ஜோஸப் மெய்ஸ்டர் என்பவர் 1885 ஜூலை 4-ம் தேதி ஒரு வெறிநாய் கடியால் கடிப்பட்டார். இங்ஙனம் கடிப்பட்டால் 3 தினங்களில் சாவு நிச்சயம் எனக் கொள்ளலாம். மெய்ஸ்டான் தாய், விஞ்ஞானி லுயிஸ் பாஸ்டரை அணுகினார். அவர் அச்சமயம் வெறிநோய் பற்றி நாய்கள், முயல்கள் மீது பரிசோதனை செய்து கொண்டிருந்தார். ஜூலை 6-ம் தேதி, அது வரை சோதனைச் செய்யப்படாத ஒரு புது தடுப்பூசி மருந்தை அளித்தார். மெய்ஸ்டர் உயிர் பிழைத்தார். அச்சம் ஊட்டும் வெறிநோய் வெற்றிக் கொள்ளப்பட்டது.
நாய்க்கடி என்பது மூளையைத் தக்கும் ஒருவகை நுண்ணுயிரால் (வைரஸ்) ஏற்படும் நோயாகும். அது அதிகமாக நாய்கடியால் ஏற்பட்டாலும் எப்போதாவது அரிதாக பூனைகள், குரங்குகள், ஓநாய்களாலும் ஏற்படலாம்.
உலகம் முழுவதும் சுமார் 1 கோடி மக்கள் ஒவ்வோர் ஆண்டும் நாய்கடி தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள். ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் சுமார் 50,000 மக்கள் நாய்க்கடி நோயால் ஒவ்வோர் ஆண்டும் இறக்கிறார்கள். இதில் 20,000 முதல் 25,000 வரை 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.
இந்த நாய்க்கடியில் சுமார் 67% இந்தியாவில் ஏற்படுகிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 30,000 பேர் நாய்க்கடியால் ஒவ்வோர் ஆண்டும் இறக்கிறார்கள். அதே சமயம் 50 லட்சம் பேர் நாய்க்கடித்த பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள். இந்தியாவில் உள்ள நாய்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 2 கோடி! கடிப்பட்டதில் இருந்து நோய் தொடங்கும் வரையான காலம் 5 நாட்கள் முதல் ஒரு ஆண்டு வரை வேறுபடுகிறது. சராசரியாக இரண்டு மாதங்களில், சதரணமாக இந்த நோய் தொடங்குகிறது. முதலில், முதல் 2-10 நாட்கள் தெளிவற்ற சில அறிகுறிகள் தென்படும். நோயாளி காய்ச்சல், தலைவலி, பசியின்மை, வாந்தி போன்றவற்றால் அவதிப்படுவார். மேலும் கடிபட்ட இடத்தில் வலி, அறிப்பு, மருத்துப்போதல், நமைச்சல் முதலியன இருக்கும். கடைசிக் கட்டத்தில் நோயாளி விழுங்குவதற்குச் சிரமப்படுவார். சில நோயாளிகள் கலக்கத்துடனும், தடுமாற்றத்துடனும் செயல்படத் தொடங்குவர். நோய் வந்த பிறகு இதற்கு வைத்தியம் இல்லை. ஆனால் இந்த நோய் 100% வராமல் தடுக்க தடுப்பூசி உள்ளது. நாய்க்கடி நோய்க்கு 3 வகையான தடுப்பூசிகள் உள்ளன. மிருகத்தின் மூ¨ல்திசு அல்லது திசுவிலிருந்து எடுத்த தடுப்பூசி மருந்து (NTV) ஏ.வியன் தடுப்பூசி (AV)
திசுக்களில் இருந்து பண்ணிய தடுப்பூசி (TCV) திசுகளிலிருந்து உண்டு பண்ணிய தடுப்பூசியால் பல நன்மைகள் உள்ளன. கடிபடுவதற்கு முன்பே, எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளும் சிகிச்சை முறைக்கும், கடிபட்ட பின் செய்யும் சிகிச்சைக்கும் இது மிகவும் பயனளிக்கிறது. மிகவும் குறைந்த வலி உடையது. மிகக் குறைந்த அளவு மருந்தே தேவைப்படும். வயிற்றில் ஊசி போட தேவை இல்லை. நாய்க்கடி நோயின் தாக்குதல் ஏற்படக்கூடிய நிலையில் எவ்வளவு சீக்கிரம் இம்மினோகுளோபிளினும் ஒரு தடுப்பூசியும் எடுத்துக் கொள்ள வேண்டும். அன்றிலிருந்து 3, 7, 14, 28, 90-வது நாட்களில் மேலும் 5 தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள வேண்டும். நாய்க்கடி நோயின் தாக்குதல் ஏற்படக்கூடிய நிலையில் எத்தனை விரைவாக முடியுமோ அத்தனை விரைவாக மருத்துவ உதவி நாடவேண்டும். உடனடியாக, நாய்க்கடி உள்ள இடங்களையும், நகத்தால் பிராண்டிய இடங்களையும் கவனித்துச் சுத்தப்படுத்த வேண்டியது மிக மிக முக்கியமானதாகும், இது முதலாவதாகவும் செய்ய வேண்டியது ஒன்று. காயம் பட்ட இடங்களையும், அவற்றைச் சுற்றியுள்ள இடங்களையும் உடனேயே குழாயின் கீழ் ஓடும் நீரால் நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். நிறைய சோப்பும் நீரும் உபயோகிக்கவும். அதன் பின்னும் இருக்கக் கூடிய கிருமிகளை செயலிழக்கச் செய்ய டிஞ்சர், ஆல்கஹால், டெட்டால், சாவலான் போட்டுக் கழுவ வேண்டும். எரிச்சல் உண்டாக்கக்கூடிய செடிகளின் சாறுகள், காப்பிப்பொடி, மிளகாய்ப் பொடி, உலோகங்கள், அமிலங்கள், சுண்ணாம்பு போன்றவற்றைத் தடவக்கூடாது. கடிப்பட்ட இடத்தைத் தையல் இட்டு உடனடியாக மூடக்கூடாது. மருத்துவரை உடனே அனுகவும். முடிந்தால் கடித்த விலங்கைப் பிடித்து, தனி அறையில் இட்டு, பத்து நாட்கள் உன்னிப்பாகக் கவனித்து, அதற்கு வெறிநோய்க்கான அறிகுறிகள் தோன்றுகின்றனவா என்று பார்க்க வேண்டும்.
நன்றி -குழந்தை மருத்துவர், சைல்ட் டிரஸ்ட் மருத்துவ மனை