December 16, 2007

"ஒசாமாவுடன் பணியாற்றியது கட்டுக்கடங்காத சந்தோஷம்'* சொல்கிறான் முன்னாள் கார் டிரைவர்

குவான்டனாமோ: "ஒசாமாவுடன் பணியாற்றியபோது, கட்டுக்கடங்காத சந்தோஷத்தில் இருந்தேன்' என்று, அவனுடைய முன்னாள் கார் டிரைவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.அமெரிக்காவில் 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, உலக வர்த்தக மையம் விமானம் கொண்டு தகர்க்கப்பட்ட பின், அதற்கு காரணமான ஒசாமா பின்லாடனை அமெரிக்கா தீவிரமாக தேட தொடங்கியது. ஆனால், இதுவரை அவன் சிக்கவேயில்லை. அதே ஆண்டில் நவம்பர் 24ம் தேதி, ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தகார் நகரில் அமெரிக்க வீரர்கள் பல சோதனை சாவடிகளை அமைத்து வாகனங்களை சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது பிடிபட்டவன் தான் சலீம் அகமது ஹாம்தான். கியூபாவில் குவான்டனாமோ என்ற இடத்தில் அமெரிக்க கடற்படை தளம் உள்ளது. இங்குள்ள தனிமை சிறையில் ஹாம்தான் அடைக்கப்பட்டுள்ளான். அவன் மீது பயங்கரவாதத்துக்கு எதிரான போர் நடவடிக்கையின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இரண்டு முறை அவன் மீது வழக்கு நடத்தப்பட்டு, அவை நிராகரிக்கப்பட்டுள்ளன. மூன்றாவது முறையாக அவனை மீண்டும் நீதிபதி முன் நிறுத்த ராணுவ வீரர்கள் தயாராகி வருகின்றனர். அதற்கு முன் அவனிடம் விசாரணை நடத்தி, அவனது வாக்குமூலத்தை பெற்றுள்ளனர். அதில் அவன் கூறியிருப்பதாவது:நான், ஒசாமா பின்லாடனின் டிரைவர் மற்றும் பாதுகாவலன். 2001ம் ஆண்டு அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் விமானம் மூலம் தகர்க்கப்பட்ட போது, காந்தகாரில் உள்ள ஒரு இடத்தில் தங்கி இருந்தார். அவரையும், அவரது மகன் ஒட்டமானையும், நான் தான் காரில் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து சென்றேன். அமெரிக்கர்கள் பிடியில் அவர் சிக்கி விடக் கூடாது என்பதற்காக பல வாரங்கள், ஒவ்வொரு நகராக அவரை நான் தான் அழைத்து சென்றேன். உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்ட போது, குறைந்தது ஆயிரத்து 500 பேராவது இறப்பர் என ஒசாமா எதிர்பார்த்தார். ஆனால், அதற்கு மேலும் இறப்பு எண்ணிக்கை இருந்ததால், மிகவும் திருப்தி அடைந்தார். அவருக்கு விசுவாசமாக இருப்பதாக நான் பிரமாணம் எடுத்துள்ளேன். கட்டுக்கடங்காத சந்தோஷத்துடன் அவரிடம் பணியாற்றினேன்.இவ்வாறு ஹாம்தான் கூறியுள்ளான்.

கடிகார முட்களைப்போல் தி.மு.க.,வில் அழகிரி, ஸ்டாலின் செயல்பட கவிஞர் வைரமுத்து வலியுறுத்தல்

திருநெல்வேலி : கடிகாரத்தின் இரண்டு முட்களைப்போல ஸ்டாலினும் அழகிரியும் இணைந்து செயல்பட வேண்டும் என நெல்லை தி.மு.க.,இளைஞரணி மாநாட்டில் நடந்த காவியக்கலைஞர் நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து வலியுறுத்தினார். அவர் மேலும் பேசியதாவது: இந்த மாநாட்டுக்கு வந்துள்ள இளைஞர்களின் கட்டுப்பாட்டை பார்த்து மகிழ்ந்து வியந்தேன். தமிழகத்தில் பிறந்ததுபாயும் ஒரே நதி தாமிரபரணி. அத்தகைய சிறப்பு பெற்ற நெல்லையில் இந்த மாநாடு நடத்துவதுசிறப்பானதாகும். கருணாநிதியின் தாயார் சிந்திய கண்ணீர், கருணாநிதியின் வியர்வை, ஸ்டாலின் வடித்த ரத்தம் என மூன்று தலைமுறை தியாகங்கள் இந்த இயக்கம் வலுப்பெற்றுள்ளது. கருணாநிதி ஒரு அபூர்வகலவை. ஒரு நாவலாசிரியராக இருந்து 15 நிதிநிலை அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளார். 1969-70களில் அவர் தாக்கல் செய்த பட்ஜெட் மதிப்பு 280.91 கோடி. 2007ல் அவர் தாக்கல் செய்த 15வது பட்ஜெட்டின் மதிப்பு ரூ 46 ஆயிரத்து 592 கோடிஆகும். தனிமனிதர் போனால் இயக்கம் அழிந்துவிடாது. இந்த இயக்கம் இன்னும் நுாற்றாண்டுக்குதொடர வேண்டும். ஒரு கடிகாரத்திற்கு சிறிய முள், பெரிய முள் தேவை. இரண்டு முட்களும் இல்லையென்றால் நேரத்தை காட்ட முடியாது. ஸ்டாலினும், அழகிரியும் இரண்டு முட்களைப்போல இந்த இயக்கத்திற்கு தேவை. திராவிட இயக்கத்தின் மீதுஆசை உள்ளவன் என்ற முறையில் இதனை கேட்டுக்கொள்கிறேன். இந்த மாநாடு புதிய தலைமுறைகளை உருவாக்கும் மாநாடாக மாற வேண்டும் என்றார்

December 15, 2007

இன்றைய குறள்

அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப்
புன்சொ லுரைப்பான் பொறை

ஒருவர் நேரில் இல்லாதபோது பழிச்சொல் கூறுவோனுடைய உடலை 'இவனைச் சுமப்பதும் அறமே' என்று கருதித்தான் நிலம் சுமக்கிறது

அறத்துப்பால் : புறங்கூறாமை

உன்னதமான சங்கீதம்

உன்னதமான சங்கீதம் என்பது, இனிமையான குரலில் வழிந்தோடும் இசையல்ல. எண்ண ஓட்டத்தைத் தெளிய வைத்து, மனதையும் புத்தியையும் இணைக்கும் மந்திரம் அது. சிந்தனையைச் செம்மைப்படுத்தாத எந்த இசையும், அது எத்தனை இனிமையான குரலில் இருந்து வந்தாலும், சங்கீதமாகக் கருத முடியாது" - பத்மஸ்ரீ டாக்டர் பிரபா ஆத்ரே, ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர்

தமிழக மீனவர்கள் ஆந்திராவில் கைதாகி விடுதலை

தமிழக தலைநகர் சென்னை காசிமேட்டைச் சேர்ந்த சுமார் 150 மீனவர்கள், கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலில் மீன் பிடிக்கச் சென்றார்கள். அவர்கள் கடலில் தொழில் செய்து கொண்டிருந்தபோது, வங்கக் கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக, மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப் பட்டது. இதையடுத்து, கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த அந்த மீனவர்கள் பாதுகாப்பு தேடி கரைக்குத் திரும்பியபோது, தவறுதலாக ஆந்திர மாநிலத்தில் உள்ள காக்கிநாடா துறைமுக எல்லைக்குள் நுழைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஆந்திர போலீசார் மீனவர்களைக் கைது செய்து, அவர்களிடமிருந்து பெருமளவு மீன்களையும் பறிமுதல் செய்துவிட்டனர். இந்த நிலையில், தமிழக அரசு அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை காரணமாக அந்த மீனவர்கள் தற்போது விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது. மீனவர்களை மீட்பதற்காக, காக்கிநாடா சென்றுள்ள, ராயபுரம் மீன்பிடித் துறைமுகத்துக்குப் பொறுப்பு வகிக்கும் தமிழக மீன்வளத் துறையின் உதவி இயக்குநர் எம். நஸீருல்லா இதுதொடர்பாக பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம் http://www.bbc.co.uk/tamil/2115.ram

அவசரகால நிலையை அகற்றினார் பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப்

பாகிஸ்தான் அதிபர் பெர்வேஷ் முஷாரஃப் அவர்கள் கடந்த மாதம் முதல் நாட்டில் போட்டிருந்த அவசரகால நிலையை விலக்கியுள்ளார். கூடவே அரசியல் சாசனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமயம் தன்னால் நியமிக்கப்பட்டிருந்தவர்களிற்கு நாட்டின் முக்கிய நீதிபதிப் பதவிகளுக்கான சத்தியப் பிரமாணங்களையும் செய்து வைத்துள்ளார். இப்படியொரு நிலையில் அவசரகாலச் சட்டத்தை விலக்குவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை என்கிறார்கள் அதிபரை விமர்சிப்பவர்கள். அவசரகால நிலைமையின் போது பதவி விலக்கப்பட்ட பக்கச்சார்பற்ற நீதிபதிகள் மீண்டும் பதவியில் அமர்த்தப்படப் போவதில்லை. கூடவே செய்தி ஊடகங்கள் மீது கட்டுப்பாடுகள் தொடர்ந்து இருக்கப் போகின்றன. இந்த முன்னெடுப்புகள் தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரம் உள்ள நிலையில் வந்துள்ளன.

December 14, 2007

வசந்தகால நதிகளிலே!

வசந்தகால கோலங்கள்

இயக்குனர் பாலாஜி சக்திவேல்

இன்றைய குறள்

துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினர்
என்னைகொல் ஏதிலார் மாட்டு

நெருங்கிப் பழகியவரின் குறையைக்கூடப் புறம் பேசித் தூற்றுகிற குணமுடையவர்கள் அப்படிப் பழகாத அயலாரைப் பற்றி என்னதான் பேச மாட்டார்கள்?

அறத்துப்பால் : புறங்கூறாமை

தி.மு.க., அ.தி.மு.க தவிர மற்ற எந்தக் கட்சிகளும் எங்களுக்குத் தீண்டத் தகாதவை அல்ல - டாக்டர் ராமதாஸ்

தி.மு.க., அ.தி.மு.க தவிர மற்ற எந்தக் கட்சிகளும் எங்களுக்குத் தீண்டத் தகாதவை அல்ல. 2009-ல் இரண்டுக்கும் மாற்றாக, ஒரு பலமான அணி உருவாகப் பாடுபடுவோம். அதுவரை தி.மு.க. அரசின் மீதான விமர்சனங்கள் தொடரும். அது தி.மு.க.வுக்குக் கசப்பாக இருந்தாலும் கவலைப்பட மாட்டோம்" - டாக்டர் ராமதாஸ்

புவி வெப்பமடைதல் தொடர்பிலான ஐ.நா. மாநாடு நிறைவு நேரம் தாண்டியும் நீடிக்கிறது

புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களின் வெளியேற்றம் தொடர்பில் சமரச உடன்பாடு ஒன்றைக் காண்பதற்கான முயற்சியில் பிரதிநிதிகள் ஈடுபட்டுள்ள நிலையில், பாலியில் காலநிலை மாற்றம் குறித்த மாநாடு இரவாகியும் தொடர்கிறது. மாநாடு முடிவடைவதற்கான கால எல்லை கடந்துவிட்ட நிலையில், சட்ட ரீதியான இலக்குகளை நிர்ணயிக்க முடியுமா என்பதற்கான முட்டுக்கட்டைகளை நீக்க முடியும் என்பதில் சமரசப் பேச்சுவார்த்தையாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த இலக்குகளை நிர்ணயிப்பதை அமெரிக்கா எதிர்த்து வருகிறது. 2020 அளவில் கரியமில வாயுவின் வெளியேற்றத்தில் 40 வீதம் வரை கட்டாயமான வெட்டு வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூறுகின்றன. வறிய நாடுகள் ஒரு புதிய தொழில்நுட்பத்தை உள்வாங்கிக் கொள்வதற்காக அவற்றுக்கு உதவுவதற்கான கட்டமைப்பு மற்றும் ஒரு புதிய ஒப்பந்த வேலைகளுக்கான நிதி ஆகியவை உட்பட இறுதி ஆவணத்துக்கான பெரும்பாலான எழுத்து வேலைகள் எல்லாம் உடன்பாடு காணப்பட்டு விட்டதாக பாலியில் இருக்கின்ற பிபிசியின் சுற்றுச்சூழல் நிருபர் கூறுகிறார்.

December 13, 2007

பொண்ணுங்க மாறிட்டாங்க!


"திண்ணையில் பிரசுரமான எனது சிறுகதை"

ஸ்வேதா! என்னாச்சு ஒனக்கு? ஒம்பின்னாடியே எத்தனை நாள் இப்படி நாய் மாதிரி அலையிறது? ப்ளீஸ்… நீ இந்த மாதிரி சைலன்ட்டா இருந்தா நான் அப்பறம் காலேஜ்-க்கே வரமாட்டேன். என்னோட ஃபியூச்சரே ஸ்பாய்ல் ஆனாலும் பரவால்ல! இந்தக் காலேஜ் முழுக்க என்ன பேசுறானுக தெரியுமா? ‘என்னாச்சு மச்சான் ஒன்னோட ஆளு ஸ்வேதா வேற யாரையோ கரெக்ட் பண்ணிட்டா போல. ரெண்டரை வருசமா ஒங்கிட்ட பழகிட்டுருந்தா, இப்போ ரெண்டு நாளைக்கு முன்னாடி அவளையும் கூடவே ஸ்மாட்டான ஒரு ஹீரோவையும் அஷ்;டலட்சுமி கோயில்ல பாத்தேன்னானுக’. நான் நம்பல ஸ்வேதா. ஆனா நீ எங்கிட்ட ஒரு மாசமா பேசாம இருக்கறதப் பாத்தா எனக்கே கொஞ்சம் டவுட்டு வரு..து..” ராஜேஷ் ஸ்வேதாவின் கையைப்பிடித்தான்.

“ஸோ…நீங்க டவுட் பட்டா நாங்க பேசிறணுமா? மொதல்ல இந்த மாதிரி காலேஜ் காம்பஸ்-குள்ள இன்டீசன்ட்டா நடந்துக்கறத ஸ்டாப் பண்ணு. ப்ளீஸ்.. என்னெ தொந்தரவு பண்ணாத. ஒன்னோட ஃப்ரண்ட்ஸ் சொன்னதுல எந்த டவுட்டும் இல்ல. நான் இன்னொருத்தர லவ் பண்றேன். அவரத்தான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன். வீட்ல எல்லாருக்கும் சொல்லிட்டேன். வர்ற செமஸ்டர் முடிஞ்சதும் கல்யாணம். சாரி….ராஜேஷ்! நீ அந்த மாதிரி நெனச்சு இத்தனை நாளா எங்கிட்ட பழகிருந்தா என்னெ மன்னிச்சுரு. எனக்கும் ஒம்மேல அந்த மாதிரி கொஞ்சம் எண்ணம் இருந்தது உண்மைதான். ஆனா நான் தனியா திங்க் பண்ணிப் பாத்தப்போ அவருதான் எனக்கு பொருத்தம்னு தோணுது. இனி என்னெப் பாக்காத, பேசாத. எக்ஸ்ட்ரீம்லி சாரி” ஸ்வேதா அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள்.

இதை ராஜேஷ் கொஞ்சங்கூட எதிர்பார்க்காதவனாய் வாய் பேசமுடியாமல் அந்த இடத்தை விட்டு கண் கலங்க நகர்ந்தான்.

“ஏய்!…இதெல்லாம் ஒனக்குத் தேவையாடா? நீ காலேஜ்-ல ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கி என்னடா செய்ய? அவ்வளவு பேருக்குமே நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்கணு தெரியுமேடா. இப்ப என்ன செய்யப்போற? போய் தூக்குமாட்டிட்டு சாவுடா. டேய்! இந்த மாதிரி பொண்ணுங்கள நம்பாதடா, பொண்ணுங்க முன்னாடி மாதிரி இல்ல, இப்பல்லாம் ரொம்ப மாறிட்டாளுங்கடான்னேன். கேட்டியா நீ! இப்ப முட்டிகிட்டு சாவுடா”. நண்பர்கள் அனைவரும் வழக்கம்போல் ஒருமையில் அவளையும் சேர்த்துத் திட்டினார்கள்.

“இவளுக்குத்தான் அறிவு இல்ல, அந்த டாபருக்கு புத்தி எங்கடா போச்சு. நீங்க லவ் பண்றது தெரிஞ்சும்... இவளோட சுத்துறான்னா, அவன் சரியான சோமாறிடா. மச்சான் அவன் எந்த ஏரியாடா? அட்லீஸ்ட் எந்தக் காலேஜ்-னாச்சும் யாருக்காவது தெரியுமாடா? மவனே அந்தப் பொறம்போக்கெ தீத்துடுவோம் மச்சான்.

“ஏய்! அதெல்லாம் வேணாண்டா. எனக்காக நீங்க எதாச்சும் செய்யணுன்னா ஒரே ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணுங்கடா. அவங்கிட்ட என்னோட மேட்டர மட்டும் பக்குவமா சொல்லி, அவள விட்டுறச் சொல்லுங்கடா. அவன் மனசு வச்சா நடக்கும் மச்சான் ப்ளீஸ்” ராஜேஷ் வெட்கத்தை விட்டுச் சொன்னான்.

“தோடா! என்ன காதல் பிச்சையா? இதெல்லாம் வேலைக்கி ஆவாது மச்சான். மவனே! கையக் கால எடுத்துருவோம் எனக்கு ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆள் இருக்குடா” ஒரு மேதாவி சொல்லி முடித்தார்.

ஒரு வழியாக ராஜேஷ்-ஸ்வேதா விசயத்தை அவனிடம் பக்குவமாகச் சொல்ல ஒத்துக்கொண்டார்கள். செமஸ்டர் தொடங்கியது. அனைவருமே படிப்பிலும், தேர்விலும் மும்முரமாக இருந்தனர். ஒரு நாள் கல்லூரி முடிந்து மொத்தமாக வெளியே வந்த ராஜேஷின் நண்பர்கள் அந்தக்காட்சியைக் கண்டு அதிர்ந்து போயினர்.

ஒரு பார்வையற்ற வாலிபனுக்கு உதவுவதற்காக, அந்த வாலிபனின் கையைப்பிடித்துக்கொண்டு, போக்குவரத்து நிறைந்த அந்த சாலையை, ராஜேஷ் கடந்து கொண்டிருந்தான். ஸ்வேதாவோடு அஷ்டலட்சுமி கோவிலில் பார்த்த அந்த வாலிபன் பார்வையற்றவன் என்பது அப்போது யாருக்குமே தெரியாது.

அடுத்த நாள் கல்லூரி சென்ற ராஜேஷ் தன் நண்பர்கள் யாருமே தன் கண்ணில் படவில்லையென்பதால் அனைவரையும் ஒரு வழியாகத் தேடிக் கண்டுபிடித்தான்.

“மச்சான் என்னெ மன்னிச்சுருங்கடா! ஒங்களயெல்லாம் என்னால மறக்க முடியாதுடா. நீங்க நெனக்கிறமாதிரி எனக்கு ஒங்கமேல கோபம் இல்லடா. ஒரு தப்பான தகவல் ஏன் குடுத்தோம்னு நீங்க ஃபீல் பண்றது எனக்குப் புரியுது மச்சான். ஆனா தப்பு அங்க இல்ல மச்சான், எம்மேலதான்டா. ஸ்வேதா என்னெ முழுசா லவ் பண்ணலடா. அப்படி ஒரு ஃபீலிங் இருந்ததென்னமோ உண்மைதான்டா. ஆனா இப்ப எனக்கு எல்லா மேட்டரும் தெரிஞ்சு போச்சுடா. இனிமே அவளை நான் நெனைச்சுப் பாக்கக்கூட அருகதை இல்லடா. அவ ரொம்ப பெரிய மனசு உள்ளவ மச்சான். நீங்க சொன்ன மாதிரி பொண்ணுங்க ரொம்ப மாறிட்டாங்கடா. முன்னாடி மாதிரியெல்லாம் இல்லேங்கறது நூத்துக்கு நூறு உண்மைடா.

“டேய்! என்னடா புதிர் போடுற? என்னடா ஆச்சு ஒனக்கு? மாறிட்டாங்கங்குற, பெரிய மனசுங்குற.. ம்ம்...என்ன?”

ஆமடா மச்சான்! அவ அந்த ஹீரோவ லவ் பண்றாடா. பார்வை இல்லேன்னு தெரிஞ்சும் எந்தப்பொண்ணுடா லவ் பண்ணுவா? நம்மதான்டா பொண்ணுகள தப்பாவே கணக்குப்போட்டு வச்சுருக்கோம். அவ, அவளோட வாழ்க்கையையே அவனுக்கு குடுக்க நெனைக்கிறப்போ, ஆஃப்டர் ஆல் என்னோட லவ் என்ன மச்சான் பெருசு? அவனுக்கு எதோ ஜாப் சம்மந்தமா எக்ஜாம் எழுதறதுக்கு ஹெல்ப் கேட்டு ஒரு விளம்பரம் வந்திருக்கு. இவ ஹெல்ப் பண்ணிருக்கா. அவனுக்கு அந்த வேலை ஓகே ஆயிடுச்சு. அப்பறம் அவனுக்கு நெறைய எய்ம் இருக்கு மச்சான், ஐஏஎஸ் எழுதணுங்கறான். ப்ரிபேர் பண்ணிகிட்டுருக்கான். இன்னும் என்னென்னமோ சாதிக்கணுங்கறான். இப்படிப்பட்ட பார்வையில்லாத ஒரு இளைஞனோட கனவுகள முழுசா பூர்த்தி செய்ய ஸ்வேதா முழு மூச்சா இறங்கிட்டாடா. பார்வை இல்லாட்டிக்கூட அவனோட தைரியம், லட்சியம், கனவு, இவளோட ஹியூமானிடி இதெல்லாம் பாக்கறப்போ நாமெல்லாம் எங்கேயோ இருக்கோம் மச்சான். காதல் கீதல் எல்லாத்தயும் விட வாழ்க்கையில எதையாவது சாதிக்கணுங்கற ஒரு வைராக்கியந்தான்டா முன்னாடி நிக்கிது. அவனுக்கு நெறைய உதவிகள் செஞ்சுகிட்டுருக்கா மச்சான். அப்படியே அவங்களுக்குள்ள நல்ல ஒரு அன்டர்ஸ்டேன்டிங் ஆகி, அது மேரேஜ் வரைக்கும் போய்டுச்சு… எப்படியோ நல்லாருக்கட்டும் மச்சான். ஷீ இஸ் ரியலி க்ரேட் மச்சான். ராஜேஷால் மேற்கொண்டு பேசமுடியவில்லை.

நண்பர்களின் தோள்களில் சாய்ந்து கொண்டான்.

இன்றைய குறள்

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்

இனிமையாகப் பழகி நட்புறவைத் தொடரத் தெரியாதவர்கள், நட்புக் கெடுமளவுக்குப் புறங்கூறி நண்பர்களை இழந்து விடுவார்கள்

அறத்துப்பால் : புறங்கூறாமை

ஜெயலலிதா சொல்கிறார்!

என்னுடைய பாதுகாப்பு குறித்து நான் கவலைப்படவில்லை. பாதுகாப்பு கொடுத்திருப்பதாக ஏதோ சொல்கிறார்கள். இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. என்னவென்று தெரியவில்லை. அது எப்படி சென்னையில், தமிழ்நாட்டில் உள்ள மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் என்னுடைய இல்லத்தை நோக்கியே வந்து கொண்டிருக்கிறார்கள்!
- ஜெ. ஜெயலலிதா

இலங்கைக்கான பிரிட்டனின் தூதரின் கருத்துகளுக்கு இலங்கை அரசு கண்டனம்

இலங்கை அரசின் வெளியுறவுச் செயலர் பாலித கோஹனஇலங்கைக்கான பிரிட்டிஷ் தூதர் டொமினிக் சில்கோட் கடந்த திங்களன்று ஒரு கூட்டத்தில் தெரிவித்த சில கருத்துக்கள் தொடர்பாக இலங்கை அரசு தனது முறையான எதிர்ப்பை தெரிவித்திருக்கிறது. விடுதலைப்புலிளின் கோரிக்கைகளைப் பற்றிக் குறிப்பிட்ட சில்கோட் அவர்கள் , தமிழ்த்தாயகம் என்ற அரசியல் அபிலாஷையே நியாயத்தன்மையற்றது என்று தான் கூறமாட்டேன் என்று கூறியிருந்தார். சில்கோட்டை வெளியுறவு அமைச்சகத்துக்கு அழைத்த இலங்கை ஆட்சியாளர்கள், அவர்களது அதிருப்தியை வெளியிட்டனர். பிரிட்டிஷ் அரசு தனி நாடு ஒன்று உருவாக்கப்படுவதை உறுதியாக நிராகரித்திருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர். அரசியல் அபிலாஷைகள் நியாயமான வழிகள் மூலம் தெரிவிக்கப்படவேண்டும் என்ற பொருள்படவே தான் இதைக் கூறியிருந்ததாக சில்கோட் கூறினார்

December 12, 2007

சரண்யா பாக்யராஜ்

இன்றைய குறள்

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந்
திறன்தெரிந்து கூறப் படும்

பிறர்மீது ஒருவன் புறங்கூறித் திரிகிறான் என்றால் அவனது பழிச் செயல்களை ஆராய்ந்து அவற்றில் கொடுமையானவைகளை அவன் மீது கூற நேரிடும்

அறத்துப்பால் : புறங்கூறாமை

ஐ.ஐ.எம்- (IIM)மின் ஊழல்

தினம் தினம் பேப்பர்களில் வருகிற செய்திகளைப் பார்த்தால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருக்கிறது. நிர்வாகப் படிப்பான M.B.A. பயிற்சி தரும் உயர் கல்வி நிறூவனங்களில் (Indian Institute of Management) நுழைவுத் தேர்வில் மாணவர்களுக்குப் பதிலாக கெட்டிக்காரர்களை டம்மியாக அமர்த்தித் தர ஏஜென்ஸிகள் இருக்கின்றனவாம். பீஹார், உ.பி. மாநிலங்களில். இறுதித் தேர்வுக்கும் ஏற்பாடு செய்து விடுவார்கள் போல. இந்த உயர் படிப்பு “படித்து” வெளி வரப்போகும் மாணவர்கள்தாம் எதிர்காலத்தில் நிர்வாகிகளாக உயர் பதவிகளில் அமரப்போகிறார்கள். ஏற்கெனவே, நமது அமைப்புகளில் நேர்மை கொடி கட்டிப் பறக்கிறது. இனி கேட்கவே வேண்டாம்

இந்தியாவின் வேலை செய்திறன் பற்றாக்குறை குறித்த சந்திப்பு

இந்தியாவின் வேலை செய்திறன்களில் ஏற்பட்டு வரும் பற்றாக்குறை பிரச்சினைகள் குறித்து இந்தியாவின் அரசியல் தலைவர்களும், தொழில்துறை தலைவர்களும் கலந்து கொள்ளும் கூட்டம் ஒன்று, இந்தியத் தலைநகர் புது தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இந்திய தொழில் துறையின் கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த கலந்துரையாடலில் பேசிய பலரும் கல்வி இன்மையும், போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாமையுமே இந்தப் பிரச்சினைக்கு காரணம் என்று கருத்து தெரிவித்தனர். 2012 ஆண்டில், இந்தியாவின் பணியாளர் பற்றாக்குறையை நிறைவு செய்ய வேண்டுமானால், ஐந்து லட்சம் பொறியாளர்களும், ஐந்து லட்சம் மருத்துவர்களும் தேவைப்படுவார்கள் என்று சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்று தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் பழமையான தொழிலாளர் நல சட்டங்கள் பாரதூரமான அளவில் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று தொழிலதிபர்கள் கோருவதாக, தில்லியில் இருக்கும் பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்