இந்தியர்கள் நிறைய சாப்பிடுவதால்தான் விலைவாசி உயர்வு : ஜார்ஜ் புஷ்
இந்தியர்கள் வயிறு நிறைய சாப்பிடுவதால்தான் உலக அளவில் உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தெரிவித்துள்ளார்.
இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சி நல்லதுதான் ஆனால், அதனால் அதிகரித்துள்ள உணவு தானியங்களின் தேவையே உணவுப் பொருட்களின் விலை உயர்விற்குக் காரணம் என்றும் அவர், கூறியுள்ளார்.
இதுகுறித்து மிசெளரியில் நடந்த பொருளாதார மாநாடு ஒன்றில் பேசிய ஜார்ஜ் புஷ், "வளர்ந்துவரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியினால் உலகளவில் தேவை அதிகரித்துள்ளது. இது உங்களுக்கும் (அமெரிக்க தொழிலதிபர்கள்) நல்லது. ஏனெனில் இந்த நாடுகளில் உங்களின் சரக்குகளை விற்கிறீர்கள். வளர்ச்சி இல்லாத இடத்தில் உங்கள் சரக்குகளை விற்பது மிகவும் கடினம்.
வேறுவிதமாகச் சொல்ல வேண்டும் என்றால், உலகத்தில் எவ்வளவு வளர்ச்சி உள்ளதோ அவ்வளவு வாய்ப்புகளும் உள்ளன. அதற்கேற்றவாறு தேவைகளும் அதிகரிக்கின்றன.
எடுத்துக்காட்டிற்கு ஒரு சுவாரசியமான விசயத்தைப் பார்க்கலாம். இந்தியாவில் 35 கோடி மக்கள் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர். இது அமெரிக்காவை விட அதிகமாகும். அதாவது இந்தியாவின் நடுத்தர வகுப்பு மக்களின் எண்ணிக்கை அமெரிக்காவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையின் இரண்டு மடங்காகும்.
இதனால் வளர்ச்சி அதிமாகும்போது தேவை அதிகரிக்கிறது. இந்தியாவில் உள்ள நடுத்தர வகுப்பினர் நல்ல சத்தான உணவுகளை வாங்கும்போது, பற்றாக்குறை ஏற்பட்டு உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கிறது" என்றார்.
உணவுப் பொருட்களின் விலை உயர்வில் பருவநிலை மாற்றத்தின் பங்கை பட்டியலிட்ட அவர்,எரிசக்தித் தேவைகளுக்கு தானியங்களைப் பயன்படுத்துவதுதான் முக்கியக் காரணம் என்பதை மறுத்தார்.
"உணவுப் பொருட்களின் விலை உயர்வில் எத்தனாலின் பங்கு இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அது மட்டுமே முக்கியக் காரணம் அல்ல.
எரிபொருட்களின் விலை உயர்வும் உணவுப் பொருட்களின் விலை உயர்விற்கு முக்கியக் காரணமாகும். நீங்கள் ஒரு உழவராக இருந்தால், நீங்கள் எரிபொருளுக்குச் செலவழிக்கும் தொகையை நீங்கள் விற்கும் பொருட்களின் மீது வைப்பீர்கள். இல்லை என்றால் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள்.
நீங்கள் டீசலுக்கு அதிகமாகச் செலவிடும்போதும், உரங்களுக்கு அதிகமாகச் செலவிடும்போதும் நீங்கள் விற்கும் பொருட்களின் விலையும் அதிகரிக்கிறது. அதாவது உழவர்களின் அடிப்படைச் செலவுகள் அதிகரிக்கையில் உணவுப் பொருட்களின் விலையும் உயர்கிறது" என்றார் புஷ்.
"அமெரிக்காவில் உணவுப் பற்றாக்குறை இல்லை. ஆனால் நமக்கும் விலை உயர்வுப் பிரச்சனை உள்ளது. நாம் அதிகமாகச் செலவிட வேண்டியுள்ளது.
உலகளவில் உணவுப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. பசியில் வாடும் மக்களுக்கு உணவு கிடைக்க நாம் உதவ வேண்டும். அமெரிக்கா எப்போதும் பசியைத் தீர்க்கும் பணியில் மிகவும் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டுள்ளது" என்றும் புஷ் கூறினார்.
No comments:
Post a Comment