போலீஸ்காரர்களின் துரத்தல் எங்கே போய் முடியுமென்று எல்லாருக்கும் தெரிந்திருக்கலாம். ஆனால் பாலனின் அனுபவம் வேறு விதம் போலீஸ்காரனின் துரத்தல் பாலனை கோடீஸ்வரர் ஆக்கியிருக்கிறது.
எப்படி..? 1981 ல் வீட்டை விட்டு சென்னைக்கு ஒடிவந்த பாலனுக்கு படிப்பு, பணம், மற்றவர்கள் ஆதரவு எதுவுமே கிடையாது. எழும்பூரைச் சுற்றியுள்ள சுற்றுலா, பயண ஓட்டல் நிறுவனங்கள் என்று தென்பட்ட எல்லாரிடமும் வேலை கேட்டும் பார்த்தார்.கிடைக்கவில்லை. ஒரு நாள் இரவு பசி மயக்கத்தில் இவர் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் போலீஸ்காரர் சந்தேகக் கேஸில் இவரைக் கைது செய்ய அடித்து எழுப்பி ஏற்கனவே அங்கு நின்று கொண்டிருந்த ஒரு சிறு கும்பலுடன் போய் நிற்கச் சொன்னார். ஒன்றும் புரியாமல் பக்கத்திலிருந்தவரிடம் பேச்சு கொடுத்த பாலனுக்கு இவர்களோடு போனால் சிறையிலடைத்து விடுவார்கள் என்பது புரிந்தது. போலீஸ்காரர் வேறொருவரை எழுப்பிக் கொண்டிருந்த சமயத்தில் திசை தெரியாமல் ஓடத் தொடங்கினார். போலீஸ்காரர் துரத்த இன்னும் வேகமெடுத்தார். சிறிது நேரம் கழித்து திரும்பி பார்த்த போது போலீஸ்காரர் இல்லை.
ஓடி ஓடி களைத்துப் போய் மனிதர்கள் வரிசையாக நின்று கொண்டிருந்த ஒரு இடத்தைப் பார்த்து, அதுதான் பாதுகாப்பான இடம் என்று முடிவெடுத்து அங்கேயே நின்றுவிட்டார். சோர்ந்து போய் அந்த இடத்தில் உட்கார்ந்தவர் கண் அயர்ந்து போய்விட்டார். காலையில் விழித்துப் பார்த்தால் அவருக்கு முன்னால் 20 பேரும் பின்னால் 200 பேரும் நின்று கொண்டிருந்தார்கள். ஒருவர் அவரிடம் வந்து, 'தம்பி, இடம் தருவாயா, 2 ரூபாய் தருகிறேன்' என்றார் இன்ப அதிர்ச்சிக்குள்ளான பாலன் பணத்தை வாங்கி கண்களில் ஒற்றிக் கொண்டார். அது அவரது முதல் வருமானம். முதலீடும் கூட. அதன் பிறகு தான் அவருக்குத் தெரிந்தது அது அமெரிக்கத் தூதராலயம் என்று. வருமானத்துக்கு இதுவே சிறந்த வேலை என நினைத்த பாலன் அங்கு வந்து செல்லும் பயண முகவர்களுடன் நல்லுறவுகளை ஏற்படுத்தி விமான டிக்கெட்டின் விலை, விசா, பயணத் தேவைக்கான விபரங்கள் அனைத்தையும் அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார். வரிசையில் நிற்கும் நேரத்தில் உடன் நிற்பவர்களுடன் பேச்சுக் கொடுத்து அவர்களுக்கு பயணச் சீட்டு வாங்கிக் கொடுப்பது, அவர்கள் பயணத் தேவைகளை பூர்த்தி செய்வது, விமான நிலையம் வரை அவர்களது பெட்டி படுக்கைகளை சுமந்து சென்று வழியனுப்புவது என்று தனது பணிகளை விரிவாக்கினார். வாடிக்கையாளரின் திருப்தியே , தமது திருப்தி என்று இயங்க ஆரம்பித்த பாலனை நம்பி பல லட்சங்களும் கடன் கொடுக்க பல விமான பயண முகவர்கள் முன்வந்தனர். இதனையே மூலதனமாகக் கொண்டு 1986ல் மதுரா டிராவல் சர்வீஸ்' என்ற நிறுவனத்தை தொடங்கினார் பாலன். இன்று அது வருடத்துக்கு 12 கோடிக்கும் மேலான வர்த்தக எல்லையைத் தாண்டி உயர்ந்து நிற்கிறது. "நான் எதையும் சாதிச்சுட்டுதா நினைக்கல. பெருசா தன்னம்பிக்கை வைச்சு பிளான் பண்ணி எல்லாம் வரல. ஒருநாய் துரத்தினா உயிருக்குப் பயந்தவன் எப்படி ஓடுவான்? வறுமை, வேலையில்லை என்ற நாய் என்னைத் துரத்த அதுக்குப் பயந்து ஓடினவந்தான் நான். இப்ப இளைப்பாறும் போதுதான் தெரியுது இவ்வளவு தூரம் ஓடிவந்த்துருக்கேன்னு"என்று தன்னுடைய வளர்ச்சி பற்றி கூறுகிறார் 'மதுரா டிராவல்ஸ்' கம்பெனியின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான வீ.கே.டீ. பாலன்
உங்கள் வளர்ச்சிக்கான காரணங்கள்?
நான் 'நாணயம்' தவறியதேயில்லை. நாணயத்தை நான் கட்டிப்பிடிச்சுக்கிட்டேன். ஒரு மனிதன் நாணயத்தை இழந்துட்டானா அதுக்குமேல அவனிடம் இழப்பதற்கு எதுவுமிருக்காது. 'நாணயம்'னா "சொல்வதைச் செய் செய்வதைச் சொல்" அவ்வளவே. உழைச்சு முன்னேறுவதுங்கிறது மோசடி வார்த்தை.வெயில்ல ரோட்டுல கான்கிரீட் போடுறவனை விட, மூட்டை தூக்குறவனை விட யாராவது கஷ்டப் பட்டு உழைக்க முடியுமா? கஷ்டப்பட்டு உழைச்சா மட்டும் முன்னேறிட முடியாது. இஷ்டப்பட்டு உழைச்சாத்தான் முன்னேறலாம்.
மிகவும் குழப்பமான நேரங்களில் சரியான முடிவுகளை எடுப்பதெப்படி?
எல்லா மனிதனும் எல்லா முடிவுகளும் சரியாக எடுப்பதில்லை. அப்படி எடுத்திருந்தா ஹிட்லர், முசோலினி, எல்லாம் செத்திருக்கமாட்டாங்க.என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் குழம்புவதை விட ஏதாவது முடிவெடுப்பதே சிறந்தது. எந்த முடிவும் சரியான முடிவு, தவறான முடிவுன்னு அதன் விளைவுகளைப் பொறுத்துதான் தீர்மானிக்கப்படுது. ஜெயிச்சவங்க எல்லாரும் சரியா முடிவெடுத்து ஜெயிச்சவங்க கிடையாது. அவங்க ஒவ்வொரு முறை சறுக்கி விழும் போதும் காப்பாத்துறதுக்கு யாராவது இருந்திருப்பாங்க. கொஞ்சம் மனசாட்சியோட பேசினோம்னா பலர் ஒருவருக்காகவும் ஒருவர் பலருக்காகவும் வாழ்றதுதான் வாழ்க்கை தொழில் செய்யனுங்கிற முடிவு நிச்சயம் வெற்றியைத்தான் தரும். தொழில் ஒருவன் தோற்றுப் போனால் அது தொழில் செய்தவனின் தவறேயொழிய தொழிலின் தவறல்ல. If you don't run your business properly, one day you'll have to run away from your business.
உங்களை மாதிரி சில முதல் தலைமுறையினர் கஷ்டப்பட்டு நிறுவனத்தை வளர்க்க அவர்கள் வாரிசுகள் மிக எளிதாக நிர்வாகப் பொறுப்புக்கு வந்துடறாங்களே?
வாரிசுகளை நிர்வாகம் பண்ணவிடறது தப்பு. அவங்களுக்கு அனுபவிக்க மட்டும் தான் தெரியும்.வியாபாரத்தை வளர்க்கணும், இன்னும் உயாரத்துக்கு கொண்டு போகணும் அப்படின்னெல்லாம் எண்ணமிருக்காது. பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து வைக்கிறதே அவர்களுக்குச் செய்ற மிகப் பெரிய தீங்கு. நல்ல பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து வைக்கணும்னு அவசியமில்லை. கெட்ட பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து வைத்துப் பிரயோஜனமில்லை.வாரிசுகளுக்கு உண்மையிலேயே வியாபாரத்துல விருப்பம் இருந்தா கம்பெனியில சாதரண ஊழியரா வேலைக்குச் சேர்ந்து படிப்படியா வளர்ந்து வரணும். இல்லைன்னா நல்ல காலேஜ்ல முறைப்படி M.B.A படிச்சுட்டு கூட வரலாம்.
எதுவுமே படிக்காமல் தொழில் தொடங்குபவருக்கும் M.B.A படித்து தொழில் தொடங்குபவருக்கும் இருக்கும் வித்தியாசம்?
முதல் முதலா பள்ளிக்கூடம் கட்டினவன் பள்ளிக்கூடம் போகாதவனாத்தான் இருப்பான். முதன்முதல் சிலபஸ் பள்ளிக்கூடம் போகாதவங்க, அனுபவம் மூலமா வாழ்வை புரிஞ்சிகிட்டவங்க எல்லாம் சேர்ந்து உருவாக்கினதாத்தான் இருக்கும். 'சேர்மன்' பதவி, 'M.D' பதவி எல்லாருக்கும் கிடைக்கும். ஆனா 'Founder' பதவி வேணும்னா நீங்கதான் ஏதாவது உருப்படியா செய்யணும்.
நீங்க டிராவல் ஏஜென்சி ஆரம்பித்த காலத்துக்கும் இன்றைக்கும் உள்ள மாற்றங்கள்?
முதல் டிராவல் ஏஜன்ட் எப்படி வேலை பார்த்திருப்பான்.. தோள்ல வைத்து மனிதர்களை தூக்கிட்டுப் போயிருந்திருப்பான். அப்புறம் பல்லக்குல . நீங்க சீஸன் நேரங்கள்ல சபரிமலைக்குப் போனீங்கன்னா இன்றும் பல்லக்குத் தூக்குபவர்களை பார்க்கலாம். அறிவியல் வளர்ச்சியோடு எப்போதும் தொழிலை இணைத்துக் கொள்ள வேண்டும்.
உங்கள் வாழ்க்கையைத் திரும்பி பார்க்கும் போது எப்படி உணர்கிறீர்கள்?
ஆரம்பத்துல ரொம்ப கஷ்டப்பட்டேன். துயரமா இருந்தது. Suicide பண்ணக்கூடபோய்ட்டேன். ஆனா அதுக்கு முன்னாடியே மயங்கி விழுந்துட்டேன்.இன்னிக்கு மகிழ்ச்சியா இருக்கேன். Suicide பண்ணியிருந்தா இந்த நல்ல வாழ்க்கையை இழந்திருப்பேனில்லையா. நல்ல வாழ்க்கைன்னா நான் வசதி வாய்ப்பைச் சொல்லலை. நண்பர்கள் உறவினர்கள் என்று எவ்வளவு பேர் உங்களை நேசிக்கிறவர்கள் இருக்கிறார்கள் என்று பாருங்கள். உங்கள் தாய், தந்தை, தம்பி, பக்கத்துவீட்டுக்காரர்கள், பால்காரி, மீன்காரி என்று எல்லாருடனும் உங்கள் உறவு எப்படியிருக்கிறது என்று பாருங்கள். இந்த வீதியில் தான் உங்கள் தேரோட வேண்டும். இவங்க தானே உங்கள் வாழ்க்கை. உங்க மேல் யார் பொறாமைப்படப் போறாங்க.அப்துல்கலாமா? பில்கிளின்டனா? உங்க அந்தஸ்தில் உள்ளவர்கள் மட்டும் தானே. அவர்களோடு உறவுகளை நன்றாக அமைத்துக்கொள்ளுங்கள். வியாபார நேரம் போக மீதமிருக்கிற நேரத்தை சமூகத்திற்காக செலவழிக்கும் பாலன் இதுவரை பேட்டி காணப்படாத சாமானிய மனிதர்களை பொதிகை சேனலின் வெளிச்சத்தின் மறுபக்கம் நிகழ்ச்சிக்காக பேட்டி காண்கிறார். இரண்டாம் மகளின் திருமணத்திற்காக கிட்னி விற்ற தாய், இருபத்தி மூன்று வயதில் கணவன் மூலம் எய்ட்ஸ் நோயாளியான பரிதாப மனைவி, சென்னை பொது மருத்துவமனையில் போஸ்ட்மார்டம் செய்யும் மருத்துவர் என்று பல்வேÚ விதமான மனிதர்களை வாரந்தோறும் சந்திக்கிறார். 300 வாரங்களைத் தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சி பலரின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைந்திருக்கிறது. இது போன்ற விஷயங்கள் தான் திருப்தியைக் கொடுக்கிறது என்கிறார் பாலன். வெற்றியடைவது மட்டுமல்ல, வெற்றிபெற்றபின் தனது பங்களிப்பாக சமூகத்திற்கு திருப்பி கொடுக்கும் மனது சிலருக்கு தானிருக்கும். அந்த சிலரில் வி.கே.டி.பாலனும் ஒருவர்.
- சந்திப்பு என்.எஸ்.ராமன்