December 24, 2008

ராஜீவ் காந்தி கொலை - அவிழத் தொடங்கியுள்ள மர்மங்கள்

ரங்கநாத்..... முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலை வழக்கைப் பற்றி அறிந்து வைத்திருப்பவர்களுக்கு இந்தப் பெயர் நன்கு பரிச்சயம். ஏனெனில்,ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, சம்பவத்திற்குக் காரணமான முக்கியக் குற்றவாளிகள் சுமார் இருபத்தொரு நாட்கள் பெங்களூருவில் பதுங்கியிருந்தது ரங்கநாத்தின் வீட்டில்தான். ராஜீவ் கொலை வழக்கில் 26-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட ரங்கநாத், தூக்குத் தண்டனைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டவர்.
91-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி இரவு ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். விடுதலைப் புலிகள் அமைப்பினர்தான் இந்தப் படுகொலையைச் செய்தார்கள் என 26 பேருக்கு தடா நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்குத் தூக்குத் தண்டனையும், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதில் சோனியாகாந்தியின் கருணையால் நளினியின் தூக்கு, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. `ராஜீவ்காந்தி படுகொலைக்கு உண்மையான காரணம் என்ன?' என்று அறிவதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகச் சொல்கிறார்கள். அந்த நேரத்தில்தான் ஒற்றைக்கண் சிவராசன், சுபா உள்பட சில குற்றவாளிகள் கடைசியாக ரங்கநாத்தின் வீட்டில் பதுங்கி இருந்ததால், அவருக்கு இந்தப் படுகொலையின் நிஜப்பின்னணி தெரிய வாய்ப்புள்ளது என்று சோனியாகாந்தி உறுதியாக நம்பியிருக்கிறார். ஏனென்றால், படுகொலைச் சம்பவம் நடந்தபிறகு, பெங்களூருவில் குற்றவாளிகள் பதுங்கியிருந்த 21 நாட்களும் அவர்களைச் சுற்றி நடந்த பல்வேறு விஷயங்கள் சோனியாவின் கவனத்திற்குப் போயிருக்கின்றன. இதையடுத்து, ரங்கநாத்தைச் சந்திக்க சோனியா விருப்பப்பட்டிருக்கிறார். அதன்பேரில், தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான தமிழ் உணர்வாளர் (முன்பு காங்கிரஸில் பொறுப்பு வகித்தவர்) ஒருவர் மூலம், தமிழக காங்கிரஸ் வி.ஐ.பி. ஒருவர் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார் எனவும் தகவல்கள் உலா வருகின்றன. டெல்லியில் நடந்த இந்த 'ரகசிய சந்திப்பில்' படுகொலையின் முக்கியமான விஷயங்களை சோனியாவிடம், ரங்கநாத் கூறியதாகவும் சொல்கின்றனர். தற்போது சிறையில் உள்ள 'ராஜீவ் கொலையாளிகள் வெறும் கருவிகள்தான்' என்ற மனநிலைக்கு சோனியா மாறியதற்கும் ரங்கநாத்தின் சந்திப்பைத்தான் முக்கியமானதாகக் கூறுகிறார்கள் தமிழ் உணர்வாளர்கள். இந்தச் சந்திப்பு குறித்து இதுவரை சோனியாவோ, ரங்கநாத்தோ மீடியாக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லவில்லை. சோனியாவும், 'எனது கணவர் கொலையில் தொடர்புடையதாகச் சொல்லப்படுபவர்களை தூக்கில் போட எமக்கோ, எமது குழந்தைகளுக்கோ சிறிதும் விருப்பமில்லை' என தனது நிலையைத் தெளிவாக எடுத்துக்கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க இணைப்பில் செல்க : http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9068&lang=ta&Itemid=163

December 16, 2008

நக்கிப்பிழைக்கும் சிங்களப் பொன்சேகனின் கொக்கரிப்புகள்!

ஈராக்கிற்குச் சென்ற சியார்ச் புச்சிற்கு (George W Bush) அந்நாட்டு மிடையக்காரர் ஒருவர் செருப்பால் அடி கொடுத்து அவமானம் செய்திருக்கிறார். ஈராக்கில் போர் தொடுத்து பல ஆயிரம் பேர்களைக் கொன்று குவித்த வெறுப்பில் அப்படி நடந்தது என்று அவரும் அந்நாட்டு மக்களும் சொல்வதாக செய்திகள் சொல்லுகின்றன.


அமெரிக்க நாட்டுக்கு வெட்கமான சூழல்தான் :

1987ல் சிங்களத்திற்கு ஆதரவாக இந்தியத் தலைமை அமைச்சர் இராசீவ்காந்தி நடந்து கொண்டு, அந்நாட்டிற்குப் பயணம் செய்தபோது, தமிழர்களுக்கு எதிராக காங்கிரசு அரசும், சிங்கள அரசும் செய்த அரசியலுக்கு உடந்தையாக இராசீவ் காந்தி இருந்த போதும், இந்தியாவை சிங்களச் சிறுசக்தியின் கையாளாகவே இராசீவ் ஆக்கிய போதும் கூட, இந்தியாவின் மேலும் இந்தியர்களின் மேலும் உள்ள வெறுப்பாலும் பகையாலும் அந்நாட்டின் அரணவீரர் ஒருவர் இராசீவ்காந்திக்குக் கொடுக்கப்பட்ட அரச வரவேற்பின்போது துப்பாக்கியாலேயே அடித்தார். அப்பொழுது இந்தியாவே வெட்கப்பட்டது. அரசியலின் வயதும் வரலாற்றின் வயதும் மிகப் பெரியது; இந்திய அரசு மற்றும் அரசியல்வாதிகளின் காலை நக்கி உதவி பெற்று பிழைப்பை ஓட்டும் பொன்சேகன் அதே இந்திய அரசியல்வாதிகளைக் கோமாளி என்கிறான்.
புச்-ஐ ஈராக்கியன் ஒருவன் செருப்பால் அடித்ததும் இராசீவை சிங்களன் ஒருவன் துப்பாக்கியால் அடித்ததும் பகை வெறுப்பின் வெளிப்பாடுகள்தானே.

இந்தியாவின் பகை நாடுகளுடன் மிகுந்த நட்பு கொண்டுள்ள சிங்களர்கள் இந்தியாவை எப்பொழுதும் பகைவராகவே கருதுபவர்கள். இந்திய வெறுப்பு என்பது சிங்களர்களின் குருதியில் ஊறிய ஒன்று.

ஈராக்கின் அமெரிக்க, புச் வெறுப்பினால் எப்படி ஒரு தனியர் அந்நாட்டின் தலைவரை செருப்பால் டித்தாரோ, அதே வெறுப்பைத்தான் சிங்களர் இந்தியாவின் மேலும் இராசீவ் காந்தியின் மேலும் கொண்டிருந்தனர், கொண்டிருக்கிறார்கள். தீராத அழுக்காறு கொண்டுள்ள அந்தச் சிங்களத்திற்குப் பரிந்து கொண்டுதான் இந்தியாவும் காங்கிரசும் இராசீவ் காந்தியின் கொலைக்கு முன்னரும் சரி பின்னரும் சரி தமிழர்களுக்கு எதிராகவும் சிங்களச் சிறுமைக்கு ஆதரவாகவும் நடந்து கொள்கின்றன. இந்தியாவை என்றைக்கும் வெறுக்கும் சிங்களர்களுக்கு ஆதரவாக, இந்தியாவின் பகை நாடுகளின் பேரன்பையும் பேராதரவையும் பெற்றுள்ள சிங்களத்திற்கு ஏன் இந்தியா இத்தனை பரிவு காட்டுகிறது?

குறைந்த பட்சம் தமிழ்நாட்டு அழுகுனிகளும், பொய்யர்களும், காங்கிரசுக்காரர்களும் இராசீவ் காந்தி சிங்களவனால் அடித்து அவமானப் படுத்தப்பட்டது இராசீவ் மரணத்திற்கு 4 ஆண்டுகளுக்கு முன்னர் என்பதனை ஒத்துக் கொள்வார்கள். இராசீவ் காந்தியை அடித்து அவமானப் படுத்திய சிங்களவர்களைக் குளிர்விக்க இராசீவ் காந்தியின் இந்திய அரசால் அனுப்பப்பட்ட இந்திய அமைதிப் படை 10,000 தமிழர்களுக்கு மேல் கொன்று குவித்தது.
அப்படிச் சிங்களவர்களைக் குளிர்விக்க வேண்டிய கட்டாயம் இராசீவ் குடும்பத்திற்கும் காங்கிரசுக்கும் என்ன?
10000-த்துக்கும் மேலான தமிழர்களைக் கொன்று குவித்த இந்திய அரசும், காங்கிரசும், அதற்குப் பின்னால் பன்னாட்டுச் சதி என்று சொல்லப்படுகிற இராசீவ் கொலையை தமிழ் நாட்டளவில் விசாரிக்கப்பட்ட கொலையை ஈழத்தமிழர்கள் என்றளவில் நிறுத்திவிட்டு, மீண்டும் 2004-ல் ஆட்சிக்கு வந்தபின் மேலும் ஆயிரக்கணக்கில் ஈழத்தமிழர்களைக் கொல்வதற்குக் காரணம் என்ன?

இப்படி இராசீவ் குடும்பம், இராசீவ் காலத்திலே 10000க்கும் மேலான தமிழர்களைக் கொன்று தனது சிங்கள நேயத்தைக் காட்டியும், பின்னர் இராசீவ் மறைந்த பின்னர், சோனியாகாந்தியும் மன்மோகனும் சிங்களர்களுக்கு நேயமாக இருந்து தமிழர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்தும், சிங்களனின் இந்திய எதிர்ப்பும், வெறுப்பும், பகையும் துளியும் குறையவில்லை.

அதனால்தான் இன்றைக்குப் பொன்சேகன் என்ற சிங்களப் படைத்தலைவன், "இந்திய அரசியல் வாதிகள் கோமாளிகள்" என்று சொல்கிறான்.

சிங்களன் தொடர்ந்து இந்தியர்களை அவமானப் படுத்தவேண்டிய காரணமும் என்ன?

அன்று இந்திய நாட்டின் தலைமை அமைச்சரான இராசீவ் காந்தியை அடித்ததும் அதே சிங்கள அரணவன்தான். இன்றைக்கு இந்திய நாட்டின் அரசியல்வாதிகளை கோமாளிகள் என்று சொல்பவனும் அதே சிங்கள அரணவன்தான்.

இப்படித் தொடர்ந்து பக்கத்துப் பகை நாடான சிங்களனிடம் தொடர்ந்து அவமானத்தை இந்தியாவிற்கு அள்ளிக்கொண்டு வரும் பணியைத்தான் இராசீவ் குடும்பத்தினரும், காங்கிரசுக் கட்சியும், நாராயணனும், சிவசங்கரனும் இன்ன பிறரும் செய்து கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் சேர்ந்து பல்லாயிரம் தமிழர்களை சிங்களனுக்குப் பந்தி வைத்துவிட்டவர்கள்.

இருப்பினும், இந்திய அரசியல்வாதிகள் உலகிலே எந்த நாட்டிலும் இல்லாத சனநாயகத்திற்குச் சொந்தக்காரர்கள். இந்த அரசியல்வாதிகளின் பல்குரல்களையும் பலத்த குரல்களையும் பற்றிப் பேச, இனவெறியிலும், நாசகாரத்திலும், அடக்குமுறையிலும் ஊறிப்போன சிங்களவனுக்கு சிறு அருகதையும் கிடையாது.
செயலலிதாவாகட்டும், தமிழகக் காங்கிரசுக் காரர்களாகட்டும், கருணாநிதி ஆகட்டும் இன்ன பிற இந்திய அரசியல்வாதிகளாகட்டும் - அவர்கள் எம் நாட்டு மக்கள், எமது மக்களுக்காக ஒரு கணமேனும் உழைத்த அரசியல்வாதிகள்.

எமது ஊரிலே பழமொழி சொல்வார்கள். "கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை" என்று. எமது இந்திய அரசியல்வாதிகளின் அருமையும் எமது சனநாயகத்தின் அருமையும், இனவெறியில் ஊறித்திளைக்கும் பண்பாடற்றவர்களுக்கு மட்டும்தான் கோமாளித்தனமாக இருக்கும்.

எமக்குள், எமது இந்திய நாட்டுக்குள், எமது அரசியல்வாதிகளுக்குள், எமது கட்சிகளுக்குள் ஆயிரம் வேறுபாடுகள் இருக்கும்.

அது எமது சனநாயகத்தின், ஒரு மாபெரு பன்முகக் குமுகத்தின் அடிப்படை நாதம்!

அதன் வேர்களும் விழுதுகளும் ஆகிய எமது இந்திய அரசியல்வாதிகளை கோமாளிகள் என்று சொல்ல அறிவும் பண்பாடும் அற்ற வெறியர்களால் மட்டுமே முடியும். அந்த வெறிக் குணத்தைத்தான் சிங்களத்தின் அரணனான பொன்சேகன் காட்டுகிறான்.

வைகோ என்ற எமது தமிழ்-இந்திய அரசியல்வாதி ஏற்ற கொள்கையில் என்றும் நிற்பவர்!


எமது நாட்டின் சனநாயகத்திலே வைகோவின் அரசியல் நிலையிலே எமது மக்கள் அவரின் மாற்றங்களைக் கிடுக்கக் கூடும்! இது எமது சனநாயக அரசியலிலே மிகச் சாதாரணம். சிலர் கிடுக்குவதால் வைகோ எமது நெஞ்சை விட்டு அகன்றவர் இல்லை. தமிழர் நெஞ்சங்களில் அரசியலுக்கு அப்பாற்பட்டு நீங்காத இடம் வைகோவிற்கு உண்டென்பது முட்டாள்களுக்குப் புரியாது என்பது போலவே பொன்சேகனுக்கும் புரியவில்லை.
தொடர்ந்து வாசிக்க இணைப்பில் செல்க : http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=8582&lang=ta&Itemid=163

December 09, 2008

சர்ச்சைக்குரிய பாபர் மசூதியின் பாரம்பரிய வரலாறும் அதன் திசை திருப்பப்பட்ட சோடிப்புகளும்

1949ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸ்லிம்கள் பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்குச் சென்றனர். மீண்டும் வைகறைத் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, இலட்சுமணர் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்து விட்டார் என்று ஒரு கும்பல் கலாட்டாவில் இறங்கியது. வன்முறைக் கும்பல் பள்ளிவாசலுக்குள் நுழைந்து சிலைகளை வைத்ததாக பைஸாபாத் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி புரிந்த காங்கிரஸ் அரசுகள் தொழுகைக்குத் தடை விதித்ததிலிருந்து பாபர் மசூதி பிரச்சினை நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக நீடித்து வருகிறது. 'இராமர் கோயிலை இடித்துக் கட்டப்பட்டதே பாபர் மஸ்ஜித்' என்ற புளுகு மூட்டையை சூதுவாது அறியாத இந்துக்கள் மனதில் அவிழ்த்துவிட்டு அவர்களில் பலர் அந்தப் பொய்யை நம்புகின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க இணைப்பில் செல்க : http://manuneedhy.googlepages.com/Babari_Masjid_History.pdf

November 29, 2008

நன்றி நவிலல் தினம் - Thanks Giving Day

"தாங்க் யூ"


"டாங்க்கி"
"கா பை"
"ஹ்வாலா"
"மாகே"
"டாரிம்"

என்ன‌? புதுசுபுதுசா எதோ சொல்றேன்னு பாக்குறீங்க‌ளா? இந்த‌ முக‌வ‌ரிக்கு எப்ப‌டிப் போக‌லாங்க‌"ன்னு ஒருத்த‌ர்ட்ட‌ கேட்டா, அவ‌ர் பொறுமையா அந்த‌ இட‌த்துக்குப் போகும் வ‌ழியைச் சொன்னா நாம் என்ன‌ சொல்வோம். ரெம்ப‌ ந‌ன்றிங்க‌ என்று சொல்கிறோம் இல்லையா? அந்த‌ ந‌ன்றி என்ற‌ சொல்லுக்கு உல‌கில் ஒவ்வொரு நாடும் என்ன‌ மாதிரி சொல்றாங்க‌? அத‌த்தான் மேல‌ சொன்னேன். எந்த நாட்டுல் எப்படிச் சொல்றாங்கன்னு இந்தக் கட்டுரையின் இறுதியில் ஒரு பட்டியல் இருக்கு. அதப் பாத்து நீங்க நன்றியை எங்க எப்படிச் சொல்லலாம்ன்னு தெரிஞ்சுக்கலாம். ச‌ரி இப்ப‌ விச‌ய‌த்துக்கு வ‌ருவோம்!


"எந் நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய் நன்றி கொன்ற மகற்கு"


இன்று நேற்றல்ல ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அய்யன் திருவள்ளுவர் திருவாய் மலர்ந்தருளிய வேதமிது. அமெரிக்கர்கள் வருடத்தில் ஒருநாளை நன்றி சொல்ல ஒதுக்கியிருக்கிறார்கள். அதுக்காக மத்த நாள்ல அமெரிக்கர்கள் நன்றி சொல்ல மாட்டாங்களா என்று யாரும் கேட்டுவிடாதீர்கள்.
அமெரிக்கா வாழ் இந்தியர்கள் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தால் கூட பார்க்காத மாதிரி ஒதுங்கியும், முகத்தைத் திருப்பிக் கொண்டும் செல்வதை பெரும்பாலும் அமெரிக்காவில் காண முடியும். அறிமுகமில்லாத ஒரு இந்தியர் இன்னொரு இந்தியரைப் பார்த்து நமஸ்தே... வணக்கம்.... ஹாய்..... என்று சொல்கிறார் என்றால் சொன்னவர் அமெரிக்காவுக்குப் புதுசு என்று அர்த்தம்.அதே நேரத்தில் அறிமுகமில்லாத ஒரு அமெரிக்கர்/ரி ஒருவரை ஒருவர் சந்திக்க நேரிட்டால் ஹலோ... ஹாய் என்பார்கள். எப்படி இருக்கிறீர்கள்? என்றெல்லாம் கூட விசாரிப்பதும், உதவி என்ற வகையில் அல்லாமல் ஒரு சாதாரண தகவலைச் சொன்னால் கூட நன்றி என்று நாலு முறை நாவலிக்காமல் சொல்லுகிறவர்கள் அமெரிக்கர்கள். வருசம் முழுக்க எங்களுக்காக உழைச்சீங்க, உங்களுக்கு எங்கள் நன்றிகள்! முதலாளிகள், தொழிலாளிகளுக்கும்; நிர்வாகம் தங்கள் ஊழியர்களுக்கும்; ஒருவருக்கொருவர் நன்றி பரிமாறிக்கொள்ளும் நன் நாளாக, ஆண்டுதோறும் நவம்பர் மாதம் நான்காம் வாரத்தில் வியாழக் கிழமை அனுசரிக்கப்படுகிறது. இன்றைக்கு அமெரிக்கா முழுமைக்கும் இந்த நன்றி நவிலப்படுகிறதற்கு காரணம் யார்?
இங்கிலாந்து...!
ஏன்?
இதற்கும் ஒரு பின்னணி உண்டு. அது என்னவென்று பார்ப்போமா?

இங்கிலாந்து


1600-களில் இங்கிலாந்து நாட்டின் கிறிஸ்தவ தேவாலயங்கள் அந்த நாட்டை ஆண்டுவந்த அரசனின் இரும்புப் பிடிகளுக்குள் சிக்கித்தவித்தது. இப்படித்தான் வழிபடவேண்டும்; மதச் சடங்குகள் இன்னின்னபடிதான் நடைபெறவேண்டும்; பிறப்பாயிருந்தாலும், இறப்பாயிருந்தாலும் அரசகட்டளைப்படிதான் நடக்கவேண்டும், என்கிற கட்டுப்பாடு கிறிஸ்தவர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தியது. ஒரு சாரார் அரச கட்டளைக்கு எதிரானவர்கள் என முத்திரை குத்தப்பட்டு வெஞ்சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு ஆளாகினர். தங்களுக்கு விருப்பமான முறையில் கடவுளை வணங்கமுடியவில்லையே என்று எண்ணியவர்கள் ரகசியமாக திட்டம் தீட்டி இங்கிலாந்தைவிட்டு வெளியேறுவது என்ற முடிவுக்கு வந்தனர். இவர்கள் "புரிடான்ஸ்" (puritans) என அழைக்கப்பட்டனர்.மத சுதந்திரம் வேண்டி, தங்கள் தாயகத்தை விட்டு ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக, "ஸ்பீட் வெல்" மற்றும் "மே ·ப்ளவர்" என்ற இரண்டு கப்பல்களில் இலக்கு இல்லாத தங்கள் பயணத்தை (செப்டெம்பர் ,1620ம் ஆண்டு) துவங்கினர். உணவு, துணி, யுதம், விவசாயக் கருவிகள், விதைகள் என்கிற சேகரிப்புகளோடு நிரந்தரமாகப் புலம் பெயர்ந்துவிடுகிற முயற்சியாகப் பயணித்தனர்.

கனவு பூமி

ஏதோ ஒரு துணிச்சலில் குழந்தை குட்டிகளோடு 1620ம் ஆண்டு செப்டெம்பர் திங்கள் ஆறாம் தேதி 102 பயணிகளுடன் 32 குழந்தைகள் உடபட கிளம்பிய அவர்களுக்கு இன்ன இடத்துக்குத்தான் போகிறோம் என்கிற உறுதியில்லாமல் கப்பல் போன போக்கில் பயணித்தனர்! கடற்பயணம் எளிதாக அமைந்துவிடவில்லை. நிலம் காணா நீர்ப்பரப்பு நீண்டு கொண்டே போக, கடல் நோய் கண்டு பலர் தங்கள் கனவு நிறைவேறாமலேயே மாண்டுபோயினர். கடற்பயணத்திலேயே இரு தம்பதியர்க்கு குழந்தை பிறந்ததும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து வாசிக்க இணைப்பில் செல்க : http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=7600&lang=ta&Itemid=163

October 17, 2008

“தாம்பத்யம்” – நவநீ

திண்ணை-யில் பிரசுரமான எனது சிறுகதை : http://www.thinnai.com/?module=displaystory&story_id=10810164&format=html

“ஒன்னெ மட்டும் நான் சந்திக்கலேன்னா என்னிக்கோ ஆத்துலயோ, ஒரு கொளத்துலயோ விழுந்து செத்துருப்பேன் சிவகாமி. அந்தப் பகவானாப் பாத்து ஒன்னெ எங்கிட்ட கொண்டுவந்து சேத்துருக்கார். ஏதோ முன் ஜென்மப் பந்தம்! இல்லாட்டி நான் ஒன்னெ சந்திச்சுருப்பேனா சொல்லு. ஒனக்கு ஒன்னும் ஆகாது சிவகாமி! ஒன்னோட கையிலதான் என்னோட உயிரு போகணும்னு அந்தப் பகவான் ஏற்கனவே எழுதிட்டான் சிவகாமி” என்று துக்கம் தொண்டை அடைக்க, பெட்டில் படுத்திருந்த சிவகாமியின் கைகளைத் தன் ஒரு கையால் பிடித்துக்கொண்டு, இன்னொரு கையால் அவள் தலையை வருடிக்கொண்டிருந்தார் பரமசிவம்.

டாக்டர் வந்து பரிசோதித்துவிட்டு, “சுகர் கொஞ்சம் ஹை-யா இருக்கு, ப்ரஷரும் நார்மலா இல்ல, அதான் ஒங்களுக்கு மயக்கம் ஜாஸ்தியா வருதும்மா, மெடிசின்ஸ் தர்றேன்…. எடுத்துக்கங்க, சாப்பாடு நான் சொன்னபடி சாப்பிடுங்க, எல்லாம் சரியாய்டும், நத்திங் டு வொர்ரி, கண்ணெவிட மேலாக் கவனிச்சுக்க ஒங்க கணவர் பக்கத்துல இருக்கறச்ச நீங்க ஒர்ரி பண்ணலாமா? ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணப்படாது, சரியா?” என சிரித்த முகத்தோடு, சிவகாமியிடம் கூறிவிட்டு, “டேக் கேர் மிஸ்டர் பரமசிவம்” என்று சொல்லிச் சென்றார் டாக்டர்.

“சிவம் நான் ஒண்ணு சொன்னாத் தப்பா நெனைக்க மாட்டீங்களே? எனக்கு இப்படி அடிக்கடி ஒடம்பு சரியில்லாம வர்றத நெனச்சா மனசுக்கு ரொம்பப் பயமா இருக்கு. யாருக்கும் தெரியாம நம்ம காம்பவுன்ட்-ல இருக்கற முப்பாத்தம்மன் கோயில்ல வச்சு எனக்கு ஒரு மாங்கல்யம் கட்டிடுறீங்களா? நான் நிம்மதியா மாங்கல்யத்தோட, பொட்டும், பூவுமா நித்ய சுமங்கலியாப் போய்ச் சேருவேன்… சிவம்! செய்வீங்களா?” - என்று கலங்கிய கண்களை தன் முந்தானையால் துடைத்துக்கொண்டே சொன்னாள் சிவகாமி.

பதறிப்போன பரமசிவன் “என்ன சிவகாமி நீ! பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசுற! ஒங்கண்ணுக்கு முன்னாடிதானே டாக்டர் சொல்லிட்டுப்போனாங்க, நீ நல்லாருப்பெ சிவகாமி! ஒனக்கு ஒன்னும் செய்யாது சிவகாமி! மாங்கல்யந்தானே! சரி கவலய விடு, நீ சொன்னமாதிரியே நான் வர்ற வெள்ளிக்கிழமை ஒங்கழுத்துல தாலி கட்டுறேன் சரியா? நீ எனக்குன்னே பொறந்தவ சிவகாமி. விசாலம் செத்த அன்னைக்கே, அவகூட நானும் போய்ச்சேந்துருக்கணும், பகவான் என்னெ ரொம்பச் சோதிச்சுட்டார். ஆனா விசாலம் என்னெத் தனியா விடக்கூடாதுன்னு, ஒன்னோட ரூபத்துல வந்து எங்கூடவே வாழ்ந்துகிட்டு இருக்கா, நாம ரெண்டு பேரும் இன்னும் ரொம்ப நாள் உயிரோட இருப்போம்” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே

“ஐயா! ஒங்களுக்குப் போன் வந்திருக்காம், ஆபீஸ்ல கூப்படுறாங்க! ஆயாம்மாள் வந்து சொல்லிச் சென்றாள்.

“ஹலோ! என்னப்பா! சௌக்யமா இருக்கேளா? பணமெல்லாம் டைமுக்கு வந்து சேந்துருக்குமே! நான் ஒரு ப்ராஜக்ட் விசயமா சைனா வந்தேன். கொஞ்சம் டைம் கெடச்சது, அதான் ஏர்போர்ட்ல இருந்து பேசுறேன். நான் யு.எஸ். போனதும் கால் பண்றேன், ஒடம்பப் பாத்துக்கங்க! முடிஞ்சா இந்த இயர் என்ட்-ல பசங்களுக்கு சம்மர் வெகேசனுக்கு சென்னை வர்றதா இருக்கோம். கன்ஃபாம் ஆனா சொல்றேம்பா, வேற ஒண்ணும் சேதி இல்லயே!” ஒரே மூச்சில் மகன் ஸ்ரீகாந்த் எதிர்முனையில்.

“….ம்ம்…ம்.. இல்லப்பா” பரமசிவம் சொல்லி முடித்தவுடன் தொலைபேசி துண்டிக்கப்பட்டது.

பரமசிவம் ஒரு ரிடையடு தாசில்தார். நேர்மையான, கௌரமான மனிதர். தனது மனைவி விசாலம். குழந்தையே இல்லாமல் தவமாய் தவமிருந்து திருமணமாகிப் பதினான்கு வருடங்களுக்குப்பின் பெற்றெடுத்த ஒரே பிள்ளை ஸ்ரீகாந்த். மகன், தனக்கு இது வேண்டுமென்று நினைக்கும்போதே அவன் கண் முன் கொண்டுவந்து அதை நிறுத்தியிருப்பார் பரமசிவம். அளவுக்கு மீறிய சுதந்திரம் பிள்ளைக்குக் கொடுத்தவர். படித்தவராயிற்றே! கேம்பஸ் இன்டர்வியு மூலமாகவே வேலை கிடைத்துத் தற்போது அமெரிக்காவில் மிகப்பெரிய நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருக்கும் ஸ்ரீகாந்த் ஒரு முறை இந்தியா வந்திருந்தபோது தனது பெற்றோரிடம், தான் ஒரு இந்திய வம்சாவழிப் பெண்ணை விரும்புவதாகவும், திருமணம் செய்ய இருப்பதாகவும், அனுமதி கேட்பதற்குப் பதிலாக தகவல் சொன்னான். சற்று அதிர்ச்சியுற்றாலும், அதனைப் புரிந்துகொண்ட பரமசிவமும் விசாலமும் மகனின் மனம் புண்படக்கூடாதென்பதற்காக ‘சரி’ என்று ஒப்புக்கொண்டனர்.

திரும்ப அமெரிக்கா சென்ற ஸ்ரீகாந்த், மூன்று மாதங்கள் கழித்து, பெற்றோரை அமெரிக்கா அழைத்துச்செல்வதற்கான, விசாவில் தாமதம் ஏற்படுகிறதென்பதால், அதுவரை பொறுக்கமுடியாத வம்சாவழிப்பெண், எங்கே வேறொரு கை மாறிவிடுமோ என்று திருமணத்தை முடித்துவிட்டு வழக்கம்போலப் பெற்றோருக்குத் தகவல் சொன்னான். இந்த அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடியாமலும், தன் கணவர் இவற்றையெல்லாம் நினைத்து மனதுக்குள்ளேயே வேதனைப்படுவதையும் பார்க்கப் பொறுக்காமல், பல நாள், இதுபற்றியே பேசிப்பேசிக் கவலையடைந்த விசாலம் அவளுக்கே தெரியாமல் ஒருநாள் தூக்கத்திலேயே போய்ச்சேர்ந்துவிட்டாள். விசாலமும் தன் பிள்ளையும்தான் இந்த உலகம் என்ற குறுகிய வட்டத்துக்குள்ளேயே இருந்த பரமசிவம் தனியாளாய் தவித்து நின்றார்.

அதுவரை கலங்காத பரமசிவம் தன்னையும் மீறிக் கதறிக் கதறிக் கண்ணீர்விட்டுத் தானும் உயிரை விட்டுவிடுவோம் என்று நினைக்கையில்,
“அப்பா ஒங்களவிட்டா எனக்கு யாருப்பா இருக்கா? என்னெ மன்னிச்சுருங்கப்பா, அம்மா என்னெ நெனச்சு ரொம்பக் கவலப்பட்டே போய்ச்சேந்துட்டாங்கப்பா, நீங்களாவது இனிமே எங்ககூட இருங்கப்பா” என்று தன் மகன் தன்னைக்கட்டிப் பிடித்துக்கொண்டு அழுது, தான் கூடிய விரைவில் தன்னை அமெரிக்கா அழைத்துச் செல்வதாகச் சொல்லிக் கொஞ்சம் ஆறுதலாகப் பேசியதும் பரமசிவன் மனம் மாறிவிட்டார்.

ஆனால் நடந்த கதை வேறு, விசா எல்லாம் தயார் செய்துகொண்டு அழைத்துப்போகும்வரை, தன்னைத் தனியாக விட்டால் அம்மாவையே நினைத்து ரொம்பக் கவலைப்பட்டு எதுவும் செய்து கொள்வார் என்ற அக்கறையில், இப்போது தங்கியிருக்கும் முதியோர் இல்லத்தில் கொண்டுவந்து சேர்த்துவிட்டுச் சென்றவன்தான். வருடங்கள் 7 ஆகிவிட்டது. வாரம் தவறாமல் மகனிடமிருந்து போன் வரும். ஆனால் விசா இன்னும் வந்தபாடில்லை. பரமசிவனும் இதுவரை அதுபற்றிக் கேட்டதும் இல்லை. தனக்கு மாதாமாதம் வரும் பென்சன் பணத்தையும், மகன் அனுப்பும் பணத்தையும் கூட அந்த இல்லத்துக்கே அவர் கொடுத்துவிடுவதால், அனைவருக்குமே பரமசிவத்தின்மேல் மதிப்பும் மரியாதையும் அதிகம். பரமசிவத்தின் ஆலோசனையின் பேரில் இப்போது முதியவர்கள் மட்டுமல்லாது ஆதரவற்ற சில குழந்தைகளையும் அந்த இல்லம் தத்தெடுத்துக்கொண்டது.
பரமசிவன் முதியோர் இல்லத்துக்கு வருவதற்கு முன் இருந்தே சிவகாமி அங்கு இருக்கிறாள். கிட்டத்தட்ட இவர்கள் இருவரும்தான் அங்கு நெடுநாட்களாக இருப்பவர்கள். இல்ல நிர்வாகத்தினர் தவிர அனைவருமே இவர்களைக் கணவன் மனைவி என்றே நினைத்துக்கொண்டிருந்தனர். சிவகாமி எங்கு பிறந்தாள். பெற்றோர் யார் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. ஏன்? அவளுக்கே தெரியாது. இந்த இல்லத்தை நடத்தும் புலம் பெயர்ந்த இந்தியர்கள், கல்கத்தாவில் அவர்களின் கிளையில் இருந்து சிவகாமியை அவளது முப்பதாவது வயதில் சென்னைக்கு அனுப்பிவைத்தார்கள். இங்கு இந்த இல்லத்தில் முக்கியமான பணிகளையெல்லாம் கவனித்துவருகிறாள். தான், கல்கத்தாவில் சிவராத்திரியன்று கண்டெடுக்கப்பட்டு, அங்குள்ள ஒரு அனாதை ஆசிரமத்தில் ஒப்படைக்கபட்டதாகவும், அங்கு அடிக்கடி வந்து போகும் அன்னைத் தெரசாதான் தனக்குச் சிவகாமி என்று பெயரிட்டதாகவும், தனக்கென்று யாருமில்லையென்றும், தான், ஒரு ஆதரவற்ற பெண் என்பதையும் சிவகாமி பரமசிவனிடம் சில வருடங்களுக்கு முன் சொல்லியிருந்தாள். கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் அன்பாகப் பழகினர். ஒருவருக்கு வேண்டியதை இன்னொருவர் செய்துகொண்டு, மிக அமைதியான சூழலில் வாழ்ந்தனர். பரமசிவத்துக்குக் கிடைக்கவேண்டிய மன அமைதி, நிம்மதி இந்த இல்லத்தில் கிடைத்ததாகவே உணர்ந்தார். அதனால்தான் அமெரிக்கா செல்வது பற்றித் தன் மகனிடம் அவர் இதுவரை பேசியதே இல்லை.

பரமசிவனைச் சிவகாமி தன்னுடைய 50-வது வயதில் சந்தித்தாலும், தனக்குப் பரமசிவன் மேல் அளவுகடந்த மரியாதை, இதுவரை உணராத ஒரு பாச உணர்வு. இத்தனை வருடங்களுக்குப் பிறகு தனக்கு ஏதோ நெருங்கிய சொந்தம் கிடைத்தது போன்ற ஒரு தெளிவு. தனக்கென்று கடவுள் இவரை அனுப்பியிருக்கிறார் என்றெல்லாம் ஏதேதோ மனதுக்குள் தோன்றிற்று. காதல், காமம், உறவு, இல்லறம், பிரிவு இவையெல்லாம் சிவகாமிக்குத் தெரியாது. அவருக்குத் தெரிந்தது கருணை ஒன்றே! தியானம், பக்தி, படிப்பு இவைகள்தான் வாழ்க்கை என்று நினைத்துக்கொண்டிருந்த சிவகாமிக்கு தன்மீது பரமசிவம் காட்டும் அக்கறை, பொறுப்பு, பாசம், பரிவு, பகிர்தல் இவையெல்லாம் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. பிறகு அந்தப்பாச உணர்வுகளை மனம் தேட ஆரம்பித்தது. இருவருக்குமே இந்த வயதில் எது தேவையோ அந்தத் தேவைகள் ஒருவரிடமிருந்து ஒருவருக்குக் கிடைத்ததை மனப்பூர்வமாக, ஆத்மார்த்தமாக உணர்ந்தனர். தத்தம் உணர்வுகளைச் சரியான அலைவரிசையில் பகிர்ந்துகொள்வதும், புரிந்துகொள்வதும் இருந்துவிட்டால் அந்த உறவில் ஏற்படும் பலமே வீரியம் மிக்கதுதான். அது அங்கு இரட்டிப்பானது. எப்போதும் இருவரும் ஒன்றாகவே இருப்பார்கள். ஒன்று கோவிலில் இருப்பார்கள் அல்லது அங்குள்ள சிறிய பூங்காவில் குழந்தைகளோடு குழந்தைகளாக விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

சிவகாமி முதன்முறையாக அழுதது அன்னைத் தெரெசாவின் மறைவின்போதுதான். இரண்டாவது முறையாக இன்றுதான் அழுதிருக்கிறாள். தனக்கு உடல்நிலை மோசமாகி அடிக்கடி படுத்த படுக்கையாகி விடுவதால், எங்கே? தான் பரமசிவத்தை விட்டுப் பிரிந்துவிடுவோமோ என்று எண்ணித் தனக்கு மாங்கல்யம் கட்டச்சொல்லும்போதுதான் அழுதிருக்கிறாள். கடவுளிடம் இந்தக் கன்னியுள்ளம் வேண்டுவதெல்லாம் “நான் மறுபடியும் சிவகாமியாகவே பிறக்கவேண்டும். பரமசிவனின் மனைவி ஆவதற்காகவாவது பிறக்கவேண்டும். ஆனால் ஒரு ஆதரவற்ற அனாதையாக மறுபடிப் பிறக்கவே கூடாது” என்பதுதான்.

இன்று சிவகாமி மிகவும் தெளிவான முகத்தோடு காணப்பட்டாள். வெள்ளிக்கிழமையும் வந்தது. அங்குள்ள பிள்ளைகளும், முதியோர்களும் புத்தாடையிலும் இனிப்புகளிலுமாக குதூகளித்து அனைவரும் பேசிக்கொண்டனர். “சிவகாமிப்பாட்டிக்கும் பரமசிவம் தாத்தாவுக்கும் பொன்விழாவாம். அந்தத் தாத்தாவுக்கு 75 வயசாச்சாம். சீக்கிரமே 100-வது வயசுக்கல்யாணமும் கொண்டாடணும், அப்பத்தானே எங்களுக்கெல்லாம் நெறைய ஸ்வீட், ட்ரெஸ் எல்லாம் கெடைக்கும்... ஹையா.. ஜாலி.... பெஸ்ட் ஆப் லக் தாத்தா!’’ தனக்கு 75 வயது ஆகாவிட்டாலும் அனைவரிடமும் அவ்வாறு சொல்லி, எந்த உறவுகளுமே இல்லையென்றாலும், அந்த இல்லம்தான் உலகம் என்று ஆயிரமாயிரம் கனவுகளோடு துள்ளிக்குதிக்கும் கள்ளம் கபடமற்ற பிஞ்சு உள்ளங்களின் முன்னிலையிலும், வாழ் நாளெல்லாம் தான் பெற்ற பிள்ளைகளுக்காக மெழுகாக உருகித் தன்னை அர்ப்பணித்துவிட்டுக் கடைசிக்காலத்தில், எப்பொழுது ஆதரவும், பரிவும், பாசமும் அவர்களுக்குத் தேவையோ அப்பொழுது, பெற்ற பிள்ளைகளாலேயே சுமையென நினைத்துத் தூக்கி வீசப்பட்ட அந்த ஆதரவற்ற முதியோர்களும் வாழ்த்துவதைவிடவா வேறொருவர் வாழ்த்திவிட முடியும்? அந்த அற்புத உலகத்தைத் தமதாக்கிக் கொண்டு அவர்களின் ஆசீர்வாதத்தோடு, வாழ்க்கை, இல்லறம் என்றால் என்னவென்றே தெரியாமல், பாசம், பரிவு, கருணை இவைகளே வாழ்க்கை என்று எண்ணி வேறு எந்த எதிர்பார்ப்பும் இன்றி வாழ்ந்து மறைந்த அந்த அன்னைத் தெரசாவைப் போன்றே வெள்ளை உள்ளம் படைத்த அந்தக் கன்னி சிவகாமியின் கழுத்தில் பரமசிவன் தாலியைக் கட்டித் தன் சொந்தமாக்கிக்கொண்டு அந்த இல்லத்துக்குள்ளேயே இருவரும் தன் சொந்தங்களான அந்தப் பிஞ்சுக்குழந்தைகளோடு குழந்தைகளாக அடைக்கலம் புகுந்தனர்.
நன்றி : திண்ணை

October 10, 2008

பட்டன் குடை

சில காட்சிகள், சில நிகழ்வுகள் சிலவற்றை நினைவுபடுத்தும். அவை மனதுக்குள் குதூகலத்தையும் வர வைக்கலாம் அல்லது மனதின் எங்கோ ஓர் மூலையில் வலியையும் ஏற்படுத்தலாம் அல்லது அதுவே நெருடலாகவும் இருக்கலாம். இப்படி எல்லோருக்கும்போல் எனக்குள்ளும் ஏற்பட்டவைகளைத்தான் இனி நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.

நல்ல மழை! ஆம்! மழை என்றால் பேய் மழை. நான் பள்ளிக்குச் செல்லமாட்டேன் என்று அடம்பிடிக்கிறேன். காரணம், என்னோடு பள்ளிக்கு வருபவர்கள் அனைவருமே கையில் குடை வைத்திருக்கிறார்கள். ஆம், அந்த வயதில் பள்ளிக்கு குடை கொண்டுவந்தால் ஏதோ ஒரு பெரிய சாதனையாளன் போன்ற ஒரு தொணியில் நடைகூட மாறிப்போய்விடும். சிலர் மட்டும் கலர் கலராய் விற்கும் பாலித்தீன் கவர்களை, (எங்கள் கிராமங்களில் கொங்கானி என்று சொல்லப்படும்) மடித்து, புத்தகப்பையோடு கொண்டுவருவர். எங்கள் வீட்டிலிருந்த ஒரு குடையையும் என் அப்பா வெளியில் எடுத்துச்சென்றுவிட்டார். இன்னொரு குடையோ, கம்பி நீட்டிக் கொண்டிருந்தது. அதை எடுத்துச்சென்றால் அனைவரும் சிரிப்பார்கள் என்று அடம் பிடித்து அழுதுகொண்டிருந்தேன். வெளியில் பார்த்தால் மழை விட்டிருந்தது. ஓ.... இதுதான் சமயம் என்று நினைத்து, அடுத்த மழை வருவதற்குள் பள்ளி சென்றுவிடலாம் என்று எண்ணி, கிளம்புகிறேன்.

திடீரெனச் சந்தேகம், போகும் வழியில் மழை வந்துவிட்டால்! சரி, அதற்கு அம்மாவிடம் "அம்மா நல்ல ஒரச்சாக்கு இருந்தா, மடிச்சுக் குடும்மா" என்கிறேன். "எப்படியும் இந்த வாரச் சந்தையில ஒரு கொடை வாங்கியாந்துருவம்யா" என அம்மாவும் ஒரு வழியாக என்னைச் சமாதானப்படுத்தி, வயல்களில் உரம் போட்டு, சுத்தமாகக் கழுவிக் காயவைத்து, மடித்து வைக்கப்பட்டு, இருப்பதிலேயே கொஞ்சம் 'பளிச்' என இருக்கும் ஒரு சாக்கை எடுத்து, கொங்கானி-யாக மடித்து,
"என் ராசா, என் தங்கம்.... எம்புட்டு சமத்துப் புள்ளயில… இந்தாடி, ராசா! தலையில போட்டுக்கய்யா, தூத்த விழுகுது" என அம்மா அந்தச் சாக்கை என் தலையில் போட்டு, புத்தகப்பையை நனையாமல் உள்பக்கமாக வைக்கச் சொல்லி வழியனுப்பினாள்.

பள்ளிக்கூடம் கிட்டத்தட்ட 2-3 கி.மீ இருக்கும். போகும் வழியில் சாக்கை மடித்துத் தலையில் போட்டுக்கொண்டால் யார் பார்க்கப்போகிறார்கள்? பள்ளிக்கு அருகில் சென்றதும் ஆவரைத்துறில் மடித்து வைத்துவிட்டு மாலை வரும்போது எடுத்து வந்து விடலாம் என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டு புறப்படுகிறேன். காரணம் ‘படிப்பில் அவ்வளவு அக்கறை’ எனத் தவறாக நினைக்கவேண்டாம். பள்ளிக்குப் போகாவிட்டால் "முதுகுப்பட்டைத்தோலு பிஞ்சுரும்" என் அப்பாவின் இந்த ஸ்லோகம் என் காதுகளுக்குள் அவ்வப்போது ஒலிக்கத் தவறியதில்லை.

ஒரு வழியாக, நான் புறப்பட்டு எங்கள் ஊர் கண்மாய்க் கரை வழியாகச் சென்று கொண்டிருக்கையில், வயல் பக்கம் எங்கள் ஊர் "நொண்டி சுப்ரமணி" எருமை மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். அந்தக் காட்சி என் கண்களை வெகுவாக உறுத்தியது. ஒரு பக்கம் வயிற்றெரிச்சல் வேறு. நான் அவரைப் பார்த்துக்கொண்டே செல்கிறேன். அவரும் என்னையே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார். "தம்பி! நில்லுய்யா" என்று என் அருகே வருகிறார். நான் நிற்கிறேன். "இந்தா வச்சுக்க, எடுத்துகிட்டுப் போய்ட்டு, சாயந்தரம் கொண்டாந்து குடு" என்று தன் கையில் இருந்த பட்டன் குடையை நீட்டுகிறார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. திகைத்து நிற்கிறேன். "அட! என்ன அப்படி முழிக்கிற, இங்கெ பாரு...இந்தா இருக்குல பட்டன், அத அமுக்குனா அதுவா விரிஞ்சுக்குரும், சுருக்கும்போது மாத்தரம் கொஞ்சம் சூதானமா சுருக்கோணும், இல்லாட்டி கண்ணு-காத கெடுத்துப்புரும் சரியா" என்றதும்,
"அப்ப ஒனக்கு" என்கிறேன்.

"எரவா மாடு மேய்க்கிறவனுக்கு எதுக்குய்யா பட்டன் கொடை? நீ படிக்கிற புள்ள....சரி சரி..அந்தக் கொங்கானிய எங்கிட்ட குடு, நீ கௌம்பு, பள்ளிக்கொடத்துக்கு நேரமாச்சு"
என் தலையில் இருந்த கொங்கானி அவர் தலையில் இருந்ததைப் பார்த்துக்கொண்டே நின்றேன்.

"தம்பி! கொடைய தூக்கிப்புடி, தூத்த தலையில் விழுகுது" என்றதும் சுதாரித்தவனாக, குதூகலத்தில் பள்ளிக்கூடத்தை அடைந்தேன். அந்தக் குடையை நான் வழி நெடுக சுழற்றிக்கொண்டே சென்றதில் என் கைகள் கொப்பளித்துப்போனதும், அன்று முழுவதும் ஒருவரைக்கூட என் குடையை தொடாமல் காவல் காத்ததும், வழக்கத்திற்கு மாறாக அன்று எனக்கு அடிக்கடி "நம்பர் ஒன்" வந்ததும், யாருக்கு 'நம்பர் ஒன்' வந்தாலும் என் குடையோடு அவர்களை அழைத்துச்சென்று, ஒரு "கொடைவள்ளல்" ஆனதும் இன்றும் என் மனதில் நிழலாடுகிறது.

ஒரு சில மாணவிகளுக்கு என் குடையைக் கொடுக்கும்போது மட்டும் எனக்குள் "சிலு சிலுவென குளிரடித்ததும்" எனக்குள் இன்றளவும் சிலிர்க்க வைக்கிறது. அப்போது எனக்கு பத்து அல்லது பதினோறு வயதிருக்கும்.

வீடு திரும்பிய நான் அன்று நடந்த அனைத்தையும் கதை கதையாய் என் அம்மாவிடம் சொல்லிச் சொல்லி அம்மாவை உறங்கவே வைத்துவிட்டேன். அன்று இரவு முழுவதும் எனக்கு பட்டன் குடை கனவுதான். வழக்கத்திற்கு மாறாக அதிகாலையில் எனக்கு முழிப்பு வந்து, "அம்மா! ஏம்மா நொண்டிச் சுப்ரமணிக்கி, நொண்டிச்சுப்ரமணி-னு பேரு?" அம்மாவுக்கும் பதில் தெரியாதவளாய், அது நொண்டி நொண்டி நடக்குதுல, அதான் அதுக்கு அப்படிப் பேரு" என்று சமாளித்தாள். ஆனால் அது நொண்டி நடப்பதில்லை, எல்லோரைப் போலவும் நன்றாகத்தான் நடக்கும். அந்த வயதில் அதுவரை எழாத சந்தேகம் எனக்குக் குடை கொடுத்தபிறகு எனக்கு எழுந்தது ஏன்? என இன்றுவரை தெரியவில்லை. ஆனால் இந்த சந்தேகத்தை யாரிடம் கேட்பது? எனது எந்தச் சந்தேகத்தையும் தீர்த்துவைக்கும் என் அப்பா இதையும் தீர்த்துவைத்தார். அவர் சொன்ன விசயங்கள் நூறு சதவிகிதம் அன்று புரிந்ததோ இல்லையோ, இன்றும் வலிக்கிறது. "தம்பி! அவன் நொண்டியெல்லாம் கெடையாது, நம்ம ஊருல மேலவீட்ல இன்னொரு சுப்ரமணி இருக்காருல, இவரு பேரும் சுப்ரமணிங்கறதால, கொழப்பமாகும்ல. அதுனால இவன நொண்டி சுப்ரமணி-ன்னு கூப்புடுறோம்.
"ஏம்ப்பா! அப்ப அந்த மேலவீட்டு சுப்ரமணிய நொண்டி சுப்ரமணி-ன்னு கூப்புடவேண்டியதுதானே?" என்றதும், "நீ கேக்கறது சரிதான், அவனுக்கு நான் பேரு வைக்கலடா, யாரோ வச்சுருக்காங்க, வச்சவங்க செத்துப்போய்ட்டாங்க! நம்ம அவன சுப்ரமணின்னே கூப்புடுவோம், மத்தவங்க மாதிரி நொண்டி சுப்ரமணி-ன்னு கூப்புடவேண்டாம், சரியா?" என்றார்.

என் கதாநாயகனை நொண்டி சுப்ரமணி என யார் அழைத்தாலும் எனக்கு நெடுநாள் கோபம் வரும். பிறகு நான் கல்லூரிக்குச் செல்லும் காலத்தில் "தம்பி! என என்னைப் பாசமாக அழைத்த சுப்ரமணி, அய்யா! என என்னை அழைத்தபோதுதான் எனக்குள் வலிக்க ஆரம்பித்தது. தாழ்ந்த சாதியினர் எனத் தள்ளி வைத்தது மட்டுமின்றி, அவர்களை ஊனமுற்றவர்களாக்கி வேறு இந்தச் சமூகம் ஒடுக்கி வைத்தததை எண்ணி வேதனைப்பட்டதுண்டு. ஆனால் நானே சுப்ரமணியிடம் "இனிமே என்னை அய்யா-ன்னு கூப்பிடக்கூடாது, தம்பி-ன்னே கூப்புடுங்க" எனச் சொன்னதை என் அப்பாவிடம் வந்து சொல்லி, என் அப்பா என்னை கட்டியணைத்துக் கொண்டது இன்னும் கண்களை ஈரமாக்குகிறது. பிறகு நான் எங்கள் ஊர் சுற்று வட்டாரத்தில், கீழ் சாதி என முத்திரை குத்தப்பட்ட அனைவரையும் என்னை "அய்யா-வுக்குப் பதிலாக, அண்ணன் என" அழைக்க வைத்ததால் நான் சந்தித்த பிரச்சினைகள், அடிதடிகள் ஏராளம். அதற்கு ஒரே உதாரணம் இன்றும் என் கிராமத்தில், சுற்றுவட்டாரத்தில் என்னை மட்டுமில்லை, இந்தத் தலைமுறையினரையும் "அண்ணன்" என்றுதான் அழைக்கிறார்கள் என்பது கண்கூடாகப் பார்க்க முடிந்த உண்மை. இப்படி ஒரு மாற்றம் வரவேண்டும் என்று எண்ணியெல்லாம் நான் அன்று செய்யவில்லை. அன்று எனக்குள் அப்படித் தோன்றுவதற்குக் காரணம், என் தந்தையின் வாழ்வில் அன்று நடந்த சில சம்பவங்கள், பிரச்சினைகள், நிகழ்வுகள்தான். இவையனைத்திற்கும் ஒரு சராசரித் தந்தையாக என் தந்தை இல்லாமல், எனக்கு முழு சுதந்திரம் தந்து என்னை ஆளாக்கிய என் அப்பாவும் இன்று இல்லை, என் குடை கொடுத்த அந்தக் "கொடைக் கதாநாயகன்" சுப்ரமணியும் இன்று இல்லை.
- நவநீ

October 07, 2008

தமிழின் தலைமகன் கலைஞர் அவர்களுக்கு - கை.அறிவழகன்

மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய தமிழின் தலைமகனாகிய, வாழுகிற தமிழின் கடைசித் தலைவர் என்று நாங்கள் நம்புகிற, தமிழகத்தின் முதல்வரும், இந்திய அரசுகளின் செயல்பாடுகளை வழிநடத்துகிற ஆற்றல் மிக்க ஐயா டாக்டர்.கலைஞர் அவர்களுக்கு!

திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற ஒரு மிகப்பெரிய சக்தியை, அதன் கொடியின் நிறத்தை நீங்கள் எப்படி உங்கள் குருதியால் உருவாக்கினீர்களோ, அதே வழிவந்த உங்கள் தமிழ்ப் பேரனின் குருதியில்தான் இந்தக்கடிதம் எழுதப்படுகிறது.

{xtypo_quote}இந்தக் கடிதம் உங்கள் மனதை வென்றுவிடுமேயானால் அது தமிழின் வெற்றி மட்டுமில்லை, ஒட்டு மொத்தத் தமிழினத்தின் உயர்வானவெற்றி{/xtypo_quote}

அன்று அண்ணாவுக்காக, நீங்கள் எழுதிய இரங்கற்பாவைப் போல, நீதி மறுக்கப்பட்ட இன்னொரு அண்ணனுக்காக எழுதப்படுகிற கண்ணீர்க்கடிதம். விலைமதிக்க முடியாத மனிதஉரிமைகளின் மறுப்பையும், மீறலையும் சந்தித்த அண்ணனின் அடக்க முடியாத உணர்வுகளால் உந்தப்பட்டு எழுதப்படும் மன்றாடல் கடிதம். மறுக்கவும், மறைக்கவும் முடியாத துன்பம்தான் மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணம். அவரது மறைவுக்காக, அவர்கொல்லப்பட்ட விதத்துக்காக மனித நேயம் மிக்க மனிதர்களாகிய நாம் அனைவரும் கலங்கிப்போனோம், கண்ணீர் விட்டோம். அவரைக் கொன்றவர்கள் யாராக இருப்பினும் தண்டனைக்குரியவர்கள். குற்றவாளிகள் என்பதில் நமக்கு ஒருபோதும் மாற்றுக் கருத்துக்கிடையாது. ஆனால் சட்டத்திற்குப் புறம்பாகக் கொடுமையான மனநெருக்கடிகளுக்கும், கடும் தாக்குதல்களுக்கும் ஆளாக்கப்பட்டு ஒரு பொய்யான ஒப்புதல் வாக்குமூலத்தின் மூலம், இன்று தூக்குக் கயிறுகளின் இறுக்கத்தில் இருந்து நீதிகேட்டுக் கடிதம் எழுதிய அண்ணன் பேரறிவாளனுக்கு நீதிகேட்டு, உள்ளக் குமுறல்களில் இருக்கும் தமிழ்த்தம்பிகளின் சார்பில் எங்கள் குடும்பத்தின் மூத்த தலைவரிடத்தில் முறையிடும் கடிதம்.
தூக்குக் கயிறுகளுக்கு அஞ்சி நடுங்கும் வழிவந்த இனமல்ல இந்தத் தமிழினம் என்பது எங்களை விட உங்களுக்கு நன்றாகவே தெரியும், விடுதலைக்கு முன்னரே வெள்ளையரின் அடக்குமுறைகளுக்கு இரையாகி மகிழ்வோடு தூக்குமேடைகளின் கயிறுகளை முத்தமிட்டு மாலையாக்கி மகிழ்ந்தவர் பட்டியல் நம்மிடம் உண்டு. தன் தமிழினம் அழியாமல் இருக்கப் போராடும், அதன் விடுதலையை வென்றெடுக்கப் பாடுபடும் போராளிகளை இளங்கன்றாய், பயமறியாது, மனதளவில் ஆதரித்த குற்றம்தான் அண்ணன் பேரறிவாளன் செய்துவிட்ட மாபெரும் குற்றம். சட்டங்கள் அறியாது, விதிமுறைகள் தெரியாத பத்தொன்பது வயதில் விடுதலைப் புலிகளை, அதன் தலைவர்களை உணர்வுள்ள எல்லாத் தமிழ் இளைஞர்களையும் போல மனதில் இருத்தியது ஒன்றுதான் அண்ணன் பேரறிவாளன் செய்த அழிக்க முடியாத குற்றம். நீதிமன்றங்களும், நீதிஅரசர்களும் ஒருபுறம் இருக்கட்டும் ஐயா. தமிழினத்தின் தலைவரே! முறையீடு இப்போது எங்கள் இறுதித் தலைவராக நாங்கள் எண்ணுகிற உங்கள் கைகளில் வந்துவிட்டது. விட்டுப் போன விடுதலைக் காற்றும், மறுதலிக்கப்பட்ட மனுக்களின் பாரத்தையும் மறுசீராய்வுகளாய் நீங்கள் மனம் திறந்து படிக்கவேண்டும், குற்றங்கள் புலப்பட்டால் சட்டங்கள் பாயட்டும். குற்றவாளி இல்லை என்று சட்டங்கள் சொல்லி விட்டால், கடைத்தேற்ற முடியாத, துடைக்கவும் முடியாத ஒரு தாயின் பதினாறு ஆண்டு காலக் கண்ணீர்ப் பயணத்தை நீங்கள் பரிவோடு பார்க்க வேண்டும். திருமணத்தைக்கூட தவிர்த்துவிட்டுத் தன் சகோதரனுக்காய் வாடிக்கொண்டிருக்கும் ஒரு தமிழ்ச் சகோதரியின் வாழ்வை வளமாக்குவதற்கு உங்களைத் தவிர இவ்வுலகில் யாராலும் இயலாது ஐயா. விட்டுப் போன விடுதலைக்காற்றும், மறுதலிக்கப்பட்ட மனுக்களின் பாரத்தையும் மறுசீராய்வுகளாய் நீங்கள் மனம் திறந்து படிக்கவேண்டும்

தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் சாரத்தை அறிவதற்கே அவனுக்குப் பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. முறையீடுகளைச் செவிமடுக்காத மறுக்கப்பட்ட நீதிகளோடு மரணத்தை நோக்கி நிற்கின்ற அண்ணன் உயிர்ப்பிச்சை கேட்டுக்கடிதம் எழுதவில்லை. நீதி மறுக்கப்பட்டது என்கிற மனவேதனையோடு கடிதம் எழுதுகிறான். செய்யாத குற்றத்துக்காய், வெங்கொடுமைச் சாக்காட்டில் கதிரவனைக் கூடக்காணக்கிடைக்காத கொடுஞ்சிறை வாசம் என் அண்ணனுக்கு நிகழ்ந்ததென்றால் அதனைக் கண்டும். காணாமல் வாழ நினைக்கிற வெற்றுத் தம்பிகள் அல்லவே நாங்கள். தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் வார்த்துக் கொடுத்த தம்பியின் ஆட்சியில் வாழும், தமிழ்த்தம்பிகள் தானே நாங்கள்! தொடர்ந்து படிக்க இணைப்பில் செல்க...


September 14, 2008

அண்ணா நூற்றாண்டு விழா சிறப்பிதழ்

அண்ணா நூற்றாண்டு விழா சிறப்பிதழ் அற்புதமான தகவல்களுடன் "அதிகாலை"-யில் வெளிவந்துள்ளது. தவறாமல் நண்பர்களனைவரும் வாசிக்குமாறு வேண்டுகிறேன். இணைப்பிற்கு இங்கே செல்க... http://www.adhikaalai.com/ அறிஞ‌ர் அண்ணா த‌ம்பிக்கு எழுதிய‌ க‌டித‌ங்க‌ள் புக‌ழ்பெற்ற‌வை! ஒவ்வொன்றும் ப‌டித்துச் சுவைத்து அறிந்துகொள்ள‌ வேண்டிய‌ க‌ருத்துப்பெட்ட‌க‌ங்க‌ள் அவை! கால‌த்தால் க‌ரைந்துவிடாதிருக்க‌ புத்த‌க‌ங்க‌ளாக‌ உருப்பெற்று வ‌ல‌ம்வ‌ரும் அவையெல்லாம் அறிஞ‌ரின் க‌ருத்துக் க‌ருவூல‌ம்! இன்றைய‌ இளைய‌த‌லைமுறையின‌ர்,வ‌ருங்கால‌ச் ச‌ந்த‌தியின‌ருக்கு சிந்தையை சிலிர்க்க‌ச் செய்து அறிவூட்டும் அமுத‌சுர‌பி அது! அறிஞ‌ர் அண்ணா போல‌ இளைய‌த‌லைமுறைக்கும், அண்ணாவை அறியாதோருக்கு அறிமுக‌ப்ப‌டுத்தும் வ‌ண்ண‌மாக‌ பிரான்சுப் பெரும‌க‌னார் பேராசிரிய‌ர் பெஞ்ச‌மின் லெபோ விடுக்கும் ஓர் உன்ன‌த‌ம‌ட‌ல் இது! ப‌டித்து இன்புறுக‌!
சுவைத்துப் பெற்ற‌ இன்ப‌த்தை ப‌கிர்க‌ பல‌ருக்கு! - ஆசிரிய‌ர்

August 27, 2008

பழ.நெடுமாறனுக்கு கலைஞர் கவிதைக் குத்து

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தினமணி பத்திரிகையில் நேற்று (ஆகஸ்ட் 26) எழுதிய ஒரு கட்டுரையில், முதல்வர் குறித்து விமர்சித்திருந்தார். காதோரம் ஒரு முடி நரைத்ததற்கே தசரதன் ராமனை மன்னராக்கினான். ஆனால் கருணாநிதியோ இன்னும் முதல்வர் பதவியை விடாமல் பிடித்திருக்கிறார் என்று அதில் நெடுமாறன் தாக்கியிருந்தார். அதற்குப் பதிலடியாக கருணாநிதி கவிதை புனைந்துள்ளார்.

சமீப காலமாக முதல்வர் கருணாநிதியின் கவிதைகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. டி.கே.ரங்கராஜனை மறைமுகமாக சாடி கவிதை பாடியிருந்தார் கருணாநிதி.

இந்த நிலையில் பழ. நெடுமாறனை மிகக் கடுமையாக சாடி கவிதை எழுதியுள்ளார் கருணாநிதி. அதற்குப் பதிலடியாக முதல்வரின் கவிதை இதோ...


விடுதலைப் போர் நாயகராம்

விருதுநகர் மாவீரர் காமராஜரின்

விசுவாசமிக்க சீடர் என்று

விரிவுரைகள் பல நிகழ்த்தி; பின்னர்

வேறு கொடி பிடிப்பேன் என்று - அவர்

விலாவில் குத்திய விபீஷ் ஆழ்வார்!

அண்ணாவின் அணிவகுப்பில் நானும் ஒருவன் என நவின்று

கண்ணான அண்ணாவின் கழுத்தறுக்க முனைந்திட்ட சுக்ரீவன்!

மூப்பனாரின் காலடியே மோட்சமென்றும் சொர்க்கமென்றும்

முகஸ்துதி பல செய்து மோசடியால் புதுக்கொடி ஏற்றிவிட்ட எட்டப்பன்!

குன்றணைய குமரி அனந்தரின் புகழ் மறைக்க

குறுக்குச் சுவர் கட்டி, தடை மீறிய தமிழ் ஈழப் பயணமென

தவிக்க விட்டு கடல் நடுவே அவரை;

தான் மட்டுமே தப்பி வந்த ஆஞ்சநேயன்!

வலியின்றி புலிக் கூட்ட முதுகினிலே

குத்திக் கொண்டே பணம் பறிக்கும் இனத் துரோகி!

தரணிதனில் பல புராணங்கள் இருக்க

தசரதன் புராணத்தில் இவர் இறங்கி

அவன் காதோரம் நரைத்த மயிரின் கதையை -

தன்கட்டுரைக்கு விதையாக்கி

விஷத்தைக் கக்கியிருப்பததுதான் பெரும் விந்தை!

சீராக்கவே முடியாத சீழ் பிடித்த சிந்தை!

கூராக்கவே இயலாத மூளையிலே விஷம் ஒரு மொந்தை!


என்று மிகக் கடுமையாக தாக்கியுள்ளார் கருணாநிதி.


(முதல்வரின் அடுத்த குத்து யாருக்கோ?)


August 25, 2008

"ஒரு லட்சம் தேவேந்திரகுல வேளாளர் முஸ்லிம்களாக மதம் மாற முடிவு" - சி.பசுபதி பாண்டியன்

தென்காசி, ஆக. 24 : தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் ஒரு லட்சம்பேர் இஸ்லாமியர்களாக மதம் மாறப்போவதாக தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் சி. பசுபதி பாண்டியன் எச்சரித்தார்.

திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இயற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு :

  • "தியாகி இமானுவேல் சேகரனின் நினைவுநாளை தமிழ்ச் சமூகங்களின் சமத்துவ நாளாக அரசு அறிவித்து ஆண்டுதோறும் விழா நடத்த வேண்டும். தமிழகம் முழுவதும் வைக்கப்பட்டுள்ள அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களின் அனைத்து சிலைகளையும் அகற்றி அருங்காட்சியகத்தில் வைக்கவேண்டும்.
  • தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை ஆதிதிராவிடர் பட்டியலிலிருந்து நீக்கவேண்டும் என பலமுறை வலியுறுத்தியும், அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காத மாநில அரசைக் கண்டிக்கிறோம்.
  • ஆதிதிராவிடர் பட்டியலிலிருந்து நீக்கி, "தேவேந்திரகுல வேளாளர்'' என தனிப்பட்டியல் கோரி புதுதில்லியில் 5 ஆயிரம் பேர் கலந்துகொள்ளும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவேண்டும்.
  • இலங்கைவாழ் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  • இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தி நிரந்தரத் தீர்வு காணவேண்டும்'.
  • இந்தத் தீர்மானங்களை வலியுறுத்தி மாவட்டங்கள் தோறும் விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்துவது என மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டம் முடிந்தபின், சி. பசுபதி பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

எங்களுடை பூர்வீகத் தொழில் விவசாயம். இந்தியாவில், தமிழகத்தைத் தவிர விவசாயம் செய்யும் மக்களை யாரும் எஸ்.சி. என அழைக்கவில்லை. எங்களுக்கு இடஒதுக்கீடு தேவையில்லை.

எங்களுடைய மக்கள் தொகையைக் கணக்கிட்டு விகிதாசார அடிப்படையில் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

தமிழன் என்ற மரியாதையை எங்களுக்கு வழங்கினால் போதும். பல்வேறு ஜாதிக் கலவரங்களால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதோடு மிகவும் இழப்புகளைச் சந்தித்து விட்டோம்.

தில்லியில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பிறகும், ஆதிதிராவிடர் பட்டியலிலிருந்து எங்களுடைய தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை நீக்காவிட்டால், ஒரு லட்சம் பேர் இஸ்லாத்துக்கு மாறுவதைத் தவிர வேறுவழியில்லை.

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால், நாடாளுமன்றத் தேர்தலையும் புறக்கணிக்கவுள்ளோம் என்றார் அவர்.
நன்றி : முதுவை ஹிதயத்


August 24, 2008

தெருவோரத்தில் அனாதைகளாக வ.உ.சி.யின் கொள்ளுப் பேத்தி,பேரன்

ஆங்கிலேய அரசையே ஆட்டிப்படைத்த சுதந்திரப் போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் கொள்ளுப் பேத்தி, பேரன் ஆகியோர் வசிக்க இடமின்றி சாலையோரத்தில் வாழ்கின்றனர்.

"மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?' -என பாரதியார் தனது "சுதந்திரப் பயிர்' என்ற தலைப்பிலான கவிதையில் வ.உ.சிதம்பரனாரின் தியாகத்தை நினைந்து அன்றே உள்ளம் உருகிப் பாடியிருந்தார்.

அப்படிப்பட்ட தியாகச்சுடர் சிதம்பரனாரின் மூத்த மகன் ஆறுமுகம். இவரது மகள் கமலாம்பாள். இவரது கணவர் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஞான வடிவேலு. இந்திய குடியரசுத்தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத், ஞானவடிவேலுவுக்கு தொழிலாளர் நலத்துறையில் பணி வாய்ப்புக்கு ஏற்பாடு செய்தார். ஞானவடிவேலு-கமலாம்பாளின் மூத்த மகள் தனலெட்சுமி (52). மகன்கள் சங்கரன் (46), ஆறுமுகம் (40), சோமசுந்தரம் (40).


தாய் இறந்த நிலையில் தந்தையே இவர்களை வளர்த்துள்ளார். அருப்புக்கோட்டையில் குடும்பக் கோயிலுக்குச் சொந்தமான வீட்டில் வசித்துள்ளனர். அப்போது, பங்காளிகளுக்குள் ஏற்பட்ட சொத்துப் பிரச்னை காரணமாக கல்லூரணி என்ற ஊருக்கு வாடகை வீட்டில் குடிபெயர்ந்தனர். இந்நிலையில் தனலெட்சுமி, சங்கரன் ஆகியோருக்கு திருமணமாகியது. சங்கரன் மதுரை மூன்றுமாவடி சம்பக்குளம் பகுதியில் குடியேறி பெயிண்டிங் தொழில் செய்தார். அவரது சகோதர ரான ஆறுமுகமும் உடன் வசித்தார். காதல் திருமணம் செய்த தனலட்சுமி கணவரைப் பிரிந்தார். 2003-ல் ஞானவடிவேலு இறந்துவிட்டார். ஆறுமுகம் பெயிண்டிங் வேலை செய்தபோது ஏற்பட்ட விபத்தில் மனநலம் பாதிக்கப்பட்டார். இதனால் திருமணமாகவில்லை.


கணவரும் பிரிந்து, ஆதரித்த தந்தையும் இறந்துவிட்டதால், மதுரை வந்த தன லெட்சுமி மூன்று மாவடிப் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி முறுக்கு வியாபாரம் செய்தார். ஆனால் சொத்துப் பிரச்னை வழக்கு தொடர்பாக அருப்புக்கோட்டைக்கு அடிக்கடி சென்றதால் வியாபாரத்தைச் சரியாகக் கவனிக்க முடியவில்லை. மாதாமாதம் வாடகை தராததால் வீட்டைக் காலி செய்துவிட்டனர். தனலெட்சுமியின் சகோதரர் சங்கரனுக்கும் பெயிண்டிங் தொழிலில் போதிய வருவாய் இல்லை.அவராலும் வீட்டு வாடகையைக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தகராறு ஏற்பட்டது. அவரது மனைவி குழந்தையுடன் பிரிந்து சென்றுவிட்டார். இப்போது தனலெட்சுமியும் அவரது சகோதரர்களும் மூன்று மாவடி பஸ் நிலையம் அருகே உள்ள "கண்ணன் கருப்பன் ஆஞ்சநேயர் கோயில்' வளாகத்தில் தங்கியுள்ளனர். சங்கரனும், தனலெட்சுமியும் கிடைக்கும் கூலி வேலைக்குச் சென்று வருகின்றனர். அவரது சகோதரர் ஆறுமுகமும் அவ்வப்போது பெயிண்டிங் வேலைக்குச் சென்று வருகிறார். இவர்களை யாரென்று அப்பகுதியில் உள்ளோருக்குத் தெரியவில்லை.


வெட்டவெளியில் கோயிலுக்கு அருகே விற்பனைக்கு குவிக்கப்பட்ட மணல், செங்கல் இடையேதான் தனலெட்சுமியும், அவரது சகோதரர்களும் தினமும் இரவில் உறங்குகின்றனர் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.மழைக்காலத்தில் அங்குள்ள கடைகளின் முன்பகுதியில் தங்குவார்களாம்.மழை பெய்தால் அன்று இரவு அவர்களுக்கு சிவராத்திரிதான். இந்தச் சூழலால் தற்போது தனலெட்சுமியும்

, அவரது சகோதரர்களும் மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கலாம் என ஆதங்கப்படுகிறார் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். சாலையோர வாழ்க்கை; காபி, வடையே காலை உணவு! தெருவோரத் தில் தள்ளுவண்டியில் விற்கப்படும் கேப்பை, கம்பங்கூழே பகலுணவு -என காலத்தைக் கழிப்பதாக விரக்தியுடன் விவரிக்கிறார் தனலெட்சுமி.வ.உ.சி. வாரிசுகள் என உதவி கேட்டு அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் எதுவும் நடக்கவில்லை என்பதால் வெறுத்துப் போய்விட்டதாக தனலெட்சுமி விரக் தியுடன் சிரிக்கிறார்.""ஏதாவது ஓர் இடத்தில் குறைந்த ஊதியத்திலாவது என்னை வேலைக்கு சேர்த்துவிட முடியுமா?'' என நம்மைப் பார்த்து அவர் கெஞ்சியதைக் கண்டு கண்ணீர் தான் வருகிறது.


சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு ஏதேதோ சலுகைகள் செய்ததாகக் கூறி வரும் தமிழக அரசுக்கும், வ.உ.சி. பெயரில் கட்சியும், மன்றமும் நடத்துவோருக்கும் இந்த தனலெட்சுமி போன்றோரது கஷ்டம் தெரியாமல் போனது எப்படியோ? வ.உ.சி. சிறையில் இழுத்த செக்கையும், அவர் பயன்படுத்திய பொருளையும்கூட பத்திரப்படுத்தி பாதுகாக்கும் தமிழக அரசு அந்தத் தியாகச்சுடரின் வாரிசுகளுக்கு, வாழ ஒரு வழியும், வசிக்க பாதுகாப்பான இடமும் அளிப்பது அவசியம் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.


"பஞ்சமும் நோயும் நின் அடி யார்க்கோ, பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ'' ன்ற பாரதியாரின் பாடல் வரிகள்தான் அந்த இடத்திலிருந்து புறப்பட்டபோது காதில் ரீங்காரமிட்டது. வசிக்க வீடில்லாமல் மதுரை மூன்றுமாவடி சாலையோரத்தில் தங்கி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் கொள்ளுப் பேத்தி, பேரன்".

August 16, 2008

புலி வேட்டைக்குப் புறப்பட்டவர்கள் புகைந்து போன வரலாறு! - பழ.நெடுமாறன்

15 August 2008 : "விடுதலைப் புலிகளால் இனிமேல் மரபு வழி இராணுவமாக சண்டையிட முடியாது. இராணுவத்தினர் நடத்தும் தொடர்ச்சியான தாக்குதல்களால் வலிமை குன்றிவிட்டார்கள். இனி அவர்களால் எதிர்த்துப்போராட இயலாது" என்று சிங்கள இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார்.

கடந்த கால வரலாறுகளை மறந்து சிங்கள இராணுவத் தளபதிகள் பலரும் இதைப்போல வாய்ச்சவடால்கள் அடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் புளுகுகளைத் தமிழர்கள் ஒருபோதும் நம்பப்போவதில்லை. உலக நாடுகளும் உண்மைகளை அறிந்தே வைத்துள்ளன. எனவே உலக நாடுகளையும் இவர்களால் ஏமாற்ற முடியாது. அவ்வப்போது இத்தகைய புனைக்கதைகளை அவர்கள் யாருக்காகக் கூறுகிறார்கள்? சிங்கள அப்பாவி மக்களை ஏமாற்றுவதற் காகத்தான் இத்தகைய பொய்யான தகவல்களை தொடர்ந்து கூறிவருகிறார். ஏற்கனவே இராணுவ ரீதியில் வலிமை குன்றிப்போய் கிடக்கிறார்கள், பொருளாதார ரீதியில் நொறுங்கிப்போய் சிங்கள தேசம் கிடக்கிறது. இந்தச் சூழ்நிலையில் சிங்கள மக்களை ஏமாற்றுவதற்காக இத்தகைய பொய்யுரைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடந்த காலத்திலும் இத்தகைய கட்டுக்கதைகளை கூசாமல் சொன்னவர்கள் பலருண்டு.
தளபதி கல்கத்

1988-ஆம் ஆண்டில் இந்திய அமைதிப்படையின் தளபதியாக இருந்த கல்கத் வெறும் சவடால் பேர்வழியாக இருந்தார். இந்தியாவில் உள்ள வெத்து வேட்டு அரசியல்வாதிகளைப் போல அடிக்கடி புலிகளைக் குறித்து பொய்யான அறிக்கைகள் விட்டு சுயவிளம்பரப் போர் நடத்திக்கொண்டிருந்தார். தினமும் 20, 30 புலிகளைச் சுட்டு வீழ்த்தியதாகவும் புலிகளின் முகாம்களைத் தாக்கி அழித்து விட்டதாகவும் செய்திகளைப் பரப்பியபடி இருந்தார்.
இடைஇடையே சென்னைக்கு வருகை தந்து 5 நட்சத்திர உணவு விடுதி ஒன்றில் பத்திரிகையாளர்களுக்கு ஆடம்பரமான விருந்து அளிப்பார். இந்த விருந்தில் தளபதி கல்கத் தனது வீரதீர பராக்கிராம செயல்களை விவரிப்பார். இச்செய்திகளை முக்கியத்துவம் கொடுத்து வெளியிடும் பத்திரிகையாளர்கள் தனியே சிறப்பாகக் கவனிக்கப்பட்டனர். சென்னையில் ஒருமுறை இவர் நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் அவிழ்த்துவிட்ட புளுகுகளைக் கேட்டுக் கேட்டு காதுகள் புளித்துப்போன செய்தியாளர் ஒருவர் "எல்லாம் சரி நீங்கள் இதுவரை சுட்டுவீழ்த்தியதாகக் கூறப்படும் புலிகளின் எண்ணிக்கையைக் கூட்டினால் பல ஆயிரம் வருகிறது. புலிகளிடமிருந்து நீங்கள் கைப்பற்றியதாகக் கூறப்படும் ஆயுதங்களின் எண்ணிக்கை சிங்கள இராணுவத்தினரிடம் உள்ள ஆயுதங்களைவிட அதிகமாக இருக்கும் போல் தெரிகிறதே" என்று கேட்டபோது அனைவரும் சிரித்தனர்.
ஒருமுறை தளபதி கல்கத் "பிரபாகரன் இருக்கும் இடத்தை இந்தியப்படை சுற்றி வளைத்துவிட்டது. இனி அவர் தப்ப முடியாது. எல்லா வழிகளையும் அடைத்துவிட்டோம். விரைவில் உயிருடன் அல்லது பிணமாக பிடிபடுவார்" என அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இப்படித் தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்யும் தளபதி கல்கத்திற்கு ஒரு பாடம் கற்பிக்க பிரபாகரன் விரும்பினார். அதற்கான திட்டத்தையும் தீட்டினார். முல்லைத் தீவில் உள்ள ஒரு காட்டிற்கு அருகில்தான் தளபதி கல்கத்தின் முகாம் அமைந்திருந்தது. ஒருநாள் காலைப்பொழுதில் தனது கூடாரத்திலிருந்து தூங்கி எழுந்து தளபதி கல்கத் வெளியே வந்து நாற்காலியில் அமர்ந்தார். அவருக்கு இராணுவ வீரர்கள் தேனீர் கொண்டுவந்து கொடுத்தனர். ருசித்து அருந்திக்கொண்டிருந்தார்.

சற்றுத் தொலைவில் இரண்டு உலங்கு வானூர்திகள் தயாராக நின்று கொண்டிருந்தன. ஆங்காங்கே படை வீரர்கள் காவலுக்கு நின்றிருந்தனர்.
அந்த வேளையில் அவர் கண்ணுக்கு எதிரில் சில நூறடிகளுக்கு அப்பால் புலிகள் சிலர் திடீரென்று தோன்றி தரையில் மண்டியிட்டு ஏவுகணைகளை ஏவினர். கண்மூடித் திறப்பதற்குள் இந்திய இராணுவ உலங்கு வானூர்திகள் இரண்டும் தூள் தூளாயின. பயந்து நடுங்கிய தளபதி கல்கத் தாவிக்குதித்து அருகில் இருந்த பதுங்கு குழிக்குள் பாய்ந்தார். அவரது காவலுக்கு நின்ற வீரர்களும் எதிர்பாராத இந்த தாக்குதல்களால் நிலைகுலைந்து சிதறி ஓடினர்.
கண்மூடி திறப்பதற்குள் இந்நிகழ்ச்சி நடந்து முடிந்துவிட்டது. புலிகள் நிதானமாக நடந்து மீண்டும் காட்டுக் குள்ளே புகுந்து மாயமாக மறைந்து போனார்கள். இவ்வளவு நெருங்கி வந்து ஏவுகணையை ஏவியவர்கள் நினைத்திருந்தால் தன்னையே எளிதாக ஒழித்திருக்க முடியும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யாததை எண்ணி எண்ணி தளபதி கல்கத்தின் உடம்பு நடுங்கிற்று. அன்றுடன் அவரது ஆணவப்பேச்சு மறைந்தது. புலிகளைப் பற்றி அவதூறு செய்வதை அவர் நிறுத்தினார்.

அமைச்சர் இரஞ்சன் விசயரத்தினா

இலங்கையின் குடியரசுத் தலைவராக பிரேமதாச இருந்தபோது அவருக்கு அடுத்தபடியாக செல்வாக்கு மிக்க பாதுகாப்புத்துறை இணையமைச்சராக இரஞ்சன் விசயரத்தினா என்பவர் இருந்தார். சிங்கள பேரினவாத வெறி பிடித்த அவர் தமிழர்களை அடியோடு கருவறுக்க உறுதிபூண்டிருந்தார்.
"புலிகளை அடியோடு அழிப்பதே எனது இலட்சியமாகும். அவர்கள் உயிர்தப்பவேண்டுமானால் எவ்வித நிபந் தனையுமின்றி ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையவேண்டும். இல்லையேல் புலிகள் அழித்து ஒழிக்கப்படுவது நிச்சயம்" என இரஞ்சன் விசயரத்தினா 4-12-90 அன்று கொக்கரித்தார்.

ஆனல், 2-3-91 அன்று கொழும்பு நகரின் வீதியில் காலை 8.30 மணிக்கு தனது பாதுகாப்பு பரிவாரங்கள் புடைசூழ இரஞ்சன் விசயரத்தினா சென்றுகொண்டிருந்தார். அதேவீதியில் ஒருபுறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்து சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது. அமைச்சரின் கார் சுக்கு நூறாக சிதறியது. அமைச்சரும் அவரின் பாதுகாவலர்களும் அடையாளம் தெரியாமல் சிதறிப்போனார்கள்.

தளபதிகள் கொத்தாக பலி

தமிழீழப் பகுதியில் புகுந்து தமிழர்களைக் கொன்று குவித்தும் அழிவு வேலைகளைச் செய்தும் வந்த சிங்கள இராணுவத்தின் முக்கிய தளபதிகள் ஒட்டு மொத்தமாக புலிகளால் அழிக்கப்பட்ட நிகழ்ச்சி சிங்கள அரசையும் மக்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. 1992-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ம் நாள் யாழ்ப்பாணப் பகுதியில் சிங்களப் படையின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் துணிவுடன் ஊடுருவி புலிகள் புதைத்து வைத்த நிலக்கண்ணிவெடியில் சிக்கி கீழ்க்கண்ட சிங்கள இராணுவ உயர் அதிகாரிகள் ஏறிவந்த வாகனங்கள் வெடித்துச் சிதறின.

1. வடபிராந்திய ஆணைத் தளபதி மேஜர் ஜெனரல் தென்சில் கொப்பேகடுவ
2. வடபிராந்திய கடற்படைத் தளபதி கமோடர் மொகான் ஜயமகா
3. யாழ்பிராந்திய பிரிகேடியர் விசயவிமலரத்தின
4. லெப்.கர்னல் ஆர்ய இரத்தின
5. லெப்.கர்னல் பலிப்பான
6. லெப்.கர்னல் ஸ்டீபன்
7. மேஜர் அல்வீஸ்
8. கடற்படைத் தளபதி லெப்.லங்க திலக
9. கடற்படை லெப்டினன்ட் விசயபுர
10. படைவீரர் விக்கிரம ரத்தின


ஆகியோர் அந்த இடத்திலேயே உடல் சிதறி மாண்டனர். சிங்கள இராணுவம் புலிகளுடன் போர் தொடங்கிய பிறகு உயர் இராணுவ அதிகாரிகள் பலர் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டது இந்நிகழ்ச்சியிலேயே ஆகும்.

வைஸ் அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ

சிங்கள முப்படைத் தளபதிகளில் ஒருவரும் கடற்படையின் தளபதியுமான வைஸ்அட்மிரல் கிளான்சி பெர் னாண்டோ பிரிட்டனில் சென்று பயிற்சி பெற்றவர். இந்தியக் கடற்படைத் தளபதிகளுடன் பேச்சுநடத்தி அவர்கள் உதவியுடன் சிங்களக் கடற்படையின் வலிமையைப் பெருக்கியவர். விடுதலைப் புலிகளுக்கு கடல்வழியாக வரும் ஆயுதங்களைத் தடுக்க இருநாட்டுக் கடற்படையின் கூட்டு நடவடிக்கைகளுக்கு வழிவகுத்தவர். 16-11-1992-ஆம் ஆண்டு காலை 8.30 மணிக்கு கிளான்சி பெர்னாண்டோ தனது அலுவலகத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அவரது பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த இளைஞன் ஒருவன் அவர் காரின்மீது மோதினான். கண்மூடித்திறப்பதற்குள் காரும் காருக்குள் இருந்த தளபதியும் உடல் வெடித்துச் சிதறினார்கள். கொழும்பில் குண்டு தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்க சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக கூட்டுப்படைத் தலைமையகம் அறிவித்து 4 நாட்களுக்குள் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறு தொடர்ந்து புலிகளை வேட்டையாடப் புறப்பட்ட பல தளபதிகள் புகையோடு புகையாக மறைந்து போனார்கள் என்பதைத்தான் கடந்த கால வரலாறு எடுத்துக்காட்டுகிறது. புலிகளின் வலிமையை அழித்துவிட்டதாக மார் தட்டும் லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா இரண்டாண்டுகளுக்கு முன் புலிகளின் தாக்குதலிலிருந்து படுகாயங்களுடன் தப்பிப்பிழைத்தவர். பலமாதங்கள் மருத்துவமனையில் படுத்த படுக்கையாக கிடந்தவர். ஆனால் இப்போது வாய்ச் சவடால் பேசுகிறார்.

சிங்கள அரசு போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து ஒருதலைப்பட்சமாக முறித்துக்கொண்டு வெளியேறிய போதும் இதுவரை போர் நிறுத்தத்தில் இருந்து விலகுவதாக விடுதலைப் புலிகள் அறிவிக்கவில்லை. எனவே சிங்கள இராணுவத்தினர் மீது மரபுவழியிலான தாக்குதலை விடுதலைப்புலிகள் மேற்கொள்ளவும் இல்லை. உலக நாடுகளுக்கு இந்த உண்மை நன்கு தெரியும்.
2006-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இருந்து சிங்கள இராணுவம் புலிகளுக்கு எதிரான போரைத் தொடங் கியபோது அதற்கு எதிராக வழிமறிப்புத் தாக்குதல்களையும் தற்காப்பு இராணுவ நடவடிக்கைகளையுமே புலிகள் மேற்கொண்டு வருகிறார்கள். விடுதலைப்புலிகளின் தாக்குதல் சிறப்பு அணிகள் எவையும் இன்னும் களம் இறங்கவில்லை. முன்னணி காவல் அரங்குகளில் உள்ள விடுதலைப்புலிகளே ஊடுருவ முயலும் சிங்கள இராணுவத்தினர்க்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை முறியடித்து விரட்டி வருகிறார்கள். இந்த உண்மையை அடியோடு மறைத்துவிட்டு விடுதலைப் புலிகளால் இனிமேல் மரபுவழி இராணுவமாக சண்டையிட முடியாது எனவும் தனது இராணுவத்தினர் நடத்தும் தொடர்ச்சியான தாக்குதல்களால் புலிகள் தங்கள் வலிமையை இழந்துவிட்டார்கள் என்றும் சரத்பொன்சேகா பீற்றிக்கொள்வது நகைப்புக்குரியதாகும்.

தரை, வான், கடல் ஆகிய மும்முனைகளிலும் புலிகளின் படைகள் வலிமையாக இருந்துவருகின்றன. போர் நிறுத்த காலத்தில் பல புதிய அணிகளை புலிகள் உருவாக்கி உள்ளனர். தொடர்ந்தும் பல அணிகள் உருவாக்கப்பட்டும் வருகின்றன. முன்பு இருந்ததைவிட தற்போது வலிமை மிக்க மரபு வழி இராணுவமாக புலிகள் உருவெடுத்துள்ளனர். அவர்கள் தமது முழு வலிமையுடன் இன்னும் களம் இறங்கவில்லை. தங்கள் மண்ணில் நுழைய முயலும் எதிரிகளை விரட்டியடிக்கும் வேலையை மட்டுமே செய்துவருகிறார்கள்.

இறுதிக்கட்டப் போருக்கு விடுதலைப்புலிகள் தயாராகி வருகிறார்கள் என்ற உண்மையை சிங்கள அரசும் இராணுவமும் நன்கு அறியும். எனவேதான் இந்தியாவின் உதவியை நாடி தில்லி நோக்கி சிங்கள அதிபர் இராச பக்சே அடிக்கடி காவடி எடுக்கிறார். சிங்கள இராணுவம் சந்திக்கவிருக்கிற பெரும் தோல்வியை மறைப்பதற்கான முன்முயற்சியாகவே பொன்.சேகா போன்றவர்கள் பொய்யான பரப்பரைகளைக் கூறிவருகிறார்கள். அப்பாவி சிங்கள மக்கள் வேண்டுமானால் ஏமாறக்கூடுமே தவிர, தமிழர்களும் உலகநாடுகளும் இக்கூற்றுகளைக் கண்டு ஏமாறப்போவதில்லை.

August 06, 2008

மதுரையில் கலைஞருக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்ற ஊனமுற்ற ஒரு வாலிபருக்கு அடி, உதை-கைது

மறைந்த முன்னால் சபாநாநயகர் பண்பாளர் திரு.பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் அவர்களின் சிலை திறப்பு விழா இன்று மதுரையில் நடைபெற்றது. விழாவில் பேசிய முத‌ல்வ‌ர் க‌ருணாநிதி, "யாருமே எதிர்ப் பார்க்காத‌ விழா இது. இவ்வ‌ள‌வு விரைவாக‌ ந‌டைபெறும் என‌ எதிர் பார்க்க‌வில்லை. பண்பாளர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் அவர்களின் குடும்பம் திராவிட‌ இய‌க்க‌த்தை வ‌ள‌ர்த்த‌ குடும்ப‌ம். பேராசிரியர் குறிப்பிட்டது போல நீண்ட காலம் திராவிட இயக்கத்தை வளர்த்த பெருமையுடையது பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் அவர்களின் சிலையை திறப்பது இந்த மண்ணுக்கு பெருமை" என‌ முத‌ல்வ‌ர் புகழாரம் சூட்டினார்..இதற்காக நேற்று இரவு தூத்துக்குடியிலிருந்து முத்து நகர் விரைவு வன்டியில் மதுரை வந்தார். அவருடன் தமிழக அமைச்சர்களும் உடன் வந்தனர். இன்று காலை மறைந்த முன்னால் சபாநாநயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் அவர்களின் சிலை திறப்பு நடைபெற்றது. விழா முடிந்து அரசு சுற்றுலா மாளிகைக்கு புறப்ப‌ட்ட தமிழக முதல்வருக்கு, மதுரை பைக்காராவை சேர்ந்த சுந்தரன் மகன் எஸ்.ராஜா, ஊனமுற்றவரான இவர் ஊனமுற்றவர்களுக்கு முதல்வர் எதுவும் செய்யவில்லை என்பதற்காக க‌றுப்புக் கொடி காட்ட முயன்றார்.


('அடி, உதை, அடிக்காதே' என்ற குரல்களை காணொளிப்பதிவில் கேட்கலாம்), உடனே காவ‌ல்துறையின‌ர் கைது செய்து தல்லாக்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் விழா நடைபெற்ற இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மாலை ந‌டைபெரும் விழாவில் பின்ன‌னிப் பாட‌க‌ர் டி.எம்.எஸ் மற்றும் பி.சுசிலாவிற்கு பொற்கிழி வ‌ழ‌ங்கி பாரட்டு விழா ந‌டைபெறுகிற‌து. இவ்விழாவிற்கான‌ ஏற்பாடுகளை மு.க‌.அழ‌கிரி செய்து வ‌ருகிறார்.

July 31, 2008

ரஜினி இரட்டை வேடம் : தமிழ் திரை உலகம் கண்டனம்

நடிகர் ரஜினிகாந்த் கன்னட மக்களிடம் மன்னிப்புக் கோரி இருக்கும் செயலுக்கு தமிழ் திரை உலகத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒக்கனேக்கல் தொடர்பாக நடைபெற்ற உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட பேசிய நடிகர் ரஜினி, ‘ஒக்கனேக்கல் திட்டத்துக்கு எதிராக இருப்பவர்களை உதைக்க வேண்டாமா? என்று ஆவேசப்பட்டார். அவரின் இந்த ஆவேசப் பேச்சு கன்னட மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ரஜினிக்கு எதிரான போக்கு கர்நாடகத்தில் தலைதூக்கியது. அவருடைய படங்கள் உட்பட எந்த தமிழ் படங்களையும் கர்நாடகாவில் திரையிடுவதில்லை என்று அங்குள்ளவர்கள் முடிவு செய்தனர். இந்நிலையில் (வெள்ளிக் கிழமை) ரஜினி நடித்த குசேலன் படம் உலகமெங்கும் நாளை திரையிட உள்ளது. ஆனால் பெங்களூரில் குசேலனை வெளியிட பெரும் எதிர்ப்புக் கிளம்பயது. ரஜினிகாந்த் மன்னிப்புக் கேட்டால் மட்டுமே வெளியிடப்படும் என்று சில கன்னட அமைப்புக்கள் எச்ச்ரித்திருந்தன.
இதனை அடுத்து கன்னட தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் “நான் தவறு செய்து விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள்” என்று கன்னட மக்களிடம் மன்றாடி உள்ளார். ரஜினியின் இந்த மன்னிப்பு தமிழ் சமூகத்தினரிடையே பெரும் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கி இருக்கிறது. இதுகுறித்து தமிழ் திரைப்பட நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறி இருப்பதாவது :-

"ரஜினி எதை தவறு என்று சொல்கிறார்? தமிழ்நாட்டில் உள்ள ஒக்கனேக்கலிலிருந்து தமிழ் நாட்டுக்கு தண்ணீர் வேண்டும் என்று தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததை தவறு என்று சொல்கிறாரா? தமிழ்நாட்டு ரசிகர்களை கவர இங்கே ஒரு பேச்சு; கன்னடர்களிடம் ஆதாயம் அடைய அங்கே ஒரு பேச்சா? ரஜினிகாந்தின் மன்னிப்பு ஏற்றுக் கொள்ளமுடியாது" என்று கூறி உள்ளார். அதே போல் லட்சிய திமுக கட்சியின் தலைவரும், இயக்குநருமான விஜய டி.ராஜேந்தர் ரஜினிகாந்தின் மன்னிப்பு நடவடிக்கையை இரட்டை வேடம் என்று விமர்சித்துள்ளார். அவர்(ரஜினி) எப்பொழுதும் தன்னை கன்னடர் என்று காட்டிக் கொள்ளத் தவறியதே இல்லை. இதிலிருந்து அவரின் சுயரூபம் வெளிச்சத்துக்கு வந்து விட்டது என்று டி.ஆர்.தெரிவித்துள்ளார்.

மேலும் ரஜினியின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தமிழ் அமைப்புக்களும் கண்டனம் தெரிவித்துள்ளன.

"என்னை மன்னித்து விடுங்கள்"- பணத்துக்காக பல்டி அடித்த ரஜினி

குசேலன் படத்தை நாளை பெங்களூரில் வெளியிட வேண்டும் என்பதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கன்னட மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார். ரஜினிகாந்த் நடித்து வெளிவர இருக்கும் குசேலன் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட வேண்டுமென்றால் அவர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும் என்று கர்நாடக ரக்க்ஷன வேதிகே எனும் அமைப்பு எச்சரித்திருந்தது. இதனை அடுத்து பணத்தை முக்கியமாக கருதும் ரஜினி குசேலனில் லாபம் சம்பாதிப்பதற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார்.

ஒக்கனேக்கல் குடிநீர் விவகாரம் தொடர்பாக சென்னையில் தமிழ் திரைப்பட சங்கத்தினர் உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது கன்னடர்களை தரக்குறைவாக ரஜினி பேசியதாக கூறி கர்நாடகாவில் பெரும் கொந்தளிப்பு உண்டானது. இந்நிலையில் குசேலன் படத்தை கர்நாடாகவில் வெளியிட அனுமதிக்க வேண்டும் என்று கன்னட திரைப்பட சங்கத்தினருக்கு ரஜினி கடிதம் எழுதி இருந்தார். ஆனால் படத்தை வெளியிடுவதை, தடை செய்வதை நிறுத்துவதற்கு தங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்று நடிகை ஜெயமாலா அதற்கு பதில் அளித்திருந்தார்.

இது தொடர்பாக கர்நாடக ரக்க்ஷன வேதிகே அமைப்பினர் பெங்களூரில் இன்று கூடி விவாதித்தனர். அப்பொழுது கன்னடர்களை தரக்குறைவாக பேசிய ரஜினிகாந்த் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் இல்லை என்றால் எந்தச் சூழ்நிலையிலும் குசேலன் படத்தை பெங்களூரில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர்கள் எச்சரித்தனர். இதனையும் மீறி குசேலன் படம் பெங்களூரில் திரையிடப்பட்டால் மிகப் பெரிய வன்முறை வெடிக்கும் என்றும் அவர்கள் மிரட்டல் விடுத்தனர். கூட்டம் நடந்த பெங்களூர் திரைப்பட சம்மேளன அரங்கத்திற்கு வெளியே கூடியிருந்தவர்கள் ரஜினிகாந்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு ரஜினி இன்று மாலை திடீர் பேட்டி அளித்தார். அதில், தான் தவறு செய்து விட்டதாகவும், எங்கே எப்படி பேசவேண்டும் என்பதை தெரியாமல் பேசிவிட்டதாகவும், இது சம்மந்தமாக கன்னட மக்களிடம் தகுந்த பாடம் கற்றுக் கொண்டதாகவும், எனவே கன்னட மக்கள் தன்னை மன்னித்து குசேலன் படத்தை பார்த்து, ரசித்து ஆதரவு தருமாறும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து நாளை பெங்களூரில் குசேலன் படம் திரையிடப்பட உள்ளது. சென்னை உண்ணாவிரத்த்தில் நரம்பு புடைக்க பேசிய ரஜினி இப்பொழுது வருமானத்துக்காக திடீர் பல்டி அடித்திருப்பது அவர் ஒரு கைதேர்ந்த நடிகர் என்பது நிரூபணம் ஆகி இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னை உண்ணாவிரதத்தில் சத்யராஜ் பேசி உசுப்பேற்றியதால் தன்னை தமிழின பாதுகாவலனாக காட்டிக் கொள்வதற்காக ரஜினி பேசிய ஆவேசப் பேச்சை தமிழ் சமூகம் மறந்திருக்காது.
அந்தச் சம்பவம் நடந்தேறி சில மாதங்கள் மட்டுமே ஆகி இருக்கும் நிலையில் தன்னுடைய கல்லாப் பெட்டியை நிரப்புவதற்காக கன்னடர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டிருக்கும் ரஜினிகாந்தின் நடவடிக்கை அரசியல்வாதிகளை விட கேவலமானது என்று பலரும் வேதனை தெரிவித்துள்ளனர். ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் இந்த தமிழகமே புனிதமடைந்து விடும் என்று நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர் செய்திருக்கும் இந்த ஒரு சின்ன விஷயமே அவர் எப்படிப்பட்ட கை தேர்ந்த அரசியல்வாதி என்பதை தெளிவாக்கி இருப்பதாக தமிழ் அமைப்புக்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளன.

July 30, 2008

உலக சினிமா என்ற போர்வையில் இன்னொரு ஏ.பி.நாகராஜனின் இந்துத்துவா சினிமா : மு.சிவகுருநாதன்


(இது தாமதமான பதிவாக இருந்தாலும் தவிர்க்க இயலா பதிவு)


தமிழ் சினிமா வெளியாவதற்கு முன்பு மீடியாக்கள் உருவாக்கும் எண்ணற்ற புனைவுகள், கதைத்திருட்டு, நீதீமன்ற வழக்கு போன்றவைகள் மூலம் மக்களிடம் எதிர்பார்ப்பைத் தூண்டும் விளம்பர உத்தியாகவும் உலக சினிமா, தொழில்நுட்ப அசத்தல், பொருட்செலவு போன்ற இன்னபிற விளம்பரங்களுடன் வெளிவந்திருக்கிறது கமல்ஹாசனின் 'தசாவதாரம்' (அதிக பணம் செலவழித்து எடுக்கப்படும் சினிமா சிறந்த உலக சினிமா என்பதைவிட அபத்தம் வேறு இருக்க முடியாது).

10 அவதாரங்கள், 2 ஆண்டுகள் தயாரிப்பு, 70 கோடி செலவு (தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் 700 கோடி செலவில் ஜாக்கிசானை வைத்து மற்றொரு உலக சினிமாவை தயாரிக்கப்போகிறாராம். தமிழர்கள் கொடுத்து வைத்தவர்கள்!) செய்து தயாரிக்கப்பட்ட இந்தப்படத்தில் 'உலகநாயகன்' என தனக்குத்தானே மகுடம் சூடிக்கொள்ளும் கமல்ஹாசன், ஷங்கர் போன்றோரின் அரைவேக்காடு அயோக்கியத்தனத்திற்கு தானும் இம்மியும் குறைந்தவனில்லை என்பதை தனது முந்தைய குருதிப்புனல், ஹேராம் போன்ற படங்கள் ஊடாகவும் இதிலும் நிரூபித்திருக்கிறார். இப்படத்தின் திரைக்கதை நடந்த சில சம்பவங்களுடன், 12 ஆம் நூற்றாண்டில் நடந்த உண்மைச் சம்பவங்களின் ஆதாரங்களைச் சேகரித்தும், எங்கள் கற்பனைகளைக் கலந்தும் அமைக்கப்பட்டுள்ளது" என்ற குறிப்போடு படம் தொடங்குகிறது. உலக உருண்டை வழியே உலக சினிமா உலக நாயகனின் கண்ணுக்குள் குடிபுகுகிறது. " உலகமெங்கிலும் உன்னை வென்றிட யாரு?" என்ற பாடல் ஒலிக்கிறபோது மேடையில் ஜார்ஜ் டபிள்யு புஷ் (கமலின் ஒரு அவதாரம்; பெருமாளின் ஒரு அவதாரமும் கூட,) டான்ஸே ஆடுகிறார். "இனி ஐ. நா-வும் உன்னை அழைக்கும் என்ற பைத்தியக்காரத்தனமும் வேறு. (ஐ.நா.ஆஸ்கார் விருது அளிக்கிற அமைப்பா என்ன?).
மணல் கொள்ளையன் (பி.வாசு.). "உலகத்தை ஒத்தை ஆளாக காப்பாற்ற நீ என்ன உலகநாயகனா? " என்று கேட்கும் போது வின்சென்ட் பூவராகவன் அசடு வழிய, "ஆமாம், நான் உலக நாயகன்தான்" என்று சொல்கிறார். முதல்வர் கருணாநிதி போன்ற பட்டம் விரும்பிகள் இவருக்கு இப்படத்தை அளித்து மகிழ்கிறார்கள். அதற்குப் பதிலாக கமல், 2004 டிசம்பர் 20-ல் தொடங்கி 26-ஆம் தேதி சுனாமியுடன் முடியும் கதையில், விஞ்ஞானி கோவிந்தராமசாமிக்கு கருணாநிதி, மன்மோகன்சிங், புஷ் சகிதம் பாராட்டுவிழாவில் இடம் அளித்து சொரிந்து கொள்கிறார். ஜெயலலிதா சுனாமியைப் பார்வையிடுகிறார். 2008-ல் 'தசாவதாரம்' கேசட் விழாவில் ஜாக்கிசானுடன் கருணாநிதி பங்கேற்றார். அதற்குப் பதிலுதவியா? இல்லை 4 ஆண்டு விஞ்ஞானிக்கு சிறைத்தண்டனையா?

"கடவுளை நான் ஏற்றுக் கொள்கிறேனா எனபது பிரச்சனை அல்ல. கடவுள் என்னை ஏற்றுக்கொள்கிற அளவிற்கு நான் நடக்கிறேனா இல்லையா என்பதுதான் பிரச்சனை" (சாய்பாபாவுடனான விழாவில் மு. கருணாநிதி) என்ற கருணாநிதியின் பேச்சுக்கு இணையாக படத்தின் இறுதியில் வரும் வசனம் ஒன்று. "நான் கடவுள் இல்லையின்னு எங்கங்க சொன்னேன். இருந்தா நால்லாயிருக்குன்னுதான் சொன்னேன்". (வருங்காலத்தில் பேருந்துகளில் எழுதி வைக்க பொன்மொழிகள் தயார்!).

"என் பாசத்துக்குரிய தமிழ் மக்களே! இந்தியர்களே!! (?!) என விளித்து கோவிந்தராஜ சுவாமிகள் சாமிக்கதை சொல்கிறார். "யேசுவும், அல்லாவும் இந்தியாக்குள்ளும் அதன் அரசியலுக்குள்ளும் புகாத நூற்றாண்டு, சிவனும், விஷுனுவும் மோதி விளையாடா வேறு கடவுள்கள் இல்லாத காலம். அதனால் அவ்விரு கடவுள்களும் தம் பக்தர்கள் வாயிலாக தம்முள் மோதிக்கொண்ட நூற்றாண்டு " (12 ஆம் நூற்றாண்டு) என்ற கதை சொல்லலில் வரலாற்றுப் புரட்டும் அரசியல் சார்பும் வெளிப்படுத்தப்படுகிறது. இங்கு இன்னொரு ஏ. பி. நாகராஜனாக கமல்ஹாசன் அவதாரம் எடுத்து விஷ்ணுவின் திருவிளையாடல்களை நிகழ்த்துகிறார். சமண - பவுத்தத்தை துடைத்தெறிந்த சைவ - வைணவக் கூட்டணி, சமண - பவுத்தர்களை வேட்டையாடிக் கொன்று குவித்த வரலாற்று உண்மைகள் கவனமாக தவிர்க்க/திரிக்கபட்டுள்ளன. சைவ - வைணவ மோதல்கள் கூட உண்மையான மோதல்கள் அல்ல. அவை சிவன் (அ) பெருமாளின் திருவிளையாடல்கள். சைவ - வைணவர்களுக்குமான உண்மையான எதிரி பின்னாளில் வந்த இஸ்லாமியர்களும், கிருத்துவர்களுமே என்பதை தொடக்கத்திலேயே அடையாளம் காட்டி அந்தத் திசையில் படம் முழுக்க பயணிக்கிறது.

"சக நிகழ்வுகளின் கோர்வைதான் உலக சரித்திரம். உலக நிகழ்வுகள் யாவும் ஒன்றுக்கொன்று சம்மந்தமுடையவை" என்றும் "ஓரிடத்தில் படபடக்கும் வண்ணத்துப்பூச்சியின் இறக்கைகள் பிறிதோரிடத்தில் ஏற்படும் மாற்றத்திற்கு காரணமாக இருக்கக்கூடும்" என்ற காயாஸ் தியரியுடன் முடுச்சுப் போட்டு 12 ஆம் நூற்றாண்டில் கடலுக்குள் போன விஷ்ணு 2004-ல் உலகை அழிக்கும் கிருமியை அழிப்பதற்காக சுனாமியாய் வந்து உலகைக் காப்பாற்றியதாக திரைக்கதை அமைத்து காதில் பூ சுற்றி இந்துத்துவ கொடுங்கோன்மைக்கு அரியணை ஏற்றியிருக்கிறார் கமல். இரண்டாம் குலோத்துங்கன் மற்றும் சைவர்களுடன் விஷ்ணு-வுக்காக மோதிப் போராடி கடலில் விஷ்ணுவுடன் சேர்த்துச் சங்கிலியால் பிணைக்கப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்படுகிறான் ரங்கராஜ நம்பி. "வாய்ப்பேச்சில் வீரர்தான் வைணவர்" என்று மன்னனாலேயே பாராட்டப்பெற்று சிவமந்திரத்தை உச்சரிக்க மறுத்து வைணவ மந்திரத்தை உச்சரித்து கடலில் மூழ்கி உயிரைவிடுகிறான். "ரங்கராஜ நம்பி செத்தது சிவனும் செயலும் அல்ல. அந்த நம்பி நம்பியும் பிழைக்காமற்போனது விஷுனுவின் சூழ்ச்சியுமல்ல" என்று விளக்கமளிக்கிறார் கதை சொல்லியான விஞ்ஞானி. எல்லாம் பெருமாளின் திருவிளையாடல்! பின்பு 2004 சுனாமியாய் வெளியே வரும் வரை பல்வேறு சேஷ்டைகளில் ஈடுபடுகிறார் பெருமாள்.
ரங்கராஜ நம்பிக்கு முதல் கல்லடி ஒரு குழந்தையினுடையது. கமலுக்கு குழந்தைகள் மீது ஏன் இவ்வளவு வெறுப்போ தெரியவில்லை? குருதிப்புனலில் குழந்தைகளை அதுவும் " ஜாரே.." பாடிவரும் தேசபக்திக் குழந்தைகளை தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்ப்பது போல காட்சி வைப்பார். " ஜாரே..." பாட்டு இங்கேயும் உண்டு. மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கிருமியுடன் பெருமாள் அவதாரம் வரும் விமானம் இறங்கும் பின்னணியில் ஒலிக்கிறது இப்பாடல். என்னே! தேசப்பற்று! கூடவே மதப்பற்றும். "அமெரிக்க செப்டம்பர் 11 க்கு பிறகு தன்னை பயோ ஆயுத தற்காப்புக்குத் தயார்படுத்திக் கொள்கிற மும்மரத்தில் இருந்ததாம். "பாவம் - பாருங்கள்! அமெரிக்காவுக்கு வேறு வழியேயில்லை. உலகமெங்கும் பரவி வரும் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு பயோ ஆயுதம் மூலமே அமெரிக்கா தன்னை தற்காத்துக் கொள்ளமுடியும் என்று கதையளக்கிறார். புஷ்-ஆல் பாராட்டப்படும் விஞ்ஞானியொருவன் இப்படித்தான் பேசமுடியும். அமெரிக்காவின் பயோ வார் ஏதோ செப்டம்பர் 11-க்கு பிறகுதான் என்று சொல்வதைவிட மடத்தனம் வேறு இருக்க முடியாது.
தஞ்சை ராமசாமி நாயக்கர் மகன் விஞ்ஞானி கோவிந்த் ராமசாமி பயோ டெக்னாலஜியில் பி.ஹெச்.டி படித்தவர். ('ரா' அதிகாரி பல்ராம்நாயுடு பயாலஜியில் பி.ஹெச்.டி. என்கிறார்). ரங்கராஜ நம்பியின் மனைவி கோதை, நம்பி கடலில் மூழ்கியதும் தனது தாலியைக் கழற்றி வீச அது சிலையில் தொங்குகிறது. பிற்காலத்தில் அவளே ஆண்டாளாக "முகுந்தா முகுந்தா" பாடும் போது கிருஷ்ண அவதாரத்திலிருந்து கோவிந்த் இறங்கி வருகிறார். ('இருவர்' - படத்தில் மோகன்லாலின் மனைவியாகவும், காதலியாகவும் ஐஸ்வர்யா ராய் வருவார். அதுபோல இங்கு அசின்). அப்போதே கோவிந்தராஜன் - ஆண்டாள் சேர்க்கை முடிவாகிவிட்டது. (அப்போது ஒரு டூயட் வைத்து அசினின் வருத்தத்தைப் போக்கியிருக்கலாம்) பெருமாள், விவரமின்றி செத்துப்போன ரங்கராஜ நம்பிக்கு மாற்றாக மிகவும் விவரமான சூத்திர விஞ்ஞானியால் பதிலீடு செய்யப்படுகிறார்.
"ரா" அதிகாரி பல்ராம் நாயுடுவின் (இந்திரன் - சந்திரன் கமல்) தெலுங்கு பாசத்தின் வழி தமிழ்ப்பாசம் கிண்டலடிக்கப்படுகிறது. கோவிந்த் ஆங்கிலத்தில் பேச பல்ராம் நாயுடு, "தமிழ் எப்படி வாழும்?" என்று கேட்க, உங்கள மாதிரி தெலுங்குக்காரங்க யாராவது வந்து வாழ வைப்பாங்க, விடுங்க" என்கிறார். செல்போனில் தெலுங்குப் பாடல் ரிங்க்டோன். தன் உதவியாளர் தெலுங்கு என்பதை உறுதிப் படுத்திக்கொள்ளுதல். கூரியர் ஆபீஸில் 'நரசிம்மராவ்' என்ற பெயரைக் கேட்டவுடன் தெலுங்கா? என்று கேட்டு 'கன்னடம்' என்று தெரிந்தவுடன் 'ரெண்டு லாங்க்வேஜ்க்கும் ஒரே ஸ்கிரிப்ட் தான்' என்று சமாளிக்கும் பல்ராம் நாயுடு. இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்? இதுவரையும் இனியும் தமிழை வாழவைக்கப் போகிறவர்கள் பிறர்தான் என்றா?

ஐ.எஸ்.ஐ. லஷ்கர் - அய். தொய்பா, அல் - கொய்தா, ஒசாமா பின்லேடன் போன்றவற்றை அடிக்கடி உச்சரிக்கும் பல்ராம் நாயுடு, சிதம்பரம் வைணவ மடத்தில் விசாரணை செய்யும் போது "மடத்தில் தப்பு நடக்காதா? என்று பொத்தாம் பொதுவாகக் கேட்டு வைப்பார். காமெடியன் இல்லாத குறையைப் போக்க கலிஃபுல்லாவை உயரமாகவும், வேற்று நாட்டு முஸ்லீம் போலவும் கேலிப் பொருளாகவும் ஆக்கி, விசாரணையில் பல்ராம்நாயுடு, "நீ என்ன, ஐ.எஸ்.ஐ. யா, லஷ்கர் அய் தொய்பா - வா, அல் கொய்தா-வா?" என்று கேட்பார்.

"அதெல்லாம் ஒண்ணும் இல்லை சார், என்றதும் "அதெல்லாம் ஒண்ணும் இல்லாம ஒரு மனுஷன் எப்படி எப்படி இருக்க முடியும்?' என்பார் நாயுடு. இங்கே ஒரு சின்ன திருத்தம், "மனுஷன்" என்பதை 'முஸ்லீம்' என்று மாற்றிக்கொள்ள வேண்டும்.

"ஏணி மாதிரி உயரமா இருக்கிறே. உன்பெயர் என்ன பின் - லேடரா?" என கலிஃபுல்லாவை கிண்டலடித்துக் கொண்டே, "எல்லோருமே டெரரிஸ்ட்தான்" எனச் சான்று வழங்கி, "200 பேரையும் (முஸ்லீம்கள்) புடிச்சு மசூதியில போட்டு கொஸ்டின் பண்ணு" என்று உத்தரவிடுகிறார் நாயுடு. அப்பாவிகளை இவ்வாறு கொடுமைப் படுத்துகிறார்களே என்று பார்வையாளர்கள் யாராவது வருத்தப்பட்டால் இறுதியில் அதற்கான காரணத்தை அறிந்து மிகவும் மகிழ்வார்கள். விசாரணைக்காக மசூதியில் அடைக்கப்பட்டிருந்த முஸ்லீம்கள் அனைவரும் சுனாமியில் தப்பிக்க, "நாம 200 பேரும் மசூதிக்குள் இல்லாது இருந்திருந்தால் இவங்க எல்லாரோடையும் சேர்ந்து நாமளும் மவுத்துதான். எல்லாம் அல்லாவோட கருணை" என்கிறார். இஸ்லாமியரான நாகேஷ். ஆனால் இவை நடப்பதே பெருமாளின் கருணையால்தான். கமலின் இந்துத்துவா சார்பு வெளிப்பட்டு முற்போக்குச் சாயம் வெளுக்கிறதல்லவா? இங்கே ஒரு இடையீடு : தமிழக சிறையில் உள்ள முஸ்லீம் கைதிகளிடம் அண்ணா நூற்றாண்டு பொது மன்னிப்பு அளிப்பதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. தகுதியான கைதிகள் முஸ்லீம் என்பதால் நீதி மறுக்கப்படுகிறது. இங்கே இப்படி என்றால், இந்தியா முழுவதும் சொல்ல வேண்டியதில்லை. நிலைமை இவ்வாறிருக்க முஸ்லீம்கள், போலீஸ்/பெரும்பான்மையினர் கஸ்டடியில் இருப்பதுதான் அவர்களின் உயிர்களுக்கு பாதுகாப்பானது என்று சொல்ல வருகிறார்கள். வழக்கமான 'விஜயகாந்த்' பாணி தமிழ்ப் படங்களிலிருந்து, பெரிதும் சிலாகிக்கப்படும் மணிரத்தினம் படங்கள் வரை இஸ்லாமியரைத் தீவிரவாதிகளாவே காட்டும்போக்கு தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதி. இப்படத்தில் ஃபிளேட்சர் என்ற வில்லனொருவன் இருந்தும் முஸ்லீம் காமெடியனாக சித்தரிக்கப்பட்ட போதிலும் விசாரணை, சிறை, என்கவுண்டர் என்று அனைத்து வகையிலும் அலைக்கழிக்கப்படுதல் இந்துத்துவா விடுக்கும் எச்சரிக்கையாகவே கொள்ள முடியும். வைணவ மடத்திற்குள் ஃபிளேட்சர் வருகை, அங்கு நடக்கும் அசம்பாவிதம், கொலைகள் போன்றவற்றாலும் வைணவர்கள் மீது தீவிரவாத முத்திரை குத்தமுடியாது. ஆனால் மணல் லாரியில் விபத்துக்குள்ளாகி வில்லனால் கடத்தப்படும் அப்பாவி முஸ்லீம் குடும்பம், தீவிரவாதி முத்திரை குத்தப்படுவதையும், அதனால்தான் உயிர்பிழைத்தோம் என்று சந்தோஷிப்பதையும் படமாக்குவது கூட மோடி வகை பாசிசந்தான்.
இங்கு தலித்தின் உடலும், பெயரும் கூட கேலிப்பொருளாகிறது. படத்தில் வருகிற கபிலனின் பாடல் :
"மை போல உடம்பு இருக்க மனசெல்லாம் வெள்ளையையா அருவா மீசை வச்ச அய்யனாரு பிள்ளையய்யா"
Funny Name (வசனம் : கமலஹாசன்) என்று சிறுவனால் கிண்டலடிக்கப்படுகின்ற வின்சென்ட் பூவராகவனின் கருப்பு நிறத்தை குறிப்பிடுகிறார்கள். தலித் என்றால் இவ்வளவு கருப்பாகவும், விகாரமுமாகத்தான் இருக்க வேண்டுமா? மண்ணுக்கான போராட்டத்திலும், பூவராகவனின் இறப்புக்கும் கபிலனால் புலம்பப்படுகின்ற வைரமுத்து பாணி கவிதைகள் திராவிட இயக்கபாணியை கிண்டலடிப்பவை. அவை இங்கு தலித்தியத்தின் மீது வெறுப்பை கக்கப் பயன்படுகிறது. (இருவர் படத்தின் இறுதியில் மோகன்லால் (எம்.ஜி.ஆர்) மறைவிற்கு பிரகாஷ்ராஜ் (மு.க.) இறங்கற்கவிதை வாசிக்கும் போது திரையில் இறுதி ஊர்வலம் நடக்கும்).

மணல் மாபியாவின் ஆள் (சுந்தர்ராஜன்) பூவராகவனின் காலில் விழும்போது, அவர் தடுத்து, "வயசுக்கு மரியாதை இல்லையா? என்று கேட்க "அதெல்லாம் இந்த காலத்துல எதுக்கு தம்பி" என்று பதிலளிப்பார் சுந்தர்ராஜன். அரசியலில் அடித்தட்டு மக்கள் அடைகிற எழுச்சி பிறரால் இவ்வாறு கணிக்கப்படுவதை நாம் அவதானிக்கலாம். மேலும் படிக்காத மேதையாக பூவராகவன் மட்டும் இருக்க அவர்கள் கூட்டத்தில் இப்போது படிக்காதவர்களைக் காண்பதே அரிதாக இருக்கிறது. அனைவரும் படித்து பட்டங்கள் பெற்று எங்கோ உச்சத்துக்கு சென்றுவிட்டார்கள். (இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் கவனிக்க)" என்னோட படித்தவர்கள் இருபது பேர். அதுல நாலு பேர் முஸ்லீம். அவங்க மைனாரிட்டி கோட்டாவுல வேலைக்குப் போயிட்டாங்க" என்றொரு வசனம் 'கற்றது தமிழ்' படத்தில் வரும். அதைப்போலத்தான் இதுவும். மேலும் தலித்துக்கள் பணம், சாப்பாடு, மது, புகழ் ஆகியவற்றிற்கு அடிமைப்பட்டு கிடப்பவர்கள் என்று சொல்லக்கூடிய காட்சிகளும் உண்டு.
தோழர்கள் மதுவில் கட்டுண்டு கிடக்க, வெகுண்டு கிளம்பும் பூவராகவனைப் பார்த்து, 'நில்லு' அதையும் பார்த்துட்டு போ" என மணல் கொள்ளையன் (பி.வாசு) சொல்வது புதிய உத்தியாக இருக்கலாம். ஆனால் தலித்தின் மரணம் இங்கு நிச்சயக்கப்படுகிறது. "நான் மண்ணுக்காக சாவுறேன். ஆனால் உன் சாவு அசிங்கமாகத்தான் இருக்கும்" என்று பூவராகவன் சொன்னபடியே குழந்தைகளைக் காப்பாற்றிவிட்டு சுனாமியில் உயிர்த்தியாகம் செய்கிறார். அந்த மரணத்தை "உனக்கு நல்ல சாவு" என்று சான்று தந்து அடிமை சாசனத்தை மீண்டும் நிலை நாட்டுகிறது ஒடுக்கும் வர்க்கம். மகாமக குளத்தில், தஞ்சைப் பெரியகோயில் தீயில் இறந்தாலும், நல்ல சாவுதான். சிதம்பரம் நந்தன், வடலூர் வள்ளலார் எரிக்கப்பட்டதும் கூட நல்ல சாவுதான். காக்கும் கடவுள் பெருமாளுக்கு யாரைக் காக்க வேண்டும் என்று தெரியாதா என்ன?
95 வயது கிருஷ்ணவேணி பாட்டி, (ரொம்ப வயதான அவ்வை சண்முகி) 50 ஆண்டுகளுக்கு முன்பு வக்கீலுக்குப் படிக்கச் சென்ற தன் மகன் இறந்துபோக, அது தெரியாமல் சித்த சுவாதினமின்றி, அவன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையில் பெருமாளை பூஜித்து வருபவர். சுனாமியில் இறந்த பூவராகவன் வழியே கிருஷ்ணவேணி தம் மகன் ஆராமுதனைக் கண்டடைய பெருமாள் அருள்பாலிக்கிறார். தலித்பிணம் பொது சுடு அல்லது இடுகாட்டிற்குச் செல்ல முடியாமலும், தனிச்சுடு/இடுகாட்டிற்கு கூட செல்லும் வழியில்லாத இந்த நாட்டில் பிணம் கூட தியாகத்தின் உருவாய் ஆதிக்க சக்திகளால் பயன்படுத்தப்படுகிறது.வைரஸ் கண்டுபிடிப்பு நிறுவனத்தின் மேலதிகாரி வைரஸ் குப்பியை தீவிரவாதிகளிடம் விற்கும் அநியாயத்தை கண்டு, "நாம் என்ன செய்ய முடியும்? என்று இருக்கும் யுகா, ஃபிளேட்சரால் கொல்லப்படுகிறாள். அவளது தந்தையான ஜப்பானிய வீரர் நரஹஷி கோவிந்துவை பழிவாங்க வந்து, இறுதியில் உண்மைக் கொலையாளி ஃபிளேட்சர் என்பதை அறிந்து, சுனாமி நேரத்தில் வில்லனோடு மோதி, அவனது முடிவு கண்டு திருப்தியடைந்து திரும்புகிறார்.
ஃபிளேட்சரை தீவிரவாதி அல்லது வில்லன் என்று சொல்வது கூட அவ்வளவு சரியாக இருக்காது. ஹீரோவுக்கு இணையாக மல்லிகா ஷராவத்துடன் ரொமான்ஸ் பண்ணுகிறார். அவருக்குத் தேவை வைரஸ் குப்பி மட்டுமே. முடிந்த வரையில் மனிதாபிமான வில்லனாகவும், சாகசக்காரனாகவும் சித்தரிக்கப்படுகிறார். பெருமாள் அருளால் குப்பி இருக்குமிடம் சிதம்பரம் என்பதைக் கூட அனாயசமாகக் கண்டடைகிறார். தன்னுடைய மொழி பெயர்ப்பாளினி (மல்லிகா ஷெராவத்) யானையால் தூக்கி வீசப்பட்டு குற்றுயிராய் இருக்க, வேறு வழியின்றி அவரை கருணைக் கொலை செய்கிறார். இவை எல்லாவற்றிற்கு மேலாக, தன் மனைவிக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டு குரலை இழந்தாவது உயிரோடு இருக்க எண்ணும் பஞ்சாபி பாப் பாடகர் அவ்தார் சிங்கின் தொண்டைக்குள் இருக்கும் கேன்சர் பகுதியை வெளியே எடுத்துச் சென்று, அவரை குணப்படுத்தி விடுகிறது ஃபிளேட்சரின் துப்பாக்கி குண்டு. இறுதியாக ஃபிளேட்சர் வைரஸ் குப்பி தன் கையில் கிடைத்த பின்னும் தப்பிக்க வழியின்றி தன்னிடமுள்ள உயிரி ஆயுதத்தை பிறர் மீது பயன்படுத்த வாய்ப்பு இருந்தும் உலகைக் காக்க விஷ்ணு விஷத்தை உண்டது போல் தானும் வைரஸை உண்டு மரணமடைகிறார். உடன் கிருமியை அழிக்கவேண்டும், என்ன செய்வது? ஆரம்பத்தில் குரங்கு வைரஸை சாக்லேட் என்று நினைத்து தின்று சாக, கிருமிகளை அழிக்க டன் கணக்கில் சோடியம் குளோரைடு கொட்டப்படுகிறது. கடற்கரையில் உடனடியாக பல டன் NaCl க்கு எங்கே செல்வது?

12 ஆம் நூற்றாண்டில் கடலுக்குள் மூழ்கிய பெருமாள் சுனாமியைக் கொண்டு வந்து, அதன் மூலம் பல டன் NaCl - ஐ வெளிக்கொண்டு வந்து இந்த உலகைக் காக்கிறார். ஒரு பெரிய மரம் வேரோடு சாயும் போது சிற்சில உயிர்கள் அழியத்தான் செய்யும். (நன்றி : முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி!) அந்த மாதிரி அழிவு தான் இந்த சுனாமிச் சாவுகள். சுனாமி பிணக்குவியல்கள் இயந்திரங்கள் மூலம் புதைக்கப்பட்டு, எங்கும் மரண ஓலம் நிறைத்துக்கொண்டிருக்க எந்த பிரக்ஞையுமின்றி கோவிந்தும், ஆண்டாளும் சேரமுடியுமா - முடியாதா..., காதல், கடவுள் பற்றி விவாதம் செய்கின்றனர். கூடவே 12 ஆம் நூற்றாண்டு விஷ்ணுவும் சங்கிலியால் பிணைக்கப்பட்ட ரங்கராஜ நம்பியின் எலும்புகளுடன் கரையேறி இருக்கிறார். பத்து அவதாரங்களில் கேலிக்கும், கிண்டலுக்கும் பயன்படும் அவதாரங்கள் இரண்டு மட்டுமே. ஒன்று கலிஃபுல்லா; மற்றொன்று வின்சென்ட் பூவராகவன். கிருஷ்ணவேணி பாட்டியை அப்படி எடுத்துக் கொள்ள முடியாது. சித்த சுவாதினம் இல்லாதவர் என்று கூறப்பட்டாலும் 'அவ்வை சண்முகி-யைப் போல நிறைய சாகசங்கள் செய்து வைரஸ் குப்பியை பெருமாளோடு சேர்த்து அனைவரையும் காப்பாற்றுபவர்.


பல்ராம் நாயுடுவால் 'லைட்ஹவுஸ்' என்று கிண்டலடிக்கப்படுகிற கலிஃபுல்லா கான் மற்றும் அவரது குடும்பத்தினர் அளவுக்கு கேலிக்குள்ளாக்கப்படுபவர் எவருமில்லை. அவர் உயரம், உடை, பேச்சு, நடை, தோற்றம் போன்ற பலவற்றாலும் கேலி செய்யப்படுகிறார். முஸ்லீம்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்யாமல் 12 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டு மக்கள் தொகையைப் பெருக்குபவர்கள் என்ற சங்பரிவாரின் சொல்லாடல் நிகழ்த்தப்படுகிறது. தலித் தலைவராக வரும் வின்சென்ட் பூவராகவனும் உடல், நடை, உடை, பேச்சு, மொழி, நிறம் போன்றவற்றால் கிண்டலடிக்கப் படுவதோடு மட்டுமல்லாது, தியாகம் செய்வதாகக் காட்டி சாகடித்தும் விடுகிறார்கள். படம் முழுக்க பெருமாளே மையமாக இருக்கிறார். அவர் எங்கும் வியாபித்திருக்கிறார். யாரைக் காக்க வேண்டும், யாரை சாகடிக்க வேண்டும் என்பதை தெரிந்தே வைத்திருக்கிறார். காக்கும் கடவுளான விஷ்ணு எல்லாரையும் காக்காவிட்டாலும், தனக்கு வேண்டியவர்களை மட்டுமாவது காத்து அருள்புரிவார்.
மேம்பாலத்திலிருந்து கோவிந்த் ராமசாமி குதிக்கும் லாரியில் எழுதப்பட்டிருக்கும் வாசகம் க்ளோஸ் அப்பில் காட்டப்படுகிறது. 'ஸ்ரீராம ஜெயம்'! ரங்கராஜ நம்பியை விஷ்ணுவுடன் சேர்த்து கட்டி இழுத்துச் செல்லும் போது ஒரு பருந்து வந்து அமரும். ஃபிளேட்சர் கையில் வைரஸ் குப்பியுடன் பெருமாள் கிடைக்கும் போது ஆயிரக்கணக்கில் பருந்துகள் அணிவகுக்கின்றன. பார்ப்பனீய - இந்துத்துவா ஆதரவு அதிகரித்திருப்பதை குறியீட்டுத் தளத்தில் உணர்த்துகின்றன. மணல் மாஃபியா ஆள் (சந்தானபாரதி) ஆண்டாளின் துகிலை உரியும் போது 'நாராயணா' என்று கத்த எங்கும் ஒளி வெள்ளம். மைக் சகிதம் பூவராகவன் கூட்டமாக மண்ணைக் காக்க வருகிறார். (குடும்பத்துடன் காண வேண்டிய கற்பழிப்புக் காட்சி ; மண் - பெண் கற்பழிப்பு என்ற வியாக்கியானமும் உண்டு).
புராணக் குப்பைகளை கேள்வி கேட்டு மறு பரிசீலனை செய்யக்கூடிய படைப்புகள் தமிழில் நிறைய வெளியாகின்றன, அவ்வாறில்லாமல் புராண - இந்துத்துவ மதிப்பீடுகளை உயர்த்திப் பிடித்து, அதற்கு அறிவியல் பகுத்தறிவு முலாம்பூசிய தங்கத்தட்டில் இந்துத்துவ மலத்தை அள்ளி தமிழகத்திற்கு ஏன் உலகிற்கே வாரி வழங்கியுள்ளார் 'உலகநாயகன்' கமல்ஹாசன். திராவிட இயக்கச் சீரழிவுகளும், தமிழகத்தில் இந்துத்துவா, சங்-பரிவார் கும்பலுக்கு அடித்தளம் அமைத்தவர்களும் உண்டு, உச்சி மோந்து பாராட்டி ஒருவருக்கொருவர் சொறிந்து கொள்ளட்டும்.

இறுதியாக ஒரு குறிப்பு :
கமலின் இந்த அவதாரங்களைப் பார்த்தப் பிறகு முக்தியடையும் வாய்ப்பை சுஜாதாவுக்கு பெருமாள் அளிக்காமல் போய்விட்டார். உயிர்மை ஜூலை 2008 இதழில் விமர்சனம் எழுதியிருக்கும் நண்பர் சாரு நிவேதிதா படத்தை சரியாகப் பார்க்காதவர் போல கமல் உடனான நட்பு, காயாஸ் தியரி, உலக சினிமா பற்றியெல்லாம் எழுதிவிட்டு, இந்துத்துவா அரசியல் பற்றி தொலைக்காட்சி பேட்டியில் விளக்கவேண்டும் என்று கை ஏந்துகிறார். 105 வயது ருக்மணிப்பாட்டி என்கிறார். கலிஃபுல்லா, அவதார்சிங் ஆகிய இரண்டு அவதாரங்களும் கதைக்குச் சம்மந்தம் இல்லாதவை என்கிறார். (கதை என்று இதில் ஒன்று உண்டா சாரு?) சாருவின் வைணவ - இந்துத்துவ சாய்வு கூட இதற்கு காரணமாக இருக்கலாம்.