கருணை கொலைக்காக காத்திருக்கும் எய்ட்ஸ் நோயாளி
பதேஹாபாத் : அரியானா மாநிலத்தில் பதேஹாபாத் நகரில் அரசு மருத்துவமனைக்கு எதிரே தெருவின் ஓரத்தில் மெத்தை ஒன்றின் மேல் நோயாளி ஒருவர் படுத்து இருக்கிறார். அவருக்கு உதவி செய்ய யாரும் முன் வரவில்லை. எய்ட்ஸ் நோயால் கடுமையாக பீடிக்கப்பட்டுள்ள அந்த நபர் தன்னை கருணை கொலை செய்துவிடும்படி கதறி அழுது வருகிறார்.
அரியானாவை சேர்ந்தவர் நந்த் கிஷோர் (70). இவரது மகன் மோகன் (30). லாரி டிரைவர். பஞ்சாபில் லாரி ஓட்டி வந்தார். பல பகுதிகளுக்கு சரக்கு ஏற்றி சென்று வந்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன் சந்தோஷ் என்ற பெண்ணை மணந்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.கடந்த ஆண்டு மோகனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. பல டாக்டர்களை பார்த்தும் நிலைமை சீரடையவில்லை. வருமானத்துக்கு வழியில்லாததால், மூதாதையர் வீட்டை விற்று நந்த் கிஷோர், மகனுக்கு சிகிச்சை அளித்தார். அதன் பிறகும் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் தென்படவில்லை. ஆறு மாதங்களுக்கு முன்பு தான் மோகனுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது தெரிய வந்தது. இதன் பிறகு அவரது மனைவி சந்தோஷ் தனது மகளுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.பதேஹாபாத் அரசு மருத்துவமனையில் மோகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஒரு கட்டத் தில், மோகனுக்கு சிகிச்சை அளிக்க வசதி இல்லை என்று கூறி, டாக்டர் கள் கைவிரித்து விட்டனர். மருத்துவமனையை விட்டு மோகனை அழைத்து செல்லும்படியும் கூறி விட் டனர். இந்த நகரில் உள்ள ஒரு தர்மசாலாவில் தான் நந்த் கிஷோர் உதவியாளராக பணியாற்றி வருகிறார். எனவே, தனி வீடு பார்த்து மகனை கவனித்து கொள்ள வசதி இல்லை.எனவே, மருத்துவமனை வெளியே வெட்டவெளியில் சாலை ஓரம் ஒரு மெத்தையை போட்டு மோகனை படுக்க வைத்துள்ளார். மோகனின் உடலின் மேற்புறத்தில் கொப்புளங்கள் தோன்றியுள்ளன. அவரால் நடந்து செல்லக் கூட முடியவில்லை. அந்த அளவுக்கு நிலைமை மோசம் அடைந்துள்ளது. அவர் அருகே கூட செல்ல யாரும் விரும்புவதில்லை. அதையும் மீறி அருகே வரும் நபர்களிடம் தன்னை கருணை கொலை செய்து விடும்படி மோகன் கதறி அழுகிறார். ஆனால், அவருக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை.மேலும், அப்பகுதியில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் மோகன் தங்கள் பகுதியில் படுத்து இருப்பதை மிகவும் அசவுகரியமாக கருதுகின்றனர். எனவே, மோகனை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என நந்த் கிஷோருக்கு கெடு விதித்துள்ளனர். தனது மகன் விரைவில் இறந்து விடுவான் என்பது நந்த் கிஷோருக்கு நன்கு தெரியும். டாக்டர்களும் இதை உறுதி செய்துள்ளனர். மரணம் தனது மகனுக்கு நிம்மதியை அளிக்கும் என்ற நம்பிக்கையில், தள்ளாத வயதில் நந்த் கிஷோர் முடிந்த அளவுக்கு உதவிகள் செய்து வருகிறார்.
No comments:
Post a Comment