September 24, 2007

  • சேது சமுத்திரத் திட்டத்தை விரைவில் செயல்படுத்தக் கோரி பந்த் : சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று கோரி அக்டோபர் 1 ஆம் தேதி தமிழகத்தில் முழு வேலை நிறுத்தம் மற்றும் கடையடைப்பு நடத்துவது என்று திமுக கூட்டணிக் கட்சிகள் முடிவுசெய்துள்ளன.
    இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயுள்ள கடலில் காணப்படும் பாறைத் திட்டுக்கள் இராமரின் வானரசேனையால் கட்டப்பட்ட பாலம் என்றும் சேது சமுத்திரத் திட்டத்திற்காக இந்த அமைப்புக்களை இடிக்கக் கூடாது என்றும் கூறி இந்துத்துவ அமைப்புக்கள் இந்தியாவின் சில பகுதிகளில் போராடி வருகின்றன.
    இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின் போது ராமர் குறித்து மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் பெரும் சர்ச்சையை உருவாக்கின.
    சர்ச்சைக்கு வித்திட்ட கருத்துக்களை திரும்பப் பெற்றுக் கொண்ட மத்திய அரசு, இராமரால் கட்டிய பாலம் என்று பக்தர்களால் நம்பப்படும் பாறைத்திட்டுக்களை உடைக்காமல் இத்திட்டத்தை செயல்படுத்த முடியுமா என்று ஆராய ஒரு நிபுணர் குழு அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.இதற்கு மூன்று மாத கால அவகாசத்தையும் மத்திய அரசு கோரியிருந்தது.
    இதன் காரணமாக சேது சமுத்திரத் திட்டம் குறித்த காலத்துக்குள் நிறைவேறுமா என்பது குறித்து ஐயம் எழுந்துள்ளது.
    இந்நிலையில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் கடையடைப்பு நடத்த முடிவு செய்துள்ளன.
    இம்முடிவு குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், மக்கள் ஆதரவைத் திரட்டுவதற்காகவே முழு வேலை நிறுத்தம் நடத்தப்படுவதாக தமிழக முதல்வர் மு கருணாநிதி தெரிவித்தார்.
    இப் பிரச்சனையில் மத்திய அரசின் அணுகுமுறை தனக்கு பெரிய ஏமாற்றத்தையோ, திருப்தியையோ அளிக்கவில்லை என்று தமிழக முதல்வர் மு கருணாநிதி கூறினார்
  • 20-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா வென்றது :
    முதலாவது 20 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா வென்றுள்ளது. இன்று தென் ஆப்பிரிக்காவிலுள்ள ஜோஹனஸ்பர்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணியை ஐந்து ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை கைப்பற்றியது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி இருபது ஓவர்களில், ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ஓட்டங்களை எடுத்தது. இந்திய அணியின் சார்பில் கவுதம் கம்பீர் சிறப்பாக ஆடி 54 பந்துகளில் 75 ஓட்டங்களை எடுத்தார். பாகிஸ்தான் அணியின் சார்பில் சிறப்பாக பந்து வீசிய உமர் குல் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்
  • ராகுல் காந்திக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவி : ராகுல் காந்திகாங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் மகன் ராகுல் காந்திக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
    படுகொலை செய்யப்பட்ட தனது தந்தை ராஜீவ் காந்தி போட்டியிட்டு வென்ற அமேதி தொகுதில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராகுல் காந்தி
  • மன்னிப்பு கேட்டார் ஜப்பானியப் பிரதமர் : பிரதமர் பதவியிலிருந்து விலகும் ஷின்சோ ஆபே, தாம் இம்மாதத்தின் முற்பகுதியில் எதிர்பாராத ஒரு தருணத்தில் பதவி விலகியதை அடுத்து ஏற்பட்ட குழப்பங்களுக்கான அந்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்
  • கால நிலை மாற்றம் குறித்து சர்வதேசத் தலைவர்கள் கவலை : பாதிக்கும் சீதோஷ்ணநிலை மாற்றத்தை கையாளும் விதம் பற்றி, உலக நாட்டுத் தலைவர்கள் விரைந்து செயல்பட வேண்டும் என்று, ஐநா மன்றத்தின் தலைமை செயலர் பான்கிமூன் அவர்கள் கூறியிருக்கிறார்
  • விடுதலைப் புலிகள் 20 பேர் கொல்லப்பட்டதாக இராணுவம் அறிவிப்பு : இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில் கிளாலி இராணுவ முன்னரங்க பகுதியில் இன்று அதிகாலை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கடும் மோதல்களில் 20 விடுதலைப் புலிகளும், ஒரு இராணுவ சிப்பாயும் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது
  • இன்றைய (செப்டம்பர் 24 திங்கட்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகளுக்கு இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews


September 23, 2007

இன்றைய குறள்

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப் புடைத்து

நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழி வழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்

அறத்துப்பால் : நடுவுநிலைமை

இசையமைப்பாளர் ஹரீஷ் ஜெயராஜ்

"இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை"
- சுவாமி விவேகானந்தர்

கருணாநிதியின் தலை மற்றும் நாக்கை துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடைக்கு தங்கம் வழங்கப்படும்

  • பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் மீது திமுகவினர் தாக்குதல் : விஸ்வ இந்து பரிஷத்தை சேர்ந்த ராம்விலாஸ் வேதாந்தி என்பவர் சனிக்கிழமையன்று உத்தரப்பிரதேசத்தில் பேசும் போது, ராமரை இழித்துப் பேசிய தமிழக முதல்வர் கருணாநிதியின் தலை மற்றும் நாக்கை துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடைக்கு தங்கம் வழங்கப்படும் என்று கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளதை தொடர்ந்து தமிழ்நாட்டில் பதட்டம் அதிகரித்து வருகின்றது. சனிக்கிழமையன்று இந்துத்துவா சக்திகளைக் கடுமையாகக் கண்டித்து மூத்த அமைச்சர் ஆற்காடு வீராசாமி அறிக்கை ஒன்றை விடுத்திருந்தார். மேலும் தமிழகத்தில் இருக்கின்ற பாரதிய ஜனதா அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்து இருந்தார். ஞாயிற்றுகிழமை தமிழக அமைச்சர் பரிதி இளம்வழுதி தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகம் முன்பாக திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன் பின்னர் பாரதிய ஜனதா அலுவலகம் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தினர். இதில் அலுவலகத்தின் ஜன்னல்கள், கண்ணாடிகள், மேஜை, நாற்காலிகள் போன்றவை அடித்து நொறுக்கப்பட்டன. இந்த வன்முறை சம்பவங்களுக்கு காவல்துறையினரே காரணம் என்றும், காவல்துறையினர் தங்களது கடமையை சரிவர செய்யவில்லை என பாரதிய ஜனதா கட்சியின் துணை தலைவர் குமாரவேலு குற்றம்சாட்டியுள்ளார்
  • பேச்சுவார்த்தைகளுக்கு திரும்புங்கள் என்று இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலர் கோட்டாபய ராஜபக்ஸ அவர்கள், விடுதலைப் புலிப் போராளிகளை அமைதிப் பேச்சுக்களுக்கு திரும்பும்படி கேட்டுள்ளார்
  • இலங்கையில் தொடரும் வன்முறை : இலங்கையின் வடக்கே சனிக்கிழமையன்றும், ஞாயிற்றுக்கிழமையன்றும் இடம்பெற்ற வெவ்வேறு வன்முறைகளில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
  • ஜப்பானின் புதிய பிரதமராகிறார் யசோ ஃபக்குடா : ஜப்பானின் மூத்த அரசியல்வாதியான யசோ ஃபக்குடா ஜப்பானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
  • பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்கிறது : இஸ்ரேல் சிறையில் பாலஸ்தீனர்கள், பாலஸ்தீன அதிபர் மஹமுது அப்பாஸுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சுமார் தொண்ணூறு பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
  • பர்மா ஆர்ப்பாட்டத்தில் பெரும் கூட்டம் : பர்மாவின் பிரதான நகரமான ரங்கூனில் அந்நாட்டின் இராணுவ அரசுக்கெதிராக இது வரை நடந்த ஆர்பாட்டங்களிலேயே மிகப் பெரிய ஆர்ப்பாட்டமொன்றில் சுமார் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்
  • இன்றைய (செப்டம்பர் 23 ஞாயிற்றுக்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகளுக்கு இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

இன்றைய குறள்

தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட் டொழுகப் பெறின்

பகைவர், அயலோர், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்

அறத்துப்பால் : நடுவு நிலைமை

September 22, 2007

"ஏழை எளியவர்கள் ஒதுக்கப்பட்டவர்கள் கல்வியறிவில்லாதவர்கள் ஆகிய இவர்களே உன்னுடைய தெய்வங்களாக விளங்கட்டும்"

- சுவாமி விவேகானந்தர்

  • 20:20 கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் :
    தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலக 20:20 கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. ஆஸ்திரேலிய அணியுடன் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய அணி 15 ஒட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதியடைந்துள்ளது http://www.bbc.co.uk/tamil/2115.ram
  • சேது திட்டம் மாற்றுப்பாதை சாத்தியமில்லை - மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு : சென்னையில் சனிக்கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் கப்பல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு மாற்றுப் பாதை வழியாக சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார். அவ்வாறு செய்தால் சுற்றுச் சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் டி.ஆர்.பாலு கூறியுள்ளார். மேலும் சேது சமுத்திர கால்வாய் திட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் என்றும் அவர் கூறினார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள கடலுக்கு அடியே ஆடம்ஸ் பிரிட்ஜ் என்ற ஒரு அமைப்பு உள்ளது. இது இராமரின் வானரசேனையால் கட்டப்பட்ட அமைப்பு என்றும் சேது சமுத்திரத் திட்டத்துக்காக இதை இடிக்கக் கூடாது என்றும் கோரி சில இந்து அமைப்புக்கள் போராடி வருகின்றன. இப் பிரச்சனை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்து போது, மாற்று பாதை மூலமாக சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற முடியுமா என்பது குறித்து ஆராயப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது
  • முல்லைத்தீவில் தொடர்ந்து விமானத்தாக்குதல் : இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் அரசின் விமானப்படைகள் தொடர்ந்து வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன
  • இரான் மீது தாக்குதல் நடத்த முற்பட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் - இரானிய அதிபர் : இரான் மீது தாக்குதல் நடத்த எண்ணும் நாடுகளுக்கு இரான் அதிபர் மஹமுது அஹெமதிநிஜாத் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தெஹரானில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பில் பேசிய இரான் அதிபர், இரானின் இராணுவப் படைகள் தற்பாதுகாப்புக்காக மட்டுமே என்றாலும், தங்கள் நாட்டின் மீது யார் தாக்குதல் நடத்தினாலும் அவர்கள் நிச்சயம் வருத்தத்தை சந்திப்பார்கள் என்றும் கூறினார்
  • தாய்வானின் ஆளும் கட்சியின் தலைவர் இராஜினாமா : தாய்வானின் ஆளும் கட்சியின் தலைவரான யூ ஷி கூன் அவர்கள், ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ளதைத் தொடர்ந்து ராஜினாமா செய்துள்ளார்
  • பர்மா போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு ஆங் சான் சூச்சி வாழ்த்து : பர்மாவின் இராணுவ அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெற்று வரும் மிகப்பெரிய போராட்டத்தில், வீட்டுக் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் ஆங் சான் சூச்சி தோன்றியதன் மூலம் புதிய உத்வேகம் ஏற்பட்டுள்ளது
  • மேலும் இன்றைய (செப்டம்பர் 22 சனிக்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகளுக்கு இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

September 20, 2007

'சோ' சொல்கிறார்...திமுக VS பாமக : இன்றைய இந்தியா மற்றும் தமிழகத்தின் நிலை

பின்னனிப் பாடகர் ஹரீஷ் ராகவேந்திரா - 2

பின்னனிப் பாடகர் ஹரீஷ் ராகவேந்திரா - 3

இன்றைய குறள்

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு

எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை

அறத்துப்பால் : செய்ந்நன்றியறிதல்

பதிலுக்குப் பதில்

இங்கிலாந்தின் பிரதம மந்திரியாக இருந்த வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு 1920-ஆம் வருடம் பெர்னாட்ஷா ஒரு கடிதம் எழுதினார். அதில், "என் புதிய நாடகம் ஒன்றின் முதல் நாள் ஆட்டம் நடக்கிறது. அதற்கு இரண்டு டிக்கெட்டுகள் அனுப்புகிறேன். ஒன்று உங்களுக்கு. இன் னொன்று உங்கள் நண்பருக்கு, அப்படி ஒருவர் இருந்தால்" என்றிருந்தது. அதற்கு சர்ச்சில் கொஞ்சங்கூட தாமதிக்காமல், "உங்கள் புதிய நாடகத்தின் முதல் நாள் ஆட்டத்திற்கு நான் வர இயலாததற்கு வருந்துகிறேன். தயவு செய்து இரண்டாவது நாள் ஆட்டத்திற்கு எனக்கு இரண்டு டிக்கெட்டுகள் அனுப்புங்கள், அப்படி ஒன்று நடக்குமேயானால்" என்று பதில் எழுதினார்.

  • ராமர் கட்டிய பாலம் குறித்து கருணாநிதி - அத்வானி வார்த்தைப் போர் : இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பில், சேதுக் கால்வாய் தோண்டப்படும் கடலின் அடியில் இருக்கும் மணல் திட்டுக்கள், ராமர் கட்டிய பாலம் என்பதற்கான ஆதாரம் இல்லை என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி சமீபத்தில் கருத்து வெளியிட்டிருந்தார். மு. கருணாநிதிஇதனை பாரதீய ஜனதாகட்சித் தலைவர் எல்.கே.அத்வானி அவர்கள் கண்டித்திருக்கிறார். இந்த மோதல்கள் தொடருகின்ற அதேவேளையில்,சேதுக்கால்வாய் தோண்டப்படும் கடற்பகுதியில் இருக்கும் மணல் திட்டுக்கள், ராமர் கட்டியபாலம் என்று வாதிட்டு வரும் இந்துத்துவ அமைப்புகள், இதனை பாதுகாப்பதற்காக ஒருங்கிணைப்புக்குழு ஒன்றை அமைத்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த குழுவில் இருக்கும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அகில இந்திய துணைத்தலைவர் வேதாந்தம் அவர்கள் இது குறித்து ஒரு செவ்வியையும் வழங்கியுள்ளார்
  • இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் 20 வருடங்கள் : இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் இலங்கை- இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தாகி 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆயினும், அதனைத் தொடர்ந்த, இந்த இருபது வருட காலத்தில், இலங்கையின் இரு தரப்புக்களும் அரசியல் மற்றும் போர் ஆகியவற்றில் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளன. அதேவேளை இலங்கை மக்களைப் பொறுத்த வரை, குறிப்பாக அங்கு வாழும் தமிழ் மக்களைப் பொறுத்த வரை, அங்கு இடம்பெற்ற தொடர்ச்சியான மோதல்கள் காரணமாக பல இழப்புகளையும், இடப்பெயர்வுகளையும் சந்தித்துள்ளனர். இந்த நிலையில் இந்த நிறுத்த ஒப்பந்தம் மற்றும் அதன் காரணமாக உருவான மாகாண சபைகள் மூலமான அதிகாரப் பரவலாக்கல் முயற்சிகள் ஆகியவை குறித்த இலங்கையின் பல தரப்பினரின் கருத்துக்கள் அடங்கிய பெட்டகத்தை நேயர்கள் இங்கு கேட்கலாம் http://www.bbc.co.uk/tamil/indolankaagree.ram
  • பாகிஸ்தான் அதிபர் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு : பாகிஸ்தானின் அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 6 ஆம் திகதி நடத்தப்படும் என்று அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
  • கடன் நெருக்கடியில் சிக்கியுள்ள வங்கிகளுக்கு நிதி வழங்கியது சரியே' -பிரிட்டனின் மத்திய வங்கி ஆளுனர் : சர்வதேச கடன் நெருக்கடிகள் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டிஷ் வங்கிகளுக்கு, 20 பில்லியன் டொலர்களை வழங்குவது என்ற தமது முடிவை, இங்கிலாந்தின் மத்திய வங்கியான, பாங்க் ஆஃப் இங்கிலண்டின் ஆளுனர், மேர்வின் கிங் அவர்கள் உறுதிப்படுத்தி வாதாடியுள்ளார்
  • இரானிய அதிகாரியைக் கைது செய்ததாக அமெரிக்கா அறிவிப்பு : இராக்கின் வடபுறத்தே, இரான் நாட்டின் புரட்சிப் படையின் விசேட பிரிவு அதிகாரி ஒருவரைத் தாம் தடுத்து வைத்துள்ளதாக, அமெரிக்க இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்
  • மேலும் இன்றைய (செப்டம்பர் 20 வியாழக்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகளுக்கு இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

September 19, 2007

இன்றைய குறள்

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும்

ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப்பார்த்தாலே போதுமானது

அறத்துப்பால் : செய்ந்நன்றியறிதல்

"பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால் அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்"

- சுவாமி விவேகானந்தர்

  • தமிழகத்தில் ஆலய அர்ச்சகர்களாக அனைத்து சாதியினருக்கும் பயிற்சி : தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாகலாம் என்கிற புதிய ஏற்பாட்டின் கீழ், மாநிலத்தின் சைவ மற்றும் வைணவ ஆலயங்களில், மொத்தம் ஆறு இடங்களில் அர்ச்சகர்களுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது
  • மனித உரிமை மீறல்கள் குறித்த இலங்கை அரசின் விசாரணைகள் சர்வதேச தரத்திதுக்கு பொருந்தவில்லை என்று வல்லுநர் குழு கூறியுள்ளது : இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்த இலங்கை அரசாங்க விசாரணைகள், சர்வதேச தரத்துக்குப் பொருந்தவில்லை என்றும், அதன் நடவடிக்கைகள் தோல்வியில் முடியும் போல் தென்படுவதாகவும், அவற்றைக் கண்காணிப்பததற்காக அமைக்கப்பட்ட சர்வதேசக் குழு கூறியுள்ளது
  • யாழ் குடாநாட்டில் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு : இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில் சட்டத்தரணிகளின், பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரி, அங்குள்ள சட்டத்தரணிகள் இரண்டாவது நாளாகப், பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்ததாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு சட்டத்தரணிகளைத் தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு கப்பமாக பெருந்தொகைப் பணத்தைக் கோரி, அச்சுறுத்தல் விடுத்துள்ள அடையாளம் தெரியாதவர்களின் நடவடிக்கை காரணமாக நேற்று நண்பகல் முதல் இந்த பணிபுறக்கணிப்பு இடம்பெற்று வருவதாக யாழ் சட்டத்தரணிகள் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
  • கம்போடியாவின் க்மெர் ரூஜ் இயக்கத்தின் மூத்த தலைவர் கைது :
    கம்போடியாவின் க்மெர் ரூஜ் இயக்கத்தின் உயிருடன் இருக்கும் மிக மூத்த உறுப்பினரான, நுவோன் சீயா, ஐ.நா மன்ற ஆதரவுடன் இயங்கும் விசாரணைக்குழு ஒன்றினால், போர்க்குற்றங்கள் மற்றும் மானுட குலத்துக்கு எதிரான குற்றங்கள் இழைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்
  • பர்மாவில் புத்த பிக்குமாரின் போராட்டம் தொடருகிறது : பர்மாவின் இராணுவ அரசாங்கத்துக்கு எதிரான, தமது மூன்றாவது நாள் தொடர் போராட்டத்துக்காக, செவ்வாடைகளையும், ஊதாநிறப் பட்டிகளையும் அணிந்த புத்த பிக்குமார், பர்மாவெங்கிலும் உள்ள நகரங்களில் ஊர்வலமாகச் சென்றனர்
  • துருக்கியில் பெண்கள் இஸ்லாமிய தலையங்கி அணிவதற்கு இருக்கும் தடை விலக்கப்பட வேண்டும் என பிரதமர் கூறுகிறார் : துருக்கிய பிரதமர் ரெசெப் டயிப் எர்துவான் , அரசாங்க பல்கலைக்கழகங்களில் , பெண்கள் இஸ்லாமிய தலையங்கி அணிவதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை விலக்கப்படவேண்டும் என்று கூறுகிறார்
  • காசாப் பிரதேசத்தின் ஒரு பகுதியை எதிரிப் பிரதேசமாக இஸ்ரேல் அறிவித்துள்ளது : பாலத்தீனர்களின் காசா பிராந்தியத்தின் மீது புதிய பொருளாதார தடைகளைக் கொண்டுவர வழிசெய்யும் முகமாக, அந்தப் பிராந்தியத்தை ஒரு எதிரிகளின் பகுதியாக இஸ்ரேல் பிரகடனம் செய்துள்ளது
  • பிரிட்டனில் பல்வேறு இனக்குழுக்களிடையே வேறுபாடுகள் ஆழமாக உள்ளன என்று தகவல் : பிரிட்டனில் வாழும் பல்வேறு இனக்குழுக்களிடையே நிலவும் வேறுபாடுகள் முன்பு எப்போதும் இருந்ததைவிட ஆழமாக இருப்பதாகவும் இவை, மத மற்றும் அரசியல் தீவிரவாதத்தைத் தூண்டுவதாகவும் பிரிட்டனில் வெளியாகி உள்ள ஒரு அறிக்கை கூறுகிறது

September 18, 2007

‘நான் முதல்வர் ஆக முடியாதா?’ - விஜய டி.ராஜேந்தர்

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க. அணியில் இருந்த லட்சிய தி.மு.க.வின் தலைவர் விஜய டி.ராஜேந்தர் கடைசி நேரத்தில் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் வெளியேறி, தி.மு.க. அணிக்காக பிரசாரம் செய்தார். ‘சுங்குவார் சத்திரத்தில் சுக்குக் காப்பி விற்றாலும் விற்பானே தவிர, சுயமரியாதையை எப்போதும் இழக்கமாட்டான் இந்த ராஜேந்தர்’ என்று அந்த நேரத்தில் சொன்னார். இப்போது தி.மு.க. அணியில் தனது சுயமரியாதைக்கு, பங்கம் வந்திருப்பதாகச் சொல்லி கலைஞர் மீதும் தி.மு.க. மீதும் விமர்சனங்களைச் சொல்லியிருக்கிறார். இதையடுத்து முதலில் பொதுக்குழுவை கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி அறிவித்திருக்கிறார். அதற்கான ஏற்பாடுகளில் இருந்த ராஜேந்தரைச் சந்தித்தோம். எப்படிப் பேசியிருப்பார் என்று சொல்லத் தேவையில்லை. பேட்டிக்குள் போகலாம்...
  • ஏன் இந்தத் திடீர் ஆவேசம்?
‘‘எனக்கென்னவோ இது ஆவேசத் தாக்குதல் மாதிரி தெரியவில்லை. ஆசுவாசமான தாக்குதல்தான். வழக்கமான மனநிலையுடன் இருந்துவரும் நான், என் மனதில் எழுந்த கேள்விகள் மற்றும் நெருக்கடிகளுக்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். உதாரணத்திற்கு, நான் சமீபத்தில் நாகர்கோயிலுக்குப் போயிருந்தேன். எங்கள் கட்சி நிர்வாகிகள் அப்போது என்னைச் சந்தித்தார்கள். ’கட்சிக்குப் பெயர் வைக்கும் முன்பாகவே சரத்குமாருக்கு வாழ்த்துச் சொல்கிறார் கலைஞர். அதுதான் அரசியல் நாகரிகம். என்றாலும் நம்மை ஒரு கட்சியாகவே அவர் மதிக்க மாட்டேன் என்கிறாரே?’ என்று கேட்டார்கள். நானும் இதுபற்றி யோசித்துப் பார்த்தேன். சரத்குமார் கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வுக்காக ஓட்டுக் கேட்டவர். நான் தி.மு.க.வுக்காக மாநிலம் முழுக்க பிரசாரம் செய்தவன். என்னுடைய வரவுக்காக தி.மு.க. தலைவர்கள் காத்திருந்து பிரசாரத்துக்கு அழைத்துச் சென்றார்கள். தி.மு.க.வுக்கு எதிராக வைகோ கடுமையான பிரசாரத்தை மேற்கொண்டபோது, அதற்குப் பதில் சொல்ல தி.மு.க.வில் ஆளே இல்லை என்ற நிலையில், இந்த டி.ஆர்.தான் அதை எதிர்கொண்டு சமாளித்தான். அவர்கள் இல்லை என்று மறுக்க முடியுமா? தேர்தல் முடிந்ததும் கலைஞர் எனக்கு போன் செய்து நன்றி சொன்னார்.ஆனால், கடந்த ஓராண்டாகவே எங்களை ஒரு பொருட்டாகவே அவர்கள் மதிக்கவில்லை. ஆனாலும் என்னை பத்திரிகையாளர்கள் சந்தித்து இந்த ஆட்சி பற்றி கேள்வி கேட்கும்போதெல்லாம் நான் மென்மையாகவே பதில் சொல்லி வந்திருக்கிறேன். அப்படி இருந்தும் கூட்டணிக் கட்சிகளின் கூட்டமாக இருந்தாலும் சரி... அனைத்துக் கட்சிக் கூட்டமாக இருந்தாலும் சரி... எங்களை மதித்து அழைப்பதே இல்லை. உள்ளாட்சித் தேர்தலின்போதும் எங்களை மதித்து இடங்களை அளிக்கவில்லை. ஆனாலும் பிரசாரம் செய்ய அழைத்தார்கள். நான் போகவில்லை. நான் தன்மானம் உள்ளவன். தேவை என்றால் பயன்படுத்திக்கொள்வது, பின்பு திரும்பிக்கூட பார்ப்பதில்லை என்பதை எப்படிச் சகித்துக் கொள்ள முடியும்?கூட்டணியில் இருந்துகொண்டே இந்த ஆட்சியைக் கடுமையாக விமர்சிக்கும் பா.ம.க.வை தாங்குதாங்கென்று தாங்குகிறார்கள். எங்கள் இயக்கம் என்றால் அவ்வளவு மட்டமா? ஆக கூட்டணியில் இருக்கிறோமா இல்லையா என்பதிலேயே ஒரு குழப்பமான சூழ்நிலை. இந்த நிலையில்தான் என்னுடைய கருத்துக்களைச் சொல்லியிருக்கிறேன். அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி எங்கள் கட்சியின் பொதுக்குழு கூடி முடிவெடுக்கும்.
  • ஜெயலலிதாவாவது எனக்கு உரிய மரியாதை தந்தார். ஆனால் கலைஞர் மதிக்கவில்லை’ என்று சொல்லியிருக்கிறீர்களே...அப்படி என்ன நடந்துவிட்டது?
‘‘காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதி இடைத்தேர்தல்களின் போது கலைஞர் ஏழு கட்சிக் கூட்டணியுடன் பலமாக இருந்தார். அந்த நேரத்தில் என்னை அழைத்த புரட்சி செல்வி (ஜெயலலிதாதாங்க..), அ.தி.மு.க.வுக்காக பிரசாரம் செய்யச் சொன்னார். சங்கராச்சாரியார்கள் கொலை வழக்கில் கைதான பின்பு, காஞ்சிபுரத்தில் அ.தி.மு.க.வை ஆதரித்து யாருமே பேசத் தயங்கிய நேரத்தில் நான் போய்ப் பேசினேன். அந்தத் தேர்தலில் அ.தி.மு.க. ஜெயித்ததற்கு நானும் ஒரு காரணமாக இருந்தேன். அந்தம்மாவும் தனது நன்றியை வெளிப்படுத்தினார். பின்பு போட்டியிடும் இடங்கள் தொடர்பாக எழுந்த கருத்து வேறுபாட்டால் சுயமரியாதையோடு வெளியேறினேன்.ஆனால், தி.மு.க.வுக்காக நான் கடுமையான உழைப்பை வெளிக்காட்டியும் கூட என்னை, என் இயக்கத்தை அங்கீகரிக்க அவர்கள் தயங்குகிறார்கள்.. மறுக்கிறார்கள்... அதன் அடிப்படையில்தான் அந்தக் கருத்தைச் சொன்னேன்.
  • அதெல்லாம் சரி...உங்கள் கட்சிக்கு பத்து சதவிகித ஓட்டு இருப்பதாகச் சொல்கிறீர்களே.. உங்களுக்கே இது சரியாகப்படுகிறதா?
அப்படி இல்லையென்றால், நான் பேசினால்தான் கூட்டம் வரும் என்று சொல்லி அந்தம்மாவும், கலைஞரும் மாறி மாறி அழைத்தார்களே ஏன்? நான் மக்கள் கூட்டத்தை ஈர்ப்பவன் என்பதால்தானே? இது பொய் என்றால் ‘இல்லை.. ராஜேந்தர் சொல்வது தவறு’ என்று சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம். இன்றைக்கு டி.வி.ல கூட டி.ஆர். புரோகிராம் என்றால் டி.ஆர்.பி. ரேட்டிங் எகிறுதுல்ல... அட...ஒரு பத்திரிகையில் என் பேட்டி வருகிறது என்றால் அந்தப் பத்திரிகை பரபரப்பாக விற்கிறது. உங்களுக்கு எத்தனை எம்.பி. சீட் வேணும்னு இப்பவும் என்னைப் பார்த்துக் கேட்கும் நிலையில்தான் நான் இருக்கிறேன். எனக்கு எந்த ஆதரவும் இல்லையென்றால் எப்படி இப்படிக் கேட்பார்கள்? ‘என் நாக்கில் சரஸ்வதி இருக்கிறாள்’ என்று வெண்ணிற ஆடை மூர்த்தி சொல்கிறார்... எங்கே போனாலும் என்னால் சரளமாகப் பேச முடியும். என் திறமை வெளிப்படுகிறது... மக்களிடம் எனக்கு இன்னமும் செல்வாக்கும் நம்பகத்தன்மையும் இருக்கிறது. நடுநிலை வாக்காளர்களை என் பக்கம் திருப்பும் சக்தி எனக்கு உண்டு. 30 சதவிகித வாக்குகளை இப்படி என்னால் திருப்ப முடியும். இந்த நிலையில் எப்படிச் சொல்ல முடியும் எனக்கு செல்வாக்கு இல்லையென்று?’’
  • பத்து சதவிகித வாக்குகள் இருக்கிறது’ என்று விஜயகாந்த் சொன்னால் நம்பலாம். அவர் தன்னை நிரூபித்திருக்கிறார். ஆனால் நீங்கள் சொல்வதை இன்னமும் நம்ப முடியவில்லையே...?
என்ன... அவர் பத்து சதவிகிதம் வச்சிருக்கார்.. பத்து சதவிகிதம் வச்சிருக்கார் என்றே சொல்கிறீர்கள்? அவர் எப்போது அரசியலுக்கு வந்தார்? ஒண்ணு தெரிஞ்சுக்கங்க.. இவனும் வேணாம்.. அவனும் வேணாம்.. என்று சொல்லி குப்பைலகூட தங்களோட ஓட்டைப் போடும் நடுநிலையாளர்கள் இப்போதும் இருக்கிறார்கள். அந்த ஓட்டிலிருந்துதான் நான் பர்கூரில் நாற்பதாயிரம் ஓட்டு வாங்கினேன். ‘ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை’ என்பது மாதிரி, ஆளே இல்லாத நேரத்தில்தான் விஜயகாந்தின் இந்த ஆட்டமெல்லாம். நான் இதோ முழு வீச்சில் களத்தில் இறங்கப் போகிறேன் . இப்போ வாங்க பார்ப்போம்.. இதுவரை என் செல்வாக்கை தி.மு.க. வெற்றிக்கு நான் பயன்படுத்தினேன்..அ.தி.மு.க. வெற்றிக்குப் பயன்படுத்தினேன்.. இப்போ நான் சொல்றேன்.. தி.மு.க.வும் இல்ல.. அ.தி.மு.க.வும் இல்ல.. நடுநிலையாளர்களின் ஓட்டைப் பிரிக்க நான் வருகிறேன். இப்போ சந்திப்போம் வாங்க.. இதான் சவால்..இதான் போட்டி.ஆக, அவர் வாங்கிய பத்து சதவிகித ஓட்டு அவருக்கு விழுந்தது இல்லை. சரி அப்படியே விழுந்ததுன்னு சொன்னா எங்கே அவர் படத்துக்கு இப்போ கலெக்ஷன் காட்டச் சொல்லுங்க பார்க்கலாம்..? சபரி படத்தோட நிலை என்ன? அந்தப் படத்தைத் தயாரித்த தயாரிப்பாளரின் நிலை என்ன?234 தொகுதிகளில் போட்டியிட்டு பல கோடி செலவு செய்து, ஒரே ஒரு தொகுதியில் ஜெயிப்பது சாதனை அல்ல. இவர் அடுத்த முதல்வர் ஆவேன் என்கிறாரே ஏன் ஒரு இடம்தான் ஜெயிக்க முடிந்தது? நான் முதல்வர் ஆவேன்னு சொல்லலை. என் இலக்கு நடுநிலையான அந்த முப்பது சதவிகித வாக்குகளை என் பக்கம் திருப்ப வேண்டும் என்பதுதான். அது ஒரு பிராசஸ். பொருத்திருந்து பாருங்க.
  • உங்களின் இந்தத் திடீர் விமர்சனத்திற்குப் பின்னால் மாறன் சகோதரர்கள் இருக்கிறார்கள் என்றொரு விமர்சனம் இருக்கிறதே..?
யாருடைய ஹேஷ்யம், ஜோதிடம் பற்றியும் எனக்குக் கவலை இல்லை. நான் இந்தப் பேட்டி கொடுத்த அடுத்த நாளே சுனாமி வருதுன்னா பாருங்க.. யாராவது எதிர்பார்த்தார்களா? நான் சன் டி.வி.ல புரோகிராம் பண்றேன். Êசக்சஸ்புல்லா போகுது. கலைஞர் டி.வி.லயும் என்னைக் கூப்பிட்டார்கள். நான் பிசியாக இருக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். இன்றைக்கு இந்த ராஜேந்தரால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்று கலைஞரைச் சொல்லச் சொல்லுங்கள்..அப்புறம் பாருங்கள் எனக்கு எந்தெந்த கதவுகள் திறக்கிறது என்று. எனக்குக் கொடுத்த சீட்டை வேண்டாம் என்று சொல்லிவிட்டு தன்மானத்தோடு வெளியே வந்தவன் இந்த டி.ஆர்.! அப்படிப்பட்ட நான் யாருடைய பேச்சையும் எந்தச் சூழ்நிலையிலும் கேட்கவேண்டிய அவசியம் இல்லை. இறைவனுக்கும் என் தொண்டனுக்கும் மட்டும்தான் நான் அடிபணிவேன்.
  • சரி..லட்சிய தி.மு.க.வின் லட்சியம்தான் என்ன?
எல்லா கட்சியும் இன்று ஜாதி, மத அடிப்படையில் செயல்படுகின்றன. நான் மட்டும்தான் என் கட்சியை ஜாதி, மதங்களைக் கடந்து மதநல்லிணக்க இயக்கமாக நடத்துகிறேன். இன்றைக்கு தமிழ்நாட்டில் பெண்களின் வாக்குகளை என்னைத் தவிர வேறு யாரால் வாங்க முடியும் சொல்லுங்க.. அந்த அளவுக்குத் தனி மனித ஒழுக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். வேறு எந்த நடிகனாவது இந்த விஷயத்தில் என்னோடு போட்டி போட்டு வரமுடியுமா சொல்லுங்க.? நான் ஜாதி அரசியல் பண்ணலை. ஆந்திராவில் இருந்து எனக்குப் பணம் வரலை. கட்சிப் பதவியை பணத்துக்காக விற்கலை. அடிமட்டத் தொண்டனை மதிக்கிறவனா இருக்கிறேன்.ஊழலை எதிர்க்கிறேன்னு சொல்றாரே விஜயகாந்த்.. அவர்கூட இருக்கிற கு.ப.கி. யாரு? பொன்னுசாமி யாரு? அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரர்களா? தூய்மையை தொட்டில் கட்டி ஆட்டியவர்களா? வாய்மையை வாய்க்கால் வெட்டிக் காத்தவர்களா? சுத்தமான கரத்துக்குச் சொந்தக்காரர்களா? இவர்களை வைத்து எப்படி இவர் ஊழலை ஒழிப்பார்? என்கிட்ட இதுவரை எந்த முன்னாள் மந்திரியும் வரலை. காரணம், என்னோட ‘மிஸ்டர் கிளீன் இமேஜ்’. விஜயகாந்தை ஊடகங்கள்தான் பெரிதாகக் காட்டுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை காலம் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் முன்னுக்குக் கொண்டு வந்து வைக்கும். ‘வல்லவன்’ படத்தில் ஒரு டயலாக் உண்டு. யார் முன்னாடி போறதுங்றது முக்கியம் இல்ல. ‘யார் முந்தியடித்து முதலாவதா வராங்கங்றதுதான் முக்கியம்’. எனக்கு இப்போ எந்தக்கட்டுப்பாடும் இல்ல. இளைஞர்கள் முழுமையா என் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். இவர்களை வைத்து எதிர்கால தமிழகத்தை உருவாக்கும் சக்தியா எங்கள் இயக்கத்தை ஆக்குவதுதான் லட்சியம்.’’
  • ‘நான் முதல்வர் ஆக முடியாதா?’ன்னு கேட்டிருக்கிறீர்கள். ஏன் இப்படி?
நான் அப்படிச் சொல்லவில்லை. ‘நீங்கள் முதல்வர் ஆக முடியுமா’ என்று கேட்டார்கள். ‘நான் ஆக முடியாதுன்னு நீங்க சொல்ல முடியுமா’ன்னு கேட்டேன். நான் கேக்குறேன்.. அடுத்தவர் எழுதிக் கொடுப்பதைப் பேசி, அறிக்கையாக வெளியிடும் தலைவர்கள் இருக்கும்போது, சொந்தமாக நல்ல தமிழைப் பேசும் நான்.. எம்.ஜி.ஆரை எதிர்த்து எதிர்நீச்சல் போட்ட நான், கலைஞருடன் சமகாலத்தில் அவருக்குக்கை கொடுத்த நான், ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டு சரிக்குச் சரி நின்ற நான்... ஏன் ஒரு தலைவனாக வரமுடியாது?தவிர நான் ஒரு தமிழன். விஜயகாந்துக்கு ‘திராவிட’ன்னுதான் போஸ்டர்அடிப்பாங்க. அதுக்கு என்ன அர்த்தம்? எனக்கு ‘தமிழன்’னு அடிப்பாங்க. ஆக ஒரு திராவிடனே தமிழ்நாட்டைப் பிடிக்க நினைக்கும்போது ஒரு தமிழன் நான் ஏன் நினைக்கக் கூடாது? இதுதான் சார் இப்போ போட்டியே.’’
  • நீங்கள் முன்பு தனிக்கட்சி நடத்தியபோதும் ‘எனக்குத் தலைவர் கலைஞர்தான்’ என்று சொல்லி இருந்தீர்கள். இப்போதும் உங்கள் தலைவர் கலைஞர்தானா?
‘‘அது அப்போ சொன்னேன். அதனாலதான் தலைவருக்கு ஒரு இக்கட்டு என்று சொன்னபோது என் கட்சியை தி.மு.க.வுடன் இணைத்து தேர்தலின்போது உதவினேன். ஆனால் லட்சிய தி.மு.க.வை நான் தொடங்கிய பின்பு ஒரு விஷயம் முடிவு பண்ணிட்டேன். இனிமே யாரையும் தலைவன்னு சொல்றதில்ல. சார், முதல்வர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டி போடட்டும். ஆனா தமிழ்நாட்டில், தமிழினத்தின் தலைவனாக நான் வருவேன். அதற்கான அனுபவமும் தகுதியும் நம்பகத்தன்மையும் எனக்கு உண்டு. தமிழ்க் குலத்தின் பிரதிநிதியாக, தாய்க்குலத்தின் அங்கீகாரம் பெற்றவனாக, இளைஞர்களுக்கு தன்னம்பிகை ஊட்டுபவனாக இருந்து அந்த இடத்தை நான் அடைந்தே தீருவேன்.’’
  • உங்களின் இதுமாதிரியான கருத்துக்களைப் பார்த்து சிலர் கிண்டலடிக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
‘‘அந்த மாதிரி ஆட்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. ‘கடவுளே இல்லை’ என்று சொல்லும் உலகம் இது. காந்தியை சுட்டுக்கொன்றவர்களுக்காக மேடை போட்டுப் பேசும் உலகம் இது. என்னுடைய திட்டங்கள் அவர்களுக்குப் பிடிக்காமல் இருந்திருக்கலாம். நான் என்ன கடவுளா, எல்லோரும் ஏற்றுக்கொள்ள? எம்.ஜி.ஆர். ‘அண்ணாயிசம்’ என்று சொன்னபோது ‘அண்ணாயிசமா, பாயசமா’ என்று கிண்டலடித்தவர்கள் பின்பு என்ன ஆனார்கள்? எந்த சாதனையாளனை உலகம் எடுத்த எடுப்பில் அங்கீகரித்திருக்கிறது? கடற்கரையில் சுண்டல் விற்பவனைக்கூட கிண்டல் செய்வார்கள். ஆனால் அவன் வீட்டிற்குக் காசு கொண்டு போவான். கிண்டல் பண்றவன் என்ன கொண்டுபோவான்? அதனால் இதுமாதிரி கிண்டல்களை நான் பொருட்படுத்த மாட்டேன்.’’
  • இந்த ஆட்சி எப்படி நடக்கிறது என்று சொல்லுங்களேன்?
‘‘எங்கள் கட்சி பொதுக்குழு கூடப்போகிறது. அதுவரை பொறுத்திருங்கள். என் வேகமும் குறையாது. விவேகமும் மறையாது. நான் சரித்திரம் படைக்கக் காத்திருக்கும் சத்ரியன் மட்டும் அல்ல.. சாணக்யன்!’’ என்று தனது ஸ்டைலிலேயே சொல்லி பேட்டியை முடித்துக் கொண்டார் விஜய டி.ராஜேந்தர்.

இன்றைய குறள்

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று

ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல, அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது

அறத்துப்பால் : செய்ந்நன்றியறிதல்

"இளைஞர்களே உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால், என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக்காகக் காத்திருக்கிறது என்பேன்"

- சுவாமி விவேகானந்தர்