November 19, 2007

உயிர்வலி - சிறுகதை

மரத்தடி.காம் -ல் பிரசுரமானது http://maraththadi.com/article.asp?id=2923

யம்மா! தாங்கமுடியலம்மா, கடவுளே! எதுக்காக இன்னும் இந்த உசுர வச்சு, இப்படிச் சித்ரவதைப் படுத்தறப்பா? “ஏம்மா! ஒரேயடியாப் போய்ச்சேர்ற மாதிரி எதாச்சும் மாத்திரை மருந்து இருந்தா குடும்மா, ஒனக்குப் புண்ணியமாப் போகும்” என்று முதுகுத்தண்டில் உள்ள பிரச்சினையால், மாதக்கணக்கில் படுத்த படுக்கையாக இருந்த தணிகாசலம் நர்ஸ் வந்தபோது புலம்பியதைக் கேட்டுத் திடுக்கிட்ட பக்கத்துப் படுக்கைக்காரர் ராமசாமி, “அப்படியெல்லாம் சொல்லாதிங்க, வயசாயிட்டாலே ஒடம்புக்கு நோவு வர்றதுதான். எப்படிப் பிறப்புன்னு ஒண்ணு இருந்தா இறப்புன்னு ஒண்ணைத் தடுக்கமுடியாதோ! அது மாதிரித்தான் வயசாயிட்டா நம்ம ஒடம்புக்கு வர்ற நோவுகளையும் தடுக்க முடியாது” என்று சொன்னார். அதைக்கேட்ட தணிகாசலம், “நீங்க ரொம்ப நாளா இங்க இருக்கீங்களோ?” என்றார்.



“ஆமா! எனக்கு நுரையீரல்ல பிரச்சினை, அதுல ஒரு திரவம் தேங்கி இருக்கு, சரியா உறுப்புக்கள் வேலை செய்யாததால அத தினமும் குழாய் வழியாத்தான் எடுக்கணும். நாளடைவில சரியாயிடும்-னு டாக்டர் சொல்லியிருக்கார், என்ன... ஒண்ணு… அந்தத் திரவம் எடுக்கறப்ப, தினமும் ஒரு மணிநேரம் ஒக்காந்திருக்கலாம், பாவம்! ஒங்களால அது முடியாம படுத்த படுக்கையா இருக்கறதால கொஞ்சம் செரமமா இருக்கும். ஆனாலும் நான் ஒக்காந்திருக்குற ஒரு மணி நேரமும், அந்த திரவம் வெளில வர்றதுக்குள்ள போதும் போதும்-னு ஆயிடுது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான வேதனை. எல்லாம் நல்லதுக்குத்தான், கூடிய சீக்கிரமே நாம ரெண்டுபேருமே குணமாகி வீட்டுக்குப் போயிரலாம், ஒண்ணும் கவலப்படாதீங்க தணிகாசலம்” என்று ஆறுதல் வார்த்தை கூறியது தணிகாசலத்துக்குச் சற்றுக் காயத்தில் மருந்து போட்டது போன்று இருந்தது.



இருவருமே நெடுநாட்களாக அந்த மருத்துவமனையில் படுத்த படுக்கையாகவே இருக்கக்கூடிய நோயாளிகள். தங்களது இளமைக்காலங்கள் பற்றியும், சந்தோசமான சம்பவங்கள் பற்றியும் பேசிக்கொள்வதுண்டு. தணிகாசலம், தான் மிலிடரியில் இருந்தபோது ஏற்பட்ட சில சுவாரஸ்யமான அனுபவங்களை ராமசாமியிடம் பகிர்ந்து கொள்ளும்போது ஒரு புத்துணர்ச்சி கிடைப்பதுபோல் உணர்வார்.



ராமசாமி அந்த அறையில் இருந்த ஒரே ஒரு ஜன்னலோரத்தில் படுத்திருப்பதால், அவர் அமர்ந்திருக்கும் அந்த ஒரு மணிநேர அந்திசாயும் மாலைப்பொழுதுகளில், வெளியில் நடக்கக்கூடிய நிகழ்வுகளை மிகத்தெளிவாகத் தணிகாசலத்துக்கு விளக்குவார். சொல்லப்போனால் ஒவ்வொரு நாளும் தணிகாசலம் வாழ்வதே அந்த ஒரு மணிநேரம்தான்.



“அதோ பக்கத்துல பச்சைப்பசேல்-னு உயரமான மலை உச்சியிலேருந்து பால்போல வெண்மை நிறத்துல ரம்மியமான ஒரு நீர் வீழ்ச்சி கொட்டுது. அதுக்குக்கீழ பாத்தா, அழகான தடாகம் ஒண்ணு இருக்கு, அதுல தாமரையும் அல்லியும் பூத்துக்குலுங்குது. அன்னங்களும், வாத்துகளும், இன்னும் ஏதேதோ வண்ண வண்ணப்பறவைகளெல்லாம் நீந்தி விளையாடுது. பக்கத்துல உள்ள பூங்காவுல அழகழகான மலர்களும் அதுலதேனெடுக்குற வண்ணத்துப்பூச்சிகளும், தேன்சிட்டுகளும்கூட இங்கேருந்து கண்ணுக்குத் தெளிவாத் தெரியுது. அங்கே குழந்தைங்கெல்லாம் ஓடி ஆடி விளையாடுறாங்க. அங்கங்கே இருக்குற நாற்காலிகள்ல இளம் காதல் ஜோடிங்க ஊடலும் கூடலுமா ஒக்காந்து பட்டும் படாமக் கொஞ்சிக் கொலாவிக்கிட்டுருக்காங்க. நம்மமாதிரிக் கொஞ்சம் வயசானவங்க காலார நடக்கிறாங்க. இதோ ஓய்வெடுக்கச் சூரியன்கௌம்பிட்டதால மலைக்குக் கீழ இருக்கற எல்லா வீடுகள்லயும் மின்விளக்குப் போட ஆரம்பிச்சுட்டாங்க. அந்த அருவியோட அழகும், அதுக்குக்கீழ இருக்கற வீடுகளும், அழகழகான மின்விளக்குகளும்..அப்பப்பா! பார்க்கவே மனசுக்கு எவ்வளவு இதமாக இருக்கு தெரியுமா? இதோ வலதுபுறம் ஏதோ ஒரு ஊர்வலம் வருது, நல்ல செவிக்கினிய மங்களகரமான வாத்தியங்கள் முழங்க சீருடை அணிஞ்சபடியே நெறய பேருவரிசையாக மிலிடரி பெரேடு போல உணர்ச்சிப்பூர்வமாக முகத்துல சந்தோசம் பொங்க நடந்து வர்றாங்க. ஒரு வேளை திருமண ஊர்வலமாக இருக்குமோ” என்று வெளியில் உள்ள பல நிகழ்வுகளை வர்ணித்துச் சொல்லிக்கொண்டிருந்தார் ராமசாமி.



“ராமசாமி! நீங்க சொல்றத நான் முழுசாப் இந்தப் படுக்கையிலிருந்து பாக்கமுடியாட்டியும், என்னால அத உணரமுடியுது, அந்த பெரேடுச் சத்தம் என்னோட காதுல விழாட்டியும், நான் மிலிடரில இருக்கறப்ப நடந்த அந்த பெரேடையெல்லாம் நெனச்சுப் பாத்துப் பூரிச்சுப்போறேன்” என்று ஆசுவாசப்படுத்திக்கொண்டார்.



வழக்கம்போல இரவு நெடுநேரம் பேசிக்கொண்டிருந்த இருவரும் அப்படியே உறங்கிப்போனார்கள். மறுநாள் காலை மருந்து மாத்திரைகள் கொடுக்க வந்த நர்ஸ் ராமசாமியை எழுப்பினாள். எந்த அசைவும் இன்றி தூக்கத்திலேயே நிம்மதியாக அவர் உயிர் பிரிந்திருந்தது. நர்ஸ் மேற்கொண்டு ஆகவேண்டியதைச் செய்து, உடலை அந்தப் படுக்கையிலிருந்து அப்புறப்படுத்த ஏற்பாடு செய்தபோது, செய்தி அறிந்த தணிகாசலம் உடைந்து போனார். அவருக்கென்று ஆறுதலாகப் பேசிக்கொண்டிருந்த ராமசாமியின் பிரிவு அவரை வெகுவாகப் பாதித்தது.



அடுத்தநாள் நர்ஸிடம், “என்னை அந்த ராமசாமி இருந்த ஜன்னலோரத்துல உள்ள படுக்கைக்கு மாத்துங்களேன்” என்று கேட்டதற்கிணங்க அவரை அங்கு மாற்றினர். ராமசாமி நினைவாகவே இருந்த தணிகாசலம் அவர் வெளியே பார்த்து ரசித்துத் தனக்குத் தினம் தினம் விளக்கும் அந்த அழகுமிகு காட்சியைப் பார்க்க எண்ணி, மிகவும் சிரமப்பட்டு ஒரு புறம் திரும்பித் தலையை லேசாகத் தூக்கி ஜன்னல் வழியாகப் பார்த்தார். ஒரு உயர்ந்த கட்டிடத்தின் வெள்ளைச் சுவரைத்தவிர, ராமசாமி விளக்கியதுபோல் அங்கு வேறு எதுவுமே இல்லை. குழம்பிப் போனவர் நர்ஸிடம் இதுவரை நடந்தவற்றையெல்லாம் கூறி, விளக்கம் கேட்டபோது அந்த நர்ஸ் சொன்னதைக்கேட்டு அவரால் கண்ணீர் சிந்தாமல் இருக்கமுடியவில்லை.



“ராமசாமிக்கு ரெண்டு கண்ணும் தெரியாதுங்க, அவரால அந்தச் சுவரைக்கூடப் பாக்கமுடியாது, நீங்க படுத்த படுக்கையா இருந்து வேதனைப்படுறத உணர்ந்த அவரு, ஒங்கள உற்சாகப் படுத்தறதுக்காகவும், வேதனை தெரியாம இருக்கறதுக்காகவும் தினம் தினம் அப்படிச் சொல்லியிருக்காரு. எங்க எல்லாருக்குமே அவரால எந்தத் தொந்தரவும் இல்ல, அருமையான பேஷன்ட், மரணம் கூட அவருக்கு வலி தெரியாம தூக்கத்துலயே வந்துருச்சு பாத்தீங்களா” நர்ஸும் சேர்ந்து துக்கம் தொண்டையடைக்கக் கண்ணீர் விட்டாள்.

நவநீ

நடிகர் வினீத்

இன்றைய குறள்

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக் கறிந்து

தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறாமையினால் தீச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள்


அறத்துப்பால் : அழுக்காறாமை

ஆசிய அளவிலான போட்டியில் புதுச்சேரி மாணவி மகேஸ்வரி சாதனை

அன்மையில் ஜோர்டான் நாட்டில் நடைபெற்ற ஆசிய அளவிலனா இளைஞர்கள் மற்றும் ஜூனியர்களுக்கான எடை தூக்கும் போட்டியில் 15 வயதான புதுச்சேரியைச் சேர்ந்த பள்ளி மாணவி மகேஸ்வரி மூன்று தங்கப் பதக்கங்கள் மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். ஆசிய இளைஞர்களுக்கான போட்டியில் 58 கிலோ எடைப் பிரிவில் மூன்று தங்கப் பதக்கங்களும், ஆசிய ஜூனியகர்களுக்கான போட்டியில் மூன்று வெண்கலப் பதக்கங்களும் மகேஸ்வரி வென்றுள்ளார். புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கத்திலுள்ள கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் ஆண்டு படித்து வரும் மகேஸ்வரிதான் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து உலக அளவில் பெண்களுக்கான எடை தூக்கும் போட்டியில் பதக்கங்களை வென்றிருக்கும் முதல் வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு விவசாயின் மகளான மகேஸ்வரி கல்வியிலும் சிறந்து விளங்குகிறார். தமது பத்தாம் ஆண்டுத் தேர்வில் 91 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பள்ளிப் படிப்பிலும் சிறந்து விளங்கும் மகேஸ்வரி ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரம் பயிற்சியில் ஈடுபடுகிறார். ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்வதே தனது இலட்சியம் என்றும் அது குறித்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார்

நானாக விருப்பப்பட்டு அரசியலுக்கு வரவில்லை - பிரதமர் மன்மோகன்சிங்

"நானாக விருப்பப்பட்டு அரசியலுக்கு வரவில்லை. அரசியலை எனது தொழிலாகவும் தேர்வு செய்யவில்லை. அரசியலில் நீண்டகால குறிக்கோள்களை அடைய குறுகியகால மோதல்களைச் சமாளித்து நிற்க வேண்டிய சங்கடம் இருப்பதாக நான் அறிவேன். தினசரி சவால்களை சமாளித்துக் கொண்டே நீண்டகால குறிக்கோள்களையும் அடைந்தாக வேண்டும்" - பிரதமர் மன்மோகன்சிங்

முல்லைப் பெரியார் புதிய அணை: தமிழக விவசாயிகள் எதிர்ப்பு

  • வங்கதேசத்துக்கு சர்வதேச நிதி உதவிகள் வரத் தொடங்குகின்றன : சூறாவளியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட, வங்கதேசத்துக்கு 140 மில்லியன் டொலர்கள் பெறுமதியான சர்வதேச உதவி கிடைக்கும் என்று உறுதி வழங்கப்பட்டுள்ளதாக வங்கதேச அனர்த்த முகாமைத்துவ அமைச்சரான தாபன் சௌத்திரி தெரிவித்துள்ளார்
  • முல்லைப் பெரியார் புதிய அணை: தமிழக விவசாயிகள் எதிர்ப்பு : முல்லைப்பெரியார் அணைப் பகுதியில் புதிய அணை ஒன்றை கட்டுவதற்காக கேரள அரசினால் உருவாக்கப்பட்டுள்ள அலுவலகம் குறித்து தமிழக விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
    தமிழகத்துக்கு வரும் தண்ணீரைத் தடுக்கும் நோக்கிலேயே கேரள அரசு செயற்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், தமிழகத்துகு வரும் நீர் விநியோகம் அதனால் பாதிக்கப்படாது என்றும், தற்போதைய புதிய அணைக்கான திட்டம், ஏற்கனவே உள்ள உச்ச நீதிமன்றத்தீர்ப்பை புறக்கணிப்பதாக அமையாது என்றும் கூறுகிறார், கேரள நீர்வளத்துறை அமைச்சரான பிரேமச்சந்திரன். முல்லைப் பெரியார் அணை விவகாரத்தில் தமிழக அரசுடன் தொடர்ந்து இருதரப்புப் பேச்சு நடத்த தாம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறுகிறார்
  • எலிசபெத் அரசியின் திருமண வைர விழா கொண்டாடப்பட்டது : பிரிட்டனின் அரசி எலிசபெத்தும் அவரது கணவர் இளவரசர் பிலிப்பும் தமது திருமணத்தின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவினை கொண்டாடுகிறார்கள். இது தொடர்பில் வெஸ்ட் மினிஸ்டர் தேவாலயத்தில் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக நடைபெற்ற விழாவில் அவர்களுடன் சுமார் இரண்டாயிரம் விருந்தாளிகளும் கலந்து கொண்டனர். எலிசபெத் அரசியார்தான் பிரிட்டிஷ் இராஜவம்சத்திலேயே முதலாவதாக தமது திருமணத்தின் வைரவிழாவை கொண்டாடுபவர் என்பது குறிப்பிடத்தக்கது
  • 450 பாலத்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் முடிவு : பாலத்தீனக் கைதிகள்பாலத்தீனத்தின் அதிபர் மஹ்மூத் அப்பாஸுக்கும் இஸ்ரேலியப் பிரதமர் எகுட் ஓல்மர்ட்டுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கு சற்று முன்னர், 450 கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கைக்கு இஸ்ரேல் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது
  • முஷாரஃப் தேர்தெடுக்கப்பட்டது தொடர்பான மனுக்களை அந்நாட்டு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததுள்ளது : பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகள் குழு, அந்நாட்டு அதிபர் பர்வேஸ் முஷாரஃப் மீண்டும் அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டது தொடர்பாக எழுந்த அனைத்து பெரிய சவால்களையும் தள்ளுபடி செய்துவிட்டது. அந்த நீதிபதிகள் குழு இது தொடர்பில் ஒரே ஒரு வழக்கை மட்டுமே நிலுவையில் வைத்துள்ளது
  • கெமர்ரூஜ்ஜின் முன்னாள் அதிபர் ஐ நா வின் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டார் : கம்போடியாவில் கெமர்ரூஜ் அமைப்பின் பயங்கர ஆட்சி நடந்த எழுபதுகளில் அங்கு அதிகாரத்தில் இருந்த அதன் முன்னாள் அதிபரான கெய்யு சம்பன் அவர்கள், அமைப்பின் முன்னாள் தலைவர்களை விசாரணைக்கு உள்ளாக்கிவருகின்ற, ஐக்கிய நாடுகள் சபை ஆதரவிலான சிறப்பு நீதிமன்றத்தின் முன்பாக நிறுத்தப்பட்டார்
  • இலங்கை வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு ஏற்கப்பட்டது : இலங்கை அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், 16 வாக்குகள் வித்தியாசத்தில் அது அங்கீகரிக்கப்பட்டது

November 18, 2007

கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை : ஒரு உண்மைக் கதை - நவின் (Nawin)

எனது பெயர் நிக் வியூஜிசிக். இந்த உலகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் இருக்கக்கூடிய கோடானுகோடி மக்களின் இதயத்தில் என்னை நீங்கா இடம்பிடிக்கச் செய்த எனது தாய், தந்தையரையும், அந்தக் கடவுளையும் நான் நன்றியுணர்வோடு இந்த நிமிடங்களில் நினைத்துப் பார்க்கிறேன். என்னைப் பற்றித் தெரியாத உள்ளங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கிறேன். இன்று உங்கள் முன் ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பேசிக்கொண்டிருக்கிறேன். இந்த சந்தோசமான தருணத்தில் எனக்குள் இருக்கும் வலிகளை மறந்து போகிறேன். ஆனாலும் உங்களுக்காக, நான் கடந்து வந்த பாதைகளைச் சற்றே திரும்பிப் பார்க்கிறேன். அப்பப்பா! அவை உயிர் வலிக்கும் அனுபவங்கள்! உயிரோடு இதயம் கருகும் வேதனைகள்! அவை முழுக்க முழுக்க முட்களால் ஆனவை. அவமானங்கள் நிறைந்தவை, கனம் மிக்கவை. அந்த வலியை என்னைத் தவிர இந்த உலகத்தில் வேறு எவரும் அனுபவித்திருக்க முடியாது. அனுபவிக்கக் கூடாது. ஆண்டவனிடம் நான் வேண்டி நிற்பதும் அதைத்தான். போதும்! அந்த வலி என்னோடு ஒழிந்து போகட்டும்! எல்லாத் தம்பதியரையும் போலவே அந்த இளம் கிறிஸ்தவத் தம்பதியர் ஆஸ்திரேலியா நாட்டில் மெல்பர்ன் நகரத்தில் தனது முதல் குழந்தையின் பிரசவத்திற்காக ஆயிரமாயிரம் கனவுகளோடும், கற்பனைகளோடும் காத்துக் கிடந்தனர். கடவுள் ஒரு அழகான ஆண் குழந்தையைக் கொடுத்தார். 1982-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 04-ஆம் நாள் அதிகாலைப் பொழுதில், இந்தப் பூவுலகில் புதுப் பிறவியெடுத்தத் தன் மகனை, கிறிஸ்தவப் பாதிரியாராக இருக்கும் அந்தத் தந்தை அள்ளி முத்தமிட எத்தனிக்கையில்தான் தெரிந்தது தனது பிஞ்சு மகன் கால்களும், கைகளும், விரல்களும் முழு வளர்ச்சி இல்லாமல் பிறந்திருப்பது. எந்த மருத்துவக் காரணங்களுமே சொல்லமுடியாத ஒரு வினோதமான பிறவியெடுத்த அந்தப் பாக்கியசாலி வேறு யாருமில்லை, நான்தான். என்னைப் பார்க்க ஆவலாக இருப்பீர்கள்! இதோ அது நான்தான். இந்த நிக். தொடர்ந்து படிக்க இணைப்பில் செல்க..http://www.nilacharal.com/ocms/log/11190714.asp

இன்றைய குறள்

அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணா தழுக்கறுப் பான்

அறநெறியையும், ஆக்கத்தையும் விரும்பிப் போற்றாதவன்தான், பிறர் பெருமையைப் போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான்

அறத்துப்பால் : அழுக்காறாமை

நீங்கள் கிரெடிட் கார்டு உபயோகிப்பவரா?

கிரெடிட் கார்டு உபயோகிப்பவரா? அப்படியானால் உங்களது கிரெடிட் கார்டின் எண்ணைக்கூட யாருக்கும் தெரியப்படுத்தவோ, தரவோ வேண்டாம். ஏனெனில், உங்கள் கிரெடிட் கார்டு எண் வேறு யாருக்காவது தெரிந்திருந்தால் அதைப் பயன்படுத்தி உங்கள் பணத்தைச் சுருட்டிவிட முடியும். இத்தகைய நூதன மோசடிக்கு ஒரு புதுவித சாஃப்ட்வேர் உதவுகிறது என்பது அதிர்ச்சிகரமான தகவல். எனவே, அவ்வப்போது உங்களின் கிரெடிட் கார்டு கணக்கு விவரங்களை சரிபார்த்துக் கொள்ளுங்கள். அதுபோல தனி நபர் கடன் பெறுவதற்கோ அல்லது வேறு உபயோகத்துக்கோ கிரெடிட் கார்டின் "இருபக்க ஜெராக்ஸ் நகல்களை' யாருக்கும் கொடுக்கக்கூடாது.
கிரெடிட் கார்டு மோசடி அதிகரிப்பு: சென்னையில் உள்ள மத்தியக் குற்றப்பிரிவு போலீஸில் கிரெடிட் கார்டு மற்றும் வங்கி தொடர்பான மோசடிகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. 2006-ம் ஆண்டு புள்ளி விவரப்படி கிரெடிட் கார்டு மோசடி தொடர்பாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தற்போதைய நிலவரப்படி 2007-ல் இதுவரை சுமார் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 32 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். கிரெடிட் கார்டு மோசடி தொடர்பாக தினந்தோறும் ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன என்று போலீஸார் தெரிவிக்கின்றனர். நூதன மோசடி நடப்பது எப்படி? கிரெடிட் கார்டில் நூதன முறையில் தற்போது மோசடி நடந்து வருகிறது. பொதுவாக கிரெடிட் கார்டுகளுக்கு பாஸ்வேர்ட் எதுவும் தேவையில்லை. நீங்கள் "எலக்ட்ரானிக்ஸ் டேட்டா கேப்சர்' என்ற இயந்திரத்தில் "ஸ்வைப்' செய்தால் உங்களுக்கு பணப் பரிமாற்றம் நடக்கும்.
தற்போதோ கிரெடிட் கார்டு இல்லாமலேயே, அதாவது கிரெடிட் கார்டு எண்ணை மட்டும் வைத்துக் கொண்டு உங்களது பெயரில் பணத்தைச் சுருட்டிவிட முடியும். சில வங்கிகள் இதற்கான சேவைகளை வழங்கி வருகிறது. நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்களில் இம்மாதிரியான சேவையைப் பெற முடியும். இதற்கு "கீ என்ட்ரி ஆப்ரேஷன்ஸ்' என்ற புதிய சாஃப்ட்வேர் முறை பின்பற்றப்படுகிறது.

இதன்படி கிரெடிட் கார்டு எண்ணை மட்டும் வைத்துக் கொண்டு அமெரிக்காவிலோ அல்லது ஃபிரான்ஸிலோ உள்ள ஹோட்டல்களில் தங்குவதற்கு அறைகளை புக் செய்து கொள்ள முடியும். தடுப்பது எப்படி? இம்மாதிரியான சேவைகளில் மோசடிகள் நடப்பதற்கும் வாய்ப்பு உள்ளன. எனவே, கிரெடிட் கார்டுகளின் எண்களை யாருக்கும் தெரிவிக்கக்கூடாது. அதேபோல கிரெடிட் கார்டுகளின் இரு பக்க ஜெராக்ஸ் நகல்கள், சிவிவி எண் (கார்டு வேல்யூ வெர்ஃபிகேஷன்), கிரெடிட் கார்டின் பயன்பாட்டுக் காலம் குறித்து தகவல் தெரிவிக்கக்கூடாது. ஆன்-லைன் மூலமாக இந்தச் சேவை நடைபெறுகிறது. ஆன்-லைன் மூலமாக நடைபெறும் இந்த மோசடியைத் தடுக்க வேண்டுமெனில், கிரெடிட் கார்டில் உள்ள சி.வி.வி. எண்களை கறுப்பு பேனாவால் எழுதி மறைத்துவிட வேண்டும். அதன்பின்னர் ஜெராக்ஸ் நகல் கொடுத்தால், மோசடி நடப்பது தவிர்க்கப்படும் என்று போலீஸார் தெரிவிக்கின்றனர்.

மறக்காதீர் பாஸ்வேர்ட் எண்ணை!
கிரெடிட் கார்டு மட்டுமில்லாது டெபிட் கார்டு மோசடிகளும், சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதில் பெண் டாக்டர் ஒருவரின் டெபிட் கார்டு திருடப்பட்டு, பணம் எடுக்கப்பட்டது. விசாரணையில், அந்த பெண் டாக்டரின் செல்போனில் இருந்த டெபிட் கார்டு எண்ணை அந்த நபர் தெரிந்து கொண்டார். பின்னர் டெபிட் கார்டை திருடிச் சென்று, பணத்தை எடுத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.

பாஸ்வேர்ட் முக்கியம்...:
டெபிட் கார்டுகளின் பாஸ்வேர்ட் (ரகசிய இலக்க எண்கள்) நினைவில் வைத்திருப்பது அவசியம் என்கிறது போலீஸ். சிலர் தங்களது செல்போனில், ரகசிய எண்களை பதிவு செய்து வைக்கின்றனர். இன்னும் சிலர் டெபிட் கார்டுகளுக்கான உறைகளிலேயே தங்களது ரகசிய இலக்க எண்களை எழுதி வைக்கின்றனர். அதுபோல எழுதி வைக்கக்கூடாது. சில நேரங்களில் டெபிட் கார்டு தொலைந்து போகும் பட்சத்தில், யாராவது எடுத்து பணத்தை எடுத்துவிட வாய்ப்புள்ளது என்று போலீஸார் அறிவுறுத்துகின்றனர்.

கையில்லா ரவிக்கை அணிந்து நடித்தால் அந்தப் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்

தமிழ்த் திரையுலகில் வயது வந்தோர்க்கு மட்டும் என்ற சான்றிதழுடன் வெளிவந்த முதல் படம் வெண்ணிற ஆடை - இயக்கிவர் ஸ்ரீதர். "இந்தப் படத்தில் கதாநாயகி ஜெயலலிதா கையில்லா ரவிக்கை அணிந்திருந்த காரணத்தினால் மட்டுமே இதற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது எனக்கு வியப்பளித்தது" - ஸ்ரீதர் (சத்தியமாக இது கற்பனையோ காமெடியோ இல்லை... உண்மை : ம்ம்....என்ன செய்ய? "கையில்லா ரவிக்கை எங்கே? ரவிக்கையில்லா கதாநாயகிகள் எங்கே?")

வங்கதேசத்தில் நிவாரணப் பணிகள் தீவிரம்

  • மட்டக்களப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரின் பொலிஸ் பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது : மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரது மட்டக்களப்பு இல்லங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் எவ்வித முன்னறிவிப்புமின்றி நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்ற உறுப்பினர்களான பீ.அரியநேத்திரன் மற்றும் தங்கேஸ்வரி கதிர்காமன் ஆகியோரின் இல்லங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அச்சுறுத்தல்கள் காரணமாக நீண்ட காலமாக கொழும்பிலேயே தங்கியிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாராளுமன்றத்தில் நாளை திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் வரவு-செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பின்போது, ஆதரவு வழங்க வேண்டும், இல்லையேல் வாக்கெடுப்பை புறக்கணிக்க வேண்டும் என கடந்த ஓரிரு நாட்களாக மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரக்ளுக்கு தொலைபேசி ஊடாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்ததாகவும், இந்தச் சூழலிலேயே இவர்களின் இல்லங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு இன்று மாலையுடன் நீக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இலங்கை அரசதரப்பு இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது
  • வட இலங்கை வன்முறை - புலிகள் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் தகவல் : இலங்கையின் வடக்கே வன்னிப் போர்முனைகளிலும், யாழ்ப்பாணம் கிளாலி இராணுவ முன்னரங்கப் பகுதிகளிலும் இராணுவத்தனருக்கும்,விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 9 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது
  • திருகோணமலையில் பொலிசார் தேடுதல் வேட்டை: 23 பேர் கைது : இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் தெற்கு பிரதேசத்தின் ஈச்சிலம்பற்றுப் பகுதியில் அரசாங்கப்படையினரும் பொலிஸாரும் இணைந்து கூட்டாக நடத்திய தேடுதல்நடவடிக்கையின்போது சந்தேகத்தின் பெயரில் 23 பேர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுவருவதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்
  • பாகிஸ்தான் மோதலில் பலியானவர்களின் எண்ணிக்கை எழுபத்தைந்தை தாண்டியது : பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பராச்சினாரில் சுனி மற்றும் ஷியா முஸ்லிம் குழுக்கள் இடையே தொடர்ந்து வரும் மோதலில் எழுபத்தைந்து பேருக்கும் மேல் பலியாகியுள்ளதாக பாகிஸ்தான் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
    இருத்தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் மோர்டர் மற்றும் கனரக ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர்
  • வங்கதேசத்தில் நிவாரணப் பணிகள் தீவிரம் : கடந்த வியாழனன்று கடும் சூறாவளி தாக்கிய வங்கதேசத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் சுறுசுறுப்படைந்து வருகின்றன. நிவாரணப் பணிகள் தொடர்பாக அரசுக்கு ஆலோசனை வழங்கும் தபன் சௌத்ரி இந்தப் புயலை ஒரு தேசியப் பேரனர்த்தம் என்று வர்ணித்துள்ளார்
  • பர்மாவை இடைநீக்கம் செய்யும் கோரிக்கையை நிராகரித்தது 'ஆசியான்' : ‘ஆசியான்’ எனப்படும் தென்கிழக்காசிய நாடுகள் கூட்டமைப்பில் இருந்து பர்மாவை இடைநீக்கம் செய்யுமாறு அமெரிக்க செனட் விடுத்த கோரிக்கையை அவ்வமைப்பின் தலைவர் நிராகரித்துள்ளார்
  • திமிங்கல வேட்டையை ஆரம்பித்துள்ளது ஜப்பான் : ஜப்பானை சேர்ந்த கப்பல்கள் திமிங்கல வேட்டைக்காக தென் கடற்பகுதியை நோக்கி பயணித்து வருகின்றன. இந்த வேட்டையின் போது பல ஆண்டுகளில் முதன்முறையாக ஹம்பேக் எனப்படும் திமிங்கலமும் வேட்டையாடப்படும். கடந்த 1960 ஆம் ஆண்டு முதல் சர்வதேச ஒப்புதல் மூலம் இந்த வகை திமிங்கலம் வேட்டையாடப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது ஹம்பேக் திமிங்கிலத்தின் எண்ணிக்கை வேட்டையாட கூடிய அளவுக்கு அதிகரித்து விட்டதாக கூறியுள்ள ஜப்பான், இந்த பயணத்தின் போது ஐம்பது ஹம்ப்பேக் திமிங்கலங்களையாவது கொல்வது என முடிவு செய்துள்ளது. சர்வதேச சமூகத்தில் தனக்கு இருக்கும் மரியாதை ஜப்பான் கெடுத்துக் கொள்ளப் போகிறது என ஆஸ்திரேலியா எச்சரிக்கை விடுத்துள்ளது

November 17, 2007

இன்றைய குறள்

விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்

யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப் பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை

அறத்துப்பால் : அழுக்காறாமை

மனிதசக்தி எரிபொருள் போன்றது

"ஒரு மனிதனின் சக்தி என்பது அவருடைய உற்சாகத்துக்கான எரிபொருள் போன்றது. அந்தச் சக்தியானது அளவுக்கு மீறி செலவழிக்கப்படும் போதுதான் மனிதனை இறுக்கம், துக்கம், சோர்வு, கோபம் போன்ற எல்லாமே ஆக்கிரமிக்க ஆரம்பிக்கின்றன" - சுவாமி பரமஹம்ஸ நித்யானந்தர்

விடுதலைப்புலிகள் மீது அழுத்தம் கொடுக்கவே தமிழர் புனர்வாழ்வுக்கழக சொத்துக்களை அமெரிக்கா முடக்கியுள்ளது

  • வங்கதேச சூறாவளியில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : கடந்த வியாழக்கிழமை பங்களாதேஷைத் தாக்கிய சூறாவளி ஏற்படுத்திய அனாத்தங்களின் அளவு இப்போது தான் தெளிவாகத் தெரிய ஆரம்பிக்கிறது. இறந்தவர் தொகை குறைந்தது 1600 என்று வங்கதேச அரசு இப்போது கூறுகிறது
  • விடுதலைப்புலிகள் மீது அழுத்தம் கொடுக்கவே தமிழர் புனர்வாழ்வுக்கழக சொத்துக்களை அமெரிக்கா முடக்கியுள்ளது - ஆய்வாளர் கருத்து : விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது அரசியல், ராணுவம் மற்றும் பொருளாதார ரீதியிலான அழுத்தங்களை அதிகரிக்கும் நோக்கிலேயே, தமிழர் புனர்வாழ்வுக்கழக சொத்துக்களை அமெரிக்க அரசு முடக்கியிருப்பதாக கூறுகிறார், இந்திய தலைநகர் புதுதில்லியிலிருக்கும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தெற்காசியவியல் துறை பேராசிரியர் சஹாதேவன் அவர்கள்
  • மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதிகள் உண்ணாவிரதம் : இலங்கை மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எனக் கூறப்படும் 29 பேர் தம் மீதான விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் அல்லது விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் கோரி சனிக்கிழமை காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்
  • புதுடெல்லியில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாடு : இந்தியாவில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாடு சனிக்கிழமை புதுடெல்லியில் நடைபெற்றது. அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் இந்த மாநாடு, இந்தியா – அமெரிக்கா இடையிலான ராணுவம் சாரா அணுசக்தி உடன்பாடு, கூட்டணி அரசியல் உள்பட, பல்வேறு விஷயங்களில் காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது
  • பாகிஸ்தான் அதிபருடன் அமெரிக்க வெளியுறவுத்துறைத் துணை செயலர் சந்திப்பு : பாகிஸ்தான் சென்று அதிபர் முஷாரஃப் அவர்களுடன் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறைத் துணைச் செயலர் ஜான் நெக்ரபோண்டே அவர்கள் தனது பயணக் காலத்தை அங்கே நீடித்துள்ளார்
  • பர்மிய இராணுவ அதிகாரிகள் மீது சீனா அழுத்தம் : பர்மிய இராணுவ அரசு அதிகாரிகள் மீது சீனா அழுத்தங்களை அதிகரித்துள்ளது. அவர்கள் அண்மையில் நடந்த பொது ஆர்ப்பாட்டங்களைக் கையாண்ட விதத்தை விமர்சித்ததோடு, ஜனநாயக மறுசீரமைப்பு வேலைகளை விரைவு படுத்தும் படியும் வலியுறுத்தியுள்ளது
  • காலநிலை மாற்றம் தொடர்பான புதிய அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது - ஐ.நா செயலாளர் நாயகம் : காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச குழு விடுத்திருக்கின்ற புதிய அறிக்கை, காலநிலை மாற்றம் தொடர்பாக நடைபெற்று வரும் விவாதத்தில் ஒரு முக்கிய முடிவை எட்டுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருப்பதாக ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்

November 16, 2007

நடிகர் வினீத்

தமிழ்ச்செல்வன் மறைவிற்கு கலைஞரின் கவிதை தேவையா?

நுணலும் தன் வாயால் கெடும்

விடுதலைப்புலிகள் விசயத்தில் தமிழக மற்றும் இந்திய அரசின் நிலை மற்றும் சர்ச்சைகள் 3

இந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்பாடு : ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இடதுசாரிகள் இடையில் புதிய திருப்பம்

இந்தியா – அமெரிக்கா இடையிலான இராணுவம் சாரா அணுசக்தி உடன்பாடு தொடர்பாக இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும், அதற்கு வெளியில் இருந்து ஆதரவளிக்கும் இடதுசாரிக் கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சினையில் ஒரு முக்கியத் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. இந்தியா தொடர்பான பாதுகாப்பு உடன்பாடு தொடர்பாக சர்வதேச அணு ஆற்றல் அமைப்புடன் பேச்சு நடத்துவதற்கு இதுவரை எதிர்ப்புத் தெரிவித்துவந்த இடதுசாரிக் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை குறிப்பிட்ட அளவுக்கு தளர்த்திக் கொண்டிருக்கின்றன. சர்வதேச அணு ஆற்றல் அமைப்புடன் இந்திய அரசு பூர்வாங்கப் பேச்சுக்கள் நடத்துவதற்கு இடதுசாரிகள் சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்தப் பிரச்சினை தொடர்பாகப் பேசுவதற்காக, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைக்கப்பட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் பிரதிநிதிகளைக் கொண்ட உயர்நிலைக் கமிட்டியின் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை புதுடெல்லியில் நடைபெற்றது. அதில், இடதுசாரிகள் தங்களது முடிவைத் தெரிவித்தார்கள். இதுபற்றி செய்தியாளர்களிடம் அறிவித்தார் பிரணாப் முகர்ஜி. "இந்தியா – அமெரிக்கா இடையிலான ராணுவம் சாரா அணுசக்தி உடன்பாட்டுக்கு வழிவக்கும் 1, 2, 3 உடன்படிக்கையின் மீது அமெரிக்காவின் ஹைட் சட்டம் எந்த அளவுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பது குறித்தும், சர்வதேச அணு ஆற்றல் அமைப்பின் பாதுகாப்பு உடன்பாடு குறித்தும் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு, இந்தியா தொடர்பான பாதுகாப்புக்கான வரைவு உடன்பாடு குறித்து சர்வதேச அணு ஆற்றல் அமைப்பின் தலைமைச் செயலகத்துடன் பேச்சு நடத்த வேண்டும்.
அரசு அந்தப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளும். உடன்பாடு குறித்து இறுதி செய்வதற்கு முன்னதாக, அதுகுறித்து இந்தக் கமிட்டி ஆய்வு செய்யும். இந்தியா – அமெரிக்கா இடையிலான இராணுவம் சாரா அணுசக்தி உடன்பாட்டை அமல்படுத்துவதற்கு முன்னதாக, இந்தக் கமிட்டியின் பரிந்துரைகள் கருத்தில் கொள்ளப்படும்" என்றார் பிரணாப் முகர்ஜி. சர்வதேச அணு ஆற்றல் அமைப்புடன் எப்போது பேச்சு நடத்தப்படும் என்பது குறித்து எந்த விவரங்களையும் அவர் வெளியிடவில்லை. இடதுசாரிக் கட்சிகள் தங்கள் நிலையிலிருந்து இறங்கிவரக் காரணம் என்ன என்பது குறித்து, அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம் http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

இன்றைய குறள்

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்
தழுக்கா றிலாத இயல்பு
மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும்
அறத்துப்பால் : அழுக்காறாமை