December 19, 2007

இசை - சர்.சி.வி.ராமன்

"கலையின் உன்னதமான வெளிப்பாட்டில்தான் முழுமையான மகிழ்ச்சியைக் காணமுடியும். கட்டுப்பாடில்லாத உணர்ச்சி வேகத்தின் கொந்தளிப்பில் அல்ல. பண்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடுதான் கலை எனப்படுகிறது. இசை அப்படிப்பட்ட ஓர் வெளிப்பாட்டின் முயற்சிதான்" - சர்.சி.வி. ராமன்

"மத்திய மாநில அரசுகள் ஒத்துழைத்தால் இந்திய பொருளாதார வளர்ச்சி வேகத்தை மேலும் அதிகப்படுத்த முடியும்" - பிரதமர் மன்மோகன் சிங்

இந்தியாவின் மத்திய மற்றும் மாநில அரசுகள் அர்ப்பணிப்புடன் செயற்படும் பட்சத்தில், இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய வளர்ச்சியை நிலைபெறச் செய்வதுடன், அதனை பத்து சதவீதம் உயர்த்தவும் முடியும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் தெரிவித்துள்ளார். மாநில முதலமைச்சர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் இன்று உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள், உலக அளவிலான பொருளாதார நிலை குறித்து கவலையும் வெளியிட்டுள்ளார். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்கள், மாநில வாரியான நிதி ஒதுக்கீட்டை எளிமைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்திய ஆறுகளை இணைக்கும் திட்டத்தை ஒரு தேசியத் திட்டமாக அறிவித்து, அதற்காக கால வரையறையுடனான செயற்திட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கருணாநிதி கேட்டுக்கொண்டார்.

December 18, 2007

மூன்று ஹிஜிரி வருடங்களைக் கொண்ட 2008

"நம்மை நெருங்கி வரும் 2008 ஆங்கிலப் புத்தாண்டில் மூன்று ஹிஜிரி இஸ்லாமிய வருடங்களைக் கொண்டதாக இருக்கும். ஹிஜிரி 1428-ஆம் வருடத்தின் கடைசி மாதமான துல்ஹஜ்ஜின் கடைசி ஒன்பது நாட்கள் ஜனவரி 2008-லும், ஹிஜிரி 1429-ஆம் வருடம், அதனைத் தொடர்ந்து ஹிஜிரி 1430 டிசம்பர் 2008-ல் ஆரம்பமாகும். இதுபோன்ற நிகழ்வு 33 வருடங்களுக்கு ஒருமுறைதான் நடக்கும். அடுத்து 2041-ஆம் ஆண்டில்தான் மூன்று ஹிஜிரி வருடங்களைக் காணலாம்"

இன்றைய குறள்

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கட் செய்தலிற் றீது

பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்

அறத்துப்பால் : பயனில சொல்லாமை

கல்லூரி நண்பர்கள் - பாலாஜி சக்திவேல்

பிரதமர் மன்மோகன் சிங் - தமிழக முதல்வர் கருணாநிதி சந்திப்பு

தமிழக முதல்வர் மு. கருணாநிதி இன்று மாலை புதுடெல்லி வந்தார். சிறிது நேரத்தில் பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை குறித்து விரிவாக விவாதித்ததாகத் தெரிவித்தார். தமிழ்நாடு மற்றும் கேரள மாநில முதல்வர்கள் மீண்டும் இந்தப் பிரச்சினை பற்றிப் பேசுமாறு பிரதமர் யோசனை தெரிவித்தாக கருணாநிதி தெரிவி்த்தார். ஏற்கெனவே உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் பேச்சு நடத்தி அதில் எந்தப் பலனும் ஏற்படவில்லை என்று சுட்டிக்காட்டியபோது, மீண்டும் பேசுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார். அவரது யோசனையை நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன் என்று முதல்வர் தெரிவித்தார். அதனால் பயன் ஏற்படுமா என்று கேட்டபோது, பயன் இருக்கலாம் என்று எதிர்பார்த்துத்தான் பிரதமர் பேசச் சொல்லியிருக்கிறார் என்றார் கருணாநிதி. இலங்கைக்கு ராணுவ உதவிகளை அளிப்பது தொடர்பாக அந்த நாட்டு அரசுடன் பேச்சு நடத்த இந்திய அதிகாரிகள் குழு ஒன்று கொழும்பு சென்றிருப்பதாக செய்திகள் வெளியாகியிருப்பது குறித்தும், மலேசியத் தமிழர் பிரச்சினை குறித்தும் செய்தியாளர்கள் கேட்டபோது, இலங்கை, மலேசிய பிரச்சினைகளை மத்திய அரசு பொறுப்பேற்று அதற்கு ஆவன செய்து வருகிறது. மத்திய அரசு விவகாரங்களில் குறுக்கிட விரும்பவில்லை என்றார் முதல்வர். மலேசியாவைப் பொருத்தவரை அது அவர்களது உள்விவகாரம் அதைப்பற்றி நான் பேச விரும்பிவில்லை என்றும், அவர்கள் ஓரளவு நிம்மதியாக வாழ்வதையும் கெடுக்க விரும்பவில்லை என்றும் முதல்வர் கருத்துத் தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு நிதியுதவி தர வேண்டும் என்று பிரதமரிடம் கோரியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்

மேக்கப்-புக்கு மூன்று வருடமா?

"ஒரு திருமணத்திற்கோ அல்லது ஒரு விருந்து அழைப்பிற்கோ செல்லுமுன்பு தங்களை ஒப்பனை செய்துகொள்வதற்கு சராசரியாக ஒரு மணி நேரமும் 12 நிமிஷங்களும் ஆகிறதாம். மொத்தத்தில் தங்கள் ஆயுள் காலத்தில் சுமார் மூன்று வருடத்தைப் பெண்கள் அவர்கள் வெளியில் செல்லும்போது தங்களை அலங்கரித்துக் கொள்வதில் செலவிடுகிறார்களென மிகவும் உபயோகமான ஒரு ஆய்வு தெரிவிக்கிறது"

இந்திய முன்னாள் அமைச்சர் ஜக்தீஷ் டைட்லருக்கு சீக்கியக் கலவரத்தில் பங்கு விவகாரம்

புதிய விசாரணைகளுக்கு நீதிமன்றம் உத்தரவு : இந்தியாவில் இருபது வருடங்களுக்கு முன்னர் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜக்தீஷ் டைட்லருக்கு தொடர்பு இருந்தது என்ற குற்றச்சாட்டு தொடர்பில் புதிய விசாரணைகளுக்கு தலைநகர் தில்லியிலுள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வாழ்ந்துவரும் முக்கிய சாட்சியான ஜஸ்பிர் சிங்கின் வாக்குமூலத்தை மத்திய புலனாய்வுத்துறை-சிபிஐபதிவுசெய்யவேண்டுமென நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சீக்கியர்களுக்கெதிரான தாக்குதல்களை ஒருங்கிணைத்து நடத்தியதில் டைட்லருக்கு பங்கு இருந்தது என்பதற்கு நம்பக்த்தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக அரசு விசாரணையில் தெரியவந்ததை அடுத்து டைட்லர் கட்டாயத்தின் பேரில் பதவி விலகினார். இக்குற்றச்சாட்டினை டைட்லர் மறுக்கிறார்.

December 17, 2007

இயக்குனர் பாலாஜி சக்திவேல்

இன்றைய குறள்

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்

பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள்

அறத்துப்பால் : பயனில சொல்லாமை

சுழன்றும் ஏர் பின்னது உலகம்

"உலக அரங்கில் இந்திய பொருளாதாரம் தலைநிமிர்ந்து நிற்கக் காரணம் விவசாயிகள். விவசாயத் தொழிலாளர்கள், பல்வேறு தரப்பினருடைய உழைப்பு ஆகியவைதான் காரணம். இந்தியாவில் உழைப்பு அதிகமாக உள்ளது" - ப. சிதம்பரம்

எழுச்சியுறும் இந்தியா

இந்திய பொருளாதாரத்தின் அதி வேக வளர்ச்சி குறித்து பிபிசி பல பெட்டகங்களைத் தயாரித்து வழங்குகிறது. இவை குறித்து தமிழோசையில் ஒலிபரப்பான பெட்டகங்களை நேயர்கள் இங்கு கேட்கலாம். முதலில் இந்தியா காணும் அதீத பொருளாதார வளர்ச்சி அங்கு கலாச்சார மாற்றங்களுக்கும் இடம் தந்துள்ளது. ஆயினும் திருமணம் என்று வரும் போது, அங்கு பெரும்பாலும் பெரியோர்கள் பார்த்துச் செய்து வைக்கும் மற்றும் குடும்பத்தினரால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களுக்கே அங்கு இன்னமும் முக்கியத்துவம் காணப்படுகிறது...Please click the link....http://www.bbc.co.uk/tamil/matri.ram
இன்னும் சில ஆண்டுகளிலேயே இந்தியா பொருளாதார ரீதியில் உலகில் மூன்றாவது இடத்தை எட்டிவிடும் என நிபுணர்கள் கூறுகின்றனர். 1991ல் அன்றைய பிரதமர் நரசிம்மராவால் தொடங்கப் பெற்ற பொருளாதாரச் சீர்திருத்தங்களால் விளைந்துள்ள அசுர வளர்ச்சிக்கு தமிழ்நாட்டில் சிறப்பானதொரு சாட்சி கோயம்புத்தூர்
இந்தியாவின் இந்த வேகமான பொருளாதார வளர்ச்சி அதன் அண்டைய நாடுகளிலும் சாதக மற்றும் பாதக விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். அந்த வகையில் அது இலங்கையின் மீது ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் குறித்தும் பிபிசியின் செய்தியாளர்கள் ஆராய்ந்துள்ளனர்

மலேசிய தமிழர்கள் மீதான சில குற்றச்சாட்டுகள் விலக்கப்பட்டன

மலேஷியாவில் தாங்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாக சமீபத்தில் போராடிய இந்திய வம்சாவழித் தமிழர்களில் 31 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. தற்போது அவர்கள் மீதான கடுமையான குற்றச்சாட்டுக்கள் சில நீக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த 31 பேரில் மாணவர்களான 5 பேர் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் விலக்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் அவர்கள் சார்பிலான சட்டத்தரணியான சிவநேசன். அதேவேளை ஏனைய 26 பேரைப் பொறுத்தவரை அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளில் முக்கிய குற்றச்சாட்டான, கொலைக் குற்றச்சாட்டு விலக்கப்பட்டு விட்டதாகவும், ஏனைய இரண்டு குற்றச்சாட்டுகளான, சட்டவிரோதமாகக் கூடியமை மற்றும் பொதுச் சொத்துக்கு பங்கம் விளைவித்தமை ஆகியவற்றை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் இவற்றுக்கான தண்டனைகள் எதிர்வரும் 27 ஆம் திகதி நீதிமன்றம் கூடும் போது அறிவிக்கப்படும் என்றும் சிவநேசன் தெரிவித்துள்ளார். இதற்கிடையே இந்தப் போராட்டத்தை நடத்திய மலேசிய இந்து உரிமைகள் நடவடிக்கைக் குழுவின் முக்கிய 5 உறுப்பினர்கள் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்பில் ஒரு ஆட்கொணர்வு மனுவையும் தாம் தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

பிரமோத் மஹாஜன் கொலை வழக்கில் அவரது சகோதரர் குற்றவாளியாக அறிவிப்பு

இந்தியாவின் பிரதான எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரமோத் மஹாஜன் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட வழக்கில், அவரது சகோதரர் குற்றவாளி என்று மும்மையிலிருக்கும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் அமைச்சரான பிரமோத் மஹாஜனை, அவரது சகோதரரான பிரவீன் மஹாஜன் சுட்டுக்கொன்றதாக நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம் மும்மையிலிருக்கும் அவரது வீட்டில் சுடப்பட்ட பிரமோத் மஹாஜன், சில நாட்கள் கழித்து மருத்துவமனையில் இறந்தார். குடும்பச் சண்டை காரணமாகவே பிரமோத் மஹாஜன் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் இந்த கொலையை தான் செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்த பிரவீன் மஹாஜன், பின்னர் நீதிமன்ற விசாரணைகளின்போது இதை மறுத்தார். அவருக்கான தண்டனை என்ன என்பதை, நீதிமன்றம் நாளை செவ்வாய்க்கிழமை அறிவிக்க இருக்கிறது.

December 16, 2007

கீரிப்பிள்ளை

வழக்கம் போல் முழு ஆண்டு விடுமுறைக்குக் கிராமத்தில் இருக்கும் தன் தாத்தா பாட்டி வீட்டிற்கு வந்திருந்த சுபிக்ஷா, தன் சந்தேகத்தைப் பாட்டியிடம் கேட்டாள்.
"ஏம்பாட்டி! பிள்ளைனா என்ன?" "ம்ம்! பிள்ளைன்னா, சின்னக் கொழந்தை, அதாவது பாப்பா-ன்னு அர்த்தம்" என்றாள் பாட்டி. "அப்பறம் ஏன், கிளிப்பிள்ளை, கீரிப்பிள்ளை, அணில்பிள்ளை, தென்னம்பிள்ளை-ன்னெல்லாம் சொல்றாங்க?"
பதில் சொல்லாவிட்டால் இன்று தன்னை ஒரு வேலையையும் செய்யவிடமாட்டாள் சுபிக்ஷா என்பது அந்தப் பாட்டிக்குத் தெரியும். தனக்குத் தெரிந்தவரை, தன் பாட்டி தனக்குச் சொன்ன கதைகளை தன் பேத்திக்கும் சொல்ல ஆரம்பித்தாள். "சுபிக்ஷா கண்ணு! நீ கேட்ட கேள்வி ரொம்ப அருமையான கேள்விடா செல்லம். பாட்டி இதோ சொல்றேன், சமத்தாக் கேட்டுட்டு, ஒங்க ஸ்கூல்ல உள்ள சினேகிதிங்ககிட்ட எல்லாம் போயி சொல்லணும் என்ன?" என்று ஆரம்பித்தாள்.
"பிள்ளைன்னு எல்லாத்தையும் சொல்ல மாட்டோம். பொதுவாக் குழந்தைங்களையும், குழந்தைங்க மாதிரி கூடவே வளர்க்கிற பிராணிகளயும் மட்டுந்தான் பிள்ளைன்னு சொல்லுவாங்க. பிள்ளைங்க அவங்க வளந்து பெரியவங்களானதும், தங்களோட அம்மா அப்பாவ நல்லா கவனிச்சுக்குவாங்க. தாத்தா பாட்டி ஆனதும் அவங்களுக்கு ஓடி ஆடி வேலை செய்ய முடியாது, யாராச்சும் உதவிக்குத் தேவைப்படும். அப்படிப்பட்ட நேரங்கள்ல பிள்ளைங்கதான் அவங்களுக்கு ஒத்தாசையா இருப்பாங்க. நீ சொன்ன, கிளிப்பிள்ளை, கீரிப்பிள்ளை, அணில்பிள்ளை, தென்னம்பிள்ளை எல்லாம் வயசான காலத்துல அவங்களுக்கு உதவியா இருக்கும். அதுனாலதான் அதுங்களயெல்லாம் 'பிள்ளை'னு சொல்றோம் கண்ணு!"
"அதுங்கல்லாம் எப்படி பாட்டி உதவி செய்யும்?" சுபிக்ஷா"
நாம எப்படி கோழி, நாய், பூனை, வாத்து இதெல்லாம் வளக்கிறமோ, அதே போல நீ சொன்ன இதெல்லாம் வளத்தாலும் பிற்காலத்துல பிள்ளைங்க உதவுறது மாதிரி உதவுமாம், அதுனாலதான்டா அப்படிச் சொல்றோம். விளக்கமாச் சொல்றேன் கேளு!
ஒரு கிராமத்துல ஒரு அம்மா அப்பா இருந்தாங்களாம். அவங்களுக்கு ஒரே பையன். அவனை நல்லாப் பெரிய படிப்பெல்லாம் படிக்கவச்சு வேலைக்காகப் பட்டணத்துக்கு அனுப்பி வச்சாங்களாம் அந்த அப்பா அம்மா. அவங்க பையனுக்கு சின்ன வயசா இருக்கும்போதே, அவங்க வீட்டுல ஒரு சின்னத் தென்ன மரம் நட்டு வச்சுத் தண்ணி ஊத்திகிட்டே வந்தாராம் அந்த அப்பா. இப்போ அந்த மரமும் பெரிய மரமாயிருச்சாம். அவங்க பையன் பட்டணத்துல வேலை பாக்குறதால அடிக்கடி வந்து அப்பா அம்மாவை வந்து கவனிச்சுக்க முடியலை. அந்த மாதிரி நேரங்கள்ல எல்லாம் அந்தத் தென்னைமரம்தான் பிள்ளையாம். அது பெருசா வளந்து, காய் காச்சு, இளநீர், தேங்காய், மட்டை எல்லாமே குடுத்துச்சாம். டெய்லி, அதை வித்து, அந்தக் காசு வச்சு அவங்க சாப்பிடுவாங்க. இளநீர் குடிப்பாங்க, மட்டை, ஓலை எல்லாமே அவங்களுக்கு உபயோகமா இருந்துச்சாம். அதுனாலதான் பெத்த பிள்ளைங்க தன்னோட அம்மா அப்பாவுக்கு உபயோகமா இருக்கற மாதிரியே அந்தத் தென்னை மரமும் அவங்களுக்கு உபயோகமா இருந்ததால அதுக்குப் பேரும் ‘தென்னம்பிள்ளை’ அப்படீன்னு சொல்றோம், புரிஞ்சுதா?" பாட்டி சொல்லி முடித்தாள்.
சுபிக்ஷாவுக்குத் தெரியும், பாட்டி மீதியையும் சொல்லி முடித்துவிடுவாள் என்று. மிகவும் சீரியஸாக உட்கார்ந்து 'ம்' போட்டுக் கொண்டிருந்தாள்.
"அப்பறம், ஏன் அணில் பிள்ளைன்னு சொல்றோம்னா, இராமர்னு ஒரு கடவுள், அவரு ரொம்பக் களைப்பா இருக்கறப்போ, குடிக்கவே தண்ணி கெடைக்காத அந்த நேரத்துல, ஒரு அணில் தென்னைமரத்துல ஏறி, அங்கேருந்து ஒரு இளநீர் பறிச்சு அவருக்குக் கொண்டுபோயி குடுத்துச்சாம், அதுனால அவரு ரொம்பச் சந்தோசப்பட்டு, நன்றியுணர்வோட, அதைப் பாசமா முதுகுல தடவிக் குடுத்தாராம். அதுனாலதான் அதோட முதுகுல மூணு கோடு இருக்கு. அதுலயிருந்து அதுவும் மனுசங்க இருக்குற இடத்துலயே சேந்து இருக்கறதால அணில்பிள்ளைன்னு பேரு".
"ஏம்பாட்டி! ஒரு அணில்தானே தண்ணி குடுத்துச்சு, அந்த அணில்மேல மட்டுந்தானே கோடு இருக்கணும்! எப்படி எல்லா அணில் மேலயும் கோடு இருக்கு?"
"ஏன்னா! கோடு போட்டது கடவுளாச்சே! அப்படி ஒரு அணில்மேல மட்டும் கோடு இருந்து மத்த அணில்மேல கோடு இல்லாட்டி மனுசங்க மத்ததத் துன்புறுத்தலாம் இல்லயா? அதுக்காகத்தான் எல்லா அணில் மேலயும் கோடு இருக்கு. பெரும்பாலும் நாம இருக்கற இடத்துலதான் அணிலும் இருக்கும்.
ம்ம்..அப்பறம் வேற என்ன பாக்கி?" பாட்டி.
"கிளிப்பிள்ளை" சுபிக்ஷா.
"சமத்துக்குட்டிடி நீ.
சரி! எதுக்காக கிளிப்பிள்ளைனு பேரு தெரியுமா? ஏன்னா! அது அழகா குழந்தைங்க மாதிரியே கொஞ்சிக் கொஞ்சிப் பேசும், வீட்ல அதைவளத்துப் பேசக் கத்துக் கொடுத்தோம்னா, யாரு வந்தாலும் கொஞ்சிப் பேசும். உங்க தாத்தா பாட்டி மாதிரி தனியா இந்தக் கிராமத்துல இருக்கறவங்களுக்கு ஒரு பிள்ளை மாதிரி பேச்சுத் துணைக்கு சௌகரியமா இருக்கும். வெளி ஆட்கள் யாரு வந்தாலும், வந்ததை நமக்குக் கத்திச் சொல்லிரும். அதுனாலதான் அதுக்குக் கிளிப்பிள்ளைனு பேரு".
"இனியென்ன பாக்கி இருக்கு?"
தொடர்ந்து படிக்க இணைப்பில் செல்க... http://www.nilacharal.com/ocms/log/12170712.asp

இன்றைய குறள்

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னு முயிர்க்கு

பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும். வாழ்க்கையும் நிம்மதியாக அமையும்

அறத்துப்பால் : புறங்கூறாமை

ஹைக்கூ கவிதைகள்

1.வாழ்க்கைச் சுமைகளை
வரிசையாகச் சுமக்கும்
ஏழை விவசாயி….

குட்ஸ் வண்டி

2.வண்டுக் காதலனைக் கண்டதும்
மலருக்குப் பதட்டம்
வியர்வையாய்….

பனித்துளிகள்

3.அழுதவானம் எழுதிப்பார்க்கும்
அந்தரங்க வரிகள்….

நீரோடை

4.இந்தியத் தாயின்
இறுதிக் கண்ணீர்த்துளி....

இலங்கை

5.சொந்தமண்ணிலிருந்து
துரத்தப்பட்ட அகதி
துடுப்பற்ற பரிசல்

பிறைநிலா


வார்ப்பு.காம்-ல் எனது கவிதைகள்http://www.vaarppu.com/view.php?poem_id=949

விவாகரத்து : இலக்கிய ஆர்வம்

குடும்பத்தோடு இலக்கியக் கூட்டங்களுக்கு வருவது மன்னிக்க முடியாத பாவங்களில் ஒன்றைப் போலவே கருதப்படுகிறது. விவாகரத்து கோரி வழக்குப் போடுவதற்கு எளிய காரணம், இலக்கியத்தில் ஒருவனுக்கு ஆர்வமிருக்கிறது என்று சொன்னால் போதும் என்றே தோன்றுகிறது" - எஸ். ராமகிருஷ்ணன், எழுத்தாளர்

இலங்கையில் நிரந்தர சமாதானம் எனது இறுதி ஆசைகளில் ஒன்று: சர் ஆர்தர் சி.கிளார்க்

கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இனமோதல் வன்முறைகளினால் அல்லலுறும் இலங்கைத் தீவில் நிரந்தர சமாதானம் மலரவேண்டுமென்பது தனது இறுதி ஆசைகளில் ஒன்று என்று இங்கிலாந்தினைப் பிறப்பிடமாகவும், இலங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல வானியல் விஞ்ஞான ஆய்வு எழுத்தாளர் சர் ஆர்தர் சி.கிளார்க் இன்று தெரிவித்திருக்கிறார். 1917 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி பிரித்தானியாவில் பிறந்த "செய்மதி தொழினுட்பத்தின் தந்தை" என்று வர்ணிக்கப்படும் சர் ஆர்தர் சி.கிளார்க் கடந்த 50 வருடங்களிற்கும் மேலாக இலங்கையில் தங்கியிருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வானியல் ஆய்வுக் கட்டுரைகளையும், நூற்றிற்கும் மேற்பட்ட புத்தகங்களையும் இதுவரை வெளியிட்டிருப்பதோடு பிரபலமான பல சர்வதேச விருதுகளையும், உள்ளூர் விருதுகளையும் பெற்றிருக்கிறார். தனது 90வது பிறந்த தினத்தினையொட்டி கருத்து வெளியிடும்போதே இவர் இலங்கையில் நிரந்தர சமாதானம் குறித்த தனது ஆதங்கத்தினை வெளியிட்டிருக்கிறார். செய்தித் தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்திய முன்னோடி என்ற ரீதியில் உலகப் புகழ்பெற்ற இவர், ஆழ்கடலில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டுமென்பதற்காக 1950 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இலங்கைக்கு வந்திருந்தார். 1979 ஆம் ஆண்டு தொடக்கம் 2002 ஆம் ஆண்டுவரை இவர் கொழும்பு மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணிபுரிந்திருப்பதோடு, இலங்கைப் பிரஜை ஒருவரிற்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் அதியுயர் விருதுகளான "சாஹித்ய ரத்னா", "வித்யா ஜோதி", மற்றும் "லங்கா அபிமான்ய" போன்ற விருதுகளும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டிருக்கிறார். கொழும்பில் இன்று இடம்பெறும் இவரது பிறந்த தினக் கொண்டாட்டங்களில், 1965 ஆம் ஆண்டு முதன்முதலில் விண்வெளியில் இறங்கி நடந்த புகழ்பெற்ற ரஷ்ய வானியல் விஞ்ஞானியான டாக்டர் அலெக்ஸே லினோவ் விசேட அதிதியாகக் கலந்துகொள்கிறார் என்பது இங்கு சிறப்பம்சமாகும்.

டாக்டர் பத்மஸ்ரீ PB.ஸ்ரீனிவாஸ்

Powered by eSnips.com