December 16, 2007

இலங்கையில் நிரந்தர சமாதானம் எனது இறுதி ஆசைகளில் ஒன்று: சர் ஆர்தர் சி.கிளார்க்

கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இனமோதல் வன்முறைகளினால் அல்லலுறும் இலங்கைத் தீவில் நிரந்தர சமாதானம் மலரவேண்டுமென்பது தனது இறுதி ஆசைகளில் ஒன்று என்று இங்கிலாந்தினைப் பிறப்பிடமாகவும், இலங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல வானியல் விஞ்ஞான ஆய்வு எழுத்தாளர் சர் ஆர்தர் சி.கிளார்க் இன்று தெரிவித்திருக்கிறார். 1917 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி பிரித்தானியாவில் பிறந்த "செய்மதி தொழினுட்பத்தின் தந்தை" என்று வர்ணிக்கப்படும் சர் ஆர்தர் சி.கிளார்க் கடந்த 50 வருடங்களிற்கும் மேலாக இலங்கையில் தங்கியிருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வானியல் ஆய்வுக் கட்டுரைகளையும், நூற்றிற்கும் மேற்பட்ட புத்தகங்களையும் இதுவரை வெளியிட்டிருப்பதோடு பிரபலமான பல சர்வதேச விருதுகளையும், உள்ளூர் விருதுகளையும் பெற்றிருக்கிறார். தனது 90வது பிறந்த தினத்தினையொட்டி கருத்து வெளியிடும்போதே இவர் இலங்கையில் நிரந்தர சமாதானம் குறித்த தனது ஆதங்கத்தினை வெளியிட்டிருக்கிறார். செய்தித் தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்திய முன்னோடி என்ற ரீதியில் உலகப் புகழ்பெற்ற இவர், ஆழ்கடலில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டுமென்பதற்காக 1950 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இலங்கைக்கு வந்திருந்தார். 1979 ஆம் ஆண்டு தொடக்கம் 2002 ஆம் ஆண்டுவரை இவர் கொழும்பு மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணிபுரிந்திருப்பதோடு, இலங்கைப் பிரஜை ஒருவரிற்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் அதியுயர் விருதுகளான "சாஹித்ய ரத்னா", "வித்யா ஜோதி", மற்றும் "லங்கா அபிமான்ய" போன்ற விருதுகளும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டிருக்கிறார். கொழும்பில் இன்று இடம்பெறும் இவரது பிறந்த தினக் கொண்டாட்டங்களில், 1965 ஆம் ஆண்டு முதன்முதலில் விண்வெளியில் இறங்கி நடந்த புகழ்பெற்ற ரஷ்ய வானியல் விஞ்ஞானியான டாக்டர் அலெக்ஸே லினோவ் விசேட அதிதியாகக் கலந்துகொள்கிறார் என்பது இங்கு சிறப்பம்சமாகும்.

No comments: