April 17, 2008

பெண் பெயரில் ஆண் எழுதலாமா? மாலதி மைத்ரிக்கு எதிர்வினை - கவிஞர் அமிர்தம் சூர்யா

கவிதையில் மரபின் கைபிடித்து, இப்பொழுது பின் நவீனத்துவத்தில் உலா வருபவர். 'உதிரி சயனத்தை நீரில் அலசும் வரை', 'பகுதி நேரக்கடவுளின் நாட்குறிப்பேடு' ஆகிய கவிதைத் தொகுதிகளையும், 'முக்கோணத்தின் நான்காவது பக்கம்' எனும் கட்டுரைத் தொகுதியையும் வெளியிட்டிருப்பவர். விரைவில் ஒரு சிறுகதைத் தொகுப்பும் வெளிவர இருக்கிறது. நவீன ஓவியம், விமர்சனம், நாடகம் போன்ற துறைகளிலும் இயங்கி வருபவர். சென்னைவாசியான இவருக்கு நாடு முழுக்க இலக்கிய நட்பு. அவர் கண்டு, கேட்டு, பார்த்து, படித்த பல விசயங்களை பகிர்ந்து கொள்ளும் இத்தொடர் எளிய நடையில் உங்கள் தோள்மீது கை போட்டு உரையாடிச் செல்லும்

இனி அவரும், நீங்களும்....
பெண் பெயரில் ஆண் எழுதலாமா? மாலதி மைத்ரிக்கு எதிர்வினை:-
பெண் பெயரில் ஆண் எழுதுவதை அனுமதிக்கலாமா? என்ற மாலதி மைத்ரியின் கட்டுரைக்கு என் எதிர்வினை: இலக்கிய உலகில் நிறையப் பெண்கள், ஆண்களைப் போல உடை அலங்காரம்,சிகை அலங்காரம் மட்டுமல்ல இலக்கியக் கூட்டத்திலேயே புகைபிடித்தபடியிருக்கும் காட்சியைப் பார்க்கையில் இவர்களுக்கு ஆண்கள் மீது ஏன்தான் இவ்வளவு மோகம் என்று தோன்றுகிறது? இது ஒருபோதும் ஆண் அடையாளத்தை அழிக்கும் முய்ற்சியாக பிதற்ற முடியவில்லை.அல்லது 'அணங்கு' இதழ் தலையங்கத்தைப் போல இம்மாதிரியான பெண்கள் ஆண்களாக தங்களை மாற்றிக் கொள்ள அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள்லாமே என அபத்த காழ்ப்புக் கொட்ட தோன்றவில்லை. ‘பெண்கள் பெயரில் ஆண்கள் எழுதலாமா?’ என்று மாலதி மைத்ரி கேட்கிறார். இது அசட்டுத்தனமான பெண்ணாதிக்க உளறாலாக தோன்றுகிறது. 'பெண்களுக்கு ஆண் நண்பர்கள் இருப்பதை அனுமதிக்கலாமா? மேற்கத்திய உடையில் உலவும் பெண்கள் நமது கலாசாரத்தைச் சிதைக்கும் குறியீடுகள் - இதை ஒப்புக் கொள்ளலாமா?
'கணவன் அனுமதி இல்லாமல் எழுதும் பெண்களை இலக்கிய உலகம் அங்கீகரிக்கலாமா?' இப்படி எல்லாம் கேள்விகளை எழுப்பினால் எப்படி அபத்தமாக, அறிவிலியாக, உளறலாக தோன்றுமோ அப்படியான ஒத்திசையில் உள்ளது அந்தக் கேள்வி. அனுமதி கொடுக்கலாமா? வேண்டாமா? என்று முடிவெடுத்து குத்தும் ராஜ்ய முத்திரையை எப்பொழுது பெற்றீர்கள்? சரி இந்தக் கேள்வி எழுப்பும்முன் இப்பிரச்சினை எங்கிருந்து தோன்றியது?
பெண் படைப்பாளிகளின் கவிதகளைத் தொகுக்கும்போது சில ஆண் படைப்பாளர்களின் கவிதையும் சேர்ந்து விடுகிறது. விமர்சனம் செய்த எழுத்தாளர் ஆண்/ பெண் யார்? என்ற அடிப்படை இலக்கிய புழக்கம் கூட தொகுப்பாளருக்கு இல்லையென கிண்டலடிக்க அன்று துவங்கியது இப்பிரச்சினை. குறைந்தபட்சம், இலக்கிய உலகில் பரிச்சயம் வேண்டும். அல்லது தொகுக்கிறபோது சம்பத்தப்பட்ட நபரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அப்போது 'அம்மணி..நான் பெண் அல்ல;பெண் பெயரில் எழுதும் ஆண் 'என்று பதில் கிடைத்திருக்கும். இந்த அடிப்படைச் சட்ட நாகரீகம் கூடத் தெரியாமல் தொகுத்துவிட்டு அதிலிருந்து தன்மீது படிந்த அங்கதத்தை துடைத்துக் கொள்ள இந்தக் கருத்தியலைக் கையில் எடுக்கிறார்கள்.

"ப்ரியம்'- என்ற சொல் அன்பை / நேசத்தை குறிக்கும் சமஸ்கிருதச் சொல். இதை ஒரு ஆண் கவிஞர் புனைபெயராக கொண்டுள்ளார். இது எப்படி பெண் பெயராகும்? (இவருடைய கவிதையைத்தான் தொகுப்பில் சேர்த்து விட்டனர்)

'அமிர்தம் '-என்ற சொல் அமிழ்தம் என்ற சொல்லின் திரிபு.(தமிழுக்கு அமுதென்று பேர்-பாரதிதாசன்)அமிர்தம் – சாகா வரம் தரும் உணவுப் பொருள் .இது பெண் பெயரா?

சக்தி + அருள்+ஆனந்தம் இதில் இந்த மூன்று சொல்லில் திட்டவட்டமாக பெண் அடையாளம் கொடுக்கமுடியுமா? சக்தி அருளாந்தம் என்று எழுதினால் ஆண் அடையாளம். சக்தி அருளானந்தம் என்பது கூட தோரணையில் ஆண் பிம்பமே!.சமீபத்தில் ஒரு பெண் இந்தப் பெயரில் கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார்.( என்ன ஆணவம்! ஆண் பெயரில் ஒரு பெண் எழுதுவதா?... சும்மா தமாஷ்)

ஆக பொதுச் சொல்லை அல்லது பெண் பெயரை ஆண்கள் சூட்டிக் கொள்வது அவரவர் உரிமை. அதைக் கிண்டலடிப்பதை நிறுத்திவிட்டு பேராசிரியர். பத்மாவதி விவேகானந்தன் போன்ற மாலதி சகாக்கள் தனது பெயருக்குப் பின்னால் ஆறாவது விரல் போல ஒட்டிக் கொண்டு திரியும் விவேகானந்தன் என்ற ஆண் பெயரை அப்புறப்படுத்திவிட்டு காத்திரமான பெண்ணியவாதியாக மாறவேண்டும். பத்மாவதி விவேகானந்தன் என்பதுதான் தமிழ் மரபு / தமிழ் நாகரீகம் என்றால் அதற்கு தலை வணங்குகிறோம்.

அரசியல் தலைவர்கள் 'தமிழ் இலக்கியவாதிகள் தங்கள் பெயரை தூய தமிழில்தான் வைத்துக் கொள்ள வேண்டும். இனி தமிழ் அடையாளத்தை அழிக்கும் அபத்தம் நிகழக் கூடாது என்று பேச அதிக நாட்கள் இல்லை.அப்படியொரு சூழல் வந்தால் ... இதை நமட்டுச் சிரிப்போடு புறக்கணிப்பார்கள். அப்படித்தான் ‘அணங்கு’ கேள்வியைப் புறக்கணிக்கிறோம்.

இம்மாதிரியான பட்டிமன்றக் கூத்து நவீன கூடாரத்திலுமா? தன் இருத்தலை நியாப்படுத்த, நிலைப்படுத்த இம்மாதிரியான கருத்தியலையா கையில் எடுப்பது? விவாதிக்க,எவ்வளவோ விசயம் இருக்கிறது. இனிமேலாவது, ஆரோக்கியமான விவாதங்களை மாலதி எழுப்ப வேண்டும்.

வைரமுத்து பாசறைக் கலைப்பும், பாண்டிச்சேரியில் ஒரு சிறந்த நூல் கூட வராத அவலமும்-ராஜ்ஜா பேச்சுக்கு கண்டனம் :- பாண்டிச்சேரியில் தோழர் இளங்கவி அருள் என்ற நண்பர் - வைரமுத்துதாசன். ‘கவிஞர் வைரமுத்து பாசறை’ - என்ற பெயரில் கவிஞருக்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்து விழா எடுப்பார்.

இப்பொழுது நவீன இலக்கியவாதிகளின் அறிமுகம கிடைத்து, அவர் வைரமுத்துவை கடந்து பயணப்படத் தொடங்கி விட்டார். பாசறையைக் கலைத்துவிட்டு 'மீறல்'- என்ற இலக்கிய அமைப்பை நடத்தி வருகிறார். அவ்வப்பொழுது புதுவையில் நவீன படைப்பாளிகளைக் கூட்டி நிகழ்ச்சிகள் நடத்துவார்.அப்படி நடந்த ஒரு நிகழ்ச்சியில்தான் பேரா.ராஜ்ஜா என்பவர் பேசினார்.பாண்டிச்ச்சேரி இலக்கியத்தை ஆங்கிலத்தில் எழுதிவருகிறாராம்.

அதற்கு ஆக்ஸ்போர்டு உதவி வருகிறதாம். இதை எல்லாம் சொல்லிவிட்டு "பாண்டிச்சேரியில் ஒரு சிறந்த் நூல் கூட வரவில்லை 'என்று முடித்தார். கூட்டத்தில் ரமேஷ்(பிரேம்), மாலதி மைத்ரி உள்ளிட்ட பாண்டிச்சேரி படைப்பாளிகளும் இருந்தார்கள்.ஒருவரும் எதிர்ப்புக் காட்டவில்லை. நான் மட்டும் எழுந்தேன். "ராஜ்ஜா அவர்களே, பாரதிதாசன், பிரபஞ்சன், ரமேஷ்-பிரேம், மாலதிமைத்ரி இவர்களில் ஒருவர் கூட சிறந்த நூலைத் தரவில்லை என்றால் உங்களின் வாசிப்பும் , தரவரிசையும் சந்தேகத்திற்குரியது. அல்லது குறுகிய அரசியலுக்கு உட்பட்டது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். இனி ஒருபோதும் பாண்டிச்சேரியில் உங்களுக்குத்க்கு தென்படாது.

கூட்டம் முடிந்து வெளியில் வந்தேன். பெரியவர் ஒருவர் இடைமறித்தார். “தம்பி ஏம்பா இது உனக்க்கு? சம்பந்தப்பட்டவங்களே சும்மா இருக்கும்போது தேவையா உனக்கு? .ராஜ்ஜாவை அனுசரிச்சுப்போன இங்கே நிறைய ஆதாயம் இருக்கு தம்பி. மேடையில் மாலதியும், ரமேஷும் அமைதியாகத்தானே இருந்தனர்.."என்றார்.

'சபை நாகரிகம் கருதி அவங்க ரெண்டு பெரும் அப்படி இருந்திருக்கலாம்' என்றேன்.

'அட போப்பா.. சபை நாகரீகமா? எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசும்போது உரிமைக்க்காக கூட்டத்தில் கலாட்டா செய்த நவீனவாதிகளுக்கு சபை நாகரீகம் தெரியுமா?' என்றார். நான் அமைதியானேன். இதுவரை 26 நூல்கள் எழுதிய ரமேஷ் -பிரேம் படைப்புகள் ஒரு நாள் கருத்தரங்கம் சமீபத்தில்தான் ந்டைபெற்றது என்பது உபரித் தகவல். ராஜ்ஜா பேசியதற்கு எதிர்வினையாக இதைக் கருத வேண்டியதில்லை.

'திருநங்கை' - மதிப்பீடு ஆண்களிடமிருந்தே தொடங்க வேண்டும்:-

வட சென்னை விளிம்பு நிலை மக்களும், அரவாணிகளும் சகஜமாக தோழமையோடு பழகுவதை கவனித்திருக்கிறேன். எப்படி இந்த இணக்கம் வந்து விடுகிறது? என்பது என்னுடைய பழைய கேள்வி.

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் 'இப்படிக்கு ரோஸ்' - என்ற நிகழ்ச்சி பார்த்தேன்.அந்த நிகழ்ச்சியை நடத்துபவர்- ரமேஷ்பாபு என அறியப்பட்டு அமெரிக்காவின் லூதியானா பலகலை கழகத்தில் படிப்பு முடித்தவர். அதன்பின் அரவாணியாக மாறி இப்போது ரோஸ் - ஆக அவதாரம் எடுத்துள்ளார்.

ரோஸ், 3 அரவாணிகளை நேர்காணல் செய்தார். ஒருவர் - நவீன இலக்கிய சூழலில் அறியப்பட்ட லிவிங்ஸ்மைல் வித்யா. "ரயிலில் பிச்சையெடுக்குபோது எனக்கு அது பிச்சையாக தெரியவில்லை.உன்னைப் போல நல்ல குடும்பத்தில் பிறந்து .உன்னைப் போல கம்யூட்டர் சயன்ஸ் படித்துள்ள என்னை பெண் தன்மை இருப்பதாலேயே என்னைப் புறக்கணிப்பது என்ன நியாயம்?எனவே எனக்கு நீ அபராதம் செலுத்த வேண்டும் என்று கேட்பது போல்தான் தோன்றும். நான் கேட்டது பிச்சை அல்ல:அது அபராதம்." என்றார். சபாஷ்! நவீனத்துவப் பார்வை அது.

இன்னொரு அரவாணியின் நேர்காணல். அது முற்றிலும் மாறுபட்டது. அரவாணியாக மாற அவருடைய குடும்பமே அனுமதித்ததாம். "பெண்களைப்போல் உறுப்புக்கள் அமைய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டேன் என்னை ஒருவர் விரும்பினார். என்னை திருமணம் செய்து கொள்ளவும் முடிவெடுத்தார். இருவர் வீட்டிலும் சம்மதம். திருமணமும் நடந்து முடிந்தது. என் கண்வரின் நண்பர்கள் என்னை அக்காள் என்றும் அண்ணி என்றும் அழைப்பார்கள் ' என்று கூறி முடித்தார்.

இப்படியும் ஒரு பக்குவப்பட்ட குடும்பம். சமூக சூழல் மற்றும் மனோ பாவங்கள் மாற்றி அமைக்கும் முன்னுதாரண நண்பர்கள். அரவாணியை மனைவியாக ஏற்றுக் கொண்ட அந்த முகம் தெரியாத மனிதனின் நெஞ்சுரம் கண் முன் வந்து போனது.

ரயில் வண்டியியில் மாறி மாறி வித்யாவை உதைத்த இதே பூமியில்... இன்னொரு அரவாணி சமூக அந்தஸ்த்துக்கு உய்ர்த்தப்ப்பட்ட சம்பவம். முரண்களால் நெய்யப்பட்ட உலகம் நம் கண் முன்னே விரிகிறது.

தொலைக்காட்சியில் அந்த நிகழ்ச்சி முடிந்ததும் கவிஞர் திலகபாமாவிடமிருந்து தொலைபேசி. "சூர்யா இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சி பாத்தியா...அந்தப் பொண்ணுடைய துயரமும் , அந்த அம்மாவின் அழகான குடுமபமும் அடடா...அந்தப்பெண்ணின் கணவன் யார் என்று நம்மைத் தேட வைக்கிறது" என்றார். எனக்கு பெரிய குழப்பம்."எந்த அம்மா? எந்தப் பொண்ணு? யாரைச் சொல்லுறீங்க? என்றேன்.

"ஏம்பா இப்ப்டிக்கு ரோஸ் நிகழ்ச்சி பாக்கலையா?" நான் பிறகு சுதாரித்துக் கொண்டேன்.

நான் முழுக்க முழுக்க அவர்களை அரவாணியாக பாவித்து, அவர்களின் துயரங்களை உண்மையில் ஆத்மார்த்த அக்கறையோடுதான் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் திலகபாமாவோ அவர்களை முழுப்பெண்களாகவே நினைத்து அவர்களுக்கான அங்கீகாரத்தை ‘அந்தப் பொண்ணு… அந்த அம்மா’ என்ற்கிற சொற்பிரயோகத்தின் மூலம் வெகு இயல்பாக ஒன்றிவிடுகிறார். என் பழைய கேள்வி செத்துப் போனது.

இது திலகபாமாவிற்கானது மட்டுமல்ல;பொதுவான எல்லாப் பெண்களுக்குமானதுதான் போலும். பெண்களின் உலகமும், ஆண்களின் நிலைமையும் முற்றிலும் மாறானது.

அரவாணிகள் / பால் குறைபாடுடையோர்/ மாற்றுப் பாலினத்தார் என புதுப்புது அடை மொழியில் விளிக்காமல் 'திருநங்கை' என்ற சொற்பிரயோகமே இனி மரபார்ந்த நாகரீக துவக்கமாயிருக்கும். எல்லா மாற்றங்களும் ஆண்களிடமிருந்தே துவங்க வேண்டியுள்ளது என்பது மறுதலிக்க முடியா உண்மைதான்.