August 28, 2007

லட்சுமண ஐயர்

இடுங்கிய கண்களில் எப்போதும் வழியும் கருணை... வார்த்தைகளில் அன்பின் கதகதப்பு... தொண்ணூறு வயதிலும் துவளாத கம்பீரம், வாழ்க்கை முழுதும் தீராத தியாகம்... இதுதான் லட்சுமண ஐயர்! கோபிச்செட்டிப்பாளயத்தில் இறங்கி, ‘‘ஐயர் வீடு எங்கே இருக்கு?’’ என்று யாரைக்கேட்டாலும், அந்தப் பழைய பிரமாண்டமான வீட்டின் முன் அழைத்துப் போய் நிறுத்கிறார்கள். பழைமையின் அழகில் மிளிரும் அந்த விசாலமான இல்லத்தில், தன் கடைசி மகனுடன் வசித்து வருகிறார் லட்சுமண ஐயர். ‘‘நம்மகிட்டே எதுக்குங்க பேட்டியெல்லாம்... காந்தியடிகளின் எளிமைக்கும் தியாகத்துக்கும் முன்னால நான் செய்கிற காரியங்களெல்லாம் ஒண்ணுமேயில்ல தம்பி..!’’ அடக்கமாக அவர் சிரிப்பதைப் பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கிறது. ‘‘எங்க அப்பா காங்கிரஸ்காரரு. ‘சுதந்திரப் போராட்டத்துக்கு நிறைய இளஞர்கள் தேவப்படுது. நாட்டுக்காகப் பாடுபடுடா’ன்னு பத்து வயசிலேயே என்னை விடுதலைப் போர்ல கலந்துக்க அனுப்பினார். 1933-ம் வருஷம் நடந்த முதல் சட்டசபைத் தேர்தல்ல, ராஜாஜி கட்சியில நின்னு ஜெயிச்சு எம்.எல்.ஏ. ஆனாக அப்பா! அப்ப, இந்தப் பகுதிகள்ல கூட்டங்களுக்கு வரும் தலவர்கள் நம்ம வீட்டுக்கும் வருவாக. நேரு, நேதாஜி, வினோபாஜி, ராஜாஜி, சத்தியமூர்த்தி, காமராஜர், பெரியார், பக்தவசலம்னு எல்லா அரசியல் தலைவர்களும் இந்த வீட்டுக்கு வந்திருக்காக. அவங்ககூட அரசியல் கூட்டங்களுக்கு நானும் போவேன். ‘வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துக்கிட்டதுக்காக என்னைக் கைது செய்து, வேலூர் சிறையில அடச்சாக. என் மனவி, மாமனார், மாமியார் எல்லாரும் ஜெயிலுக்குப் போயிட்டாக. வெளியில் வந்ததும், வார்தா போய்க் காந்தியடிகளைப் பார்த்தேன். ‘சுதந்திரத்துக்காகப் போராட நிறையப் ஆட்கள் இருக்காங்க. ஹரிஜனங்களுக்காக வேல செய்யத்தான் ஆள் இல்ல. நீங்க அவங்களுக்காகப் பாடுபடுங்க’ன்னு காந்திசொன்னார். அதன்படியே கோபிச்செட்டிப்பாளையம் திரும்பினதும், ஹரிஜன மக்களை அழைச்சுட்டுப் போய்ப் பொதுக்கிணற்றுல தண்ணீர் எடுத்தோம். மேல்சாதியச் சேர்ந்தவக எங்களத் தடுத்தாக. நான் நீதிமன்றம் போனேன். ரொம்ப நாள் வழக்கு நடந்தது.
கடைசியில் நான்தான் ஜெயித்தேன்’’ என்று கூறும் லட்சுமண ஐயர், இந்தியாவிலேயே முதன்முதலாககோபிச் செட்டிப்பாளயம் நகராட்சியில் மனிதர் கழிவை மனிதர் அகற்றும் கொடுமைக்கு எதிராகப் போராடி, அதை நீக்கியதற்காக தேசிய விருது பெற்றிருக்கிறார். தலித் மாணவர்களுக்காக இலவச ஐ.டி.ஐ. அநாதை இல்லம், மாணவர்கள் விடுதி ஆகியவற்றை இன்றக்கும் நடத்தி வருகிறார். வசதி இல்லாத, நல்லாப் படிக்கிற தலித் மாணவர்கள எங்க வீட்டு மாடியில் தங்கவெச்சுப் படிக்க வச்சேன். அந்த மூன்று பேரும் ஆசிரியர்களா ஆனாக. அப்புறம் ஹரிஜன மாணவர்களுக்குன்னு ஒரு ஹாஸ்டல் தொடங்கினேன். என் ஹாஸ்டல்ல படிச்ச பல பேர், பல்வேறு இடங்கள்ல இப்ப நல்ல பதவிகள்ல இருக்காக. தோட்டிகள எல்லாம் கூட்டிட்டு வந்து, ஊருக்குள்ள தனியா வீடுகள் கட்டிக்கொடுத்தேன். எங்களுக்கு, கோபியைச் சுற்றி மொத்தம் 650-ஏக்கர் நிலம் இருந்து. இந்தப் பக்கம் வைரவிழா மேல்நிலைப் பள்ளி, வேளாளர் ஹாஸ்டல், பழனியம்மாள் பள்ளி, டி.எஸ்.சாரதா வித்யாலயா, ஸ்ரீராமபுரம் ஹரிஜனக்காலனி, தோட்டிகள் ஹரிஜனக் காலனி, விவேகானந்தர் ஐ.டி.ஐ. எல்லாத்துக்கும் நான்தான் நிலம் கொடுத்தேன். கோபி டவுனில் மட்டுமே 40 ஏக்கர் நிலம் தர்மமாகக் கொடுத்திருக்கேன்’’ என்று சொல்லும் லட்சுமண ஐயருக்கு, இப்போ ஒரு சென்ட் நிலம் கூட சொந்தம் இல்லை. ‘‘பாதி தர்மமா கொடுத்தது. பாதி வியாபார நஷ்டத்துல போயிடுச்சு. இந்த வீடும் வங்கிக் கடன் பாக்கிக்காக ஏலத்தில் போயிடுச்சு. ஏலம் எடுத்தவுக என்னப் பத்திக் கேள்விப்பட்டு வீட்ட எனக்கே திருப்பிகொடுத்துட்டாக’’ என்று சிரிக்கும் லட்சுமண ஐயருக்கு இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள். ‘‘பிள்ளைகளுக்குன்னு எதுவும் சேர்த்து வைக்காம, எல்லாத்தையும் காலி பண்ணிட்டோமேனு வருத்தமா இல்லையா?’’ என்றால், ‘‘அவுகளுக்கு வேணும்னா, தானே முயற்சி பண்ணிசம்பாரிச்சிக்க வேண்டியதுதான்’’ என்று சிரிக்கிறார். ‘‘என்னைப் பொறுத்த வரைக்கும் காந்தி கொடுத்த கடமைய நல்ல படியா செஞ்சுட்டோம்கிற திருப்தியும் சந்தோஷமும் இருக்கு’’ என்றவர், கம்பீரமான குரலில் உணர்ச்சிகரமாகப் பாடத்தொடங்கினார்...

‘‘தண்ணீர் விட்டோ
வளர்த்தோம்? சர்வேசா!
இப்பயிரைக்இ கண்ணீராற் காத்தோம்;
கருகத் திருவுளமோ!’’

இன்றைய குறள்

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்

செல்வத்தைச் சேர்த்து வைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது பயன்படுத்தப்படாமற் போயிற்றே என வருந்துவார்கள்
அறத்துப்பால் : விருந்தோம்பல்

“நாம் இயலாதவர்கள் என்பதால் நான் பயப்படவில்லை, நம்மால் எதுவும் இயலும் என்பதால்தான் பயப்படுகிறேன்”
- நெல்சன் மண்டேலா

குளவி கொட்டி பலர் மருத்துவமனையில் அனுமதி

  • இலங்கையில் மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப்பிரசித்திபெற்ற புராதன சின்னங்களில் ஒன்றான சிகிரியா மலைச் சுவரோவியங்களைக் காணச்சென்ற உல்லாசப்பயணிகள்மீது அங்குள்ள குளவிக் கூட்டமொன்று நடத்திய தாக்குதலில் சுமார் 250 பேர் காயமடைந்திருக்கின்றனர்.
  • அனைவருக்கும் அறிவியல் : அல்சைமர் எனப்படும் மூளை அழுகல் நோய் தொடர்பில் அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வுகள் சாதகமான சில முடிவுகளை தந்திருக்கின்றன.
  • மதச் சார்பற்ற நாடான துருக்கியின் அதிபராக, இஸ்லாமியப் பின்னணி கொண்ட அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா குல் பதவியேற்றுள்ளார்.
  • அணு ஒப்பந்தம் தொடர்பாக இந்திய அரசுக்கு காலக் கெடு விதிக்கப்போவதில்லை : சி பி ஐ - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று புதுடெல்லியில் துவங்கியது. இந்தியா- அமெரி்ககா இடையிலான ராணுவம் சாரா அணுசக்தி உடன்பாடு தொடர்பாக இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
  • ஆப்கனில் கஞ்சா பயிரிடுவது அதிகரிப்பு : ஹெராயின் போதைப் பொருட்களை தயாரிக்க உதவும் கஞ்சா செடிகள் பயிரிடப்படும் அளவு முன்னெப்போதும் இல்லாத அளவு உயர்ந்துள்ளதாக, ஆப்கானிஸ்தானின் போதைப் பொருள் தயாரிப்பு குறித்த ஐக்கிய நாடுகளின் வருடாந்திர ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இன்றைய (ஆகஸ்ட் 28 செவ்வாய்க்கிழமை 2007) "BBC" தமிழோசை செய்திகள் கேட்க இணைப்பை அழுத்துக... http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

August 27, 2007

கம்யூனிஸ்டுகளே திருந்துங்கள்

அமெரிக்காதான் உலகுக்கு எத்தனை நன்மைகள் செய்தது. வியட்நாமுக்கு படைகளை அனுப்பி நன்மைகள் செய்தது ஆப்கானிஸ்தானை காப்பாத்தியது. இராக்குக்கு படைகளை அது அனுப்பவில்லை என்றால் என்ன நடந்து இருக்கும் என்பதே யாருக்குமே சொல்ல முடியாது! இந்த கம்யூனிஸ்டுகள் இதை எல்லாம் பார்த்து கொஞ்சமாவது அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை நிறுத்தனும். கம்யூனிஸ்டுகளே திருந்துங்கள்! அமெரிக்காவை பற்றிய வீடியோவை பாருங்கள்

இன்றைய குறள்

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்

விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப் பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம்

அறத்துப்பால் : விருந்தோம்பல்

"எந்தப் பணியைச் செய்தாலும் அதைச் சிறப்பாகச் செய்யவேண்டும், குறிப்பிட்ட காலம் அல்லது நேரத்திற்குள் குறிப்பிட்ட பணியைச் செய்து முடிப்பதில் அக்கறை செலுத்தவேண்டும், அவ்வாறு செய்ய முடியாவிட்டால் நீங்கள் உங்கள் துறையிலும், பணியிலும் தோல்வியைச் சந்திக்க நேரிடும், எந்த நிறுவனமானாலும் வாடிக்கையாளர் திருப்திதான் முக்கியமாக இருக்கவேண்டும்"

இப்படிச் சொன்னவர் எந்த நிர்வாகத் துறை வல்லுநரும் அல்ல. மும்பை டப்பாவாலா கூட்டமைப்பின் தலைவர் ரகுநாத் மெட்கே

எய்ட்ஸ் நோய் உள்ளவர்கள் உயிருடன் புதைக்கப்படுவதாகச் செய்தி

  • ரஷியாவில் செய்தியாளர் ஆனா பொலிட்கொவ்ஸ்காயா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் இன்னாள் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டிருந்தார்கள் என தாம் எண்ணுவதாக ரஷியாவின் தலைமை வழக்கறிஞர் கூறியுள்ளார்.
  • இலங்கையின் வடக்கே யாழ் நகரில் படைத் தளத்திற்கு அருகே வசிக்கும் மக்களுக்கு விசேட அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. குடும்பத்தினரின் புகைப்படங்களை வழங்குமாறும் உத்தரவு.
  • அமெரிக்காவின் தலைமை வழக்கறிஞர் ஆல்பர்டோ கொன்சாலெஸ் இராஜிநாமா செய்துள்ளார். அவர் அதிபர் புஷ் அவர்களின் மிகவும் நம்பிக்கைக்குரிய ஆலோசகர்களில் ஒருவராக இருப்பவர்.
  • வங்கதேசத்தின் உச்சநீதிமன்றம் அந்நாட்டின் முன்னாள் பிரதமரான ஷேக் ஷசீனாவுக்கு ஜாமீன் வழங்க மறுத்துள்ளது.
  • இராக்கியப் பிரதமர் நூரி அல்மலிக்கி அவர்களை விமர்சித்து, அவர் பதவி விலக வேண்டும் எனத் தாம் தெரிவித்திருந்த கருத்துக்களுக்காக இராக்கிய அரசிடம் தாம் மன்னிப்பு கோரவுள்ளதாக பிரான்ஸின் வெளியுறவு அமைச்சர் பெர்ணார்ட் கௌஷ்னே தெரிவித்துள்ளார்.
  • பசபிக் பெருங்கடலிலுள்ள பாப்புவா நியூகினியாத் தீவுகளில், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை, அவர்களது உறவினர்கள் உயிருடன் புதைப்பதை தாம் கண்டுள்ளதாக சுகாதாரச் செயற்பாட்டாளர் ஒருவர் கூறியுள்ளார்.
  • மேலும் இன்றைய (ஆகஸ்ட் 27 திங்கட்கிழமை 2007) "BBC" தமிழோசை செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

இலங்கைக்கு இராணுவ உபகரணங்களை இந்திய ஒருபோதும் வழங்கக்கூடாது - தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் இல. கணேசன். இலங்கைக்கு இராணுவ உபகரணங்களை இந்தியா ஒருபோதும் வழங்கக்கூடாது என்று தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் இல. கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது: இலங்கை அரசு, இனவாத அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் பொதுவான அரசாக இல்லை. சுனாமியில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்கப்பட்ட பொருட்களைக்கூட அவர்களிடம் ஒப்படைக்கவில்லை. விடுதலைப் புலிகளை காரணம் காட்டிக்கொண்டு அப்பாவித் தமிழர்களை தாக்குவதை அனுமதிக்க முடியாது. இந்த விடயத்தில் நமது நாடு நடுநிலையோடு செயல்படவேண்டும். இலங்கை தமிழர் பிரச்சினையில் தலையிட்டு தீர்வுகாண வேண்டும். இலங்கைக்கு இந்தியா ராடர் கருவிகளை கொடுத்துள்ளது. அது தமிழர்களை தாக்குவதற்குத்தான் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இராணுவ தளபாடங்களை இலங்கைக்கு இந்தியா வழங்கக்கூடாது. இந்த விஷயத்தில் பழ. நெடுமாறனின் போராட்டம் நியாயமானதுதான்.

பொறுத்தது போதும்! பொங்கி எழுவோம்! பட்டினி கிடக்கும் நம் சகோதரர்களுக்கு உணவு, மருந்து கொண்டு செல்வோம்! பழ. நெடுமாறன்

யாழ் நகரம் சிங்கள இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அங்கு வாழும் ஐந்து இலட்சம் மக்களும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள் என்ற காரணத்தினால் அவர்களைப் பட்டினி போட்டுப் பணிய வைக்க சிங்கள அரசு முடிவு செய்தது. யாழ்ப்பாணத்திற்கு செல்லும் 'ஏ9' நெடுஞ்சாலையை அடைத்தது. உணவு, மருந்துப் பொருட்கள் மற்றும் இன்றியமையாத பொருட்கள் எதுவும் யாழ்ப்பாணத்திற்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டது. மக்கள் சொல்லொணாத துன்பத்திற்கு ஆளானார்கள். பொருட்களின் விலை பலநூறு மடங்கு உயர்ந்தது. மக்கள் பட்டினியால் வாடினார்கள். நோயாளிகளும் முதியோர்களும் குழந்தைகளும் போதுமான மருந்துகள் இல்லாமல் சாவைச் சந்திக்க வேண்டிய நிலைக்கு ஆளானார்கள். தங்கள் கண் எதிரிலேயே தங்களால் நேசிக்கப்படுபவர்கள் துடிதுடித்து சாவதைப் பார்த்து மக்கள் கண்ணீர் சிந்தினர். இந்த செய்திகள் எல்லாம் அன்றாடம் தமிழ்நாட்டுக்குக் கிடைத்தபோது தமிழக மக்களைச் சோகம் கவ்விக் கொண்டது. துயருறும் தனது சகோதர மக்களுக்கு உணவும் மருந்துப் பொருட்களும் அளிக்க அவர்கள் துடியாகத் துடித்தனர். ஆனாலும் இரு நாட்டு மக்களுக்கு இடையே உள்ள கடல் அதைத் தடுத்தது. தமிழ்நாட்டின் முதலமைச்சராகக் காலஞ்சென்ற எம்.ஜி.ஆர். அவர்கள் இருந்தபோது யாழ்ப்பாணப் பகுதியில் பெரும் புயல் வீசி மக்களுக்கும் சொத்துகளுக்கும் பெரும் சேதம் நேர்ந்தது. செய்தி கேள்விப்பட்டவுடன் இந்திய அரசின் அனுமதியை உடனடியாகப் பெற்று இரண்டு கப்பல்கள் நிறைய உணவு, மருந்து மற்றும் உதவிப் பொருட்களை அனுப்பி வைத்து உற்றுழி உதவினார் அவர்.


அதைப் போல இப்போதும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் யாழ் மக்களின் பட்டினியைப் போக்க விரைந்து நடவடிக்கை எடுப்பார் என மக்கள் எதிர்பார்த்தனர். எதிர்பார்ப்பு எதிர்பார்ப்பாகவே நின்று விட்டது. சிங்கள இனவெறி அரசின் மனித நேயத்திற்கு எதிரான இந்த நடவடிக்கையை உலக நாடுகள் பலவும் கண்டித்தன. ஆனால் அண்டையில் இருக்கக் கூடிய இந்திய அரசு இதற்குக் கண்டனம் தெரிவிக்கவே இல்லை. தமிழக, இந்திய அரசுகளின் இந்தப் பாராமுகப் போக்கினைப் பார்த்து வேதனை அடைந்த தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவில் அங்கம் வகிக்கிற அமைப்புகள் ஒன்றுகூடி யாழ் மக்களின் துயரைத் துடைக்க முடிவு செய்தன. கடந்த 9.12.06 அன்று யாழ்ப்பாண மக்களுக்கு உணவு, மருந்துகள் திரட்டி அனுப்புவது எனத் தீர்மானித்தனர். அதற்கிணங்க தமிழகமெங்கும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் வீடுவீடாகச் சென்று இரு கையேந்தி மக்களிடம் பொருட்களைப் பெற்றனர். ஏழையெளிய மக்கள் கூட தாமாகவே முன்வந்து தங்கள் சக்திக்கு மீறிய அளவிற்கு பொருட்களை அள்ளித் தந்தனர். சிறு துளி பெரு வெள்ளம் என்பார்கள். அதைப்போல சாதாரண மக்கள் முன்வந்து கொடுத்த இந்தப் பொருட்களின் மதிப்பு ரூபாய் ஒரு கோடிக்கும் மேலாகும். 28.012.07 அன்று இந்தப் பொருட்களை யாழ்ப்பாணம் அனுப்பி பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கு உதவும்படி இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திற்கு நாங்கள் வேண்டுகோள் விடுத்தபோது அவர்களும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டனர். 9.2.07 அன்று இதற்கான அனுமதியை வழங்கும்படி இந்திய அரசை வேண்டிக்கொண்டு இந்திய செஞ்சிலுவைச் சங்கம் கடிதம் அனுப்பியது. ஆனாலும் மார்ச் மாதம் வரை எவ்வித பதிலும் இல்லை. அதற்குப்பின் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வை.கோ., பா.ம.க. நிறுவனத் தலைவர் இராமதாசு, முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டசு ஆகியோர் பிரதமரிடம் நேரிலும் கடிதம் மூலமும் இப்பிரச்சனையை தெரியப் படுத்தினார்கள். அவரும் அதனைச் செய்வதாக வாக்குறுதி அளித்தார். ஆனாலும் மே மாதம் வரை இந்திய அரசின் அனுமதிக் கடிதம் வரவில்லை. அதற்குப் பிறகு தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவில் அங்கம் வகிக்கும் அமைப்புகளின் சார்பில் பிரதமருக்கும் முதலமைச்சருக்கும் வேண்டுகோள் விடுத்து பல்லாயிரக்கணக்கான கடிதங்களும் தந்திகளும் தொலைநகலிச் செய்திகளும் அனுப்பப்பட்டன. இதற்குப்பின் 5.6.2007 அன்று சென்னையில் அத்தனை அமைப்புகளின் தலைவர்களும் தோழர்களும் உண்ணாநோன்பு போராட்டத்தை நடத்தினார்கள். 13.06.07 அன்று ஜெனிவாவிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அலுவலகத்திற்குச் சென்று அங்கு தென்ஆசிய பகுதிக்குப் பொறுப்பாளராக இருக்கும் உடோ வாகன் மெய்க் என்பவரை நேரில் சந்தித்து இது குறித்து நான் முறையிட்ட போது அவர் அளவுகடந்த வியப்பு அடைந்தார். செஞ்சிலுவைச் சங்கம் பொதுவான மனித நேய அமைப்பாகும். உலக நாடுகளின் அரசுகள் எதுவாக இருந்தாலும் அதனுடைய தொண்டுகளுக்கு துணை நின்றே வந்திருக்கின்றனர். ஆனால் இந்தப் பிரச்சனையில் இந்திய அரசு அனுமதி தரத் தயங்குவதின் பின்னணி என்ன என்பது குறித்து இந்திய அரசுடன் உடனடியாகத் தொடர்பு கொள்கிறேன்'' என்று கூறினார்.


கடந்த ஆறு மாத காலத்திற்கு மேலாக நாம் மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீராகப் போயின. எளியவர்களான நமது தோழர்கள் வீதிவீதியாக - வீடுவீடாகச் சென்று குருவிகள் சேர்ப்பது போல் சேர்த்த பொருட்கள் பசியால் வாடும் சகோதர மக்களுக்கு அனுப்ப முடியாமல் வீணாகி வருவதைக் கண்டு மனம் நொந்தார்கள். வீடுகளில் சேகரித்து வைக்கப்பட்ட அரிசி கொஞ்சம் கொஞ்சமாக கெட்டுப் போகத் தொடங்கிற்று. மருந்துகள் அதன் மேல் பொறிக்கப்பட்டிருக்கும் தேதிகளைக் கடந்து கொண்டிருந்தன. இதையெல்லாம் நமது தோழர்களின் உள்ளங்களையும் அள்ளிக் கொடுத்த பொது மக்களின் உள்ளங்களையும் எந்த அளவுக்கு வேதனைக்கு உள்ளாக்கியிருக்கும் என்பதை யாராலும் கூற முடியாது. இந்தச் சூழ்நிலையில் ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயம் நமக்கு பிறந்தது. கடந்த 04.08.07 அன்று தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் விழுப்புரத்தில் தமிழர் மாநாடு கூட்டப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் அந்த மாநாட்டில் பேசினார்கள்.


செப்டம்பர் 7ஆம் தேதி மதுரையிலிருந்து புறப்பட்டு இராமேசுவரம் நோக்கியும் திருச்சியிலிருந்து புறப்பட்டு நாகப்பட்டினம் நோக்கியும் இரு அணிகளாகச் சென்று செப்டம்பர் 12ஆம் தேதியன்று படகுகளில் பொருட்களை ஏற்றிக் கொண்டு யாழ்ப்பாணம் செல்வது என முடிவு செய்யப்பட்டது. இந்த போராட்ட முடிவினை நாம் மேற்கொள்வதற்கு இந்திய, தமிழக அரசுகளே பொறுப்பாகும். இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக இந்தப் பொருட்களை அனுப்புவதற்கு நாம் செய்த முயற்சிகள் வீணாகிவிட்ட நிலையில் நாமே அந்தப் பொருட்களை படகில் ஏற்றிக் கொண்டு செல்வது என்பது சட்ட விரோதமாக இருக்கலாம். ஆனால் அது ஒருபோதும் கடமை தவறியதாகாது. நமது சகோதர மக்களுக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமையைச் செய்வதற்கு இதைத் தவிர வேறு வழியில்லை. இந்த கடமையை நாம் செய்ய முற்படும்போது இந்திய கடற்படை நம்மைத் தடுக்கலாம். சிங்கள கடற்படை நம்மை சுடலாம். எது நடந்தாலும் அதைப் பற்றிக் கவலைப் படாமல் நமது கடமையை நாம் துணிந்து செய்வோம். செப்டம்பர் 12ஆம் தேதி நாகப்பட்டினம், இராமேசுவரம் கரைகளில் கடல் அலைகளோடு மக்கள் அலை போட்டியிடட்டும். கூடுவோம்! உயிர்காக்கும் பொருட்களைக் கொண்டு செல்வோம்!! பட்டினியால் துடிக்கும் தமிழர்களுக்கு அளிப்போம்!! வரலாற்றுக் கடமையாற்றத் தமிழர்களே திரண்டு வருக!!

August 26, 2007

மக்கள் பார்வைக்கு வந்த நடிகர் சிவகுமாரின் கைவண்ணங்கள்!

ஒரு கலைஞன், உருவாகி புகழ் பெற்ற பின்னர் தனது ஆரம்பகாலப் படைப்புகளைத் திருப்பிப் பார்த்தால், அதிலும் ஒரு வியப்பு இருக்கும். அந்த படைப்புகளைப் பத்திரப்படுத்தி வைத்திருப்பது அதை விட அதிசயமானது தான். திரைப்படத்தில் பெரும் புகழ் பெற்றிருந்த சிவகுமார், தற்போது சின்னத்திரைகளில் உலா வருகிறார். சிவகுமார் ஒரு நடிகராக மட்டுமல்ல, ஓவியராகவும் இருந்துள்ளார். ஆரம்ப காலத்தில் இளம் வயதில் அவர் வரைந்த ஓவியங்கள் (25 முதல் 30 ஆண்டுகளுக்கு முந்தியவை) கோவையில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. இவற்றில் சில ஓவியங்கள் வித்தியாசமானவை. வியப்பானவை. இந்த ஓவியங்களை சிவகுமாரே விளக்கிச் சொன்னபோது, அதில் உள்ள உள் அர்த்தம் வியப்புக்குரியதாக இருந்தது. அழும் குழந்தையின் முகக் கோணல்கள், கன்னத்தில் வழிந்தோடும் கண்ணீர்த் துளி, சளிமூக்கு எல்லாவற்றையும் துல்லியமாகக் காட்டப்பட்டுள்ள ஓவியம் தான் அழும் குழந்தையின் ஓவியம். கண நேரத்தில் மாறிப் போகும் குழந்தையின் உதடுகள் மற்றும் கண்ணீர்த் துளிகளை வரைவது எளிதானதல்ல. நான் வரைந்துள்ள ஓவியங்களில் கற்பனை எதுவும் இல்லை. எல்லாமே யதார்த்தமானவை. இங்கு இடம் பெற்றுள்ள அழும் குழந்தையின் ஓவியம் கூட கற்பனையில் இல்லை. அழும் சிறுவனை நேரில் கண்டு வரைந்தவையே. இதே போன்று, நீளமில்லாத சிறு சிறு கோடுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஓவியம் தான் காந்தியின் படம். மகாத்மா காந்தி ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும்போது அவரது உருவம் எப்படி இருக்கும் என்பதையும், அவர் கூர்ந்து கவனித்திருப்பதையும் நான் நேரில் கண்டிருக்கிறேன். இதன் பதிவு தான் இந்த பென்சில் ஒவியம். ஒரு உருவத்தை உருவாக்கத் தொடர்ச்சியான கோடு போட வேண்டும். ஆனால் இந்த ஓவியத்தில் அப்படி இல்லை. வெறும் கோடுகளே அவரது உருவத்தைச் சொல்லும். ஆங்காங்கே முகத் தோலில் ஏற்பட்டுள்ள மடிப்பு, மூக்குக் கண்ணாடியின் நிழல், மற்றும் புடைக்கும் நரம்புகள் கூட இந்த ஓவியத்தில் தெரியும். ஓவியத்தை நேரில் காண்போர் இதை உணரமுடியும். மேலும், சிறிது தூரத்தில் இருந்து பார்த்தால், படத்தின் தத்ரூபம் தெரியும். இதே போன்ற ஓவியம் தான் கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணணின் ஓவியம். அவரது சிரிப்பழகை விவரிக்கிறது இந்த ஓவியம். சிரிக்கும்போது முகத்தில் ஏற்படும் வளைவு நெளிவுகள் அனைத்தும் கோடுகளிலேயே உருவாக்கப்பட்டுள்ளது இப்படத்தின் சிறப்பு. முகவமைப்பை வைத்தே அவர் சைவமா அசைவமா என்பதைக் கூட முடிவு செய்து விடலாம் என்றார் சிவகுமார்.
தனது ஓவியங்களை பெரும் கண்காட்சிகளுக்கு அனுப்பிய போது, இந்த ஓவியங்கள் பழங்காலத்து "இல்லஸ்ட்ரேட்டட்" வகையைச் சேர்ந்தவை என புறக்கணிக்கப்பட்டு விட்டன. நவீன ஓவியங்கள்தான் போட்டிக்குத் தகுந்தவை என வருத்தப்படுகிறார் சிவகுமார். சிவகுமார் ஒரு நடிகனாக மட்டுமல்ல, தனது சுயசரிதையை எழுதியதன் மூலம் எழுத்தாளராக, ஒவியராக உருவாகி ஒரு முழுமையான கலைஞனாகத் திகழ்கிறார் என்பதில் சந்தேகமில்லை.

இன்றைய குறள்

செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு

வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர்

அறத்துப்பால் : விருந்தோம்பல்

மக்களுக்காக சிந்தித்த மாமேதை மார்க்ஸ் தத்துவம்

"இயற்கை, மனித சமுதாயம், சிந்தனை ஆகியவற்றின் வளர்ச்சியின் மீது ஆட்சி செய்யும் மிகப் பொதுவான விதிகளைக் குறித்த விஞ்ஞானமே தத்துவஞானமாகும்"

தமிழோசை

  • ஹைதராபாத் குண்டுத்தாக்குதலுக்கு இந்திய குடியரசுத் தலைவர் கண்டனம் : இந்தியாவின் ஆந்திரமாநிலத் தலைநகர் ஹைதராபாதில் சனிக்கிழமை நடைபெற்ற குண்டுத் தாக்குதலை இந்தியாவின் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் கண்டித்துள்ளார்.
  • கிழக்கிலங்கை விஜயம் குறித்து தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் ஆனந்தசங்கரியின் செவ்வி : இலங்கையில், தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் ஆனந்தசங்கரி அவர்களும், வேறு சில தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் குழுவாக இணைந்து சமீபத்தில் இலங்கையின் கிழக்குப்பகுதிக்கு சென்றிருந்தனர்.
  • உதைப்படும் நேர்மை - பாகம் மூன்று : உலக அளவில் அதிகப்படியான மக்களால் பார்த்து கேட்டு ரசிக்கப்படும் விளையாட்டு கால்பந்து. இந்த கால்பந்து விளையாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பல நாடுகளில் முறைகேடுகள் நடந்துள்ளது கால்பந்து ரசிகர்களை மிகவும் பாதித்துள்ளது.
  • மேலும் இன்றைய (ஆகஸ்ட் 26 ஞாயிற்றுக்கிழமை 2007) "BBC" தமிழோசை செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

August 25, 2007

சமீபமாக தி.மு.க-வுக்குள் ஒரு சக்தியாக அழகிரி வளர்ச்சி அடைந்து வருகிறார். அழகிரி இமேஜ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? "சோ" பதில்


ஜனநாயக நாட்டில் விமர்சனங்கள் அறிவு பூர்வமாக இருக்க வேண்டும் என்றொ, அல்லது மக்கள் புத்திசாலித் தனமாக இருக்க வேண்டும் என்றோ கட்டாயமில்லை. ஜன நாயகத்தின் ஒரு பெரிய குறை பாடுகளில் இதும் ஒன்று. (எங்கோ படித்தது)

சமூக பொறுப்புணர்ச்சி உள்ள பத்திரிக்கையாளர் இந்த நாட்டில் மிக குறைவு. கோயங்கா, சோ போன்றவர்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய பங்கு மிக பெரிது. ஜனநாயத்தின் மிக பெரிய தூண் என்று தன்னை தானே அழைத்துக் கொண்டு சமுதாயத்தை மேலும் சீரழிக்கும் மீடியா உலகில் சோ போன்றவர்கள் கொள்கை உணர்ச்சியோடு சீரிய முறையில் நடத்தி வருகிறார்கள்.
இந்த வார விகடனில் வந்த சோ பேட்டி. நேற்றைய எதிரி... ஜெயா இன்றைய எதிரி... சன் நாளைய எதிரி... மக்கள் டி.வி-யா?
ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுக்குக்கூட இவரது அரசியல் ஆரூடங்கள் ஆதர்சம்! மனதில் பட்டதைச் சட்டென்று போட்டு உடைக்கிற மனிதர் சோ..! தற்போதைய அரசியல் களம் பற்றி சுடச் சுட பேச ஆரம்பித்தார்.
‘‘தி.மு.க-வின் இன்றைய...?’’
‘‘களேபரம்! அரசுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் தர முன்வராமல், அதை மறுப்பதன் மூலமே அரசாங்கத்தை நடத்திச் சென்றுகொண்டு இருக்கிறார்கள். விலைவாசி உயர்வா? ‘உயரவில்லை!’, மணல் கொள்ளையா? ‘கொள்ளை அடிக்கப்படவில்லை!’, தனியார் கல்லூரிகளில் பகல் கொள்ளையா? ‘பகலுமில்லை, கொள்ளையுமில்லை. தடுக்க எங்களிடம் அதிகாரமுமில்லை!’ இப்படி எல்லாவற்றையும் மறுப்பதே இந்த அரசாங்கத்தின் வாடிக்கையாகிவிட்டது! துணைநகரம், விமான நிலையவிரிவாக்கம், ஹெல்மெட் சட்டம், இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்னை என எல்லா விஷயங்களிலும் தெளிவில்லாத ஒரு குழப்பமே தெரிகிறது. தவிர, தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், கிரிமினல்களுக்குக் குளிர்விட்டுப் போச்சு! தென்காசிக் கொலைகள், சிவகங்கை ரிமோட் வெடிகுண்டு என பக்கம் பக்கமாக ரத்தச் செய்திகள். இந்த ஆட்சியில் மட்டும்தான் இது நடக்குதுன்னு சொல்லலை. ஆனா, இந்த ஆட்சியில் வன்முறையின் தாக்கம் அதிகமா இருக்கு என்கிறேன்!’’
‘‘சாத்தான்குளத்தில் டைட்டானியம் ஆலை அவசியமா?’’
‘‘என்னைப் பொறுத்தவரையில் டைட்டானியம் தொழிற்சாலை அமைவதில் தவறில்லை. தொழிற்சாலைகளும் பெருகினால்தான், ஒரு நாடு உண்மையிலேயே முன்னேறியதாக அர்த்தம். தொழில் ரீதியான முன்னேற்றம் ஏற்படும்போது, விவசாய நிலங்களுக்குச் சற்றே பாதிப்பு ஏற்படுவது இயற்கைதான். ஆனால், டைட்டானியம் தொழிற்சாலைக்காக நிலம் கையகப்படுத்தப் படும்போது நிலத்துக்கு உண்டான உண்மையான மதிப்பை நில உரிமையாளர்களுக்குத் தர வேண்டும். டைட்டானியம் விலையுயர்ந்த தாது. டாடா நல்ல லாபகரமான நிலையில் செயல்படும் மிகப் பெரிய நிறுவனம். எனவே, ஒரு துண்டு நிலமானாலும் அதற்கு எந்தளவுக்கு அதிகபட்ச விலை கொடுக்க முடியுமோ, அந்தளவுக்கு கொடுத்து வாங்குவதுதான் முறை. இதனைச் சாத்தியப்படுத்த அரசாங்கம்தான் முனைந்து, முன்நின்று செயல்பட வேண்டும்! அப்படிச் செய்தால் டைட்டானியம் ஆலை வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். மற்றபடி யாரோ ஒரு தனியார் தொழில் அதிபரை முடக்கவே டாடாவை ஊக்குவிக்கிறார்கள் என்பதெல்லாம் ஆதாரமில்லாத குற்றச்சாட்டு!’’
‘‘அரசாங்கமே கேபிள் டி.வி-யைத் தொடங்குவதை நீங்கள் வரவேற்கிறீர்களா..?’’
‘‘ஜெயலலிதா ஆட்சியின்போது மாறன் குடும்பத்தாரின் சுமங்கலி கேபிள் விஷன், தமிழகத்தில் அதிரடி சாம்ராஜ்யம் நடத்திக்கொண்டு இருந்தது. போட்டிக்கு இருந்த மற்ற நிறுவனங்களை மிரட்டி உருட்டி தங்கள் நெட்வொர்க்கை விரிவுபடுத்தி வந்தார்கள். விஜய் டி.வி-யில் செய்தி வாசிக்க முடியாமல், ராஜ் டி.வி புது சேனல்களை ஆரம்பிக்க அனுமதி பெற முடியாமல் பல தடங்கல்கள் உண்டாக்கப் பட்டன. அப்போதே நானும் சிலரும் ‘அரசாங்கமே கேபிள் டி.வி. நடத்தலாம்’ என்று குரல் கொடுத்தோம். அதை எப்படிப் புரிஞ்சுக்கிட்டாங்களோ... மொத்தமா எல்லா தனியார் கேபிள் சேனல்களையும் அரசுடமையாக்க சட்டம் கொண்டு வந்தாங்க ஜெயலலிதா. அதை இதே கருணாநிதி எதிர்த்தார். ஆனால், இப்போது..? ஜெயலலிதா எல்லா சேனல்களையும் அரசாங்க கன்ட்ரோல்-ல கொண்டுவரப் பார்த்தாங்க. ஆனால், இப்போதைய அரசாங்கம் கொண்டுவரப் போறதா சொல்ற ‘அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன்’ என்பது அப்படி அல்ல. மற்ற நெட்வொர்க்குகளுடன் இதுவும் நடக்கும். ஆனால் இது, இன்னொரு சுமங்கலி கேபிள் விஷன் போல ஆகிவிடும் அபாயம் இருக்கிறது. அரசாங்கத்துக்கு நெருக்கமா இருந்தவங்களே மத்தவங்களை மிரட்டமுடியும் என்கிறபோது, அரசாங்கமே கேபிள் நடத்தினால் இன்னும் அதிகமாகவே அது நடக்க வாய்ப்பு இருக்கு! ‘நேற்றைய எதிரி’யாச்சேன்னு ஜெயா டி.வி-க்குக் குடைச்சல் கொடுப்பது, ‘இன்றைய எதிரி’ன்னு சன் டி.வி. ஒளிபரப்பைக் கெடுப்பது, ‘நாளைய எதிரி’ன்னு மக்கள் தொலைக்காட்சிக்கு தொல்லை கொடுக்குறதுனு இந்த ‘அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன்’ செயல்படுகிற ஆபத்து இருக்கு. இந்தக் குறைகள், விரோத மனப்பான்மைகள் எதுவும் இல்லாமல், பல்லாயிரக்கணக்கான கேபிள் ஆபரேட்டர்களையும் அரவணைத்து, குறைவான கட்டணத்துடன் அரசின் கேபிள் கார்ப்பரேஷன் செயல்பட்டால் அதை வரவேற்கலாம்!’’
‘‘புது எம்.பி. கனிமொழியின் செயல்பாடுகள் எப்படி?’’
‘‘கருணாநிதி அவர் குடும்பத்துல இன்னும் யாரை விட்டுவைக்கப் போறார்னு தெரியலை. ஸ்டாலினுக்கு கோட்டை, அழகிரிக்கு தென் தமிழ்நாடு, கனிமொழிக்கு டெல்லின்னு ஏதோ ஒரு பேரரசர் தன் வாரிசுகளுக்கு சாம்ராஜ்யத்தைப் பங்கு போட்டுக் கொடுக்குற மாதிரி பிரிச்சுக் கொடுத்துட்டு வர்றார். கொஞ்ச காலத்துக்கு முன், கனிமொழியைப் பற்றி விமர்சனம் கிளம்பியதற்கு ‘அவர் அரசியலிலேயே இல்லையே! எதற்கு அவரைப் பற்றி விமர்சிக்கிறார்கள்?’னு கேள்வி கேட்டார். அது நடந்த ரெண்டாவது வாரமே கனிமொழி எம்.பி-னு அறிவிப்பு வந்தது! ‘அரசியல் அவங்களுக்கு என்ன புதுசா? ரொம்ப நாளா பழக்கமான துறைதானே? அதனால் எம்.பி. ஆக்கப்பட்டுள்ளார்’னு கதையை மாத்தினார். தி.மு.க. தலைவர் பதவியை எந்தளவுக்கு துஷ்பிரயோகம் பண்ண முடியுமோ, அந்தளவுக்குப் பண்ணிட்டு இருக்கார் கருணாநிதி. வேறென்ன சொல்ல?’’
‘‘ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர் என்று முன்னிலைப்படுத்தப்படுகிறார். இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’
‘‘தயாநிதி மாறன், அன்புமணி, கனிமொழி போல அரசியலில் திணிக்கப்பட்டவர் அல்ல ஸ்டாலின். அவர் அரசியலில் ஈடுபடத் தொடங்கி முப்பது வருஷங்களுக்கு மேலாகிவிட்டன! எமர்ஜென்சி காலங்களில் சிறைத் தண்டனை அனுபவித்திருக்கிறார். இளைஞர் அணித் தலைவர், எம்.எல்.ஏ., மேயர் எனப் படிப்படியாகத்தான் அவர் முன்னேறுகிறார். கருணாநிதியின் வாரிசாக இருந்தாலும், ஒரு கட்சியினால் தங்கள் ஆட்சியின் முதல்வர் என்று தேர்ந்தெடுக்கப்படுவதற்கு உள்ள வழி முறைகளின்படியே அவர் தயாராகி வருவதால், அவர் அந்தப் பதவிக்கு வந்தாலும் குற்றம் காண முடியாது’’.
‘‘அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தம் நமக்கு பாதகமான ஒன்று என எதிர்ப்புக் குரல்கள் கிளம்புவதை எப்படி எடுத்துக்கொள்வது..?’’
‘‘அணு தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரையில் நம்மிடம் போதிய மூலப்பொருட்கள் கிடையாது. நம்மிடம் உள்ள தொழில்நுட்பமும் உடனடி தேவைகளுக்குப் போதுமானது அல்ல! எனவே, நமக்கு அமெரிக்காவின் உதவி தேவைப்படுகிறது. ஒப்பந்தம் ஏற்பட்டால் நாம் அணுகுண்டு சோதனை நடத்த முடியாது என்று கம்யூனிஸ்ட்டுகள் கதறுகின்றனர். இனிமேல் அணுகுண்டுச் சோதனை நடத்தித்தான் நமது அணு ஆயுத ஆற்றலை உலகத்துக்கு உரைக்க வேண்டும் என்பதில்லை. ஏற்கெனவே இந்திராகாந்தி மற்றும் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் நாம் நடத்திய சோதனைகளே நமது அணு ஆற்றலை எடுத்துக்காட்டியுள்ளன. அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஏற்பட்டாலும், நாம் அணு ஆயுதச் சோதனை செய்வதன் மூலம் அந்த ஒப்பந்தம் தானாகவே செல்லாததாகிவிடாது. முதலில் விளக்கம் கேட்கப்படும். பின்னர் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும். அன்றைய சந்தை நிலவரப்படி நஷ்டஈடு தரப்பட வேண்டும். பல கட்டங்களுக்குப் பிறகே ஒப்பந்தம் ரத்தாவது பற்றி முடிவாகும். இதற்கென்று ஏகப்பட்ட ஷரத்துக்கள் உள்ளன. ஆசியக் கண்டத்தில் சீனாவுக்கு எதிரான ஒரு சக்தியாக இந்தியா உருவெடுப்பதில் அமெரிக்காவுக்கு லாபங்கள் அதிகம். அமெரிக்கா நம்முடன் அணு தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் பிற நாடுகளும் நம்முடன் அணு ஆற்றலைப் பகிர்ந்துகொள்வது சாத்தியப்படும். தனிப்பட்ட முறையில் இந்தியாவுக்கும் இதில் ஆதாயங்கள்தான் அதிகம் என்பது என் கருத்து! அமெரிக்காவுடன் ஒப்பந்தம் என்றவுடன் வரிந்துகட்டிக்கொண்டு எதிர்க்கும் கம்யூனிஸ்ட்டுகள், நமது அருணாசலப்பிரேதசத்துக்கு சீனா உரிமை கோருவதைப் பற்றி ஏன் வாய் திறக்க மறுக்கிறார்கள்? இந்த அண்டை நாடு ஏற்கெனவே நமது பிராந்தியங்கள் சிலவற்றை கையகப்படுத்திக்கொண்டு இன்னும் ஆக்கிரமிக்கப் பார்க்கிறது. இது நமது நாட்டின் இறையாண் மையைப் பாதிக்காதா! கம்யூனிஸ்ட்டுகளின் எதிர்ப்பு முழு சந்தர்ப்ப வாதம்!’’
‘‘கலைஞர் டி.வி. குறித்தான உங்கள் எதிர்பார்ப்பு என்ன?’’
‘‘அந்தப் பெயரே தப்பாகத் தோன்றுகிறது எனக்கு! டி.வி. தொடங்கப்படுவதற்கு முன்னரே அதன்மீது முத்திரை குத்தப்பட்டுவிட்டது போல இருக்கிறது. தமிழ் சேட்டிலைட் சேனல்களில் இப்போதைக்கு நம்பர் ஒன் சன் டி.வி-தான். அதிகமான எண்ணிக்கையிலான பார்வையாளர்கள், பெரிய சினிமா லைப்ரரி, பக்கா புரொஃபஷனலான டீம்னு நல்லா வளர்ச்சி அடைஞ்சிருக்காங்க. அதோட போட்டி போடணும்னா, தெளிவான திட்டங்களுடன் தயாராகணும்’’.
‘‘டாக்டர் ராமதாஸ் செய்கிற எதிர்ப்பு அரசியல் பற்றி..?’’
‘‘டெல்லியில், அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகம் தொடர்பான சர்ச்சைகளில் அன்புமணி சிக்கிக்கிட்டு தவிச்சப்ப, ராமதாஸுக்கு ஆறுதலாகவோ ஆதரவாகவோ தி.மு.க. எதுவும் செய்ய முன் வரவில்லை. அப்போ தன்னைக் கைவிட்டுட்டாங்க என்கிற பெரிய வருத்தத்தில்தான் இதெல்லாம் ஆரம்பிச்சது. இன்னொரு முக்கியமான விஷயம்... விஜயகாந்த்தின் வளர்ச்சி! அரசாங்கத்தை எதிர்ப்பதால்தான் விஜயகாந்த்துக்கு வாக்குகள் விழுது, மக்கள் கிட்டேயும் ஆதரவு பெருகுதுன்னு ராமதாஸ் நினைக்கிறார். இந்த நேரத்தில் கூட்டணிக் கட்சி என்ற முறையில் அரசாங்கத்துக்கு ஆதரவா செயல்பட்டா, தங்களுடைய வாக்குகளில் கணிசமான அளவை விஜயகாந்த் பிடிச்சுக்குவாரோன்னு பயம். அதனாலதான் இப்படி தினமும் அரசுக்கு எதிரா அறிக்கை மேல அறிக்கை விட்டுட்டு இருக்காரு. மூணாவதா, கலைஞரேகூட அடுத்த தேர்தல்ல தன்னை எப்படி நடத்து வார்ங்கிற சந்தேகமும் ராமதாஸுக்கு வந்திருக்கு. இதெல்லாமேதான் காரணம்!’’
‘‘எதிர்க்கட்சித் தலைவராக வெறும் அறிக்கைகள் மூலமே அரசியல் செய்கிறாரே ஜெயலலிதா... சட்டசபைக்குக்கூட வருவது இல்லையே..?’’
‘‘அ.தி.மு.க-வும் ஆர்ப்பாட்டம், போராட்டம்னு நடத்திக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால், அதெல்லாம் போதாது. ஜெயலலிதா சட்டசபைக்குத் தொடர்ந்து சென்றிருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அ.தி.மு.க-வின் எம்.எல்.ஏ-க்கள் மொத்தமாக சஸ்பெண்ட் செய்யப் பட்டபோது, தன்னந்தனியாக ஜெயலலிதா சட்டசபைக்குச் சென்று பேசியது மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. அப்போது கிடைத்த வரவேற்பை அவர் தக்கவெச்சிருக்கணும்!’’
‘‘சமீபமாக தி.மு.க-வுக்குள் ஒரு சக்தியாக அழகிரி வளர்ச்சி அடைந்து வருகிறார். இந்த அழகிரி இமேஜ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’
‘‘கழக இமேஜ் ரொம்ப நன்றாக இருக்கிறதா என்ன..! மெயின் இமேஜே சரியில்லாம இருக்கும்போது இதைப்பற்றிச் சொல்ல என்ன இருக்கு..?’’ -
சூடாகப் பேசி முடித்து, புன்சிரிப் போடு விடை கொடுக்கிறார் சோ!

ஓணம் நல்வாழ்த்துக்கள்!


அனைவருக்கும் ஓணம் நல்வாழ்த்துக்கள்! இலைபோட்டு சாப்பிடுவதை மறந்து நெடுநாட்களாகி விட்டாலும், (சாப்பிட வழியில்லை என்பது வேறு விசயம்!) இந்த படத்தை பார்த்தாவது ஆறுதல் அடைந்துகொள்வோம். என்னைப்போன்ற எத்தனையோ லட்சக்கணக்கான நண்பர்கள் குடும்பத்தோடு திரும்பவும் இந்தியா வந்து இலைபோட்டு, அந்த சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடும், வெறியோடும், கனவோடும் இருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களனைவருக்கும் இந்தப் படத்தின் மூலம் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்!!

இன்றைய குறள்

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்

விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா?

அறத்துப்பால் : விருந்தோம்பல்

"ஒரு நாள் உண்ட உணவில் அதற்கேற்ற பயன் இருப்பது போன்று, அனுஷ்டானத்திற்கு ஏற்ற அளவு யோகத்தின் பயன் உண்டு"
- சுவாமி சித்பவானந்தர்

சல்மான்கான் சிறையில் : தமிழோசை

  • நடிகர் சல்மான்கான் இந்தியாவில் அரிய வகை மான் ஒன்றை கொன்றதற்காக தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து இந்தி திரைப்பட நடிகர் சல்மான் கான் முறையீடு செய்தார். ஆனால் இந்த முறையீடு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து சல்மான் கான் இன்று சிறையில் அடைக்கப்பட்டார்.
  • இந்தியாவின் கேரளா மாநிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உரிய விடுப்புகளை பெறாமல், பணிக்கு வராமல் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
  • சீனாவில் பெண் கருக்கலைப்பு தொடர்பில் புதிய சட்டம்
  • சுமார் 80 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ள கிரேக்கத்துக்கு ஐரோப்பிய நாடுகள் விரைந்து உதவிகளை அனுப்பிக் கொண்டுள்ளன.
  • மேலும் இன்றைய (ஆகஸ்ட் 25 சனிக்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க இணைப்பில் செல்க... http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

ஃபாக்ஸ் மூவி டோன் செய்திக்காக "மகாத்மா காந்தி" அவர்களின் நேர்முகம்