October 23, 2007

பார்வையற்றோர் பயன்படுத்த வசதியாக கம்ப்யூட்டர் மென்பொருள் கண்டுபிடிப்பு

சென்னை: பார்வையற்றோர் கம்ப்யூட்டர் நிபுணராக வளர பயன்படும் மென்பொருளை மும்பையைச் சேர்ந்த் கம்ப்யூட்டர் நிபுணர் தயாரித்துள்ளார். இதுகுறித்த விளக்க கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. பார்வையற்றோரும் கம்ப்யூட்டரை பயன்படுத்துவதற்கான புதிய மென்பொருளை கண்டுபிடித்த மும்பை கிருஷ்ணகாந்த் மானே, சென்னையில் உள்ள பார்வையற்றோர் மத்தியில் மென்பொருளை பயன்படுத்துவது குறித்து நேற்று விளக்கினார். இந்த நிகழ்ச்சிக்கு `எல்காட்' ஏற்பாடு செய்திருந்தது. சென்னை நந்தனம் ` எல்காட்' வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் `எல்காட்' மேலாண் இயக்குனர் உமாசங்கர் பேசுகையில் கூறியதாவது: மும்பை, டாடா அடிப்படை ஆய்வு மைய ஆலோசகர் கிருஷ்ணகாந்த் மானே பார்வையற்றவர். இவர் தனது முயற்சியால் தற்போது பார்வையற்றவர்கள் எளிதில் கம்ப்யூட்டரை பயன்படுத்துதல், `புரோகிராமிங்' செய்தல், இ- மெயில் அனுப்புதல் உள்ளிட்ட பணிகளை செய்வதற்கான பிரத்யேக மென்பொருளை கண்டுபிடித்துள்ளார். தற்போது பூந்தமல்லி அரசு உயர் நிலைப்பள்ளி பார்வையற்ற மாணவர்கள் மற்றும் லிட்டில் பிளவர் பார்வையற்றோர் பள்ளி மாணவர்கள் என 70 மாணவ, மாணவியருக்கு இங்கு புதிய மென்பொருளை பயன்படுத்துவது பற்றி பயிற்சியளிக்கிறார். கம்ப்யூட்டர் பயன்படுத்துவது மட்டுமல்லாமல் இந்த மென்பொருளை மேம்படுத்துவதற்கான பணிகளில் இவர்களும் ஈடுபட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்' என்றார்.

No comments: