June 29, 2008

"எல்லாம் பதவி சுகம்தான்" - தோலுரிக்கிறார் அன்னாடங்காச்சி

பல்லக்கைத் தூக்கிக்கொண்டு போவது சுகமா...? பல்லக்கில் ஏறிப்போவது சுகமா...? என்னப்பா கேள்வி இது? ஏறிப்போவதுதான் சுகம். திராவிடக் கட்சிகளுக்கு இரண்டுமேசுகம்தான்... எப்படி? மத்திய அரசாங்கத்தின் ஓட்டைப்பல்லக்கைத் தூக்கிக்கொண்டுசுகமாக ஓடிக்கொண்டிருக்கிறார்களே!
எல்லாம் பதவி சுகம்தான். மத்தியில் எந்த ஆட்சி வந்தாலும் 'எங்கள் பெயரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்' என்கிறார்கள். தமிழ்நாட்டில் பல்லக்கு சவாரி. சுகமான சவாரி. யார் வேண்டுமானாலும்சுமக்கலாம். ஏறிக்கொள்ள இடமில்லை. சுமக்கிறவர்களுக்கு சுமக்கிற சுகம் மட்டுமே. சண்டித்தனம் செய்தால் 'டூ' பணக்காரன் பொன்னை எடுக்கணும்னா பாட்டாளியோட கடப்பாரைதானே வேண்டியிருக்கு? பாராட்டு மொழிகளுக்கு அகலத் திறந்துகொள்ளும் செவிகள் குற்றச்சாட்டுகளுக்குஅடைத்துபோய்விடுகிறது. கொள்ளுக்கு வாயைத்திறக்கும் குதிரை கடிவாளத்திற்கு இறுக மூடிக்கொள்கிறது. இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கிடைக்கிறது. வேலைக்குப்போகவேண்டுமென்று அவசியமில்லை. சுகமாக சாவடியில் படுத்து தூங்கலாம். விளைவு. விவசாய வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை. ஆங்காங்கே குளங்களில் மராமத்து நடந்திருக்கிறது. நீர் நிலைகள் நிரம்பிக்கொண்டிருக்கின்றன. விவசாயிகள் மத்தியில் நம்பிக்கை இருக்கிறது. விதையுடன் நம்பிக்கையையும் விதைக்கிறார்கள் இந்த ஆண்டு உணவுக்கு உத்திரவாதம் தெரிகிறது. இந்த சந்தோஷத்தை தூக்கிச் சாப்பிட்டுவிடும் ஒருபிரச்சினை முளைத்திருக்கிறது. உரத்தட்டுப்பாடு. இது செயற்கையான தட்டுப்பாடு. அரசியல்வாதிகள்தான் காரணம் என்கிறார்கள் விவசாயிகள். டிஏபி உரத்தின் மானிய விலை ரூ 486. ஆனால் கிடைக்கவில்லை. தனியாரிடம் ரூ 700-க்கு தாராளமாக கிடைக்கிறது. அரசுபத்தாயிரம் கோடி ரூபாய் உர மானியம் கொடுக்கிறது. கிராம அளவில் உள்ள உரவியாபாரிகளும் கந்து வட்டிக்காரர்களும் மானிய விலையில் விற்கப்படும் உரத்தைவிவசாயிகளின் பெயரில் கைப்பற்றி அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபமடிப்பதாகசெய்திகள். கிராமப்புறங்களில் விவசாயிகளுக்கு அதிக வட்டிக்கு கடன் கொடுப்பவர்கள்பெரும்பாலும் நெல்மண்டி அதிபர்களாகவோ, உர வியாபாரிகளாகவோ இருப்பார்கள். இவர்கள்விவசாயிகளுக்கு கடன் கொடுக்கும்போது கடனுக்கான வட்டியை கழித்துக்கொண்டு மீதிக்குஉரங்களைக்கொடுத்து விடுவார்கள். அறுவடை நேரத்தில் கடனுக்கு ஈடான தொகையை நெல்லாகவாங்கிக்கொள்வார்கள். ஒவ்வொரு பரிமாற்றத்திலும் லாபம் பார்ப்பார்கள். இதில் ஈடுபடும் தனிநபர்கள் எல்லோருமே அரசியல்வாதிகளாகஇருப்பதுதான் நாம் கவனிக்கவேண்டிய விசயம். மத்தியிலோ மாநிலத்திலோ எந்தக்கூட்டணி முறிந்தாலும் இவர்களின் கூட்டணி மட்டும் முறிந்துபோகாது.
விவசாயிகளின் பெயரில் உரங்களை வாங்கி பதுக்கும் துணிவு அரசியல் தொடர்பினால் ஏற்பட்டுவிடுகிறது. தமிழக அரசு விரைவாக செயல்படவேண்டும்.

அன்னாடங்காச்சி எழுதிக்கொண்டிருக்கும்போது வீட்டிற்குள்பேச்சுக்குரல் கேட்டது. அவரது மனைவிக்கும் விருந்தாளியாக வந்த நாத்தனாருக்கும் உரையாடல் நடந்து கொண்டிருந்தது.

"காலைலே ஆறு மணிக்குபோயிடும்."
"அடக்கடவுளே! அப்புறம் எப்பவரும்?"
"எட்டு மணிக்குவந்திடும்."
"சரிதான்.ரெண்டுமணிநேரம்தானே?"
"ம்ஹும்..அப்புறம் மறுபடியும்பத்துமணிக்கு போயிட்டு..."
".....போயிட்டு..."
"பன்னிரண்டு மணிக்குவந்திடும்"
"பாழாப்போச்சு...போ..."
"மறுபடியும் நாலுமணிக்கு போயிட்டுஆறுமணிக்கு வந்திடும்."
"அப்புறம் ராத்திரி எட்டுமணிக்குபோயிட்டு ஒன்பது மணிக்கெல்லாம் வந்திடும்."
"இது தேவலையே... எங்க ஊர்ல எப்போநிறுத்துவான் எப்போ விடுவான் என்கிற கணக்கெல்லாம் இல்லே. நின்னுபோன கரண்டு திரும்பிவந்தாத்தான் நிச்சயம்"

"ஏங்க...தமிழ்நாட்டிலே கரண்டு பிரச்சினை இப்படி இருக்கறப்போநீங்க அதெ கவனிக்காம சிடி போட்டுக்கேட்கப்போய் ஜனங்க கவனமெல்லாம் அதிலேபோயிட்டுதுங்க"

"அடுத்த வருடமாவது கரண்டு பிரச்சினெயெ தீர்க்கப்பாருங்க."
"கரண்டு பிரச்சினையில தலை உருளற மாதிரி உரப்பிரச்சினையிலேயும் தலை உருளாம பாத்துக்குங்க!"

- அன்னாடங்காச்சி

நாட்டுக்காக போராடிய ஹீரோக்களுக்கு நமது நாட்டில் மதிப்பில்லை

பாகிஸ்தான் போரில் இந்தியாவுக்கு வெற்றித் தேடித்தந்த முன்னாள் ராணுவத் தலைமை தளபதி பீல்டு மார்ஷல் மானக்ஷாவின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி, பிரதமர், வி.ஐ.பி அரசியல்வாதிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. ஆனால் வங்கதேச முப்படைத் தளபதிகள் மட்டும் நன்றி மறக்காமல் தங்கள் நாட்டின் விடுதலைக்கு காரணமான மானக்ஷாவுக்கு நேரில் இறுதி அஞ்சலி செலுத்தினர். இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த 1971-ம் ஆண்டு போர் நடந்தபோது இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக இருந்தவர் ஜெனரல் மானக்ஷா. இவர் வகுத்த போர் யுத்திகள்தான், பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிடம் சரணடைய வழிவகுத்தது. அப்படி நாட்டையே காப்பாற்றிய ராணுவ தளபதி மானக்ஷா தனது 94 வயதில் நேற்று முன்தினம் இறந்தார்.

நியாயப்படி பார்த்தால் முன்னாள் ஜனாதிபதியோ, பிரதமரோ இறந்தால் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தைவிட இவருக்கு அதிகமாகவே கொடுத்திருக்கவேண்டும். ஆனால், மானக்ஷாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள் உட்பட எந்த அரசியல் வி.ஐ.பி.க்களும் நேரில் வரவில்லை.

ஏன், நமது நாட்டின் முப்படைத் தளபதிகள் கூட இதில் கலந்து கொள்ளாததுதான் வருத்தம் அளிக்கும் விஷயம்.

தரைப்பட தளபதி ரஷ்யா சென்றுள்ளதால், அவரால் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாததற்கு காரணம் கூறலாம். ஆனால் கடற்படை தளபதி சுரேஷ் மேத்தா, விமானப்படை தளபதி மேஜர் ஆகியோர் டெல்லியில்தான் இருந்தனர். அவர்கள் நேரில் வராமல் தங்கள் சார்பில் மலர்வளையம் வைக்க தனக்கு கீழ்நிலையில் உள்ள அதிகாரிகளை அனுப்பிவைத்து விட்டனர். ராணுவ இணையமைச்சர் பள்ளம் ராஜூ மட்டும் இந்தியா சார்பில் இறுதி அஞ்சலி செலுத்தினார். மற்றவர்கள் சார்பில் மலர்வளையம் மட்டுமே வைக்கப்பட்டது.

வங்கதேச விடுதலைக்கு இந்திய ராணுவ தலைமை தளபதி மானக்ஷா காரணமாக இருந்தார் என்பதற்காக அந்த நாட்டின் முப்படை தளபதிகள் சமீன், அலீம் சித்திக்தி ஆகியோர் நேரில் ஆஜராகி மானக்ஷாவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இவர்களின் நன்றி உணர்வு கூட, சொகுசு வாழ்க்கையில் புரளும் நம் நாட்டு வி.ஐ.பி.க்களுக்கு இல்லாமல் போனதுதான் வேதனை. பேருக்கு இரங்கல் செய்தியை வெளியிட்டுவிட்டு கண்டுகொள்ளாமல் பலர் இருந்து விட்டனர்.

அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஆட்சியை கவிழாமல் காப்பாத்துவது எப்படி என்ற தீவிர ஆலோசனையில் டெல்லி வி.ஐ.பி அரசியல்வாதிகள் இருந்துவிட்டனர். அவர்களே செல்லாதபோது நாம் ஏன் செல்ல வேண்டும் என மற்றவர்கள் இருந்து விட்டனர்.

இது குறித்து ராணுவ பிரிகேடியர் ஒருவர் கூறுகையில், "நாட்டுக்காக போராடிய ஹீரோக்களுக்கு நமது நாட்டில் மதிப்பில்லை. 25 ஆண்டுகளுக்கு முன் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வென்ற அணியினருக்கு இப்போது விழா கொண்டாடி மதிப்பளிக்கப்படுகிறது. ஆனால் நாட்டை காத்த உண்மையான ஹீரோக்களை போருக்கு பின் மறந்து விடுகிறார்கள்" என்றார்.

June 24, 2008

அன்னாடங்காச்சி!

"அடியே! உன்னோட குடும்பம் நடத்த என்னாலெ ஆகாது. நான் சந்நியாசம் போறேன். வாசலில் சொம்பு இருக்கிறது பார்! எவனாவது லவட்டிக்கொண்டு போய்விடப்போகிறான். சொம்பை எடுத்து உள்ளே வெச்சுக்கோ!"
ஐக்கியமுன்னணி அரசோடு இனிமேல் குடும்பம் நடத்த முடியாதென்று முடிவெடுத்துவிட்ட இடதுசாரிகளுக்கு மதவாதிகள் ஆட்சியைப் பிடித்துவிடக்கூடாது என்கிற கவலை. இந்தியா அமெரிக்காவிடம் அடகு போய்விடக் கூடாதே என்கிற தேசபக்தியாக இருக்கலாம். அல்லது அரசு கவிழ்ந்து போனால் தேர்தல் வரும். 'தேர்தலை சந்திக்கவேண்டுமே' என்ற பயமாகவும் இருக்கலாம். இப்போது தேர்தலை சந்திப்பதுபோல பயங்கரம் ஆளும் கட்சிகளுக்கு வேறு வேண்டியதில்லை.விலைவாசி ஏறிப்போய் பேயாட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் தேர்தல் வந்தால் கோஷங்களுக்கு பதில் சொல்ல திமுக-வால் கூட முடியாது. காங்கிரஸ் எந்த மூலை!

'பக்தவச்சலம் அண்ணாச்சி பருப்பு விலை என்னாச்சி!' என்று திமுக நாற்பது வருடங்களுக்கு முன்னால் கேட்டது. அன்றைக்கு வீழ்ந்த காங்கிரஸ் தமிழ்நாட்டில் இன்றுவரை எழுந்துகூட பார்க்கவில்லை.
'பானா சீனா அண்ணாச்சி பருப்பு விலை என்னாச்சி!' என்று பிஜேபியும் அதிமுகவும் பிய்த்து எடுத்து விடுவார்கள். விலைவாசி உயர்வு என்பது தமிழ்நாட்டில் ஒரு 'சென்ஸிட்டிவ்' பிரச்சினை. ஒருபுறம் இப்போது தேர்தல் வராமல் இருக்க என்ன செய்யணுமோ அதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். 'நீங்க கொஞ்சம் சொல்லுங்க' என்று சென்னைக்கு கூட வந்திருக்கிறார்கள். மறுபுறம் நாட்டில் பணப்புழக்கத்தை குறைக்க என்ன செய்யணுமோ அதையெல்லாம் மத்திய அரசு செய்துகொண்டிருக்கிறது.
குதிரை ஓடிப்போனபிறகு லாயத்தைப்பூட்டும் வேலை இது. விலைவாசி ஏற்றம் 5.5 சதவீதமாக இருந்தபோதே வட்டி விகிதத்தை அதிகமாக்குங்கப்பா..

அத்தியாவசியப் பொருட்களின் மீது யூக வணிகத்தை தடை செய்யுங்கப்பா...என்ற கூக்குரல் இந்தியா முழுவதும் கேட்டது. நிதியமைச்சருக்கு மட்டும் அந்தக்குரல் கேட்கவில்லை.
வட்டியை ஏத்துங்கப்பா...பதுக்கல்காரனும், ஆன்லைன் வியாபாரியும் வியாபாரத்துக்கு பணம் கிடைக்காமல் விலகிப்போய்விடுவான் என்று பொருளாதார நிபுணர்கள் சொன்னார்கள். அந்தக்குரலும் அரசுக்கு கேட்கவில்லை. பொருளாதாரம் இப்படியாகிப்போனது ஒருபுறமிருக்க மத்தியிலும் மாநிலத்திலும் கூட்டணிக்கட்சிகள் குலுக்கிப்போட்ட சோழிகளைப்போல சிதறிக்கொண்டிருக்கின்றன.

மாயாவதி சோனியாவைப் பார்த்து கையசைக்கிறார். இதற்கு அர்த்தம் 'டாட்டா'

முலாயம் சோனியாவைப் பார்த்து கையசைக்கிறார். இதற்கு அர்த்தம் 'ஹலோ'

நம்மூரிலும் சில 'டாட்டா' க்கள். 'பை...பை' கள்.

'ஹலோ' இன்னும் வெளிப்படையாகச் சொல்லவில்லை.

அன்னாடங்காச்சி இதையெல்லாம் படித்துவிட்டு வெறும் சிரிப்பை உதிர்க்கிறார். "சரிதான் போப்பா. எல்லாரும் ஒரே தொழிலில் இருக்கிறவங்க. நீரடிச்சு நீர் விலகாதுப்பா. அப்படியே விலகினாலும் இமயமலைக்கா போகப்போறாங்க. அம்புவிட்ட அர்ச்சுனனும், நெஞ்சுகாட்டி நின்ன துரியோதனனும் பங்காளிங்கதானே! எல்லாம் பேசித்தீத்துக்குவாங்க! அரசியல் செய்யுறவங்க பங்காளியாவும் உறவு முறையாவும் இருக்கறதுதானே நல்லது!

பாம்பின் கால் பாம்புக்குத்தானே தெரியும்! நீ வேணும்னா பாரு! எல்லாம் ஒண்ணா கூடிக்குவாங்க!

ஒருத்தர் சிரிச்சுக்கிட்டே சொல்லுவார் 'நாங்க ரெட்டக்குழல் துப்பாக்கி... தெரியுமில்லே'...!"

மக்கள் டிவி மீது வழக்கு

ரூ.10 லட்சம் நஷ்டஈடு கேட்டு மக்கள் டி.வி. மீது சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட், சென்னை ஐகோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது :-
மக்கள் தொலைக்காட்சியில் புஷ்பராஜ், பாஸ்கரன், மாரியப்பன், ஜெயசங்கர் ஆகியோர் நிகழ்ச்சி தொகுப்பாளராக உள்ளனர். இந்த டி.வி.யில் கடந்த அக்டோபர் மாதம் முதல் என்னை பற்றி அவதூறாக செய்தி வெளியிடப்படுகிறது. நானும், முன்னாள் கலெக்டரும் சேர்ந்து அரசு நிலத்தை பினாமி பெயரில் ஆக்கிரமித்து வைத்திருப்பதாக தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறார்கள்.

கிழக்கு கடற்கரை சாலை வடநெமிலியில் எனக்கு நிலம் கிடையாது. நான் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பும் செய்யவில்லை. எங்களது நன்மதிப்பை களங்கப்படுத்தும் நோக்கில் தவறாக செய்தியை ஒளிபரப்பி வருகிறார்கள். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. ஆகவே, மக்கள் தொலைக்காட்சியும், தொகுப்பாளர்களும் சேர்ந்து எனக்கு ரூ.10 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும். உண்மைக்கு புறம்பான என் தொடர்பான செய்தியை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் இந்த மனுவை விசாரித்தார். இதுபற்றி பதில் தருமாறு மக்கள் டி.வி.க்கு நோட்டீசு அனுப்பும்படி உத்தரவிட்டார். இந்த வழக்கு மீண்டும் அடுத்த மாதம் (ஜுலை) 7-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.

June 19, 2008

இலங்கை தமிழர்களுக்கு தமிழகத்தில் சட்ட விரோதச் சொத்து : கலைஞர்

அகதிகளாக வாழும் இலங்கைத் தமிழர்களில் சிலர், பல்வேறு ஆவணங்களைச் சட்டத்திற்கெதிரான வழிகள் மூலம் பெற்று தமிழகத்தில் சொத்து வாங்குவதில் ஈடுபடுவதாகத் தகவல்கள் அரசின் கவனத்திற்கு வந்துள்ளன. இவைகளைப் பரிசீலித்து, இந்தியக் குடிமகனாக அல்லாதவர் இவ்வுரிமைகளைத் துய்க்க வழி இல்லை என்பதை காவல் துறையும், மாவட்ட ஆட்சியர்களும் உறுதி செய்திட வேண்டும் என கலைஞர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை கோட்டையில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் 2 நாள் மாநாடு இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. மாநாட்டுக்கு முதல் அமைச்சர் கருணாநிதி தலைமை தாங்கினார். தலைமை செயலாளர் திரிபாதி வரவேற்றார்.

அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி, வீரபாண்டி ஆறுமுகம், மற்றும் அமைச்சர்கள், டி.ஜி.பி. ஜெயின், சென்னை போலீஸ் கமிஷனர் சேகர், அனைத்து துறை செயலாளர்கள், மாவட்ட கலெக்டர்கள். ஐ.ஜி., டி.ஐ.ஜி., போலீஸ் சூப்பிரண்டுகள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாநாட்டில் சட்டம்-ஒழுங்கை சீராக அமல்படுத்துவது அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.

முன்னதாக மாநாட்டை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் கருணாநிதி பேசியதாவது :- ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்கும் திட்டத்தை ஆந்திர மாநில அரசு தொடங்கியிருக்கிறது. இப்படி நம்மை, பிற மாநிலங்கள் பின்பற்றுவதற்குக் காரணம், அதனை முறையாக, சரியாக, செம்மையாக நிறைவேற்றி வரும் அரசு அதிகாரிகளான நீங்களும்தான்.

பெரும் திட்டங்களில் ஒவ்வொரு துறையும் தனித்தனியாகச் செயல்படாமல், அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் இத்திட்டங்கள் தாமதப்படாமல், விரைந்து நிறைவேறி மக்களுக்கு நன்மைபயக்கும். இந்த ஒருங்கிணைக்கும் பொறுப்பை நிறைவேற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தங்களது மாவட்டங்களில் நடைபெறும் பெரும் திட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி, தேவைப்பட்டால் அரசுடன் தொடர்பு கொண்டு தடைகளை விரைவில் தீர்த்து வைத்து முன்னேற்றம் காண வேண்டும். தீர்க்க முடியாத சிக்கல்கள் என நீங்கள் கருதும் பட்சத்தில், எந்த நேரத்திலும் என்னையே நேரடியாகத் தொடர்பு கொண்டு தகுந்த அறிவுரைகளைப் பெறுவதற்கும் தயங்க வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு செம்மையாகப் பேணப்பட்டு தமிழகம் அமைதியின் தொட்டிலாகத் திகழ்கிறது என அனைவரும் பாராட்டுகின்றனர்.

இப்பாராட்டு மேலும் பொலிவுபெற வேண்டுமெனில், கடுங்குற்றம் புரிவோர், கூலிப்படையாகிக் கொடுங்குற்றங்களில் ஈடுபடுவோர், பொதுமக்களை அச்சுறுத்தும் சமூக விரோதிகள் ஆகியோரின் போக்கிற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்திட காவல் துறையினர் காலதாமதமின்றி சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொண்டு, பொது மக்களிடையே நம்பிக்கையை வளர்க்க வேண்டும். சில சமூக விரோதிகள், நாடு போற்றும் தலைவர்களின் சிலைகளை அவ்வப்போது சேதப்படுத்தியும் சிதைத்தும் தேவையற்ற சட்டம் ஒழுங்குப்பிரச்சினைகளை உருவாக்கி வருகின்றனர். பொதுமக்களின் அமைதியான வாழ்விற்கு எதிராக, இவ்வாறு செயல்படுபவர்களை இனங்கண்டு, விரைவாகவும் உடனடியாகவும் செயல்பட்டு, அவர்கள் மீது குண்டர்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ், சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களைத் தயாரிப்பவர்கள், விற்பவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றிக் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும், சாலை விபத்துகளைக் குறைக்கவும், விபத்துகள் நேராவண்ணம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வதைத் தடுத்திடச் சிறப்பு நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.

காவல் நிலையங்களுக்குப் புகார் அளிக்க வரும் பொது மக்களைக் கண்ணியமாகவும், மரியாதையுடனும் நடத்திட வேண்டும். மேலும், முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வதில் காலதாமதமோ அலைக்கழித்தலோகூடாது. இந்த அறிவுரைகளின்படி, காவல்துறை பொதுமக்களின் உண்மையான நண்பனாகத் திகழ வேண்டும். சொத்துத் தகராறு, விலை மதிப்பு உயர்ந்துவரும் நில பேரங்கள், நிலமாற்றம் போன்ற உரிமையியல் வழக்குகளிலும், கட்டப்பஞ்சாயத்து போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்களிலும் காவல்துறையினர் எக்காரணம் கொண்டும் ஈடுபடவே கூடாது.

மனித உரிமைகள் எவ்வகையிலும் மீறப்படாமல் காவல் துறையினர் தம்முடைய பணிகளைச் செம்மையாகச் செய்திட வேண்டும். ஒவ்வொருவரும் கடமை உணர்வுடனும், மனித நேய உணர்வுடனும் செயல்பட வேண்டும்.

வகுப்பு வாதமும் சாதிய உணர்வும் தமிழ் மண்ணிலிருந்து வேரோடு ஒழிக்கப்படவேண்டும். பிரச்சினை ஏற்படும் போது தொடர்புடைய அனைவரையும் அழைத்துப் பேசி தீர்வு காண்பது, நல்லிணக்கத்தை நிரந்தரமாக உருவாக்கும். வேலையில்லாத் திண்டாட்டம், போதிய கல்வித் தகுதியின்மை ஆகிய காரணங்களால், தடுமாறும் குணம் உடைய, எளிதில் வயப்படத்தக்க இளைஞர்களையும், பழங்குடி மக்களையும் குறி வைத்து மக்களாட்சியில் நம்பிக்கையில்லாத சில தீவிரவாத அமைப்புகள் தீவிரவாதத்தைத் தமிழ் நாட்டில் வேரூன்ற வைத்து அமைதியைக் குலைக்க முயல்வதாகத் தெரிகிறது. இத்தகைய தீவிரவாத அமைப்புகள் தமிழகத்தில் காலூன்ற எவ்வகையிலும் இடம் கொடுத்திடாமல், காவல்துறை இதனை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிட வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக இலங்கையில் நிலவிவரும் இனக்கலவரம் காரணமாக தமிழ்நாட்டிற்கு இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வரும் நிலை தொடர்கிறது. 31.5.2008 அன்றைய நிலவரப்படி தமிழ் நாட்டிலுள்ள 117 இலங்கை அகதிகள் முகாம்களில் 73 ஆயிரத்து 433 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகத் தங்கியுள்ளனர்.
.
இலங்கைத் தமிழர்களிடம் நாம் பரிவு காட்டும் அதே வேளையில், அகதிகள் என்ற போர்வையில் இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்போரை தமிழகத்தில் ஊடுருவ அனுமதிக்கக் கூடாது என்பதில் காவல் துறை மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும். இலங்கைக் கடற்பகுதியை ஒட்டிய வடக்குக் கடல் எல்லையான மன்னார் வளைகுடா, பாக் நீரிணையிலிருந்து திரிகோணமலை வரை உள்ள பகுதி ராணுவம் சார்ந்த பிரச்சினைக்குரிய மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகிறோம். சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டுவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மீனவர்களிடையே அடிக்கடி மேற்கொள்ள வேண்டும். படகுகளில் செல்லும் மீனவர்கள் அனைவரும் அனைத்து ஆவணங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கனிமொழிக்கு, பைபிள், குரான் பற்றி பேசும் துணிச்சல் உள்ளதா?" - இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன்

பகவத் கீதையை மேற்கோள் காட்டும் கனிமொழிக்கு, பைபிள், குரான் பற்றி பேசும் துணிச்சல் உள்ளதா என இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : பெண்கள் சீரழிந்து கெட்டுப் போவதால்தான் வர்ண ஆசிரம தர்மம் அழிந்து தேவையற்ற சந்ததிகள் பிறக்கின்றனர் என்று பகவத் கீதையில் உள்ளதாக பொருள் சொல்லி இருக்கிறார் கனிமொழி. தந்தையைப் போலவே மகளும் தெரியாத விஷயத்தை பற்றி ஆவேச விளக்கம் சொல்லியிருக்கிறார். கீதையை மேற்கோள் காட்டுவதோ, உபநிஷத்தை, மகாபாரதத்தை, ராமாயணத்தை, பைபிளை, குரானை மேற்கோள் காட்டுவது என்பதோ தடை செய்யப்பட்ட ஒன்றல்ல. உலகத்தின் அத்தனை மரபுகளும், மதங்களும், கோட்பாடுகளும், கொள்கைகளும், இலக்கியங்களும், படைப்புகளும், ஒரு மறுவாசிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதை நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று அறிக்கையில் கனிமொழி குறிப்பிட்டிருக்கிறார். கீதையைக் கூறிய கனிமொழி, பைபிள், குரான் போன்ற நூல்களில் மறுவாசிப்புக்கு உள்ளாக்கப்பட்டி ருக்கும் உதாரணங்களைக் கூறத் தயாரா? அப்படி மேற்கோள் காட்டினால் அவரை துரத்தி, துரத்தி, துரத்தி விரட்டி மன்னிப்பு கேட்க வைத்திருப்பார்கள். அல்லது வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின் போல நாடு கடத்தி இருப்பார்கள். முதலமைச்சரின் மகள் என்ற திமிரோடு பேசுவதை கனிமொழி நிறுத்திக் கொள்ளவேண்டும். கனிமொழிக்கு தைரியம் இருக்குமேயானால் பகவத் கீதை பற்றி விஷயம் தெரிந்தவர்களோடு விவாதிக்க தயாரா? அப்படியானால் அவருக்கு வசதியான தேதி, பொது இடம் குறிப்பிடட்டும்.

June 18, 2008

தசாவதாரம் - திரை விமர்சனம்

தமிழ்த் திரையுலகின் தரத்தை உலக அளவில் உயர்த்தி, ஹாலிவுட் படங்களுக்கு இணையாக (ஏன் அதற்கே சவால்விடும் அளவிற்கு) தொழில்நுட்ப பிரமாண்டத்தை மூன்று மணிநேரத்தில் நம் நரம்புகளில் ஊடுருவச் செய்கிறது தசாவதாரம். கமலின் கனவுக் கதையை நிஜத்தில் நமக்கு பத்து பாத்திரங்கள் மூலம் கத்துவாரியாக பின்னப்பட்ட (ஹாலிவுட்டில் ஹேடொமன் பாணி) திரைக்கதையை அமைத்து இயக்கி இருக்கும் ரவிக்குமாருக்கும், தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கும் நூறு சபாஷ்.
நடிப்பு : கமலஹாசன், அசின், மல்லிகா செராவத், ஜெயப்ரதா, நாகேஷ், நெபோலியன், சந்தான பாரதி
இயக்கம் :
கே.எஸ்.ரவிக்குமார்
இசை : ஹிமேஷ் ரேஷமியா
தயாரிப்பு : ஆஸ்கார் ரவிச்சந்திரன்

சிறப்பு விருந்தினர்களாக கலைஞர் கருணாநிதி, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அமர்ந்திருக்க, விஞ்ஞானியான கோவிந்த ராஜு (கமல்) நேரு ஸ்டேடியத்தில் அலைகடலென கூடியிருக்கும் மக்கள் கூட்டத்தில் சக்திவாய்ந்த ஒரு சிலையைப் பற்றி பேசுகிறார். உடனே நம்மை பன்னிரெண்டாம் நூற்றாண்டிற்கு அழைத்துச் செல்கின்றனர். ரங்கனாதரின் சிலையை அகற்ற வந்த சிவ பக்தனான ராஜா குலோதுங்க சோழனின் (நெப்போலியன்) படை வீரர்களுடன் சண்டையிடுகிறார் ரங்கராஜன் நம்பி(கமல்). ராஜா "சிவாய நமஹ" என ஓத ஆணையிட்டும் கூற மறுத்த நம்பி "ஓம் நமோ நாராயணா" எனக் கூற சிலையோடு ஜலசமாதி அடைகிறார். நெப்போலியன் மற்றும் கமல் பரிவாரத்திடையே நடக்கும் உரையாடல் நேராக நம் நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சும் என்பதில் சந்தேகமில்லை. முற்காலத்தில் இருந்த சைவ-வைஷ்ணவ பிரச்சனையின் வேகத்தை நம் கண்முன் நிறுத்தியுள்ளார்கள்.

மறுபடியும் 21-ஆம் நூற்றாண்டு : கோவிந்த் அமெரிக்காவில் மனித குலத்தையே அழிக்கும் சக்திவாய்ந்த கதிர்வீச்சு உயிரியல் சம்பந்தபட்ட யுத்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஓர் விஞ்ஞானி. அவரது கண்டுபிடிப்பை (ரசாயன ஆயுதம்) அவரது பாஸ் மூலம் தவறாக பயன்படுத்த நேரிடும் அச்சத்தில் மனித குலத்தைக் காப்பாற்ற கமலின் போராட்டம் ஆரம்பிக்கிறது. அமெரிக்காவில் ஆரம்பித்து இந்தியாவில் சுனாமியில் முடிகிறது. இதற்குள் நடைபெறும் சம்பவங்களில் ஒன்பது விதமான கதாபாத்திரங்களும் நம்மை பிரமிக்க வைக்கிறது. (இதற்கு மேல் கதை கூற வேணாம்! வெள்ளித் திரையில் பார்க்க)

கமல் என்னும் உன்னதக் கலைஞனின் உயிர்நாடி சினிமா மட்டுமே என்பதை மறுபடியும் நமக்கு உணர்த்தியிருக்கிறது இப்படம். பத்து அவதாரங்களிலும் நடை, உடை, பாவனையில் வாழ்ந்து காட்டுகிறார் கமல். பத்து பாத்திரங்களில் இந்திய ரா-சிபிஐ அதிகாரி பலராம் நாயுடு அனைத்து கைத்தட்டல்களையும் வாங்கிச் செல்கிறார். அதிக மேக்கப் இல்லாமல் தெலுங்கு பேசும் இவரது நகைச்சுவையில் தியேட்டரே சிரிக்கிறது. அடுத்து நெல்லைத் தமிழ்ப் பேசும் பூவராகவனும், ஜப்பானிய மார்சியல் ஆர்ட் கும்பூ கமலும் ரசிகர்களின் மனதில் பதிந்துவிடுகிறார்கள். வயதான பாட்டியும் சரி, ஜார்ஜ் புஷ் கதாப்பாத்திரமும் இனி உருவாகப்போகும் மேக்கப்மேன்களுக்கு ஒரு பாடம். நாத்திக கமலின் வாதம் அவ்வளவாக எடுபடவில்லை.

அசினுக்கு இரு வேடம். ஆனால் நம் மனதில் நிற்பதோ பிராமண பெண் பாத்திரம்தான். ஜெயப்பரதாவும், அதிகம் சர்ச்சைக்கு உள்ளான மல்லிகா ஷெராவத்தும் படத்தில் வந்து போகிறார்கள். கிராபிக்ஸ்-ல் உருவாக்கப்பட்ட சுனாமியும், சக்திவாய்ந்த சிலையும் படம் முழுக்க நம்முடன் உலாவருகின்றன. ரீ-ரெகார்டிங்கில் தேவிபிரசாதும், காலை மட்டும் பாடலில் ஹிமேஷும் ஜொலிக்கிறார்கள். ரவிவர்மாவின் ஒளிப்பதிவு பாராட்டுக்குரியது.

இவ்வளவு இருந்தும் இடைவேளைக்குப் பிறகு திருப்புமுனைகள் ஏதும் இல்லாமல் படத்தில் தோய்வு ஏற்படுவதை தவிர்த்திருக்கலாம். இவ்வளவு பெரிய தொழில்நுட்ப பிரமாண்டம் அன்றாடம் வேலை செய்யும் கடைநிலை ரசிகர்களிடமும், மாஸ் ஆடியன்ஸ்-முதல் சீட் ரசிகர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது கேள்விக்குறி?

தசாவதாரம் : தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல்

June 14, 2008

பாமரனின் 'பஞ்ச்' பதில்கள் - 3 : நேர்முகம் - "அதிகாலை" நவின்-அசோக்

"பெண்களுக்கு விடுதலை கொடுக்காத தலித் கட்சிகள்" - கவிஞர் சுகிர்தராணி

கவிஞர் சுகிர்தராணி-நம் நவீன தமிழ் இலக்கிய உலகில் சில அதிர்வுகளின் அடையாளம். "கைப்பற்றி என் கனவுகேள்", "இரவு மிருகம்" "அவளை மொழிபெயர்த்தல்" ஆகிய மூன்று தொகுதிகளாக அவருடைய கவிதைகள் வெளியாகியுள்ளன. பிறப்பினால் தலித்தாக அறியப்படும் சுகிர்தராணியின் கவிதைகள் இன்று பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளன. பெண் உடல் மொழி பற்றியும், தலித் விடுதலை பற்றியும் இவர் எழுதிய கவிதைகள் தமிழ் இலக்கிய உலகில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுபவை.

"என் கண்களின் ஒளிக்கற்றைகள்
முன்னறையில் உறங்குபவனின்
ஆடை நெகிழ்வுகளில் பதிந்திருந்தன.
கோப்பை நிறைய வழியும் மதுவோடு
என்னுடல் மூழ்கி மிதந்தது.
கூசும் வார்த்தைப் பிரயோகங்களை
சன்னமாய் சொல்லியவாறு
சுயபுணர்ச்சியில் ஆழ்ந்திருந்த வேளை
பறவைகளின் சிறகோசை கேட்டதும்
என்னை என்னிடத்தில் போட்டுவிட்டு
ஓடிவிட்டது இரவு மிருகம்"

என்பதைப் போல உடல் மொழி கவிதைகளையும்

"செத்துப்போன மாட்டைத்
தோலுரிக்கும்போது
காகம் விரட்டுவேன்
வெகு நேரம் நின்று வாங்கிய
ஊர்ச் சோற்றைத் தின்றுவிட்டு
சுடுசோறெனப் பெருமை பேசுவேன்
தப்பட்டை மாட்டிய அப்பா
தெருவில் எதிர்ப்படும்போது
முகம் மறைத்துக் கடந்துவிடுவேன்
அப்பாவின் தொழிலும்
ஆண்டு வருமானமும்
சொல்ல முடியாமல்
வாத்தியாரிடம் அடி வாங்குவேன்
தோழிகளற்ற
பின் வரிசையிலமர்ந்து
தெரியாமல் அழுவேன்
இப்போது
யாரேனும் கேட்க நேர்ந்தால்
பளிச்சென்று சொல்லிவிடுகிறேன்
பறச்சி என்று"

என்கிற தலித்தியம் சார்ந்த கவிதைகளையும் மிகவும் துணிச்சலாகவே எழுதி ஒரு பெரும் கவனிப்புக்கு உள்ளாகி இருப்பவர் சுகிர்தராணி.

வேலூர் மாவட்டம்- லாலாபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியையாகப் பணியாற்றிவரும் சுகிர்தராணியை சமீபத்தில் சென்னையில் சந்தித்துப் பேசினோம்.உடல் மொழி பற்றி பேட்டிகளில் கேள்விகள் தொடுப்பதுகூட ஒருவிதமான பாலியல் வன்முறைதான் என்று ஆத்திரப்படும் சுகிர்தராணி தன்னுடைய தலித் அரசியலைப் பற்றி ஆழமான முறையில் இந்த நேர்காணலில் பதிவு செய்தார். அவருடைய பேட்டி ஒலி வடிவில்... http://www.adhikaalai.com/index.php?/en/அதிகாலை-ஸ்பெஷல்/அதிகாலை-ஸ்பெஷல்/பெண்களுக்கு-விடுதலை-கொடுக்காத-தலித்-கட்சிகள்

தந்தையர் தினம்! - ஆல்பர்ட்

அந்த தினம் இந்த தினம் என்று ஆயிரம் தின‌ங்க‌ள் இருக்குது. ஆனாலும் இந்த‌ இய‌ந்திர‌ம‌ய‌மான‌ உல‌க‌த்தில் ஒவ்வொரு தின‌த்துக்குப் பின்னும் ஒவ்வொரு நிஜ‌ங்க‌ள் நிழ‌லாக‌த் திகழ்வ‌தையும் ம‌றுத்துவிட‌ முடியாது. சீர்காழியின் ஒரு பாட‌ல் நினைவுக்கு வ‌ருகிற‌து. பாட‌ல் முழுவ‌துமாக‌ நினைவிற்கு வர‌வில்லையென்றாலும் சில‌வ‌ரிக‌ளைச் சொல்லுவ‌து இங்கு பொருத்த‌ம் என‌ நினைக்கிறேன்.

"ஆண்டுக்கு ஆண்டு, தேதிக்கு தேதி ஆயிர‌ம் இருக்குது சுப‌தின‌ம்! லாட்ட‌ரிச் சீட்டில் ல‌ட்ச‌ம் விழுந்தால் அது கிடைத்த‌வ‌ருக்கே சுப‌தின‌ம்..." இப்ப‌டியாக‌ப் போகும் அந்த‌ப் பாட‌ல். பாட‌ல் உண‌ர்த்துவ‌திலிருந்து ஒன்றை நாம் நிச்ச‌ய‌மாக‌ அறிந்துகொள்ள‌ இய‌லும்.

த‌ன்னை வ‌ள‌ர்த்த‌ த‌ந்தை, என்ற‌ பாச‌மிகுதியால் ம‌ன‌ம் கோணாம‌ல் க‌வ‌னித்துக் கொள்கிற‌ ம‌க‌ன்க‌ள் இருக்கும்வ‌ரை அந்த‌த் த‌ந்தைய‌ர்க‌ளுக்கு என்றும் சுப‌தின‌ம்தான்! எல்லா அப்பாக்களுக்கும் இப்படி மகன்கள் அமைவதில்லை; மகனின்,மகளின் அன்பு கிடைக்காத அப்பாக்களுக்கு சுபதினம்?

முதியோர் இல்ல‌ம் என்றில்லை, வீட்டுக்குள் நுழைந்தால் மரும‌கள் என்ன‌ சொல்வாளோ? இல்லைம‌ரும‌க‌ள் பேச்சைக்கேட்டு ம‌க‌ன் என்ன‌ சொல்வானோ என்று கால்வ‌யிற்றையும் அரைவ‌யிற்றையும் நிர‌ப்பிக்கொண்டு திண்ணையே க‌தி என்றிருக்கும் த‌ந்தைமார்க‌ளுக்கு வ‌ருட‌த்தில் இந்த‌ ஒருநாளாவ‌து சுப‌தின‌மாக‌ இருக்க‌ட்டுமே,என்றால் "த‌ந்தைய‌ர் தின‌ம்" இருந்துவிட்டுப் போக‌ட்டுமே!

அன்னையர் தினம் வரும், பின்னே..... தந்தையர் தினமும் வரும் என்பது இப்போது உலக வழக்கமாகி வருகிறது. தாயிற் சிறந்த கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமுமில்லை என்ற வைர வரிகளை வழங்கிய அவ்வை மூதாட்டி வாழ்ந்த காலத்தில் தோன்றியதா இந்த தந்தையர் தினம்? தொடர்ந்து வாசிக்க இணைப்பில் செல்க... http://www.adhikaalai.com/index.php?/en/இலக்கியம்/கட்டுரை/தந்தையர்-தினம்-ஆல்பர்ட்

May 21, 2008

"ஜெயமோகன் ஒரு மனநோயாளி" : கனிமொழி - பகுதி : 1

மலேசிய தமிழர்கள் கொந்தளித்தது ஏன்? மக்கள் ஓசை ஆசிரியர் நேர்காணல்

மலேசியாவின் 'மக்கள் ஓசை' தினசரிப் பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் ராஜன் என்ற எம்.ராஜேந்திரன்,சமீபத்தில் தமிழகத்துக்கு குறுகிய கால வருகையை மேற்கொண்டிருந்தார். அவர், மலேசிய தமிழ் பத்திரிகை உலகில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தடம் பத்திது வருபவர்.

மறைந்த பத்திரிகையாளர் ஆதி.குமணனின் பாசறையில் கூர் தீட்டப்பட்டவர். ’மலேசிய நண்பன்’ பத்திரிகையின் ஆசிரியராக நீண்ட காலம் பணிபுரிந்தவர். தற்பொழுது ‘மக்கள் ஓசை’ எனும் முன்னணி பத்திரிகையை ஒரு புதிய பார்வையில் நடத்திக் கொண்டிருப்பவர். அவரிடம், மலேசியாவின் நடப்பு அரசியல் விவகாரங்கள், இந்திய சமூகத்தின் நிலைமை, ஹிண்ட்ராப் இயக்கத்தின் போக்கு.. இப்படி நம்முடைய பல விதமான கேள்விகளை கோடையின் ஒரு நண்பகல் பொழுதில் முன்வைத்தபொழுது...

* மலேசிய இந்தியர்களின் பூர்வீக வரலாற்றிலிருந்து ஆரம்பிக்கலாமே....

மலேசியா என்பது மூவின மக்களைக் கொண்ட நாடு.அவர்களில் மலாய்க்காரர்கள் முதன்மையான எண்ணிக்கை கொண்டவர்கள்.2-வது பெரும்பானமையாக சீனப் பெரு மக்கள் உள்ளனர்.3- வது சிறுபான்மை இனமாக இந்திய சமூகத்தினர் உள்ளனர்.இந்திய சமூகத்தின் பூர்வீகம் இந்தியாதான்.

பிரிட்டிஷ் காலத்தில் இந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழகத்திலிருந்து அடிமைகளாக கொண்டுவரப்பட்டவர்கள்தான் அவர்கள். அவர்களால்தான் நாடு செப்பனிடப்பட்டது. காடுகளாய் இருந்த மலேசியாவை ஒரு புதிய பூமியாக மாற்றிய பெருமை நம் தமிழர்களையே சேரும்,அதற்கு அவர்கள் உரமாக ப்யன்ப்டுத்தப்பபட்டார்கள். கிட்டத்தட்ட அடிமை வாழக்கை முறைதான் வாழ்ந்தார்கள். ஆங்கிலேயர்கள் எந்த வசதிகளையும் நம்மவர்களுக்கு செய்து கொடுக்கவில்லை. படிப்போ, சுகாதாரமான தங்குமிடமோ, உணவோ இப்படி எதுவும் சரிவரக் கொடுக்கப்படவில்லை.

பிறகு நாடு சுதந்திரத்துக்குப்பின் கொஞ்சம் நிலைமை மாறியது. விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. தொழில் மய நாடாக மாறி இருக்கும் மலேசியாவில் இன்றைய நம்முடைய இந்தியர்கள் மூன்றாம் தலைமுறையை சேர்ந்த மலேசியக் குடிமக்கள்.


* இன்றைய மலேசிய இந்தியர்களின் கல்வி, அரசியல், பொருளாதார நிலைப்பாடு எப்படி இருக்கிறது?

அன்றைய முதல் பிரதமர் தேசத்தந்தை துங்கு அப்துல் ரஹ்மான் காலத்திலிருந்து இன்றையப் பிரதமர் டத்தோ அப்துல்லா படாவிவரை ஐந்து பிரதமர்களை நாடு கண்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு நிறைய உரிமைகளி நம் சமூகத்திற்கு அரசாங்கம் வழங்கியது. சமய உரிமை, ஆலய வழிபாடு, தமிழ்ப் பள்ளிகள், அரசுத் துறைகளில் வேலை வாய்ப்பு, வர்த்தகங்களில் பங்கு இப்படி நிறையச் செய்தனர் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.

கால ஓட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளாக நமக்கு கிடைத்த வாய்ப்புகளும், வசதிகளும் சிறிது சிறிதாக நம்மை விட்டு போகத் தொடங்கின. அதுவும் குறிப்பாக கடந்த 5 ஆண்டு காலமாக இதன் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. அதற்கான் அண்மைய கால வெளிப்பாடுதான் கடந்த ஆண்டு நவம்பரில் மலேசிய இந்தியர்கள் நடத்திய பேரணி.

இதனை அரசாங்கம் கையாண்ட விதம் தவறாகிவிட்டது.ஒரு கோவில் திருத்தலத்தில் கூடியிருந்தவர்களை அப்புறப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை இந்தியர்களிடையே பெரும் கோபத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. மேலும் ஆலய உடைப்பு போன்ற சில கசப்பான சம்பவங்கள்தான் பெரிய கொந்தளிப்பாக உருவெடுத்தது. அதுதான் கடந்த தேர்தலிலும் எதிரொலித்தது.

* ஓர் அரை நூற்றாண்டுக்கும் மேலாக அமைதியாக இருந்த இந்திய இனம் திடீரென கொந்தளித்தது எப்படி? அதற்கான அடிப்படைத் தேவை என்ன?

இது ஒரு நல்ல கேள்வி.எல்லா கால கட்டங்களிலும் இந்தியர்களை வழி நடத்தக் கூடிய அரசியல் கட்சி மலேசியன் இந்தியன் காங்கிரஸ் (ம.இ.கா.)தான். குறிப்பாக கடந்த 25 ஆண்டுகளாக ம.இ.கா.வை வழி நடத்தி வருபவரால்தான் ஏராளமான பிரச்சினைகள். அதற்குமுன் தலைவர்களாக இருந்த துன் சம்மந்தன், மாணிக்கவாசகம் இருந்த கால கட்டத்தில் எந்தப் பிரச்சினைகளும் இல்லை.சமுதாயத்தை வழி நடத்தக் கூடிய தலைமைத்துவப் பண்பும், சமுதாயத்தில் பிளவுகள் ஏற்படாமல் ஒருவித அரவணைப்பும் கொண்ட தீர்க்க தரிசனம் கொண்ட தலைவர்களாய் அவர்கள் இருவரும் இருந்தார்கள்.அதனால் அரசாங்கத்திடம் எல்லா உரிமைகளையும் பெற முடிந்ததது. எல்லாச் சலுகைகளும் கிடைத்தன. அதனால் கேள்விகள் இல்லை.

ஆனால் 1981-க்குப் பிறகு அதாவது டத்தோ சாமிவேலு தலைமைத்துவத்துக்குப் பிறகு பல்வேறு குழப்பங்கள்,குளறுபடிகள். இதனால் ம.இ.கா. எனும் பேரியக்கம் குளறுபடிகளால் சிதறிப் போனது. கட்சியில் ஒற்றுமைச் சீர்குலைவு ஏற்ப்பட்டது. இந்தக் கால கட்டத்திதான் இந்தியர்கள் பிளவுபட்டர்கள். இந்திய சமுதாயத்தின் ஐக்கியம் பிளவுபட்டதால் மக்களின் அடிப்படை உரிமைகள் அரசாங்கத்திடம் எடுபடாமல் போனது. இதுதான் அடிப்படைக் காரணம்.

* மலேசியாவில் மாற்றம் நிகழ்ந்தது எப்படி?
* ஹிண்ட்ராப்பின் எதிர்காலம்?
* ஹிண்ட்ராப்பைக் கண்டு மலேசிய அரசு பயப்படுகிறதா?
* மக்கள் செல்வாக்கை இழந்து டத்தோ. அப்துல்லா படாவி அரசு
தடுமாறுகிறதா?
* மலேசிய இந்தியர்களை எதிர்க் கட்சிகள் அரவணைக்குமா?
* டத்தோ சாமிவேலுக்கு எதிராக ம.இ.கா-வில் பெரிய எதிர்ப்புகள்
இல்லையே ஏன்? தமிழக முதல்வர் கலைஞரை கண்டித்தது எந்தவிதத்தில்
நியாயம்?
* மலேசியாவில் தமிழ் மொழி மீதான ஆர்வம் குறைந்து வருகிறது. பிறகு ஏன்
தமிழ்ப் பள்ளிகளை முன்னிலைப்படுத்தும் மோதல் தேவையா?... இப்படி
இன்னும் ஏராளமான கேள்விகளுடன் மலேசிய அரசியலின் முழு நிலவரம்
பற்றி மலேசிய 'மக்கள் ஓசை' பத்திரிகை ஆசிரியர் ராஜன் அவர்களுடன்

May 12, 2008

சாருநிவேதிதா-வுக்கு எச்சரிக்கை : அமிர்தம் சூர்யா

எழுத்தாளர் ஜெயமோகனை விமர்சிப்பது; எதிர்வினை புரிவது; வழக்கு தொடுப்பது; மன்னிப்பு கேட்க சொல்லி உரிமை காப்பது எதுவும் தவறில்லை. ஆனால் இம்மாதிரியான விசயங்களை யார்? எதன் பொருட்டு? எந்த அரசியலின் அடிப்படையில் சொல்கிறார்கள்? அதனில் உண்மையில் விகிதாச்சாரம் என்ன? என்பதுதான் அதன் கேள்வி.
'ஜெயமோகனின் சுயமோகம்' என்ற தலைப்பில் சாருனிவேதிதா எழுதியிருப்பதை படித்தபின் நமக்கு புலப்படுவது......

ஜெயமோகனின் சுயமோகத்தை சொல்லிக்கொண்டெ இடையிடையே தனது புகழை, பயணத்தை, தனது பெருமையான கட்-அவுட்டுகளை நடுவதற்காக நட்டுக்கொண்டே தனது மோகத்தை பரைசாற்றி கொள்கிறார் சாரு. உண்மையில் ஜெயமோகன் இருக்கையில், கட்டிப்பிடித்து முத்தமிட்டுக்கொள்வதும், காலச்சுவடு போனதும் கிண்டலடித்து புத்தகம் போடுவதும் தனது தற்புகழ்ச்சிக்காக விலைபோவதும் கேவலமான ஒன்று.

மனுஷ்யபுத்திரனுக்கு ஜெயமோகன் தேவைப்பட்டார், ஜெயமோகனுக்கு உயிர்ம்மை தேவைப்பட்டது. அதனால் காலச்சுவடு எதிரியானது. உயிர்மையின் கருத்து ஒவ்வாமை மற்றும் அரசியல் லாப சமரசம் இவற்றால் ஜெயமோகன் காலச்சுவடு போனார். ஜெயமோகனுக்கு காலச்சுவடு தேவைபட்டது. முன்பு காலச்சுவட்டில் இருந்த சாரு இப்போது உயிர்ம்மை சார்பில் நின்று தாக்குகிறார்.

இது கருத்தியல் மற்றும் படைப்பை முன்வைத்து நிகழும் யுத்தமல்ல. உயிர்ம்மை-காலச்சுவடு- க்கு இடையேயான நிறுவனப்போர். இது முழுக்க முழுக்க வியாபாரம். அதன் பொருட்டான அரசியல் மற்றும் அவர்களின் இருப்பையும் தக்கவைத்துக்கொள்ள, சம்மந்தபட்ட வியாபார போட்டி. அதனூடாக சாரு தன்னை கட் அவுட்டாக நிறுத்திக்கொள்ள இது ஒரு காழ்ப்பு-பிரதி என்பதாக கவிகள், விமர்சகர்கள் உள்ளிட்ட பல எழுத்தாளர்களின் கருத்தாக ஒரு கோட்டத்தில் முன்வைக்கபட்டுள்ளது.

பக்கம் 53-ல் மனுஷ்யபுத்திரனை அவருடைய பிறவி குறையை கேலி செய்து ஜெயமோகன் எழுதியதாக சாரு எழுதியுள்ளார். இது அபத்தமானது. சொல்புதிது இதழில் வெறொருவர் எழுதியது. இதழில் பிரசுரமானதாலேயே அது ஜெயமோகன் எழுதியாகாது. பக்கம் 52-ல் தமிழ் பண்பாட்டை கீழ்த்தரமாக ஜெயமோகன் பேசிவிடுகிறார் என்கிறார் சாரு. மேலும் அவர் எழுத்தை படித்தால் அசிங்கத்தை மிதித்ததுபோல் இருக்கிறது என்கிறார்.

சபாஷ்....

தொடர்ந்து வாசிக்க அதிகாலை இணைப்பில் செல்க.... http://www.adhikaalai.com/index.php?/en/இலக்கியம்/கட்டுரை/வேடிக்கை-பார்க்கும்-சாளரம்-அமிர்தம்-சூர்யா

May 06, 2008

ஓர் ஈழக்குழந்தையின் இதயம் வெடிக்கும் கடிதம்! - அண்ணன் கை.அறிவழகன்

(கண்கள் நிறையக் கனவுகளோடும், துள்ளி விளையாடிய கால்களில் ஷெல்அடித்த ரணங்களின் வலியோடும் அகதி முகாமில் வாடும் புலம்பெயர்ந்த ஈழக் குழந்தையின் கிழிந்து போன சட்டைப்பைகளில் இருந்த உடைந்த பென்சிலின் ஒட்டுத்துண்டில் இந்தக்கடிதம் எழுதப்படுகிறது).

நலமுடன் இருக்கிறீர்களா? உலகத் தமிழர்களே?

குண்டு விழாத வீடுகளில், அமெரிக்காவுடனான அணுகுண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது பற்றி அளவளாவிக் கொண்டிருப்பீர்கள், இடைஞ்சலான நேரத்தில் கடிதம் எழுதுகிறேனா? எனக்குத் தெரியும், என் வீட்டுக் கூரையில் விழுந்த சிங்கள விமானத்தின் குண்டுகள் என்னைப் போல பல்லாயிரக்கணக்கான தமிழ்க்குழந்தைகளை அநாதை ஆக்கிய போது, நீங்கள் எதாவது நெடுந்தொடரின் நாயகிக்காகக் கண்ணீர் விட்டுக் கரைந்திருப்பீர்கள்......
என் அம்மாவும் அப்பாவும் அரைகுறையாய் வெந்து வீழ்ந்தபோது, உங்கள் வீட்டு வரவேற்பறைகளில் அரைகுறை ஆடைகளுடன் அக்காமாரெல்லாம் ஆடும் "மஸ்தானா, மஸ்தானா"-வின்" அரையிறுதிச் சுற்று முடிவுக்கு வந்திருக்கும். அண்ணனும், தம்பியும் நன்றாகப் படிக்கிறார்களா?அம்மா, அப்பாவின் மறைவுக்குப் பின்னால், எனக்குத் தலை வாரிவிட்டு, பட்டம்மா வீட்டில் அவித்த இட்டலி கொடுத்துப் பள்ளிக்கு அனுப்பிய அண்ணனும் இப்போது இல்லை, நீண்ட தேடலுக்குப் பின்னர் கிடைத்த அவன் கால்களை மட்டும் மாமாவும், சித்தப்பாவும் வன்னிக் காடுகளில் நல்லடக்கம் செய்தார்கள்.....
அப்போதே எழுத வேண்டும் என்று ஆசைதான் எனக்கு, நீங்கள் இலங்கை கிரிக்கெட் அணியின் இந்தியச் சுற்றுப் பயணத்தை, இரவு பகல் ஆட்டமாய்ப் பார்த்திருந்தீர்கள்... அதனால் தான் எழுதவில்லை........

ஒலிம்பிக் தீபத்தின் சுடர்களை உலகம் முழுவதும், என்னைப்போல ஒரு மலை நாட்டு திபெத் சிறுவனும், அவன் இனத்துப்பெரியவரும் சந்து பொந்தெல்லாம் மறித்துத் தடுத்தபோது, எனக்கு உங்கள் நினைவு வந்தது.....

அதுமட்டுமல்ல, இந்திய அரசுகளின் உதவியோடு, இலங்கை ராணுவத்திற்கு நன்றி சொல்லும் திரைப்படச் சுருளின் பிரதிகளும் நெஞ்சில் நிழலாடியது. ஒரு பக்கம், இரங்கற்பா எழுதிக் கொண்டு, மறுபக்கம், நவீன ஆயுதங்களை அனுப்பி வைக்கும் உங்கள் கூட்டணித் தலைவர்கள் எல்லாம் நலமா தமிழர்களே? கட்டுரையைத் தொடர்ந்து படிக்க இணைப்பில் செல்க... http://www.adhikaalai.com/index.php?/en/இலக்கியம்/கட்டுரை/ஓர்-ஈழக்குழந்தையின்-இதயம்-வெடிக்கும்-கடிதம்-அண்ணன்-கை.அறிவழகன்

May 05, 2008

"ஜெயகாந்தன்... அவன் அப்படித்தான்" - பாரதிராஜா

எழுத்தாளர் ஜெயகாந்தனின் 75-வது பிறந்த நாள் விழாவில் இயக்குனர் பாரதிராஜா ஆற்றிய உரையின் ஒலி வடிவம் கேட்க..... இணைப்பில் செல்க http://www.adhikaalai.com/index.php?/en/இலக்கியம்/கட்டுரை/-ஜெயகாந்தன்-...அவன்-அப்படித்தான்-பாரதிராஜாஒலிவடிவில்

கபிலன் வைரமுத்து

கவிப்பேரரசு

May 03, 2008

இந்தியர்களைவிட 5 மடங்கு அதிகம் சாப்பிடுபவர்கள் அமெரிக்கர்கள்

உலக அளவில் உணவுப் பொருட்களின் விலைவாசி கூடியதற்கு இந்தியர்களும் சீனர்களும் அதிகமாய் சாப்பிடுவதால்தான் என்று அமெரிக்க அதிபர் புஷ் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு இந்தியத் தலைவர்கள் பலரும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். உண்மையிலேயே புஷ்ஷின் கருத்து உண்மைதானா? என்ற பொருளாதார புள்ளி விவர ஆய்வில் பல்வேறு நிஜங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

அரிசி, கோதுமை மற்றும் உணவு தானியங்கள் போன்றவற்றை ஒரு தனி மனிதன் உட்கொள்ளும் அளவை எடுத்துக்கொண்டால் இந்தியர்களைவிட அமெரிக்கர்கள் 5 மடங்கு அதிகம் என்று அமெரிக்க விவசாயத் துறையின் 2007- ஆம் ஆண்டு அறிக்கை கூறுகிறது. வருடம் ஒன்றுக்கு சராசரியாக இந்தியர் ஒருவர் 178 கிலோ கிராம் தானியத்தைத்தான் சாப்பிடுகிறார். ஆனால் அமெரிக்கர்கள் வருடத்திற்கு 1,046 கிலோ கிராம் தானியத்தை தின்று தீர்க்கின்றனர்.

சீனர்களைவிட மூன்று மடங்கும் ஐரோபியர்களைவிட இரண்டுமடங்கும் அதிகமாக அமெரிக்கர்கள் உணவு உட்கொள்கின்றனர்.

உண்மையில் அமெரிக்கர்களின் வாங்கும் திறன் அதிகரித்துள்ளது. அதனால்தான் அவர்களின் சாப்பாட்டு அளவும் அதிகரித்துள்ளது. 2003-ல் அமெரிக்கர் ஒருவரின் தனி நபர் உணவு தானியக் கொள்முதல் 946 கிலோ கிராமாக இருந்தது. ஆனால் 2007 -ஆம் அண்டில் இந்த அளவு 1046 கிலோவாக உயர்ந்துள்ளது. இதை இந்தியர்களுடன் ஒப்பிடும்போது 5 மடங்கு அதிகமாக அமெரிக்கர்கள் உட்கொள்கின்றனர்.

இந்த ஒப்பீடு வெறும் தானியங்களுக்கு மட்டுமல்ல. எல்லாவிதமான உணவுப் பொருட்களையும் வாங்குவதில் அமெரிக்கர்கள்தான் முன்னணியில் உள்ளனர்.
இந்தியாவின் தனிநபர் ஒருவர் வருடத்துக்கு 38 கி.கி.பாலை மட்டுமே குடிக்கின்றனர். சீனர்கள் 17 கி.கி. பாலை மட்டுமே அருந்துகின்றனர். ஆனால் அமெரிக்கர்களோ 78 கி.கி.பாலை குடித்து தீர்க்கின்றனர்.

அதேபோல் காய்கறியின் அளவு வருடத்துக்கு 11 கி.கி. யை மட்டும் இந்தியர்கள் சாப்பிடுகின்றனர். ஆனால் அமெரிக்கர்களோ 41 கி.கி. யை சாப்பிடுகின்றனர். இந்தியாவில் ஏராளமானோர் காய்கறிகளைத்தான் விரும்பிச் சாப்பிடுகின்றனர். அதில் அவர்களுக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களும் கிடைத்துவிடுகிறது.

ஆனால் அமெரிக்கர்களோ அசைவ உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.ஆண்டு ஒன்றுக்கு ஓர் அமெரிக்கர் 42.6 கி.கி மாட்டிறைச்சி சாப்பிடுகிறார். ஆனால் இந்தியாவில் இதன் அளவு 1.6.கி.கி.அதே போல் கோழியை எடுத்துக் கொண்டால் அமெரிக்காவின் தனி நபர் ஒருவர் 45.4 கி.கி. போட்டுத் தாக்குகிறார். ஆனால் இந்தியர் ஒருவர் 1.9.கி.கி மட்டுமே சாப்பிடுகிறார்.

இப்படி அதிர்ச்சி அளிக்கும் உணவு தானிய ஒப்பீடுகள் கிழக்கத்திய நாடுகளுக்கும், மேற்கத்திய நாடுகளுக்குமிடையே நிலவி வருகிறது.

இதன் உண்மை புரியாமல் உணவு தானிய விலைவாசி உயர்வுக்கு இந்தியாவும், சீனாவும்தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் புஷ் கதைவிடுகிறார்.

மேற்கண்ட புள்ளி விவரங்கள் எல்லாம் அமெரிக்க விவசாயத் துறை வெளியிட்டதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.