October 24, 2007

இன்றைய குறள்

ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்

தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்

அறத்துப்பால் : ஒழுக்கம் உடைமை

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 31 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை, பாப்ரி மசூதி இடிப்பு : 15 இந்துக்களுக்கு ஆயுள் தண்டனை

  • தமிழகத்தின் கோயம்புத்தூரில் 1998 ஆம் ஆண்டு இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளிகளுக்கான தண்டனை விபரம் கோவை அமர்வு நீதிமன்றத்தினால் இன்று அறிவிக்கப்பட்டது. கூட்டுச் சதி, கொலை மற்றும் கொலை முயற்சி, வெடிமருந்துகள் தடைச் சட்டத்தை மீறியது ஆகியவற்றுக்காக குற்றவாளிகளாகக் காணப்பட்ட 70 பேரில், 35 பேருக்கு இன்று தண்டனைகள் அறிவிக்கப்பட்டன. அல் உமா அமைப்பின் தலைவர் பாஷா மற்றும் செயலாளர் அன்சாரி உட்பட 31 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஏனைய நால்வருக்கு ஏற்கனவே அனுபவித்த தண்டனைக்காலம் போதுமானது என்று கூறி, அவர்கள் விடுவிக்கப்பட்டனர். எவருக்கும் மரண தண்டனை கிடையாது
  • இந்தியாவில் 15 இந்துக்களுக்கு ஆயுள் தண்டனை : இந்தியாவில், 1992 ஆம் ஆண்டு அயோத்தியில் இருந்த சர்ச்க்குரிய பாப்ரி மசூதி இடிக்கப்பட்ட பிறகு நடந்த கலவரங்களில் பங்கேற்று, கொலை மற்றும் பிற குற்றங்களை செய்தமைக்காக 15 இந்துக்களுக்கு வட இந்தியாவில் உள்ள ஒரு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.
    பதினோரு முஸ்லீம்களை இவர்கள் உயிருடன் கொளுத்தியதாக நீதிமன்றம் குற்றம் கண்டுள்ளது. கொலை செய்தது, கலவரத்தில் ஈடுபட்டது, தீ வைத்தது போன்ற குற்றங்களைப் புரிந்ததாக 25 பேர் மீது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. சுமார் 15 ஆண்டுகளாக நடந்த வழக்கு விசாரணையின் போது, குற்றம் சாட்டவர்களில் ஒருவர் இறந்து விட்டார். மற்ற 9 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படும் என்று தண்டனை பெற்றவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர் யோகேஷ் பாஷின் கூறியுள்ளார்
  • குரானின் தங்கத்தால் ஆன பிரதி : இஸ்லாமியர்களின் புனித மறையான, திருக்குரானின் 800 ஆண்டு பழமை வாய்ந்த பிரதி ஒன்று லண்டனில் நடைபெற்ற ஏலத்தில், இருபது லட்சம் டாலர்கள் விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது
  • விடுதலைப்புலிகளின் சடலங்கள் அநுராதபுரத்திலேயே அடக்கம் : இதற்கிடையே, அநுராதபுரம் விமானப்படைத் தளத்தின் மீதான தாக்குதலின்போது கொல்லப்பட்ட 20 கரும்புலிகளின் சடலங்களும் அநுராதபுரம் மாவட்ட நீதவானின் உத்தரவுக்கமைய அங்கேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது
  • ஆசியாவில் ஒரு புதிய விண்வெளிப் போட்டி : சந்திரனின் சுற்றுவட்டப் பாதைக்கு செய்மதி ஒன்றை காவிச் செல்லும் திட்டத்துடன் இன்று சீனா ராக்கட் ஒன்றை வெற்றிகரமாக ஏவியுள்ளது.
    சீனாவின், விண்வெளித் திட்டத்தில் தற்போது புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சாதனை இது

கருணை கொலைக்காக காத்திருக்கும் எய்ட்ஸ் நோயாளி

பதேஹாபாத் : அரியானா மாநிலத்தில் பதேஹாபாத் நகரில் அரசு மருத்துவமனைக்கு எதிரே தெருவின் ஓரத்தில் மெத்தை ஒன்றின் மேல் நோயாளி ஒருவர் படுத்து இருக்கிறார். அவருக்கு உதவி செய்ய யாரும் முன் வரவில்லை. எய்ட்ஸ் நோயால் கடுமையாக பீடிக்கப்பட்டுள்ள அந்த நபர் தன்னை கருணை கொலை செய்துவிடும்படி கதறி அழுது வருகிறார்.

அரியானாவை சேர்ந்தவர் நந்த் கிஷோர் (70). இவரது மகன் மோகன் (30). லாரி டிரைவர். பஞ்சாபில் லாரி ஓட்டி வந்தார். பல பகுதிகளுக்கு சரக்கு ஏற்றி சென்று வந்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன் சந்தோஷ் என்ற பெண்ணை மணந்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.கடந்த ஆண்டு மோகனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. பல டாக்டர்களை பார்த்தும் நிலைமை சீரடையவில்லை. வருமானத்துக்கு வழியில்லாததால், மூதாதையர் வீட்டை விற்று நந்த் கிஷோர், மகனுக்கு சிகிச்சை அளித்தார். அதன் பிறகும் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் தென்படவில்லை. ஆறு மாதங்களுக்கு முன்பு தான் மோகனுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது தெரிய வந்தது. இதன் பிறகு அவரது மனைவி சந்தோஷ் தனது மகளுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.பதேஹாபாத் அரசு மருத்துவமனையில் மோகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஒரு கட்டத் தில், மோகனுக்கு சிகிச்சை அளிக்க வசதி இல்லை என்று கூறி, டாக்டர் கள் கைவிரித்து விட்டனர். மருத்துவமனையை விட்டு மோகனை அழைத்து செல்லும்படியும் கூறி விட் டனர். இந்த நகரில் உள்ள ஒரு தர்மசாலாவில் தான் நந்த் கிஷோர் உதவியாளராக பணியாற்றி வருகிறார். எனவே, தனி வீடு பார்த்து மகனை கவனித்து கொள்ள வசதி இல்லை.எனவே, மருத்துவமனை வெளியே வெட்டவெளியில் சாலை ஓரம் ஒரு மெத்தையை போட்டு மோகனை படுக்க வைத்துள்ளார். மோகனின் உடலின் மேற்புறத்தில் கொப்புளங்கள் தோன்றியுள்ளன. அவரால் நடந்து செல்லக் கூட முடியவில்லை. அந்த அளவுக்கு நிலைமை மோசம் அடைந்துள்ளது. அவர் அருகே கூட செல்ல யாரும் விரும்புவதில்லை. அதையும் மீறி அருகே வரும் நபர்களிடம் தன்னை கருணை கொலை செய்து விடும்படி மோகன் கதறி அழுகிறார். ஆனால், அவருக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை.மேலும், அப்பகுதியில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் மோகன் தங்கள் பகுதியில் படுத்து இருப்பதை மிகவும் அசவுகரியமாக கருதுகின்றனர். எனவே, மோகனை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என நந்த் கிஷோருக்கு கெடு விதித்துள்ளனர். தனது மகன் விரைவில் இறந்து விடுவான் என்பது நந்த் கிஷோருக்கு நன்கு தெரியும். டாக்டர்களும் இதை உறுதி செய்துள்ளனர். மரணம் தனது மகனுக்கு நிம்மதியை அளிக்கும் என்ற நம்பிக்கையில், தள்ளாத வயதில் நந்த் கிஷோர் முடிந்த அளவுக்கு உதவிகள் செய்து வருகிறார்.