October 21, 2015
October 16, 2015
புதுக்கோட்டை நகரமே திக்கு முக்காடியது
புதுக்கோட்டையில் நடந்து முடிந்த பதிவர் விழாவில் “எந்தக் குறையும் இல்லை” என்று, வந்து சென்ற நம் பதிவர்கள் பதிவுகளைப் போட்டு வாழ்த்துகிறீர்கள். மற்றவர் பதிவுகளிலும் போய் பின்னூட்டங்களிட்டுப் பாராட்டுகிறீர்கள்! அந்த அன்பிற்கு எங்கள் இதய நன்றி!
வலைப்பதிவர்களின் சந்திப்பு நிகழ்வுளுக்கான வலைப்பதிவு முகவரிக்கு அழுத்தவும்
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:50 AM
0
comments (நெற்றிக்கண்)
October 13, 2015
திண்ணையில்.... என் "ஒத்தப்பனை"
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:41 AM
0
comments (நெற்றிக்கண்)
October 09, 2015
October 08, 2015
ஒத்தப்பனை - நவநீ
இனியொருமுறை அது நடக்குமா? நானும் ஒவ்வொரு முறை என் கிராமத்துக்குச் செல்லும்போதெல்லாம், என் தாத்தா சிநேகிதர்களோடு அமர்ந்து கள் பருகிய அந்த இடத்தையும், அந்த 'ஒத்தப்பனை'யையும், கள் இறக்கிய யாகுமுத்துவையும் பார்க்கத் தவறுவதில்லை. அந்த ஒத்தப்பனையைக் கட்டியணைக்கும் போதெல்லாம் அது என்னிடம் ஏதோ பேசும்....
என் தாத்தா உயிரோடு இல்லை.... அதனால் என்ன? அதோ..... காற்றில் அசைந்து அசைந்து, என்னைப் பார்த்துக் கையசைத்து.... கம்பீரமாய் காட்சியளிக்கும் என் ஒத்தப்பனை இருக்கிறதே....
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:07 AM
0
comments (நெற்றிக்கண்)
September 15, 2015
நானும் என் ஈழத்து முருங்கையும்
மண்ணைப் பிரிந்து கடல் கடந்து தப்பி வந்த தம் மக்களோடு மக்களாய், கனத்த மனத்துடன் தானிருக்கும் இராமேஸ்வரம்-மண்டபம் முகாமில் வலியறிந்து, குறிப்பறிந்து, தாயாய் சேவை செய்த செவிலி ஒருத்திக்கு ஒரு முருங்கை உறவை தத்துக்கொடுக்கிறாள் அந்த ஈழத்துத்தாய். அன்போடு பெற்றுக்கொண்ட செவிலித்தாய் அந்தக் கிளையை எப்படியாவது வளர்த்துவிட வேண்டும் என்கிற வைராக்கியம் இருந்தபோதிலும், தம்மால் இயலுமோ இயலாதோ? என்ற ஐயத்தில் "அண்ணன் கை.... ராசி, அவன் கையில் கொடுத்தால் அவன் எப்படியும் ஆளாக்கி/மரமாக்கி விடுவான்" என்ற தன்னம்பிக்கையில் தன் அண்ணனிடம் அன்போடு தருகிறாள். அண்ணன் ஆசை ஆசையாய் அள்ளி அணைத்து அந்த ஈழத்து உறவை நம் மண்ணில் நிரந்தரமாக்குகிறான்.
அபார வளர்ச்சி, அற்புதமான சுவை.... முழுமையாய் வளர்ந்து அந்த அண்ணனை மகிழ்விக்குமுன் அவன் அமெரிக்கா சென்று விடுகிறான். சில வருடங்கள் கழித்து ஒரு கோடையில் வந்தவன் கண்களில்... குளிரூட்டியது. ஓங்கி வளர்ந்து, மென்மையான வாசத்துடன், பூக்களும், காய்களுமாய் நிறைந்து கம்பீரமாய் காட்சியளித்தது அந்த முருங்கை உறவு. அண்ணன் கண்களில் "ஈழம் தந்துவிட்ட அந்த அண்ணன்" கண்களின் ஆனந்தக் கண்ணீர்". கண்கள், மனம், வயிறு எல்லாம் நிறைந்து போனது. சில மாதங்கள் கழித்து உச்சியில் தொங்கிக்கொண்டிருந்த அந்த முருங்கை நெத்து (முதிர்ந்த நெற்று) அண்ணனை பார்த்து கைசைத்துக்கொண்டே சலசலவென்ற சத்தத்துடன் காலடியில் வந்து விழுந்தது. அள்ளி அணைத்து முத்தமிட, அந்த நெத்து தந்த சத்தம் 'அம்மா எப்படியிருக்கிறாள், அண்ணன் எங்கிருக்கிறார்' என்று கேட்பதாய் கேட்டது.
அண்ணன் திரும்பவும் அமெரிக்க பயணத்திற்கு ஆயத்தமாகிறான். கூடவே, அந்த முருங்கை நெத்தையும் எடுத்துச் செல்ல முடிவு செய்கிறான். சட்ட விரோதம் என்பது பற்றியெல்லாம் சற்றும் அவன் சிந்திக்கவில்லை. ஈழத்து முருங்கை இறங்கிய வேகத்தில் அழகான தொட்டிக்குள் அமொிக்க மண்ணோடு ஐக்கியமானது. சிறு வயதில் தன் கொள்ளுத்தாத்தா கையாண்ட உத்தியைப் பயன்படுத்தி அந்த நெத்தை முழுவதுமாக தொட்டிக்குள் புதைத்தான். தனித்தனி விதையை நட்டு வைக்காமல் முழு நெத்தையும் அப்படியே ஆழத்தில் நட்டு வைத்தால் அனைத்தும் சேர்ந்து மொத்தமாக, செழிப்பாக வளரும் என்ற தன் தாத்தாவின் உத்திதான் அது. அந்த முருங்கை நெத்தை அண்ணன் அமெரிக்காவின் தன் கொள்ளைப்புறத்தில் நட்டு வைக்க ஆசைதான். ஆனால், அமெரிக்க தட்பவெப்பநிலையில் முருங்கை வளராதென்பதால் தொட்டிக்குள் கட்டாயமாக்கப்பட்டது. திரும்பவும் தாயகப் பயணம். ஓர் இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு அதிகாலை எழுந்ததும் கைப்பேசியை திறக்கையில் கண் கொள்ளாக்காட்சி. மனைவி அனுப்பியிருந்த புகைப்படத்தில் அந்த முருங்கைக் கன்று அவன் கைபேசியில் கண்ணைப் பனி(றி)த்தது. அப்பப்பா.... அந்த சந்தோசத்திற்கு இணையேது. தன் முதல் மகள் பிறந்த தினம் நினைவுக்கு வந்து போனது. இப்படியாக குளிர்காலங்களில் குழந்தைகளோடு குழந்தையாக வீட்டுக்குள்ளும், கோடை காலங்களில் மரங்களோடு மரமாக கொள்ளைப்புறத்தில் மளமளவென்று வளர்ந்தது. ஈழ மண்ணில் பிறந்து இந்திய வம்சாவழியாய் இப்போது அமெரிக்க மண்ணில் எங்கள் குடும்பத்தில் ஓர் அங்கத்தினராய் மாறிப்போன என் முருங்கை உறவை காணும்போதெல்லாம் என் கண்ணில் ஈழம் மலர்ந்துவிட்ட மகிழ்ச்சி. இந்த என் முருங்கை வித்து, நெத்து தரும் அந்த தருணத்திற்குள்ளாவது ஈழம் மலர்ந்து விடுமா? என்ற ஏக்கத்தை எனக்குள்ளிருந்து எடுக்க இயலவில்லைதான்.
அந்த முருங்கைக்கீரை மொத்தமாய் எங்களது இரத்தத்தில் சங்கமித்தது. மீண்டும் நான் அமெரிக்கா செல்லும்வரை அந்த முருங்கை உறவை அன்போடு கவனிக்க தாயாய் என் மனைவி, தமக்கையராய் என் மகள்கள்....
ஒவ்வொரு முறை அலைபேசும்போதும் மறக்காமல் நலம் விசாரிக்கிறேன். வாரமொரு முறையேனும் வலை முகநேரம்/நேரடி காணொளி செய்கிறேன் (Face Time / Web cam). காத்திரு......
இதோ இரண்டே மாதங்களில் வந்து விடுகிறேன் என் ஈழத்து உறவே.....
ஏக்கத்தோடு உன் அண்ணன்
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:11 AM
2
comments (நெற்றிக்கண்)
January 21, 2015
"தொட்டால் தொடரும்" நாளை 23.01.2015 வெள்ளியன்று உலகமெங்கும்...
" FCS கிரியேஷன்ஸ் துவார் சந்திரசேகர் தயாரிப்பில், இயக்குனர் கேபிள் சங்கரின் இயக்கத்தில் தமன், அருந்ததி மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் "தொட்டால் தொடரும்" திரைப்படம் நாளை 23.01.2015 வெள்ளியன்று உலகமெங்கும் திரைக்கு வருகிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன். இந்தப் படத்தில் உங்களின் வற்றாத அன்பிற்கினிய நானும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். தயவு செய்து எனதன்பு மிக்க உறவுகளனைவரும் "திரையரங்கிற்கு சென்று" இத்திரைப்படத்தினை பார்த்து படக்குழுவினர் அனைவருக்கும் உங்களின் மேலான ஒத்துழைப்பினை நல்குமாறு வேண்டி நிற்கிறேன்.
நன்றியோடும் வற்றாத அன்போடும்
உங்கள் - நவின் சீத்தாராமன் smile emoticon
"முன்னோட்டங்கள் உங்கள் பார்வைக்கு"
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:59 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: தொட்டால் தொடரும், நவின், நவின் சீதாராமன், நவின் சீத்தாராமன்
January 13, 2015
Celebrities Talk about "Thottal Thodarum" Releases on 23, Jan 2015. Friends :) FYI : "I did a Negative Role" in this movie ;) Thanks for your Support
Posted by
Manuneedhi - தமிழன்
at
6:29 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: adhikaalai info media, adhikaalai.com, adit, aim, nawin seetharaman, thottal thodarum, TT
January 02, 2015
என் மனமார்ந்த 2015 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் :)
இதுவரை நாம் பல வருடங்களை கடந்து வந்திருப்போம். ஆனால், ஒவ்வொருவருக்கும் தாம் கடந்து வந்த வருடங்களுள் மிக முக்கியமான, சுவாரஸ்யமான, மைல் கல்லாய், மனதில் குதூகலமாய் அல்லது வலி நிறைந்ததாய்.... இப்படி எப்படியாயினும் மறக்கவியலா சில வருடங்கள் மனதில் வந்து செல்லும். அப்படி என்னில் வந்து செல்லும் வருடங்களுள் மிக முக்கியமானதொரு வருடம், இதோ இன்னும் சில மணித்தியாலங்களில் நம்மைவிட்டு பிரியப்போகும் இந்த 2014. எத்தனை தவம் இருந்தாலும் இனி திரும்பக்கிடைக்குமா இந்த 2014 ? என் ஆத்மார்த்த முத்தங்களுடன் உன்னைவிட்டுப் பிரியும் இந்த தருணத்தில், என் கண்கள் பணிப்பதை என்னால் மறைக்க முடியவில்லை. போய் வா.... 2014.
உன்னையும், உன்னோடு என்னில் பயணித்த என் அன்பான உறவுகளையும் நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன்.
விமான விபரீதங்கள் அதிகம் நிறைந்தது இந்த 2014, நான் அடிக்கடி விமானப் பயணம் செல்வதாலோ என்னவோ அதன் வலி சற்று மிகுதியாகவே என்னை பாதித்தது. இனி வரும் ஆண்டிலாவது அப்படி நடக்காதிருக்க பிரார்த்திப்போம்.
------------
கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேல் அமெரிக்காவில் குடும்பத்துடன் வசிக்கிறேன். உடலளவில் இங்கிருந்தாலும், உள்ளத்தளவில் என் மண்ணில் மாத்திரமே வசித்துக்கொண்டிருக்கிறேன் என்பதை ஒளிவு, மறைவின்றி இங்கே பதிவு செய்கிறேன். இங்கு பல ஹாலிவுட் திரைப்படங்களிலும், அமெரிக்காவில் படமாக்கப்படும், நம் தமிழ் உட்பட இந்திய திரைப்படங்களில் தொடர்ந்து பணி புரிந்தாலும், எனக்குள் தீராத பசியொன்று இருந்தது. அது, தமிழ் திரைப்படங்களில் நடிக்க வேண்டும். சென்னையிலேயே இருந்து முயற்சிக்க வேண்டும். தேவைப்படும்பொழுது மாத்திரம் அமெரிக்கா செல்ல வேண்டும் என்று திட்டமிட்டு கடந்த இரண்டு வருடங்களாக நான் சென்னையில் தங்கி, நடிக்கும் வாய்ப்புக்காக முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறேன். குறைந்தபட்சம் நான்கு மாதங்களுக்கொருமுறை அமெரிக்கா சென்று வருவதும், அதன் பொருட்டு ஆகும் பொருட்செலவும், மனைவி மற்றும் பத்து வயதுகூட நிரம்பாத குழந்தைகளைப் பிரிந்திருப்பதால் அவர்களின் மனநிலை, குழந்தைகளைக் கவனித்துக்கொண்டும், பணி செய்துகொண்டும், எனக்குத் தேவையான பொருளாதார உதவிகளை செய்துகொண்டும் அன்றாடம் மன அழுத்தத்திலும், பணிப்பளுவிலும் வாழ்வை நகர்த்திக் கொண்டுள்ள என் மனைவியின் மனநிலை..... இப்படி சிக்கல்களையும், சிரமங்களையும், சச்சரவுகளையும்... அடுக்கிக்கொண்டே போகலாம்...
இப்படி இவ்வளவு சுமைகளுடன் நான் தமிழ் சினிமாவில் நடித்தேதான் ஆக வேண்டுமா? பேசாமல் அமெரிக்காவில் இருந்தால் குறைந்த பட்சம் மாதமொன்றுக்கு சுமார் 5000 அமெரிக்க டாலர் சம்பாதிக்கலாமே?
ம்ம்.... ஆக... "தமிழ் சினிமாவில் நடித்தே தீருவேன்" ஒரு வழியாக என் குடும்பத்தினரை தேற்றி, ஒரு தீர்க்கமான முடிவெடுத்து சென்னை புறப்படுகிறேன். என் கையில் வெறும் 90 நாட்களேயான என் குழந்தை. காரணம், ஏற்கனவே இருக்கும் என் குழந்தைகளைக் கவனித்துக்கொள்வதே என் மனைவிக்கு மிகுந்த சிரமமாக இருக்கும்.
சென்னை விமான நிலையத்தில் இறங்கும்போது நடுநிசி, 90 நாட்கள் சரியாக நிறைவடைந்திருந்தது. நான் 90 நாட்களே நிரம்பிய குழந்தையோடு சென்னை வருவேன் என்பது என் அம்மா உட்பட யாருக்குமே தெரியாது. பிறகு, நாட்கள் செல்லச் செல்ல.... என்னோடு பயணித்த என் நெருங்கிய நண்பர்களுக்கு மாத்திரம் தெரிய வந்தது. அனைவரும் என்னிடம் கேட்ட கேள்வி இதுதான்.
"நீ என்ன லூசா...... நீதான், திமிரெடுத்து, சினிமாவில் நடிச்சு, கிழிச்சே தீருவேன்னு வந்திருக்கே, பாவம் அந்த கொழந்தை, என்னடா பண்ணுச்சு?"
அமெரிக்காவிலிருந்து புலம் பெயர்ந்த என் குழந்தையைக் ஒரு வழியாக மீள் குடியமர்த்தி சென்னைவாசியாக்க முயற்சிக்கையில், கிராமத்தில் இருக்கும் என் அம்மாவையும் கூட வைத்துக்கொண்டால், எனக்கு வாய்ப்புத் தேட வசதியாய் இருக்குமே என ஒரு நப்பாசையில் என் அம்மாவை சென்னை அழைத்து வந்தேன். சுமார் பத்து நாட்கள் கடந்தது. ஒரு வழியாக என் அம்மாவுக்கும், குழந்தைக்கும் தீவிர பயிற்சி கொடுத்து, எல்லாம் கூடி வரும் வேளையில்... என் அம்மா,
"தென்னம்பிள்ளைக்கி நம்மள மாதிரி ஒழுங்கா யாரும் தண்ணி ஊத்த மாட்டங்கையா, 20 முட்டையோட கோழிய அடை வச்சுட்டு வந்து இன்னிக்கோட 22 நாளாச்சு, இன்னும் அஞ்சாறு நாள்ல அம்புட்டும் பொறிச்சிரும், ஆளில்லாட்டி அம்புட்டு புறாவையும் நாய் புடிச்சிட்டு போயிரும், கோழிய சாயந்தரத்துல டயத்துக்கு புடிச்சு கோழிக்கூட்டுல அடைக்காட்டி அம்புட்டையும் கீறிப்புள்ள சாப்டுரும், கம்மாய்ல வேற தண்ணியில்ல, வாத்துக்கு நேரா நேரம் தொட்டில தண்ணி வைக்கணும்....." இப்படியாக பொலம்பல். என் மூன்று மாத குழந்தையை பார்த்துக்கொள்வதைவிட, என் அம்மாவை அந்த உறவுக்கார கோழிகளிடமிருந்தும், வாத்துகளிடமிருந்தும் மீட்க பெரும்பாடாய் போனது. இதற்கு ஒரே வழி..... அம்மாவின் வழியிலேயே விட்டுப்பிடிப்பதுதான். என் குழந்தையை அம்மாவுடன் அனுப்பி கிராமத்தில் இருக்க வைப்போம். எனக்குத்தான் அந்த அற்புதமான வாய்ப்பு கிடைக்கவில்லை. என் குழந்தைக்காவது கிடைக்கட்டும் என முடிவெடுத்து, என் இரண்டு குழந்தைகளையும் (என் அம்மாவையும்தான்) கொண்டுபோய் என் கிராமத்தில் விட்டு வந்தேன்.
தினம் தினம் அலைபேசியில் பேசிக்கொண்டாலும், மாதத்திற்கொருமுறை போய் பார்த்துக்கொள்வதும், ஒருபுறம் என் மனைவியை தேற்றுவதும், ஒரு புறம் குழந்தைகளைத் தேற்றுவதும், ஒரு புறம் என்னைத் தேற்றுவதும், ஒரு புறம் வாய்ப்புக்கள் தேடி அலைவதுமாய் கழிந்தது சில மாதங்கள். நான் என் கிராமத்திற்குச் செல்லும்போதெல்லாம்...
என் அம்மா கண்களில் கண்ணீரை கட்டுப்படுத்திக்கொண்டு....
"ஏய்யா.... நானும் ஒங்கூட அமெரிக்க வந்திருக்கேன். எப்படிப்பட்ட ஊரு அது, வேர்க்கவே வேர்க்காத ஊர்ல பொறந்த இந்தப்புள்ள அங்க
இருந்திருந்தா எப்படியெல்லாம் வளந்திருக்கும்! இந்த கொசுக்கடியிலயும், வெயில்லயும், வேணக்கட்டிலயும் இப்படி கஷ்டப்படணுமா? என்ன பாவம் செஞ்சுச்சு இந்த பச்ச சிசு?" என் அம்மா.
"நீயும் இங்கதான இருக்கே! நீ என்ன பாவம் பண்ணே ? நானும் இங்கதானே இருந்தேன்...." இது நான்.
"அதுக்கு சொல்லலய்யா.... எனக்கு பழகிருச்சு"
"இவளுக்கும் பழகிரும்"
"ஒனக்கு எப்பவும் பிடிவாதம், நான் சொல்றத கேளு. பேசாம போயி அங்க பிள்ளையளோட இரு. நீ நடிச்சு கிழிச்சது போதும்".
நான் கல்லூரி செல்லும் வரையில் மின் விசிறி கண்டிராத என் கிராமத்து வாழ்க்கை என்னவென்பது எனக்குத் தெரியும். ஆனாலும், என் தங்கையின் சடங்குக்கு தாய்மாமன் கொடுத்த டேபிள் ஃபேன்தான் என் வீட்டின் முதல் மின் விசிறி. அதுவும் அவ்வளவாய் அன்று தேவைப்படவில்லை.
ஆனால், இன்றோ.... ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்ட என் கிராமம் இன்னொரு சவூதி அரேபியா. என் கிராமத்தில் நான் தங்கும் சில இரவு நேரங்களில் புரண்டு புரண்டு அழும் என் குழந்தையை தூக்கினால், அப்போதுதான் குளிப்பாட்டிய குழந்தையைப்போல் ஈர உடலோடு துவண்டு விழுவதை நான் கண்கூடாக கண்டிருக்கிறேன்.
அவ்வப்போது, சில இயக்குனர்கள் சிறு பாத்திரங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு தந்தனர். நடித்தேன். இந்த நேரத்தில் அவர்களுக்கும் என் நன்றியை இங்கே பதிவு செய்கிறேன்.
சினிமாவில் நடிக்கவும், இயக்குனராகவும் அன்றாடம் அலைந்து திரிந்து போராடும் எத்தனையோ நண்பர்களை நான் சந்தித்திருக்கிறேன். அவர்களோடு ஒப்பிடுகையில் என் சிரமம்
எனக்கொன்றும் மிகப்பெரிதாகத் தெரியவில்லை. கையால் எழுதப்பட்ட காகிதத்தின் நகல்களோடு சினிமா கம்பெனிகளின் முகவரிகளைத் தேடித் தேடி மிதிவண்டியிலும், ஷேர் ஆட்டோவிலும், பைக்கிலும், பஸ்ஸிலும், நடந்தும் வீதி வீதியாக வாய்ப்புத் தேடும் அந்த மாபெரும் மகத்தான என் உறவுகளின் சிரமத்தைவிடவா என் சிரமம் பெரிது ? அவர்களின் வலியை விடவா என் வலி பெரிது ?
எத்தனை கதைகள் வேண்டும்? எத்தனை ஆவணப்படங்கள் வேண்டும்? எத்தனை குறும்படங்கள் வேண்டும்? வடபழனி, ஏவி.எம்-மிற்கு எதிரேயுள்ள அருணாச்சலம் சாலையில் "காவேரி கார்னர்" தேநீர் நிலைய வாசலிலும், மணி தேநீர் கடை வாசலிலும் காலை, மாலை வேளைகளில் தவறாமல் வந்து நின்று ஒருவரையொருவர் அறிமுகம் செய்து கொள்வதும், சினிமா கம்பெனிகளின் முகவரிகள் நிறைந்த கையெழுத்து நகல்களை பரிமாறிக்கொள்வதும்.... பசி நிறைந்த வயிற்றோடும், கனவுகள் நிறைந்த கண்களோடும், எதிர்காலம் பற்றிய தீர்க்கமான வெறியோடும்.... அப்பப்பா...
எத்தனையெத்தனை விதவிதமான கதாபாத்திரங்கள் !!
என்னைப் பொறுத்தவரையில் அமெரிக்காவின் ஹாலிவுட் திரையுலக வாய்ப்புகள் மிகச் சுலபம், அனுபவத்தில் கூறுகிறேன்.
சாலிகிராமம் காவேரி கார்னரும், மணி டீக்கடையும் என்னை சென்னையில் இருக்க கட்டாயப்படுத்தியவை. இப்படி நான் பார்த்து பிரமித்த இந்த தமிழ் திரையுலக நடமாடும் எதிர்காலங்களில் என்னையும் ஐக்கியமாக்கிக் கொள்வதில் எனக்குக் கிடைத்த பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கும்?
அது ஒரு சுகமான வலி... ஆம்... எங்களுக்கு அதுதான் வழி....
இவ்வளவு தெரிந்த பின்னும் நான் எப்படி திரும்ப அமெரிக்கா செல்வேன் ? என்னையும் அவர்களோடு இணைத்துக்கொண்டு வீதி வீதியாக வாய்ப்புக்கள் தேடி அலைந்து கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான எதிர்கால தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியா கலைஞர்களுள், நானும் ஒருவன்.
சென்னை வீதிகளில் இதோ வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருக்கிறேன்.....
காவேரி கார்னரிலும், மணி டீக்கடையிலும் முகவரி வாங்கி, வாய்ப்புத்தேடி, பிறகு ஒரு வழியாக வாய்ப்பு கிடைத்து, இன்று தமிழ் திரையுலகில் பிஸி நடிகர்களாக, இயக்குனர்களாக வலம் வரும் எவரும் இதனை பதிவு செய்ய விரும்பவில்லை அல்லது பதிவு செய்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், இந்தக் கம்ப்யூட்டர் யுகத்தில், அப்படிப்பட்ட வசதியற்ற எம் உறவுகள், கைகள் கடுக்கக் எழுதி, அதனை சொந்த செலவில் நகலெடுத்து, அனைத்து நண்பர்களுக்கும் கொடுத்து, அவர்களோடு தாமும் சேர்ந்து வாய்ப்புத் தேடும் அந்த மாபெரும் மகான்கள், துர்பாக்கிய மனிதர்கள், நடிகர்கள் யார்..... ? யாருக்காவது தெரியுமா ?
முதலில் அவர்கள் ஜெயிக்க வேண்டும், காவேரி கார்னர், மணி டீக்கடை மகாநடிகர்கள் ஜெயிக்க வேண்டும்.... பிறகு நானும் ஜெயிக்க வேண்டும்.
ஜெயிப்போம்.... எனக்காக இல்லையேனும், என்னோடு பயணித்த 90 நாட்களேயான என் பிஞ்சுக் குழந்தைக்காக.... என் மனைவி, குழந்தைகளின் தியாகத்திற்காக.... என் அம்மாவின் தள்ளாத வயது சிரமத்திற்காக.... என் குடும்பத்தினரின் எனக்கான பங்களிப்பிற்காக.... இப்படி ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஒராயிரம் வலிகளோடு நிறைந்த வாழ்க்கையின் கனவுகளுக்காக.... வயிற்றுக்காக.... வைராக்கியத்திற்காக.... நிச்சயம் ஜெயிப்போம், தொடர்ந்து போராடுவோம்... தொடும் தூரம் தொலைவில் இல்லை.....
இந்த 2015 நமக்கான ஆண்டு... நம் ஆண்டு...
என்னை அன்போடு அழைத்துச் சென்று பல திரையுலக அலுவலகங்களை அறிமுகம் செய்த எனதன்பு உறவுகளை இங்கே நன்றியுணர்வோடு நினைத்துப்பார்க்கிறேன். அதோடு மட்டுமில்லாமல் என் எதிர்கால பயணங்களில் என்னோடு அவர்களும் பயணிப்பார்கள் என்பதை இங்கே தெளிவாகப் பதிவு செய்கிறேன். நான் சந்தித்த, என்னோடு பயணித்த சென்னையில் மட்டுமின்றி உலகம் முழுக்க உள்ள எனது அன்பான உறவுகளில் கசப்பானவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். "அவர்களால்தான் உண்மையானவர்கள் பிரகாசமாய் தெரிந்தார்கள்" என்பதைத் தவிர அவர்கள் செய்த பிழைதான் என்ன? ஒரு வகையில் அவர்கள் நமக்கு நன்மை புரிந்துள்ளார்கள் என்பதை மாத்திரம் நம் நினைவிற்கொள்வோம்.
எப்படியாயினும்....
உலகம் முழுக்க இருக்கும் என் அன்பான உறவுகள் அனைவரையும் இந்த ஆங்கிலப் புத்தாண்டில் நிறைந்த மனதோடு வாழ்த்துகிறேன். நன்றி :)
தொடர்பில் இருப்போம்.... தொடர்ந்து பயணிப்போம்....
வற்றாத அன்புடன் - நவின் சீத்தாராமன்
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:49 PM
0
comments (நெற்றிக்கண்)
December 29, 2014
என் அழகான சின்ன தேவதை
ஆனால் இந்த ஆண்டு அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என் குடும்பத்தில் அனைவருக்கும் அளவற்ற மகிழ்ச்சி. இப்படி கொண்டாட்டங்களினூடே பக்கத்து மாநிலமான அலபாமாவுக்கு (Alabama) ஒருவார பயணமாக குடும்பத்துடன் சென்றிருந்தேன். பகல் முழுக்க குதூகலமாய் ஊரெல்லாம் சுற்றிவிட்டு இரவு நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலின் நீச்சல் குளத்தில் குளிப்பது வழக்கமாக இருந்தது. இப்படியொரு நாள் நான் குடும்பத்தோடு நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருந்தேன். வழக்கத்திற்கு மாறாக அன்று அதிக நபர்கள் இல்லை. நீச்சல் குளத்தில் மொத்தமே சுமார் 6-7 பேர்தான் இருக்கும். அப்போது ஒர் அமெரிக்க தம்பதியினர் சுமார் மூன்று வயதிருக்கும், ஒரு பெண் குழந்தையோடு உள்ளே வந்தனர். அவர்கள் உள்ளே நுழைந்ததும் நானும் என் மனைவியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். காரணத்தை பிறகு சொல்கிறேன். அந்தப் பெண் குழந்தை என் குழந்தைகளோடு மிக நெருங்கி, குதூகலமாய் நீந்தியும், விளையாடியும், சிரித்தும் மகிழ்ந்தது எங்களுக்கும், அந்த தம்பதியினருக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், நானும் என் மனைவியும் அடிக்கடி பார்த்துக்கொள்வதை தவிர்க்க இயலவில்லை. காரணம், அந்தப் பெண் குழந்தைக்கு அப்படியே தமிழ் முகம். அந்த தம்பதியினர் இருவருமே அமெரிக்கர்கள். கட்டாயம் அவர்கள் அந்தப் பெண் குழந்தையை தத்து எடுத்திருக்க வேண்டும் என எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. கிட்டத்தட்ட எங்களை தவிர யாருமே நீச்சல் குளத்தில் இப்பொழுது இல்லை. குழந்தையோடு வந்த அந்தப் பெண்மணியும், என் மனைவியும் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். நானும், அந்த அமெரிக்கரும் நீச்சல் குளத்தில் குழந்தைகளோடு விளையாடுவதில் மிக மும்முரமாய் இருந்தோம். ஆனால், இரண்டு மேற்பற்கள் விழுந்திருந்த அந்த அழகான குழந்தை மட்டும் என்னிடமும், என் குழந்தைகளிடமும் படுபயங்கர மகிழ்ச்சியாய் விளையாடிக் கொண்டிருந்தது. ஒரு வழியாய் நாங்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டு நீச்சல் குளத்திலிருந்து விடை பெற்றோம். அப்போது இரவு மணி சுமார் 10 இருக்கும். என் மனைவியின் முகத்தில் ஏதோ ஒரு சோகம் பற்றிக் கொண்டிருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. என் கண்களால் "என்ன?" என கேட்கையில், "பிறகு சொல்கிறேன்" என அவள் கண்களால் கூறியதைப் புரிந்துகொண்டு, குழந்தைகள் உறங்கும்வரை காத்திருந்தேன். பிறகு, என்

மனைவி கூறியவை....
"அவர்கள் இருவரும் நாம் நினைத்ததுபோல், கணவன் மனைவி இல்லை. அம்மாவும், மகனும். (முதற்கண் அவர்களை தம்பதியர் என நினைத்ததற்கு மன்னிக்கவும். காரணம், பொதுவாக, அமெரிக்கர்களின் தலைமுடியின் நிறம் மற்றும் உடல் அமைப்பை வைத்து வயதை கணிக்க இயலாத ஒரு குழப்பம் ஏற்படும். சரி, அது போகட்டும்). அந்த அம்மாவுக்கு மூன்று ஆண் குழந்தைகள். கணவர் பிரிந்து சென்று விட்டார். மூன்று மகன்களும் அம்மாவோடு வசிக்கின்றனர். பெண் குழந்தைமேல் அம்மாவுக்கு மட்டுமின்றி, மகன்களுக்கும் அளவற்ற ஆசை. கண்டிப்பாக ஒரு பெண் குழந்தையை தத்தெடுக்க விருப்பப் படுகின்றனர். ஆனால், மூன்று பேருக்குமே இன்னும் திருமணம் ஆகவில்லை. திருமணம் ஆனபின் தம் மனைவியர் தன் அம்மாவுடன் வசிப்பார்களா ? கேள்விக்குறி ? எனவே, திருமணம் ஆவதற்கு முன்னரே ஒரு பெண் குழந்தையை நாம் தத்தெடுப்போம் என முடிவு செய்கின்றனர். இப்படியாக, இணையத்தில் தேடும்பொழுது கிடைத்த தகவல்களின் பேரில் அவர்கள் தத்தெடுத்தது நம் மண்ணில் பிறந்த பெண் குழந்தை. சிறு வயதில் பலாத்காரம், விபச்சாரம், பாலியல் கொடூரங்களால் கற்பிணியாக்கப்பட்டு, பிறந்த குழந்தைகளை பேணி பாதுகாக்க வழியில்லாமல் குப்பைத்தொட்டியிலும், ரயில்வே தண்டவாளங்களிலும் தூக்கி வீசியெறியப்பட்ட குழந்தைகளை தேடி அடைக்கலம் தந்து வளர்க்கப்பட்ட குழந்தைகள் காப்பகத்தில் இருந்து ஒரு குழந்தையை தத்தெடுக்கின்றனர். அப்படி தத்தெடுக்கப்பட்ட அழகான பெண் குழந்தைதான் எங்களோடு நீச்சல் குளத்தில் கொஞ்சி விளையாடிய அந்த அழகான தேவதை. அவள் பிறந்த மண் ஆந்திர மாநிலம், ஐதராபாத். அங்கிருந்து தத்தெடுக்கப்பட்டு, இன்று அமெரிக்க மண்ணில் அனைத்து சுக சௌகரியங்களோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த அழகு தேவதையின் முகம் என் கண்ணைவிட்டு இன்றளவும் நீங்கவில்லை. அந்தக் குழந்தையை அவர்கள் காப்பகத்திலிருந்து ஏற்றுக்கொண்டபொழுது, கிட்டத்தட்ட ஊட்டச்சத்து பற்றாக்குறையால் (Mal-Nutrition) மூன்று கிலோ குறைவாக இருந்ததாகவும், தற்போது கடந்த மூன்று மாதங்களில் இரண்டு கிலோ எடை அதிகரித்திருப்பதாகவும் அந்த தாய் கூறி ஆறுதலடைந்ததை என் மனைவி என்னிடம் கூறியதை நினைக்கையில் என் கண்கள் என் கட்டுப்பாட்டை மீறி கலங்குவதை என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை.
மேலும், அந்த அமெரிக்க தாய் கூறியவை : பல நாடுகளில் இதுபோல் இருந்தாலும், நாங்கள் இந்தியாவை மிகவும் நேசிக்கிறோம். குறிப்பாக எங்களுக்கு தென்னிந்தியாவை அதிகம் பிடிக்கும், அங்குள்ள கலாச்சாரம், கூட்டுக்குடும்ப முறை, உணவு பழக்க வழக்கங்கள் இப்படி பிடித்தவை ஏராளம். அதனால்தான் இந்தக் குழந்தையை நாங்கள் தத்தெடுத்தோம்" என்று அந்த தாய் கூறியதை நான் பெருமையாக நினைக்க இயலவில்லை. மனமெங்கும் மரணவலி. பாரம்பரியமிக்க நம் மண்ணில் இன்னும் இப்படிப்பட்ட கொடுமைகளும், அதனால் ஏற்படும் வரலாற்று இழுக்குகளும் என்னை தீராத வேதனைகளுக்குள்ளாக்கியதை நான் எப்படி இங்கே விளக்க முடியும். எப்படியாயினும், அந்த மாபெரும் மகத்தான உள்ளங்களுக்கு நான் தலை வணங்குகிறேன். பாரம்பரியமும், கலாச்சாரமும், தேசப்பற்றுமாய் இன்னும் ஆயிரம்....ஆயிரம் நாம் எழுதலாம். ஆனால் எங்கோ, யாரோ, எப்படியோ வந்த அந்த குழந்தையை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நம்மில் எத்தனை பேருக்கும் வரும்?
வருத்தத்தோடும், வலியோடும், ஆயிரமாயிரம் கேள்விகளோடும், நிற்கதியாய் நான்........
என் அன்பான கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்.
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:22 PM
0
comments (நெற்றிக்கண்)
September 20, 2014
"கன்னியும் காளையும் செம காதல்" முன்னோட்டம்
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:41 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: adhikaalai.com, athikaalai.com, kanniyum kaalaiyum sema kadhal, kksk, manuneedhi, Navanee, nawin seetharaman, thamizhan
July 09, 2014
"தொட்டால் தொடரும்" முன்னோட்டம்
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:25 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: actor nawin seetharaman, adhikaalai.com, athikaalai, athikalai, comedy actor nawin seetharaman, manuneedhi, nawin seetharaman, tamilann, thamizhan, thottal thodarum, villain
March 30, 2013
"நேற்று இன்று" தமிழ் திரைப்படத்தின் ட்ரெய்லர் : இயக்குனர் பத்மாமகன்
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:31 PM
0
comments (நெற்றிக்கண்)
October 26, 2012
Sillunnu Oru Sandhippu Trailer : www.adhikaalai.com
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:57 PM
0
comments (நெற்றிக்கண்)
August 03, 2012
இயக்குனர் ராமனின் "வசந்தசேனா" ட்ரெய்லர் : விரைவில் திரையரங்குகளில் ...
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:25 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: adhikaalai, anjaneyalu, anji, director raman, nawin seetharaman, vasanthasena
March 12, 2012
கருவ மரம் பஸ் ஸ்டாப் : நவநீ
Posted by
Manuneedhi - தமிழன்
at
6:30 PM
0
comments (நெற்றிக்கண்)
February 23, 2012
"பனித்துளி" திரைப்படத்தில் நான் எழுதிய 'சல்சா' இசைப் பாடல் !!
நண்பர்களே! விரைவில் வெளிவர இருக்கும் பனித்துளி திரைப்படத்தின் பாடல்களை கீழுள்ள இணைப்பில் சென்று தரவிறக்கிக் கொள்ளலாம். இதில் ஐந்தாவதாக உள்ள "பசியா தூக்கமா" என்ற சல்சா இசையில் அமைந்த பாடல் நான் எழுதியது. நண்பர்கள் கேட்டு, ரசித்து தங்களின் மேலான கருத்துக்களைத் தெரிவியுங்கள். இடையிடையே வரும் ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் நண்பர்கள் மன்னிக்க :) கதையின் சூழல் கருதி தவிர்க்க இயலாமல் எழுத வேண்டிய கட்டாயம். நண்பர்களின் புரிதலுக்கு நன்றி!! தொடர்ந்து சிறந்த பாடல்களை தருவேன் என்று கூறி பாடலை ரசித்தமைக்கு நன்றியையும் முன்கூட்டியே தெரிவிக்கிறேன். நன்றி!!இணைப்பில் சென்று தரவிறக்கிக் கொள்ளவும். http://mp3.tamilwire.com/panithuli-2012.html
Posted by
Manuneedhi - தமிழன்
at
7:21 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Adhikaalai Nawin, ganesh venkatraman, lyricist nawin seetharaman, Navanee, nawin seetharaman, panithuli, pasiya thookkama, salsa
December 18, 2011
"ஆங்கில அடிமைகளுக்குச் சுதந்திரம் பற்றிப்பேச அருகதையில்லை" : கலெக்டர் சகாயம்
"ஆங்கில அடிமைகளுக்குச் சுதந்திரம் பற்றிப்பேச அருகதையில்லை" என தான் பதிலெழுதிய சுவாரசியமான தகவல்களை ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சி தலைவர் சகாயம் தெரிவித்தார். மதுரை மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பல்நோக்கு கூட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் பேசும் பொழுது தெரிவித்ததாவது :"அனைத்து துறைகளிலும் தாய் மொழியாம் தமிழை எவ்வளவு சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு வழங்கப்பட்ட கருத்துக்களை நீங்கள் அனைவரும் உங்கள் அலுவலகத்தில் களத்தில் நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும். தமிழ் மொழியை ஆட்சி மொழியாக கருதுவதில் நம்மிடையே உள்ள தாழ்வு மனப்பான்மைதான் இடர்பாடாக இருக்கிறது. தமிழ் மொழி பேசுவதால் நமக்குள் நாமே தாழ்வானவர்கள் என்ற தாழ்வு மனப்பான்மையை முதலில் அகற்ற வேண்டும்.
எந்தவொரு பொருளும் தொலைவில் இருக்கின்ற வரைதான் அதன் மேல் நமக்கு ஒரு ஈர்ப்பு இருக்கும். எப்பொழுது அந்தப் பொருள் நமது கைக்குள் வருகிறதோ அப்பொழுது அதன் மேல் உள்ள ஈர்ப்பு போய்விடும். அதற்காகதான் நான் எப்பொழுதும் சொல்வதுண்டு. ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். மாறாக ஆங்கில அடிமைத்தனத்தை வளர்த்துக் கொள்ளாதீர்கள் என்று!
ஒரு முறை ஒரு கிராமத்தில் சமபந்தி நிகழ்வில் எனக்கு ஒரு அலுவலர் மனு கொடுக்கும் பொழுது மனுவின் இறுதியில் கருப்பையா என்ற தனது பெயரை ஆங்கிலத்தில் எழுதி கையெழுத்திட்டிருந்தார். நான் தமிழ் நாட்டில் தமிழ் மக்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவராக இருக்கிறேன். யாரோ ஒரு ஆங்கிலேயர் எனக்கு ஒரு மனு கொடுத்திருக்கிறார். அவருடைய மனுவைப் பரிசீலிக்க நான் தயாராக இல்லை எனக் கூறிய பொழுது அந்தக் கருப்பையா என்னிடத்தில் வந்து அய்யா நான் தமிழன் தான் என்று சொன்னார்.
நீங்கள் இருப்பது தமிழ்நாட்டில்; பழகுவது தமிழ் மக்களோடு; பிறகு ஏன் உங்கள் கையெழுத்தை மட்டும் ஆங்கிலத்தில் போடுகிறீர்கள். அதை தமிழில் போட்டு கொண்டு வாருங்கள். ஒரு முறை போட்டால் உங்களுக்குப் பழகாது. அதனால் குறைந்தது 50 முறை ஒரு தாளில் போட்டு கொண்டு வாருங்கள் என்று கூறினேன். அவரும் அவ்வாறே செய்தார். இந்த நிகழ்வு அடுத்த நாள் அனைத்து செய்தி தாள்களிலும் வெளிவந்தது. இதை படித்த யாரோ ஒருவர் எனக்கு ஒரு தந்தியை அனுப்பியிருந்தார்.
அதில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களே, கையெழுத்தைத் தமிழில்தான் போட வேண்டும் என்று சொல்லுவது எங்கள் உரிமையை, சுதந்திரத்தைப் பறிப்பது போன்ற செயலாகும். இதற்கு நீங்கள் பதில் கூற வேண்டும் என்று கூறியிருந்தார்.
இவ்வளவு மெனக்கட்டு எனக்கு தந்தி அனுப்பியிருந்த அவருக்கு 'ஆங்கில அடிமைகளுக்குச் சுதந்திரத்தைப் பற்றி பேச அருகதை இல்லை' என்று பதில் அனுப்பியிருந்தேன். எதற்கு இதை சொல்லுகிறேன் என்றால், அந்த அளவிற்கு ஆங்கில மோகம் நம் தமிழ் மக்களிடையே பரவி கிடைக்கிறது.
பல்வேறு மொழிகளை அறிந்திருந்த பாரதி, 'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று பாடினான். ஆனால் ஒரு மொழியைக்கூட உருப்படியாக தெரிந்து கொள்ளாத நாம், நம் தாய் மொழியை விட்டு ஆங்கிலத்தின் மீது மோகம் கொண்டவர்களாக ஆங்கில அடிமைகளாக உள்ளோம்.
எனவே, தமிழர்களாகிய நாம் நம்முடைய பழம் பெருமைகளைப் பேசி பேசியே காலங்களைக் கடத்துவதில் பயனில்லை. என்றைக்கு ஆங்கில அடிமைத்தனத்திலிருந்து விடுபடுகிறோமோ அன்று தான் தமிழன் என்ற பெருமை நிலைக்கும். இதற்கு இந்த ஆட்சி மொழி கருத்தரங்கம் நல்ல பாதை வகுக்கும். இந்த நிகழ்ச்சி வெறும் ஆட்சி மொழி கருத்தரங்காக மட்டுமல்லாமல் உங்களுக்குச் சுதந்திர காற்றைச் சுவாசிக்கும் களமாக அமைந்திருக்கும். உங்களிடையே ஒரு பெரிய தாக்கத்தை உருவாக்கியிருக்கும். இங்கு வந்திருக்கும் அனைவரும் தங்கள் அலுவலகங்களில் எழுதப்படும் கோப்புகளும், தங்களின் கையெழுத்துகளும் இனி தமிழிலேயே அமையும் என்று உறுதியேற்க வேண்டும். மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை நூற்றுக்கு நூறு சதவீதம் அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழி நடைமுறைப்படுத்தப்படும்" என்று கலெக்டர் சகாயம்பேசினார்.
இறுதியில் ஆட்சி மொழியை அலுவலகங்களில் சிறந்த முறையில் பயன்படுத்திய அலுவலர்களுக்குப் பரிசு கேடயமும், பாராட்டுச் சான்றிதழ்களையும், ஆட்சி மொழி கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைத்து அலுவலர்களுக்குச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் கா.மு.சேகர், திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் முனைவர். பெ.சந்திரா, திருநெல்வேலி மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் திருமதி.லெ.கல்யாணசுந்தர், தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் (பொறுப்பு) முனைவர்.கோ.விசயராகவன் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
முன்னதாக மதுரை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் முனைவர்.கா.பசும்பொன் வரவேற்புரையாற்றினார். முடிவில் மாவட்ட ஆட்சியாளரின்ன் நேர்முக உதவியாளர் (பொது) திரு.அலிஅக்பர் நன்றியுரையாற்றினார்.
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:10 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Adhikaalai Nawin, adhikaalai.com, collector Sagayam, madurai collector, nawin seetharaman




