May 15, 2007

"நான் மனிதனே!"

நான் சாதாரணமானவன், என் மனத்தில் பட்டதை எடுத்துச் சொல்லி யிருக்கிறேன். இதுதான் உறுதி. இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை. ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள், மற்றதைத் தள்ளிவிடுங்கள்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்தக் குணத்தையும் என்மீது சுமத்தி விடாதீர்கள். நான் தெய்வத்தன்மை பொருந்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால் மக்கள் என் வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள்.
"நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள், நான் சொல்லுவது வேதவாக்கு, நம்பாவிட்டால் நரகம் வரும் நாத்திகர்கள் ஆகிவிடுவீர்கள்"
என்று வேதம், சாத்திரம், புராணம் கூறுவதுபோலக் கூறி, நான் உங்களை அடக்குமுறைக்கு ஆளாக்கவில்லை, நான் சொல்லுவது உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, உத்தி அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள். ஒருவனுடைய எந்த கருத்தையும் மறுப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், அதனை வெளியிடக்கூடாது என்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது.

சுயமரியாதை மனித தர்மத்தை அடிப்படையாக வைத்து, மனித சமுதாயத்திற்கு யாராவது தொண்டாற்ற வேண்டுமானால் முதலில் செய்யவேண்டியது, பகுத்தறிவுப்படி மக்களை நடக்கச் செய்வதும் சிந்திக்கச் செய்வதுமே யாகும். மனிதன் தனக்குள்ளாகவே, தான் மற்றவனைவிடத் பிறவியில் தாழ்ந்தவன் என்கிற உயர்வு தாழ்வு உணர்ச்சியைப் போக்கித் தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் பெற வேண்டும். சீர்திருத்தமும், சுயமரியாதையும், சட்டம் கொண்டு வந்து, வாக்கு வாங்கி நிறைவேற்றப் பெற்றுவிடலாம் என்று நினைப்பது ஒரு நாளும் முடியாத காரியம் மனிதன் உலகில் தன் சுயமரியாதையை - தன்மானத்தை உயிருக்குச் சமமாகக் கொள்ளவேண்டும். மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம். மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம்.
நான் யார்?

நான் எனக்கு தோன்றிய, எனக்குச் சரியென்று படுகிற கருத்துக்களை மறைக்காமல் அப்படியே சொல்லுகின்றேன். இது சிலருக்குச் சங்கடமாகக்கூட இருக்கலாம். சிலருக்கு அருவருப்பாக இருக்கலாம். சிலருக்குக் கோபத்தையும் உண்டாக்கலாம் என்றாலும் நான் சொல்வது அத்தனையும் ஆதாரத்îதாடு கூடி உண்மைக் கருத்துக்களே தவிர பொய்யல்ல. எந்தக் காரியம் எப்படி இருந்தாலும் அரசியலில், பொது வாழ்க்கையில் கண்டிப்பாக மனித தர்மம் தவிர வேறு எந்தக் கால தர்மமோ, சமய தர்மமோ புகுத்தப்படக்கூடாது என்பதுதான் எனது ஆசையே ஒழிய, உலகத்தில் உள்ள மக்கள் எல்லாம் என் விருப்பம்போல்தான் நடக்க வேண்டும் என்பதல்ல. எனது பொதுவாழ்வில் நான் அறிவு பெற்ற பிறகு, பார்ப்பனரல்ல èதார் ஆட்சி என்றால் வலியப்போய் ஆதரித்தே வந்திருக்கிறேன். இதில் நான் மானம் அவமானம் பார்ப்பதில்லை. நான் என் ஆயுள் வரை யாரிடமும் ஓட்டுக் கேட்க மாட்டேன். எனக்காக இரண்டு நல்ல (புகழ்) வார்த்தைகள் சொல்லும்படி யாரிடமும் எதிர்பார்க்கமாட்டேன்.
"நீ ஒரு கன்னடியன் எப்படித் தமிழனுக்குத் தலைவனாக இருக்கலாம்?"
என்று என்னைக் கூடக் கேட்டார்கள். "தமிழனுக்கு எவனுக்கும் யோக்கியதை இல்லையப்பா" என்றேன். இதற்குக் காரணம், ஒரு தமிழன், இன்னொரு தமிழன் உயர்ந்தவனாக இருப்பதைப் பார்த்துச் சகித்துக் கொண்டிருக்கவே மாட்டான்.

பெரியார்

1879 - 1973


"கலாநிதி மாறனின் பதவியிறக்கம்"

"தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்,
தருமம் மறுபடி வெல்லும்"

பாரம்பரியம் மிக்கத் தமிழகம், தமிழக அரசியல் களம் இன்னும் என்னென்ன கேலிக்கூத்துக்களைச் சந்திக்கப் போகிறதோ!பொறுத்திருந்து பார்ப்போம்!