January 02, 2008

திரைப்பட ஒளிப்பதிவாளர் சிவகங்கை செழியன்

மகேஸ்வரன் படுகொலை, கொழும்பு குண்டுவெடிப்புக்கு அமெரிக்கா கண்டனம்

நேற்று, செவ்வாய்க்கிழமை கொழும்பு கொட்டாஞ்சேனை பொன்னம்பலவாணேசர் ஆலயத்தினுள் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது இனந்தெரியாத துப்பாக்கி நபரினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனின் படுகொலையையும், இன்று கொழும்பில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலையும் அமெரிக்க அரசு வன்மையாகக் கண்டித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகம், மகேஸ்வரனின் கொலை தொடர்பில் இலங்கை அரசாங்கம் பூரண விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், அதற்குப் பொறுப்பானவர்களைக் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருக்கிறது. இந்த இரண்டு தாக்குதல்களின்போதும் கொல்லப்பட்டவர் களினதும், காயமடைந்தவர்களினதும் குடும்பங்களுக்கு ஆறுதலைத் தெரிவித்துள்ள அமெரிக்க அரசாங்கம் இலங்கை இனப்பிரச்சனைக்கு சமாதான வழியில் பேச்சுக்களினூடாக அரசியல் தீர்வொன்றினைக்காண சகல தரப்பினரும் முன்வரவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது. இதேவேளை, மகேஸ்வரனின் பூதவுடல் இன்று அதிகாலை வைத்தியசாலையிலிருந்து வெள்ளவத்தையிலுள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. நேற்றையதினம் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலர் அவரது பூதவுடலிற்கு தமது அஞ்சலிகளைத் தெரிவித்துள்ளனர். இவரது இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை கொழும்பில் இடம் பெறவிருப்பதாக கூறப்படுகிறது.
கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபர் குறித்த விவரங்கள்
மகேஸ்வரனின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருக்கும் சந்தேக நபர் குறித்து, இலங்கை அரசின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், பிபிசி தமிழோசையிடம் பின்வரும் விவரங்களை தெரிவித்தார். அவரது பெயர் வசந்தன் என்றும் அவரது தனிப்பட்ட விபரங்கள் கிடைத்திருப்பதாகவும், ஆனால் அவரிடம் இருந்து வாக்குமூலம் எதையும் பெறவில்லை என்றும் கூறிய கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், வசந்தன் தற்காலிகமாக தங்கியிருந்த வத்தளை வீட்டில் அவர் பயன்படுத்திய மைக்ரோ பிஸ்டலுக்குத் தேவையான தோட்டாக்கள் இருந்ததாகவும் தெரிவித்தார். வசந்தன் 1996 அம் ஆண்டு யாழில் இருந்து வெளியேறியதாகவும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கீழ் பணியாற்றியுள்ளதாகவும், மகேஸ்வரன் அமைச்சராக இருந்தபோது அவருடைய பாதுகாப்பு பணியில் இருந்துள்ளதாகவும், அரசுப் பணியில் இருந்துள்ளதாகவும், காவல்துறை பணியில் இருந்திருப்பார் என்று தாம் கருதுவதாகவும் தெரிவித்த கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், அனால் தமக்கு இது குறித்த காவல்துறை உயரதிகாரியின் முழுமையான அறிக்கை கிடைக்கவில்லை என்றும், அந்த அறிக்கை கிடைக்கும் வரை யார் மீதும் குற்றம் சுமத்த முடியாது என்றும் தெரிவித்தார்.

பாகிஸ்தான் தேர்தல்கள் பிப்ரவரி 18 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

பாகிஸ்தானில் இம்மாதம் எட்டாம் தேதி நடைபெற இருந்த பொதுத் தேர்தல்கள் அடுத்த மாதம் 18 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான பேனசீர் புட்டோ ராவல்பிண்டியில் ஒரு தேர்தல் பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு வெளியேற இருந்த நிலையில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பிறகு நாடெங்கும் வன்முறை வெடித்தது. இந்த வன்முறைகளின் போது நாட்டில் பல வாக்குச் சாவடிகள் அடித்து நொறுக்கப்பட்டு வாக்காளர் பட்டியலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் தேர்தல் நடைமுறைகள் அனைத்துமே மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என பாகிஸ்தானின் தலைமை தேர்தல் அணையாளர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் முக்கிய எதிர்கட்சிகளான பாகிஸ்தான் மக்கள் கட்சியும், பாகிஸ்தான் முஸ்லீம் லீகின் நவாஸ் பிரிவும் தேர்தல்கள் திட்டமிட்டபடி இம்மாதம் எட்டாம் தேதியே நடைபெற வேண்டும் என வலியுறித்து வந்தன. தேர்தல் பிரச்சாரத்தால் களைகட்டியிருக்கும் பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன்னரே இந்த இரண்டு கட்சிகளும் பாகிஸ்தானின் தேர்தல் ஆணையம் அதிபர் முஷாரஃப் மற்றும் அவரது கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சுமத்தின. நாட்டில் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதை அனைத்துமுக்கிய எதிர்கட்சிகளும் கண்டித்துள்ளன. தேர்தல் ஆணையம் தனது எண்ணப்படி நடக்க வேண்டுமென அரசு விரும்புவதாகவும், அதற்கேற்ற வகையில் தேர்தல் ஆணையம் நடந்து கொள்வதாகவும், சுதந்திரத் தன்மையுடன் அது இயங்கவில்லை என்றும், அதனால் மக்கள் தேர்தல் ஆணையத்தை நம்புவதில்லை என்றும் எதிர்கட்சிகள் கூறுகின்றன.