February 24, 2008

பதவி விலகுகிறார் பாகிஸ்தான் அதிபர் முஷாரப்

பாகிஸ்தான் அதிபர் பெர்வெஷ் முஷாரப் பதவி விலகுகிறார். பாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாகிஸ்தான் அதிபர் பெர்வெஷ் முஷாரப்பை ஆதரித்த பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (Q) கட்சி படுதோல்வி அடைந்தது. எதிர்கட்சிகளான பெனாசிர் பூட்டோ கட்சியும், நவாஸ் ஷெரீப் கட்சியும் பெருவாரியான வெற்றி பெற்றன.

இதனை அடுத்து இரண்டு கட்சிகளும் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளன. அதற்கான ஒப்பந்தமும் செய்யப்பட்டு விட்டது. பெனாசிர் கட்சியைச் சேர்ந்தவர் புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார். இதனால் முஷாரப்புக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் அதிபர் பதவியிலிருந்து பதவி விலக முடிவு செய்துள்ளார். இதற்கான அறிவிப்பு இன்னும் இரண்டொரு நாட்களில் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது.

தேர்தலில் தோல்வி அடைந்தாலும்கூட பெனாசிரின் கணவர் ஆசிப் அலி சர்தாரியை தனது பக்கம் இழுத்து, க்யூ பிரிவு முஸ்லீம் லீக் கட்சியுடன் கூட்டணி அமைக்க வைத்து ஆட்சியமைக்க முஷாரப் தரப்பு முயன்றது. ஆனால் முஷாரப்பின் கோரிக்கையை ஆசிப் அலி சர்தாரி நிராகரித்து விட்டார்.

எம்.ஜி.ஆர். தரப்பு மணமகன் : ஜெயலலிதா தரப்பு மணமகள்

எம்.ஜி.ஆர். பெயர் சூட்டிய ஆண் குழந்தை மணமகனாகவும், ஜெயலலிதா பெயர் சூட்டிய பெண் குழந்தை மணமகளாகவும் ஜெயலலிதாவின் 60-வது பிறந்த நாள் விழாவில் திருமணம் செய்து கொண்டனர். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவின் ஒரு பகுதியாக சென்னை பூந்தமல்லி செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானத்தில் 60 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை ஜெயலலிதா நடத்தி வைத்தார்.

திருமணத்தை நடத்தி வைத்த ஜெயலலிதா பேசுகையில்:- போயஸ் தோட்டத்திலிருந்து இந்த புனித ஜார்ஜ் பள்ளியை நோக்கி நான் வருகின்ற வழியெல்லாம் கண்டது மனித நதிகள். இந்த திடலுக்கு வந்த உடன் நான் காண்பது மக்கள் கடல்.

என் தந்தை தனது 42-வது வயதில் மறைந்தார். என் தாயார் 41வது வயதில் மறைந்தார். என் அண்ணன் 49-வது வயதில் மறைந்தார். நான் இன்று 60 வயது நிரம்பி, 61-வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறேன். இதற்கு என் தாயாரின் ஆசியும், என் அரசியல் ஆசான் எம்ஜிஆரின் அருளாசியும்தான் காரணம். நீங்கள் என்மேல் வைத்திருக்கும் ஈடு இணையற்ற அன்புதான் காரணம்.

என்னிடத்தில் நீங்கள் என்னை பார்க்கவில்லை. உங்களை பார்க்கிறீர்கள். உங்களிடத்தில் நான் என்னையே பார்க்கிறேன். இந்த பாசப்பிணைப்புதான் நம்மிடையே இன்று இந்த அன்பு சந்திப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கைம்மாறு கருதாத இந்த பாசப்பரிமாற்றத்தை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இது என் 60-வது பிறந்த நாள் விழாக் கோலமா? இல்லை 65 ஜோடிகளின் மகத்தான மணவிழா கோலமா? என்றால் இரண்டும்தான். அறம் எனப்படுவதே இல்வாழ்க்கை என்னும் வள்ளுவப் பெருமானின் வாக்கிற்கு இணங்க இல்வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் மணமக்கள் இல்லறத்தை நல்லறமாக நடத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்த 60 மணமக்களுக்கும் அம்மா வீட்டு சீர்வரிசையாக 60 விதமான பொருட்களை வழங்கி இருக்கிறேன். இப்படி இலவச திருமணங்களை நடத்துவதில் இணையற்ற வரலாறு படைத்தது அதிமுக என்பதை இந்த நாடே அறியும். மற்றவர்கள் இந்த சாதனையை படைத்ததுண்டா? வாங்கியே பழக்கப்பட்ட கைகள் பிறருக்கு கொடுக்குமா? எப்படி பெறலாம் என்ற எண்ணம் எப்போதும் அவர்களுக்கு, எப்படி தரலாம் என்ற எண்ணம் எப்போதும் நமக்கு. ஈந்து சிவந்த கைகளுக்கு சொந்தக்காரரான எம்ஜிஆரின் வாரிசுகள் நாம். வாங்கி சிவந்த கைகளுக்கு சொந்தக்காரர்கள் அவர்கள்.

இந்த 60 ஜோடி மணமக்களில் எம்ஜிஆரால் பெயர் சூட்டப்பட்ட குழந்தை ஒன்று மணமகனாகவும், நான் பெயர் சூட்டிய பெண் குழந்தை மணமகளாகவும் இப்பொழுது வீற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு காலத்தில் வளமோடு இருந்து இன்னொரு காலத்தில் வாடிப்போகும் மரமல்ல நமது இயக்கம். இது கால ஓட்டத்தில் காய்ந்து போகாத கற்பக விருட்சம். எந்த வேடனாலும் இதற்கு குறிவைக்க முடியாது. எந்த விஷ அம்புகளாலும் இதனை காயப்படுத்த முடியாது. தொடர்ந்து படிக்க இணைப்பில் செல்க http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=635&Itemid=52