March 18, 2008

"சாப்பாடு முதல் சாஃப்ட்வேர் வரை" அதிகாலை.காம்

வணக்கம். நம் தமிழ் சமூகத்தின் அனைத்து விசயங்களையும் உள்ளடக்கி அதிகாலை.காம் www.adhikaalai.com எனும் ஒரு புதிய இணைய தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவிலிருந்து இத்தளம் இயக்கப்படுகிறது. உலகத்தின் 20 -க்கும் மேற்பட்டுள்ள நாடுகளில் எமது செய்தியாளர்கள் உள்ளனர். உலகத்தின் பல்வேறு நாடுகளில் பரவியிருக்கும் நம் தமிழ்ச் சமூகத்தின் துடிப்புள்ள சிந்தனைப் படைதான் எமது தளத்தின் வேர்கள். எமது பின்புலமாய் சமூக அக்கறையுள்ள சில மாமனிதர்கள்.
சமூகத்தின் சகலமும் ஒலி-ஒளி வடிவில் இடம் பெறும். இதுவரை நம் ஊடகங்களால் பதிவு செய்யப்படாத நிகழ்வுகளும், சம்பவங்களும் உயிரோட்டத்துடன் இங்கு வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படும். சமூகத்தின் பன்முகத்தன்மைகளும் அசலாய் காட்டப்படும். கண்ணியாமான எழுத்துக்கள் கெளரவிக்கப்படும். சாராம்சம் நிறைந்த சச்சரவுகளுக்கு மட்டுமே சரிசம இருக்கைகள் கொடுக்கப்படும். விடை தேடும் பிரச்சினைகளுக்கான விவாதங்கள் முன் நிறுத்தப்படும்.

உடனடிச் செய்திகள், அரசியல், இலக்கியம், திரை உலகம், ஆன்மீகம், வர்த்தகம், பிரபலங்களின் நேர்காணல், குறும் படங்கள், புகைப்படத் தொகுப்பு, சூடான விவாதங்கள், மருத்துவ ஆலோசனை, சமூக நிகழ்வுகள், சமையல், சின்னத்திரை, சுற்றுலா, வணிகம், களஞ்சியம், பாட்காஸ்ட்... இப்படி பலவும் இங்கே ஆழமுடன் இடம்பெறும்.
சுருங்கச் சொல்வதாயின் "சாப்பாடு முதல் சாஃப்ட்வேர் வரை" சராசரி மனிதருக்கும் எட்டும் வகையில் எடுத்து வைக்கப்படும். எமது தளத்துக்கான ஆலோசனைகள் எத்திசையிலிருந்து வந்தாலும் அன்போடு ஏற்றுக் கொள்ளப்படும். மேலும் எமது பயணத்தில் தோள் கொடுக்க விரும்பும் அன்பு நெஞ்சங்களையும் அரவணைத்துக் கொள்ள தயாராகவே இருக்கிறோம்.
ஆசிரியர் குழு
அதிகாலை.காம்
www.adhikaalai.com

editor@adhikaalai.com
"அதிகாலை" தமிழ் இணைய இதழ் பற்றி திண்ணையில் வந்த அறிவிப்பு...http://www.thinnai.com/?module=displaystory&story_id=80803132&format=html

March 04, 2008

'எழுத்துலக பிரம்மா' சுஜாதா

எழுத்துலக பிரம்மாக்களில் ஒருவராகத் திகழ்ந்த சுஜாதா என்கிற எஸ்.ரெங்கராஜன் அண்மையில் மரணமடைந்தார். அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. ஆழ்வார்பேட்டையில் நாரத கான சபாவில் நடந்த இந்நிகழ்ச்சியில் மூத்த எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, ரா.கி.ரங்கராஜன், நடிகர்கள் சிவகுமார், கமல்ஹாசன், பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுஜாதாவின் உருவப் படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்திய பின் அஞ்சலி கூட்டம் நடந்தது.
ஜெயகாந்தன்: ஜெயகாந்தன் பேசுகையில், எனக்கு மிகவும் விருப்பமான எழுத்தாளர் சுஜாதா. அவருடன் எனக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவரது எழுத்துக்களை நான் வெகுவாக ரசித்தவன். தமிழில் வசீகரமான ஒரு எழுத்து நடையை அறிமுகப்படுத்தியவர், அதற்காக பல மரபுகளை மீறிய துணிச்சல்காரர் என்றார்.

மனுஷ்யபுத்திரன்: சுஜாதாவுக்கு நெருக்கமான எழுத்தாளர்களில் ஒருவரும், உயிர்மை பதிப்பக உரிமையாளருமான மனுஷ்யபுத்திரன் பேச்சு மிகவும் உணர்வுப் பூர்வமாக அமைந்திருந்தது. அவர் பேசுகையில், மகாகவி பாரதிக்குப் பிறகு தமிழில் புரட்சிகரமான எழுத்தாளர் ஒருவர் இருந்தாரென்றால் அவர் சுஜாதாதான். இதைப் பலமுறை பல இடங்களில் நான் கூறியிருக்கிறேன். அந்த எழுத்து மேதையை நினைவு கூறும் வகையில் இனி ஆண்டுதோறும் சுஜாதா இலக்கிய விருதினை உயிர்மை பதிப்பகம் மூலம் வழங்கவிருக்கிறோம். புதிய எழுத்தாளர்களுக்கு அந்த விருது மிகப்பெரிய உற்சாகத்தையும் வேகத்தையும் தரும் என்றார்.
கமல்: நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், சுஜாதா முதுகுவலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தபோது, மேலும் அதிக பாரத்தை அவருக்குக் கொடுத்தவன் நான். எனக்கு அவர் எழுதிக் கொடுத்து, ஆனால் சினிமாவாக எடுக்காத கதைகள் இன்னமும் எவ்வளவோ என் வீட்டில் உள்ளன. எனது மருதநாயகம் படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்தவர் சுஜாதா. டைட்டிலில் திரைக்கதை சுஜாதா-கமல் என நான் எழுதிக் கொடுத்தேன். உடனே அந்த காகிதத்தை வாங்கிய சுஜாதா, அவரது பெயரை அடித்துவிட்டதோடு, உங்க பெயரே இருக்கட்டும் என்றார் பெருந்தன்மையோடு. அவருடன் இணைந்துதான் மீண்டும் அந்தப் படத்தை உருவாக்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் அதற்குள் அவர் போய்விட்டார். இப்போது மருதநாயகம் படத்தை எடுத்தால் நான் மட்டுமே அதிகம் எழுத வேண்டியிருக்கும். நேர்மை, ஒழுக்கம் இரண்டையும் தனது வாழ்க்கை நெறியாகக் கொண்டவர் அவர். தமிழுக்காக இப்படி ஒரு விழா எடுப்பது பெருமையாக உள்ளது. தமிழ் வாசகர்களின் தரத்தை உயர்த்திக் காட்டும் ஒரு நிகழ்வாக இதை நான் பார்க்கிறேன். சுஜாதா அதிகம் காதலித்தது தமிழைத்தான். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது என்ற வார்த்தையில் அதிக நிஜமிருக்கிறது என்றார் கமல்.

சிவகுமார்: நடிகர் சிவகுமார் பேசுகையில், சுஜாதாவின் தீவிர ரசிகன் நான். அவரது நூல்களை ஒரு லைப்ரரியாகவே சேமித்து வைத்திருக்கிறேன். அந்த மேதையை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொண்டோமா என்ற கேள்வி இன்னமும் எனக்குள் உறுத்திக் கொண்டே இருக்கிறது. நாடக உலகுக்கு அவர் செய்தவை ஏராளம். அவர் மறுபிறவி எடுக்க வேண்டும், மீண்டும் சுஜாதாவாகவே நம்முடன் வாழவேண்டும் என பேராசைப்படுகிறேன் என்றார்.

வைரமுத்து: வைரமுத்து பேசுகையி்ல், மரபுகளை உடைத்த மாமேதை சுஜாதா. வாழ்க்கை தராத மலர்ச்சியை அவருக்கு மரணம் தந்தது. அவரது உடலை நான் கண்டபோது, அதில் உறைந்த புன்னகை ஒட்டிக் கொண்டிருந்தது. அவர் ஒரு கடல். பொதுவாக, தமிழர்கள் செத்தபிறகுதான் சிங்காரித்து அழகு பார்ப்பார்கள். அப்படியில்லாமல், இனியாவது வாழும்போதே வாழ்த்த கற்றுக் கொள்ள வேண்டும். இந்திய இலக்கியத்தையும், மேல்நாட்டு இலக்கியத்தையும் கலந்து சுஜாதாயிஸம் என்ற புது இலக்கியமே படைத்தவர் அந்த மேதை. எனக்குத் தெரிந்து எந்த எழுத்தாளரையுமே அவர் புறம் பேசியதில்லை. உங்கள் எழுத்தை மேம்படுத்துங்கள், அடுத்தவர் எழுத்தைக் குறை சொல்லாதீர்கள் என்பார் எப்போதும். தமிழும் அதன் வீச்சும் உள்ளவரை அவர் புகழ் நிலைத்திருக்கும். உண்மை, இது வெறும் புகழ்ச்சியில்லை என்றார்.

கனிமொழி: கவிஞர் கனிமொழி எம்.பி., பேசுகையில், அடுத்த எழுத்தாளர்களைக் குறைசொல்வது சுஜாதாவுக்குப் பிடிக்காத விஷயம். தன்னை மோசமாக விமர்சித்த எழுத்தாளர் ஒருவரின் கவிதையை என்னிடம் காட்டி, 'தமிழின் மிகச்சிறந்த ஹைக்கூ இது' என்று பாராட்டிய பெருமகன் அவர். அவரைப் போன்ற ஆளுமை படைத்த எழுத்தாளரை பார்க்க முடியாது. எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு நல்ல வழிகாட்டியாகத் திகழ்ந்த அவரை இழந்த சோகம் என் ஆயுள் வரை தீராது என்றார்.

நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள் சாருநிவேதிதா, மதன், கணையாழி கஸ்தூரிரங்கன், விகடன் ஆசிரியர் அசோகன், ஓவியர் ஜெயராஜ், சிவசங்கரி, இயக்குனர்கள் பாலுமகேந்திரா, தங்கர் பச்சான், பெண்டாமீடியா சந்திரசேகர், நடிகர் சத்யராஜ், தமிழச்சி தங்கபாண்டியன், பேராசிரியர் ஞானசம்பந்தன், திருப்பூர் கிருஷ்ணன் உள்பட பலரும் சுஜாதாவுக்கு புகழஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியின் இறுதியில் ஓவியர் ஸ்ரீதர் வரைந்த சுஜாதாவின் உருவப்படத்தை சுஜாதாவின் மகன்கள் கேசவபிரசாத், ரங்கபிரசாத்திடம் வழங்கினார் கமல்ஹாசன். புகழஞ்சலி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உயிர்மை பதிப்பக ஆசிரியர் மனுஷ்யபுத்திரன், தூர்தர்ஷன் முன்னாள் இயக்குநர் நடராஜன், இயக்குநர்கள் பார்த்திபன் மற்றும் வசந்த் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.


* இந்த விழா பற்றிய முழு ஒலி-ஒளி தொகுப்பு www.adhikaalai.com அதிகாலை.காம் இணையதளத்தில் விரைவில் இடம்பெறும்.

March 01, 2008

"ஹாலிவுட் டு கோலிவுட்" ஒரு தமிழ் இளைஞனின் கனவுப் பயணம்

ஒரு பிரபல இயக்குனரிடம் உதவி இயக்குனர்; பிறகு இணை இயக்குனர்; அதன்பின் கதை சொல்லி உருக வைத்து ஒரு அப்பாவி தயாரிப்பாளரை பணத்தை கொட்ட சம்மதிக்க வைத்தால் போதும். அவர் இயக்குனர். இவர் தயாரிப்பாளர். அதுதான் படம். இதுதான் தமிழ்த்திரை உலக ரசிகர்களுக்கு கிடைத்து வரும் பொக்கிசம்(?).
இப்படி நம் திரை உலகம் விபத்துக்களின் வேடந்தாங்கலாகிவிட்டது. (ஒரு சிலரைத் தவிர). ஆனால்... சினிமா..சினிமா..சினிமா.. உலகத் தரத்துக்கு இணையான ஒரு தமிழ் சினிமா என்ற வெறியுடன் அமெரிக்காவில் கற்று, அங்குள்ள ஜாம்பவான்களிடம் நிறையப் பெற்று, ஒரு பெரிய அங்கீகாரத்துடன் நம் கோலிவுட்டில் நுழைந்திருக்கிறார் அருண் வைத்தியநாதன் எனும் தமிழ் இளைஞர்.

அருண் வைத்திய நாதன்... குறும்பட இயக்குனர்கள் வரிசையில் முன்னிலை வகிப்பவர். தமிழ் சினிமாவை உலகத் தரத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பதை இலட்சியக் கனவாக வைத்திருக்கும் சாப்ட்வேர் படித்த இளைஞன். பிறந்தது சிதம்பரம். இப்பொழுது வசிப்பது அமெரிக்கா. தொழில், கணினி மென்பொருள் துறை. ஆனால் மனதுக்குள் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு....தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு கொண்டு செல்வதுதான். இவர் ஒரு நல்ல இலக்கியவாதியும் கூட. நம் தமிழ் தொலைக்காட்சிகளிலும் பல வித்தியாசமான நிகழ்ச்சிகளை தயாரித்த அனுபவம் பெற்றவர். இதற்கு சாட்சியாக நிற்பவை இவர் கை வண்ணத்தில் உருவாக்கிய சில குறும்படங்கள். குறும்படங்களிலேயே வெளி நாட்டவரின் கவனத்தை நிறையப் பெற்றிருக்கிறார். அமெரிக்க தேசத்துக்கு பிழைப்புத் தேடிப் போனாலும் அவருக்குள் இருக்கும் சினிமா தாகம் அவரை விட்டுப் போவதாக இல்லை. நியூயார்க் திரைப்படக் கல்லூரி ஒன்றில் தயாரிப்புபற்றி கற்றுக் கொண்டார். அங்கேயே The Noose எனும் குறும் படத்தை இயக்கினார். ஏராளமான பாராட்டுக்கள். கூடுதல் உற்சாகம் பெற்றார். தொடர்ந்து வாசிக்க இணைப்பில் செல்க... http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=697&Itemid=164

February 29, 2008

லீனா மணிமேகலைக்கு சர்வேதச விருது

மாத்தம்மா பறை மற்றும் பலிபீடம் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் சார்ந்த யதார்த்த ஆவணப்படங்களின் மூலம் நன்கு அறியப்பட்டவர் லீனா மணிமேகலை. அவருடைய 'தேவதைகள்' எனும் ஆவணப் படத்துக்கு சர்வேதச தங்கச் சங்கு விருது கிடைத்துள்ளது. இந்த விழா சமீபத்தில் மும்பையில் நடை பெற்றது.
"தேவதைகள்" மூன்று சாதாரணப் பெண்களைப் பற்றிய அசாதரணப் படம். இது ஒப்பாரியும், சுடுகாடும் கடலுமாய் வாழும் மூன்று பெண்களைப்பற்றிய ஆவணப்படம். ஆண்கள் மட்டுமே செயல்படுகிற அவர்களே செய்யத்தயங்குகிற மூன்று வெவ்வேறான வேலைகளில் மூன்று பெண்கள் தங்கள் வாழ்க்கையாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அழகியல் உணர்வுடன் படம் பிடித்துள்ளார். பாடல் பாடும் ஒரு பெண் அவளுக்கு கிடைக்கும் சிறிய வருமானத்தில் இல்லாதவர்களுக்கு உதவுவதும், குரங்கு, நாய் போன்ற ஜீவராசிகளுக்கு உணவிட்டு செல்வதும் மனித நேயத்தின் வெளிப்பாடு. சுடுகாட்டில் பிணம் புதைக்கும் வேலை செய்பவர் முதலில் தன்னை எதிர்த்தவர்களையே உடன் வைத்து வேலை வாங்குகிறார்.
ராமேஸ்வரம் கடல் பகுதியில் மீன் பிடிக்கும் பெண் கடலும் கடற்கரையும் மீனவனுக்கே சொந்தம் என்று ஆர்ப்பரிக்கிறார். மூவருமே பெண்கள். துணிச்சலானவர்கள் என்பதையும் மீறி மூவருமே விரும்பி ஏற்காமல் தன்மேல் திணிக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை எவ்வளவு அழகாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இந்த ஆவணப் படத்தின் கதை. தொடர்ந்து வாசிக்க இணைப்பில் செல்க http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=676&Itemid=67

February 27, 2008

"ஈழத்தமிழர்களுக்காக நான் சாகும்வரை சிறையில் இருக்கத் தயார்" - திருமாவளவன் ஆவேசம்

சுஜாதா படைப்புகள் ஒரு பார்வை

இளம் வயதிலிருந்தே கவிதைகள், கதைகள் மீது காதல் கொண்டவர் எழுத்தாளர் சுஜாதா. குறிப்பாக அவருக்கு சயின்ஸ் பிக்சன் கதைகள் மீதுதான் அதீத நாட்டம் இருந்தது. பின்னாளில் எழுத்தாளராக பிரபலமான பின்னர் அவர் ஏராளமான கதைகள் எழுதியபோதும், அவர் எழுதிய என் இனிய இயந்திரா, ஜீனோ உள்ளிட்ட சயின்ஸ் பிக்சன் கதைகளும் அதிக பாப்புலராயின.

என் இனிய இயந்திரா மற்றும் ஜீனோ ஆகிய கதைகளைத்தான் இயங்குநர் ஷங்கர், ரஜினிகாந்த்தை வைத்து ரோபோட் என்ற பெயரில் படமாக்குகிறார் என்பது நினைவிருக்கலாம். ஆனால் இதற்கு முன்பே கமல்ஹாசனின் விக்ரம் படத்துக்காக ஏவுகணை தொழில்நுட்பம்-கடத்தலை அடிப்படையாக வைத்த திரைக்கதையை உருவாக்கிக் கொடுத்துள்ளார் சுஜாதா.

சுஜாதாவின் எழுத்தைத் தாங்காத தமிழ் இதழ்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு சாதாரண இதழ்கள் முதல் இலக்கிய வட்டங்களில் மட்டுமே புழங்கும் இதழ்கள் வரை கிட்டத்தட்ட அனைத்து இதழ்களிலும் சுஜாதாவின் படைப்புகள் அலங்கரித்துள்ளன. காரணம் வசீகரிக்கும் வகையில் அமைந்த அவரது தமிழ்.

பாமரரர்களும், அறிவுஜீவிகளும் ஒரே நேரத்தில் அவரது எழுத்துக்களைப் படிக்க முடியும். அந்த அளவுக்கு தமிழை திறமையாகக் கையாண்டவர் சுஜாதா. ஒரு காலத்தில் அவரது தொடர் கதைகள் இடம் பெறாத பத்திரிகைககளே இல்லை என்று கூறும் அளவுக்கு எந்த இதழைப் பார்த்தாலும் சுஜாதாவின் கதைகளாக இருந்தன. தொடர்ந்து வாசிக்க இணைப்பில் செல்க http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=675&Itemid=164

எண்பது வயதுக்காரனா தமிழனின் தலையெழுத்தை நிர்ணயிப்பது?" தமிழருவி மணியம் ஆவேசம்

"கன்னத்தில் சதை தொங்கிவிட்டதால் கதாநாயகன் வாய்ப்பில்லை. சினிமாவில் செல்லுபடியாகாது. அரசியலில் 80 வயதிலும் ஓய்வில்லை என்று தெரிந்துகொண்டே எவன் எவனோ தமிழனின் தலையெழுத்தை எழுத நினைக்கிறான்". தமிழக அரசின் "அண்ணல் அம்பேத்கார் விருது" பெற்ற இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் 22.02.2008 அன்று, பெரியார் திடலில் அளித்த பாராட்டுவிழாவில் கலந்துகொண்ட தமிழக திட்டக்குழு உறுப்பினரும், காங்கிரஸ் பிரமுகருமான தமிழருவி மணியம் அவர்களின் சொற்பொழிவு: தொடர்ந்து சொற்பொழிவின் அனைத்துப்பகுதியையும் கேட்க இணைப்பில் செல்க. http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=660&Itemid=163

18 வயதிற்குள்

1. Post these rules before presenting your list.
2. List 6 actions or achievements you think every person should accomplish before turning 18.
3. There are no conditions on what can be included on the list.
4. At the end of your blog, choose 6 people to get tagged and list their names.
5. People who are tagged write their own blog entry with their 6 suggestions.
6. Don’t forget to leave them a comment telling them they’re tagged.
*******
1. Finish your highschool education, with complete focus on learning atleast 3 languages(before you turn 8, wish you had learned three languages). Book knowledge is necessary as long as the wisdom is tagged with it). Education is the only treasure which cannot be stolen, invest in it NOW.
2. ASK QUESTIONS. Never be ignorant of anything. Listen to your elders about the stories they've learned, and the things they've learned in life. Remember, they have survived many years in this beautiful, raw, rugged, tough teacher of life aka PLANET EARTH. Be humble, and open minded about their stories. In later part of life you will know the relevance of the stories, tid-bits, nuances of their talks.
3. Travelled to different parts of the same country, to expose yourself to people from different walks of life(meeting kids of different ethnicity, socio-economic status).
4. Make friends, good friends who help you and be supportive of you. By 18 you should've known what friendship means. As Thiruvalluvar has mentioned in Friendship in one of his chapter with 10 verses "Neither familiarity nor frequent association maketh friendship between two persons; verily, it is the silent intellectual understanding between them assures their friendship." and in another one he explains, "Friendship hastens in mishaps, like a hand that picks up the dress that slips" (The tamil version of this verse is one of all time favorites).
5. Learn an art form, as a part of your education, or atleast as a Hobby(if your education does not involve art). Everyone should learn about an art, or have it as a Hobby.
6. Spirituality, learn about life and death. Learn about things in life which are a part of the adolescent life. DO indendent investigation of truth which is totally different from any religion
(Read, investigate, ask questions).

February 24, 2008

பதவி விலகுகிறார் பாகிஸ்தான் அதிபர் முஷாரப்

பாகிஸ்தான் அதிபர் பெர்வெஷ் முஷாரப் பதவி விலகுகிறார். பாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாகிஸ்தான் அதிபர் பெர்வெஷ் முஷாரப்பை ஆதரித்த பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (Q) கட்சி படுதோல்வி அடைந்தது. எதிர்கட்சிகளான பெனாசிர் பூட்டோ கட்சியும், நவாஸ் ஷெரீப் கட்சியும் பெருவாரியான வெற்றி பெற்றன.

இதனை அடுத்து இரண்டு கட்சிகளும் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளன. அதற்கான ஒப்பந்தமும் செய்யப்பட்டு விட்டது. பெனாசிர் கட்சியைச் சேர்ந்தவர் புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார். இதனால் முஷாரப்புக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் அதிபர் பதவியிலிருந்து பதவி விலக முடிவு செய்துள்ளார். இதற்கான அறிவிப்பு இன்னும் இரண்டொரு நாட்களில் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது.

தேர்தலில் தோல்வி அடைந்தாலும்கூட பெனாசிரின் கணவர் ஆசிப் அலி சர்தாரியை தனது பக்கம் இழுத்து, க்யூ பிரிவு முஸ்லீம் லீக் கட்சியுடன் கூட்டணி அமைக்க வைத்து ஆட்சியமைக்க முஷாரப் தரப்பு முயன்றது. ஆனால் முஷாரப்பின் கோரிக்கையை ஆசிப் அலி சர்தாரி நிராகரித்து விட்டார்.

எம்.ஜி.ஆர். தரப்பு மணமகன் : ஜெயலலிதா தரப்பு மணமகள்

எம்.ஜி.ஆர். பெயர் சூட்டிய ஆண் குழந்தை மணமகனாகவும், ஜெயலலிதா பெயர் சூட்டிய பெண் குழந்தை மணமகளாகவும் ஜெயலலிதாவின் 60-வது பிறந்த நாள் விழாவில் திருமணம் செய்து கொண்டனர். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவின் ஒரு பகுதியாக சென்னை பூந்தமல்லி செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானத்தில் 60 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை ஜெயலலிதா நடத்தி வைத்தார்.

திருமணத்தை நடத்தி வைத்த ஜெயலலிதா பேசுகையில்:- போயஸ் தோட்டத்திலிருந்து இந்த புனித ஜார்ஜ் பள்ளியை நோக்கி நான் வருகின்ற வழியெல்லாம் கண்டது மனித நதிகள். இந்த திடலுக்கு வந்த உடன் நான் காண்பது மக்கள் கடல்.

என் தந்தை தனது 42-வது வயதில் மறைந்தார். என் தாயார் 41வது வயதில் மறைந்தார். என் அண்ணன் 49-வது வயதில் மறைந்தார். நான் இன்று 60 வயது நிரம்பி, 61-வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறேன். இதற்கு என் தாயாரின் ஆசியும், என் அரசியல் ஆசான் எம்ஜிஆரின் அருளாசியும்தான் காரணம். நீங்கள் என்மேல் வைத்திருக்கும் ஈடு இணையற்ற அன்புதான் காரணம்.

என்னிடத்தில் நீங்கள் என்னை பார்க்கவில்லை. உங்களை பார்க்கிறீர்கள். உங்களிடத்தில் நான் என்னையே பார்க்கிறேன். இந்த பாசப்பிணைப்புதான் நம்மிடையே இன்று இந்த அன்பு சந்திப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கைம்மாறு கருதாத இந்த பாசப்பரிமாற்றத்தை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இது என் 60-வது பிறந்த நாள் விழாக் கோலமா? இல்லை 65 ஜோடிகளின் மகத்தான மணவிழா கோலமா? என்றால் இரண்டும்தான். அறம் எனப்படுவதே இல்வாழ்க்கை என்னும் வள்ளுவப் பெருமானின் வாக்கிற்கு இணங்க இல்வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் மணமக்கள் இல்லறத்தை நல்லறமாக நடத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்த 60 மணமக்களுக்கும் அம்மா வீட்டு சீர்வரிசையாக 60 விதமான பொருட்களை வழங்கி இருக்கிறேன். இப்படி இலவச திருமணங்களை நடத்துவதில் இணையற்ற வரலாறு படைத்தது அதிமுக என்பதை இந்த நாடே அறியும். மற்றவர்கள் இந்த சாதனையை படைத்ததுண்டா? வாங்கியே பழக்கப்பட்ட கைகள் பிறருக்கு கொடுக்குமா? எப்படி பெறலாம் என்ற எண்ணம் எப்போதும் அவர்களுக்கு, எப்படி தரலாம் என்ற எண்ணம் எப்போதும் நமக்கு. ஈந்து சிவந்த கைகளுக்கு சொந்தக்காரரான எம்ஜிஆரின் வாரிசுகள் நாம். வாங்கி சிவந்த கைகளுக்கு சொந்தக்காரர்கள் அவர்கள்.

இந்த 60 ஜோடி மணமக்களில் எம்ஜிஆரால் பெயர் சூட்டப்பட்ட குழந்தை ஒன்று மணமகனாகவும், நான் பெயர் சூட்டிய பெண் குழந்தை மணமகளாகவும் இப்பொழுது வீற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு காலத்தில் வளமோடு இருந்து இன்னொரு காலத்தில் வாடிப்போகும் மரமல்ல நமது இயக்கம். இது கால ஓட்டத்தில் காய்ந்து போகாத கற்பக விருட்சம். எந்த வேடனாலும் இதற்கு குறிவைக்க முடியாது. எந்த விஷ அம்புகளாலும் இதனை காயப்படுத்த முடியாது. தொடர்ந்து படிக்க இணைப்பில் செல்க http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=635&Itemid=52

February 05, 2008

எழுத்தாளர் பாமரனின் "பஞ்ச்" பதில்கள்!

அன்புமிக்க தோழமைகளுக்கு.... வணக்கம். கடந்த 15 நாட்களுக்கும் மேலாய் சுற்றுப்பயணங்கள்... கருத்தரங்குகள்... எழுத்துப் பணிகள்.. நண்பர்களது சந்திப்புகள்... எனக் கழிந்ததால் எனது பதில்களுக்கான சாத்தியப்பாடுகள் தள்ளிக்கொண்டே போய் விட்டது என்று சொல்லத்தான் ஆசை. ஆனால் உண்மையில் ஒரு வெங்காயமும் இல்லை. உங்கள் நண்பனது "பலங்களை" எப்படிப் புரிந்து கொள்கிறீர்களோ அப்படி அவனது பலவீனங்களையும் புரிந்து கொள்வதே நட்பின் அடையாளம்.. வேலை இருந்தாலும் இல்லாவிடினும் அடிப்படையில் சோம்பேறி நான். இந்த சோம்பேறித்தனம் மட்டுமே என்னை இன்னமும் வாழவைத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு நீங்களும் துணை நிற்பீர்கள் என்பது எனது நம்பிக்கை.. இல்லாவிடில் இதுவும் ஒரு அலுவலகமாய்... குடும்பமாய்... நிறுவனமாய்... சீரழிந்து விடுவதற்கான சாத்தியப்பாடுகள் அநேகம் இருக்கிறது. இத்தகைய சாத்தியப்பாடுகள் கடந்து நமது தோழமை தொடரவேண்டும் என்பதே எனது கவனம். தொடர்வோம்... வழமையாய் அறிவிக்கப்படும் நாட்களைத் தகர்த்து...

தோழமையுடன்
பாமரன்

பாலா.
பாமரன் அவர்களே, தங்கள் எழுத்தை நேசிப்பவர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை...நேற்று வரை ஈழப்பிரச்சினையில் அமைதியாக இருந்த கலைஞர், தமிழ்ச்செல்வனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.... நன்று... அதை வரவேற்றோம்...ஆனால் அதே நிகழ்வுக்கு தமிழகத்தின் பட்டி தொட்டிகளிலெல்லாம் பேரணியும், கூட்டங்களும் நடந்தன...ஆனால் அங்கெல்லாம் அமைதியாயிருந்து விட்டு சென்னை யில் நடக்கவிருந்த பேரணிக்கும், கூட்டத்திற்கும் தடை விதித்ததன் மூலம் "காங்கிரஸ் கட்சியின் நெருக்குதலுக்கு கலைஞர் பணிந்து விட்டாரோ என்று எண்ணத்தோணுகிறது...." கலைஞரின் இந்த முடிவு இந்திய இறையாண்மையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதா.. இல்லை ஆட்சியை காப்பாற்றிக்கொள்ளூம் எண்ணமா?


வணக்கம் பாலா....எனக்கு ஈழத்து வாசகம் ஒன்று தான் நினைவுக்கு வருகிறது. "ஈழத்தில் மொழிக்காகப் போராடியவர்கள்போராட்டத்திற்குப் பிறகு போராளிகள் ஆனார்கள்தமிழகத்தில்மொழிக்காகப் போராடியவர்கள் போராட்டத்திற்குப் பிறகு மந்திரிகள் ஆனார்கள். "கலைஞர் ஆகட்டும்... எவராகட்டும்...ஈழப்பிரச்சனைக்காக ஆட்சியை துறக்கும் அளவுக்கு தியாகிகள் அல்லர். ஓட்டு அரசியலில் இருப்பவர்கள், இந்த அளவிற்காவது முணுமுணுத்தார்களே என்று ஆறுதல்பட்டுக் கொள்ளலாம் அவ்வளவே.

மணி செந்தில்
தற்போது வெளிவரும் திரைப் படங்கள் எவ்வாறு இருக்கின்றன...? எப்படி இருக்க வேண்டும் என தாங்கள் நினைக்கிறீர்கள்...?

பார்க்கப் பார்க்கவே "பரலோகத்திற்கு" டிக்கெட் வாங்கும் அளவிற்கு இருக்கிறதுமனைவியின் தங்கையை பிராக்கட் போட "ஆசை".....தம்பியின் மனைவியை தள்ளி கொண்டு போக "வாலி".....கணவனின் தம்பியை கவிழ்த்துப்போட "உயிர்".....இனி அப்பா - மகள் அம்மா - மகன் உறவு மட்டும்தான் மிச்சம்.

சுசித்ரா
வேலைக்கு செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பற்றி என்ன நினைக்கிறீர்கள்..இவற்றை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்..?

"எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால்ஆடுகளுக்கு விடுதலை உண்டாகுமா? அதை போலவே ஆண்களால் பெண்களுக்கு ஒருபோதும் விடுதலை உண்டாகாது..." என்று பெரியார் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.போன நூற்றாண்டின் தொடக்க காலங்களில் மார்புக்கு மேலே சேலையை போடுவதற்கே போராட வேண்டி இருந்தது. பிற்பாடு கல்விக்கான போராட்டம்..... அதன் பிறகு பணி இடங்களுக்கான போராட்டம்....பால்ய விவாகம்..... உடன்கட்டை ஏறுதல்..... என கணக்கற்ற தடைகளைத் தாண்டியே வந்திருக்கிறது பெண் இனம். இப்படி சகலத்தையும் முறியடித்த பெண்ணிணம் பணி இட பிரச்சனைகளையும் நிச்சயம் தானே எதிர் கொண்டு முறியடிக்கும்.. நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு மெல்லிய கைகுலுக்கல்.

கொலைவாளினை எடடா
ஒரு பக்கம் 9 சதவீத வளர்ச்சி என்கிறார்கள், அதே நேரத்தில் அடிப்படை வசதிகளே இல்லாத கிராமப்புறங்கள் ஏராளம். இப்படி பரவலாக்கப்படாத வளர்ச்சியின் மூலம், மக்களில் பொருளாதார நிலை இடைவெளியை அதிகப்படுத்திக் கொண்டே சென்றுகொண்டு இருக்கின்றன.....2020யில் இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்கிறார்கள் வல்லரசு எதைபதை எதை வைத்து முடிவுசெய்கிறார்கள்?

சரியான கேள்வி. தவறான இடத்திற்கு வந்திருக்கிறது. இதை அப்படியே.....டாக்டர்.அப்துல்கலாம், அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி, சென்னை என்ற முகவரிக்கு, redirect செய்கிறேன் தோழா..

ருத்ரா
தவறு செய்தால் சாமி கண்களை குத்திவிடும் என்று சொல்கிறார்கள் அதிக தவறுகள் நடந்துகொண்டு இருக்கின்றன் கடவுளின் சக்தி கேள்விக்குறியாகிறது?
இதில் உங்களின் கருத்து உங்கள் கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது நண்பா. அந்த சாமி....., இந்த சாமி....., சொந்த சாமி..... நொந்த சாமி..... எதுவும் காப்பாற்றாது நம்மை. எனக்கு தெரிந்த "ஒரே சாமி" ஈ.வே.ராமசாமிதான்..


கருணாநிதி
வணக்கம் தோழரே, உங்கள் பகிரங்க கடிதங்களுக்கு நானும் ஒரு ரசிகன். எனது கேள்விகள் :
1. இன்றைய தலித்துகளின் உண்மை நிலை பற்றி?

2. திராவிடம் பேசும் திராவிட கட்சிகள் இரட்டை டம்ளர் முறையை ஒழிக்க முன்வருவது இல்லையே?

3. கடல் தாண்டி உள்ள தமிழர்காக கண்ணீர் விடும் சில தலைவர்கள் (வைகோ, நெடுமாறன் மற்றும் பலர்) உள்ளூரில் கொடுமைக்கு உள்ளாகும் (தலித்) மலம் அல்லும் மனிதர்களை மறந்து போவது ஏன்?

4. அருந்ததியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு பற்றி?
நன்றி தோழரே. தலித்துகளின் இன்றைய நிலையை எழுத்தில் வடிக்க இந்த இணையத்தின் பக்கங்கள் போதாது. "இரட்டை டம்ளர் முறையை ஒழிக்க திராவிடக் கட்சிகள் முன்வருவது இல்லை...நெடுமாறன் போன்றவர்கள் ஈழத்துக்கு மட்டும் குரல் கொடுக்கிறார்கள்..." என்பதை எல்லாம் தூக்கிக் கடாசிவிட்டு நாம் இந்நிலை மாற துணை நிற்பதே முதல் வேலை.. அருந்ததியருக்கான இட ஒதுக்கீடு காலத்தின் கட்டாயம். மனித மலத்தை மனிதனே சுமக்கும் அவல நிலை மாறாத நாள் வரை யாரும் விஞ்ஞானி என்றோ.... எழுத்தாளன் என்றோ...கவிஞன் என்றோ சொல்லி கொள்வதில் அர்த்தமே இல்லை. இந்த அவல நிலை குறித்து திரு.மதிவண்ணன் அவர்கள் "உள் ஒதுக்கீடு சில பார்வைகள்" என்கிற நூலை அண்மையில் வெளியிட்டு இருகிறார் (கருப்பு பிரதிகள் பதிப்பகம், B-74 பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, சென்னை-5) வாங்கி - வாசித்து - செயல்படுவோம் வழி பிறக்கும்.

ஆர்த்தி
தொலைக்காட்சி ஊடகங்களின் செயல்பாட்டைப் பற்றித் தங்கள் பார்வை என்ன?

இருக்கிற பார்வையும் தொலைந்ததுதான் மிச்சம். Always Making new

வணக்கம் நண்பரே..தமிழனுக்கு சாதி தேவையா தேவையில்லையா?இல்லையெனில் தமிழனை அடையாளம் கொள்வது எப்படி?
வந்தேறிகள் அதிகமாகிவிட்ட இச்சூழ்நிலையில் எவ்வாறு அவர்களை இனம் காணுவது?.. கட்-அவுட்களூக்கு எங்கெங்கு பாலாபிசேகம் நடக்கிறதோ... வாஸ்துகளின் பெயரால் எங்கெங்கெல்லாம் கட்டிடங்கள் இடிக்கப்படுகிறதோ...சோதிடத்தின் பெயரால் வாழ்க்கை எங்கெங்கெல்லாம் தொலைக்கப்படுகிறதோ....அங்கெல்லாம் இளித்து கொண்டு நிற்பவன் எவனோ அவனே தமிழன்..தமிழனை இனம் காண்பதில் அப்படி என்ன சிக்கல் உங்களுக்கு?


ஜீவானந்தம்
தமிழிலேயே கேவலமான பத்திரிகை என்று பெரும்பாலர்களால் கருதப்படும் குமுதத்திற்கு (இதற்கு ஆதாரம் எதுவும் என்னிடம் இல்லை) விற்பனைக்காக பாமரன் தேவைப்படலாம். பாமரன் போன்ற புரட்சியாளர்களுக்கு குமுதம் தேவையா?
ஐய்யய்யோ.... என்னைப் புரட்சியாளன் என்று யாரோ உங்களூக்கு தவறான தகவல் தந்துவிட்டார்கள். பாவம்... குமுதம் தவிர வேறு பத்திரிக்கைகள் எதுவும் படிப்பதே இல்லையா நீங்கள்?

ஜெயபிரகாஷ் வேல்
தோழரே, உங்கள் எழுத்து நடை சற்று சலிப்பூட்டுவது போல் உள்ளது. ஓரே மாதிரி எழுதுவது உங்களுக்கு எப்படி உள்ளது?

உண்மை தான். ஞானிகளின் நண்பர்களுக்கு பாமரர்களின் நடை சலிப்பூட்டுவதில் ஆச்சரியங்கள் ஏதும் இல்லை

பாரதி
தோழரே ஈழத்தின் இறுதி முடிவு என்னவாக இருக்கும்.........

மதுரை மச்சான்!


தமிழிலேயே கேவலமான பத்திரிகை என்று பெரும்பாலர்களால் கருதப்படும் குமுதத்திற்கு இப்படி ஒரு கருத்து நிறையப்பேரிடம் இருக்கிறது!!!! எதனால் என்று கூறமுடியுமா? பாமரன் அவர்களே!!

25 வருடங்களாக எங்கள் வீட்டில் வாங்கி கொண்டிருக்கிறார்கள் இப்படி அவர்களுக்கு தோன்றியதாக எனக்கு தெரியவில்லை!!!

February 01, 2008

மதத்தின் பிடியில் அப்துல் கலாம்!?

பாரத ரத்னா, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இந்தியாவுக்கே கிடைத்த மணிமகுடம். நாட்டுப்பற்று மிக்க இலட்சியவாதி, சாதி மதங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தியா, இந்தியர் என்பதே தன் முகவரியாக வாழ்ந்துகொண்டிருப்பவர். இதுதான் அவருக்கு நாடும் உலகமும் வைத்திருக்கும் அளவுகோல். ஆனால் அவருடைய சமீபத்திய நடவடிக்கை மேற்சொன்ன பெருமைகளையெல்லாம் கொஞ்சம் கேள்விக்குரியாக்கியிருக்கிறது. அந்தச் சம்பவம் வருமாறு : இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகமது சதாக் பொறியியல் கல்லூரியின் புதிய ஷிப்-இன்-ப்ளாக் கட்டிடத்தைத் திறந்து வைக்க வருகை தந்திருந்த ஏ.பி.ஜே அப்துல் கலாம் சிறப்புரையாற்றத் தொடங்கியதுமே அவர் மத அடையாளத்துடன் "அஸ்லாமு அலைக்கும்" என ஆரம்பித்தார். இவருடைய சிறப்புரையைக் கேட்க கூடியிருந்த கூட்டம் கொஞ்சம் அதிர்ச்சிக்குள்ளாகியது. விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த கல்லூரி நிர்வாகம் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். ஆனால் அங்கு படிக்கும் மாணவர்களும், சிறப்புரையைக் கேட்கக் கூடியிருந்த பொதுமக்களும் வெறும் இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர்களில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு சமூகத்தினரும் கூடியிருந்த விழாவில் இந்தியாவே தரிசிக்கும் ஏ.பி.ஜே-யின் பேச்சு அனைவரையும் கொஞ்சம் உறையச்செய்ததை யாரும் மறுக்க முடியாது. அவருக்குள்ளும் மதத்தின் வேர்கள் துளிர்விட்டிருக்கிறதா? என கவலையுடன் கூட்டம் கலையத்தொடங்கியது. அந்தச் சர்ச்சைக்குரிய உரை இதோ ஒளி வடிவில்.... http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=blogsection&id=10&Itemid=154

January 29, 2008

பறவைக் காய்ச்சல் நோய் கட்டுப்படுத்தப்படும்

அன்புமணி : ராமதாஸ்இந்தியாவில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்கிய மேற்குவங்க மாநிலத்தில் அந்த நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இன்னும் சில தினங்களில் முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என்றும் இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் 13 மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் தாக்கியிருப்பதாகவும், திங்கட்கிழமை வரை 21 லட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், தொள்ளாயிரத்துக்கும் மேற்பட்ட குழுக்கள் இந்தப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் அது கட்டுப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இதனிடையே, கோழிகளைக் கொல்வது தொடர்பாக பெரும் முறைகேடுகளும், அரசியல்வாதிகளின் நெருக்குதல்களும் அதிகரித்திருப்பதால், மேற்கு வங்க மாநில சுகாதாரம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை ஊழியர்கள் கோழிகளை கொல்வதை நிறுத்திவிட்டதாக பிபிசியின் கொல்கத்தா செய்தியாளர் தெரிவிக்கிறார். ஒரு இடத்தில் ஐந்து கோழிகளைக் கொன்றால், ஐம்பது கோழிகளைக் கொன்றதாக சான்றிதழ் கொடுக்குமாறு தாங்கள் நிர்பந்திக்கப்படுவதாக அவர்கள் புகார் கூறுகின்றனர். அதிக எண்ணிக்கையிலான கோழிகளைக் கொன்றதாகக் கணக்குக் காட்டினால் அதற்கான இழப்பீட்டுத் தொகையும் அதிகமாகக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சில இடங்களில் பெரும் நஷ்டம் ஏற்படும் என்பதால், கிராம மக்களே கோழிகளைக் கொல்வதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.

ஒருவரின் 44 வயதில் மனச்சோர்வு கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது

இன்றைய அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில், மனிதர்களுக்கு ஏற்படும் மனச்சோர்வு குறித்த சமீபத்திய ஆய்வின் முடிவுகள். அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று சுமார் எண்பது நாடுகளில் 20 லட்சம் பேரிடம் நடத்திய ஆய்வில், மனிதர்களில் பெரும் பாலானவர்களுக்கு, 40 வயதாகும் போது மனச்சோர்வு அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக 44 வயதில், இந்த மனச்சோர்வு மிக அதிகமாக இருப்பதாக இந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. ஆண், பெண், ஏழை, பணக்காரன், திருமணம் ஆனவர், ஆகாதவர், குழந்தைகளை பெற்றவர், பெறாதவர் என்கிற எந்த வித்தியாசமும் இன்றி எல்லாதரப்பினரையும், அவர்கள் 40 வயதை கடந்த பிறகு, இந்த மனச்சோர்வு பாதிப்பதாக இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. மனிதர்கள் இப்படி மத்திய வயதாகும்போது மனச்சோர்வால்பாதிக்கப்படுவதற்கு பல காரணங்களையும் இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

January 02, 2008

திரைப்பட ஒளிப்பதிவாளர் சிவகங்கை செழியன்

மகேஸ்வரன் படுகொலை, கொழும்பு குண்டுவெடிப்புக்கு அமெரிக்கா கண்டனம்

நேற்று, செவ்வாய்க்கிழமை கொழும்பு கொட்டாஞ்சேனை பொன்னம்பலவாணேசர் ஆலயத்தினுள் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது இனந்தெரியாத துப்பாக்கி நபரினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனின் படுகொலையையும், இன்று கொழும்பில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலையும் அமெரிக்க அரசு வன்மையாகக் கண்டித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகம், மகேஸ்வரனின் கொலை தொடர்பில் இலங்கை அரசாங்கம் பூரண விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், அதற்குப் பொறுப்பானவர்களைக் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருக்கிறது. இந்த இரண்டு தாக்குதல்களின்போதும் கொல்லப்பட்டவர் களினதும், காயமடைந்தவர்களினதும் குடும்பங்களுக்கு ஆறுதலைத் தெரிவித்துள்ள அமெரிக்க அரசாங்கம் இலங்கை இனப்பிரச்சனைக்கு சமாதான வழியில் பேச்சுக்களினூடாக அரசியல் தீர்வொன்றினைக்காண சகல தரப்பினரும் முன்வரவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது. இதேவேளை, மகேஸ்வரனின் பூதவுடல் இன்று அதிகாலை வைத்தியசாலையிலிருந்து வெள்ளவத்தையிலுள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. நேற்றையதினம் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலர் அவரது பூதவுடலிற்கு தமது அஞ்சலிகளைத் தெரிவித்துள்ளனர். இவரது இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை கொழும்பில் இடம் பெறவிருப்பதாக கூறப்படுகிறது.
கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபர் குறித்த விவரங்கள்
மகேஸ்வரனின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருக்கும் சந்தேக நபர் குறித்து, இலங்கை அரசின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், பிபிசி தமிழோசையிடம் பின்வரும் விவரங்களை தெரிவித்தார். அவரது பெயர் வசந்தன் என்றும் அவரது தனிப்பட்ட விபரங்கள் கிடைத்திருப்பதாகவும், ஆனால் அவரிடம் இருந்து வாக்குமூலம் எதையும் பெறவில்லை என்றும் கூறிய கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், வசந்தன் தற்காலிகமாக தங்கியிருந்த வத்தளை வீட்டில் அவர் பயன்படுத்திய மைக்ரோ பிஸ்டலுக்குத் தேவையான தோட்டாக்கள் இருந்ததாகவும் தெரிவித்தார். வசந்தன் 1996 அம் ஆண்டு யாழில் இருந்து வெளியேறியதாகவும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கீழ் பணியாற்றியுள்ளதாகவும், மகேஸ்வரன் அமைச்சராக இருந்தபோது அவருடைய பாதுகாப்பு பணியில் இருந்துள்ளதாகவும், அரசுப் பணியில் இருந்துள்ளதாகவும், காவல்துறை பணியில் இருந்திருப்பார் என்று தாம் கருதுவதாகவும் தெரிவித்த கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், அனால் தமக்கு இது குறித்த காவல்துறை உயரதிகாரியின் முழுமையான அறிக்கை கிடைக்கவில்லை என்றும், அந்த அறிக்கை கிடைக்கும் வரை யார் மீதும் குற்றம் சுமத்த முடியாது என்றும் தெரிவித்தார்.

பாகிஸ்தான் தேர்தல்கள் பிப்ரவரி 18 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

பாகிஸ்தானில் இம்மாதம் எட்டாம் தேதி நடைபெற இருந்த பொதுத் தேர்தல்கள் அடுத்த மாதம் 18 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான பேனசீர் புட்டோ ராவல்பிண்டியில் ஒரு தேர்தல் பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு வெளியேற இருந்த நிலையில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பிறகு நாடெங்கும் வன்முறை வெடித்தது. இந்த வன்முறைகளின் போது நாட்டில் பல வாக்குச் சாவடிகள் அடித்து நொறுக்கப்பட்டு வாக்காளர் பட்டியலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் தேர்தல் நடைமுறைகள் அனைத்துமே மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என பாகிஸ்தானின் தலைமை தேர்தல் அணையாளர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் முக்கிய எதிர்கட்சிகளான பாகிஸ்தான் மக்கள் கட்சியும், பாகிஸ்தான் முஸ்லீம் லீகின் நவாஸ் பிரிவும் தேர்தல்கள் திட்டமிட்டபடி இம்மாதம் எட்டாம் தேதியே நடைபெற வேண்டும் என வலியுறித்து வந்தன. தேர்தல் பிரச்சாரத்தால் களைகட்டியிருக்கும் பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன்னரே இந்த இரண்டு கட்சிகளும் பாகிஸ்தானின் தேர்தல் ஆணையம் அதிபர் முஷாரஃப் மற்றும் அவரது கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சுமத்தின. நாட்டில் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதை அனைத்துமுக்கிய எதிர்கட்சிகளும் கண்டித்துள்ளன. தேர்தல் ஆணையம் தனது எண்ணப்படி நடக்க வேண்டுமென அரசு விரும்புவதாகவும், அதற்கேற்ற வகையில் தேர்தல் ஆணையம் நடந்து கொள்வதாகவும், சுதந்திரத் தன்மையுடன் அது இயங்கவில்லை என்றும், அதனால் மக்கள் தேர்தல் ஆணையத்தை நம்புவதில்லை என்றும் எதிர்கட்சிகள் கூறுகின்றன.