October 13, 2007

இதுதான் நமது உலகம்!!

இன்று நாம் என்னவாக இருக்கிறோமோ அதற்கு நன்றி தெரிவிப்போம் - காரணம் இந்த இணைப்பை அழுத்துங்கள் புரியும். குறைந்தபட்சம் நம்மாலானவற்றைச் செய்யலாமே! இன்றே தொடங்குவோம். இதுதான் நமது உலகம்!!http://manuneedhy.googlepages.com/Poverty.ppt

இன்றைய குறள்

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து

கற்பவை கற்றுச் சினம் காத்து அடக்கமெனும் பண்பு கொண்டவரை அடைந்திட அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும்

அறத்துப்பால் : அடக்கம் உடைமை

எடிட்டர் அந்தோணி

2011-ஆம் ஆண்டு முதல்வர் பதவி ஏற்பேன்

"மக்கள் நம்பிக்கையைப் பெற்று மக்கள் ஆதரவுடன் 2011-ஆம் ஆண்டு முதல்வர் பதவி ஏற்பேன். காமராசர் ஆட்சியை அமைப்பேன்" - சரத்குமார், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர்

ஒரினச் சேர்க்கைப் பாதிரியாரை பதவி நீக்கம் செய்துள்ளது வாட்டிகன்

  • இந்தியப் பிரதமரை சந்தித்தார் இலங்கை ஜனாதிபதி : இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மூன்று நாள் பயணமாக வெள்ளிக்கிழமை இரவு புதுடெல்லி வந்தார். சனிக்கிழமை மாலை, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்
  • இலங்கை மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக ஐ.நா உயர்ஸ்தானிகர் வேதனை : இலங்கைக்கு தற்போது விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் லூயிஸ் ஆர்பர் அவர்கள், இலங்கையில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக சட்டத்தினை அமுல்படுத்துவதில் இருக்கின்ற பலவீனமும், குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் தப்பிப்பதும் வேதனைக்குரிய விடயம் என்று கூறியிருக்கிறார்
  • யாழ்ப்பாணம் குருநகர் குடாகடலில் மோதல் : இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் குருநகர் குடாகடலில் சனிக்கிழமை காலை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் விடுதலைப் புலிகளின் படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டு 3 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகிய இராணுவத்தின் படகு ஒன்றில் இருந்த 3 படையினர் காணாமல் போயிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது
  • பர்மாவில் ஆர்ப்பாட்டத் தலைவர்கள் கைது : பர்மாவில் கடந்த மாதம் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றவர்களில் மீதமுள்ள மூன்று தலைவர்களையும் பர்மிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தை வன்முறை மூலமாக இராணுவம் மட்டுப்படுத்தியது
  • ரஷ்ய மனித உரிமை ஆர்வலர்களுக்கு அமெரிக்கா ஆதரவு : ரஷ்யாவில் இருக்கின்ற மனித உரிமை ஆர்வலர்களுக்கு அமெரிக்காவின் ஆதரவு இருப்பதாக அமெரிக்க ராஜாங்க செயலர் கொண்டலீசா ரைஸ் கூறியுள்ளார்
  • ஒரினச் சேர்க்கை பாதிரியாரை பதவி நீக்கம் செய்துள்ளது வாட்டிகன் : இத்தாலி நாட்டுத் தொலைக்காட்சியில் தன்னை ஒரினச் சேர்க்கையாளர் என்று ஒப்புக்கொண்ட உயர் பதவியில் இருக்கின்ற பாதிரியார் இடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக வெளியான செய்தியை வாட்டிகன் ஒப்புக்கொண்டுள்ளது

October 12, 2007

இன்றைய குறள்

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு

நெருப்பு சுட்ட புண்கூட ஆறிவிடும், ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது
அறத்துப்பால் : அடக்கம் உடைமை

குத்துப்பாட்டைத் தமிழகத்தின் தேசியகீதமாக மாற்றாதீர்கள்

மெலடி என்ற வார்த்தை தமிழ்சினிமாவில் மெல்ல மறைந்து வருகிறது. குத்துப்பாட்டு ஷாட்கட் முயற்சி, இதற்கு இசையமைப்பாளர்களை மட்டும் குற்றம் சொல்ல முடியாது, குத்துப்பாட்டு மாயையிலிருந்து தமிழ் சினிமா மாறவேண்டும். தமிழகத்தின் தேசிய கீதமாக இதை மாற்றாதீர்கள்.

- ஏ.ஆர்.ரஹ்மான்

வீரப்பன் தொடரை ஒளிபரப்ப இடைக்காலத் தடை

  • தமிழ்நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் இடையேயுள்ள காட்டுப் பகுதியில் இருந்தபடி கொலைகள், சந்தனக் கடத்தல், யானைகளை வேட்டையாடுதல் போன்ற பல்வேறு குற்றங்களை செய்து வந்த வீரப்பன் 2004 ஆம் ஆண்டில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகும், வீரப்பன் தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
    வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை தனியார் டி வி ஒன்று தொடராக ஒளிபரப்ப திட்டமிட்டது. அதன்படி எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இந்தத் தொடரை ஒளிபரப்பவிருந்தனர். இத்தொடர் ஒளிபரப்பானால், அதனால் தனக்கும் தனது இரு பெண்களுக்கும் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தம் என்று கூறி வீரப்பனின் மனைவி முத்து லட்சுமி நீதிமன்றத்தை அணுகி இத் தொடருக்கு எதிராக தடை கோரினார். அந்த வழக்கை விசாரித்த சென்னை சிவில் நீதிமன்றம் ஒன்று, எதிர்வரும் 26 ஆம் திகதி வரை அதனை ஒளிபரப்பத் தடை வித்தித்துள்ளதாக, முத்துலட்சுமியின் வழக்கறிஞர் மனோகரன் தெரிவித்தார். இருந்த போதிலும் இந்த நீதிமன்றத் தடைக்கு எதிராக தான் ஏற்கனவே மேன்முறையீடு செய்துவிட்டதாகக் கூறுகிறார், வீரப்பன் குறித்த தொடரை இயக்கும் கவுதமன். இந்தத் தொடர் வீரப்பினின் இரு பக்கங்களையும் மக்கள் முன் கொண்டுவரும் என்றும், தொடரைப் பார்த்த மக்கள் வீரப்பனின் குடும்பத்துக்கு அன்பையும் ஆதரவையும் அளிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
  • பெனசிர் நாடுதிரும்புவதை தடுக்கப்போவதில்லை என்கிறார் முஷாரஃப் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் பூட்டோ அடுத்த வாரம் நாடு திரும்ப இருப்பதை தான் தடுக்கப்போவதில்லை என பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் கூறுகிறார்
  • ஐ. நா மனித உரிமைகள் ஆணையர் யாழ் விஜயம் : ஐநா மன்றத்தின் மனித உரிமைகளுக்கான அமைப்பு யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட வேண்டும் என, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ. நா மன்றத்தின் மனித உரிமைகளுக்கான ஆணையர் லூயிஸ் ஆபர் அம்மையாரிடம், யாழ் குடாநாட்டின் பொது அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் மூத்த குடிமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்
  • இலங்கை செய்தியாளர்களின் பிரச்சினைகள் குறித்த சந்திப்பு : இலங்கையில் செய்தியாளர்கள் பணியாற்றுவதில் மிகவும் அபாயகரமான நிலைமையை எதிர்நோக்குவதாக, இங்கு லண்டனில் நடந்த செய்தித்துறையைச் சார்ந்தவர்களின் சந்திப்பு ஒன்றில் விவாதிக்கப்பட்டது
  • அமைதிக்கான நோபல் பரிசு : அமைதிக்கான நோபல் பரிசு, அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர், அல்கோர் அவர்களுக்கும் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அரசாங்கங்களுக்கு இடையிலான குழுவுக்கும் வழங்கப்படுகிறது
  • மலேரியா கட்டுப்பாட்டு திட்டம் பலனளிக்கிறது: உலக வங்கி
    கொசுக்கடியால் பரவுகிறது மலேரியாமலேரியா நோயை கட்டுப்படுத்துவதற்காக உலக வங்கி ஆரம்பித்த ஒரு புதிய திட்டம் இரண்டு ஆண்டுகளை எட்டியிருக்கும் நிலையில் 18 நாடுகளில் அந்நோயினால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைகிறது என உலக வங்கி கூறுகிறது
  • விசித்திர முறையில் இனப்பெருக்கம் செய்யும் பாலினமில்லா உயிரினம் - பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு : ஆண்-பெண் என்ற பாலினம் இல்லாமலேயே பலகோடி ஆண்டுகள் நீடித்து வாழ்ந்துவரும் மிக நுண்ணிய உயிரினம் ஒன்றை பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒரே ஒரு உயிரணு கொண்டதாக அறிவிக்கப்படும் இந்த உயிரினம் தடாகங்களில் வாழ்வதாகவும் மரபணு விசித்திரம் ஒன்றினால் தம்மைப்போன்ற, ஆனால் முற்றிலும் ஒரேமாதிரி அல்லாத பிரதிகள் பலவற்றை உருவாக்குகின்றன என்றும் கேம்பிரிஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். டெல்லாய்ட் ரோடிஃபெர்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உயிரினமானது, இதர ஆண்-பெண் அல்லாத உயிரினங்கள் சகித்துக்கொள்ளமுடியாத காலமாற்றங்களையும் எதிர்த்து சமாளித்து நீண்டகாலம் உயிர்வாழ்ந்திருப்பதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள்
  • இன்றைய (அக்டோபர் 12 வெள்ளிக்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்துக http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

October 11, 2007

சிங்காரச் சென்னையைப் பிரிந்து வெளிநாடு/வெளியூர்களில் வாழும் நண்பர்களுக்காக

சங்கமம் நேரடி ஒளிபரப்பு

இன்றைய குறள்

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்

ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்
அறத்துப்பால் : அடக்கம் உடைமை

சூட்சுமமான ஓர் உறவு

"மு.க. அழகிரியும், தி.மு.க.வும் இல்லாதிருந்தாலும் கூட காங்கிரஸ் இந்தத் தேர்தலில் ஜெயித்திருக்கும்" - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மத்திய அமைச்சர்.

*****

"கடந்த ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலோடு தி.மு.க-வுடனான உறவு முடிந்து விட்டது. தி.மு.க-வுக்கும் பா.ம.க-வுக்கும் ஏற்பட்டது தேர்தல் கூட்டணிதான்" -டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர்

நோபல் பரிசைப் பெறும் மிக அதிக வயதானவரான, டோரிஸ் லெஸ்ஸிங்க்குக்கு 87 வயதாகிறது

  • இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறும் பிரிட்டிஷ் எழுத்தாளர் :
    டோரிஸ் லெஸ்ஸிங் பிரிட்டிஷ் எழுத்தாளர், டோரிஸ் லெஸ்ஸிங், இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றிருக்கிறார். நெருப்பு, அவநம்பிக்கை, மற்றும் தீர்க்க தரிசன சக்தி போன்றவற்றுடன் பெண்கள் பார்வையிலான அனுபவத்தைப் பற்றி அவர் எழுதினார் என்று இந்தப் பரிசை அறிவித்த, ஸ்வீடிஷ் அக்காடமி கூறியது. இந்தப் பரிசைப் பெறும் மிக அதிக வயதானவரான, டோரிஸ் லெஸ்ஸிங்க்குக்கு 87 வயதாகிறது. 60 ஆண்டுகளுக்கு முன்னர், தனது முதலாவது புதினமான, புல் பாடுகிறது, தி க்ராஸ் இஸ் சிங்கிங், என்ற புத்தகத்தில் அவர், தனது குழந்தைப்பருவத்தைக் கழித்த ரோடிஷியாவில் காலனிய அரசின் வீழ்ச்சி குறித்து எழுதினார். அதிலிருந்து அவர் 20க்கும் மேற்பட்ட புதினங்களை எழுதியுள்ளார்.
  • நேபாள நாடாளுமன்றத்தில் மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த விவாதம் : நேபாள மன்னர்நேபாளத்தில் மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பிலான தீர்மானத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் விவாதித்து வருகிறது.
    இந்த ஆண்டின் துவக்கத்தில் நாடாளுமன்றத்தில் சேர்ந்துள்ள, ஒரு முன்னாள் மாவோயிஸ்டால் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது
  • இலங்கையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் லூயிஸ் ஆர்பரைச் சந்தித்தனர் : இலங்கையில் காணாமல் போனவர்களது உறவினர்கள் பலர் இன்று, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான விவகார ஆணையர் லூயிஸ் ஆர்பர் அவர்களை சந்தித்துப் பேசியுள்ளனர்
  • கிழக்கு மாகாண பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஜனாதிபதிக்குக் கடிதம் : பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் ஹனீபா இலங்கையில் மத வழிபாட்டுத் தலங்களில் ஒலி பெருக்கிகள் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து கிழக்கு மாகாண அனைத்து பள்ளிவாசல்களின் சம்மேளனம் தமது கவலையை வெளிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது
  • இ.தொ.கா பிரதிநிதிகள் மீண்டும் அமைச்சர்களாகினர் : ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த ஆலோசகரும், சகோதரருமாகிய பசில் ராஜபக்ஷவுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாத முற்பகுதியில், தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமாச் செய்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று மீண்டும் அந்த அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றிருக்கிறனர்
  • அமெரிக்க- துருக்கிய உறவில் ஒரு சிக்கல் : முதலாவது உலகப் போரின் போது துருக்கியில், ஆர்மீனியர்கள் பெருமளவில் கொல்லப்பட்டதை, இனப்படுகொலை என்று அமெரிக்கக் காங்கிரஸ் நாடாளுமன்றத்தின், வெளியுறவுக் குழு வாக்களித்துள்ளமையானது, அமெரிக்காவுக்கும், துருக்கிக்கும் இடையிலான உறவுகளில், புதிய சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது
  • இன்றைய (அக்டோபர் 11 வியாழக்கிழமை 2007) "BBC" தமிழோசை கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

October 10, 2007

நாம் எங்கிருக்கிறோம் என்பதல்ல!

குருவிக்கூடு போல ஒரு சிறிய அழகான வீடு. அருகே உருளைக்கிழங்கு விளையக்கூடிய செழிப்பான ஒரு ஏக்கர் நிலம். பக்கத்தில் ரம்மியமான ஒரு நீரோடை. அங்கு கணவன், மனைவி, மகன் என மூவரும் மகிழ்ச்சி பொங்க வாழ்ந்து கொண்டிருந்தபொழுது, திடீரென அந்தத் தாய் தூக்கத்திலேயே இறந்து விடுகிறாள். தன் மகனோடு வாழ்ந்து கொண்டிருந்த அந்தப் பெரியவர் தாயைச் சின்ன வயிதிலேயே தன் மகன் இழந்துவிட்டதால் அவனை மிகச் செல்லமாக வளர்த்ததன் விளைவு, அவன் செய்த சில தவறுகளுக்குத் தண்டனையாகச் சிறையில் அடைக்கப்பட்டான். தன் தந்தையோடு இருக்கும்போது அவன் தந்தைக்கு மிகவும் உதவியாகவும், பாசமாகவும் இருந்தான். தன் வீட்டுக்கருகாமையில் இருந்த ஒரு உருளைக்கிழங்குத் தோட்டத்தைத் தவிர அவர்களுக்கு வேறு எந்தச் சொத்தோ வருமானமோ இல்லை. ஒவ்வொரு பருவத்திலும் செழிப்பாக இருக்கும் அந்தத் தோட்டத்தோடு தன் மனைவியின் ஆத்மாவும் கூட இருப்பதாகவே அந்தப் பெரியவர் நினைத்து வாழ்ந்துகொண்டிருந்தார். ஆனால் இந்த முறை மகன் இல்லாததால் தான் தனியாளாக அந்த நிலத்தைத் தோண்டி, உருளை பயிரிட முடியாத ஒரு நிலை. இதையெல்லாம் நினைத்து வருந்திய அந்தப் பெரியவர் தன் மகனுக்கு எழுதிய கடிதத்தில்,

“மகனே!
எனக்கு நினைவு தெரிந்தநாள் முதல் நம் தோட்டத்தை நான் காயவிட்டதில்லை, ஆனால் உன் அம்மா மறைந்த அன்று நான் எப்படி வெறுமையாக உணர்ந்தேனோ அதைப்போல் இன்றும் உணர்கிறேன். நீ இருந்திருந்தால் இந்தத் தோட்டம் இந்நேரம் பூத்துக்குலுங்கியிருக்கும். கடந்த வருடம் வரை நீ எனக்கு அவ்வளவு உதவியாய் இருந்தாய். உன் போதாத காலம் நீ சிறையில் வாடுகிறாய். நானும் தனிமையில் யாரும் இல்லாமல் தவிக்கிறேன். என் இந்தத் தள்ளாத வயதில் ஒரு ஏக்கர் நிலத்தைத் தோண்டி உருளை பயிரிட எனக்குத் தெம்பு இல்லை. உன் அம்மா ஆசை ஆசையாய்ப் பராமரித்த இந்த நிலம் இன்று வெறிச்சோடிக்கிடக்கிறது. அதைக் கண்கொண்டு என்னால் பார்க்க இயலவில்லை. எனவே கொஞ்சம் கொஞ்சமாக அதைத் தோண்டிப் பயிரிட முயற்சிக்கிறேன். உன் தண்டனை மிக விரைவில் முடியப் பிரார்த்திக்கிறேன்.

உன் வருகைக்காகக் காத்திருக்கும்

உன் அன்புத் தந்தை

என்று மிகுந்த வேதனையோடு தன் மகனுக்கு எழுதியிருந்தார்.
கடிதத்தை அனுப்பிய நான்காவது நாள் ஒரு தந்தி வந்திருந்தது.

அப்பா!
தயவு செய்து அந்த நிலத்தைத் தோண்டாதீர்கள். அதில்தான் நான் எனது அனைத்துத் துப்பாக்கிகளையும், ஆவணங்களையும் புதைத்து வைத்திருக்கிறேன்” என்று அனுப்பப் பட்டிருந்தது. தந்தி கிடைத்த இரண்டாவது மணிநேரத்தில் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அடங்கிய ஒரு பெரும் கூட்டமே வந்து அந்த நிலத்தை தலைகீழாகத் தோண்டிப் போட்டுவிட்டு எந்தத் துப்பாக்கியும், ஆவணமும் கிடைக்காமல் திரும்பிச் சென்றுவிட்டனர். பெரியவருக்கு ஒன்றும் புரியாமல் குழம்பிப்போனார். மறுபடியும் மகனுக்கு எழுதினார். மகனுடைய அடுத்த பதிலில்,

அப்பா!
என்னை மன்னித்து விடுங்கள்! என்னால் இங்கிருந்துகொண்டு இதைத்தான் செய்ய முடிந்தது. இப்போது உருளையைப் பயிரிடுங்கள். அம்மாவின் ஆத்மாவும் சாந்தியடையும்.

தண்டனை முடிந்து விரைவில் சந்திக்கிறேன்.
பாசத்துடன் மகன்

செய்தி:
“நாம் எங்கிருக்கிறோம் என்பதல்ல, எங்கிருந்தும் சாதிக்க முடியும்”

(எனக்கு அறிமுகமில்லா யாரோ எனக்கனுப்பிய ஒரு ஆங்கில மின்னஞ்சலை தமிழ்ப்படுத்தியுள்ளேன். அவருக்கும், மின்னஞ்சலின் மூலவருக்கும் என் நன்றி)

- நவநீ

அர்த்தமுள்ள இந்து மதம் : கவியரசு கண்ணதாசனின் குரலில் - III

Powered by eSnips.com

எடிட்டர் அந்தோணி

இன்றைய குறள்

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திடவேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகிவிடும்
அறத்துப்பால் : அடக்கம் உடைமை

ஆதாரங்கள் இல்லை என்பதற்காக இராமர் கற்பனையான பாத்திரம் என்று கூறிவிடமுடியாது

"இராமபிரான் வாழ்க்கையில் பல அதிசயிக்கத்தக்க விசயங்கள் நடந்துள்ளன. இதற்கு ஆதாரங்கள் இல்லை என்பதற்காக இராமர் கற்பனையான பாத்திரம் என்று கூறிவிடமுடியாது. மதத் தலைவர்கள் பலரது வாழ்க்கையில் பல அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றையெல்லாம் கற்பனை என்று ஒதுக்கிவிட முடியுமா?" - ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், "வாழும் கலை" நிறுவனர்

உள் ஒதுக்கீடு கோரும் அருந்ததியர்

  • மனித கடத்தல் குழுக்களின் கேந்திரமாக இந்தியா-ஐநா கவலை :
    மனித கடத்தலை தடுப்பதற்கான ஐநா மன்றத்தின் புதிய முன் முயற்சி ஒன்று இந்திய தலைநகர் புது தில்லியில் துவங்கப் பட்டுள்ளது. போதை மருந்துகள் மற்றும் குற்றச்செயல்களை கண்காணிக்கும் ஐநா மன்ற அலுவலகத்தின் மதிப்பீட்டின்படி, உலக அளவில் பல பத்து லட்சக்கணக்கான பேர், பலவந்தமாக பாலியல் தொழில் மற்றும் அடிமைத்தொழில் செய்யும்படி வற்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பலர் சிறார்கள் என்றும், இவர்கள் மூலம் 32 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான வருடாந்த வருமானம் ஈட்டப்படுவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆட்கடத்தல் பிரச்சினை தெற்காசிய பிராந்தியத்தில் மிகப்பெரிய அளவில் நடப்பதாக தெரிவிக்கும் ஐநா மன்றம், தென்கிழக்கு ஆசியாவில் நிலைமை இதைவிட மிகவும் மோசமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்த வியாபாரத்தின் முக்கிய கேந்திர இடமாக இந்தியா திகழ்வதாக ஐநா மன்றம் தெரிவித்திருக்கிறது. இங்கிருக்கும் அமைப்பு ரீதியாக செயல்படும் குற்றக் குழுக்கள், பெண்களை யும் குழந்தைகளையும் இந்தியாவுக்கு உள்ளேயும், அதன் அண்டை நாடுகளான வங்க தேசம் மற்றும் நேபாளத்திலிருந் தும் கடத்தி வியாபரம் செய்வதாக கூறியிருக்கிறது
  • உள் ஒதுக்கீடு கோரும் அருந்ததியர் : இந்திய தலித்துகள்தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான 18 சதவீத இட ஒதுக்கீட்டில், ஆறு சதவீதத்தை தாழ்த்தப்பட்டவர்களில் ஒரு பிரிவினரான அருந்ததியினருக்கு தனியான உள் ஒதுக்கீடாக அளிக்க வேண்டும் என்று, ஆதித் தமிழர் பேரவை என்கிற அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது
  • உலக அளவில் மரண தண்டனையை நீக்குமாறு ஐரோப்பிய அமைப்பு கோரிக்கை : போலந்து நாட்டின் எதிர்ப்புக்கு மத்தியில், ஐரோப்பா எங்கிலும் மரண தண்டனைக்கு எதிரான தினமாக புதன்கிழமை அனுட்டிக்கப்படும் நிலையில், ஐரோப்பிய குழு என்னும் மனித உரிமை அமைப்பு, உலக மட்டத்தில் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளது
  • பாதுகாப்பு செலவினத்தை 20 சதவீதத்தால் அதிகரிக்க இலங்கை அரசு உத்தேசம் : இலங்கை அரசாங்கம் தனது அடுத்த வருடத்துக்கான பாதுகாப்பு செலவினங்களை 20 வீதத்தால் அதிகரிக்க உத்தேசித்துள்ளது
  • மலேஷியாவின் முதல் விண்வெளி வீரர் வானில் பறந்தார் : மலேஷியாவின் முதல் விண்வெளி வீரர் இன்று வானில் பறந்தார்
    மலேஷியாவின் முதல் விண்வெளி வீரர், கஜகஸ்தானிலிருந்து இன்று விண்ணுக்கு பறந்திருக்கிறார். சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடத்துக்கு அவர் சென்று கொண்டிருக்கிறார்

October 09, 2007

ஏன் ஒரு பெண் தன் கணவனுக்குத் துரோகம் செய்கிறாள்?

நெடுநாட்களாய் என் மனதுக்குள் ஒளிந்துகிடந்த நெருடலை இங்கே பதிவு செய்கிறேன்.
இரவு, பகல் பாராமல் வெளிநாடு, வெளிமாநிலங்களில் உழைத்துப் பணம் ஈட்டிக் குடும்பத்தைக் காப்பாற்றும் கணவருக்குத் துரோகம் செய்யத்துணியும் மனைவியரைப் பற்றிய கட்டுரை இது. சற்று முரண்பாடான விசயம்தான். அதே சமயம் உணர்ச்சிப்பூர்வமானதும்கூட. கலாசாரம் சம்பந்தப்பட்டது. என்னதான் நாம் பண்பாடு, கற்பு, தனிமனித ஒழுக்கம் இவைபற்றியெல்லாம் பேசினாலும் ஏராளமானோர் வாழ்க்கையில் நடைபெறும் இந்தத் துரதிஷ்டவசமான நிகழ்வுகள் அன்றாடம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதற்கு முதல் காரணம் நமது வீட்டு அமர்வறை (ஹால்)வரை வந்துவிட்ட தொலைக்காட்சிதான் முக்கியப் பகுதியை எடுத்துக்கொள்கிறது. இந்தக் கட்டுரையில் சில உண்மைச்சம்பவங்களின் பிரதிபலிப்பு இருப்பதை என்னால் மறுக்கமுடியாது. சிலர் மனதளவில் பாதிக்கப்பட்டு இந்தியாவுக்கே திரும்பி வராமல் தன் தாய், தந்தையர், மனைவி, குழந்தைகள், உடன் பிறந்தவர்கள், சுற்றத்தார் போன்றவர்களின் மரணத்திற்குக் கூட வராமல், விரக்தியுற்று அவர்கள் பணிபுரியும் வெளிநாடுகளிலேயே வாழும் எத்தனையோ நண்பர்களை நான் அறிவேன். இது எல்லோருக்கும் பொருந்துவதல்ல. என்னைப்பொருத்தவரையில் ஒரு 25 - 30 சதவிகிதம் இங்ஙனம் நடக்கிறது என்பதை என்னால் உறுதியாகச் சொல்லமுடியும்.

சில நண்பர்கள் வெட்கத்தைவிட்டுச் சொல்லி அழுததை இங்கே வேதனையோடு நினைத்துப்பார்க்கிறேன். எந்தச் சூழ்நிலையிலும் இந்த விசயங்களை வெளியில் வேறுயாரிடமும் சொல்லக்கூடாதென்று என்னிடம் வேண்டிக்கொள்ளும்போது நான் ஆயிரம் முறை செத்திருக்கிறேன். அவர்களின் மனப்போராட்டத்தை அதே அலைவரிசையில் அனுபவித்து அவர்களோடு சேர்ந்து நானும் கண்ணீர் வடித்திருக்கிறேன். எப்படி என்னிடம் சொன்னார்கள் என்று நீங்கள் கேட்கலாம். ஒன்றும் மாயமோ, மந்திரமோ இல்லை. அது என் வேலையும் இல்லை. நான் எல்லோரிடமும் நன்றாகப் பேசுவேன். எப்போதும் கலகலப்பாக இருப்பேன். எளிதில் எனக்கு நண்பர்கள் கிடைத்துவிடுவார்கள். இது சில வேளைகளில் அபத்தமாகவும் முடிந்ததுண்டு. அவ்வாறு நான் எல்லோரிடமும் அன்பாகப் பழகும்போது, அவர்கள் என்னிடம் பேசினால் சற்று மனதுக்கு ஆறுதலாக இருப்பதாகவும், கவலை மறந்து சிரிப்பதாகவும் சொல்வார்கள். பிறகு அப்படியென்ன உங்களுக்குக் கவலை என்று எதார்த்தமாகக் கேட்டால், சந்தர்ப்பம் வரும்போது பேச ஆரம்பித்து, பிறகு தன் சோகக்கதைகளைச் சொல்லி வேதனைப்படுவார்கள்.

அவர்களோடு நானும் சேர்ந்து அவர்களுக்காகக் கண்ணீர் விட்டதுண்டு. மனித மனம் எவ்வளவு இதமானது? பாவம்? அது எப்படியெல்லாம் வேதனைப்படுகிறது? ஒரு சின்ன ஏமாற்றத்தைக்கூடத் தாங்கிக்கொள்ளமுடியாமல் அது தவிக்கும்போது அது தேடும் தேடலை யார் உணர்ந்து மருந்திடுகிறார்களோ, ஆறுதலாக நான்கு வார்த்தைகள் கூறுகிறார்களோ அவர்கள் தெய்வத்திற்குச் சமமாகத் தெரிவார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. அப்படித் துன்பப்படுகிறவர்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் போசும்போது அவர்களின் சுமை பாதியாகக் குறைவதோடு, நமது மனமும் எவ்வளவு இலகுவாகிறது என்பதை நான் உண்மையாகவே உணர்ந்திருக்கிறேன். இன்னும் அந்தப்பணியைச் செய்துகொண்டுதான் இருக்கிறேன். இன்னும் செய்வேன்.

ஏன் ஒரு பெண் தன் கணவனுக்குத் துரோகம் செய்கிறாள்? எப்படி அவள் அந்த நிலைக்குத் தள்ளப்படுகிறாள் என்பதுதான் இங்கே பிரச்சினை. சாதரணமாகப் பெண்களும் ஆண்களும் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொள்கிறார்களா? இது யார் குற்றம்? போன்ற ஆராய்ச்சிக்கு நான் வரவில்லை. வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் வசிக்கக்கூடிய நம் அப்பாவி இந்தியச் சகோதரர்கள் சந்திக்கும் பிரச்சினையை நான் இங்கே எனக்குத் தெரிந்த கோணத்தில் உங்கள் முன் வைக்கிறேன்.

முக்கியக் காரணம் அவர்களுக்கு குடும்ப அந்தஸ்து, அதாவது குடும்பத்தோடு வசிக்க அந்த நாடுகளில் அனுமதி கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் பெண்கள் அதிகபட்சம் தன்னைப் பர்தாவால் மூடிக்கொண்டுதான் (சவூதியில் நூறு சதவிகிதம்)வெளியே வரவேண்டும். தனியாகப் பெண்கள் வெளியே வர அனுமதியில்லை. அங்கு நமது பெண்களுக்கு வேலைவாய்ப்புக்களும் குறைவு. இது நம் இந்தியப்பெண்களுக்குச் சாத்தியப்படாது. தனியாக மனைவியை வீட்டில் இருக்க வைத்துக் கணவன் மட்டும் அலுவலகம் செல்வது பாதுகாப்பானதாக இருக்காது. மேலும் முக்கியக் காரணம் வளைகுடா நாடுகளில் ஊதியம் மிகக்குறைவு. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது ஒரு ஆண்மகன் என்ன நினைக்கிறான்? தான் சிரமப்பட்டாலும் பரவாயில்லை, நமது சந்ததிகள், நம்மைச் சேர்ந்தவர்கள் நிம்மதியாவும் சந்தோசமாகவும் இருக்கட்டும் என்கிற தியாக மனப்பான்மையில் அனைத்தையும் அர்ப்பணித்துவிட்டு அயல்நாடு தேடிச் செல்கிறான்.


மேலும் சாதாரணத் தொழிலாளி மற்றும் இடைநிலைப்பதவியில் இருக்கும் நண்பர்களுக்கு விடுமுறை என்பது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறைதான். அப்படிக் கிடைத்தாலும் அதிகபட்சம் ஒரு மாதம், விரும்பினால் ஊதியமற்ற விடுமுறையாக ஒரு பதினைந்து நாட்கள் எடுத்துக்கொள்ளலாம். ஆகமொத்தம் 45 நாட்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளமுடியும். இதில் அவன் என்ன செய்வான். அப்படிக் கஷ்டப்பட்டு, அங்கு வீசும் பேய்த்தனமான மணற்புயலில் தன் வாழ்நாட்கள் முழுமையும் இழந்து தவிக்கிறான். அந்தச் சகோதரனுக்கு இல்லறம் என்பது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொலைபேசியில் மட்டுமே நடக்கிறது. கொஞ்சும் மகனும் மகளும் 'அப்பா! எப்பப்பா வருவீங்க?' என்று கேட்கும்போது அவன் இதயம் சுக்கு நூறாய் வெடித்துச் சிதறும், ஆனாலும் அதற்குள் இருந்த தொகை தீர்ந்துவிடுமே என்று அனைவரிடமும் இரண்டொரு வார்த்தைகள் பேசிக் கடைசியாகக் கண்ணீரோடு காத்திருக்கும் மனைவியிடம் போன் கைமாறும்பொது "கட்" ஆகிவிடுகிறது. மறுபடியொரு வெள்ளிக்கிழமைக்காக என் சகோதரி இங்கே விரதம் இருக்கவேண்டும். இப்படியெல்லாம் உணர்வுகளைச் சாகடித்து வாழும் எனதருமைச் சகோதரன் அங்கு வீசும் மணற்புயலில் பாதி உயிரோடுதான் அலைகிறான்.

மணற்புயல் என்றால் அது மரணப்புயல்தான், சாலையில் நடந்து செல்கிற இந்தியனைக் கண்டால், காரில் செல்லும் இந்திய நண்பர்கள் வேகமாகச் சென்றுவிடுவர். ஆனால் மற்ற எந்த நாட்டு நண்பர்களும் அப்படிச் செல்லமாட்டார்கள். நின்று அவர்களையும் ஏற்றிக்கொண்டுதான் செல்வர். நாமெல்லாம் பாரம்பரியம் மிக்க இந்தியப் பிரஜைகள் என்று மார்தட்டிக்கொள்ளலாம். சரி அது போகட்டும்! மாதம் முழுவதும் ரத்தம் சிந்தித் தன் குடும்பத்துக்குத் தேவையான பணத்தை அனுப்பக்கூட அங்கு அவ்வளவு சிரமப்படவேண்டும். அங்கு அந்த நாட்டு குடிமக்களுக்கே முன்னுரிமை. நாம் எத்தனை பேர் வரிசையில் நின்றாலும், அவர்கள் நேராக வங்கிக் காசோலைக் கவுன்டருக்குச் சென்று காசோலை பெறும் தைரியம் அவர்களுக்குண்டு. நாம் அங்கு எதுவும் பேசமுடியாத ஊமைகளாக்கப்படுவோம். இது அங்கு வாழும் ஒவ்வொருவரும் சந்திக்கும் வெட்கப்படவேண்டிய உண்மை. அப்படியே அனுப்பும்போது காசோலையில் எழுத்துப்பிழையிருந்தால்கூட ஏதாவது நாம் கேட்டால் வங்கியிலிருந்து வெளியில் அனுப்பப்படுவோம். காரணம் அவர்களுக்கு ஆங்கிலமோ வேறு மொழியோ தெரியாது. அவர்களுக்கு அது அவசியமும் இல்லை. அவர்கள் தாய்மொழி மட்டுமே பேசுவார்கள். அதன்மீது அதீதப்பற்றுக் கொண்டவர்கள்! வெளிநாட்டவர்களைக் கண்டால் வரிந்துகட்டிக்கொண்டு வேண்டாத பதிலையும், கேட்காத உதவிகளையும்கூட முன்னின்று செய்வதற்கு அவர்கள் இந்தியர்களா என்ன?

சரி! இப்படியெல்லாம் வாழ்க்கையையே அடமானம் வைத்து உழைத்து ஓடாகி இரண்டு வருடங்களுக்கொருமுறை வீட்டுக்கு வந்தால், இங்கு சகோதரிகளின் லீலைகள் அப்பப்பா! அங்கு படும் வேதனைகளனைத்தும் தெரிந்தே கணவர்களுக்குத் துரோகம் செய்யும் மனைவிப் பத்தினிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். நாளடைவில் இது அவனுக்குத் தெரிய வரும்போது, நொந்து நூலாகி, செத்துச் சுண்ணாம்பாகி வேதனையோடு திரும்பவும் அந்த நாட்டுக்கே சென்றுவிடுகிறான். போகப்போக விரக்தியின் உச்சத்தில் இவனும் அங்கு தவறு செய்ய ஆரம்பித்து விடுகிறான். அதற்கும் அங்கு வாய்ப்புக்கள் அதிகம். ஆனால் வெளியில் தெரிவதில்லை.

குறிப்பாக சவூதி அரேபியா போன்ற நாடுகளில் வாழும் நண்பர்கள் தவறு செய்வது மறைமுகமாக வைக்கப்பட்டுள்ளது. துபாய் போன்ற நாடுகளில் சற்றுச் சுதந்திரமாகத் தவறு செய்கிறான். இவ்வாறு வேதனை அனுபவிக்கும் நண்பர்கள் இருபத்தைந்து சதவீதம் இருக்கிறார்கள். இரண்டு வருடத்திலிருந்து ஐந்து வருடம் அங்கு இருக்கலாம் என்று செல்லும் என் பாவப்பட்ட இந்தியத் தோழன், ஐந்து வருடங்கள் பூர்த்தி செய்யும்போது குடும்பத்தில் தன்னிறைவு அடைகிறான். எனக்குத் தெரிந்து எத்தனையோ நண்பர்கள் விடுமுறைக்கு ஊருக்குச் செல்லாவிட்டால் ஒரு மாதச் சம்பளம் அதிகமாகக் கிடைக்கும் என்றும், பாதி விடுமுறையை ஓவர்டைம் பார்த்துச் சாம்பாதிக்கலாம் என்றும் விடுமுறைக்கே வராமல் பணம் அனுப்பியிருக்கிறார்கள். அவர்களுடைய உணர்வுகள், தேவைகள், ஏக்கங்கள் அங்கே சாகடிக்கப்படுகின்றன.

கடன்கள் அடைபட்டு விடுகிறது. பிள்ளைகள் நல்ல பள்ளிகளில் சேர்க்கப்பட்டு ஒரு தரமான கல்வி அவனால் கொடுக்கப்படுகிறது. அதுவரை கணவனை நினைத்து, வேதனைப்பட்டும், கடன், குடும்பச் சுமை இவற்றை நினைத்து கவலைப்பட்டும் காலம் கடத்துகிறார்கள் நமது சகோதரிகள். கணவனின் பிரிவும், குடும்பச் சுமைகளும், கடன்களும் தவிர வேறு விதமான தவறான எண்ணங்கள் அவளுக்குள் வருவதற்கு வாய்ப்புக்கள் குறைவு. ஆனால் ஒரு ஐந்து வருடங்கள் ஆகும்போது ஓரளவு எல்லாப்பிரச்சினைகளும் தீர்ந்து நிம்மதிப் பெருமூச்சு விடும் நேரத்தில் வீட்டில் தேவையான தொலைக்காட்சி, கேபிள்இணைப்பு, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், குளிர்சாதனம் போன்றவையெல்லாம் நிறைந்த ஒரு அத்யாவசியம் கலந்த ஆடம்பர நிலைக்கு வந்துவிடுகிறது அந்தக் குடும்பம். அனைத்து அடிப்படை வசதிகளும் தன்னிறைவு பெற்றுவிடுகின்றன. கவலைப்பட அவ்வளவாக விசயம் இல்லை. சகோதரிகள் சந்தோசமாக இருக்கவேண்டுமென்று சகோதரன் ஒவ்வொரு முறை வெளிநாட்டிலிருந்து வரும்போதும், அவன் அங்கு கற்றுக்கொண்ட சில நல்ல விசயங்களையும், அதே சமயத்தில் நமது கலாச்சாரத்திற்கு ஒவ்வாத சில தகாத செயல்களையும், வெளி உலகம் தெரியாத மனைவிக்கு அறிமுகப்படுத்துகிறான். வசதிகள் பெருகப் பெருகத் தேவைகள் நியாயங்களாகி மீண்டும் சில வருடங்களாவது அங்கு சம்பாதிக்கலாம் என்ற ஒரு நல்ல நோக்கத்தில் மறுபடியும் செல்கிறான். ஆனால் குடும்பத்தேவைகள், பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து சகோதரிகள் எதைப்பற்றியும் சிந்திக்கவோ, கவலைப்படவோ அவசியமில்லாததால், மனம் உல்லாசத்தைத் தேடுகிறது. எல்லாம் நிறைந்த சொகுசான வீட்டில் இல்லாத ஒன்று என்றால் ‘அது’ மட்டும்தான். அந்தத் தேவைக்காக இன்னொருவரும் வந்து சொகுசாக நுழைந்து கொள்கிறார். எனவே பெண்மணிகள் சுலபமாக இதுபோன்ற தவறுகள் செய்யத்துணிகின்றனர்.


இதுவே பல வெளிநாடுகளில் இருக்கக்கூடிய நண்பர்களுக்குப் பழகிப்போய், எல்லாவற்றையும் தனக்குள்ளேயே போட்டு விழுங்கி, ஒரு நடைபிணமாக ஒவ்வொரு விடுமுறைக்கும் இங்கு வந்து செல்கிறான். வேறு வழியில்லாமல் இந்த வாழ்க்கையையே ஏற்றுக்கொள்ளக்கூடிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படுகிறான். வேறு என்ன செய்யமுடியும்? ஏனெனில் தன் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக அவன் அதைத் தெரிந்தும் தெரியாதவன் போல், ரணமான மனதைக் கல்லாக்கி அந்தக் கொடுமையை ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு சூழ்நிலைக்கைதியாகிவிடுகிறான். ஆனால் இதையெல்லாம் பார்த்து வளரும் குழந்தைகள் மனதில் இவை பசுமரத்தாணிபோலப் பதிந்து விடுகிறது. வாய்ப்புக்கள் ஏற்படும்போது அந்த இளம் பிஞ்சுகளும் திசை மாறிப்போகும் கொடூரம் நடக்கத்தான் செய்கிறது. அங்கே கற்பும், கலாசாரமும் என்ன செய்யமுடியும்? தன் பங்கிற்குத் தவறை நியாயப்படுத்தும்! அவ்வளவே! என்னுடைய கோணத்தில் மட்டுமல்ல, எவருடைய கோணத்திலும் இது தவறுதான். ஆனால் மனிதன் இந்தச் சூழ்நிலைக்குத் தள்ளப்படுவதற்குக் காரணம் பொருளாதாரத் தன்னிறைவும், தொலைக்காட்சி போன்ற வெளியுலகத் தொடர்புகளும்தான். இவற்றைச் சரியான அலைவரிசையில், கோணத்தில் புரிந்துகொண்டு நல்ல வாழ்க்கை நடத்தும் தோழிகளை நாம் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

நான் சொல்லும் இந்தக் கருத்துக்களுக்குச் சிலர் மறுப்புத் தெரிவிக்கலாம். இது உங்கள் கோணத்தில் சற்று மாறுபடலாம். ஆனால் நான் இங்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்தக்கட்டுரையின் பின்னனியில் ஏராளமான உண்மைச்சம்பவங்கள் ஒளிந்துகிடக்கின்றன என்பதை ஒளிவு மறைவின்றி உங்கள் முன் வைக்கிறேன். தாராளமாக உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் அவற்றை இங்கே பதிவு செய்யலாம்.

- நவநீ