இந்தியர்களைவிட 5 மடங்கு அதிகம் சாப்பிடுபவர்கள் அமெரிக்கர்கள்
உலக அளவில் உணவுப் பொருட்களின் விலைவாசி கூடியதற்கு இந்தியர்களும் சீனர்களும் அதிகமாய் சாப்பிடுவதால்தான் என்று அமெரிக்க அதிபர் புஷ் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு இந்தியத் தலைவர்கள் பலரும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். உண்மையிலேயே புஷ்ஷின் கருத்து உண்மைதானா? என்ற பொருளாதார புள்ளி விவர ஆய்வில் பல்வேறு நிஜங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
அரிசி, கோதுமை மற்றும் உணவு தானியங்கள் போன்றவற்றை ஒரு தனி மனிதன் உட்கொள்ளும் அளவை எடுத்துக்கொண்டால் இந்தியர்களைவிட அமெரிக்கர்கள் 5 மடங்கு அதிகம் என்று அமெரிக்க விவசாயத் துறையின் 2007- ஆம் ஆண்டு அறிக்கை கூறுகிறது. வருடம் ஒன்றுக்கு சராசரியாக இந்தியர் ஒருவர் 178 கிலோ கிராம் தானியத்தைத்தான் சாப்பிடுகிறார். ஆனால் அமெரிக்கர்கள் வருடத்திற்கு 1,046 கிலோ கிராம் தானியத்தை தின்று தீர்க்கின்றனர்.
சீனர்களைவிட மூன்று மடங்கும் ஐரோபியர்களைவிட இரண்டுமடங்கும் அதிகமாக அமெரிக்கர்கள் உணவு உட்கொள்கின்றனர்.
உண்மையில் அமெரிக்கர்களின் வாங்கும் திறன் அதிகரித்துள்ளது. அதனால்தான் அவர்களின் சாப்பாட்டு அளவும் அதிகரித்துள்ளது. 2003-ல் அமெரிக்கர் ஒருவரின் தனி நபர் உணவு தானியக் கொள்முதல் 946 கிலோ கிராமாக இருந்தது. ஆனால் 2007 -ஆம் அண்டில் இந்த அளவு 1046 கிலோவாக உயர்ந்துள்ளது. இதை இந்தியர்களுடன் ஒப்பிடும்போது 5 மடங்கு அதிகமாக அமெரிக்கர்கள் உட்கொள்கின்றனர்.
இந்த ஒப்பீடு வெறும் தானியங்களுக்கு மட்டுமல்ல. எல்லாவிதமான உணவுப் பொருட்களையும் வாங்குவதில் அமெரிக்கர்கள்தான் முன்னணியில் உள்ளனர்.
இந்தியாவின் தனிநபர் ஒருவர் வருடத்துக்கு 38 கி.கி.பாலை மட்டுமே குடிக்கின்றனர். சீனர்கள் 17 கி.கி. பாலை மட்டுமே அருந்துகின்றனர். ஆனால் அமெரிக்கர்களோ 78 கி.கி.பாலை குடித்து தீர்க்கின்றனர்.
அதேபோல் காய்கறியின் அளவு வருடத்துக்கு 11 கி.கி. யை மட்டும் இந்தியர்கள் சாப்பிடுகின்றனர். ஆனால் அமெரிக்கர்களோ 41 கி.கி. யை சாப்பிடுகின்றனர். இந்தியாவில் ஏராளமானோர் காய்கறிகளைத்தான் விரும்பிச் சாப்பிடுகின்றனர். அதில் அவர்களுக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களும் கிடைத்துவிடுகிறது.
ஆனால் அமெரிக்கர்களோ அசைவ உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.ஆண்டு ஒன்றுக்கு ஓர் அமெரிக்கர் 42.6 கி.கி மாட்டிறைச்சி சாப்பிடுகிறார். ஆனால் இந்தியாவில் இதன் அளவு 1.6.கி.கி.அதே போல் கோழியை எடுத்துக் கொண்டால் அமெரிக்காவின் தனி நபர் ஒருவர் 45.4 கி.கி. போட்டுத் தாக்குகிறார். ஆனால் இந்தியர் ஒருவர் 1.9.கி.கி மட்டுமே சாப்பிடுகிறார்.
இப்படி அதிர்ச்சி அளிக்கும் உணவு தானிய ஒப்பீடுகள் கிழக்கத்திய நாடுகளுக்கும், மேற்கத்திய நாடுகளுக்குமிடையே நிலவி வருகிறது.
இதன் உண்மை புரியாமல் உணவு தானிய விலைவாசி உயர்வுக்கு இந்தியாவும், சீனாவும்தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் புஷ் கதைவிடுகிறார்.
மேற்கண்ட புள்ளி விவரங்கள் எல்லாம் அமெரிக்க விவசாயத் துறை வெளியிட்டதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment