October 23, 2007

முஸ்லிம் அமைப்புகள் ஒரே அணியில் செயல்பட வேண்டும்: ஒசாமா அழைப்பு

கெய்ரோ: "ஈராக்கில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முஸ்லிம் அமைப்புகள் ஒரே அணியில் இணைந்து செயல்பட வேண்டும்" என அல்-குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் வேண்டுகோள் விடுத்துள்ள `ஆடியோ டேப்' வெளியாகி உள்ளது. அல்-குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் பேசிய `ஆடியோ டேப்' அல்-ஜசீரா `டிவி'யில் ஒளிபரப்பானது. அதில், பின்லேடன் பேசியிருப்பதாவது: ஈராக்கில் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள பல்வேறு முஸ்லிம்கள் அமைப்புகள் தனித்து செயல்படுவது கவலையளிக்கிறது. கருத்து வேறுபாடுகளை மறந்துவிட்டு, அனைவரும் ஒரே அணியில் இணைந்து செயல்பட வேண்டும். அவர்கள் தவறு செய்கின்றனர். உங்களில் சிலர் கடமைகளை மறந்து செயல்படுவது கவலையளிப்பதாக உள்ளது. இது சரியான நடவடிக்கை அல்ல. இதனால், நமது சகோதரர்களுக்கு இடையே பிரிவினை ஏற்படும். தனித்தனியாகச் செயல்படுவோர் ஒரே அணியில் இணைவதைக் காண முஸ்லிம்கள் காத்திருக்கின்றனர். உங்களுக்கான கடமையிலிருந்து தவற வேண்டாம். அனைத்து இடங்களிலும் உள்ள அல்-குவைதா அமைப்பின் சகோதரர்கள் குழுக்களாக பிரிந்து பயங்கரவாதத்தைச் செயல்படுத்தக் கூடாது. தலைவர்கள் தங்களது தனிப்பட்ட செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்காக போராடக் கூடாது. அதற்கு பதிலாக முஜாகிதீன்களின் வழியை பின்பற்ற வேண்டும். முஜாகிதீன்கள் இந்த நாட்டின் செல்வங்கள். இறைவன் கட்டளையை மீறுவோர் அதற்கான தண்டனையை எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு பின்லேடன் பேசியுள்ளார். சமீபகாலமாக ஈராக்கில் போராடி வரும் முஸ்லிம் அமைப்புகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர் தாக்கி வருகின்றனர். குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்கள் அமெரிக்க ராணுவத்தோடு இணைந்து கொண்டு, அல்-குவைதாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதை கருத்தில் கொண்டே, பின்லேடனின் பேச்சு அடங்கிய `டேப்' வெளியிடப்பட்டுள்ளது என அமெரிக்க ராணுவ தரப்பில் கூறப்படுகிறது. இந்த `ஆடியோ டேப்' எப்போது பதிவு செய்யப்பட்டது என்பது பற்றிய விவரங்களை அல்-ஜசீரா வெளியிடவில்லை. இது பற்றி அமெரிக்க அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

No comments: