்கும்?

"பொய் பேசுதல், புறங்கூறுதல், இழித்துரைத்தல், பயனற்ற சோம்பல் பேச்சு இவைகளால் மனிதர்களுக்கு எந்த நன்மையும் இல்லை. எனவே, இவற்றில் இருந்து விலகியே இருங்கள்"

- புத்தர்

தமிழோசை

  • கைத்தறி நெசவிற்கு பெயர் பெற்ற அம்பாறை மாவட்டம் மருதமுனை பிரதேசத்தில் சுனாமிக்கு பின்பு கைத்தறி நெசவு மீண்டும் உயிர் பெற்று வருவதாக அந்த பிரதேச நெசவாளர்கள் கூறுகின்றார்கள்.
    சுனாமியின் போது இந்த பிரதேசத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறிகள் அழிந்து போயின. பலர் மரணமடைந்தனர்.
  • இலங்கையின் வடக்கே நெடுந்தீவு கடற்பரப்பில் விபத்து காரணமாக நீரில் படகு மூழ்கி ஐஸ் கட்டிகள் கொண்டு வந்த பெட்டிகளைப் பிடித்தபடி தத்தளித்துகொண்டிருந்த 4 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காப்பாற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
  • இந்திய அமெரிக்க அணுசக்தி உடன்பாடு பிரச்சனையில் ஆளும் மத்திய அரசுக்கு நெருக்கடி: இந்தியா – அமெரிக்கா இடையிலான அணுசக்தி உடன்பாடு பிரச்சினையில், இடதுசாரிக் கட்சிகளின் பிடி இறுகி வரும் நிலையில், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சியாக, ஆளும் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சி, இன்று ஞாயிற்றுக்கிழமை பல்வேறு கூட்டங்களை நடத்தியது.
  • ஆசிய பசிபிக் பிராந்திய எட்டாவது சர்வதேச எயிட்ஸ் மாநாடு ஞாயிற்றுகிழமையன்று கொழும்பு பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தொடங்கியது. எதிர்வரும் 23 ம் திகதிவரை ஐந்து நாட்கள் இடம்பெறவுள்ள இந்த மாநாட்டில் 60 நாடுகளிலிருந்து சுமார் 3000 பேர் கலந்துகொண்டு இந்தக் கொடிய நோயின் தாக்கம் குறித்து விவாதிக்கவிருக்கிறார்கள். மேலும் இன்றைய (ஆகஸ்ட் 19 ஞாயிற்றுக்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க இணைப்பை அழுத்துக
    http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

அண்ணாகண்ணன் : பொதிகை நேர்காணல் 2005